இந்தியாவின் அக்னி சிறகு அப்துல் கலாம் : நினைவாஞ்சலி

இந்தியாவின் அக்னி சிறகு

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம்.

ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, பெரும் சவால் நிறைந்தது,

ap

மத ரீதி, ஜாதி ரீதியாயக தன்னை காட்டி அனுதாபம் தேடியவரில்லை, அவருக்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு, தேசாபிமானம் மட்டுமே

நவீன இந்தியாவில் விக்ரம்சாராபாய், ஜஹாங்கீர் பாபா, சதிஷ் தவான் , சிதம்பரம் (ப.சிதம்பரம் அல்ல) , போன்ற வரிசையில் மிக முக்கியமான பெயர் அப்துல்கலாம்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் யுத்தம் என்பது விண்வெளிக்கு மாறிற்று, செயற்கை கோள்களும், ஏவுகனைகளும்தான் ஒரு தேசத்தின் பாதுகாப்பினை நிர்ணயம் செய்தன, அது இல்லாத சமயத்தில் சீனா நமது முதுகில் குத்திய வஞ்சம் நடந்தது.

உலக நாடுகள் எல்லாம் மிக ஏளனமாக பார்த்த இந்திய ராணுவ ஏவுகனை துறையையும், அதற்கு மிக பக்கபலமான விண்வெளி துறையும் உலகின் மிக முண்ணனி நாடாகளுள் ஒன்றாக மாற்றிய பெருமை அப்துலகாலாமிற்கு உண்டு,

அவரது முதல் படைப்பே மிக சிறியரக ராணுவ ஹெலிகாப்டர், இறுதியாக கொடுத்தது (ஓய்வுபெற்றாலும் அவரின் வழிகாட்டல் உண்டு) இன்று உலகின், கவனியுங்கள் உலகிலே அதிவேக ஏவுகனையான பிரம்மோஸ், இன்று இந்தியாவின் பிரம்மாஸ்திரம், இன்று சீனாவின் தூக்கத்தை தொலைதுவிட்ட பாசுபதகனை.

1980வரை இந்தியாவிடம் சொல்லிகொள்ளும் ஏவுகனைகள் கிடையாது, ரஷ்யா நண்பன் தான் எனினும் சொல்லிதராது, அல்லது சொல்லிதர விடமாட்டார்கள். இந்திராவின் எழுச்சியான இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவணத்தில் ஒரு பகுதி தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி அலுவலகம் என மாற்றபட்ட பின் அப்துல் கலாம் யுகம் உருவாகிறது.

பெரும் தோல்விகள், ஏராளமான அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டித்தான் அவரால் ஏவுகனை திட்டத்தை செயல்படுத்த முடிந்தது, காரணம் ஏவுகனை என்பது மிக மிக சக்திவாய்ந்தது மட்டும் அல்ல பெரும் சிக்கல் வாய்ந்த நுட்பம்., விமான அறிவும் விண்வெளி தொழில்நுட்ப அறிவும் நிரம்ப கலந்து இல்லாமல் அது சாத்தியமே இல்லை.

அக்னி,ப்ரித்வி,நாக்,திரிசூல்,ஆகாஷ் என வரிசையாக செய்து கொடுக்கும்பொழுது உலகம் ஆடத்தான் செய்தது, அக்னி நீண்ட தூர ஏவுகனை சீனாவிற்கானது என சொல்லி தெரிவதில்லை, ஆனால் பிரித்வி நடுத்தரமானது, அதன் தாக்கும் தூரத்தை கூட கணிக்காமல் “பிரித்வி” என்ற பெயரை கேட்டதும் அலறியது

பாகிஸ்தான், காரணம் பிரித்விராஜன் என்ற மன்னன் அக்காலத்தில் ஆப்கான் முஸ்லீம் கொள்ளையனுக்கு பெரும் எதிரி.
(அந்த ராஜஸ்தான் மன்னனை குறிப்பிட்டு அதாவது இதனை ராஜஸ்தான் எல்லையில் நிறுத்துவோம் என சொல்லாமல் சொல்லது இந்தியா :))

உடனே புறவாசல் வழியாக ஏதோ ஒரு மொக்கை ஏவுகனையை வாங்கி “கோரி” (கோரி முகமது) என பெயரிட்டு மகிழ்ந்து பாகிஸ்தான் (ஆனால் அது வேலை செய்யுமா என கூட தெரியாது 🙂 ), இன்றும் ஐரோப்பாவில் களவெடுத்து சீனாவிடம் கொடுத்து, 1950 மாடலில் செய்த பழைய அணுகுண்டு பாகிஸ்தானிடம் இருப்பதாக நம்பபடுகின்றது, மற்றபடி சொந்த தொழில்நுட்பம் ஏதும் அவர்களிடம் கிடையாது தீவிரவாதம் தவிர.

இன்னொன்று பாகிஸ்தான் ஜாதகம் அபாரமானது, போராடமலே அவர்களுக்கு நாடு கிடைக்கும், அவர்கள் கேட்காமலே வல்லரசுகள் அவர்களுக்கு நவீன ஆயுதம் கொடுக்கும், அணுகுண்டு கொடுக்கும் எல்லாம் எதற்காக? இந்தியாவினை முடக்க,

அப்படியும் யுத்ததில் அடிவாங்கும் பாகிஸ்தான், 4 தீவிரவாதிகளை வைத்து இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும், அதோடு வல்லரசுகளை நோக்கி கட்டை விரலை உயர்த்தும், அவர்கள் காரி துப்புவார்கள்.

ஆனால் நிச்சயமாக சொல்லலாம் இந்தியா ஓரளவு சொந்த தயாரிப்பு கொண்டது, இன்று ஓரளவிற்கு இந்திய ராணுவம் வலிமையுடையது என்றால் அதன் ஏவுகனை பலம் ஒரு காரணம், அதன் மூலம் சந்தேகமே இல்லாமல் அப்துல் கலாம்.

இதனால்தான் மிகநவீன கிரையோஜனிக் ராக்கெட் எஞ்சின்களை ரஷ்யா தர சம்மதித்தபொழுது குறுக்கே பாய்விரித்து படுத்து தடுத்தது அமெரிக்கா, அதனால்ததான் இன்னும் ஜி.எஸ்.எல்.வி தாண்டி அடுத்த கட்டம் நம்மால் செல்லமுடியவில்லை, இன்னும் நமது விண்வெளி ராக்கெட்டுகளுக்கு முழு சக்தி காணாது, சொந்த முயற்சியில் ஏதோ மங்கள்யான் வரை சாதிக்கின்றோம்.

அதனால் தான் அப்துல்கலாமை அவர்களுக்கு பிடிப்பதில்லை, சொந்த ஏர்போர்ட்டில் அவரை ஏளனபடுத்தினாலும் “அப்படியா? அப்படி ஒருவரை எமக்கு தெரியாதே” என கிண்டலாய் சொல்வார்கள், அதாவது அவர்களை தவிர வேறு யார் ஆயுதம் செய்தாலும் பொறுக்காது,

ஒய்வு பெற்றபின் அல்ல, அவர் நினைத்திருந்தால் உலகில் எந்த நாட்டிற்கும் சென்று கோடிமேல் கோடி குவித்திருக்கலாம், அந்த துறை அப்படி.(ஐ.டி.ஐ படித்து விட்டு சில நாடுகளில் சென்றுபணியாற்றி சிலர் அடிக்கும் அலப்பறையே தாளவில்லை), அவர் கல்வி அப்படி, அனுபவம் அப்படி,

எல்லாவற்றிற்கும் மேல் ஒரு மாபெரும் தேசத்தின் ராணுவத்தையே உயர்த்திய சாதுர்யம், இதற்கு மேல் என்ன வேண்டும்?

எல்லா நாடுகளும் ரத்தின கம்பளம் குவித்து வரவேற்றிருக்கும். அது கூட வேண்டாம் தனியாக ஒரு ஆயுதகம்பெனி தொடங்கியிருந்தாலும் அவர் உலகின் முண்ணனி வியாபாரியாக மாறி இருப்பார்,

அட வியாபாரம் வேண்டாம் ஆலோசகராக இருந்தாலும் “அள்ளி அள்ளி” எடுத்திருப்பார், அவர்களும் தங்க வீட்டிலே வைத்து தாங்கியிருப்பர். கிட்டதட்ட அரபு அரசர்கள் அல்லது ஐரோப்பிய தொழிலதிபர்களின் அளவிற்கு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கலாம்,

ஆயுத வியாபாரம் என்றென்றும் உலகில் நம்பர் 1 லாபகரமான தொழில்

உண்மையில் அவர் அதற்கெல்லாம் ஆசைபடவில்லை, நாடு உயரவேண்டும், சுபிட்சமாக வாழ பாதுகாப்பு அவசியம், அதற்காகத்தான் உழைத்தார். குடியரசு தலைவர் பதவி அவரை தேடிவந்தது, அங்கு உரை நிகழ்த்தும் பொழுதெல்லாம் “திருகுறளை” மேற்கோள் காட்டி தமிழராக நின்றார்.

உலகமெல்லாம் கொண்டாடிய அந்த படித்த விஞ்ஞான தமிழன், தமிழகத்தின் சில இடங்களிலும் சில அரசியல் காட்சிகளிலும், 5ம்வகுப்பு கூட தாண்டாத தமிழக அரசியல்வாதிகளால் மட்டம் தட்டபட்டு அவமானபடுத்தபட்டார், ஆனால் அப்துல்கலாம் ஒரு வார்த்தை கூட பதில்பேசாது தனது பெருந்தன்மையை காட்டிய நிகழ்வுகளும் உண்டு.

இரண்டாம் முறை அவர் ஜனாதிபதியாகும் வாய்ப்பும் இருந்தது, அவ்வாறு நடந்தும் இருக்கலாம், ஆனால் சில வஞ்சக திட்டங்களால் வீழ்த்தபட்டார். இந்த உலக விஞ்ஞானி அவர்களை மதிக்கவில்லையாம் பொங்கிவிட்டார்கள், ஜனநாயக நாட்டில் எதுவும் சாத்தியம்.

நிச்சயமாக அவர்கள் வட இந்தியர்கள் அல்ல, திராவிடர்கள் தான். இன்னும் கொஞ்சநேரத்தில் சோக கீதம் வடித்து அலறுவார்கள் பாருங்கள்.

கலாம் .ராமேஸ்வரத்து மண்ணை சேர்ந்தவர், அம்மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, என இன்னும் ஏராளமான சர்ச்சைகள் அவர்மேல் உண்டு, அணுசக்தியை ஆதரித்தார் என்ற பழியும் உண்டு, நிச்சயமாக அவர் அணுவிஞ்ஞானி அல்ல ஆனால் மூத்த விஞ்ஞானி எனும் பதவியில் இந்திய அணுசக்தி குறித்த அனுபவம் அவருக்கு அத்துப்படி.

இன்னொன்று அணுஆலை என்பது சர்வதேச அரசியல், பல மர்மங்களை கொண்டது, அந்த அரசியல் அவருக்கு தெரியாது, ஆனால் ஒரு இந்திய தலமை விஞ்ஞானியாக ஒரு பதிலை கொடுக்கவேண்டிய கட்டாயம், ஆனால் கவனித்து பாருங்கள் அவர் சொல்வது எல்லாம் ஆறுகள் இணைப்பு, சூரிய ஓளி மின்சாரம், இயற்கையோடு இணைந்த அறிவியல்.

சிலர் சொல்வார்கள் கலாம் ராமேஸ்வரம் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, கூடங்குளம் அணுவுலையினை நிறுத்தவில்லை, அவர் தமிழுக்கு என்ன செய்தார்? ஈழ மக்கள் விடுதலைக்கு என்ன செய்தார்? சிலர் ஒருபடி மேலே சென்று சொல்வார்கள், நல்ல தமிழர் என்றால் கலாம் ராக்கெட் நுட்பத்தை புலிகளுக்கு சொல்லி கொடுத்திருக்க வேண்டமா?

அவர் இந்திய குடிமகனாக வாழ்ந்தார், அதனால் சிலர் அவரை ஒரு வகை ஆர்எஸ்எஸ் என்றார்கள். அப்படியானால் காமராஜரும் ஆர் எஸ்எஸ் , காந்தி என சகலரும் அப்படியே

கலாமினை குறை கூறுபவர்களுக்கு ஒன்று மனசாட்சி இல்லாமல் இருக்கவேண்டும், அல்லது நாட்டுபற்றில்லா குறுகிய மனப்பான்மை இருக்கவேண்டும்

அழிவு ஆயுதங்களை உருவாக்கிய கலாம் நல்ல மனிதராக இருக்கமுடியுமா? என்று சில வாதங்கள். அணுகுண்டை உருவாக்கிய ஐன்ஸ்டீனை விடவா மனிதநேயம் பேசிவிட முடியும்?

இது பாதுகாப்பு, தேச பாதுகாப்பு இத்தனை ஏவுகனைகளை வைத்திருக்கின்றோமே தவிர யார் மீது வீசினோம், மீணவனை காப்பாற்ற நாட்டிற்கு ஏவுகனை எதற்கு என்பதெல்லாம் அலட்டல். அது தேசபிரச்சினை என்றால் என்றோ கடற்படை புகுந்துவிடும், இது வேறு அரசியல் விட்டுவிடலாம்

.
காந்தி,காமராஜர் (அவரும் விருதுநகருக்கு என்ன செய்தார்? 🙂 )வரிசையில் ஒரு சலசல்ப்புமே இல்லாமல் கலாமையும் வைக்கலாம். இந்தியா அவருக்கு பாரத ரத்னா கொடுத்து கௌரவ படுத்தியது, அது என்ன பாரத ரத்னா, இப்பொழுதெல்லாம் அது யாருக்கெல்லாமோ வழங்கபட்டத்து, வழங்கபடுகிறது இன்னும் வழங்குவார்கள்.

ஆனால் மோடியின் அரசு புதிய ஏவுகனை திட்டங்களுக்கு கலாம் சீரியஸ் என பெயரிட்டிருக்கின்றார்கள் அல்லவா? அதுதான் உண்மையான‌ மரியாதை.

அதைவிட இன்னொரு உச்சபெருமை வேண்டுமென்றால், விரைவில் குலசேகரபட்டனத்தில் ஸ்ரிகரிஹோட்டா போல ஒரு தளம் அமைக்கும் திட்டத்தில் இஸ்ரோ இருக்கின்றது, காரணம் அதன் அமைவிடம் மற்றும் கண்ணாணிக்கும் வசதிகள் மிக மிக பொருத்தமானது, அப்படி அமையும் பட்சத்தில் அதற்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டினால் அது பெரும் பாராட்டக அமையும்.

ஏவுகனைகளின் பிதாமகன் மிக உறுதியாக திப்புசுல்தான். அவர்தான் அந்த நுட்பத்தை உலகிற்கு சொன்னார், 15,000 அடி பாயும் ஏவுகனையை உருவாக்கினார் (இன்றும் அதன் மாதிரி அமெரிக்க ஏவுகனை திட்ட அலுவலகத்தில் உண்டு )அதன்பின் அதனை செயல்படுத்தியது ஜெர்மன்.

நவீன ஏவுகனைகளின் தந்தை என “வார்ண் பிரவுன்” ணை கொண்டாடும் உலகம், ஹிட்லரிடம் பணியாற்றியவர் பின்னாளில் அமெரிக்காவிற்கு யுத்த கைதியாக கொண்டு செல்லபட்டார், அதன்பின் செயற்கை கோள் ராக்கெட் மற்றும் ஏவுகனைகளை தயாரித்து அமெரிக்காவை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றார், அந்த தலைமுறைக்கு ஐன்ஸ்டீனுக்கு அடுத்து அவர்தான் ஹீரோ.

இந்தியாவிற்கு ஏவுகனைகளை கொடுத்து பலமான நாடாகியதில் இந்த எளிய தமிழனின் சாதனை மிக பலமானது, அதனினும் மேல் இன்னும் இந்த நாட்டையும் அதன் தூண்களாகிய மாணவர்களையும் நேசித்த‌ அவரின் மனமும் மிக விலாசமானது.
மாணவர்களை மிகவும் நேசித்த அவர், தனது பிற்கால வாழ்க்கை எல்லாம் அவர்களுடனே செலவிட்டார்,

அப்படித்தான் நேஷில்லாங்கில் மாணவர்களிடம் உரையாற்றிகொண்டிருந்த பொழுதே மரணம் அடைந்திருக்கின்றார், 84 வயதில் இந்த நாட்டிற்காய் உழைத்துகொண்டே காலமாகி இருக்கின்றார்.

மொழி,இனம்,மதம் என சகலமும் கடந்து ஓரு இந்தியனாக தன்னை முன்னிலைபடுத்திய தமிழர்களின் வரிசையில் காமராஜருக்கு பின் இடம்பிடித்துகொண்டவர் கலாம், இருவருக்கும் குடும்பமில்லை, இருவருமே சொந்தபந்தங்களுக்கோ அல்லது சொந்தமக்களுக்கோ ஏதும் செய்ததுமில்லை.

கலாம் காலமாகி இருக்கலாம், ஆனால் அவரது முத்திரை இந்தியாவில் அழிந்துவிடகூடியது அல்ல. இந்திய ராணுவம் இருக்கும் வரைக்கும் என்றல்ல, இந்திய கல்விநிலையங்கள் இருக்கும் வரை, மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
பலநூறு ஆண்டுகள் செய்யவேண்டிய சேவையை 60 ஆண்டுகள் உழைப்பினில் இந்தியாவிற்கு செய்திருக்கும் விஞ்ஞான மகான் அவர்.

ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், இந்நாடு விசாலமான மனதுடையது, நாட்டிற்காய் நீங்கள் உழைத்தால், நல்ல கல்வியோடு பெரும் சிந்தனையோடு உழைத்தால்

எந்த சாதியில் பிறந்தாலும், எந்த மதத்தில் பிறந்தாலும், எந்த குலத்தில் பிறந்தாலும் இந்நாடு அதற்குரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் போகாது

கலாம், அம்பேத்கர் எல்லாம் அப்படி கல்வியாலும் நாட்டு சிந்தனையாலும் முத்திரை பதித்தவர்கள், தங்கள் சாதியாலோ மதத்தாலோ அல்ல, மாறாக கல்வியால், பரந்த சிந்தனையால்

சிந்தனை பெரிதாகவும் பரந்த மனத்தோடும் இருந்துவிட்டால் அவனுக்கு சாதி, மத, இன அடையாளம் தேவைபடாது, இந்தியன் எனும் ஒற்றை அடையாளம் போதும்

அப்படித்தான் தமிழக மீணவ தீவில் பிறந்த ஏழை இஸ்லாமிய தமிழனை இந்ந்தியா இன்று நாடெங்கும் வணங்கிகொண்டிருக்கின்றது, அவனை அறியா இந்தியரில்லை அவர் படமில்லா பள்ளிகளில்லை.

நவீன சீனாவினை உருவாக்கியவர் டிங் ஜியோ பெங், அவர் காலத்தில்தான் சீன பொருளாதாரம் டிராகனாய் சீறியது, அவர் சொன்னார் “நான் இறந்தால் நீங்கள் வேலை செய்துகொண்டே என்னை வழியனுப்பவேண்டும்” அதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் உச்சகட்ட மரியாதை. சிங்கப்பூரின் லீ குவான் யூ அதனைத்தான் சொன்னார்

அப்படித்தான் இன்று இந்தியாவில் கலாமிற்கும் செய்யவேண்டும், மாணவர்கள் புரட்டும் புத்தகத்தில் அவர்களின் கண்ணீர் அப்துல் கலாமிற்காக விழுட்டும்

இந்தியனாய் , இந்த கணிணியில் எனது கண்ணீர் சொட்டு சொட்டாய் விழுவதனை போல..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s