அது காமராசர் காலம்… ஓர் நினைவலை

பீஷ்மரின் வரலாற்றினை சொல்லும்பொழுது அவரை வீழ்த்திய அர்ச்சுணனின் பெயர் வராமல் முடிக்கமுடியாது.

காமராஜரை பற்றி சொல்லும்போது அவரை பாடாய்படுத்திய கலைஞரைபற்றி சொல்லாமல் எப்படி தவிர்க்கமுடியும்?

அண்ணா பொதுவாக காங்கிரசை சாடினார், தனிபட்ட முறையில் காமராஜரை அவர் ஒருவார்த்தை சொன்னதில்லை, இவைதான் திராவிட கொள்கைகள் என எதனையோ சொல்லிகொண்டிருந்தார்.

ஆனால் தனிபட்டமுறையில் காமராஜரை குறிவைத்து அரசியல் செய்தவர் கலைஞர், காமராஜரை அவர் வசைபாடியது கொஞ்சமல்ல, எவ்வளவு கீழ்தரமாக எல்லாம் விமர்சித்தார் என்பது வரலாற்றில் பதிந்த ஒன்று.

முதல்வரோ பக்தவச்சலம், ஆனால் கலைஞர் அக்காலமெல்லாம் கேவலமாக வசைபாடிகொண்டிருந்தது காமராஜரை, காரணம் ஏழைபங்காளன் எனும் காமராஜரின் இமேஜினை அடித்து நொறுக்கினால், மிக எளிதாக ஆட்சியினை கைபற்றலாம் எனும் தந்திரம், அதுதான் அதேதான்.

எம்ஜிஆரை சுட்டது ராதா, இருவருமே அன்று கலைஞரின் நண்பர்கள். ஆனால் காமராஜர் ஆட்சியில் சுடபட்ட எம்ஜிஆர் என பெரும் புரட்டினை வெளியிட்டு அரசியல் லாபாம் பார்த்தது யார்? பரங்கிமலை தொகுதியில் அப்படித்தான் எம்ஜிஆர் வென்றார், கழகம் ஆட்சிக்கு வந்தது.

இந்த வெற்றிக்கு பரங்கிமலை ஜோதி தியேட்டரில் வரும் லாபம் எவ்வளவோ பரவாயில்லை.

விருதுநகரில் காமராஜரை எதிர்க்கவேண்டாம் என அண்ணா சொல்லியும் பணபெட்டியோடு ஓடியது யார்? வெற்றிவிழா கொண்டாடியது யார்?

அண்ணாவிற்கு பின் கலைஞரின் அட்டகாசம் இன்னும் கூடிற்று, மிக கடுமையான முறையில் எல்லாம் அவரிடமிருந்து விமர்சனங்கள் வந்தன , கிழவனுக்கு எதற்கு முதல்வர் ஆசை என்றவர்தான் கலைஞர்,

93 வயதில் முதலமைச்சர் பதவியினை தவறவிட்டிருக்கும் கலைஞர்.

காமராஜர் தோற்ற போது பெரிதும் வருந்தினார் அண்ணா, கலைஞரிடமோ பெரும் மகிழ்ச்சி தென்பட்டது, அன்று அவரின் ஒரே வருத்தம், காமராஜரை வென்ற சீனிவாசனை ஓரங்கட்டுவது எப்படி? இதுதான் கலைஞர்.

பாராளுமன்ற  தேர்தலின்போது நாகர்கோவில் சந்திப்பில் இதுதான் ஏழைபங்காளன் காமராஜரின் சொந்தவீடு என அவரின் வாடகை வீட்டினை காட்டியது யார்?

காமராஜர் கண்ணீர் விட்ட காலம் அது.

இதனை எல்லாம் கடந்துதான் மிசாவில் காமராஜரை பலிகொடுக்க, நீங்கள் ஆளுங்கள் என அழைத்தார் கலைஞர், எவ்வளவு பெரிய அனுபவசாலி காமராஜர். இது தன்னை இந்திராவுடன் மோதவிடும் பகிரங்க முயற்சி என கண்டுகொண்டு ஒதுங்கினார். அப்படி இந்திரா காமராஜரை மோதவிட காத்திருந்த நரி அவர்.

சொல்வார்கள், காமராஜர் இறந்தபின் ஓடிவந்தார் கலைஞர், யார் செத்தாலும் வருவார், அழுவார். காரணம் செத்தவர்கள் எழுந்து இங்கு ஏன் வந்தீர் என சொல்வதில்லை.

தமிழ்நாடு வளம்பெற இன்னும் 10 ஆண்டுகள் காமராஜர் ஆளவேண்டும் என்றவர் பெரியார், அண்ணா ஆண்டது 1 வருடம் மட்டுமே, கலைஞர் நினைத்தால் காமராஜருக்கு வழி விட்டிருக்கலாம், தமிழக நலன் முக்கியமென்றால் அதனைத்தான் செய்திருக்கவேண்டும்

மாறாக கள்ளுகடை திறந்து பெரும் அழிவிற்கு வழிகோலினார் கலைஞர், இந்த எம்ஜிஆர், ஜெயா எல்லாம் அந்நதியிலிருந்து பிரிந்த கிளைகள். மூலம் கலைஞரே

உச்சமாக காமராஜரை எதிர்த்து அரசியல் செய்த காலத்திற்காக வெட்கபடுகிறேன், வேதனைபடுகிறேன் என்றெல்லாம் கலைஞரே கொஞ்சகாலம் முன்பு பகிரங்கமாக சொல்லி இருந்தார், அப்படி இருக்கும்பொழுது

ஏய் கலைஞரை எப்படி நீ சொல்லலாம் என ஜால்ராக்கள் ஓசை எழுப்புகின்றன.

இவர்கள் எல்லாம் ஒன்று முத்துவேலருக்கு தூரத்து சொந்தமோ அல்லது தயாளு அம்மாள் வேலைகாரிக்கு நெருங்கின சொந்தமாக இருக்கலாம் அல்லது என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாத கலைஞர் பக்தியாக இருக்கலாம்.

கடவுள் மீதான நம்பிக்கையினை கேள்விகேட்பதுதான் பகுத்தறிவே அன்றி, கலைஞர் மீதான கேள்விகளை அப்படியே புறந்தள்ளி அவரை அப்படியே நம்புவதுதான் உடன்பிறப்புக்களின் பகுத்தறிவு

அறிவாலயம் சொல்லி கொடுத்திருக்கும் பகுத்தறிவு புரட்சி அப்படி.

வாழ்க அவர்களின் நம்பிக்கை, வளர்க அவர்கள் பகுத்தறிவு.

காமராஜர் ஆட்சி சரியில்லை என்னிடம் கொடுங்கள் பொற்கால ஆட்சி தருகிறேன் என்றவர் கலைஞர், அதன் பின் 5 முறை முதல்வரானார். எக்கால ஆட்சி கொடுத்தார்? பொற்காலமா? கற்காலமா?

சொல்லுங்கள்

காமராஜர் ஆட்சியினை விட கலைஞர் ஆட்சி சால சிறந்தது என உங்களால் வாய்விட்டு சொல்லமுடியுமா? சொல்ல முடியிமென்றால் மனசாட்சியே உங்களுக்கு இல்லை என பொருள்.

முடியாதல்லவா? பின்னர் ஏன் காமராஜரை குறை கூறி, ஆட்சிக்கு வந்து 5 முறை அரியணை கண்டபின்னும் அவரின் சாதனையினை கலைஞரால் நெருங்கமுடியவில்லை, மதுகடை இல்லாமல் ஆளமுடியவில்லை?

அது கலைஞரின் தோல்வியா இல்லையா? அதற்கு பதில் சொல்லமுடியுமா?

ஹிஹிஹிஹிஹி அது வந்து… என சமாளிக்கலாம்

உங்கள் மனசாட்சிக்கு தெரியாததையா நாம் எழுதிவிட முடியும்?


காமராஜர் ஒரு தேசியவாதி, அந்த தேசிய கட்சிதான் தமிழகத்திற்கு நல்லாட்சி தந்தது.

இன்றுவரை தமிழகம் கண்ட ஆட்சிகளில் அதுதான் பொற்கால ஆட்சி என்பதை மறுக்கமுடியாது.

திராவிட, தமிழ்தேசிய குறுகிய மனப்பான்மை கொண்ட சுயநல கும்பல்களால் ஒருகாலும் தமிழகத்தில் நல்லாட்சி தரமுடியாது என்பதும் வரலாற்று உண்மை.

தமிழகத்திற்கு தமிழன் முதல்வரை கொடுத்த ஒரே கட்சி காங்கிரஸ், கொடுக்க முயன்று தற்போது தோற்றுவிட்ட கட்சி பாஜக‌

ஆக தமிழ்நாட்டிற்கு தமிழன் முதலமைச்சராக ஒரு தேசிய கட்சியினை ஆதரித்தால் போதுமானது என்பதுதான் விஷயம்

இதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம், அட்டகாசம் அழிச்சாட்டியம், பரபப்புக்கள். காட்டு கத்தல்கள்

அங்கிள் கோஷ்டிக்கு தமிழ் முதல்வர் வேண்டுமென்றால் இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம் 🙂


கலைஞருக்கும் காமராஜருக்கும் இருந்த உறவு தெரியாமல் விமர்சிக்கின்றாயா என்கிறார் ஒருவர்

இது கலைஞரே கண்ணாடியினை கழற்றிவிட்டு வாய்விட்டு சிரிக்கும் காமெடி

ஒரே ஒரு உதாரணம், காமராஜர் முதலமைச்சர் பதவிக்கு ஆசைபட்டு தெரு தெருவாய் அலைகிறார் என முதல்வர் கலைஞர் சொல்லி தொலைக்க, காமராஜரிடம் பத்திரிகையாளர்களும் கேட்டார்கள்

ஒருநாளும் கோபபடாத காமராஜர் அன்று சீறி சொன்னார்,

“அவனெல்லாம் உட்கார்ந்துவிட்ட பின்னால் அந்த நாற்காலிக்கு நான் ஆசைபடுவணாண்ணேன்…அதுக்குள்ள மரியாதை போச்சுண்ணேன்”

இதுதான் காமராஜர் மனதில் கலைஞருக்கு இருந்த இடம்.

கலைஞர் அரசியல்வாதி ஆயிரம் சொல்வார்

அன்று “அண்டங்காக்காய், எருமை மாடு, கருவாடு விற்ற குடும்பம், திருமணத்திற்கு லாயக்கற்ற ஆண்மை குறைந்தவர்” என்றெல்லாம் விளாசிவிட்டுத்தான், இன்று வருந்துகிறேன், வேதனைபடுகிறேன், எனக்கும் அவருக்கும் உள்ள் உறவு ஆழமானது என்றெல்லாம் சொல்வார்.

இவர்களுக்கு அறிவு எங்கே போனது?

காமராஜருக்கும் கலைஞருக்கும் பெரும் உறவு இருந்ததாம் 🙂

பெரியாருக்கும் காமராஜருக்கும் இருந்ததை ஒப்புகொள்ளலாம்

கலைஞருக்கும் காமராஜருக்கும் உறவு இருந்தது என்பது, ஹிட்லருக்கும் மகாத்மா காந்திக்கும் ரகசிய உறவு இருந்தது என்பதற்கு ஒப்பானது.


காமராஜர் என்ன சாதித்தார் என கேட்பவர்கள்

திராவிட கட்சி அரசுகள் என்ன கிழித்தன‌ என பேசத்தொடங்குங்கள்

ஊரெல்லாம் பள்ளி கட்டி, பிச்சை எடுத்து சோறுபோட்டவன் காலத்தையும்

எல்கேஜிக்கே நன்கொடை 2 லட்சம் கொட்டிவிட்டு, யூனிபார்ம் காலணி யினை பள்ளியில் வாங்கிவிட்டு, கல்விக்கு தனியாக டியூசன் அனுப்பும் இந்த காலத்தையும் ஒப்பிட்டுபார்த்துவிட்டு பேசுங்கள்

ஊரெல்லாம் மின்சாரம் கொடுத்தது அவன், மின்சார வெட்டினை காட்டியது இவர்கள்

தன் தாய்க்கு கூட தனியாக இல்லாமல் குடிநீர் குடிநீர் குழாயினை பொதுவாக வைத்தவன் அவன் . தன் குடும்பத்தாருக்கெல்லாம் நாட்டில் பங்குகொடுத்தவர்கள் இவர்கள், குடும்பம் இல்லையா? தத்தெடு அது சகோதரியோ வளர்ப்பு மகனோ அல்லது மொத்த குடும்பமோ போதும்.

அணைகட்டுவது முதல், சாலை வரை அரசே செய்து ஊழலுக்கு வழி இல்லாமல் செய்தவன் அவன் கிரானைட் மணல் வரை தனியார் விற்றுகொள்ளலாம் என சொன்ன இக்காலத்தை காணுங்கள்

ஊழலை அறிமுகபடுத்தியது யார் என புரிந்துவிட்டு பேசுங்கள்

மதுவிலக்கினை வைத்தது யார்? மதுவினை ஆறாய் ஓடவிட்டது யார் என பேசுங்கள்

இந்த திரைப்படத்தினை கட்டுக்குள் காமராஜர் வைக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? செயதாரா? செய்திருந்தால் சினிமா இப்படி பெரும் பிம்பமாக தமிழகத்தில் வளர்ந்திருக்குமா?

ஆனால் சினிமாவினை வைத்து ஆட்சியினை பிடித்தது யார்? அவரா?

விட்டுகொடுத்தல் இல்லாமல் அரசியல் இல்லை, தேவிகுளம் பீர்மேடை இழந்தாலும் முப்போகம் விளையும் குமரியினை தமிழகத்திற்கு தரவில்லையா?

அவர் காலம் வரை காவிரிபிரச்சினை , முல்லை பெரியாறு சர்ச்சை என கேள்விபட்டதுண்டா?

பரம்பிகுளம் ஆழியாரை கொண்டுவந்தது யார்?

இன்னும் காமராஜர் ஒன்றும் கிழிக்கவில்லை எல்லாம் கலைஞர்தான் கிழித்தார் என சொல்வீர்களானால் விதண்டாவாதத்திற்குத்தான் பேசுகின்றீர்கள் என பொருள்

இந்தி எதிர்ப்பில் ஊரை திரட்டி 64 பேரை பலிகொண்ட பின் என்ன நடந்தது? தமிழகம் இந்திபடிக்கவில்லை ஆனால் முரசொலிமாறனின் குலகொழுந்து இந்தியில் பாராளுமன்றத்தில் பேசவில்லையா?

காமராஜரை எதிர்க்க செய்யபட்ட பெரும் பிம்பம் அது, மற்ற மாநிலங்களில் எல்லாம் அப்படி போர் நடந்ததா? மலையாளமும், கன்னடமும், தெலுங்கும் அழிந்தேவிட்டதா?

மொழியினை வளர்க்க, மொழிபற்றை காட்ட‌ இன்னொரு மொழியினை எதிர்த்துதான் செய்யவேண்டுமா?

உண்மையில் அன்று காமராஜரை எதிர்க்க தகுந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, ஊழலும் இல்லை எல்லாம் சுத்தமான அமைச்சர்கள்

கிடைத்த ஒரே வாய்ப்பு இந்தி எதிர்ப்பு, 64 பேர் சாவுக்கு காரணமான சம்பவம் அது, ஆனால் பலன் யாருக்கு?

என்னை மீறி இந்தி வராது என சொன்ன காமராஜரை பழிசுமத்தி வீண் பிம்பம் காட்டியது கலைஞர் & கோ

பொதுவாக தெய்வம் நின்றுதான் கொல்லும்

அன்று காமராஜரை திட்டமிட்டு இல்லா பொய் எல்லாம் சொல்லி வீழ்த்தினார் கலைஞர் அது ஒரு காலம்

இன்று சம்பந்தமே இல்லாமல் ஈழ பிரச்சினையில் அவரை வறுத்தெடுக்கின்றார்கள், இதுவும் ஒரு காலம்

செய்த தப்புகளுக்கு தப்பிய கலைஞர், செய்யா தவறுகளுக்கு பழிசுமந்தலைகிறார்.

இது தெய்வத்தின் தீர்ப்பு , முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

 

 

2 thoughts on “அது காமராசர் காலம்… ஓர் நினைவலை

தமிழ் மதி க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s