குட்டைப் பாவாடை அணியாதீர்……

இந்தயாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குட்டைப் பாவடை அணியாதீர்கள் என்று மத்திய இணை மந்திரி மகேஷ் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.

ஆம், அவர்கள் எல்லோரும் நேர்ச்சை கட்டி, விரதம் இருந்தல்லவா இந்தியாவினை தரிசிக்க வருகின்றார்கள்?

இப்படிபட்ட அறிவிப்புகள் எல்லாம் மகா அவசியம்.

அவர்களின் பாதுகாப்பிற்காக இப்படி சொல்கிறாராம்.

இன்னும் அதிகமாக வெளிநாட்டு பெண்கள் முழுக்க மூடிவரவேண்டும் அல்லது மொட்டை அடித்து மகா பயங்கரமான கோலத்தில் வரவேண்டும் .

அப்பொழுதுதான் இனி இந்தியாவில் பாதுகாப்பு என சொன்னாலும் சொல்வார்.

பிரதமரோ இரண்டு இன்னிங்ஸாக‌ உலகெல்லாம் சென்று எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என காலில் விழுந்து அழைக்கின்றார்.

இவரோ, அப்படி அணிய கூடாது, இப்படி அணிந்தால் எங்கள் நாட்டில் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு நாட்டு பெயரினை கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

சும்மாவே இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடில்லை என சர்ச்சை உண்டு.

இவரோ அதனை ஒப்புகொண்டபடி அறிக்கைவிட்டு கொண்டிருக்கின்றார்.

மோடிக்கு சனி நிச்சயமாக சாதக கட்டத்தில் வலுவாக இல்லை. அது நாடாளுமன்றத்தில் அவர் அருகிலே சம்மணம் போட்டு அமர்ந்திருக்கின்றது.

ராதிகா மகள் திருமணம் ….

ராதிகா மகள் திருமணம் என இந்த பத்திரிகைகள் எல்லாம் செய்யும் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை, பயங்கர இம்சைகள்.

இதில் சில பத்திரிகைகள் ராதிகா-சரத்குமார் மகள் திருமணம் எனும் அளவில் பிய்த்து எழுதிகொண்டிருக்கின்றன, பிரபலங்கள் எல்லாம் வாழ்த்தினார்களாம். அதில் முன்னாள் நடிகர் சங்க தலைவரும், இந்நாள் நடிகர் சங்க தலைவரும் வந்ததாக தெரியவில்லை,

ஒருவேளை அவர்கள் பிரபலம் இல்லாதவர்களாக இருக்கலாம்.

என்ன பிரபலங்களோ தெரியவில்லை, விஜயகுமார் மகன் போதையில் கார் ஓட்டி போலிசாரிடமே மோதியிருக்கின்றார். அவரை பற்றியும் அடுத்த தகவல் இல்லை, வரவும் வராது. அவர் பிரபலம் அல்லவா? இந்திய சட்டம் எல்லாம் செல்லாது.

இதே இன்னொரு ஏழை இப்படி போதையில் சிக்கி இருந்தால் கொலைமுயற்சி என சொல்லி காவல்துறை கடமையினை நிலை நாட்டி இருக்கும்.

இந்த திருமணத்தின் மகா முக்கிய பிரபலமான, மணப்பெண்ணின் தந்தை ரிச்சர்டு கலந்துகொண்டாரா இல்லையா? வாழ்த்து அனுப்பினாரா இல்லையா?, தந்தை சார்பில் யாருமில்லா திருமணமா இது?

மணப்பெண் தந்தையினை ஆசிவாங்க தேடினாரா இல்லையா? என்பது பற்றி எல்லாம் ஊடகத்தார் பேசமாட்டார்கள், நாமும் பேசகூடாது.


கொசுறு :

“பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள். கள்ங்கப்படுத்தாதீர்கள், நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. எந்த கட்சியாகவும் இயக்கங்கள், தலைவராகவும் இருந்தாலும் தானாக இயங்க வேண்டும்.

சூரியன் தானாக இயங்குகிறது.

பின்னால் ஒருவர் இருந்து இயக்க கூடாது. பின்னால் இருந்து இயக்குபவர் பெயரை கேட்டால் நன்மை இருக்காது. அது கட்சிக்காரர்களுக்கும் சரி என்னை போன்ற பெண்களுக்கும் சரி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் ” : சசிகலா புஷ்பா மதுரையில் சீற்றம்

ஆக என் பின்னால் ஒருவரும் இல்லை, இல்லை என இவராக சொல்வதுதான் ஏதோ குறிப்பால் உணர்த்துகின்றது , இவர் பின்னால் ஒரு “மண்ணும்” இல்லை என நம்பி தொலைப்போம்

அது சரி புஷ்பாக்கா ஐம்பெரும் பூதம் எல்லாம் இருக்க, “சூரியன் தானாக இயங்குகின்றது” என ஏன் குறிப்பிட்டு சொல்லவேண்டும், தமிழகத்தில் சூரியன் என்றால் என்ன, யாரை குறிக்கும் என்பது எல்லோருக்கும் புரியும் 🙂

சரி ஏதோ நடக்கபோகின்றது, அங்கே ஒரு சகோதரன் பேட்டி கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல,

எப்படியோ தலைவன் கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால் ம்ம்ம்ம்.. ஸ்டர்ட் மியூசிக்

சிறுவாணி தண்ணி எடுத்து…..

Image may contain: mountain, sky, outdoor, nature and water

காவேரியினை தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கின்றது, இனி தானாக வந்து நானே காவேரி என ஒரு மழைக்காலத்தில் அது சொல்லாமல் அடுத்த சந்ததிக்கு அது தெரியபோவதில்லை, அதுவரை ஒரு கரண்டி மணலை கூட விடாமல் அள்ளும் தீவிரத்தில் தமிழகம் இருக்கின்றது இருக்கட்டும்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவடடத்திற்கும் ஒரு சிறப்பும் பெருமையும் உண்டு, கன்னியாகுமரி மாவட்ட மட்டி வாழை, செந்தொழுவன்,வேர்ப்பலா என அதன் சிறப்புகள் அப்படி. நெல்லை மாவட்ட நுங்கு, பனங்கிழங்கு சுவை அலாதியானது பின்னாளில் அது அல்வா ஊர் என அடையாளம் மாற்றிகொண்டது கால கோலம்.

அற்ப அல்வாவினை விட ஆயிரம் அற்புதமான சுவைகள் நெல்லைக்கு உண்டு, அம் மண்ணில் வளரும் அருகம்புல் சாறுக்கே சுவை அதிகம்.

அம்மண்ணில் விளைந்த அரிசியின் நீராகாரம் முன் கூட அந்த அல்வா நிற்க முடியாது.

தஞ்சாவூர் குறுவை அரிசியும், மதுரை மல்லியும், வைகை அயிரை மீனும் காலத்தில் தன் பெயரினை பதித்துகொண்டவை, சேலத்து மாம்பழம் தனிருசி என்பார்கள்

அப்படி கோவை எனும் கோயமுத்தூரின் தனிபெரும் அடையாளம் சிறுவாணி அற்றின் மிக சுவையான நீர் என்பதும் இடம்பெற்றுகொண்டது. அதன் வரலாறு வித்தியசமானது

உலகின் மிக சுவையான குடிநீர்ல் அதற்கு இரண்டாமிடம், முதலிடத்தை வழக்கம் போல ஐரோப்பியன் வைத்திருப்பதாக சொல்லிகொள்வான், இல்லாவிட்டால் அவமானத்தில் தண்ணீர் குடிக்காமல் செத்துவிடுவான், அவன் அப்படித்தான் பெருமை அப்படி.

ஆனால் சிறுவாணி தண்ணீரின் சுவையே முதல்தரமான சுவை என அடித்து சொல்கிறது உலகம்.

காரணம் அது உதித்து வரும் பகுதியில் இருக்கும் மரங்களின் கனிகளும், குறிப்பாக மலை நெல்லி போல சுவையான கனிகளும் அந்நீரில் விழுந்து ஊறியே அந்நீருக்கு அச்சுவை வருவதாக ஆராய்சி முடிவெனினும், இன்றுவரை முழு தீர்வு கிட்டவில்லை. அது ஒரு வரம், இயற்கை கொடை என்றே முடிவாகிவிட்டது.

சிறுவாணி கோவைக்கு மேற்கே 30 கிமீட்டருக்கு அப்பால் ஓடும் நதி, அந்நீரின் சுவை தெரியுமே தவிர கொண்டுவருவது சிரமம், அதுவும் அது பவானியின் துணையாறு, ஆனாலும் பவானியில் கலந்தபின் அதன் சுவை காணாமல் போய்விடும்.

அன்று கோவையில் ஒரு பெரிய மனிதர் இருந்தார் அவர் பெயர் நரசிம்மலு நாயுடு, அவர்தான் சிறுவாணியில் அணைகட்டி மலையினை குடைந்து கோவைக்கு கொண்டுவரலாம் எனும் திட்டத்தினை முன்மொழிந்தார், முல்லை பெரியாறு அணையின் நுட்பம் அவருக்கு உந்துதல் என்பார்கள். எப்படியோ கோவை மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க முதலில் திட்டமிட்டவர் அந்த நாயுடுதான்.

ஆனாலும் அவர் சொல்லி 30 ஆண்டு கழித்துதான் வெள்ளையன் 1930ல் அந்த நீரை கோவைக்கு குடிநீராக கொடுத்தான் அதுவரை 25 மைல் தேடிசென்று குடித்தவர்கள், அதன் பின் வீட்டிலே அமர்ந்து காலாட்டிகொண்டு குடித்தனர், பின்னாளில் சூலூர் ராணுவமுகாமிற்கும் அதுவே குடிநீராயிற்று. வடக்கத்திய ராணுவ வீரர்கள் அந்த தண்ணீருக்காகவே அங்கு விரும்பிவந்த காலங்களும் உண்டு.

அந்ந் சிறுவாணி ஆற்றின் நீர்வீழ்ச்சிதான் கோவை குற்றாலம் என்பது.

1960களில் அணை விரிவாக்கம் செய்யும்பொழுது கூட தமிழகத்தோடு ஒத்துழையினை நல்கியது கேரளம், ஆனால் வஞ்சகமாக முல்லை பெரியாறு கொள்ளவளவினை குறைக்க தமிழகத்தை வற்புறுத்தி வெற்றி கண்டது, அதன் பின் எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது.

ஆனால் மக்களாட்சி அல்லவா, ஏதும் செய்து கொண்டிருப்பதாக மக்களிடம் காட்டாவிட்டால் என்ன ஆட்சி?,

அதுவும் மாநில நலன் என மொத்த மக்களையும் ஒரே புள்ளியில் ஏமாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? மறுபடியும் முல்லை பெரியாரில் தொடங்கி ஆடிபார்த்தார்கள்.

அதில் தமிழகம் பக்கமே பலம் அதிகரிக்க கொஞ்சநாளாக அவர்கள் தூக்கம் தொலைந்தது, பரம்பிகுளம் ஆழியாற்றில் சர்ச்சை துவக்கினார்கள், அதிலும் வெற்றி இல்லை..

என்ன செய்ய? ஏய் தமிழகமே அன்று சிறுவாணி தண்ணீருக்காக முல்லை பெரியாற்றின் நீர் அளவினை குறைத்த நீ மறுபடியும் வென்றுவிட்டயா, வா அதிலே கை வைக்கின்றேன் என கிளம்பிவிட்டார்கள்.

அடப்பாடி வழியாக சிறுவாணி வரும் இடத்தில் அணை கட்டி விவசாயம் செய்யபோவதாக அறிவித்திருக்கின்றார்கள், கேரளா பற்றி எல்லோருக்கும் தெரியும்? எத்தனை நதிகள் அங்கு வீணாக கடலில் கலக்கின்றன, அவற்றில் எல்லாம் படகு வீடு கட்டி நீந்துவார்கள், அல்லது படகுபோட்டி நடத்துவார்கள். நீரிலே அமைந்த மாநிலம் அது

அவர்கள் சிறுவாணி நீரை எடுத்துத்தான் விவசாயம் செய்கிறோம் என்றால் மொத்த இந்தியாவே வாய்விட்டு சிரிக்கும்.

தமிழக தேர்தலில் தோற்று ஆங்காங்கு முக்காடு போட்டு துண்டுபீடி குடித்துகொண்டிருந்த கட்சிகள் எல்லாம், வேலை வந்திருச்சி என களம் இறங்கிவிட்டன.

தமிழக அரசு எம்மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க போகின்றது என்பது இனி தெரியும், பார்க்கலாம். சுலபத்தில் கேரளம் வெற்றிகொள்ளமுடியாது, அது காய்கறி முதல் அரிசி வரை தமிழகத்தை நம்பியே பெரும்பாலும் இருக்கின்றது. வடகொரியா போல அதிரடி காட்டிவிட்டு , தேவையானதை வாங்கிவிட்டு அமைதியாகும் வாய்ப்பும் உண்டு, அரசியல் அப்படித்தான்.

கோவையிலும் சலசலப்பு கூடுகின்றது, காரணம் அவர்கள் அச்சுவையான நீரிலே வளர்ந்தவர்கள், எங்கு பயணம் சென்றாலும் அதனை கையில் கொண்டுசென்றே பழகியவர்கள். சிறுவாணி இல்லாத வாழ்வினை அவர்களால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.

மலையாளிகளுக்கு நாம் சொல்லவிரும்புவதெல்லாம அதுதான், உங்களுக்கு இல்லா நதிகளா? நீரா? செழுமையா?. அடிக்கொரு ஓடையும் எட்டுக்கொரு ஆறும் பாயும் வளம் உங்களது.

சிறுவாணியின்றி அமையாது கோவை , அதனை விட்டுவிடுங்கள், முன்னோர்கள் குடித்து சுவைத்த நீரை அவர்கள் சந்ததியும் குடித்து மகிழ விட்டுவிடுங்கள், அது அவர்கள் கலாச்சாரம், பெருமைக்குரிய பாரம்பரியம்.

அவர்கள் உணர்வில் கலந்துவிட்ட நதி அது, அதன் பெயரினை கேட்டாலே அவர்கள் முகத்தில் ஒரு பரவசமும், நன்றி உணர்வும் வரும். அப்படி அவர்கள் உதிரத்தில் கலந்துவிட்ட பெயர் அது.

இந்த கோவைக்காரர்களின் உரிமையும், அவர்களின் பெருமையுமான அருமைக்குரிய சிறுவாணியினை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள், அது நதி அல்ல, அவர்களை அங்கே வாழ வைக்கும் தாய்.