மொபைல் போன் மோகினி : ‘போக்கி(ரி)மான் கோ’

Image may contain: outdoor

இது மொபல் போன் யுகம், எல்லோர் கையிலும் ரேகை போலவே நிச்சயமாக‌ போன் இருக்கின்றது. இதனை குறிவைத்தே வங்கி முதல் ஐ.டி கம்பெனிகள் வரை வியாபாரம் செய்துகொண்டிருக்கும் காலம் இது.

மொபைல் போன் இல்லா வாழ்க்கை இனி மின்சாரம் இல்லா வாழ்க்கை போல சாத்தியமில்லை, அத்தனை அவசியமாக போய்விட்டது, அது இல்லை என்றால் வாழ்க்கை இயங்காது கேஸ் சிலிண்டர் வரவு முதல் வங்கிகணக்கு வரை அதன் மூலமே நடந்துகொண்டிருக்கின்றது.

நல்ல விஷயம் இருந்தால் இன்னொரு பக்கமும் வரும் அல்லவா, இதில் பல கம்பெனிகள் விளையாட்டு மென்பொருளை உருவாக்கி காசுபார்த்தன, அந்தியில் சந்தியில் ஓடி விளையாட வேண்டியவர்களை எல்லாம் ஒரு மூலையில் முடக்கி வைத்த பெருமை அவைகளுக்கு உண்டு, தடித்த கண்ணாடியுடன் அவைகளுடனே இத்தலைமுறை மல்லுகட்டிகொண்டிருக்கின்றது

கோப பறவைகள் (ஆங்கிரி பேர்ட்), நொறுக்கு மிட்டாய் (கேண்டி கிரஷ்) சீசன் முடிந்து இப்பொழுது சீசன் பொக்கிமான் கோ, அதன் தமிழ்பதம் “முடிந்தால் இத‌னை பிடி” எனும் பொருளில் வரும்.

மற்ற போன் விளையாட்டு சிக்கல் இல்லை, அமர்ந்த இடத்திலிருந்து விளையாடலாம், அலுவலகம் என்றாலும் கடமை ஆற்றுவது போல முகத்தில் போலி கவனத்துடன் விளையாடலாம். ஆனால் பொக்கிமேன் கோ விவகாரம் பிடித்தது, நீங்கள் நடந்தே ஆகவேண்டும்.

புதிதாக வந்த விளையாட்டு அல்ல, கிராமங்களில் ஓடி ஓடி கோழி பிடிப்பது, எருக்கலை வெடித்தால் அந்த தும்பினை ஓடி பிடிப்பது, ஆடி மாதங்களில் வேப்பங்கொட்டை சேகரிப்பது, தேடிபிடித்து தேன் எடுப்பது, அடுத்தவன் வீட்டில் ரகசியமாக கொய்யா திருடுவது போன்ற கிராமத்து விளையாட்டின் மொபைல் வெர்ஷன் இது அவ்வளவுதான்.

ஆனால் சிக்கல் எதில் வருகின்றது? காய்ந்து கிடக்கும் கண்மாயில் ஏதும் பொறுக்கினால் ஆபத்தில்லை, திறந்த வெளி யாரும் இல்லை, மேலே பறக்கும் காக்கா தவிர ஏதும் வராது. ஓடலாம் சாடலாம்.

நகரம் பரபரப்பானது, போனையே பார்த்துகொண்டிருப்பவர்களுக்கு சற்று தள்ளி ஏதோ தும்பு இருப்பதாக காட்டுகின்றது, ஓடுகின்றார்கள். தும்பு இருக்கும் இடத்தின் வழியினை போனே காட்டுவதால் அதனை பார்த்துகொண்டே ஓடுகின்றார்கள்

விளைவு மாடியில் இருந்து விழுகின்றார்கள், சாலையில் லாரிக்கு அடியில் விழுகின்றார்கள், எங்காவது மோதிகொள்கின்றார்கள். ஒரு சிலர் தடை செய்யபட்ட பகுதிகளுக்குள் தும்பு இருக்கிறது என்று ரகசியமாக சென்று மாட்டிகொள்கின்றார்கள்.

இப்படி எல்லா மக்களும் சென்று முட்டிகொண்டிருந்தால் என்ன ஆகும், சில உயிரிழப்புக்களும் நடக்க தொடங்கிவிட்டன. சில நாடுகள் இதிலிருக்கும் பாதுகாப்பு ஆபத்தினை புரிந்துகொண்டன, நேற்று ஜப்பானில் ஒருவர் காலி, சாலையில் தும்பு பிடித்திருக்கின்றார்.

விளையாட்டு மயக்கத்தில் ஆபத்தான தடை செய்யபட்ட அணுவுலை வளாகம், நுழைந்தால் துப்பாக்கி சூடுபடும் கேந்திர முக்கியத்துவ பகுதிகளுக்குள் எல்லாம் தும்பு பிடிக்க செல்லுமளவு நிலமை சில நாடுகளில் மகா மோசம்.

நாடுகள் மெதுவாக விழிக்க தொடங்கின, இது ஜிபிஎஸ் நுட்பம் உள்ள விளையாட்டு, ஒரு பகுதிக்கு சென்றால் செயற்கைகோள் கட்டிபாட்டில் போன் வந்துவிடும் விளைவு, அங்கிருக்கும் வைஃபை வரை செயற்கைக்கோள் எடுத்து சம்பந்தபட்ட நாட்டிற்கு அனுப்பலாம். சென்சிட்டிவான விஷயங்களை திருடலாம், படமெடுக்கலாம். நவீன உலகில் தொழில்நுட்பத்திடம் சிக்கிகொண்டால் ஏதும் பாதுகாப்பில்லை

அதிரடியாக முதலில் இந்த விளையாட்டினை தடை செய்த நாடு ஈரான், விரட்டியே விட்டது. சும்மா சொல்ல கூடாது பெர்சியர்கள் தனி ரகம்தான்

அடுத்து ஒவ்வொரு நாடும் அறிவுரையில் இறங்கிவிட்டன, சில நாடுகள் கண்களை உருட்டுகின்றன, சில நாடுகள் கட்டுபாடுகளை மட்டும் விதிக்கின்றன‌

ஒரு விளையாட்டு சர்வதேச நாடுகளை அச்சுறுத்துவதை உலகம் இப்பொழுதுதான் பார்க்கின்றது, மக்கள் நலன் மட்டுமல்ல கூடுதலாக விஞ்ஞான ரீதியான தேசபாதுகாப்பு.

நானும் விளையாடி பார்த்தேன், வை கோ போல அங்கும் இங்கும் ஓடினேன், கலைஞர் போல சில இடங்களில் அமைதியாக இருந்தேன், சசிகலா புஷ்பா போல தலை மறவாக திரிந்தேன், தமிழிசை போலவே, ராகுல்காந்தி போலவே சில வீடுகளில் புகுந்துவிட கூட தும்பு அழைத்தது.

சிலர் வீட்டு வாசலில் நின்றேன், ஒரு மாதிரியாக பார்த்தார்கள். சில இடங்களில் கார் அருகில் நின்றபொழுது கார் திருட வந்தவனோ என நினைத்தார்கள், சில ரெஸ்டாரண்ட் பக்கம் தும்பு பிடிக்க சென்றபொழுது வலுகட்டாயமாக நூடுல்ஸ் கொடுக்க பார்த்தார்கள்.

சீமை சரக்கு கடைக்கு முன்னாலும் தும்பு இருப்பதாக காட்டிற்று, சென்று தும்பை மட்டும் பிடித்தேன், கடைக்காரர் ஒரு மாதிரி பார்த்தார், இவ்வளவு அருகே வந்துவிட்டு வாங்காமல் போகிறான், லூசா இருப்பானோ? என்ற ஓட்டம் அவர் பார்வையில் தெரிந்தது,

பஸ் நிலையத்தில் பஸ் அருகே சென்றேன், ஆனால் தும்புபிடித்துவிட்டு ஏறாமல் வந்துவிட்டேன், ஓட்டுனர் குழம்பி நின்றார்.

அது கூட பராவாயில்லை, ஏதும் ஏடாகூடாமன இடங்களில், அழகு தாய்லாந்து பெண்கள் குவிந்த பகுதிகளில் தும்பு இருந்து பிடிக்க சென்றால் என்ன ஆவது? ஆனால் தும்பு இருப்பதாக போன் காட்டுகின்றது, செல்லலாம்

ஆனால் தும்பு பிடிக்கத்தான் சென்றேன் என்றால் நம்பவா செய்வார்கள்? அதுவும் என்னையா?

ம்ஹூம், வாய்ப்பே இல்லை.

உடனே அந்த விளையாட்டினை போனை விட்டு வெளியேற்றிவிட்டேன், அது வித்தியாசமாக மனதினை விளையாட்டிற்கு அடிமை ஆக்குகின்றது என்பது நிஜம். அதாவது யாரோ நம்மை கைபிடித்து அழைத்து செல்வது போல போன் நம்மை அழைத்து செல்கின்றது, அந்த மாய கரம் பின்னால் நாமும் நடக்கின்றோம்

சுற்றுபுறம், ஆபத்து, வாகனம், குழி எதும் அப்பொழுது கண்களுக்கோ சிந்தனைகோ வருவதில்லை, அதோ தெரிகின்றது தும்பு ஓடி சென்று பிடி அவ்வளவுதான். நிச்சயம் இது மொபைல் போன் மோகினி.

இந்தியாவில் நிலை எப்படி என தெரியவில்லை, டாஸ்மாக்கில் குடித்துவிட்டே லாரி, கார் என இயக்கி கூட்டத்தில் விடும் நாடு அது. இது என்ன கொடுமைகளை செய்ய போகின்றதோ தெரியவில்லை

ஆனால் நிச்சயம் இப்படி சினிமா வரும், நாயகன் போக்கிமான் விளையாடி நாயகி வீட்டு காம்பவுண்டுக்குள் செல்கிறான், அல்லது எங்காவது விளையாடிகொண்டே அவள்மீது முட்டுகின்றான் காதல் வெடிக்கிறது, அல்லது விளையாடிகொண்டே லாரியில் விழப்போகும் ஹன்சிகா அல்லது தமண்ணாவினை ஹீரோயினை தனுஷ் அல்லது ஜெயம்ரவி காப்பாற்றுகின்றார், அடுத்தால் டூயட்..,

அல்லது மும்பை கடற்கரையில் தும்பு பிடிக்க போய் நயன் மீது பிரபுதேவா முட்டுகின்றார், பிளாஷ்பேக் ஒப்பன், அடுத்த கதை ரெடி.

சிம்பு படமென்றால் அது வேறு மாதிரி, யாரையாவது பழிவாங்கவே அவர் விளையாடுவார்

கட்சியினர் விளையாண்டால் இன்னும் காமெடி, ரத்த அணுக்கள் கோபாலபுர பக்கமும், உடன் பிறப்புக்கள் போயஸ் கார்டன் பக்கமும் செல்லும் ஆபத்து உண்டு, கோபாலபுரத்திற்கு ஏதும் பிரச்சினை இல்லை, “தும்போடு 4 சமஉ பிடித்து வரும் சாமார்த்தியம் உள்ளவன் தம்பி..” என அது பாராட்டும்.

ஆனால் கார்டன் அப்படி அல்ல, விளையாட்டுக்கு தும்பு பிடிக்க போனாலும் அந்த பக்கம் எப்படி செல்லலாம் என கட்சிவிட்டே டிஸ்மிஸ் செய்துவிடும். தெற்கே எவனாவது சசிகலா புஷ்பா வீட்டு பக்கம் தும்பு பிடிக்க சென்றான் என்றால் அவ்வளவுதான் தீர்ந்தான்.

வை.கோவிற்கு பிரச்சினை இல்லை பல நடைபயணங்கள் நடந்ததால் அவர் எங்கும் தும்பு பிடிக்ககலாம், ராமதாஸ் கட்சியினர் வன்னியசாதியினர் வாழும் இடங்களில் மட்டும் தும்பு பிடிப்பர். எங்க ஏரியாவுக்குள் “நாடக தும்பு” பிடிக்க வருகின்றார்கள் என அவர் அறிக்கை விடும் ஆபத்தும் உண்டு

தமிழக காங்கிரசில் கோஷ்டி தாண்டி தும்பு பிடிக்க சென்றால் வந்துவிடும் வம்பு.

அங்கிள் சைமன் போன்றவர்கள், நிச்சயம் கச்ச தீவிற்கு அப்பக்கம் தும்பு இருந்தால் மட்டுமே விளையாடுவார், சந்திரகுமார் கோஷ்டி, பண்ருட்டி ராமசந்திரன் கோஷ்டி தும்பு பிடிக்க தன்னை மறந்து தேமுதிக அலுவலகம் சென்று கேப்டன் பார்வையில் பட்டால் மகா சிக்கல்.

ராமகோபாலன் போன்ற காவிகள் நிச்சயம் நாங்கள் மசூதி பக்கம்தான் தும்பு பிடிப்போம் என அழிச்சாட்டியம் செய்வர்.

இந்தியாவில் அந்த விளையாட்டு என்னென்ன காமெடிகள் செய்யபொகின்றது என இனிதான் தெரியும்.

சும்மாவே ஆயிரம் சுவாரஸ்ய கொடுமைகள் உள்ள நாடு, சாலை போக்குவரத்து முதல் மக்கள் இருக்கும் இடமெல்லாம் குழப்பம் அதிகம்

இதில் போக்கிமேனும் கையுமாக கிளம்பிவிட்டார்கள் என்றால், என்னென்னவெல்லாம் நடகுமோ?

இந்தியா எப்படி இவ்விளையாட்டை எதிர்கொள்கிறது எனபார்ப்போம், காரணம் 3ஜி 4ஜி வேண்டும், சர்வர் பிரச்சினை என பல பிரச்சினைகள் உண்டு, ஒருவேளை சரியாக வந்துவிட்டால் உடனே இந்தியா வரவேண்டும்

வந்து ஜெயபிரதா வீட்டினை சுற்றி சுற்றி தும்பு பிடிக்கவேண்டும், அல்லும் பகலும் அதனை சுற்றி சுற்றி தும்பு பிடித்து, ஒரு முறையாவது அவரை பார்த்துவிட முடியாதா? 🙂

நம்பிக்கைதான் வாழ்க்கை

One thought on “மொபைல் போன் மோகினி : ‘போக்கி(ரி)மான் கோ’

 1. இந்த ‘போக்கி (ரி) மான் கோ’ அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் மட்டும் கூகுள் ப்ளேயிலிருந்து தரவிரக்கம் செய்து விளையாட முடியும்.

  என்னவோ வர்ட்சுவல் ரியாலிட்டி விளையாட்டாம் .

  இந்தியாவிற்கு இன்னும் நுளையவில்லை.

  எப்படியோ இதை நானும் இணையதளத்தில் இருந்து சுட்டு விளையாடிப் பார்த்தேன்.

  பாஸ் சொன்ன மாதிரி , நடக்கும் போது விளையாடும் விளையாட்டு.

  நம்ம ஊரில் இதை சாலையில் ஆடினால் ஊர்தியில் அடி பட்டு அமரர் ஊர்தியில் போக வேண்டியதுதான்.

  ஜல்லிக்கட்டு விளையாடும் வீரத் தமிழனுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டா என்று நினைத்தால் , இதோ இணைப்பு முகவரி :

  https://drive.google.com/file/d/0B0_FFtnIeL2fdWdZak5tcTY5X28/view?usp=drivesdk

  என் கூகுள் ட்ரைவில் சேமித்தது.

  ஆன்ட்ராய்ட் கைபேசிகளுக்கு மட்டும்.

  செயலியை நிறுவி விளையாடுங்கள்.

  உங்கள் கைபேசிக்கு ஒன்றும் ஆகாது .

  உங்களுக்கு ??

  நான் பொறுப்பல்ல!!!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s