சிதறல்கள்

இந்த உலகில் சமீபத்தில் கேள்விபட்ட மிக நல்ல விஷயம் நேற்று துபாய் விமான நிலையத்தில் 300 பேர் உயிர் காப்பாற்றபட்ட சம்பவம்

நிச்சயம் இது பெரும் பரபரப்பான விஷயம், காரணம் விமானம் தரையிரங்கும்போது சிக்கல் என்றால் கும்பலாக சென்று சேரவேண்டியதுதான்

மிகபெரும் விபத்து எனினும் ஒரே ஒரு தீயணைப்பு படை வீரரை தவிர எல்லோரும் காப்பாற்றபட்டிருக்கின்றார்கள்

இது பெரும் அதிசயமும் கூட தீப்பிடித்தபின் இத்தனைபேர் காப்பாற்றபட முதல் விஷயம் துபாய் மீட்புகுழுவினர் காட்டிய வேகமான மீட்பு பணி, உலகமே பாராட்டிகொண்டிருக்கின்றது

தீ எதற்கும் தாமதிக்காது, அதற்குள்ளாக மீட்டிருக்கின்றார்கள் என்றால் அது பெரும் வேகமான மீட்புபணி

எப்படியோ பெரும் சோக செய்தியிலிருந்து உலகம் காப்பாற்றபட்டிருக்கின்றது

ஒரு தீயணைப்பு வீரர் உயிரழந்துள்ளார், அவரை தேசத்தின் மானம் காத்த மாவீரன் என துபாய் அரசு உயர்த்தி அஞ்சலி செலுத்துகின்றது

 

சரக்கு மற்றும் சேவை வரி : Goods & Services Tax)

No automatic alt text available.

ஜிஎஸ்டி (Goods & Services Tax) என்பது ஒரு வரி சீர்திருத்தம், பலவிதமான வரிகளுக்கு பதிலாக ஒரே வரியில் போட்டு சாத்திவிடலாம்

வசூலிப்பது எளிது, கணக்கு பார்பபது இன்னும் எளிது, பல வகை வரிகளை போட்டு குழப்புவதற்கு பதில் ஒரே வரி.

இப்போது இருக்கும் விற்பனை வரி (Sales Tax) சேவை வரி (Service Tax), இன்ன பிற வரிகளுக்கு பதிலாக ஒரே வரி – பொருள் சேவை வரி.

இது எல்லா நாடுகளிலும் இருக்கும் முறையே, அவர்கள் என்றோ எப்பொழுதோ அமல்படுத்திவிட்டு வசூலித்து கொண்டிருக்கின்றார்கள், நாம் இப்பொழுதுதான் அந்த பக்கம் வந்திருக்கின்றோம்

பொதுவாக உணவு, மருந்து, எரிபொருள் இவற்றிற்கெல்லாம் விதிவிலக்கு உண்டு. உணவு என்றால் உணவுபொருட்களுக்கு மாறாக உணவகத்தில் உண்ணும் பில்லுக்கு அல்ல‌

செய்யவேண்டிய வேலைதான், ஆனால் இந்தியாவில் எதுவும் எளிதில் சாத்தியமில்லை. கையில் கிடைத்ததை எல்லாம் அரசியலாக்கும் தேசமிது, தேசநலன் என்பதை விட இதனை பிரச்சினை ஆக்கிவிட முடியாதா?, நாமும் ஒரு கூட்டத்தை கூட்டிவிட முடியாதா என சிந்திப்பவகள் அதிகம்

சில சிக்கலும் உண்டு, உதாரணம் 7% ஜிஎஸ்டி அரசு அறிவிக்கின்றது என்றால் 1000 ரூபாய் பொருள் வாங்கினால் 70 ரூபாய் வரி, மொத்தம் 1070 ஆகும்.

இதே 10000 ரூபாய் பொருள் வாங்கினால் வரி 700, விலை 10700 ஆகும், அப்படியானால் 5 லட்சம் கார், 7 லட்சம் நகைக்கெல்லாம் என்ன மொத்தவிலை வரும் என கணக்கிட்டுகொளுங்கள், இது ஒரு வகை சிக்கல்.

இன்னும் இந்திய அரசு எத்தனை சதவீத ஜிஎஸ்டி விதிக்கபோன்றது என தெரியவில்லை.

இன்னொன்று இதனை உற்பத்தி நிலையங்களுக்கும் விதிக்கவேண்டும், அப்பொழுது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அலறி அடித்துகொண்டு ஓடும் அபாயம் உண்டு.

சில விலைவாசிகள் உயரலாம், ஆனால் சில வரிகள் தளர்த்தபடுவதால் சில விஷயங்கள் விலை குறைய வாய்ப்பும் உண்டு

இந்த பெரும் தேசமான இந்தியாவில் இதனை அமல்படுத்த காங்கிரஸ் கட்சிதான் திட்டம் தீட்டியது, இந்த அரசு அதனை கொண்டுவந்துவிடும் உத்வேகத்தில் இருக்கின்றது

ஆனால் மாநிலங்களுக்கும் சில உரிமைகள் இத்தேசத்தில் உண்டல்லவா?, அவைகளில் சில மல்லுக்கு நிற்கின்றன. தங்கள் வரி வசூல் பாதிக்கபடலாம் என அவை அஞ்சுகின்றன, ஆனால் தேசம் முக்கியமல்லவா? நிச்சயம் செயல்படுத்தும் மத்திய அரசு

இது நிச்சயம் முறையான வரிவசூலுக்கு உதவி செய்யும் திட்டம்தான்

அரசு ஜிஎஸ்டி நிறைவேற்றியே தீரவேண்டும், காரணம் தேசத்தின் முதுகெலும்பான வரி வசூலுக்கு அது மகா அவசியம்

உண்மையில் நமது நாட்டில் வரி குறைவு, யாரோ ஒரு அதிமுக காரர், அமெரிக்காவில் ஜிஎஸ்டி இல்லை என்றாராம். அவர் அமெரிக்காவினை மேப்பில் பார்த்திருக்கின்றாரா அல்லது நிலவின் பின்புறம் இருப்பதாக நம்பிகொண்டிருக்கின்றாரா என தெரியவில்லை

அங்கு வரியே வருமானத்தில் 3ல் ஒரு பங்கு எனும் அளவிற்கு கடும் வசூலிப்பு, அவர்கள் என்று அல்ல எல்லா வளர்ந்த நாடுகளிலும் அதுதான் நிலை, மிக கடுமையான வரிகள், காரணம் அப்பொழுதுதான் ஒரு தேசம் தடையின்றி இயங்க முடியும்

ஏராளமான நாடுகளில் ஒருவர் வருமான வரி பாக்கி வைத்திருந்தாலே பாஸ்போர்ட் முடக்கபடும்

இந்நாட்டிற்கு தேவையான திட்டம்தான், ஆனால் புரியாத மக்கள் இவர்கள். மோடி அம்பானிக்காக ஜிஎஸ்டி கொண்டுவந்துவிட்டார் என சொன்னால்போதும், ஜிஎஸ்டி பெயர் வரும் பில்லினை பார்க்கும்பொழுதெல்லாம் அவரை திட்டி தீர்ப்பார்கள்

உண்மையில் சிதம்பரம் இருந்தாலும் இதனையேதான் கொண்டு வருவார்.

அரசு கொண்டு வரட்டும், புரியாதவர்கள் வழக்கம் போல சொல்லிகொண்டிருக்கட்டும், ஊர்வலம் செல்லட்டும்

ஆனால் இது காலமாற்றம், காலத்தில் செய்யவேண்டிய மாற்றம்

அதுவும் ஒரு வளரும் தேசத்தில் இது மகா அவசியம்

முதலில் கடும் குழப்பம் வரும், வரி கணக்கில் குழம்புவோம், கொஞ்சம் விலைவாசி கூடத்தான் செய்யும், இருக்கட்டும். கச்சா எண்ணெய் சரிந்த இந்நிலையில் இதனை செய்யலாம்

நமது நாட்டுக்காக சில சுமைகளை கூட சுமப்பதில் என்ன கஷ்டம் வந்துவிடும், சுமப்போம். கொஞ்சநாளில் எல்லாம் சரியாகிவிடும், சில வரிகள் குறைவதால் பெரும் பாதிப்பு இருக்காது.

ஆனால் வசூல் என்றால் எல்லாவற்றிலும் செய்யவேண்டும் அல்லவா?

இதோ கபாலி படம் பலநூறுகோடி வசூல் என தயாரிப்பாளர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார், ஆனால் அரசு வரி வசூலிக்க முடியுமா? முடியாது. வரி விலக்கு. இந்த தேசத்திற்கு பெரும் சேவை செய்து பொருளாதாரத்தை மாற்றிய விஷயமல்லவா அதனால் வரிவிலக்கு.

இந்த கபாலியில் மட்டும் எத்தனை கோடிகள் வரியாக அரசுக்கு கிடைத்திருக்கும்?

அறகட்டளைக்கு விலக்கு, கட்சி நிதிகளுக்கு விலக்கு, சினிமாவிற்கு விலக்கு என இந்த விலக்குகளை முதலில் விலக்கவேண்டும், வரி கட்டினால் என்ன?

இதற்கும் ஒரு முடிவு கட்டிவிட்டு ஜிஎஸ்டி கொண்டு வருதல் நலம். இந்த சினிமாகாரர்களுக்கு எதற்கு வரிவிலக்கு?

இதனை கேட்க வேண்டிய எம்பிக்கள், அம்மா பெயரில் ரயில் வேண்டும், அம்மாவிற்கு பாரதா ரத்னா வேண்டும் என இம்சை ஒருபுறம்

இன்னொரு புறம் “ஆத்தா என்ன அடிச்சிட்டா………” என ஒப்பாரி ஒருபுறம்

இந்த இம்சைகளை விடுங்கள்

ஜிஎஸ்டி எத்தனை சதவீதம், அதற்கு எதெல்லாம் விலக்கு என பார்க்கலாம், வேண்டுமானால் பாருங்கள் பெட்ரோல் மருந்து போல டாஸ்மாக் சரக்கிற்கு எளிதில் விதிக்கமாட்டார்கள்

அதுவும் இன்று எரிபொருள் போல அத்தியாவாசிய பொருளாகிவிட்டது.

ஆன்மீகமா அல்லது “ஆண்”மீகமா?

துறவி என்றால் அனைத்தையும் துறந்தவர், அவருக்கென்று ஏதும் சொந்தமாக வைத்திருக்காதவர்,

அக்காலத்தில் துறவி பட்டினத்தார் ஒரு திருவோடு வைத்திருந்தாராம் , இந்த ஓடும் நமக்கு சொந்தமோ, நாம் துறவி அல்லவா என்று அதனை தூற எறிந்தாராம்

ஞானத்துறவி என்றாலும் காவி உடையுன் நடையாய் பரதேசியாய் அலைந்தார் விவேகானந்தர்,

அவர் அமெரிக்கா செல்ல கலணா காசு இல்லா நிலையில் புதுகோட்டை மன்னர்தான் அனுப்பி வைத்தார்

அப்படிபட்ட துறவிகளை கண்ட நாடு இது, மதம் இது

இன்று பாருங்கள் நித்தியானந்தா இம்சை ஒருபுறம், இன்னொருவன் 200 ஏக்கர் குழுகுழு எஸ்டேட்டில் இருந்து கொண்டுதான் வருபவர்களுக்கு எல்லாம் ஞானப்பால் ஊற்றுகின்றாராம்.

இவர்களும் ஞானிகளாம், துறவிகளாம் இவர்களுக்கு கண்டிப்பாக பெண் சீடர்கள்தான் வேண்டுமாம்,

இது ஆன்மீகமா அல்லது “ஆண்”மீகமா? தெரியவில்லை

கோவணம் கூட இல்லாமல், காலூன்ற இடமின்றி அந்தரத்தில் செத்தார் இயேசு, இன்று கோர்ட் டை கட்டிகொண்டு சொந்தமாக பல்கலைகழகம் நடத்துபவன் அவரின் சீடனாம், ஊழியனாம்

இன்னும் எத்தனை ஜாக்கி, நித்தி, தினகர இம்சைகளை பார்க்கவேண்டுமோ தெரியவில்லை,

அந்த கல்கி அவதாரமோ அல்லது யூதர்கள் எதிர்பார்க்கும் தேவகுமாரனோ சீக்கிரம் வந்து தொலைந்தால்தான் என்ன?

நீங்க குத்துங்க எஜமான்.. குத்துங்க‌…

நீ காமராஜரின் சாதி, அதனால் உனக்கு மற்ற சாதிகளை பிடிப்பதில்லை, எல்லா சாதிகளையும் சாடுகின்றாய் , முதுகுளத்தூர் கலவரத்தை பற்றி என்ன தெரியும் உனக்கு சாதி வெறியன் நீ என்கிறார்கள், கடுமையான சாடல்கள்

எதற்கு சாலியமங்களம் தலித்பெண் படுகொலைக்கு கண்டித்ததை, என்ன சொன்னேன்?, அன்று காமராஜர் அரசு தாழ்த்தபட்ட மக்களுக்கு காவலாய் இருந்தது என்று. இதுதான் தவறாம்.

நீங்கள் ஆண்ட சாதியோ, அடிமை சாதியோ அந்த பெருமை பேசிகொண்டே இருங்கள், அல்லது அடிமை தளை உடைப்பு, மேட்டுகுடி கூப்பாடு என சொல்லிகொண்டே இருங்கள்

நான் ஆண்ட சாதி என்றெல்லாம் பெருமை பேசவுமில்ல‌, அடிமை சாதி என்றும் அழவுமில்லை, நான் மானிட சாதி குறிப்பாக உழைக்கும் சாதி

உழைப்பு ஒன்றே உயர்வு என நம்பும் சாதி, அது சோழ மன்னனின் அரண்மனையோ, பாண்டிய மன்னன் காலமோ உழைப்பு உழைப்பு என வாழந்த சாதி

நாயக்கர் காலத்திலும் தேரிகாட்டு பனைமரமோ அல்லது வறண்ட பூமியோ, அல்லது ஆடுமாடுகளுடனோ கிடைத்த வாய்ப்பில் பிழைக்க போராடிய சாதி, உழைக்க தயங்கா சாதி.

இந்தியா கிழக்கிந்திய கம்பெனியினை விட்டு பிரிட்டன் அரசுக்கு கைமாறிய பின்னர் இந்தியாவில் வாய்ப்புகள் மாறின, கல்வி எல்லோருக்கும் கிடைத்தது, அதிலும் படிக்க ஆரம்பித்த சாதி

சொந்தமாக நிலமில்லை, உழைக்க வழி இல்லை எனினும் மாட்டுவண்டி கட்டி சிவகாசி முதல் திருவனந்தபுரம் வரை சந்தைகளை உருவாக்கி ஓடி ஓடி உழைத்த சாதி

விவசாயம் வீழ்ச்சி என நாயக்கன் நிலங்களை 1930களிலே போட்டுகொண்டு ஓடியபொழுதே, விவசாயத்தில் இறங்கி உழைத்து பார்த்த சாதி

சுதந்திர இந்தியாவில் உழைக்கும் வாய்ப்புகள் கூடின, அது உழைத்தது, பெட்டி கடை முதல் பத்திரிகை வரை எதிலெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அது சம்பாதித்தது

என்றாவது நாங்கள் அடக்கிவைக்கபட்ட சாதி என அது அழுது பார்த்தீற்களா?

எங்காவது அது அரசுக்கு கோரிக்கை வைத்து புலம்பி கண்டீர்களா?

மிக பிற்படுத்தபட்ட‌ வரிசையில் தன்னை சேர்க்கவில்லை என ஒரு போராட்டம் எனும் பெயரில் ஒரு சுள்ளியினை கொழுத்தியிருக்கும், மரம் வெட்டி போராட கிளம்பி இருக்கும்.

கல்வியில் இட ஒதுக்கீடு வேண்டும் என போராடி இருக்கும்? தனக்கு தானே கல்வி நிலையங்கள் கட்டிகொண்டது அது.

ஆனானபட்ட நாயக்கன் அரசாளும்போது, இன்று ஆண்ட இனம் என மார்தட்டும் இனம் அவனிடம் அடியாளாய், கூலியாளய் கைகட்டி நின்றபொழுது

போடா…. என சொல்லிவிட்டு உழைப்பால் வாழ ஆரம்பித்த இனம்.

அதாவது அனாதையாக நடுதெருவில் நின்றபொழுதே இருப்பதை வைத்து உழைத்து வாழ எத்தணித்த இனம்.

இன்றும் அது அப்படித்தான் அரசிடம் ஒன்றும் அது எதிர்பார்ப்பதில்லை, வீண் கூப்பாடுகளோ பெருமையோ அதனிடம் இல்லை, உழைக்கும் உழைக்கும் உழைத்துகொண்டே இருக்கும்

அப்படி உலகில் அதற்கொரு சமமான இனம் உண்டென்றால் அது யூத இனமே,
அது உலகில் எந்த மூலையில் விட்டாலும் பிழைத்துகொள்ளும் சாமர்த்தியமான இனம், உழைப்பில் மகா உன்னதமான இனம்.

இருவருக்கும் உழைப்பில் ஒரு வித்தியாசமும் காணமுடியாது, ஆனால் அறிவியலில் அவர்கள் ஒரு படி அல்ல ஒன்பது படி மேல்

இந்த உழைக்கும் சாதி சென்னையில் மும்பையில் டெல்லியில், கொழும்பில், மலேசியாவில், சிங்கப்பூரில், லண்டனில், அமெரிக்காவில் என அது உழைத்து உழைத்து உயர்ந்திருக்கின்றது

ஆக சாதி பெருமை அல்லது ஒடுக்கபட்ட சாதி என மோதுபவர்களுக்கெல்லாம் நான் சொல்வது அதுதான், உழையுங்கள் வாய்ப்பு இருக்குமிடமெல்லாம் உழையுங்கள், அது போதும், இந்த உலகம் திறந்து கிடக்கின்றது

என்ன சாதியாய் இருந்தால் என்ன? உழைக்கும் சாதியாய் இருங்கள், அது உயர்த்தும். உதாரணம் கலைஞர் கருணாநிதி, நெருங்க முடியுமா?

வெறும் பெட்ரோல் போடும் சிறுவனாக இருந்த அம்பானி எப்படி இந்திய பணக்காரனாக முடிந்தது, டாட்டாவின் 150 ஆண்டுகால உழைப்பினை அவனால் வெறும் 20 ஆண்டுகளில் தொடமுடிந்தது, எல்லாம் உழைப்பு.

இன்று சென்னை தி.நகரோ கடற்கரை நிலையங்களோ அந்த அயரா உழைப்பில் உருவானவை. நாங்கள் ஆண்ட பரம்பரை வேலை செய்யமாட்டோம் என சும்மா இருந்திருந்தால் வருமா?

அல்லது இது பார்பணிய இந்தியா என திண்ணையில் தூங்கினால் வருமா?

உழைக்கவேண்டும் ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைக்கவேண்டும் இதிலென்ன உங்களுக்கு வெறுப்பு?

நேற்று தலித் பெண்ணுக்கு பாதுகாப்பில்லை என கதறினார்கள், கத்தினார்கள்.

காமராஜர் ஆட்சியில் தலித் மக்கள் கொல்லபட்ட முதுகுளத்தூர் கலவரத்தில் அமைதி நிலைநாட்ட கடும் நடவடிக்கை எடுத்தார் என அன்றைய நிலையினை சொன்னது குற்றமா?

இது வோட்டு அரசியலை பாதிக்கும் என அவர் அமைதியாக இருக்காமல் நடவடிக்கை எடுத்தாரா இல்லையா?

இதனை சொன்னால்…………

வழக்கம்போல ஈழ, திராவிட தலித், இஸ்லாமிய, இந்து,மோடி, பிரிவினை கிறிஸ்தவ எதிர்ப்பாளர் வரிசையில் முக்குலத்தோர் எதிர்ப்பாளன் எனும் முத்திரையும் குத்துகின்றார்கள்.

குத்துங்க எஜமான் குத்துங்க..இந்த முகநூல்காரங்களே இப்படித்த்தான்

ஜாதி,மொழி, மத வெறியனுக..

நீங்க குத்துங்க எஜமான் குத்துங்க‌


“நான் சாதியற்றவன். என்னை ஒரு சாதிக்குள் அடைத்துப்பார்க்கவேண்டாம். சாதியற்றவன் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன்” : இயக்குநர் ரஞ்சித்

மனிதர் இயக்குநர் மட்டுமல்ல, மகா நடிகரும் கூட. இரண்டு நாளைக்கு முன்புவரை கூட பெரும் புரட்சிபேசிகொண்டிருந்தவர் இன்றோ அந்தரத்தில் பல்டி அடித்துவிட்டார்

சூர்யாபடம் அவசரமாக பறிக்கபட்டதிலும், மற்ற தயாரிப்பாளர்கள் ஒதுங்கி செல்வதிலும், இன்னும் பலவிதமான சினிமா நிலவரங்களும் அவருக்கு ஞானத்தை வழங்கி இருக்கலாம்

இதனை அன்றே சொல்லி இருந்தால் இவர் மீது என்ன சர்ச்சை வந்திருக்கும்? அனுபவமே சிறந்த ஆசான்

அன்றே நாம் சொன்னது போல ஒன்று இவர் மாறுவார் இல்லது இவரின் கொள்கை மாறும். இதோ இரண்டாவது நடந்துவிட்டது

ஒரு நல்ல இயக்குநரை உசுப்பிவிட்டு சரிக்க பார்த்தவர்கள், பாதி சரித்தவர்கள் இனியாவது அமைதிகாப்பார்கள் என்றா நினைக்கின்றீர்கள்??

இதோ இப்பொழுதே இங்கு பொங்குவார்கள் பாருங்கள்

எண்ணை விலை என்ன விலையானாலும் நமக்கு என்ன ?

அப்படி ஒரு நிலை வரும் என முன்பே சொன்னார்கள், அரேபிய நாடுகளில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் பாதிக்கபடலாம் எனும் அந்த செய்தி முன்பே வந்தது

காரணம் உலகபொருளாதாரம் சரியும் பொழுதே அது கணிக்கபட்டது, இப்படி சரிந்தால் எண்ணெய் விலை சரியும் என 2011களிலே கணிக்கபட்டது,

அரபுநாடுகள் எண்ணெய் உற்பத்தி எனும் ஒற்றை சக்தியில் வாழ்த்துகொண்டிருப்பவை, அதுதான அவற்றின் வசதியான வாழ்வுக்கு பெரும் ஆதாரம், இல்லாவிட்டால் பேரீச்சம் பழம் வாங்க யாரும் அவ்வளவு தூரம் செல்லமாட்டார்கள்

எண்ணெய்விலை சரியும்பொழுதே உற்பத்தியினை குறைக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருந்தது, அதனைத்தான் செய்திருக்கவேண்டும். உற்பத்தி குறைந்தால் ஓரளவு விலை கட்டுபாட்டில் இருந்திருக்கும்

ஆனால் சவுதியும், குவைத்தும் இதில் அடாவடி பார்ட்டிகள் அல்லது அமெரிக அடிமைகள்.

ஒரு பேரல் 110 டாலருக்கு விற்ற இடத்தில் 40 டாலருக்கு குறைந்தது, சவுதியும் குவைத்தும் என்ன செய்தன? ஒரு பேரல் விற்கவேண்டிய இடத்தில் 3 பேரல்கள் விற்று கணக்கினை சரி செய்ய பார்த்தன, ஆனால் அது இன்னும் விலை வீழ்ச்சியினை காட்டிற்று

1990ல் இம்மாதிரியான நடவடிக்கையில் குவைத் இறங்க, சதாம் கண்டித்தும் பலனில்லை, சல்லி காசுக்கு விற்றுகொண்டிருந்தார்கள். சதாம் குவைத்தில் பாய காரணமே அதுதான்

இன்னும் திருந்தியபாடில்லை , சந்தடி சாக்கில் கோமேனி மீது ஆணயாக அணுகுண்டு தயாரிக்கமாட்டோம் என சொல்லிவிட்டு தடை நீக்கி எண்ணெய் வியாபாரத்தில் வந்திருக்கும் ஈரானும் அள்ளி விடுகின்றது

எண்ணெய்விலை குறைவால் முதலில் பாதிக்கபட்ட நாடு ரஷ்யா, ஆனாலும் தாங்கி பிடித்து நிற்கின்றது
அவர்களுக்கென்ன ஆயுதபலமாவது உண்டு, செயற்கைகோள் வியாபாரம் உண்டு

ஆனால் முதலில் சீரழிந்தநாடு வெனிசுலா, மறைந்த சாவேஸ் சதாம் உசேன் போலவே எண்ணெய் வியாபாரத்தை சீராக்கி மக்களை வாழ்விக்க எடுத்த முயற்சிகள் கொஞ்சமல்ல, அவரும் மறைந்தார், வெனிசுலா பாழாகிவிட்டது

அரபுநாடுகள் தங்களிடம் உள்ள அந்நிய செலாவணியில் தாக்குபிடித்தன, இப்பொழுது கொஞ்சம் தள்ளாட தொடங்கிவிட்டன‌

அதன் எதிரொலிதான் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் கைவிடபட்ட நிலையில் சவுதியில் திகைத்து நிற்பது

இப்படி ஒரு நிலை வரும் என எச்சரித்தவர்கள் சதாம், சாவேஸ் அதன் பின் பயங்கரவாதி என்றாலும் அந்த ஓசாமா பின்லேடன்.

எண்ணெய் உலகம் பல மர்ம அரசியலை கொண்டது, இதனை கண்டிப்பவர்கள் இல்லாமல் போவார்கள், அல்லது அடிமை ஆனவர்கள் தப்பிகொள்வார்கள்

இப்போது பாதிக்கபட்டிருப்பது வெனிசுலா மக்களும், அரேபிய அந்நிய தொழிலாளர்களும்

ஆனால் அரேபிய இந்திய தொழிலாளர்களை காப்பதில் இந்திய அரசு திறமையாக செயலாற்றுகின்றது, முதற்கட்டமாக 2500 இந்தியர்களை பராமரித்து திருப்பி அனுப்ப சவுதி ஒப்புகொண்டிருக்கின்றது.

எண்ணெய்விலை குறைந்தாலே இப்படி அலறும் அரேபிய நாடுகள், நாளை பெட்ரோலுக்கு மாற்றுவழி கண்டுபிடிக்கபட்டால் என்ன ஆகும்? சரி அது அவர்கள் பிரச்சினை

உலகில் இப்படி பல நாடுகள் கலக்கத்தில் இருக்கல், இதில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று, ஏகபட்ட லாபம். பின்னர் ஏன் பெட்ரோல் விலை குறைக்கவில்லை என்றால் என்ன விலை விற்றாலும் மக்களால் வாங்க முடிகிறது அல்லவா? போதும் இந்த லாபத்தால் தேசிய‌ நிதி ஏறுகிறது என்பார்கள்.

ஏறட்டும்

அவப்பெயருடன் ஒபாமா பதவி விலகுவார்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் என்ற அவப்பெயருடன் ஒபாமா பதவி விலகுவார்: டொனால்ட் டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஓபாமா அப்படி அவப்பெயரோடு விலகுவார்என்பது நடக்காது, ஒருவேளை வெற்றிபெற்றால் பின்னாளில் நிச்சயம் அந்த அவப்பெயரோடு டிரம்ப் பதவி விலகுவார் என்பது மட்டும் புரிகின்றது

மனிதர் எவ்வளவு அட்டகாசம், ஹிலாரி ஜெயலலிதாவினை பார்த்து அரசியலுக்கு வந்தார் என அதிமுக ஜால்ராக்கள் சொல்வது அபத்தமாக‌ இருக்கலாம்,

ஆனால் திராவிட, தமிழ்தேசிய இயக்கத்தாரிடமிருந்தே டிரம்ப் அதிரடியாக பேசகற்றுகொண்டார் என்றால் அது நிச்சயம் ஏற்றுகொள்ளகூடியது

சொல்லமுடியாது மாறுவேடத்தில் தமிழகத்தில் கொஞ்சநாள் டிரம்ப் சுற்றினாலும் சுற்றி இருக்கலாம், சீமானின் பேச்சினை கேட்டிருக்கலாம் அல்லது 1960களின் திமுகவினரின் எழுத்துக்களை படித்திருக்கலாம்

அல்லது தமிழக சாதிவெறியர்கள் பேச்சினை கேட்டு மயங்கி இருக்கலாம்

சும்மா சொல்லகூடாது அப்படியே பேசுகின்றார், மொழி மட்டும்தான் வேறு. மற்றபடி அதே அரசியல்

இறைவனின் ஆசி அவர்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தங்கட்டும்

சரியாக 27 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இலங்கை கிழக்கு மாகாண இஸ்லாமியர் மீது காத்தன்குடியில் பள்ளிவாசலில் புலிகளால் கொடூர தாக்குதல் நடைபெற்றது, 103 பேர் வெட்டி கொல்லபட்டனர்

புனிதமான பள்ளிவாசல் எங்கும் ரத்தம் ஆறாக ஓடிய கொடூர காலம் அது.

இன்று காலம் மாறி அங்கு அமைதி திரும்பிற்று, ஆனால் மக்கள் அந்த வடுக்களை மறக்காமல் வருடந்தோறும் நினைவு கூர்வார்கள். இவ்வருடம் அந்த ரத்தகறையினை பழியினை வித்தியாசமாக பழிவாங்கிவிட்டார்கள்

பழி என்றால் அதற்காக எங்கே மிச்ச புலிகள் என சொல்லி அவர்களை வெட்டி கொன்று ரத்தத்தை ஓடவிடுவது அல்ல‌

மாறாக அன்று சிந்தபட்ட சகோதர ரத்தம்போல நமது ரத்தம் வீணாக போககூடாது, 4 பேர் உயிரை காப்பாற்றட்டும் என ரத்த தானம் செய்திருக்கின்றார்கள்

இனி அந்த ரத்தம் தேவைபடும் இலங்கையர் உடலில் ஓடும், அது தமிழராக, சிங்களராக, இந்துவாக கிறிஸ்தவராக, பவுத்தராக யார் உடலிலும் ஓடும், உயிர்காக்கும்

உண்மையில் பாராட்டபட தக்க பணி இது, ரத்த பழிகளை இப்படி ரத்ததானம் மூலம் பழிவாங்கலாம் என செவிட்டில் அடிக்கும் தத்துவம் இது

உலகம் பின்பற்றவேண்டிய பெரும் முன்மாதிரி இது. எங்கள் பள்ளிவாசல் ரத்தவெள்ளத்திற்கு பழிதீர்ப்போம் என வெடிகுண்டோடு கிளம்பினால் என்ன மிஞ்சும்

புலிகளின் கொடூர உயிர்பறிப்பினை, உயிர்காத்தல் மூலம் மிஞ்சிநிற்கும் மனித தன்மை இது

சாதி, மதம், இனம் மொழி என மோதிக்கொள்பவர்கள் படிக்கவேண்டிய பாடமிது, காரணம் ரத்தம் கொடுத்தவர்களின் உறவினர்கள் தந்தையாக, குழந்தையாக, சகோதரனாக அந்த கொடூரத்தில் கொல்லபட்டிருந்தார்கள்.

ஆனாலும் அதற்கு பழிவாங்காமல் இன்னொரு உயிரினை காப்பாற்ற கிளம்பிவிட்ட இவர்கள்தான் உண்மையான மார்க்கவாசிகள், கண்ணியமான இஸ்லாமியர்.

இறைவனின் ஆசி அவர்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தங்கட்டும்

அந்த இஸ்லாமிய சகோதரர்களை வாழ்த்துகின்றோம், நீங்கள் தொப்புள்கொடி உறவல்ல, மாறாக கொண்டாட வேண்டிய சகோதர உறவு

புலிகளின் பிம்பம் மொத்தமாக நொறுங்கும் நேரம், மானிட நேயம் உயர்ந்து நிற்கும்கும் காலம்

26 வருடத்தில் காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது.