சிதறல்கள்

“சுவாதி ரம்ஜான் நோன்பு கடைபிடித்தார், முஸ்லீம் இளைஞரை காதலித்தார், எனக்கு கிடைத்த தகவல் இது” : திருமாவளவன்

அது வேறு ஒன்றுமில்லை, சேர்க்கை சரியில்லாததால் வந்த குழப்பம், வைகோவோடு சேர்ந்த எல்லோரும் ஒரு மாதிரியாகத்தான் பேசுவார்கள்,

முன்பு புலிகள் பற்றி அடிக்கடி எனக்கு கிடைத்த தகவல் இது என பேசுவார் வைகோ, தகவல் எப்படி கிடைத்தது என்றால் சொல்லமாட்டார்

கொஞ்சநாள் சென்றால் திருமாவளவனுக்கு பித்தம் தெளிந்துவிடும்,

எப்படி இருந்த திருமாவினை இப்படி ஆக்கிவிட்டார் வைகோ.


திருநாவுக்கரசரை நியமிக்க எதிர்ப்பு: 39 மாவட்ட தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு கடிதம்

ஒரு கட்சிக்குள் ஓராயிரம் கட்சிகள் உண்டென்றால் இந்த பூமியில் காங்கிரஸ் மட்டுமே, இத்தனை ஆயிரம் ஓட்டைகள் இருந்தும் இன்னும் அது ஓரளவு நிலைத்திருப்பதே இந்த உலகின் பெரும் அதிசயம்.

இன்னும் தலைவரே அறிவிக்கபடாத நிலையில் அவர் வேண்டாம் , இவர் வேண்டாம் என ஓராயிரம் கடிதங்கள் டெல்லிக்கு எழுதபட்டிருக்கும்

தமிழகத்திலிருந்து யாரையாவது தமிழக காங்கிரசுக்கு தலைவராக நியமித்தால்தானே பிரச்சினை, பேசாமல் வடநாட்டுக்காரன் யாரையாவது நியமித்தால் என்ன எனும் அளவிற்கு மேலிட தலமை கடும் சிந்தனையில் இருக்கலாம்


சோலார் பேனல் மோசடி வழக்கில் பழனி மாணிக்கத்திற்கு தொடர்பு: சரிதா நாயர்

# மொத்தமாக மன்மோகன் சிங் அமைச்சரவையிலிருந்த எல்லா திமுக அமைச்சர்களையும் டெல்லியில் கொண்டுபோய் விட்டுவிடுவது அறிவாலயத்திற்கு நல்லது, அழகிரியும் விடபடுவதால் கூடுதல் நலம்

# வடக்கே இருந்து யாரும் குற்றம் சாட்டினால் ஆரிய சதி என சொல்லும் கலைஞர், இப்பொழுது முன்னாள் திராவிட நாட்டு பகுதியிலிருந்தே குற்றசாட்டு கிளம்பி இருப்பதை “திராவிட சதி” என சொல்ல முடியாதே 🙂


 

பியூஸ் மனுஷ் யார்?

பியூஸ் மனுஷ் யார்? அவர் திராவிடரா ஆரியரா? தமிழரா இல்லையா? , அவர் போராளியா இல்லையா?, அவர் மேம்பாலத்தை எதிர்த்தது தவறா சரியா? என பெரும் விவாதங்கள்.

பியுச்

ஒரு மேம்பாலத்தை எதிர்ப்பது சர்வதேச தீவிரவாதமா? ஒரு மேம்பாலத்தை எதிர்க்க கூட சக்தியில்லா மாநிலமா இது என ஆளாளுக்கு பொங்கிகொண்டிருக்கின்றார்கள்.

என்ன நடக்கும்? ஒன்றும் நடக்காது

காரணம் தம்ழக யதார்த்தம் அப்படி, பொது தமிழக உரிமை என்றோ, தமிழக‌ பிரச்சினை என்று இவர்களுக்கு எதுவுமில்ல, எல்லாம் குறுகிய வட்டம்

ராமேஸ்வர மீணவரா? இலங்கையன் சுட்டானா? பாவம் ஆத்மா சாந்தி அடையட்டும். கெயில் குழாய் பிரச்சினையா? அந்த ஈரோடு விவசாயிகள் பாடு. காவேரி நீர் இல்லையா? அது டெல்டா பிரச்சினை

கூடங்குளமா அது அந்த ஊர் மீணவர் பிரச்சினை. நியூட்ரினோவா அது தேனி பிரச்சினை, ஜல்லிகட்டா? தமிழர் பண்பாடுதான் ஆனால் இப்போது மதுரை கிராம பிரச்சினை அவ்வளவுதான் இதனை தாண்டி யோசிக்க கூட மாட்டார்கள்.

இதில் அரசுக்கு பயந்த 4 வது தூண் என சொல்லபட்டு இன்று துருபிடித்து விட்ட ஊடகமும் ஒன்று. அவர்களுக்கு என்ன? சென்னைதான் தமிழகம். சென்னைக்கு ஒன்று என்றால் தமிழகம் அலறவேண்டும், ஓடவேண்டும், மற்ற பகுதி எல்லாம் சும்மா

மீத்தேன் குழுவினருக்காகவும், அந்நாளில் நம்மாழ்வாருக்காவும், பின் கூடங்குள உதயகுமார் போன்றோருக்காகவும் குரல் கொடுத்திருந்தால் இன்று மனுஷ்க்கும் ஒரு ஒருமித்த குரல் கிடைக்கும்.

அன்றெல்லாம் எங்கு இருந்தார்கள் என தெரியாது, இடிந்த கரையில் இதே அரசு பாதுகாப்பு படையினை ஏவிவிட்ட பொழுது எங்கிருந்தார்கள் என தெரியாது, இன்று பியூஸ் மனுஷுக்கு நடப்பது அநீதியாம்.

அட அப்பொழுதும் யாராவது இதன் அரசியல் பிண்ணணி என்ன? எந்த அமைச்சகத்தின் கீழ் வருகின்றது, எந்த அரசு பொறுப்பு என எதனையாவது எழுதுகின்றானா என்றால் இல்லை.

மேம்பாலத்தை எதிர்த்தார், பிடிபட்டார் , வாருங்கள், காப்பாற்றுங்கள் என கத்துகின்றார்களே தவிர, அது என்ன அமெரிக்க அரசு கட்டிய மேம்பாலமா? அல்லது இந்நாட்டு அரசுகள் கட்டியதா என்பது பற்றி சத்தமே இல்லை, வராது

எது மூலமோ அதனை ஆராயமாட்டார்கள், எதனை செய்யவேண்டுமோ அதனை செய்யமாட்டார்கள்.

பிரச்சினை என்பார்கள், போராட்டம் என்பார்கள் ஏதும் காவல்துறை நடவடிக்கை என்றால் சர்வாதிகாரம், அடக்குமுறை, அத்துமீறல் என்பார்கள், அதோடு மல்லுகட்டியும் பார்ப்பார்கள். இது ஜனநாயகமா? மக்களாட்சியா? என்பார்கள்

ஆனால் தேர்தலில் மட்டும் இவர்களுக்கு மக்களாட்சி, ஜனநாயகம் எல்லாம் மறந்துபோய் வாக்களிப்பார்கள். அப்பொழுது அல்லவா இது மக்களாட்சி என்பது நினைவுக்கு வரவேண்டும்?

வாக்களிப்பதும் இவர்களே, போராடுவதும் இவர்களே, அரசிடம் அடிவாங்கினால் அழுவதும் இவர்களே, பின் எல்லாம் மறந்து அதே அரசினை தேர்ந்தெடுப்பதும் இவர்களே, பின் மறுபடியும் முதலில் இருந்து

பியூஸ் தனியாக அடைத்து வைத்து மன சித்திரவதை செய்யபடுகின்றாராம், அப்படியானால் இடிந்தகரையில் நடந்தது என்ன? எத்தனை ஆயிரம் பேர் இன்று வரை வழக்கு , செலவு என பாதிக்கபட்டிருக்கின்றார்கள், வாழ்வினை தொலைத்திருக்கின்றார்கள் அதன் விலை என்ன?

அதுபோன்ற காலங்களில், ராமேஸ்வர மீணவன் சுடபட்ட காலங்களில் மொத்தமாக தமிழகம் திரண்டிருந்தால் இன்று மேம்பாலத்திற்கும் திரண்டிருக்கும்.

அணுவுலைக்கே திரளா தமிழகம், மேம்பாலத்திற்கு திரண்டே ஆகவேண்டுமாம்

பியூஸ் கைது, வழக்கு, சிறை, விடுதலை என ஆயிரம் நடக்கும், நடக்கட்டும். ஆனால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்றா நினைக்கின்றீர்கள்?

அதே கட்சி,அதே வெற்றி அதே காண்ட்ராக்டர், அதே மேம்பாலம்

வாக்களிப்பவன் பணம் வாங்கிவிட்டே வாக்களிக்கும் தேசத்தில் என்ன எதிர்பார்க்கமுடியும்?

இதோ முகநூலில் பியூஸ் மனுசை ஆதரித்து பொளந்து கட்டுபவன் எல்லாம், நாளையே அதாவது கபாலி படம் வருமுன்னே விமர்சனம் எழுதிகொண்டிருப்பான்.

அணுவுலையே தேசிய தேவை என அனுமதித்த‌ மாநிலத்தில் மேம்பாலத்தை எதிர்த்தால் தியாகம் என்றா பாராட்ட போகின்றார்கள்?

பியூஸ் என்பவர் இயற்கை போராளியாக இருக்கட்டும்,சமூக ஆர்வலராக இருக்கட்டும் நல்லது. ஆனால் மேதா பட்கரும் வந்து ஆதரித்த இடிந்தகரை போராட்டமும், உதயகுமாரின் கோரிக்கைகளும் என்ன வியாபார நோக்கம் கொண்ட பிரிவினை வாதமா? முதலாளித்துவமா?

அதில் இயற்கை பாதுகாப்பும், சூழியல் நலனும், சந்ததி நலனும் இல்லையா?

உதயகுமாரோடு மக்களுக்கு ஒரு நியாயம், பியூஸுக்கு ஒரு நியாயமா?

அணுவுலைக்கு ஒரு நியாயம், மேம்பாலத்திற்கு ஒரு நியாயமா?

என்ன தமிழக யதார்த்தமோ, ஊடக தர்மமோ தெரியவில்லை.

தமிழகம் முழுக்க டாஸ்மாக் திறந்து வைத்திருப்பதிலும் அர்த்தமுண்டு , இப்படி எல்லாம் தமிழகத்தை பற்றி சிந்தித்தால் அங்கு சென்றுதான் “தெளிய” வேண்டும்.

ரிலையன்ஸ் : வராத கடன்களை வசூலிக்கும் கட்ட பஞ்சாயத்தான்…..

மதுரை, அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் இலெனின் பெற்ற கல்விக்கடனுக்காக அவரின் குடும்பத்தினரை தொலைபேசியில் ரிலையன்சு கும்பல் மிரட்டியதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார் : மாணவர் இயக்கங்கள் போராட்டம்

கல்வி என்பது ஒரு அரசு வழங்க கூடிய அடிப்படை உரிமை, ஆனால் வணிகமயமான கல்வி எடுத்துகொண்டிருக்கும் நரபலிகளில் இந்த கொலையும் ஒன்று

எத்தனையோ தொழில்நடத்தும் ரிலையன்ஸ் குழுமம், வராத கடன்களை வசூலிக்கும் கட்ட பஞ்சாயத்து தொழிலில் இறங்கி இருப்பதும், இதற்கு அரசு ஆதரவளித்திருப்பதும் மகா கொடுமை.

விரைவில் இந்த ரிலையன்ஸ் விவசாய கடன்களையும் இப்படி வசூலிக்க இறங்கினால் எல்லா நிலமும் அவர்களுக்கு செல்லும், வாகனங்களும் செல்லும். ஒரு கட்டத்தில் அந்நாளைய கிழக்கிந்திய கம்பெனியாகவே ரிலையன்ஸ் மாறலாம்.

இதனை எல்லாம் அடக்கி வைக்கவேண்டிய மத்திய அரசோ, இவர்களுக்காக உலகம் முழுக்க சந்தை பிடித்துகொடுத்துகொண்டிருக்கின்றது, இந்தியாவில் இன்னும் பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்க காரணமும் இவர்களே

இந்தியா இந்தியருக்கு என்பது போய், இந்தியா குஜராத்தியருக்கு எனும் கோஷம் உருவாகிகொண்டிருக்கின்றது

நிச்சயம் இது கண்டிக்கதக்கது

எத்தனை ஆயிரம் கோடிகளை சுருட்டிவிட்டு ஓடிய மல்லையாவிடம் என்ன வசூலித்துவிட்டார்கள்? எத்தனை கோடீஸ்வர தொழிலதிபர்கள் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக உலா வருகின்றார்கள்?

இறந்துபோன மாணவனின் பெயர் லெனின்

அம்மாமனிதனின் கொள்கைகளின் தேவை மானிட குலம் இருக்குமளவும் தேவைபடும் என்பதைத்தான் உலகம் உணர்ந்துகொண்டிருக்கின்றது

ஒரு காலத்தில் வங்கிகளின் அழிச்சாட்டியம் தாளாமல் அவற்றை தேசிய மயமாக்கியது காங்கிரஸ் ஆட்சி

அவற்றை மறுபடியும் தனியார் மயமாக்கிகொண்டிருக்கின்றது மோடி அரசு

சோனியாவோ, காங்கிரசோ ஒரு சிரமும் படவேண்டாம். மறுமுறை காங்கிரசுக்கு அமோக வெற்றி தர மோடியே தீவிரமாக ஓடி ஓடி உழைத்துகொண்டிருக்கின்றார்.

அதுவும் உலகெல்லாம் ஓடி

கலைஞர் வீட்டுக்கு கங்கை நீர் அனுப்பும் போராட்டம்

கலைஞர் வீட்டுக்கு கங்கை நீர் அனுப்பும் போராட்டம் : இந்து முண்ணணி அறிவிப்பு

கலைஞருக்கு வயதாகிவிட்டது, பழைய கலைஞர் என்றால் எப்படி சீறுவார் தெரியுமா?

அந்த பார்பனிய அரசு, அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் பிரசாதம் ஊட்டிவிட்டு, இந்திய மக்களுக்கெல்லாம் காசி அல்வாவினை மறைமுகமாக ஊட்டிவிட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சில பார்பனிய கூலிகள் எனக்கு கங்கை நீரை அனுப்பபோகின்றதாம்

காவேரியில் ஆடி மாத நீர் வரவில்லை, ஆடிபெருக்கு விழாவிற்கு கூட நீர் இல்லை அதனை மத்தியா அரசிடம் கேட்க தெரியா கோட்டான்கள், மைசூர் மாதரசியிடம் முறையிட பயந்த முட கூட்டங்கள் இந்த சூத்திரனிடம் மட்டும் சாடுவது வடிகட்டிய வஞ்சகம், கூடி செய்த சதி.

இதே சென்னைக்கு ஆந்திராவிலிருந்து கால்வாய் வெட்டி கால்வாயினை வெட்டி, அதற்கு தெலுங்கு கங்கை என பெயரும் சூட்டி சென்னையின் தாகம் தணிக்கபடவேண்டும் என 1970களிலே சொன்னவன் இந்த கருணாநிதி

அப்படி தெலுங்கு கங்கை நீரை மொத்த சென்னைக்கும் கொண்டுவந்த கழக எண்ணம் எங்கே?, எனக்கு மட்டும் கங்கை நீரை கொடுக்கும் இவர்கள் எங்கே

கல்கத்தா கங்கை நதியோரம் பிறந்த விவேகானந்தருக்கு குமரியில் சிலைவைத்தபோது திமு கழகம் அனுமதித்தது, அருகே அய்யன் வள்ளுவனுக்கும் சிலை அமைத்தது, ஆனால் இன்றோ தமிழ் தலைமகனின் சிலையினை கங்கை கரையிலே அமைக்க முடியவில்லை என்றால் இது பார்பானிய, ஆரிய அரசே அன்றி வேறு இல்லை.

தமிழழின் பெருங்கடலில் வங்காளத்தவருக்கு சிலை இருக்கும் நாட்டில் கங்கை கரையில் தமிழனுக்கு சிலை வைக்க முடியாவிட்டால் இது மத, இன சார்பற்ற நாடா? அல்லது மதவெறி செந்நாய்களும், நக்கி பிழைகும் நரிகளும் வாழும் காடா?

அப்படி திராவிடரும் இந்தியர் என கருதுவீர்களானால், இந்திய சமத்துவ செயல்வீரர்களானால் கங்கை காவிரியினை இணைத்து, அந்த பெரும் கங்கையினை தமிழகத்திற்கு அழைத்து வாருங்கள். அப்பொழுது தமிழரில் ஒருவராக நானும் அந்த நீரில் குடிக்கிறேன், குளிக்கின்றேன்.

அதனை விட்டு எனக்கு மட்டும் கங்கை நீர் தந்தால் ஏற்க மாட்டான் இந்த கருணாநிதி, அது கவரில் வந்தாலும் சரி, கண்டெய்னரின் வந்தாலும் சரி

கண்டெய்னர் என நான் சொல்ல காரணம், தற்போது ஆயிரகணக்கான கோடிகளுடன் கண்டெய்னர்கள் பிடிபடுகின்றதாம், உங்களுக்கு புரியும்

அப்படி பல்லாயிரம் கோடி பணம் கொடுத்து குடிக்க சொன்னாலும், தமிழர் தாகமாய் இருக்க நீ மட்டும் கங்கை நீர் குடி என கொடுத்தாலும், மன்ன(னா)ர் குடி கும்பலே அதாவது அரசாளும் கும்பலே குடித்தாலும்,

தமிழன் தாகமாயிருக்க ஒரு சொட்டு சுயநலமாக குடிக்கமாட்டான் இந்த பெரியார் தொண்டன்.