துப்பாக்கி சுடும் போட்டி என்றால் என்ன?

போரின் முடிவில் ஒரு ராணுவத்தை சிறைபிடிக்கும்போது மொத்தமாக கொல்லமாட்டார்கள், யாராவது விவரம் உள்ளவன் இருந்தால் அவனை பயன்படுத்திகொள்வார்கள்.

ஹிட்லரின் எஞ்சிய குழுவினை அமெரிக்காவும், ரஷ்யாவும் அப்படி பங்கிட்டுத்தான் விஞ்ஞானத்தில் உச்சம் தொட்டன, அவர்கள் போர் குற்றவாளிகள் எல்லாம் கிடையாது.

“சரக்கு உள்ளவனுக்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு”

அப்படி புலிகள் அகபட்டபொழுது இலங்கை அரசும் போராளிகளின் திறமை என்ன என கண்டறிய விசாரித்தது, குறிதவறாமல் சுடும் போட்டியில் தாங்கள் பெரும் திறமையாளர்கள் என்றும், சில சுடுதலை கண்ட மேதகு தலைவர் தங்களுக்கு காசி ஆனந்தனோடு விவாதித்துவிட்டு “தேசத்தின் துவக்கு” எனும் பட்டம் கொடுத்ததாகவும் சொன்னார்கள்

கொஞ்சம் யோசித்த இலங்கை அவர்களை ஆசிய விளையாட்டுபோட்டிக்கு அனுப்பியது. தமிழர்களுக்கு இடமளித்து சர்வதேசத்தில் மரியாதை பெற்றாயிற்று, பிரபாகரனால் உருவாக்காப்ட்ட வீரர்கள் பதக்கத்தோடு நிச்சயம் வருவார்கள் என்ற‌ நம்பிக்கை வேறு, ஒரே கல்லில் இரு மாங்காய்

ஆனால் அங்கு சென்றபின்புதான் வீரர்களுக்கு உண்மையான துப்பாக்கி சுடும் போட்டி என்றால் என்ன என்று புரிந்தது,

உலகம் எப்படி இருக்கிறது என்றே அன்றுதான் பார்த்தார்கள், அந்த ஆனந்தத்தில் சுட்டார்கள்,

சரியாக இலக்கினை தாக்கியது, ஆனால் தூரத்தில் இருந்த அடுத்தவன் இலக்கினை

அதோடு அவர்கள் இலங்கைக்கு அனுப்பபட்டனர், இப்படித்தான் பயிற்சி பெற்றீர்களா? எவ்வளவு பயங்கரமான கதைகளை எல்லாம் கேட்டிருக்கின்றோம், பயந்திருக்கின்றோம், இவ்வளவுதானா? நீங்களே தேசத்தின் துவக்கு என்றால் மற்றவர்கள்? என கன்னத்தில் கைவைத்தபடி இருந்தனர் இலங்கை அதிகாரிகள்

வன்னிகாட்டில் நாங்கள் சுடுவோம் மொத்தமே 10 பேர்தான், இது என்ன இப்படி கடுமையான போட்டி, சீ இது என்ன கொடுமை, தமிழனின் வீரம் தமிழனிடம் மட்டும் காட்டினால் போதும் எனும் வகையில் அமைதியாக இருந்தனர் வீரர்கள்

அதன் பின் போராளிகளை பொறுக்கி எடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டது இலங்கை அரசு, அதோடு புலிகளின் நீச்சல் சாகசம், உயரம் தாண்டும் சாகசம் செய்தவர்கள் என தேர்ந்தெடுத்து வைத்தவர்களை கூட அனுப்பிவிட்டார்கள்.

ஆனால் அங்கிள் சைமனிடம் கேளுங்கள், வாயில் துண்டை வைத்தபடி பார்த்து கொண்டிருப்பீர்கள், அப்படி அள்ளி விடுவார்.

நாடாளுமன்றத்தில் நம் மக்கள்….

பார்லிமெண்ட்ல காஷ்மீர் பற்றிய விவாதத்தில் “காஷ்மீர்…பியூட்டிஃபுல் காஷ்மீர்னு..” பாடினார், அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்.

பெரும் கொடுமை என்னவென்றால் இவர் வழக்க‌றிஞர், அதுவும் முன்னாள் அட்வகேட் ஜெனரல். இந்நாட்டின் சட்டம் படித்த வழக்கறிஞர், டிஎன்பிஎஸ்சி சேர்மனாக கூட இருந்தவர், நீதிபதியாகும் ஆசையும் இருந்தது

(எதற்கு குற்றவாளிகளை பார்த்து, ஒன்றே குலமென்று பாடுவோம் என பாடுவதற்கா? )

ஆனால் மிக மிக சீரியசான, பற்றி எரியும் காஷ்மீரை பற்றி விவாதம் நடத்தவேண்டிய கட்டாயத்தில் மன்றம் கூடியபொழுது காஷ்மீர் பிரச்சினையில் எப்படி பாட்டு படித்திருக்கின்றார் பார்த்தீர்களா?

சொல்லவேண்டியதை நீங்களே சொல்லுங்கள்,

சரி உரையினைத்தான் பாடலோடு தொடங்கினார் என்றால் உருப்படியாக ஒன்றுமே இல்லை, சோறு, குங்குமபூ என சொல்லிவிட்டு அம்மக்களை கடவுள் காப்பாற்றட்டும் என சொல்லி அமர்ந்தாயிற்று

அவர்களின் தங்க தலைவன் அணிந்த காஷ்மீர் தொப்பி பற்றி மட்டும் சொல்ல மறந்துவிட்டார், அதலானென்ன அடுத்த முறை சொல்லிவிடுவார்.

இன்னொரு நாடு என்றால் சட்டபடிப்பு முதல் எல்கேஜி படிப்புவரை படித்ததை ரத்து செய்துவிட்டு பால்வாடி பள்ளிக்கு அட்மிஷனுக்கு அனுப்பி இருப்பார்கள்.

நல்ல வேளையாக 33% இடஒதுக்கீடு பற்றி கேட்கவில்லை கேட்டால், “இப்படித்தான் இருக்கவேணும் பொம்பள” என அடுத்த பாடல் பாடியிருப்பார்

ஏதும் சர்வதேச தீவிரவாதம் பற்றி கேட்டால் “உலகம் அழகு கலைகளின் சுரங்கம்” என ஒரு பாடல் வந்திருக்கும், விவசாயிகள் பிரச்சினை கேட்டால் “கடவுள் எனும் முதலாளி” எனும் பாடல் வந்திருக்கும், மீணவர் பிரச்சினை கேட்டால் “தரைமேல் பிறக்கவைத்தான்” எனும் பாடல் ஒலியேறியிருக்கும்

எங்கு போய் முட்டிகொள்வது என தெரியவில்லை, முன்பெல்லாம் களை கூத்தாடிகள்தான் இப்படி தெருக்களில் பாடி பிச்சையெடுப்பார்கள், இப்பொழுது வோட்டு கூத்தாடிகள் பார்லிமெண்டில் பாடுகின்றார்கள்

ஏன் வேண்டும் திராவிடம் என அண்ணாவும், இந்நாடு எங்கு செல்கிறது என முழங்கிய பசும்பொன் தேவரும், ஈழபிரச்சினையில் இந்திய நிலைப்பாடு என்ன என இந்திராவிடம் மல்லுகட்டிய வைகோவும், ஓரளவு இந்திய தொழில்துறையினை மாற்றிய முரசொலி மாறனும் முழங்கிய இடத்தில்

மொத்த உலகமும் மதிப்போடு பார்க்கும் தமிழன் ப.சிதம்பரமும் வலம் வரும் பார்லிமெண்டில்

சசிகலா புஷ்பா, இதோ இந்த எம்ஜிஆர் பாடல்காரர், என கடும் காமெடிகளை வலம் வரவிட்டால் என்ன ஆகும்?

பின் எப்படி காவேரி வரும்? எப்படி மீணவன் நிம்மதியாவான்? எப்படி மீத்தேன் தடுக்கபடும்? அணுவுலை ஏன் திறக்கபட மாட்டாது?

தமிழனை யார் மதிப்பார்கள்? மிதிக்காமல் விட்டதே பெரிய விஷயம்.

கட்சி கூட்டத்திற்கும் , நாட்டின் நலன் கூட்டத்திற்கும் வித்தியாசம் தெரிய இவர்களை என்ன செய்ய?

அன்றே சொன்னான் ஹிட்லர், “பெரும் சுதந்திரமான மக்களாட்சியின் அவலத்தை ஒரு நாள் காண்பீர்கள் அன்று மக்களாட்சி மன்றங்கள் எல்லாம் வெறும் பட்டிமன்றமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் மாறும், அவைகளால் ஒன்றையும் மாற்றிவிட முடியாது”

மாற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை, நாட்டின் மானத்தை வாங்காமல் இருக்கலாம் அல்லவா, நவாஸ் ஷெரீப் இதனை கேட்டால் தலையில் அடித்து சிரிக்கமாட்டாரா? ராஜபக்சே கேட்டால் சத்தம் போட்டு கைதட்டமாட்டாரா?

எவ்வளவு பேசலாம், ஈழ மக்களுக்காக அநாளைய காஷ்மீர் சிங்கம் பருக் அப்துல்லா ஓடிவந்ததை சொல்லலாம், காஷ்மீரில் பலியான தமிழக வீரர்கள் பற்றி சொல்லலாம், பாகிஸ்தானை கண்டிக்கலாம், சந்தடி சாக்கில் இலங்கையினை போட்டு தாக்கலாம், இதனை போலவே ராமேஸ்வர மீணவன் சிக்குகின்றான் என சொல்லலாம்

எடுத்து எறிய எத்தனை வாதங்கள் உண்டு, கிடைத்த வாய்ப்பினில் பின்னி இருக்கலாம், சர்ச்சைகள் இருந்தாலும் வை.கோ போன்றவர்கள் இதில் அரங்கத்தை அதிரவைத்திருப்பார்கள்.

நீர் பாடுமய்யா, ஆனால் எங்களுக்கு நினைவுக்கு வருவதெல்லாம் “கடவுள் ஏன் கல்லானான்..” எனும் வரிதான்

இதுதான் விதி, இதுதான் கர்ம பலன்

நாத்திக வாதம் உச்சத்திலிருந்தபொழுது விதி என்றால் என்ன?, கர்மா என்றால் என்ன? விளக்கமுடியுமா என காஞ்சி பெரியவருக்கு சவால் விட்டார்கள், அவரும் ஏற்றுகொண்டார்

சவாலுக்குரியவர்களை அழைத்துகொண்டு மருத்துவமனை சென்றார், அங்கே இரு குழந்தைகளை காட்டினார், ஒரே நாளில் பிறந்த குழந்தைகள்.

ஒன்று பணக்கார குடும்பத்தில் பிறந்து பொன்னும் மணியும் பூட்டி வெள்ளிதொட்டிலில் ஆடிகொண்டிருந்தது, இன்னொன்று ஏழை குடும்பத்தில் பிறந்து கனகமணியோடு பாயில் படுத்திருந்தது

இரண்டும் ஒரே பச்சிளம் குழந்தைகள் அல்லவா?, ஒன்று பொன்னில் புரள அது உழைத்ததா? இன்னொன்று வறுமையில் பிறக்க என்ன அழித்ததா? இதுதான் விதி, இதுதான் கர்ம பலன் என்றார் பெரியவர்

அப்படி ஒரு மறைந்த நடிகையின் வாழ்க்கையினை புரட்டினால், அவரும் ஒரு நடிகையும் ஒன்றாக வந்திருக்கின்றார்கள், ஒன்றாக ஆடியிருக்கின்றார்கள், இருவருமே சினிமா நடிகைகள் , இருவரும் ஒன்றாக கூட ஆடியிருக்கும் ஆட்டக்காரர்கள்

ஆனால் பின்னாளில் ஒருவர் அரசியல் வானில் ஜொலிக்கின்றார் அதிரடியாக ஆள்கிறார், இன்னொருவர் அதே குத்தாட்ட நடிகை முத்திரையொடு மறைந்தும் விட்டார்.

இதுதான் விதி, இதுதான் கர்ம பலன்

சில விஷயங்களை நம்ப பல உதாரணங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

மாத்யூ ஹேடன்..

ஒரு காட்டு எருமை கடாவினை இரண்டு காலில் நடக்க வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹைடன். மனிதர் கையில் கிரிக்கெட் மட்டை இருந்தாலே குச்சி இருப்பது போலத்தான் இருக்கும், அதிரடியான வீரர் லாராவிற்கே சவால் விட்டவர்

வெள்ளையர்களுக்கு இருக்கும் சில பரந்த மனப்பான்மை அவருக்கும் இருக்கின்றது, அதில் தமிழ்நாடு பிரிமியர் லீக் வியாபார தந்திரமும் இருக்கலாம்.

மனிதர் தென் தமிழகத்தை சுற்றி வருகிறார், அல்வா கிண்டுகிறார், வேட்டி சட்டையில் நெற்றி நிறைய குங்குமத்தோடு அட்டகாசமாக போஸ் கொடுக்கின்றார்,

Image may contain: 1 person , people smiling

மாத்யூ ஹேடென்

hyden

மதுரை அம்மனை அவ்வளவு பக்தியாக கைகூப்பி வணங்குகின்றார்,

(இப்பொழுது பிரிவினை கிறிஸ்தவர்களுக்கு வயிறு எரியும், கர்த்தாவே இனி ஆஸ்திரேலியா அணி ஜிம்பாப்வே அளவிற்கு சீரழிய கட்டளை இடும் அய்யா……..என கதறுவார்கள்)

சும்மா சொல்ல கூடாது, ஆசாமி கம்பீரமாகத்தான் வேட்டி சட்டையில் ஜொலிக்கின்றார்

ஆனால் நம்மவர்கள் எப்படி பட்டவர்கள்? லண்டன் எமிஜாக்சனே சினிமாவில் நடிக்கும் பொழுது நீங்கள் நடிக்க கூடாதா? அருமையான வெளிநாட்டு தீவிரவாதி அல்லது கிரிக்கெட் படம் இருக்கின்றது, நீங்கள் தமிழ்பேசினால் போதும் கிரிக்கெட் இங்கே நாடி நரம்பெல்லாம் ஊறி இருக்கின்றது, கிரிகெட்டும் தமிழும் கலந்தால் போதும்.

சூப்பராக அள்ளலாம் என அழைப்பார்கள்

போத்தீஸ் போன்ற நிறுவணங்கள், ஹைடனை கம்பீரத்திற்கு எமது வேட்டியே காரணம் என சொல்லி விளம்பரத்திற்கு அழைக்கலாம்

ஆனால் சாத்தியமா என்றால் குறைவு

அவர் கேட்கும் சம்பளத்தில் 10 படம் எடுக்கலாம், அல்லது போத்தீஸ் 5 கடை திறக்கலாம். ஏற்கனவே சிங்கம் லாராவிடம் அணுகிய அனுபவம் பலருக்கு உண்டு.

சொல்லமுடியாது ஒருவேளை ஹர்பஜன் சிங்கினை வில்லனாக போட்டால் சினிமாவிற்கு ஹைடன் ஒப்புகொள்ள வாய்ப்பு வரலாம் 🙂

அணுவுலைதானே தொடங்கி கொள்ளுங்கள்…

அது என்ன மர்மமோ தெரியவில்லை, காங்கிரஸ் ஆட்சி என்றால் பொங்கிய கூடங்குளம் பகுதி, மோடி ஆட்சி என்றால் ஒரு சத்தமுமின்றி “அணுவுலைதானே தொடங்கி கொள்ளுங்கள்…” என அமைதியாகிவிடுகின்றது

கவனித்து பாருங்கள், ஈழமோ, அணுவுலையோ இல்லை வேறு அழிச்சாட்டியங்களோ காங்கிரஸ் மத்தியில் இருக்கும்போது இருக்கும் தமிழக வீரியம் பாஜக ஆட்சியில் இருக்காது

காங்கிரஸ் ஆரிய‌ பார்பண கட்சி என்றால், பாஜக என்ன கன்ஷிராம் கட்சியா? அல்ல, வேறு ஏதோ விஷயம் இருக்கின்றது, ஆனால் புரியாது விட்டுவிடலாம்.

அணு நிச்சயம் மகா ஆபத்தானது, அதற்கு எது மனிதன்? எது புல்? எது கால்நடை? என தெரியாது, ஒழித்துகட்டிவிடும்.

ஆனால் மனிதனுக்கு எது காங்கிரஸ், எது திமுக எது பாஜக, எது அதிமுக என்பதெல்லாம் நன்றாக தெரிகின்றது, ஆறறிவல்லவா?

விசித்திரமான உலகம் இது, எல்லா போராட்டங்களிலும் மக்களே பகடைக்காய்கள், ஆடுபவர்கள் யாரோ ஒரு சிலரே.

ஒன்று மட்டும் புரிகின்றது, வெள்ளையன் கால கோடீஸ்வரர்களின் கட்சி காங்கிரஸ், அந்த கோடீஸ்வரர்களை எதிர்த்து உருவான இன்றைய இந்திய தொழிலதிபர்களின் கட்சி பாஜக‌

ஆக இரண்டும் மில்லியனர்களின் கட்சியே, நாட்டில் நடக்கும் போராட்டங்களும், சில பிரச்சினைகளும் இந்த பழைய மற்றும் புதுபணக்காரர்களுக்கான போராட்டமே அன்றி வேறல்ல.

ஆண்டான் அடிமை பிரச்சினை சாதியில் மட்டுமல்ல, இந்திய தொழிலதிபர்களின் உலகத்திலும் நிரம்ப கிடக்கின்றது

அது தொழிற்சாலை, கல்வி, பத்திரிகை என எல்லா தளங்களிலும் மிக வெளிப்படையாகவே தெரிகின்றது

ஒலிம்பிக்ஸ் துணுக்ஸ்ஸ்ஸ்

வழக்கம் போல ஒலிம்பிக்கில் முதலிடத்தில் நீடிக்கின்றது அமெரிக்கா, 100 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் நாடு, அப்படித்தான்

இந்த உலகில் தாங்களும் வலிமையானவர்கள் என கடந்த 40 ஆண்டுகளாக எல்லா நாட்டு கதவினையும் தட்டி சொல்லிகொண்டிருக்கும் நாடு சைனா, அது இரண்டாமிடம்

சிறிய நாடுதான், ஆனால் எந்த நாட்டிற்கும் எதிலும் சவால்விடும் தைரியம் எமக்கு உண்டு என தோள்தட்டும் ஜப்பான் மூன்றாமிடம்

சர்ச்சைகுள்ளான ரஷ்ய 5ம் இடத்தில் இருக்கின்றது.

மலேசியர்கள் எதிர்பாராத மலேசிய டைவிங் அணி வெள்ளி பெற்றுவிட்டது, மக்களுக்கு ஒரே சந்தோஷம். நம்பமுடியா வெற்றி அது.

இன்னும் பூப்பந்தில் தங்கம் கிடைக்கும் என்கின்றார்கள்

நமக்கு ஆகஸ்டு 14 தெரியும், அது சுதந்திரநாள் பரிசாக கூட அமையலாம், ஆனாலும் ஒரு இந்தியபெண் ஆபத்தான அந்த விளையாட்டில் இவ்வளவு தூரம் சென்றிருப்பதே பெரும் மகிழ்ச்சி

இப்பொழுது நமக்குள்ள சந்தோஷம் என்ன? பாகிஸ்தானியர் ஒலிம்பிக்கில் இருக்கின்றார்களா இல்லையா? என்பதே தெரியவில்லை, இது போதாதா?

ஒலிம்பிக்கில் முதலிடம் கிடைத்தாலும் இந்த மகிழ்ச்சி வருமா? வராது

இதுதான் வெற்றி, வெற்றி மாபெரும் வெற்றி.


தீபிகா குமாரி வில்வித்தையில் ஏமாற்றினாலும் தீபா கர்மாக்கர் இறுதிசுற்றுவரை சென்றிருக்கின்றார், ஒலிம்பிக் செய்திகள் பரவதொடங்கியிருக்கும் நேரமிது

தீபிகா, தீபா என பெண் வீரர்கள் பெயர் வரும்போது சிலர் இப்படியும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

அப்பா பிரகாஷ் படுகோனே அந்நாளைய பேட்மிட்டன் பிளேயர், மகள் தீபிகா நடிகையானாலும் இன்று ஒலிம்பிக் வரை போய்விட்டார்

தீபா கர்மார்க்கர் அவர்களுக்கு தீபிகா படுகொனேயாக தெரிந்திருக்கின்றார்

என்ன செய்ய? வீராங்கனையின் ஜிம்னாஸ்டிக் உடைக்கும், நடிகையின் நீச்சல் உடை ஸ்டில்லுக்கும் வித்தியாசம் தெரியா அளவிற்கு நம் பத்திரிகைகள் அவர்களை அப்படி ஆக்கி வைத்திருக்கின்றன.

இப்படி விரைவில் தமண்ணா, நயன், சமந்தா எல்லாம் ஒலிம்பிக் போகும் காலம் வரைவில் வரும் என சிலர் பரவசபடுகின்றார்கள்.


“டேய் நம்ம ஸ்கூல்ல படிப்பு படிப்புண்ணு நிறைய பைத்தியங்கள் அலையுது ஹெட் மாஸ்டர் உட்பட,

அப்படி இருக்கும்போது எப்படி நாம ஸ்டேட் லெவல் பிளேயர்ஸ் உருவாக்க முடியும்”

ஒலிம்பிக் போட்டிகளை பார்க்கும்பொழுது அந்த பிடி சார் சொன்னது காதோரம் கேட்டுகொண்டே இருக்கின்றது


 

இந்த அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் என்பவர் மனிதனா அல்லது சுறா மீன் வகையறாவா என தெரியவில்லை, இந்த ஒலிம்பிக்கில் நீச்சலுக்கான எல்லா தங்கத்தையும் மொத்தமாக கொடுத்துவிட்டு போதாது என்றால்

அடுத்த ஒலிம்பிக் நீச்சல் தங்கத்தையும் அட்வான்சாக கொடுத்து உடனே வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்

Image may contain: 1 person , close-up