காவேரி நதி இருக்கு … நதி மேலே அணை இருக்கு…

காவேரி நீர் கேட்டு தமிழகத்தில் 10 ஆயிரம் விவசாயிகள் போராட்டம், தமிழகத்தில் இயல்பு வாழ்கை பாதிப்பு, கன்னடத்தில் பதற்றம்.

விவசாயிகள் போராடுவது இருக்கட்டும், தமிழகத்தின் சார்பில் டெல்லிக்கு 39 எம்பிக்கள் உண்டு, மேலவையிலும் உறுப்பினர்கள் உண்டு, என்ன கிழிக்கின்றார்களோ தெரியவில்லை.

இப்படிபட்ட பிரச்சினைகளை அங்கே எழுப்புங்கள், புகார் கொடுங்கள் என்றுதான் அனுப்பிவைத்திருக்கின்றோம், அங்கோ முதல்வர் என்னை அடித்தார், பாதுகாப்பு வேண்டும் என ஒருவர் புகார் கொடுக்கின்றார்.

இன்னொருவர் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மிர் என பாடுகின்றார், இனி காவேரி பிரச்சினை என்றால் “விவசாயி..கடவுள் எனும் முதலாளி” என தொடங்கிவிடுவார்.

ஒன்றாக குரலெழுப்ப வேண்டிய தமிழக‌ எம்பிக்கள், கன்னடனை எதிர்த்து பேசவேண்டிய எம்பிக்கள், டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்து தமக்குள் விளையாடிகொண்டிருக்கின்றார்கள்.

 

Stanley Rajan's photo.

நவீன காவேரி கொண்டான் விஸ்வேஸ்வரய்யா.

Stanley Rajan's photo.
தமிழக சட்டசபையும் என்ன விவாதிக்கின்றது என தெரியவில்லை, இதே போயஸ்கார்டனுக்கு குடிதண்ணீர் இல்லை என்றால் சும்மா இருக்குமா கோட்டை? ஆளாளுக்கு கடல் சிப்பியிலாவது அள்ளிகொண்டு ஒடமாட்டார்களா?

டெல்லியில் முழங்கி கேட்க ஒரு திறமையான எம்பி இருப்பதாக கருத முடியுமா? எனக்கு தெரிந்த அத்தனை திறமையில் ஒருவரும் இல்லை

ஆக இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதும் தெரியவில்லை, அதே நேரம் 15 வருடமாக டெல்லியில் மந்திரிசபையில் இருந்த அந்த கட்சியும் என்ன கிழித்தது என்றால் ஒன்றுமில்லை

ஜெயலலிதா வழக்கு என்றால், கனிமொழி வழக்கு என்றால் ராம்ஜெத்மலானி, பால் நரிமன் என ஓடிவந்து வழக்காடி வழக்கினை விரைவாக முடிக்க செய்யபடும் நாட்டில்தான், காவேரி வழக்கு 40 வருடமாக இழுத்துகொண்டிருக்கின்றது

கன்னடத்தில் காவேரி பிரச்சினை எழுப்பியவுடன் கை வைக்கபடுவது தமிழ் படங்கள் ஓடும் தியேட்டர்தான், ஆனால் தமிழக நிலை அப்படியா? இன்னும் கன்னடத்து பைங்கிளி என சரோஜாதேவி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொண்டாடுகின்றோம்

சரி ஒரு கன்னடன் அல்லது கன்னடத்தி இங்கே தமிழர் மனதில் வாழமுடிகின்றது, ஆளமுடிகின்றது ஆனால் தமிழருக்கு நீர்கொடுக்க மட்டும் கன்னடருக்கு ஏன் மனமில்லை? என கேட்டால் அங்கேயும் குரல்கள் கேட்கின்றன‌

எத்தனை லட்சம் தமிழர்கள் பெங்களூரிலும் மைசூரிலும் காவேரி நீர் குடிக்கின்றார்கள் தெரியுமா உனக்கு? கணக்கு சரியாவிட்டது சரியா? இப்படி பதில் வருகின்றது.

நதிகளை தேசியமயமாக்காவிட்டால் இதற்கு முடிவே கிடையாது, இன்னொன்றும் கவனிக்கதக்கது

தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை, அப்படி பெய்திருந்தால் அதனை கன்னடம் ஒளித்து வைக்க முடியாது, அது என்ன 570 கோடி ரூபாயா?, கண்டெய்னரில் கொண்டு செல்ல?

சில ஆண்டுகளாக அது சரியாக பெய்தது, சிக்கல் இல்லை. வந்த நீரை மேட்டூரை தாண்டி மீதமானதை கல்லணை திறந்து கடலுக்கு நாம்தான் விட்டுகொண்டிருந்தோம்

எல்லா ஆற்றுபடுகைகளும் மணல் இருக்கும் வரை, காய்ந்து கிடந்தாலும் ஊற்றெடுக்கும் தன்மை கொண்டவை, ஆனால் மணலையும் ஒட்ட அள்ளிய பின்பு நிலமை கடும் மோசமாகின்றது

காவேரியின் துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும் நாம் அணைகட்டிவிட்டு, காவேரியின் கன்னட துணையாறுகளான கபினியிலும், ஹேமாவதியிலும் எப்படி கன்னடம் அணைகட்டலாம் என்றால் அது சரியான வாதம் அல்ல.

நம்முடைய காவேரியின் துணையாற்றிலும் அணைகள் உண்டு.

ஆனால் காவேரியில் நமக்கு நிச்சயம் உரிமை உண்டு, அதனை மீட்டெடுக்கும் பொறுப்பு மாநில அரசுக்கும், டெல்லியில் குரலெழுப்பும் பொறுப்பு எம்பிக்களுக்கும், நியாயத்தை செய்யவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் நிச்சயம் உண்டு.

நிலமை கைமீறி சென்றுவிட்ட நிலையில் இருபக்கமும் இழப்புகள் வந்தே தீரும், பாதிப்பு வராமல் முடியாது. அவர்கள் பாசன பரப்பு அப்படி பெருகிவிட்டது, நமக்கும் அதே அளவு பாசனம் உண்டு, கொஞ்சம் சிக்கலான பிரச்சினையே.

என்ன செய்ய? அவன் சுதாரித்த காலத்தில் நாம் எம்ஜிஆர் படங்களில் லயித்து கிடந்தோம், அவன் இன்னும் திட்டமிட்ட காலத்தில் நாம் டாஸ்மாக் கடை வாசலில் நின்றோம். பொய்களில் ஏமாந்துகொண்டிருந்தோம்

தஞ்சாவூர் குறுவை விளைச்சல் சுருங்கி கன்னட பொன்னி, மைசூர் பொன்னி, பெங்களூர் தக்காளி என அவர்கள் விளைச்சலை பெருக்கும் பொழுதெல்லாம் நாம் கண்டுகொள்ளவே இல்லை, கலைஞர், புர்ச்சிகள் வாழ்க என கோஷம் எழுப்பிகொண்டே இருந்தோம்

நமது விழிப்புணர்வினை பொறுத்தே நன்மை அமையும், ஜெயலலிதாவினை ஆதரித்து பாஜவிடம் டெல்லியில் கோரிக்கை வைப்பதை விட, கலைஞரை ஆதரித்து அவர் மூலம் டெல்லியில் ராகுலிடம் ஆதரிப்பதை விட நேரடியாக பாஜகவையொ அல்லது காங்கிரசையோ இம்மாநிலம் ஆதரித்தால் முடிந்தது விஷயம்.

இவர்கள் இருவரால் ஒருநாளும் இம்மாதிரி தேசிய பிரச்சினைகளுக்கு முடிவு கொண்டுவரவே முடியாது, நிச்சயமாக முடியாது.

தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரும்பொழுது இதற்கொரு முடிவு வரலாம், ஆயினும் மேட்டுர் தாண்டி தமிழகம் காவேரியினை தேக்கவேண்டிய அவசியமும் உண்டு.

ஒரு காலம் இருந்தது, அன்று கன்னடத்தில் பெரும் அணைகள் இல்லை, ஆடிமாத காவேரி அப்படியே கிரிஸ் கெயில் போல பொங்கி தஞ்சைக்கு வரும், அது பயிர்களை அழித்துவிடும்

உடனே எப்படி எங்கள் பயிரை நீங்கள் நீர் அனுப்பி அழிக்கலாம் என கிளம்புவார்களாம், மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடுகொடுக்கவேண்டுமாம், இது திப்பு சுல்தான் காலத்தில் ஆங்கிலேயர்களால் கடுமையாக தூண்டிவிடவும் பட்டது.

திப்புவின் சில நடவடிக்கைகளுக்கு அதுவே காரணம் ஆயிற்று, மழை பெய்கிறது வெள்ளம் வருகிறது நாங்கள் என்ன செய்ய என கதறி நின்று, தண்ட காசு தஞ்சைக்கு வழங்கி இருக்கின்றது மைசூர் சமஸ்தானம்

பின்னாளில் மைசூர் திவானாக விஸ்வேஸ்வரைய்யா வருமளவும் அது தொடர்ந்திருக்கின்றது, பெரும் கட்டட பொறியாளரான அய்யர்தான் அணைகட்டினால் இந்த நஷ்ட ஈட்டை தடுக்கலாம் என ஐடியா கொடுத்தவன், அதன் பின்னே கிருஷ்ணராஜ சாகர் கட்டபட்டது, மேட்டுரும் கட்டபட்டது.

அந்த விஸ்வெஸ்ரய்யா தான் கன்னடத்து லி குவான் யூ, அம்மாநிலத்தின் இன்றைய எழுச்சிக்கு அவர்தான் அடிக்கல், சிற்பி எல்லாம்.

அதன் பின் அவர்கள் விவசாய நிலங்களை பெருக்கிகொண்டார்கள், துணை ஆறுகளில் எல்லாம் அணைகட்டிகொன்டார்கள். விவசாயத்தை பெருக்கி கொண்டே வந்தார்கள்.

நாமோ சினிமா பின்னால் சென்று, மாநிலத்தை சீரழித்து விவசாயத்தை கைவிட்டு விட்டே வந்தோம், அது வறண்ட பகுதிகளில் கதறி கைவிடபட்டபோது தெரியவில்லை, காவேரி கரை என்றவுன் முழுதாக தெரிகின்றது

அதாவது உடை களையும் வரை தெரியவில்லை, உள்ளாடையுடன் நிற்கும்போது அது பட்டவர்த்தனமாக தெரிகின்றது, அதுவும் களையபடும் நேரம் இது,

எந்த முப்பாட்டன் தஞ்சாவூரில் காவேரி வெள்ளத்தால் நஷ்டம் என கொடிபிடித்ததோ, அதே வாரிசுகள் இன்று நீரை கொடு என கொடிபிடித்து போராடுகின்றன, கால விசித்திரம்.

ஒரு அறிவாளியினை கொண்ட சமூகம் எப்படி செழிக்கும் என்பதற்கு விஸ்வேஸ்ரய்யரின் கன்னடமும், சினிமா பின்னால் சென்ற சமூகம் எப்படி சீரழியும் என்பதற்கு தமிழகமும் சாட்சி.

கல்லணை கட்டி தமிழன் சாதிக்க ஒரு காலம் இருந்தது, பின் அய்யர் அணைகட்டி சாதிக்கவும் ஒரு காலம் வந்தது, மறுபடியும் ஒரு தமிழன் அந்த வரலாற்றினை திருப்ப வராமலா போய்விடுவான்

நிச்சயம் வருவான், அதற்கு முன்பு இந்த சினிமா அழிச்சாட்டியங்களை விரட்டி தமிழகத்தை தயாராக வைத்திருப்பது நமது பொறுப்பு.

திரும்பிகொண்டே இருப்பதுதான் வரலாறு, ஒருவன் நிச்சயம் வருவான்

அடேய்…அது சீமான் என எவனாவது சொன்னால் அப்படியே தூக்கி கிருஷ்ண ராஜசாகர் அணையில் கொண்டு……..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s