கவிஞர் நா. முத்துகுமார்

இனி நா.முத்துகுமார் எனும் கவிஞன் இல்லை, அநாசயமாக பாடல்களை எழுதும் அந்த கவிஞன் இனி இல்லை.

காஞ்சியிலிருந்து வந்து அண்ணாவிற்கு பின் தமிழை வசப்படுத்திய அந்த கவிஞன் இனி இல்லை.

FB_IMG_1471177886130

1990களில் அறிமுகம் ஆனவர் எனினும் , கடந்த 12 ஆண்டுகளாக அவர் உச்சத்தில் இருந்தார். காதல்கொண்டேன் படத்தில் ஆரம்பித்த அவரின் உச்ச நேரம், அவரின் இறுதி நொடி வரை தொடர்ந்தது.

அவரின் பாடல்களில் வார்த்தைகள் வசப்பட்டிருக்கும், அருமையான சொற் உருவகங்கள் கண்ணதாசன் போலவே விளையாடியிருக்கும், உதாரணம் ஆனந்தயாழ் போன்றவை

12 ஆண்டுகளாக தமிழ்துறை பாடல்களில் தனக்கென ஒரு இடம் பிடித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவன் கொட்டிய கவிமழை கொஞ்சமல்ல. காதலும், தாலாட்டும், சில தத்துவங்களும் அவன் பாடல்களில் கலந்திருந்தன‌

இன்னும் உச்சம் பெறுவார், நிச்சயம் அற்புதமான பாடல்களை கொடுப்பார், ஒரு உயரம் சென்றுவிட்ட அவர், இன்னொரு உயரம் கொடுப்பார் எனும்பொழுதுதான் இந்த பெரும் துயரம் நடந்துவிட்டது.

பொதுவாக கவிஞர்கள் அற்புதமான எழுத்தாற்றல் கொண்டிருப்பார்கள். எழுத்துதான் அவர்கள் திறமை, அதுதான் பாடலாக, அழகான சொற்களோடு வரும்.

அப்படி கவிஞர்கள் எல்லாம் எழுத்தாளராகவும் மிளிர்வார்கள், எல்லா கவிஞர்களும் பின்னாளில் எழுதுவார்கள், விதியினை அறிந்தாரோ முத்துகுமார் தெரியாது, சில புத்தகங்களையும் எழுதியிருந்தார். காலம் வழிவிட்டிருந்தால் முத்திரை புத்தகங்கள் பின்னாளில் கிடைத்திருக்கலாம். விதி அது அல்ல.

பாடல் எழுதுவது மகா சிரமமானது, ஒரிரு ஹிட் பாடலை எழுதிவிட்டு கவிஞர்கள் காணாமல் போகும் திரையுலகது, 12 ஆண்டுகளாக தொடர்ந்து உச்சத்தில் நிற்பது பெரும் சாதனை, மனதில் பெரும் ரசனை இருந்தால் ஒழிய அது சாத்தியமில்லை, அந்த ரசனையே உருகி உருகி கவி ஆறாய் கொட்டும்

இன்று அந்த மலையினையே காலம் தகர்த்து எறிந்துவிட்டது.

தமிழ் பாடல் உலகிற்கு அது ஒரு சாபம். அற்புதமான கவிஞர்கள் பலர் நீண்ட காலம் உயிரோடு வாழ்வதில்லை

பாரதி அப்படி 36 வயதிலே செத்தான்.

பெரும் கவிஞன் என கொண்டாடபட்ட பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் 28 வயதில் உலகைவிட்டு மறைந்தார்.

கவியரசர் கண்ணதாசன் 52 வயதில் காலமானார்.

அதே கொடும்விதி நா.முத்துகுமாருக்கு 41 வயதில் இருந்திருக்கின்றது.

என்ன சொல்லி அழுவது, என்ன சொல்லி ஆறுதல் தேடுவது என்றே தெரியவில்லை.

நமக்கு நாமே ஆறுதல் சொல்லுமுன் அவர் குடும்பத்தாரை நினைத்தால் எப்படி இரங்கல் சொல்வது?

ஆனந்தயாழை மீட்டுகிறாய், ஆரிரோ இது ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு என சொன்ன அந்த கவிஞன் பிள்ளைகளிடம் எப்படி இருந்திருப்பான்.

அதனை நினைத்தாலே நெஞ்சு கலங்குகின்றது.

எல்லா கலைஞனுக்கும் ஒரு ஆசை இருக்கும், அதனை வித்தை கர்வம் அல்லது தொழில்பற்று என்றே சொல்லலாம்

பதவியில் இருக்கும்போதே மரணம் அடைய நினைப்பான் அரசியல்வாதி, பிரார்த்தனையின் போதே உயிர்பிரிய வேண்டும் என்பான் பக்தன். கேமரா முன் நடித்துகொண்டிருக்கும் பொதே செத்துவிட வேண்டும் என்பான் நல்ல நடிகன்.

அதாவது புகழின் உச்சத்தில் இருக்கும்போதே இறந்துவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.

தமிழகத்து புகழ்மிக்க கவிஞர்கள் சிலருக்கு வாய்த்த அது முத்துகுமாருக்கு வாய்த்தது, கொடிகட்டி பறந்த காலத்திலே அவர் இறந்திருக்கின்றார்.

பாடல் ரசனை மிகுந்த தமிழுலகம் இன்று கதறி துடிக்கின்றது. இப்படி பெரும் திறமைசாலி விரைவில் போய்விடுவான் என்றுதானோ காலம் அவனுக்கு கடைசிநாட்களில் இப்படி உச்சத்தில் வைத்து பார்த்திருக்கின்றது

ஒன்றா இரண்டா நினைவுகள்?

கண்ணதாசனின் இடத்தினை வாலியும், வைரமுத்துவும் நிரம்ப்பினார்கள். வாலியின் இடத்தினை ஒருவன் நிரப்பிகொண்டிருந்தான் என்றால் சந்தேகமே இன்றி சொல்லலாம் அது முத்துகுமார். அந்த இடத்தினை நிரப்புவது சாதாரண விஷயம் அல்ல.

வைரங்கள் மின்னிய இடத்தில் இன்னொரு வைரம்தான் மின்ன முடியும், அவர் மின்னினார்.

அந்தோ பரிதாபம் இனி அவர் பாடல் வானில் மின்னும் நட்சத்திரமாக நினைவுகளில் மின்னிகொண்டிருப்பார்.

நல்லதோர் வீணை செய்தே..அதை நலங்கெட தீயில் எரிப்பதுண்டோ…

ஆனால் எரிந்துவிட்டது காலம். அந்த கொடும்காலத்தால் முடிந்தது அதுதான், மற்றபடி அதே காலத்தில் அவன் முத்திரையும் பதித்துவிட்டான்.

நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன‌

2009 வாக்கில் வெயில்மிகுந்த நமது கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின் மழை மட்டும் பார்க்கும் நாட்டில் வாழ்ந்த மனிதரை சந்திக்கும்பொழுது, “வெயிலோடு விளையாடி..” பாடல் ஒலித்துகொண்டிருந்தது

அம்மனிதர் அப்பாடலை கவனித்துகொண்டே இருந்தார், “வெயிலை தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்” என அப்பாடல் முடியும் பொழுது அவர் கண்கள் கலங்கி இருந்தன.

வெயில் மிகுந்த கிராமத்து சிறுவர்களின் வாழ்க்கையினை அதனை தவிர வேறு வார்தைகளில் சொல்லிவிட முடியாது.

கண்களை துடைத்துகொண்டே கேட்டார், “எழுதியது யாரய்யா? வைரமுத்தா?”

இல்லை இது நா.முத்துகுமார் எனும் புதிய இளைஞர்

“பிரமாதமாய் எழுதியிருக்கான்யா, மனச தொட்டுபார்க்கிற சக்தி அவன் பாட்டுல இருக்கு, நம்ம ஊர் வாழ்க்கைய்யா, வெயில தவிர என்ன இருந்து, அசால்ட்டா சொல்லிட்டான் பாருய்யா, இருந்து பாரு, இன்னும் பெரிசா வருவான்.”

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பார்கள்.

அப்படியே பிரகாசமாய் வந்தார் முத்துகுமார், பிரகாசம் என்றால் பெரும் பிரகாசம்.

ஆனால் அது விளக்கு அணையும் முன் வந்த‌ பிரகாசம் என நினைக்கும்பொழுது நெஞ்சு உடைந்து மறுபடியும் அழ தோன்றுகின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s