பணமோ பணம்…

மதுரையில் பல கோடி ரூபாய் பணத்துடன் பழுதாகி நின்ற கண்டெய்னர் லாரி

அடிக்கடி லாரிகள் பணத்தோடு சிக்குகின்றன, பழுதான லாரியில் பணம், கண்டேய்னரில் பணம், ரயில் பெட்டியில் பணம், பணமோ பணம் பணக்கார தேசமாக மாறிவிட்டது தமிழகம், காந்தியும், நேருவும் ஆசைபட்ட இந்தியா இதுதான்.

இனி எதற்கு வெளிநாடு?

உடனே ஊருக்கு சென்று கண்டெய்னர் கிளீனராக பணிக்கு சேரவேண்டும், தினமும் சுத்தம் செய்யும் பொழுதாவது ஆங்காங்கு உள்ளே சிதறி கிடக்கும் 5 ஆயிரமோ ஐம்பதாயிரமாவது பொறுக்க முடியாதா?, அதனை வைத்து எப்படியாவது வாழ்ந்துவிடலாம்

எந்த லாரியில் எத்தனை கோடியோ? லாரி கணடெய்னரே இப்படி என்றால்? சரக்கு கப்பல் எப்படி இருக்கும்?

எதற்கும் துறைமுகம் கிளீனர் வேலைக்கும் முயற்சி செய்யலாம், எப்படிபட்ட பொற்கால ஆட்சி, காணுமிடமெல்லாம் பணம்

அரபு நாடோ, அமெரிக்காவோ இதன் அருகில் வரமுடியுமா? ஏ தமிழகமே நீ பொருளாதார வல்லசராக மாறிகொண்டிருக்கின்றாய். இனி அக்காலத்தில் கோழிவிரட்ட தங்க கம்மல் எறிந்த கதைதான்

காக்காய் விரட்ட 5 ஆயிரம் ரூபாய் கட்டு, நாயினை அடிக்க 50 ஆயிரம் ரூபாய் கட்டு.

வாழ்க தமிழகம், ஓடட்டும் கண்டெய்னர்கள்.

நளவெண்பா

FB_IMG_1471855337154

ஏதாவது பழைய காவியம் படிக்கவேண்டும் போலிருந்தது, நள வெண்பா படித்தேன், நள மகராஜனின் காவியம். அவன் சமையலுக்கு பெயர் போன அரசனாம், சமையல் பற்றி ஏதாவது சொல்லியிருப்பார்கள், ஒரு கத்தரிக்காய் பச்சடி பற்றியாது சொல்லியிருப்பார்கள் என அலசி பார்த்தபொழுது அப்படி ஒன்றும் சிக்கவில்லை

நளனுக்கு தெரிந்திருக்கும் சமையல் புகழேந்தி புலவ‌ருக்கு தெரியாமல் போயிருக்கலாம், பாவி கவிஞன் கொஞ்சமாவது அக்கால சமையல் பற்றி சொல்லி இருக்கவேண்டாமா? ஒரு மண்ணாங்கட்டியும் சொல்லாமல் நளன் சிறந்த சமையல்காரன் என்றால் எப்படி?

இப்படித்த்தான் சாலமோன் அரசன் பெரும் சமையல்காரன் என எவனோ கொளுத்திபோட, பைபிள் பக்கமெல்லாம் புரட்டினால், மனிதர் நன்றாக உண்டாராம், சமையல்காரன் பற்றி எல்லாம் இல்லை

சமையல் இருக்கட்டும்

அந்த நளனுக்கும் தமயந்திக்கும் காதலாம், அன்னபறவைதான் வாட்சப் வேலை எல்லாம் பார்த்திருக்கின்றது. காதல் பெரிதாக வளர்ந்திருக்கின்றது.

ஆனால் தமயந்தி மீது லோகம் , பாதாளம், 7ம் லோக தேவர்கள், ஏலியஸ்கள் என எல்லோருக்கும் காதலாம், சுயம்வரம் வைத்ததில் தேவர்கள், ஏலியன்ஸ்கள், பிசாசுகள் எல்லாம் நளன் உருவத்திலே வந்ததாம், கிராபிக்ஸ் உதவி கூட இல்லாமல் வந்திருக்கின்றன‌

ஆனால் சுயம்வரத்தில் மிக சமத்தாக நளனை அடையாளம் கண்ட தமயந்தி அவனுக்கு மாலை இட்டாளாம், அவ்வளவுதான் தேவர்கள், அசுரர்கள், ஏலியன்ஸ்கள் என எல்லா வில்லன்களும் ஒன்றாகினர்

சனி பகவானை ஏவிவிட்டு அவன் நிம்மதியினை குலைத்தனர், இருவரையும் பிரித்தனர், ஒரு பாம்பு வேறு கடித்து நளன் அகோரமாய் ஆனான், தயமந்தியினை சந்தித்தபொழுதும் அவளால் அவனை அடையாளம் காணமுடியாத அளவு சண்டாளர்கள் மாற்றிவிட்டிருந்தனர்

அதன் பின் படாத பாடு பட்டு, எப்படியோ நளன் சனியிடன் சரண்டர் ஆகி எல்லாம் திரும்பபெற்றான், யாவரும் நலம்.

உன் கதையினை கேட்டவரை நான் அவ்வளவு பாடு படுத்தமாட்டேன், செல்லமாய் கிள்ளுவேன் என சனியும் பை சொல்ல, யாவரும் நலம்

இதோடு புத்தகத்தை மூடினால், ஹீரோயினுக்கு லைன் விடும் வில்லன்கள் மொத்தமாக சேர்ந்து யாரையோ அலங்கோலமாக்கினார்களே, சமீபத்தில் கூட பார்த்து தொலைத்தோமே என சிந்தித்தால்,

அட ஐ சினிமா

FB_IMG_1471855353815

எங்கிருந்து கதையினை உருவியிருக்கின்றார்கள் பார்த்தீர்களா?, இதில் கதை என்னுடையது என ஆளாளுக்கு சண்டை வேறு,

நல்ல நீதிபதி என்றால் ஷங்கரையும், வம்புக்கு வந்தவனையும் கட்டையால் அடித்து நளவெண்பாவினை நூறுமுறை எழுத சொல்லி இம்போஷிசன் தண்டனை கொடுத்திருப்பார்

உண்மையில் அக்கதைக்கு வழக்கு போட வேண்டியவர் புகழேந்தி புலவர்.

இப்பொழுது யார் கதையினை உருவிகொண்டிருக்கின்றார்களோ தெரியாது, எதற்கும் பழம் இலக்கியங்களை எல்லாம் படித்து வைத்து கொள்வது நல்லது.

சொல்வதெல்லாம் உண்மை …

FB_IMG_1471852765657

இந்த Z டிவி நாட்டாமை குழு எங்கு போய் தொலைந்தது, பாதிக்கபட்ட பெண்களுக்கு நாங்கள் இருக்கின்றோம், வாருங்கள் எங்கள் பின்னால் தமிழ்நாடு இருக்கின்றது, “போலீச கூட்டுவேன்…” என்றெல்லாம் பஞ்சாயத்து பண்ணிய புண்ணியவதிகள் எங்கே?

எவ்வளவு அழகான விறுவிறுப்பான விஷயம் சிக்கி இருக்கின்றது?, ஏன் தாமதம்? என்ன தயக்கம்? எங்கே நாட்டாமைகள்?

FB_IMG_1471852779800

நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி கதறுகின்றார், இன்னும் அதிரடியாக லோக்சபா எம்பி சத்தியபாமா மீது அவரது கணவரே திருச்சி சிவாவினை சம்பத்தபடுத்தி அறிக்கை விடுகின்றார்.

இதில் இந்த Z டிவி, சொலவதெல்லாம் உணமை நிகழ்ச்சி நடத்தி இந்த பக்கம் சசிகலா புஷ்பா, சத்யபாமா வகையறாக்களை நிறுத்தி அப்பக்கம் திருச்சி சிவாவினை வைத்து மிரட்டி ஒரு நிகழ்ச்சி நடத்தினால் எப்படி இருக்கும்?

சசிகலா புஷ்பாவிடம் “சொல்லுங்கம்மா..தமிழ்நாடு உங்க பின்னால இருக்கு, நாங்க இருக்கோம், முதல்வர் அடிச்சாராம்மா..? இப்படி கேட்டால் எப்படி இருக்கும்?

செய்வார்களா? ம்ஹூம், அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஏழை பாழைகளின் அந்தரங்கத்தை வியாபாரமாக்குவது, இந்த பெரிய விவகாரங்களுக்குள் எல்லாம் வரமாட்டார்கள்

“என்னம்மா இப்படி பண்ணதீங்கம்மா……………….” இது சீ டிவி.

அய்யா கோபிநாத், திருச்சி சிவா, சத்யபாமா புருஷன ஒரு பக்கமும், சசிகலா புஷ்பா கும்பலை இன்னொரு பக்கமும் வைத்து நீயா, நானா நிகழ்ச்சி நடத்தினால் எப்படி இருக்கும்?

கோட் போட்டு ஸ்டைலா நடந்து , கேள்வி கேட்டு…
ம்ஹூம் நீங்களும் செய்யமாட்டீர்கள்?

பாண்டே என்பவர் இவர்களில் ஒருவரை பிடித்து கேள்வி கேட்டால் எப்படி இருக்கும்? அவரும் செய்யமாட்டார்

நியூஸ் 7 சேணல், சீமான் கொழும்புக்கு போனதை எப்படி ஒளிபரப்பியது, திருச்சி சிவா டெல்லியில் என்ன செய்தார் என்பதை சொல்லுமா? ம்ஹூம் , புதிய தலைமுறை நோ, பாலிமர் நோ நோ, இன்னும் இருக்கும் இம்சைகள் நெவர்.

ஆக இதுதான் தமிழக ஊடக சுதந்திரம் எனும் வியாபார தந்திரம்

புனித ஜார்ஜ் கோட்டை : சென்னை சரித்திரம்

FB_IMG_1471852301803

சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு.

அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது.

இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி வந்து , இந்தியாவினை பார்த்து வாயினை பிளந்தான் அவன்

இன்று நாம் ஐரோப்பாவினை ஆஆஆ என பார்கின்றோம் அல்லவா? அப்படி.

உலகின் வரலாற்றை மாற்றி போட காரணமாயிருந்தவன் மார்க்கோ போலோ, இத்தாலிக்காரர் (இத்தாலியருக்கு இந்தியா என்றாலே ஒரு விருப்பம் போலும் ), வியாபாரிதான் ஆனால் இந்தியா, சீனம் என ஆசியாவினை சுற்றிவிட்டு ,செல்வம் இந்தியாவில் குவிந்து கிடக்கிறது என்ற ஐரோப்பியரின் கனவிற்கு, ஆமாம் நானே கண்ணால் பார்த்த சாட்சி என்று சூடமேற்றி சத்தியம் செய்தவர்.

அதுமுதல் “இந்தியா கிறுக்கு” பிடித்து அலைந்தது ஐரோப்பா, தேடினார்கள், முதல்வெற்றி போர்ச்சுகல்லுக்கு உபயம் வாஸ்கோடகாமா, பலர் வந்தார்கள் , அவர்கள் வரும்பொழுது, முக்கால சோழ நாட்டின் பகுதியான அந்த கடற்கரை நாயக்கர்களுக்கு கட்டுபட்டதாயிருந்தது, ஆனாலும் ஆண்டு கொண்டிருந்தது ஆற்காடு நவாப்.

அந்த பகுதியை சுற்றி சுற்றி பார்த்தார்கள், வியாபாரம் செய்ய வந்தவர்கள்தான் ஆனால் போர்த்துகீசியரின் சமயபற்று ஆழமானது, ஒரு கிறிஸ்தவ போதகர் எப்படியோ இந்த பகுதிக்கு வந்திருக்கிறார், இறந்திருக்கிறார், அவரின் கல்லறை அங்கிருக்கின்றது என்பதை கண்டுகொண்டு ஆராய்ந்தார்கள், அமைதியானார்கள்.

முழங்காலிட்டு பிதா,சுதன்,பரிசுத்த ஆவி அடையாளமிட்டு சொன்னார்கள், இது இயேசுகிறிஸ்து கூட இருந்த செயிண்ட் தாமஸ்(போர்த்துகீசிய மொழியில் சாந் தோம்ஸ்), அவருக்கு ஆலயமும் கட்ட தொடங்கினார்கள் “சாந்தோம்” என பெயரிட்டார்கள்,வணங்கினார்கள்.

(புனித தோமையார் இந்தியா வந்தார் என்பதற்கு நச்சென்ற ஆதாரமில்லை, ஆனால் யாரோ ஒரு கிறிஸ்தவ துறவி வந்திருக்கிறார், பெயர் தாமஸாக இருக்கலாம்)

ஒரு மாலுமியாக அந்த போர்த்துகீசியரும் வந்தார், நீண்ட‌ தாடிவைத்திருந்தார், “மெட்ருஸ்” என்பது அவரின் பெயர், வந்த இடத்தில் இறந்தார், அவரை புதைத்த இடத்திற்கு அடையாளமிட்டார்கள் “மெட்ராஸ்”, இதுதான் 1996 வரை நீடித்த பெயர்.

பின்னால் வந்த பிரிட்டனும்,பிரான்சும் போர்ச்சுக்கல்லை பிடரியில் பிடித்து தள்ளி விரட்ட, அழுதுகொண்டே மலாக்கா சென்றனர். ஆனால் அந்த “மெட்ராஸ்” என்ற பெயர் மாறவில்லை, வெள்ளையரும் அப்படியே அழைத்தனர், தமிழில் அது “மதராசபட்டினம்” ஆயிற்று.

அந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி, பிரிட்டானியர் கோட்டை கட்டினர், அந்நாளைய பிரிட்னுக்கு புனித ஜார்ஜ, தெற்கத்தியருக்கு பெரும்பாலும் முனியாண்டி, மதுரை வீரன், இசக்கியம்மன், சுடலையாண்டவர் போல அவர்களுக்கு இங்கிலாந்தின் காவல் தெய்வம் ,புனித ஜார்ஜ் பெயரினை இட்டார்கள். மறக்காமல் ஒரு மாதா கோயிலும் கட்டிகொண்டார்கள்.

கோட்டைக்கு நிலம் வாங்கிய நாள் இன்று கொண்டாடும் சென்னை தினமாம், கோட்டை திறக்கபட்டநாளில்தான் சென்னை தினம் கொண்டாடி இருக்கவேண்டும், ஆனால் யாரோ புண்ணியவான் பத்திரம்முடிந்த நாளையே குறித்துவிட்டார்கள், பரவாயில்லை.

வெள்ளையர்கள் தென்னிந்தியாவிற்கு செய்த பெரும் உதவி அந்த கோட்டை, கிட்டதட்ட 90 வருடங்கள் மதராஸ் ராஜதானி அதாவது madras presidency (கன்னடம், கேரளம்,ஆந்திரா,தமிழ்நாடு) என தென்னிந்தியாவின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்ந்ததும் அந்த கோட்டை, மாநிலங்கள் பிரிக்கபட்டபின் இன்றுவரை தமிழக தலைவிதி எழுதபடுவது எல்லாம் அந்த கோட்டைதான், பலவகை விவாதங்ள், தலைவரின் சிறப்புரைகள்,சட்டங்கள், தீர்மானங்கள் என‌ இன்னும் பல சிறப்புகளுக்கு அடையாளம் அந்த கோட்டை.

இத்தாலியின் வெனிஸ் போலவே திட்டமிட்ட நீர்வழிச்சாலையினையும் வெள்ளையர்கள் அமைத்திருக்கின்றார்கள், அந்த சென்னை அப்படித்தான் இருந்திருக்கின்றது, பின்னாளில் எல்லாம் நாசமாய் போய்விட்டது.

எதனை ஒழுங்காக பராமரித்தோம் நாம்?.

இந்த இடம் கோட்டைக்காக வாங்கும் பொழுதும், அதில் பெரும் லண்டன் கனவான்கள் ஆளும்பொழுதும், நிச்சயம் திருக்குவளை வாரிசும், மைசூர் வாரிசும் வந்து சண்டையிடும் என்றெல்லாம் நினைத்திருப்பார்களா? விதி எப்படி எல்லாம் ஆடுகின்றது.

அதில்தான் ராபர்ட் கிளைவ் வசித்தான், அதன் மாடத்திலிருந்து அவன் தேநீர் பருகுவானாம், அப்பொழுது சென்னை பகுதி நதிகள் எல்லாம் ஓடங்கள் ஓடுமாம், அதில் அவனுக்கு பிடித்தமான நதியில் அவன் படகோட்டுவானாம்

அதில் ஒன்று கூவம், இன்று நாறி கிடக்கும் கூவம், விடுங்கள். அக்காலம் அவ்வளவு அழகாய் இருந்திருக்கின்றது.

நிச்சயமாக சென்னைக்கு திருப்புமுனை கொடுத்ததே அந்த கோட்டைதான், அது அமையாவிட்டால் சென்னை இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது, , அசுரவேகத்தில் கிட்டதட்ட 60 கிராமங்களை விழுங்கி இன்று பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது, இன்று கிட்டதட்ட 80லட்சம் மக்கள் வாழும் நகரம், ஆசியாவின் குறிப்பிடதக்க நகரங்களில் ஒன்று

பகை நாடுகளின் பெரும் இலக்குகளில் சென்னையும் ஒன்று, சில நாடுகளின் ஏவுகனைகளின் நுனி சென்னை நோக்கியே திருப்பபட்டு நிற்கிறது. அது அவ்வாறாக இருப்பதில் கொழும்பிற்கும் மகிழ்ச்சி.

சென்னையும், அதற்கு காரணமான ஜார்ஜ் கோட்டையும் பல ஆபத்துக்களை கடந்துள்ளன், பாண்டிச்சேரி பிரென்ஞ் கவர்னர் டூப்ளேவிற்கு அதன் மீது ஒரு கண், பதிலுக்கு வெள்ளையர் அவர் முதுகை உடைத்துவிட்டார்கள், ராபர்ட் கிளைவ் எத்தனையோ போர்களுக்கு அங்கிருந்துதான் திட்டமிட்டான், உத்தரவு கொடுத்தான்.

மாவீரன் மருதநாயகம் பிரெஞ்ச் படைகளை விரட்டி அதனை மீட்டு தான் தன் வீரத்தினை நிரூபித்துகாட்டினான்.

முதலாம் உலகப்போரின் போது உலகை மிரட்டிய ஜெர்மனியின் நீர்மூழ்கி எம்டன் சென்னை கோட்டையை குறிவைத்து தாக்கியது,(அந்த கல்வெட்டு இன்றும் உண்டு), முதலும் கடைசியுமாக சென்னை மீது நடந்த ராணுவ தாக்குதல் அது, அதன் பின்னர் ஆபத்தில்லை

ஆனால் ஆபத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் பொழுது எழுந்தது, சென்னை எங்களுக்கு சென்னை வேண்டும் அல்லது சண்டிகர் போல பொதுநகராக இருக்கலாம் என போராடினர் தெலுங்கர்கள், கிட்டதட்ட அவர்களுக்கு சாதகமான சூழல், அன்றேல்லாம் ஐதராபாத் சிறு நகரம், விசாகபட்டினம் தூத்துக்குடி அளவிற்கே இருந்தது, விடமாட்டோம் என பிரளயம் செய்தனர் தெலுங்கர்கள்.

“எங்க இருந்த என்ன இந்தியாவில தான இருக்குண்ணேன்??” என காமராஜர் சிந்திக்க, “வெங்காயம் அப்படியும் அது திராவிடநாட்டிலதான இருக்கு” என்று பெரியாரும் ஒதுங்கிகொண்டனர்,அண்ணாவோ பணம் படைத்த பெரியாரை எதிர்த்து என்ன செய்ய என சிந்தித்த காலம், கருணாநிதி அன்று கலைஞர் அல்ல, ஆனால் அறியபட்ட வசனகர்த்தா, அவர் என்ன ஆகபோகின்றார் என்பது அவருக்கே தெரியாத காலம், போராட யாருமில்லை,

ஒரே ஒருவரை தவிர அவர் ம.பொ.சிவஞானம், தமிழரசு கட்சி நிறுவணர்

அண்ணன் சீமான் தான் முதலில் தமிழர் கட்சி கண்டவர் ,ஆதித்தனார்தான் வழிகாட்டி என யாராவது சொன்னால் அவர்களை அப்படியே ராஜபக்ஸேவிடம் ஒப்படைப்பது அவருக்கு நலம், அரசியலையாவது கற்பிப்பார்.

பலர் தமிழியக்கம் நடத்தினர் அவரில் சிலப்பதிகாரத்தை கரைத்து தெளித்த “சிலம்பு செல்வர்” என அறியபட்ட ம.பொ.சி பிரசித்தம், அவரை விட அவர் மீசை பிரசித்தம், அண்ணாவின் மயக்கும் தேன் தமிழில் சற்று மங்கிபோனவர் ம.பொ.சி.

ஆனால் தமிழரின் எல்லையை காத்த போராட்டம் இவரால் மட்டும்தான் நடைபெற்றது, அவரின் எழுச்சியான போராட்டத்தில் சென்னை தமிழகத்திற்கு வந்தது, திருத்தணியும் வாங்கிகாட்டினார், திருப்பதி முதல் திருஅனந்தபுரம் வரை தமிழரின் எல்லை என முழக்கமிட்டார்.

திரு என்பது தமிழ்பெயர் அது தமிழனுக்கே சொந்தமான அடையாளம், என ஆதாரத்தோடு அவர் முழங்கிய முழக்கம் கொஞ்சமல்ல‌

திருப்பதியும் உங்களுக்கா என தெலுங்கள் பொங்கி தற்கொலை முயற்சி வரை சென்றனர், “தேவுடா” தமிழகம் வர மறுத்தார் அங்கே தங்கிவிட்டார், கொஞ்சம் தமிழகம் போராடியிருந்தால் திருப்பதி கிடைத்திருக்கும்,இந்து அறநிலையதுறை அமைச்சருக்கு போரே நடந்திருக்கும்.( பல ஊழலும் நடந்திருக்கும் ), கிடைக்கவில்லை அதுவும் நல்லது.

தந்திரமாக கேரளம் முந்திகொண்டு திருவனந்தபுரம் எங்கள் தலைநகர் என்றது, நிச்சயமாக அன்று அது அவர்கள் தலைநகராக இருக்க சம்பந்தமில்லாதது, அரசியலில் முந்திகொண்டார்கள், அதுவும் பரவயில்லை, இல்லை என்றால் பதமநாபசாமி கோயில் என்ன ஆகியிருக்குமோ, சுரங்கம் அமைத்து தூக்கியிருப்பார்கள், மணலையே விடாத தமிழகம் இது.

சினிமா ஸ்டூடியோக்கள் கூட சென்னையை நம்பாமல் சேலத்தில்தான் அக்காலத்தில் கட்டபட்டன, முதன் முதலில் துறைமுகமாக மட்டும் அறியபட்ட சென்னை கொஞ்சம் கொஞ்சமாக எல்லா தொழிலின் சந்தையாக‌ மாறிற்று, இன்று சென்னையின் நிலை வேறு, தமிழகத்தின் எல்லா கிராமங்களிலிருந்தும் அதனோடு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ தொடர்பில்லாதவர் யாருமில்லை.

மக்கள் தொகை பெருக,பெருக சில பிரச்சினைகளும் பெருகும், அதனில் சென்னை சிக்கி இருக்கலாம், ஆனால் சில சிறப்புக்கள் சென்னைக்கு எப்போதும் உண்டு.

சாதிய கலவரமோ, இல்லை மத,இன‌ ரீதியான வன்முறைகளிலோ சிக்காத இந்திய நகரங்களில் சென்னையும் ஒன்று, கல்கத்தா,மும்பை என பெருந்தீ எழும்பி தாண்டவமாடிய நகரங்கள் உண்டு, சென்னை அப்படியல்ல, அதன் மக்களும் அப்படியல்ல,

இதுதான் சென்னை இக்காலம் வரை பதித்திருக்கும் முத்திரை.
மயிலாப்பூர் கோயில், கபாலீஸ்வரர் ஆலயம், சாந்தோம் ஆலயம், தாமஸ் மலை,விக்டோரியா ஹாலும் அதிலுள்ள ரவிவர்மனின் ஓவியங்கள், எழும்பூர் மியூசியம், பல தலைவர்கள் வாழ்ந்த இல்லம், விவேகானந்தர் தங்கிய இல்லம், ரோஜா முத்தையா நூலகம், அழகான கடற்கரை, சமாதிகள், ரயில் நிலையங்கள், காமராஜரை தவிர எல்லா முதல்வர்களையும் தமிழகத்திற்கு தந்த ஏ,வி.எம் ஸ்டூடியோ, என இன்னமும் ஏராள பெருமை கொண்டிருந்தாலும்

முதல் அடையாளம் அந்த கோட்டையே.

அந்த கோட்டை இன்று ராணுவத்திற்கு சொந்தமானது, தமிழக அரசிற்கு தனியாக தலமைசெயலகம் வேண்டும் என்று கலைஞர் ஒரு கட்டடம் கட்டினார், ஆயிரம் சர்சைகள் இருந்தாலும் கட்டடம் அமைப்பதிலும், சிலைகள் அமைப்பதிலும் கலைஞர் எடுத்துகொள்ளும் முயற்சி வியப்புக்குறியது, அது பாஞ்சாலங்குறிச்சி கோட்டையோ?, வள்ளுவர் கோட்டமோ? அல்லது சிலையோ? அவரின் அந்த அக்கறை பாராட்டதக்கது.

காலமாற்றமோ அல்லது ஏதும் நிர்பந்தமோ மாமல்லபுரம் கடற்கரை கோயில் போல ஒரு அழகான கட்டடம் நவீன மாடலில் அமைப்பார் என எதிர்பார்த்திருந்த பொழுதுதான் இந்தியன் ஆயில் எண்ணெய் குடோன் மாடலில் ஒன்றை கட்டினார்கள், உறுதியாக அவர் முழுமனதோடு அதனை ஏற்றிருக்கமாட்டார், அவரின் ரசனை அப்படி அல்ல.

அதுதான் இனி தமிழக தலையெழுத்தினை நிர்ணயிக்கும் பாற்கடல் என தமிழக மக்கள் நினைக்க ஆட்சி மாறியது, முன்னாள் எதிர்கட்சி என்றாலும் எதிராகத்தான் செய்யவேண்டும் என்பதல்ல அதிரடியாகவும் செய்யலாம், மறுபடியும் சென்னை கோட்டை இழந்த ஆட்சிபீடத்தினை பெற்றது.

அங்கு தமிழத்திற்கான திட்டங்களை எப்படி தீட்டுகின்றனர் என தெரியவில்லை, மிக‌ நன்றாக நடக்கிறது என தெரியவேண்டுமானால் ஜெயா டிவி பார்க்கலாம், பெரும் ஜனநாயக படுகொலை நடக்கிறது என்று பார்க்கவேண்டுமானால் சன் டிவி, கேப்டன் டி.வி பார்க்கலாம்,

இன்று திருவிழா கொண்டாடும் தமிழக தலைநகர மக்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம், வெளிநாடுகளில் ஒருவன் தமிழரென்றால் அவர்கள் கேட்கும் கேள்வியே “உனக்கு சென்னையா?” என்பதுதான்.

இது நல்ல துறைமுகம் என கண்ட போர்த்துகீசியரும், கோட்டை அமைத்து சென்னைக்கு அடிகோலிய பிரிட்டிசாரும், அதனை குறிப்பிட்ட இடமாக மாற்றிய ராபர்ட்கிளைவும் (கிளைவின் திருமணம் சென்னை கோட்டையில்தான் நடந்தது), அதனை மாதிரி நகரமாக திட்டமிட்டு கொடுத்த லார்டு ரிப்பனும், பின்னாளில் அதனை தமிழரின் தலைநகராக மாற்றி தந்த ம.பொ.சியும் ஏனோ மனதில் வந்து வந்து போகின்றார்கள்.

இவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் சென்னையோ, இல்லை சென்னையில் தமிழர்களோ ஏது??

ரியோ 2016 ஒலிம்பிக்ஸ் : நிறைவு பெற்றது….

Stanley Rajan's photo.

கிட்டதட்ட 2 வாரங்களாக நடந்த ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது, வளரும் நாடுதான், ஆனாலும் உலககோப்பை காலபந்து, ஒலிம்பிக் போட்டி என வரிசையாக நடத்தி அசத்தி இருக்கின்றது பிரேசில். அடுத்த ஒலிம்பிக் ஜப்பானில் அவர்கள் ஒலிம்பிக் கொடி வாங்கிசென்றாகி விட்டது.

ஒலிம்பிக் என்பது எங்களிடம் உடல் ஆரோக்கியமும், போராட்டகுணமும் நிறைந்த சமூகம் இருக்கின்றது என கிரீஸ் உலகிற்கு சொல்ல தொடங்கிய போட்டிகளின் தொடர்ச்சி, நவீன ஒலிம்பிக்கும் அதனைத்தான் சொல்கின்றன.

பொதுவாக பலமான நாடுகள் என கருதபடுபவை அதனை ஒலிம்பிக்கிலும் காட்ட நினைக்கும், நாங்கள் யார் தெரியுமா? என காட்டுவார்கள்.

அதில் 100 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா இந்த ஒலிம்பிக்கிலும் முதலிடம் பிடித்தது, பிரிட்டன் சுதாரித்து எழுந்து இரண்டாமிடம் பிடித்தது

பெரும் சிக்கலில் குறைவான வீரர்களையே அனுப்ப முடிந்த ரஷ்யா 4ம் இடம் பெற்று அசத்தியிருக்கின்றது, முழு வீரர்களும் அனுப்பபடும் பட்சத்தில் அது முதல் மூன்று இடங்களுக்குள் பிடித்திருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

Stanley Rajan's photo.

ஜெர்மன் 5ம் இடம், ஜப்பான் 6ம் இடம், பிரான்ஸ் 7ம் இடம், தென் கொரியா, இத்தாலி, ஆஸ்திரேலியா என அடுத்த இடங்களை பிடித்து முதல் 10 இடங்களை அடைந்தன‌

சில போட்டிகளில் மானமிக்க மோதல் தெரிந்தது, அமெரிக்க ஈரான், அமெரிக்கா ரஷ்யா, பிரிட்டன் பிரான்சு, அமெரிக்க கியூபா, சீனா ஜப்பான், என நாடுகள் மோதும் போது களம் அதிரத்தான் செய்தது

அப்படியே ஒரு இந்தியனும் பாகிஸ்தானியும் இறுதிசுற்று மல்யுத்தமோ, ஜூடோவோ, குத்து சண்டையிலோ மோதியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இதெல்லாம் நடக்காது, சோம்பேறிகளின் விளையாட்டில் வீரம் காட்டுவோம்.

இந்தியாவிற்கு 67ம் இடம், மொத்தம் பதக்க பட்டியலில் வந்த நாடுகள் 78. ஆக நமக்கு பின்னாலும் 11 நாடுகள் இருக்கின்றன, பெரும் நிம்மதி

ஆனால் அந்த 11 நாட்டிலும் பாகிஸ்தான் இல்லை, வங்கதேசம் இல்லை, இலங்கை இல்லை, எவ்வளவு ஆனந்தம்?

இந்தியா 100 தங்கம் வென்று முதலிடம் வந்திருந்தாலும் இந்த மகிழ்ச்சி கிட்டுமா கிட்டாது, பாகிஸ்தானுக்கு பதக்கமில்லை என்பது எப்படிபட்ட செய்தி, தேன் வந்து பாயுது காதினிலே பாயட்டும்.

எப்படியோ சாக்ஷியும், சிந்துவும் மானம் காத்தார்கள், தீபா கமார்க்கர் அசத்திவிட்டுத்தான் வந்தார். வாழ்த்துக்கள்

வராது வந்த மாமணியாக இங்கும் சிந்து, சாக்ஷி, தீபா என சிலர் சாதித்தாலும் அங்கு தமிழர்களின் தேடல் எப்படி இருக்கின்றது?

அவர் என்ன சாதி? ம்ம்ம்.. எங்கள் சாதி. அட பரிதாபத்திற்குரிய இந்தியாவே, இதற்கா அவர்கள் பதக்கம் வாங்கினார்கள்?, சாதி பெருமை காட்டவா அவர்கள் உயிரை பணயம் வைத்து போராடினார்கள்?

1000 ஆண்டுகள் ஆனாலும் உங்கள் சாதி ஆராய்ச்சி மாறாது, உங்களால் இந்நாடு ஒரு நல்ல விஷயமும் பெறபோவதில்லை

சரி அவர்களை விடுங்கள், மாநிலம் கடந்து சாதி ஆராய்சியில் இறங்கிவிட்டார்கள், விரைவில் அது நாடு கடக்கலாம், நவாஸ் ஷெரிப் எங்கள் சாதி என எவனாவது சொல்லும்போது வாங்கி கட்டுவான். அவர்களை விடுங்கள்

நம்மை போலவே கனவோடு இருந்த நாடுகள் எப்படி பதக்க கனவினை நனவாக்கின.

எப்படி பல நாடுகள் சாதித்தன, ஆப்ரிக்க நாடுகளான கென்யாவும், எத்தியோப்பியாவும் நீண்ட தூர ஓட்டத்தில் அசாத்தியமாக சாதிக்கின்றன, சீனா கேட்கவே வேண்டாம் சமீப 25 ஆண்டுகாலமாக ஒலிப்பிக்கில் அவர்கள் சாதனை வியப்புகுரியது

ஆப்ரிக்கர்கள் சொல்வது இப்படி, எமது மக்களிடம் திறமை இருக்கின்றது, வெளிநாட்டு பயிற்சியாளர்களை வரவழைத்து நல்ல பயிற்சி கொடுத்தோம், அவர்கள் சாதிக்கின்றார்கள்.

சீனா 30 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டில் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை, ஆனால் பின்னாளில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை குவித்து பயிற்சி அளித்தது, அவர்களின் உடல்வாகு எதற்கெல்லாம் சரி வருமோ அதிலெல்லாம் சாதித்தார்கள், தென் கொரிய நிலையும் அப்படியே.

அதாவது நல்ல பயிற்சியாளர்களை இறக்குமதி செய்தின்றார்கள், பெரும் பயிற்சி அளிக்கின்றார்கள், சாதிக்கின்றார்கள்.

எமது நாட்டில் பலமாக சமூகம் இருக்கின்றது என அன்று கிரேக்கர்கள் சொன்னதை இந்நாடுகள் இன்று பெருமையாக உலகிற்கு சொல்கின்றன, நாங்களும் பலமானவர்கள். பயிற்சி மட்டும் இல்லை, அதனை பெற்றோம், உயர்ந்தோம்.

நம்மிடம் திறமை இருக்கிறதா என்றால் நிறைய இருக்கின்றது, ஆனால் பயிற்சி? உலகதரமான பயிற்சி? நிச்சயம் இல்லை. அவர்கள் பெரும் வல்லுனர்களை வரவழைக்கின்றார்கள்.

நாம் வெளிநாட்டில் இருந்து யாரை வரவழைக்கின்றோம்

சன்னி லியோன், எமி ஜாக்சன், கத்ரீனா கைப், ஜாக்குலின் பெர்னாண்டஸ்

பின் எது வளரும்?

சினிமாதான் வளரும், அதுதான் வளர்ந்துகொண்டிருகின்றது, இந்த இறக்குமதிகளின் திறமையினால் இன்னும் எதெல்லாம் வளருமோ தெரியவில்லை

செவாலியர் கமலஹாஸன்!

செவாலியர் என்றால் பெருமையான‌ மரியாதைக்குரியவர் என பொருள்படும் பிரெஞ்ச் வார்த்தை, மாவீரன் நெப்போலியன் காலத்தில் ஏற்படுத்தபட்ட விருது அது. அவன் முழுக்க முழுக்க ராணுவ ஆட்சியாளர், ராணுவத்தில் சிறப்பான பணிகளை செய்ததற்காக அவன் அப்படி சில விருந்துகளை வழங்கிகொண்டிருந்தான் அதிலொன்று செவாலியே.

திப்புசுல்தான் கொஞ்சகாலம் இருந்திருந்தால் அன்றே நெப்போலியன் வழங்கி இருப்பார், ஆனால் விதி முந்திகொண்டது.

பின்னாளில் பிரென்ச் அரசாங்கம் அதனை உலகில் சில துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தது, அப்படி பல இந்தியர்களும் வாங்கிகொண்டிருந்தே இருந்தனர், பாண்டிச்சேரி வாசிகள் முதலில் வாங்கினர்

Stanley Rajan's photo.

பின் டாடா வாங்கினார், சத்யஜித்ரே வாங்கினார், அதன் பின் சிவாஜி என பலர் வாங்கினர், இப்பொழுது கமலஹாசன் முறை.

சில தென்னகத்து கல்வி தந்தைகள் என தங்களை தாங்களாகவே அழைத்துகொண்ட சிலர், செவாலியே பட்டங்களை முன்பு சூட்டிகொண்டனர், அப்படி அவர்களுக்கு பிரெஞ்ஞ் அரசால் வழங்கபட்டதாக தெரியவில்லை

கள்ள நோட்டு போல, கள்ள விருதுகளும் அவர்களாக அடித்திருக்கலாம், தொழிலதிபர் உலகத்தில் இதெல்லாம் சகஜம், அவர்கள் ஆஸ்கர் விருதினை தங்களுக்கு அடிக்காதவரை சர்ச்சையில்லை.

Stanley Rajan's photo.

கமலஹாசனை பொருத்தவரை அவர் முழுக்க முழுக்க சினிமா விருதுகளுக்கு தகுதியானவர், அவரை தவிர இன்னொருவருக்கு கொடுத்தால்தான் அது சர்ச்சையே, இது மகா பொருத்தமானது

பொதுவாக இந்திய சினிமா விருதுகளிலும் அரசியல் உண்டு, எம்ஜிஆர் சிறந்த நடிகர் என்பார்கள், விருது கொடுப்பார்கள், சிவாஜியினை கண்டுகொள்ளமாட்டார்கள். அப்படி எம்ஜிஆர் என்ன நடித்தார் என தேடினால் ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.

அக்காலத்தில் சிறந்த நடிப்பினை வெளிபடுத்திய ரஜினிக்கு அப்பொழுது விட்டுவிட்டு இப்பொழுது அவர் வாக்கிங் போகும் படங்களுக்காக பத்ம பூஷன் வரை கொடுப்பார்கள்.

பிரான்ஸ் அரசு சிவாஜிக்கு செவாலியே விருது கொடுத்தப்பின்பே இந்திய படீரென விழித்து அவருக்கு ஏதோ ஒன்றை கொடுத்து கவுரவித்தது, இனி கமலஹாசனுக்கும் அது நடக்கலாம்

எப்படியோ தமிழ் சினிமாவின் பெரும் வாழும் அடையாளம் கமலஹாசன், சினிமாவிற்காக வாழ்வினை அர்பணித்துள்ள வெகுசில நடிகர்களில் அவரும் ஒருவர். இமேஜ் பற்றியெல்லாம் இல்லாமல் கிடைத்த வேடங்களில் தன்னை நிறுத்தியே வளர்ந்தவர்

பொதுவாக அவர் படங்களை பார்ப்பதற்கு நுண்ணிய ரசனை வேண்டும், சில தரவுகள் வேண்டும். அவற்றை எல்லாம் கொண்டு அவர் படங்களை ரசித்தால் ரசித்துகொண்டே இருக்கலாம்.

சரி அவருக்கு செவாலியே கிடைத்துவிட்டது, கபாலிக்கு ஏன் செவாலியே கிடைக்கவில்லை (கபாலி வந்து மலேசிய அரசின் டத்தொ விருதிலும் மண் அள்ளி போட்டாயிற்று, உபயம் ரஞ்சித்) எவனாவது புலம்பினால் அவர்களுக்கான பதில் ஒன்றேதான்.

அது பிரெஞ்ச் அரசாங்கம், வருடா வருடம் கேன்ஸ் விழா நடந்தி உலகின் சிறந்த படங்களை, நடிகர்களை கண்டறியும் நாடு, அவர்களுக்கு எது யாருக்கு பொருத்தம் என தெரியும் கொடுத்திருக்கின்றார்கள்.

(டாகடர் கிருஷ்ணசாமி , சில பிராமண அமைப்புகள் இன்னபிற அழிச்சாட்டியங்கள் எப்படி பிரென்ஞ் அரசினை கண்டிக்கபோகின்றார்களோ தெரியவில்லை)

பெரும் விருதுதான், ஒரு விழா நடத்தபடவேண்டும்தான், ஆனால் நடக்குமா என்றால் அதுதான் தமிழ்நாடு, இன்னும் கொஞ்சநேரத்தில் முரசொலியின் முகநூல் பக்கத்தில், “களத்தூர் கண்ணம்மா படத்தில் நான் கொஞ்சிய செல்லமே, செவாலியே….” என ஒரு பாராட்டு வரும், அங்கே புகையும்………..விடுங்கள்

சினிமா அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் தமிழகம் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.


 23-08-2016

கலைஞர் எப்படி கமலஹாசனை வாழ்த்துவார் தெரியுமா? “களத்தூர் கண்ணம்மாவில் ….” என தொடங்குவார் என எழுதியிருந்தோம்

சொல்லி வைத்தாற்போல அவர் அப்படியே வாழ்த்தினை தொடங்கி இருக்கின்றார் 🙂, நாம அவரின் அரசியலை விமர்சிப்போமே தவிர மற்றபடி கலைஞர் பெரும் ரசனைக்குரியவர்.

சரி இப்பக்கம் கலைஞர் வாழ்த்திவிட்டார், அப்பக்கம் என்ன ஆகும்? இனி தெரியும்

எனினும் நடிகர் சங்கமோ இதர முதல்வர் ஜால்ரா அமைப்புக்களோ இன்னும் வாய்திறக்கவில்லை என்பது கவனிக்கதக்கது.

ரஜினிகாந்த் வாழ்த்தியிருக்கின்றார், வாழ்த்தியே அரசியல் செய்வது ஒரு கலை, அதனை ரஜினி நன்றாக பயின்றிருக்கின்றார்

யாரை பார்த்தாலும், எந்த நல்ல செய்தியினை கேட்டாலும் வாழ்த்திவிட்டு வீட்டு கதவினை சாத்திகொள்வது அவரின் ஸ்டைல்

செவாலியே கமலஹாசனுக்கும் அதனைத்தான் செய்திருக்கின்றார்.