சிதறல்கள்

 “நரேந்திர மோடிக்கு நாம் சொல்ல விரும்புவது என்ன?” நியுஸ் 7 தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்கபோகிறாம் திருமுருக காந்தி

நரேந்திர மோடிக்கு சொல்ல விரும்புவதை நியுஸ் 7 தொலைகாட்சியில் அன்னார் சொல்லபோகின்றாராம், அப்படி என்ன சொல்வார். தாது மணல் வியாபாரத்தை மத்திய அரசே எடுத்து நடத்தட்டும் என்றா சொல்லிவிடவா போகின்றார்?

இல்லை சொல்லிவிட்டுத்தான் வெளி வந்துவிட முடியுமா?

அவர் என்னமும் சொல்லட்டும், நாம் நரேந்திரமோடிக்கு சொல்ல விரும்புவது எல்லாம், அந்நிய நாட்டு தீவிரவாதிகளை ஆதரித்து விடுதலை செய்ய கொடிபிடிப்பவர்களையும், இந்திய ராணுவத்தை பழித்துகொண்டு பேசிதிரிபவர்களையும் பிடித்து தேசதுரோக வழக்கில் செய்யவேண்டியதை செய்யுங்கள்

சர்ச்சைகள் இருந்தாலும், அருண் ஜெட்லி ஒருவரை தவிர உருப்படியாக அமைச்சரவையில் யாரும் இல்லை எனினும் ஒன்மேன் ஆர்மியாக தாங்கி நிற்கிறார் மோடி, உலகெல்லாம் பறந்து ஏதோ செய்ய நினைக்கின்றார், யாருக்கு?

இந்த நாட்டுக்கு, நிச்சயம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு

அவருக்கு, இந்த தேசத்தின் அப்பட்டமான பிரிவினைவாதி , குழப்பவாதி ஏதோ சொல்ல விரும்புகின்றாராம், எல்லாம் கால கொடுமை”

இவர் சொல்லி அதனை கேட்டு ஆட்சிநடத்தும் இடத்திலா இருக்கின்றார் மோடி?,

இதெல்லாம் ம்ம்மேஏஏஏஏ என கத்தும் 17 பேர் கொண்ட கும்பலுக்கான டிராமா, பாவம் அந்த ஆடுகள்


அதிமுக ஒரு வன்முறை இயக்கம் : ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் யார் என மேலிடம் அறிவித்த பின் தெரிந்துவிடபோகின்றது யார் வன்முறை இயக்கம் என்று, அவ்வளவுதான்

இன்றைய உலகம் மிக பெரும் கலவரம் வரும் என எதிர்பார்க்கும் இடமே சத்தியமூர்த்தி பவன் என்பதை இளங்கோவன் மறந்துவிட்டார்.


அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதற்கு முழுமுதல் காரணம் ஜெயலலிதா : எம்எல்ஏ ராமு

எம்ஜிஆர் படங்களில்தான் ராமு தொந்தரவு தாங்கமுடிவில்லை என்றால் அவர் கட்சியிலும் அப்படித்தான் இருக்கின்றது

அமெரிக்க வரலாற்றிலே முதல்முறையாக ஒரு பெண் அதிபர் தேர்ந்தெடுக்கபட வாய்ப்பு வருகின்றது, அதனை கெடுப்பதில் ராமுவிற்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியவில்லை

இதனை கேள்விபட்டால் ஹிலாரி தேர்தலில் நிற்பார் என்றா நினைக்கின்றீர்கள்?, கண்ணீர் விட்டு கதறி ஓடிவிடமாட்டாரா?

எனினும் இதனை கேள்விபட்டால் ரஷ்யாவின் புடினும், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவும் வாய்விட்டு சிரித்து மகிழ்வார்கள், ராமுவிற்கு மாஸ்கோ பயணம் கூட வாய்க்கலாம்

இதற்கு மேலும் அமெரிக்க அதிபர் வேட்பாளரை மட்டம் தட்ட என்ன இருக்கின்றது?


FB_IMG_1470123451503

கலைஞரை முதல்வராக்கிய பெரும்பங்கு தீரன்
சின்னமலைக்கு உண்டு :ஸ்டாலின் பேட்டி

ஏன் அவருக்கு மட்டும் பங்கு?, இந்த திப்பு சுல்தான், கட்டபொம்மன், பூலித்தேவன், மருதநாயகம், மருதுபாண்டியர் எல்லாம் கலைஞர் முதல்வராக பாடுபடவில்லையா?

(அவ்வளவு பொறுப்பாக பத்திரிகை நடத்துகின்றார்கள்)


மிஸ்டர் சைமன், ஒரு கன்னட பெண்ணால் தாக்கபட்ட நாதியற்ற தமிழச்சி டெல்லியில் போய் கதறி அழுதிருக்கின்றாளே, ஏதாவது வாய் திறந்து சொல்றது?

அற்ப காரணங்களுக்கு எல்லாம் நானும் ஒரு அரசியல்வாதி என் அறிக்கையிட்டுகொண்டிருந்த சீமானை இப்பிரச்சினையில் காணவில்லை ,

இதே ஒரு ஈழப்பெண் சிங்கள பார்லிமெண்டில் அழுதால் அன்னார் சும்மா இருப்பாரா? வள்ளுவர் கோட்டம் முன் சீறுவார், கூட ஆட்டுமந்தை இயக்கமும் கத்தும்.

ராஜதந்திரம் நிறைவேறிய மகிழ்ச்சியில் வைகோ நிரந்தர மவுன விரதம், நேர்த்திகடன்.

ராமதாஸுக்கு ஒரு மோசடி நாடக காதல் கதை சிக்கி இருக்கும் நேரம், ஒரு பெண் எரிக்கபட்டிருக்கும் நிலை, அரசியல் செய்ய அப்படி ஒரு வாய்ப்பு , நிச்சயம் அட்டகாசமான வாய்ப்பு

அப்படி லட்டு கையில் கிடைத்திருக்கும் நேரத்தில்தான் சசிகலா புயல் அடிக்கிறது என்ன செய்ய? மனிதர் கடும் அப்செட்.

நிச்சயம் அந்த பெண் எரிப்புதமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும், பல சர்சைகளுக்கு தலைகீழ் முடிவு கொடுத்திருக்கும்

ஆனால் என்ன செய்ய, சசிகலா ஒப்பாரியில் சகலமும் அடங்கிபோனதில் மருத்துவர் மூட் அவுட்.

குஷ்பூவிற்கு ஒரு நியாயம், சசிகலா புஷ்பாவிற்கு ஒரு நியாயமா?

சசிகலா புஷ்பாவை அடிச்சதுக்கு ஜெயலலிதா
பதில் சொல்ல வேண்டும் : ஸ்டாலின் பேச்சு

சொந்த கட்சிக்காரனை அவர் சாத்தும்பொழுது வராத அக்கறை, ஜெயா அடித்தவுடன் வருகிறதல்லவா இது அரசியல்

எனினும் அக்காலத்தில் திமுகவினரால் தாக்கபட்ட இந்திரா காந்தி முதல், புலிகளை வளர்த்துவிட்டு சோனியாவின் விதவை கோலம் வரை எதற்காவது இங்கு பதில் சொன்னதுண்டா?

மதுரை லீலாவதி எனும் பெண் படுகொலை, தா.கிருட்டினனின் மனைவியின் கண்ணீர் என பாதிக்கபட்ட பெண்களுக்கெல்லாம் என்ன பதில் சொன்னார்கள்?

கொஞ்சநாளைக்கு முன்பு குஷ்பூ திமுகவில் இருக்கும்பொழுது அவர் வீட்டில் கல்வீசி விளையாடினார்கள் அல்லவா, குஷ்பூ கூட அழுதார் அப்பொழுது யார் பதில் சொன்னார்கள்?

அது உங்கள் கட்சி விவகாரம் என்றால், இது அவர்கள் கட்சி விவகாரம் அல்லவா?

குஷ்பூவிற்கு ஒரு நியாயம், சசிகலா புஷ்பாவிற்கு ஒரு நியாயமா?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றொரு கருத்து வந்தது, அதன் பின் ஏராளமான சர்ச்சைகள் வந்தன‌

பெரும் குற்றமான ராஜிவ் கொலையாளிகளை விடுவி என சிலர் பைக் ரேஸ் நடத்தினர், அதோடு விட்டார்களா? காஷ்மீரில் இந்திய ராணுவத்தை கண்டித்து கோடாரி காம்புகளாக தமிழகத்தில் விஷம் கக்க்கினர்

காவல்துறையினரின் தற்கொலைகள், கொலைகள் எல்லாம் அச்சமாக பார்க்கபட்டன, கூடவே சாதிய கொலைகள் மறுபக்கம்

உச்சமாக தமிழக எம்பி ஒருவர் எனக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை என் ராஜ்யசபாவில் கதறுகின்றார்

மாநில அரசு பல விஷயங்களில் மவுனம் காக்கும் போது, திணறும் போது ஆளுநர்தான் சில கண்காணிப்புகளை செய்ய களமிறங்க வேண்டும், அதுதான் அவர் பணி

இந்த தமிழக ஆளுநர் என்றொருவர் உண்டல்லவா?, அவர் எங்கிருக்கின்றார், என்ன செய்கின்றார் என ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை

ஒரு பதவி இருந்தால் அதற்கு அதிகாரம் இருக்கவேண்டும், அல்லது அதிகாரத்திற்குட்பட்டு அதிலிருப்பவர் செயலாற்றவேண்டும்

இரண்டும் நடந்ததாக தெரியவில்லை, பின் எதற்கு ஆளுநர் அவருக்கொரு ராஜ்பவன், அவருக்கொரு சம்பள செலவுகள்

சாதாரண குடிமகன் சமையல் எரிவாயு விஷயம் வரை சிக்கனமாக இருக்க வேண்டும் என சொல்லும் அரசுதான், இம்மாதிரியான வெட்டி செலவுகளை கோடிகணக்கில் செய்கின்றது

சரி இந்த தமிழக‌ ஆளுநர் என்னதான் செய்கின்றார்?

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி எப்படி கலக்கிகொண்டிருக்கின்றார், அவரை பார்த்தபின்புமா நமது ஆளுநர் விழிக்கவில்லை

கொஞ்ச நாள் கிரண்பேடியினை தமிழகத்திற்கும் ஆளுநராக நியமித்துபார்க்கலாம், அப்பொழுது பார்க்கலாம் அதிரடி விளையாட்டு

இரு நெருப்புக்களை மோத விட்டால் எப்படி பறக்கும் பொறி 🙂


எவனோ ஒருவன் சொல்லிகொண்டிருக்கின்றான், தமிழகத்தில் யானைகள் தொடர்ந்து சாவது வயதான அரசில்வாதிக்கு நல்லதில்லையாம்

நள்ளிரவில் விழித்து ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு குப்புற படுத்துகொள்வது இதுதான்

அடேய் 1985களில் வீரப்பன் தொடர்ச்சியாக நூற்றுகணக்கான யானைகளை கொல்லும்பொழுதுதான் தலைவருக்கு அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பமானது, எதிரிகள் செயலிழந்த காலம் அது, அந்த நேரத்தில் கலைஞரின் எதிரிகள் மருத்துவமனைகளில் முடங்கினார்கள்

மறுபடியும் யானை சென்டிமென்ட் என்றால் மறுபடியும் வெற்றி வாய்ப்பு அவருக்குத்தான்,

பகுத்தறிவு என்றால் பகுத்தறிவில் ஜொலிப்பார், சென்டிமெண்ட் என்றால் அதிலும் வாய்ப்பு அவருக்குத்தான் வரும், அதுதான் அவர்

# கலாய்த்தால் கலங்குர ஆளா அவர், கலைஞர்டா…..

 

தமிழகத்தின் பெரும் அடையாளம் காவேரி

அன்றைய தமிழகத்தின் பெரும் அடையாளம் காவேரி, தமிழும் கலையும் இசையும் அதன் கரையிலேதான் செழித்து வளர்ந்தது,

அப்படியே பின்னாளில் அதன் கரையில் நாடாக இசை, கரை நாடாக இசை என உருவான அந்த இசை கர்நாடக இசை என மருவி, ஏதோ மும்மூர்த்திகள் திருவையாறில் கண்டெடுத்தாக மாறியும் போயிற்று

உலகின் முதல் நாகரீக நகரங்களில் ஒன்றான கடலுள் மூழ்கிய பூம்புகார் அதன் கரையிலேதான் உருவானது

இன்னும் ஏராளமான பெருமைகள் அதன் கரையிலே உருவாயின, ஒன்றல்ல இரண்டல்ல சொன்னால் பெருமை தாங்காது.

Stanley Rajan's photo.

சிலப்பதிகாரம், தஞ்சை பெரிய கோயில், திருவையாறு கர்நாடக இசை போன்ற அழியா கலைகள் ஒரு எடுத்துகாட்டே தவிர இன்னும் ஏராளம் உண்டு

அந்த காவேரியில் இன்றைய ஆடிபெருக்கு மகா விஷேசமாக கொண்டாடபடும், அன்றைய காலங்களில் மிக சரியாக ஆடி மாதம் அது பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றது, அன்று கன்னடத்தில் அணைகள் இல்லை, தமிழகத்தின் அதன் துணையாறுகளான அமராவதி, பவானி, நொய்யலிலும் அணைகள் இல்லை,

எப்படி பெருக்கெடுத்து வந்திருக்கும் காவேரி, நினைத்தாலே இனிகத்தான் செய்கிறது, அப்படியும் ஒரு காலம் இருந்திருக்குன்றது.

கல்லணை அந்த வெள்ளபெருக்கில் கட்டபட்டதுதான் ஆச்சரியம், எப்படிபட்ட நுட்பம் என இன்றுவரை தெரியாது, எல்லாமே அனுமானம்.

அந்த கல்லணை மூலம் அக்கால சோழநாடே செழித்தது, செழித்தது என்றால் முப்போகம் தவறாமல் விளைந்தது, எல்லா வகை நெல்லும் அங்கே விளைந்தது என்கின்றார்கள்.

ஆடியில் பொங்கி வரும், அந்த பெருக்கெடுத்த காவேரியினைத்தான் பூ தூவி வணங்கிவிட்டு விதைக்க சென்றிருக்கின்றார்கள், நன்றியோடு

இன்று காவேரி மணல் அள்ளும குவாரியாக மாறிவிட்டாலும் அந்த பண்பாடு தொடர்கின்றது, ஏதோ சாஸ்திரத்திற்கு மேட்டுரிலிருந்து கொஞ்சம் நீர் வருகிறதாம், தலையில் தெளித்துவிட்டு ஆடிபெருக்கினை முடித்துவிடலாம்

உண்மையில் இது பெருக்கு அல்ல சுருக்கு. ஆயிரம் அரசியல் ஆயிரம் சர்ச்சைகள். ஏதும் கேட்டால் எங்கே சென்றுவிட்டாள் காவேரிதாய்? , பெங்களூரில் 5 லட்சம் தமிழர்களுக்கு தாகம் தீர்ப்பது யார் என கிளம்புவார்கள்

எல்லா தமிழ் இலக்கியங்களும் காவேரியினை பாடி இருக்கின்றன, வான் பொய்யினும் தான் பொய்யா காவேரி என புறநானூறு சொல்கின்றது,

கம்பன் பல இடங்களில் அதனை எப்படியெல்லாமோ கொண்டாடி இருக்கின்றான், சீதை பிறந்த ஜனக நாடு காவேரி கரைக்கு நிகரானது என ஒரே வரியில் அசத்தினான் கம்பன்

சிலப்பதிகாரத்தில்

“உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தன்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப‌
நடந்தாய் வாழி காவேரி” என

இளங்கோ அடிகளும் ஆடி பெருக்கினை அழகாக வர்ணிக்கின்றார்.

“இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தேவ மங்கையடி”

என பின்னாளில்
வாலியும் அழகாக சொன்னார்

எகிப்தின் நைல் நதிக்கு கொஞ்சமும் குறையா வரலாற்று பழமை கொண்டது காவேரி, எகிப்தியருக்கு அதன் முக்கியத்துவம் தெரிந்திருக்கின்றது கண்போல் பார்த்துகொள்கின்றார்கள்

தமிழரின் கண்ணுக்கு என்ன தெரிகிறது, எல்லாமே பணமாக தெரிகிறது, காவேரி மண், பிளாட் , மீத்தேன் என நாம் வேறுமாதிரி திரும்பிவிட்டோம் என்ன செய்ய?

அதன் பழமையும், அதன் பெருமையும், அது கொடுத்த கொடைகளையும் சற்று சிந்தித்தால் காவேரி இப்படி ஆயிருக்காது

அந்த காவேரி தமிழனின் அடையாளம், தமிழனை உருவாக்கிய ஆறு, தமிழ் கலைகளை வளரவைத்த ஆறு

அந்த நன்றியோடு ஆடிபெருக்கினை கொண்டாடலாம், காவேரியினை நன்றியோடு வணங்கலாம்

தற்போது காவேரியினை நினைக்கும் பொழுதெல்லாம் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நினைவிடத்தை பார்க்கும் ஒரு துயர நினைவிலே மனம் கனக்கின்றது

எங்கே போய்விடும் காலம், இஸ்ரேலில் அழிந்துவிட்ட ஆற்றை எல்லாம் உருவாக்குகின்றார்களாம். நமக்கும் ஒரு காலம் வராமலா போய்விடும்? காவேரிக்கும் காலம் வரும்.

அதுவரை ஒரு காலத்தில் நடந்த காவேரி வாழி