துளசி தர்மலிங்கம் : ஒலிம்பிக்கில் தமிழர்

ஒரு தமிழர் ஒலிம்பிக்கில் விளையாடி இருக்கின்றார், அதுவும் ஈழதமிழர்.

அவர் பெயர் துளசி தர்மலிங்கம், ஜெர்மன் வாசி அப்படியும் கத்தார் அணிக்க்காக குத்துசண்டையில் களமிறங்கி இருக்கின்றார். மங்கோலிய வீரரிடம் தோல்வி தழுவி வெளியேறிவிட்டார்.

ஒரு தமிழன் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டிருக்கின்றார், ஆனால் தமிழக உணர்வாளர்களிடம் ஒரு சத்தமும் இல்லை, தமிழக ஊடகங்களிலும் ஒரு பெட்டி செய்தியும் காணோம்.

ஒரு தமிழின உணர்வாளர்களிடமிருந்து ஒரு வாழ்த்தையும் காணோம், ஒரு பாராட்டினையும் காணோம்.

இதுதான் இவர்கள் உலகெல்லாம் உள்ள தமிழர்களை எல்லாம் ஒன்று சேர்கின்றோம் என கத்தும் அழகு.

ஏன் இவரை மறந்தார்கள்? அவர் மங்கோலிய வீரருடன் மோதியதால் விட்டுவிட்டார்களோ?

ஒருவேளை அவர் இந்திய வீரர்களுடன் மோதி இருந்தால் தமிழக ஊடகங்களில் வந்திருப்பார், அங்கிள் சைமன் அவருக்கு போன வருடம் சோடா உடைத்துகொடுத்தது போல பேட்டி கொடுத்திருப்பார்

ஒருவேளை பதக்கம் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? வைகோ ஒரு படம் வெளியிடுவார்.

வழக்கம் போல கலைஞர் தொடங்கி இருப்பார்

அவர் என்மீது வைத்த நம்பிக்கை அளப்பறியது, இறுதி யுத்த காலத்தில் அவர் எனக்கு விடுத்த கோரிக்கையும், நான் கண்ணீர் விட்டபொழுது அவர் சொன்ன வார்த்தைகளும் மறக்க கூடியதல்ல‌

தர்மலிங்கம் என் மீது வைத்திருக்கும் மரியாதை அபரிமிதமானது என்ற ரீதியில் இருந்திருக்கும்

அணு அரசியலே மர்மமானது

கூடங்குள அணுவுலை காங்கிரஸ்காரரான ராஜிவ் தொடங்கியது என்றார்கள், காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங் மறுசீரமைப்பு செய்தார் என்றார்கள்

பெரும் களபேரத்திற்கு அது அச்சாணி ஆயிற்று, காங்கிரஸ் ஆட்சி தமிழர் விரோதம் என்றார்கள் தோள் தட்டினார்கள்

இதோ மோடி திறந்துவைத்தார் ஒரு சத்தமுமில்லை, அட இன்னும் 5 வரும் என அதிரடியாக சொன்னாலும் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை

ஆக காங்கிரஸ் எதிர்ப்பு புள்ளிகளான வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோரும், இந்திய தேசிய எதிர்ப்பாளர்களும் சங்கமிக்கும் இடமாகத்தான அது திகழ்ந்திருக்கின்றது

இதனிடையே அடிக்கடி புகுஷிமாவினை பார் என்றவர்களும், கடும் எதிர்ப்புக்கிடையே ஜப்பான் இயக்க ஆரம்பித்துள்ள அணுவுலை பற்றி ஒன்றும் சொல்வார்கள் இல்லை. அங்கு அதனருகே நிறுத்திவைத்த ஒரு அணுவுலையினை மறுபடி ஜப்பான் இயக்க தொடங்கியாயிற்று

வேறு மின்சார தேவைக்கு என்ன வழி என கைபிசைந்து நிற்கிறது அந்நாட்டு அரசு

ஆக இந்தியாவில் காங்கிரஸ் எதனை செய்தாலும் எதிர்ப்போம், அதே வழியில் பிஜேபி சென்றால் சத்தம் காட்டமாட்டோம் என்றொரு புதிய அரசியல் கிளம்பியுள்ளது மட்டும் தெரிகின்றது

அணு அரசியலே மர்மமானது, அதில் இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் அதனை விட மர்மமானது

உண்மையான சுதந்திரம் எது?…

உண்மையான சுதந்திரம் எது?… தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா சுதந்திர தின உரை

இந்த உரை நிகழ்த்திய பின் அந்த கட்சி காரர்களை பார்த்து, உண்மையான சுதந்திரம் எது? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என எந்த பத்திரிகையாளனாவது அவர்களிடம் கேட்டிருப்பானா?

அப்படி கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் 🙂

இதுவரை கேட்டதாக தகவலே இல்லை, இனியும் கேட்கமாட்டார்கள்

அவர்கள் நிலை பரிதாபம்தான், ஒரு சுதந்திர நாளில் கூட சுதந்திரமாக ஒருவார்த்தை பேசிவிடமுடியாது, சுதந்திரபோராட்டம் எல்லாம் அங்கு வாய்ப்பே இல்லை

இந்த சசிகலா புஷ்பாவிடமிருந்து ஏதும் சுதந்திர தின வாழ்த்து வந்ததா?

இன்றைய நிலையில் மிக சுதந்திரமான தமிழக எம்பி அவர் ஒருவர்தான் என்கிறது நிலவரம் 🙂

 

தீபா கர்மாகர்

“கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது”

உனக்காகவே எழுதபட்டது சகோதரி தீபா கமர்க்கர்,

FB_IMG_1471254033120

பதக்கம் கிடக்கின்றது, யாருக்கு வேண்டும்? அது இன்று இல்லையேல் நாளை.

இந்திய பெண்களும் ஜிம்னாஸ்டிக்கில் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிவிட்ட அந்த ஒற்றை சாதனை போதும், இனி கிளம்பும் இந்திய பெண்களுக்கு நீதான் ஜிம்னாஸ்டிக் தாய்

பதக்கம் தவறினாலும் கொஞ்சமும் தயங்காமல் அடுத்த ஜப்பான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என சொல்லும்போது

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து” என்றே பாராட்ட தோன்றுகின்றது

வடகிழக்கு மாநில அரசியலில் சில சர்ச்சைகள் இருக்கலாம், ஆனால் அதனின்று உதித்து இந்திய அடையாளமாக பிரேசிலில் மின்னிய எமது தேச மகளுக்கு

சுதந்திர தின வாழ்த்துக்களோடு மிக சிறப்பான வாழ்த்துக்கள்.

உன்னை பெற்றதில் பெருமை கொள்கிறது இந்த தேசம்

(எவனாவது வந்து வடகிழக்கு மாநில சர்ச்சைகளை, போராட்டத்தை ஒழிக்க மோடி பார்ப்பண அரசால் திட்டமிட்டு உருவாக்கபட்டவர் தீபா என ஒப்பாரி வைத்தால் அவன் எங்கிருந்தாலும் தேடி வந்து …………… )

கலைஞர்கள் மிக இளகிய மனமுள்ளவர்கள்

பொதுவாக கலைஞர்கள் மிக இளகிய மனமுள்ளவர்கள் என்பார்கள். ஒரு படைப்பினை ஆத்மார்த்தமாக படைப்பார்கள். அதிலிருந்து வெளிவரவும், சிந்தனைகளை வேறுபக்கம் திருப்பவும் அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைபடும்.

FB_IMG_1471253558007

கம்பனின் தனிபாடல் திரட்டு ஏதோ சொல்ல வருகின்றது, பாரதி கஞ்சா பிடித்திருக்கின்றார், ஜெயகாந்தன் சிவஞானமூலிகை என ஒன்றை வைத்திருந்தார் என்பார்கள்.

கண்ணதாசனின் வலி வடிகால்கள் உலகறிந்தவை.

தமிழகம் என்றல்ல உலக புகழ்பெற்ற கவிஞர்களும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள், உமர்கய்யாம் முதல் பலர் அப்படியே

கவிஞர்கள் அல்லது கலைஞர்களின் மனம் அவ்வளவு மென்மையானது, ஒரு அங்கீகாரத்திற்கு ஏங்கும் குழந்தை மனமது, பலவீனமானது

அந்த வடிகாலிலே தான் ஒரு அமைதி தேடிகொள்கின்றார்கள், பின் அவமானம், வலி, ஏளனம் எல்லாவற்றையும் தாங்கிகொள்ள அதிலேதான் சரணடைவார்கள்

விதி அப்படியானது. மற்றவர்களை சந்தோஷபடுத்த மகிழ்விக்க கலைதுறைக்கு வரும் கலைஞர்களின் தனிபட்ட பக்கம் வலி நிறைந்ததாகவே இருக்கும் என்பது ஒருவகை சாபம்

ஒரு சிலரே அதற்கு விதிவிலக்கு, மற்றபடி 90% பேர் எதற்காவது ஒன்றிற்கு ஏங்கி தவித்து அழுதே சாவார்கள், சில்க் ஸ்மிதா உட்பட‌

விஞ்ஞானிகள் போல கலைஞர்களும் வேறு உலகத்தில் வாழ்வார்கள், பெரும்பாலும் சிந்தனையிலும் கற்பனையிலும் புதிய தேடலிலுமே அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள், மற்றவர்களை விட வித்தியாசமானவர்கள்

ஆனால் உடல் எல்லா மனிதருக்கும் போல தனக்கும் உண்டு என்பதை மட்டும் மறந்துவிடுவார்கள், அதற்கு என்ன தெரியும்? மெது விஷமோ அல்லது உடனடி விஷமோ அது படுத்தே விடும்

குடியால் வாய்பிழந்த கலைஞர்கள் முக முத்து முதல் பின்னாளைய நாகேஷ் வரை ஏராளம். நடிகைகளிலும் பலர் உண்டு

உயிரிழந்தவர் வரிசையில் தியாகராஜ‌ பாகவதர், சாவித்திரி, சந்திரபாபு, கண்ணதாசன், கலாபவன் மணி, இப்போது முத்துகுமார் என இன்னொரு வரிசை உண்டு.

போதை எவ்வளவு திறமையானவர்களையும் அழிக்கும் என்பதை கண்ணார கண்டுகொண்டிருக்கின்றோம்

எப்படியோ சிக்கிகொண்டு கடைசியில் தெய்வத்தின் சந்நிதியில் கதறிய கண்ணதாசனுக்கும் மறுவாழ்வு கிடைக்கவில்லை. உடல் அவ்வளவு கெட்டுபோயிருந்தது.

வாழவேண்டும் என்ற ஆசையில் அவரின் கடைசிகால வரிகள் மனதை உருக்குபவை, என்ன செய்ய? பழம் போதையின் கொடுமையில் காலன் முந்திகொண்டான்.

ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு வகையான மன சிக்கல்.

தற்கொலைக்கு முயன்ற குற்றசாட்டில் நீதிபதி முன் நின்றார் சந்திரபாபு, அப்படி உனக்கு என்ன கஷ்டம் என கேட்டார் நீதிபதி

தீக்குச்சியினை உரசி கையினை சுட்டுகொண்டு சொன்னார் பாபு, கணம் நீதிபதி அவர்களே இதோ சுட்டுகொண்டேனே உங்களால் வலி உணர முடியுமா?

ம்ஹூம் என தலையசைத்தார் நீதிபதி

என் வலியினை என்னால் மட்டுமே உணர முடியும் என சொல்லிவிட்டு நடந்தார் சந்திரபாபு

அப்படி அவர்கள் வலியினை அவர்களால்தான் உணரமுடியும்.

ஒவ்வொரு கலைஞனுக்கு பின்னும் ஒரு சோகம் இருக்கின்றது, முத்துகுமாருக்கு பின்னும் அப்படி ஒன்று இருந்திருக்கலாமோ என்னமோ?

ஆனால் அந்த சோகம்தான் அழகான பாடல்களாக, தாலாட்டாக கால கல்வெட்டில் நிலைத்துவிட்டது

மறுபடி அதே சோகத்தில் எல்லோரையும் தள்ளி அவர் சென்றுவிட்டார்.

கலைஞர்கள் (கலைஞர் அல்ல 🙂 ) சொன்னதை செய்யுங்கள், அவர்கள் செய்வதை போல் செய்யாதீர்கள். ஒருவன் எப்படி வாழகூடாது என்பதற்கு அவர்கள் வாழ்வே சாட்சி என சொன்ன அனுபவ கவிஞன் கண்ணதாசனின் வார்த்தைகளில் உண்மை தத்துவம் கொட்டிகிடக்கின்றது.

இதனை அறிந்தாலே போதும், எப்படிபட்ட ஜாம்பவான்களை எல்லாம் போதை கவித்திருக்கின்றது என பிஞ்சு உள்ளங்களில் பதியவைத்தாலே போதும்

சசிபெருமாள் போன்றவர்கள் சாக தேவையில்லை, நந்தினிக்கள் கத்த தேவையில்லை

டாஸ்மாக் தானாக சரியும், வலியபிடித்து வாயில் ஊற்றி கையில் இருப்பதை பிடுங்கும் அளவு அரசு செல்லாது.

குடிக்க சொல்லி கொடுத்த சினிமா தான், குடியினை நொடிக்கு நொடி காட்டி அந்த கலாச்சாரத்தை ஊட்டிய சினிமாவில்தான்

சினிமாக்கலைஞர்களின் அகால மரணம் அதன் கொடூரத்தை மறுபக்கம் சொல்லிகொண்டே இருக்கின்றது.

அதனை அடுத்த தலைமுறையினரிடம் பதிய வைக்கும் கடமை நம்மிடையே இருக்கின்றது

மதுஒழிப்பு என சமூகம் ஓலமிடும் காலங்களில் எல்லாம் இப்படி சில கலைஞர்களும் உயிரை கொடுத்து அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்.

அவர்கள் வயதினை எடுத்து பாருங்கள், இதில் யாருமே சாகவேண்டிய வயது அல்ல. முதல்பகுதி வறுமைக்கும், அடுத்த பகுதி கலைக்கும், பாதி பகுதி வாழ்க்கையினை மதுகொடுமைக்கும் கொடுத்து செத்த பரிதாபத்திற்குரியவர்கள் அவர்கள்.

சாவித்திரி, சந்திரபாபு, கண்ணதாசன், கலபாவன் மணி, முத்துகுமார் என பலர் நெஞ்சுக்குள் சுழன்றுகொண்டே வருகின்றார்கள்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்….

நேற்று பாகிஸ்தானிய நண்பர்களுக்கு சுதந்திர நாள்.

FB_IMG_1471228998469

அந்நண்பர்களை நோக்கி சொல்லலாம், நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், 200 ஆண்டுகாலம் போராடும்பொழுது லாகூரின் , கராச்சியின் உடன்பிறப்புக்களாக போராடும் பொழுது இந்திய விடுதலைக்கு என்றுதானே போராடினீர்கள்?

பாகிஸ்தான் என்ற கனவு விளைந்தது சுதந்திரத்தின் சமீபத்தில்தானே? சொல்லிகொடுத்தவன் வெள்ளையந்தானே?

இன்று என்ன கண்டுகொண்டீர்கள்? பொருளாதார ரீதியாக தோற்றுவிட்டீர்கள், ஆப்கானிய தீவிரவாதம் உங்களை அரித்துகொண்டிருக்கின்றது. ஒரு மாயவலையில் சிக்கி இருக்கின்றீர்கள்.

அந்நிய சக்திகளின் ஆயுதங்களில் நீங்கள் அவற்றை மறைக்க முயல்கின்றீர்கள். உங்கள் நாட்டை பல பகுதிகளில் யாரோ ஆண்டுகொண்டிருக்கின்றார்கள்

மறைக்க முடியா உண்மை இது, இதற்கா சுதந்திரம் வாங்கினீர்கள். மனசாட்சியிடம் கேளுங்கள் அது பேசும்.

மாய பூதமாக நீங்கள் உருவாக்கிய தீவிரவாதம் உங்களை அழித்துகொண்டிருக்கின்றது, காஷ்மீரை காட்டி நீங்கள் உங்கள் செலவுகளை அதிகரித்து கொண்டிருக்கின்றீர்கள், பல உலக வில்லன்கள் உங்களை தூண்டிவிட்டுகொண்டிருக்கின்றார்கள்.

இருவரும் ஒரே பிரிட்டிஷாரை எதிர்த்துதான் போராடினோம், இருவரும் அமெரிக்காவின் அழைப்பினை புறக்கணித்துதான் இரண்டாம் உலகப்போரில் கலந்து கொள்ளாமல் தப்பித்தோம்

ஆனால் இன்று நமக்குள்ளே சண்டை பலமுறை மோதியாகிவிட்டது, நேரிலும் மறைமுகத்திலும் லட்சகணக்கானோர் செத்தும் ஆகிவிட்டது

உங்களை காட்டி எமது தேசமும், எங்களை காட்டி உங்கள் தேசமும் செலவழிக்கும் பணம் கொஞ்சமல்ல, அது எங்கே விடிகின்றது?

மருத்துவமனை, சாலை, கல்வி என விழுந்து இன்று இருவருமே உலகதரம் எட்டமுடியாமல் அபலைகளாய் அலைகின்றோம்

அரபு நாடுகளின் எண்ணெய் வயல்கள், மலேசிய பாமாயில் காடுகள், சிங்கப்பூர் அடித்தட்டு வேலைகள் இன்னும் உலகெல்லாம் நீங்களும், நாங்களும், வங்கத்தவரும் அலைய காரணம் என்ன?

நமக்குள்ளே நமக்கு எதிராக குவிக்கபடும் ஆயுதங்களும் அதன் செலவுகளும்

இந்த 70 வருடமாகத்தான் இந்த மோதலும், சாதலும்

அதற்கு முன் எவ்வளவு ஒற்றுமையாக போராடியிருக்கின்றோம், அலெக்ஸாண்டர் காலமுதல் மவுண்பேட்டன் காலம் வரை ஒரு ஒற்றுமை ஒருந்தே தான் வந்திருக்கின்றது அல்லவா? வரலாறை புரட்டுங்கள்

ஒரு காலத்தில் இந்துக்கள், அதன் பின் பவுத்தர்கள், அதன் பின் இஸ்லாமியர், சீக்கியர் என மதங்களால் பிரிந்தாலும் இந்தியர் என ஒன்றாகத்தானே போராடியிருக்கின்றோம், சுதந்திர போராட்டம் அதனைத்தான் சொல்கிறது

எங்கள் மண் பாரதி உங்களுக்காக போராடியிருக்கின்றான், உங்கள் லாகூரின் பகத்சிங்கும், லஜ்பதிராயும் எங்களுக்காக குரலெழுப்பிய காலமெல்லாம் எங்கே? மறக்கமுடியுமா?

உங்களோடு கரம் கோர்க்க எங்களுக்கு தயக்கமில்லை, எங்களுக்கு பிரச்சினை இல்லை, அப்படி பாகிஸ்தான் வேண்டாம் என சொல்பவர் சிறிய மதவாத குழுக்களாக இருக்கலாம்,

அவர்களை அங்கே இந்தியா வேண்டாம் என சொல்லும் உங்கள் நாட்டு மதக்குழுக்களோடு சேர்ந்து, அணுகுண்டுகளோடு கடலில் எறிவோம்

பாகிஸ்தான் மக்களுக்கு எந்நாளும் இந்தியா மீதே ஒரு அபிமானம் உண்டு, இந்தியருக்கும் அம்மக்கள் மீது ஒரு அனுதாபம் உண்டு

அந்நிய சக்தியின் பிடியிலிருக்கும் உங்கள் அதிகார பீடமே எல்லாவற்றிற்கும் காரணம். அவ்வகையில் நாங்கள் மகா சுதந்திரமானவர்கள், தனித்து நிற்பவர்கள்

இனிய சகோதரர்களே, வாருங்கள் இணைந்து கொள்வோம்

பஞ்சாப் பூரணமாகும், காஷ்மீர் இணையும், பெருமை மிகு சிந்து நதி எமக்கும் உரிமையாகும்.

அன்று உலகின் பெரும் நாடாக இந்தியா எளிதில் உருவெடுக்கும். மிகபெரும் சக்தியாக அது உலகினை மிரட்டும்.

இப்படி இணைவோம் எனும் குரல்கள் இந்தியாவில் எழுவதும், அதற்கு நீங்கள் ஆதரவளிப்பதையும் பார்த்துகொண்டே இருக்கின்றோம்.

மதங்களை வீட்டில் வைப்போம், மானிடத்தை நாட்டில் வைப்போம் வாருங்கள்

உண்மையில் சுதந்திர தினவிழா கொண்டாட வேண்டுமென்றால் எப்படி சொல்லவேண்டும்? பிரிட்டிஷாரிடம் இருந்து பெற்ற ஒரே சுதந்திரம் உங்களுக்கும், எங்களுக்கும் வேறு வேறு என்றால் அது அர்த்தமுள்ளதா?

சகோதர்கள் இல்லாமல் என்ன பண்டிகை கொண்டாட முடியும்? அதுவும் உடன் போராடிய சகோதரர்கள் இல்லாமல் எப்படி? வாருங்கள், இணைந்துகொள்ளுங்கள்.

நிச்சயம் ஒரு நாள் இணைவோம், அன்று அர்த்தத்தோடு கொண்டாடுவோம், அது எந்நாளகவும் இருந்துவிட்டு போகட்டும்

ஜெர்மனி பிரியாத பிரிவினையா? இணந்து இன்று உலகினை மிரட்டவில்லையா?

வியட்நாம் இணையவில்லையா?, ரஷ்யா பெலாரஸ் இணைய விரும்பவில்லையா? நாளையே வடகொரிய வெள்ளை தக்காளி கொள்ளை நோயில் செத்தால் இரு கொரியாக்களும் ஒன்றாக இணையாதா?

அதுபோல நாமும் இணைவோம் சகோதரர்களே, இந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் இந்துஸ்தான் என மோதி அழிந்தது போதும், வரும் தலைமுறை அமைதியாக வாழட்டும், வழிவிடுவோம்

ஹிட்லரின் காலங்களை ஜெர்மானியர் மறக்க நினைப்பது போல இந்த ரத்த காலங்களை நாமும் மறப்போம், அடுத்த சந்ததி அமைதியில் வாழட்டும்.

அந்நாள் வரும் வரை நாங்கள் தனியாக கொண்டாடிகொள்கின்றோம் உங்களுக்காக கதவுகளை திறந்து வைத்துகொண்டே, உங்களை எதிர்பார்த்துகொண்டே

உலகின் பெரும் சவால்களை எதிர்கொண்ட நாடு எனும் முறையில், உலகின் பெரும் அதிசயிக்கதக்க நாடாக இன்று மிளிரும் இந்த நாட்டின் 70ம் சுதந்திர தினத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம்

டிவி சினிமாக்களை விட்டு, மூட ஊடகங்களை விட்டு, நடிகைகள் நடிகையர் எனும் நாடக கூத்தாடிகளின் நடிப்பினை விட்டு, இந்த சுதந்திரத்திற்காய் ராபர்ட் கிளைவ் காலமுதல் மவுண்ட்பேட்டன் காலம்வரை செத்த ஒவ்வொரு தியாகிகளையும் நினைத்து அஞ்சலி செலுத்தி நாங்கள் கொண்டாடுகின்றோம்.

அந்த தியாகிகளை நினைக்கும் பொழுது எப்படி எங்களால் லாகூர், பெஷாவர், கராச்சி போன்ற உங்கள் நாட்டு நினைவுகளை மறக்க முடியும்

மாவீரன் ரஞ்சித் சிங் முதல், பகத்சிங் என தொடங்கி இறுதியில் பலுசிஸ்தான் எல்லையில் இந்தியபிரிவினை வேண்டாம் என கதறி நின்றானே, நாங்களும் கையினை பிசைந்து நின்றோமே, காட்டாறு வெள்ளம் சகோதரனை இழுத்து செல்லும்போது கதறி நின்றோமே அந்த எல்லை காந்தி கபார்கானின் நினைவுகளின்று எப்படி எங்களால் கொண்டாட முடியும்?

நேதாஜி வா என்றவுடன் இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாபிலிருந்தும் சிந்து ஓரத்திலிருந்தும் ஓடி வந்து டெல்லி சலோ எனும் போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த சகோதரர்களை மறக்க முடியுமா?

அர்த்தமில்லா சுதந்திர தினத்தை இருவரும் கொண்டாடுகின்றோம் என்பதில் உங்களை போலவே எங்களுக்கும் மனம் அறுக்கின்றது.

செப்புமொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் என்றான் பாரதி, என்ன சிந்தனை? அது இந்தியன் எனும் சிந்தனை. மொழி மட்டுமல்ல இனம், சாதி என சகலத்தையும் கடந்த பெருந்தன்மையான் சிந்தனை அது.

அந்த பெருமையிலும், கர்வத்திலும் உளமார பெருமையுடன் சொல்கிறோம்

என் இனிய பாகிஸ்தான் சகோதரர்களே, போராடி பெற்ற சுதந்திரம் உங்களுக்கு தனியாகவோ எங்களுக்கு தனியாகவோ அல்ல.

வாருங்கள் இணைவோம், அதன் உண்மையான அர்த்தத்தை உலகிற்கே சொல்வோம்

நாங்கள் எப்பொழுதும் தயார், மனதார தயார். பிரிந்த சகோதரனை எதிர்பார்க்கும் மூத்த சகோதரர்கள் போல கண்ணீருடன் தயார்.

உங்களுக்காக காத்திருந்துகொண்டே உங்கள் குரலும் விரைவில் இணைந்து இப்படி சொல்லும் என எதிர்பார்த்துகொண்டே சொல்கின்றோம்.

வந்தே மாதரம்,
தாய் மண்ணே வணக்கம்.

தாயின் மணிக்கொடி பாரீர்…

தாயின் மணிக்கொடி பாரீர்.

FB_IMG_1471228669215

200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா

அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றது,

பின்னர் காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.

மீண்டும் போர், அதையும் தாண்டி மத கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்.

ஆளுக்க்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா, குதிரை வேகமாக ஓடலாம், ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது, அதுதான் இந்தியா.

இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.

சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.

ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?, இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி.

அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.

சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள், ஆனால் இந்தியா அப்படி அல்ல‌

காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு கலைஞர் வரை கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது, இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?

நமது பொது சுதந்திரத்திற்கு கேடு வரும்பொழுது கத்த முடிகிறது, கொடி பிடித்தோ அல்லது ஊர்வலமோ, சில நேரங்களில் வேறுவகையிலோ எதிர்ப்பினை காட்ட முடிகிறது, 5 வருடம் பொறுத்தால் ஆட்சியை தூக்கி எறிய முடிகிறது, காலத்திற்கும் ஆட்சியே மாறாத நாடுகளை நினைத்துபாருங்கள்??

இந்தியா கடந்த 69 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் சுதந்திர வெற்றி.

1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.

இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.

ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி.

சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல், சமீபத்திய கிரீஸ் திவால் மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை. காரணம் மெதுவாக நடந்தாலும் பலமிக்க யானை இது.

இந்தியா சில வெளிநாட்டு விஷயங்களில் கண்டும் காணாமலும் செல்லலாம்,அல்லது புத்தர் போல மாபெரும் மவுனம் காக்கலாம், காரணம் சில விஷயங்களில் ஓங்கி அடித்தால் மேற்குலகின் பொருளாராதார தடை எனும் ஆயுதம் இந்தியா மீது வீசபடும்.

அவ்வாறு வீசினால் நவீன அறிவியல் சாதனம்,மருந்து பொருள், வெளிநாட்டு எந்திரங்களின் மாற்றுபாகங்கள், மருந்துகள் என ஏதும் இந்தியாவிற்குள் வராது.
விவசாயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக சிரத்தை, பெரும் செலவினை விழுங்கி கொண்டிருக்கும் ராணுவ கருவிகள் இறக்குமதிக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகள், இன்னும் தொழிலதிபர்கள் மேல் கொஞ்சம் கட்டுப்பாடும் முறையான வரிவிதிப்பு இவைகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும்

இன்று மேற்குலகின் பொருளாராதார தடைகளை எல்லாம் டிஷ்யூ பேப்பராக கசக்கி தூக்கி எறிந்து, அனாசயமாக அதிரடியாக‌ விளையாடுகின்றார்களே பலமிக்க ரஷ்யர்கள், அவர்களை போல நாமும் உலகை ஆட்டலாம்.
கருப்புகொடி, சிகப்பு கொடி, புறக்கணிப்புகள் எல்லாம் அரசுக்கு செய்யகூடியவையே அன்றி, நாட்டிற்கு எதிராக அல்ல‌

நாடு வேறு, அரசாங்கம் வேறு.

இந்தியா அமைதியான நாடு, அதிலும் நமது பகுதி மிக நிச்சயமாக ஆனந்தமான‌ பகுதி, அந்த அருமையை உணரவேண்டுமானால்
சுதந்திர தினத்தன்று டிவியில் 20 வயது நடிகை 120 கோடிமக்களுக்கும் பேட்டியளிப்பார் அல்லது சினிமா குப்பைகள் அல்லது பட்டிமன்ற அரட்டைகள் ஓடிக்கொண்டிருக்கும்

அல்லது சாராய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் உணர்ச்சிமிக்க சுதந்திரதின வாழ்த்துக்களை சொல்வார்கள், உடனே அலைவரிசையை மாற்றிவிட்டு

பல குழப்பமான நாட்டு அரசுகளையும், சிக்கலான வாழ்க்கை வாழும் வடகொரியா போன்ற நாடுகளையும், பலமான அரசுகள் இல்லாததால் கொடூரமான தீவிரவாதத்திற்கு பலியாகும் நாடுகளை பாருங்கள்.

எத்தனை கொடூர அரசுகள், எத்தனை காட்டுமிராட்டிதனங்கள், போதை கும்பல்கள் ஆளும் நாடுகள், கற்பனைக்கும் எட்டாத கட்டுப்பாடுகள்,அட்டகாசங்கள்.

அம்மக்களின் அழுகுரலும், பசியால் கதறும் பிஞ்சுகளின் கூக்குரலும் கேளுங்கள்
தானாக உங்கள் காதுகளில் தேசிய கீதம் ஒலிக்கும், கைகள் தேசிய கொடியை வணங்கும்.

இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.

வந்தே மாதரம்