தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்…

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் : செய்தி

இது என்ன அதிரடி மாற்றம்?, வழக்கமான செய்தி, ஏதும் அந்த கட்சிக்காரர்களிடம் கேளுங்கள், ஆளுநர் சும்மா இருந்தால் எப்படி?, அவருக்கு வேலை கொடுக்கவேண்டாமா என்பார் ஒருவர்

இன்னொருவர் “ஆளுநருக்கே வேலை கொடுத்து ஆளபிறந்த நாயகி…” என தொடங்கிவிடுவார்கள்.

சரி முடிவெடுப்பது முதல்வர் , அமர்த்துவதும் அடித்து விரட்டுவதும் முதல்வர், இதில் ஆளுநர் எதற்கு? எல்லாம் வீண் சம்பிரதாயம்.

என்றாவது ஆளுநர் இவரை ஏன் மாற்றுகின்றீர்கள்? என்ன குற்றம் கண்டீர்கள்? தவறான ஆளை ஏன் பரிந்துரைத்தீர்கள் என கேட்டாரா? இனி கேட்பாரா? அல்லது கேட்கத்தான் முடியுமா?

ஒரு ரப்பர் ஸ்டாம்பு செய்யும் வேலை இது, சட்டத்தில் இடமிருந்தால் இதனை சபாநாயகர் தனபாலே செய்துவிடுவார்.

சட்டமன்ற கூட்டதொடரில் ஆளுநர் உரை வாசிக்கின்றார், எதற்கு சம்பிரதாயத்திற்கு ஒரு உரை. இதனை பன்னீர் செல்வமே வாசிக்கலாம். “யார் தருவார் இந்த அரியாசனம்….” என ஒரு பாடலாவது வரும்.

தமிழக பல்கலைகழகங்களுக்கு எல்லாம் ஆளுநர்தான் வேந்தர். எந்த பல்கலைகழக ஊழலை, கொள்ளையினை கண்டித்திருக்கின்றாரா? பல்கலை கழக தரம், கல்லூரி செயல்பாடு, கல்விதரம் பற்றி ஒரு அறிக்கை படிக்கின்றாரா? ஒன்றுமே இல்லை

பட்டம் வழங்கும் விழா என்றால் மட்டும் வருவார், ஏன் அவ்வளவு கொட்டிபடிக்கும் மாணவர்கள் பட்டம் வாங்கமலா ஓடிவிடுவார்கள். அந்த வேந்தர் பதவியால் தமிழ பல்கலைகழகங்களுக்கு அவர் செய்ததென்ன?

எத்தனை பல்கலைகழகங்கள் சிக்கலில் மாட்டும், அன்னார் வேந்தராக என்ன செய்தார்?

தமிழக பிரச்சினைகள் பற்றி என்றாவது அவர் பேசியிருகின்றாரா? ஏதும் ஒரு வார்த்தை அல்லது மத்திய அரசுக்கு அறிக்கை? ம்ஹூம்.

பின்னர் ஏன் ஒரு பதவி?, அவருக்கொரு மாளிகை?, அவருக்கொரு பெரும் செலவு?, ஓய்வுபெற்ற அரசியல்வாதிகள் சொகுசுவாழ்க்கை வாழும் பதவியா அது? அதற்கொரு முதியோர் இல்லம் போதாதா?

அண்ணா அன்றே சொன்னார், “ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையா தம்பி?”

ஏமாற்று விளம்பரங்களில் நடித்தால் தண்டனை…

ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழி செய்யும் புதிய சட்ட மசோதா : பாராளுமன்ற குழு இன்று ஆய்வு

அதேதான், அப்படித்தான் நடிகர் முதல் விளையாட்டு வீரர்கள் வரை பிடித்து உள்ளே போடுங்கள், இந்த நாட்டில் பெப்சி முதல் அப்பளம் வரை பிரபலமானது இப்படித்தான், பள்ளி முதல் கல்லூரிவரை அப்படித்தான். எதுவும் சொந்த சரக்கில் அல்ல.

அப்படியே நல்லாட்சி தருவதாக தேர்தல் நேரத்தில் நடித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதி தவறி நிஜமுகம் காட்டும் நடிப்பு அரசியல்வாதி பிரபலங்களையும் அந்த பட்டியலில் இணைத்துகொள்ளுங்கள், இது நப்பாசைதான் ஆனால் தப்பான ஆசை அல்ல.

அந்த பிரபலங்கள் விளம்பரத்தில் 5 நிமிடம் நடிக்கின்றார்கள், ஆனால் இந்த அரசியல் பிரபலங்கள் சாகும் வரை மக்கள் முன் நடித்து ஏமாற்றிகொண்டே இருக்கின்றனர், இவர்களுக்கு ஒரு தண்டனையும் இல்லையா?

ஏமாற்றில் என்ன வியாபார விளம்பரம் அரசியல் விளம்பரம்? எல்லாம் ஒன்றே.

வியாபார விளம்பர நடிப்பு பிரமுகர்களை விட . இந்த அரசியல் நடிக பிரமுகர்கள் மகா ஆபத்தானவர்கள்.
அப்படியே இயேசு பெயரில் விளம்பரம் செய்பவன், சிவலிங்க விளம்பரம் செய்து தியானம் பெயரில் ஏமாற்றுபவன் இப்படி எல்லா மத சாமியார் போதகர் நடிகர்களையும் பிடியுங்கள்

எனினும் நடிப்பவர்களுக்கு மட்டும்தான் தண்டனையா? அதனை பொறுப்பில்லாமல் உண்மை தன்மை தெரியாமல் ஒளிபரப்பும் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் ஒரு தண்டனையும் இல்லையா?

ஆக விளம்பர கம்பெனிகளுக்கும், ஊடகங்களுக்கும் சேர்த்து செக் வையுங்கள், நடிகனை பிடிப்பேன் டைரக்டரையும் தயாரிப்பாளனையும் தியேட்டர்காரனை பிடிப்பேன் என்றால் அது எப்படி ஸ்ரீமான்களே, ஸ்ரீமதிகளே?

குட்டைப் பாவாடை அணியாதீர்……

இந்தயாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குட்டைப் பாவடை அணியாதீர்கள் என்று மத்திய இணை மந்திரி மகேஷ் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.

ஆம், அவர்கள் எல்லோரும் நேர்ச்சை கட்டி, விரதம் இருந்தல்லவா இந்தியாவினை தரிசிக்க வருகின்றார்கள்?

இப்படிபட்ட அறிவிப்புகள் எல்லாம் மகா அவசியம்.

அவர்களின் பாதுகாப்பிற்காக இப்படி சொல்கிறாராம்.

இன்னும் அதிகமாக வெளிநாட்டு பெண்கள் முழுக்க மூடிவரவேண்டும் அல்லது மொட்டை அடித்து மகா பயங்கரமான கோலத்தில் வரவேண்டும் .

அப்பொழுதுதான் இனி இந்தியாவில் பாதுகாப்பு என சொன்னாலும் சொல்வார்.

பிரதமரோ இரண்டு இன்னிங்ஸாக‌ உலகெல்லாம் சென்று எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என காலில் விழுந்து அழைக்கின்றார்.

இவரோ, அப்படி அணிய கூடாது, இப்படி அணிந்தால் எங்கள் நாட்டில் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு நாட்டு பெயரினை கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

சும்மாவே இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடில்லை என சர்ச்சை உண்டு.

இவரோ அதனை ஒப்புகொண்டபடி அறிக்கைவிட்டு கொண்டிருக்கின்றார்.

மோடிக்கு சனி நிச்சயமாக சாதக கட்டத்தில் வலுவாக இல்லை. அது நாடாளுமன்றத்தில் அவர் அருகிலே சம்மணம் போட்டு அமர்ந்திருக்கின்றது.

ராதிகா மகள் திருமணம் ….

ராதிகா மகள் திருமணம் என இந்த பத்திரிகைகள் எல்லாம் செய்யும் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை, பயங்கர இம்சைகள்.

இதில் சில பத்திரிகைகள் ராதிகா-சரத்குமார் மகள் திருமணம் எனும் அளவில் பிய்த்து எழுதிகொண்டிருக்கின்றன, பிரபலங்கள் எல்லாம் வாழ்த்தினார்களாம். அதில் முன்னாள் நடிகர் சங்க தலைவரும், இந்நாள் நடிகர் சங்க தலைவரும் வந்ததாக தெரியவில்லை,

ஒருவேளை அவர்கள் பிரபலம் இல்லாதவர்களாக இருக்கலாம்.

என்ன பிரபலங்களோ தெரியவில்லை, விஜயகுமார் மகன் போதையில் கார் ஓட்டி போலிசாரிடமே மோதியிருக்கின்றார். அவரை பற்றியும் அடுத்த தகவல் இல்லை, வரவும் வராது. அவர் பிரபலம் அல்லவா? இந்திய சட்டம் எல்லாம் செல்லாது.

இதே இன்னொரு ஏழை இப்படி போதையில் சிக்கி இருந்தால் கொலைமுயற்சி என சொல்லி காவல்துறை கடமையினை நிலை நாட்டி இருக்கும்.

இந்த திருமணத்தின் மகா முக்கிய பிரபலமான, மணப்பெண்ணின் தந்தை ரிச்சர்டு கலந்துகொண்டாரா இல்லையா? வாழ்த்து அனுப்பினாரா இல்லையா?, தந்தை சார்பில் யாருமில்லா திருமணமா இது?

மணப்பெண் தந்தையினை ஆசிவாங்க தேடினாரா இல்லையா? என்பது பற்றி எல்லாம் ஊடகத்தார் பேசமாட்டார்கள், நாமும் பேசகூடாது.


கொசுறு :

“பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள். கள்ங்கப்படுத்தாதீர்கள், நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. எந்த கட்சியாகவும் இயக்கங்கள், தலைவராகவும் இருந்தாலும் தானாக இயங்க வேண்டும்.

சூரியன் தானாக இயங்குகிறது.

பின்னால் ஒருவர் இருந்து இயக்க கூடாது. பின்னால் இருந்து இயக்குபவர் பெயரை கேட்டால் நன்மை இருக்காது. அது கட்சிக்காரர்களுக்கும் சரி என்னை போன்ற பெண்களுக்கும் சரி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் ” : சசிகலா புஷ்பா மதுரையில் சீற்றம்

ஆக என் பின்னால் ஒருவரும் இல்லை, இல்லை என இவராக சொல்வதுதான் ஏதோ குறிப்பால் உணர்த்துகின்றது , இவர் பின்னால் ஒரு “மண்ணும்” இல்லை என நம்பி தொலைப்போம்

அது சரி புஷ்பாக்கா ஐம்பெரும் பூதம் எல்லாம் இருக்க, “சூரியன் தானாக இயங்குகின்றது” என ஏன் குறிப்பிட்டு சொல்லவேண்டும், தமிழகத்தில் சூரியன் என்றால் என்ன, யாரை குறிக்கும் என்பது எல்லோருக்கும் புரியும் 🙂

சரி ஏதோ நடக்கபோகின்றது, அங்கே ஒரு சகோதரன் பேட்டி கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல,

எப்படியோ தலைவன் கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால் ம்ம்ம்ம்.. ஸ்டர்ட் மியூசிக்

சிறுவாணி தண்ணி எடுத்து…..

Image may contain: mountain, sky, outdoor, nature and water

காவேரியினை தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கின்றது, இனி தானாக வந்து நானே காவேரி என ஒரு மழைக்காலத்தில் அது சொல்லாமல் அடுத்த சந்ததிக்கு அது தெரியபோவதில்லை, அதுவரை ஒரு கரண்டி மணலை கூட விடாமல் அள்ளும் தீவிரத்தில் தமிழகம் இருக்கின்றது இருக்கட்டும்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவடடத்திற்கும் ஒரு சிறப்பும் பெருமையும் உண்டு, கன்னியாகுமரி மாவட்ட மட்டி வாழை, செந்தொழுவன்,வேர்ப்பலா என அதன் சிறப்புகள் அப்படி. நெல்லை மாவட்ட நுங்கு, பனங்கிழங்கு சுவை அலாதியானது பின்னாளில் அது அல்வா ஊர் என அடையாளம் மாற்றிகொண்டது கால கோலம்.

அற்ப அல்வாவினை விட ஆயிரம் அற்புதமான சுவைகள் நெல்லைக்கு உண்டு, அம் மண்ணில் வளரும் அருகம்புல் சாறுக்கே சுவை அதிகம்.

அம்மண்ணில் விளைந்த அரிசியின் நீராகாரம் முன் கூட அந்த அல்வா நிற்க முடியாது.

தஞ்சாவூர் குறுவை அரிசியும், மதுரை மல்லியும், வைகை அயிரை மீனும் காலத்தில் தன் பெயரினை பதித்துகொண்டவை, சேலத்து மாம்பழம் தனிருசி என்பார்கள்

அப்படி கோவை எனும் கோயமுத்தூரின் தனிபெரும் அடையாளம் சிறுவாணி அற்றின் மிக சுவையான நீர் என்பதும் இடம்பெற்றுகொண்டது. அதன் வரலாறு வித்தியசமானது

உலகின் மிக சுவையான குடிநீர்ல் அதற்கு இரண்டாமிடம், முதலிடத்தை வழக்கம் போல ஐரோப்பியன் வைத்திருப்பதாக சொல்லிகொள்வான், இல்லாவிட்டால் அவமானத்தில் தண்ணீர் குடிக்காமல் செத்துவிடுவான், அவன் அப்படித்தான் பெருமை அப்படி.

ஆனால் சிறுவாணி தண்ணீரின் சுவையே முதல்தரமான சுவை என அடித்து சொல்கிறது உலகம்.

காரணம் அது உதித்து வரும் பகுதியில் இருக்கும் மரங்களின் கனிகளும், குறிப்பாக மலை நெல்லி போல சுவையான கனிகளும் அந்நீரில் விழுந்து ஊறியே அந்நீருக்கு அச்சுவை வருவதாக ஆராய்சி முடிவெனினும், இன்றுவரை முழு தீர்வு கிட்டவில்லை. அது ஒரு வரம், இயற்கை கொடை என்றே முடிவாகிவிட்டது.

சிறுவாணி கோவைக்கு மேற்கே 30 கிமீட்டருக்கு அப்பால் ஓடும் நதி, அந்நீரின் சுவை தெரியுமே தவிர கொண்டுவருவது சிரமம், அதுவும் அது பவானியின் துணையாறு, ஆனாலும் பவானியில் கலந்தபின் அதன் சுவை காணாமல் போய்விடும்.

அன்று கோவையில் ஒரு பெரிய மனிதர் இருந்தார் அவர் பெயர் நரசிம்மலு நாயுடு, அவர்தான் சிறுவாணியில் அணைகட்டி மலையினை குடைந்து கோவைக்கு கொண்டுவரலாம் எனும் திட்டத்தினை முன்மொழிந்தார், முல்லை பெரியாறு அணையின் நுட்பம் அவருக்கு உந்துதல் என்பார்கள். எப்படியோ கோவை மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க முதலில் திட்டமிட்டவர் அந்த நாயுடுதான்.

ஆனாலும் அவர் சொல்லி 30 ஆண்டு கழித்துதான் வெள்ளையன் 1930ல் அந்த நீரை கோவைக்கு குடிநீராக கொடுத்தான் அதுவரை 25 மைல் தேடிசென்று குடித்தவர்கள், அதன் பின் வீட்டிலே அமர்ந்து காலாட்டிகொண்டு குடித்தனர், பின்னாளில் சூலூர் ராணுவமுகாமிற்கும் அதுவே குடிநீராயிற்று. வடக்கத்திய ராணுவ வீரர்கள் அந்த தண்ணீருக்காகவே அங்கு விரும்பிவந்த காலங்களும் உண்டு.

அந்ந் சிறுவாணி ஆற்றின் நீர்வீழ்ச்சிதான் கோவை குற்றாலம் என்பது.

1960களில் அணை விரிவாக்கம் செய்யும்பொழுது கூட தமிழகத்தோடு ஒத்துழையினை நல்கியது கேரளம், ஆனால் வஞ்சகமாக முல்லை பெரியாறு கொள்ளவளவினை குறைக்க தமிழகத்தை வற்புறுத்தி வெற்றி கண்டது, அதன் பின் எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது.

ஆனால் மக்களாட்சி அல்லவா, ஏதும் செய்து கொண்டிருப்பதாக மக்களிடம் காட்டாவிட்டால் என்ன ஆட்சி?,

அதுவும் மாநில நலன் என மொத்த மக்களையும் ஒரே புள்ளியில் ஏமாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? மறுபடியும் முல்லை பெரியாரில் தொடங்கி ஆடிபார்த்தார்கள்.

அதில் தமிழகம் பக்கமே பலம் அதிகரிக்க கொஞ்சநாளாக அவர்கள் தூக்கம் தொலைந்தது, பரம்பிகுளம் ஆழியாற்றில் சர்ச்சை துவக்கினார்கள், அதிலும் வெற்றி இல்லை..

என்ன செய்ய? ஏய் தமிழகமே அன்று சிறுவாணி தண்ணீருக்காக முல்லை பெரியாற்றின் நீர் அளவினை குறைத்த நீ மறுபடியும் வென்றுவிட்டயா, வா அதிலே கை வைக்கின்றேன் என கிளம்பிவிட்டார்கள்.

அடப்பாடி வழியாக சிறுவாணி வரும் இடத்தில் அணை கட்டி விவசாயம் செய்யபோவதாக அறிவித்திருக்கின்றார்கள், கேரளா பற்றி எல்லோருக்கும் தெரியும்? எத்தனை நதிகள் அங்கு வீணாக கடலில் கலக்கின்றன, அவற்றில் எல்லாம் படகு வீடு கட்டி நீந்துவார்கள், அல்லது படகுபோட்டி நடத்துவார்கள். நீரிலே அமைந்த மாநிலம் அது

அவர்கள் சிறுவாணி நீரை எடுத்துத்தான் விவசாயம் செய்கிறோம் என்றால் மொத்த இந்தியாவே வாய்விட்டு சிரிக்கும்.

தமிழக தேர்தலில் தோற்று ஆங்காங்கு முக்காடு போட்டு துண்டுபீடி குடித்துகொண்டிருந்த கட்சிகள் எல்லாம், வேலை வந்திருச்சி என களம் இறங்கிவிட்டன.

தமிழக அரசு எம்மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க போகின்றது என்பது இனி தெரியும், பார்க்கலாம். சுலபத்தில் கேரளம் வெற்றிகொள்ளமுடியாது, அது காய்கறி முதல் அரிசி வரை தமிழகத்தை நம்பியே பெரும்பாலும் இருக்கின்றது. வடகொரியா போல அதிரடி காட்டிவிட்டு , தேவையானதை வாங்கிவிட்டு அமைதியாகும் வாய்ப்பும் உண்டு, அரசியல் அப்படித்தான்.

கோவையிலும் சலசலப்பு கூடுகின்றது, காரணம் அவர்கள் அச்சுவையான நீரிலே வளர்ந்தவர்கள், எங்கு பயணம் சென்றாலும் அதனை கையில் கொண்டுசென்றே பழகியவர்கள். சிறுவாணி இல்லாத வாழ்வினை அவர்களால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.

மலையாளிகளுக்கு நாம் சொல்லவிரும்புவதெல்லாம அதுதான், உங்களுக்கு இல்லா நதிகளா? நீரா? செழுமையா?. அடிக்கொரு ஓடையும் எட்டுக்கொரு ஆறும் பாயும் வளம் உங்களது.

சிறுவாணியின்றி அமையாது கோவை , அதனை விட்டுவிடுங்கள், முன்னோர்கள் குடித்து சுவைத்த நீரை அவர்கள் சந்ததியும் குடித்து மகிழ விட்டுவிடுங்கள், அது அவர்கள் கலாச்சாரம், பெருமைக்குரிய பாரம்பரியம்.

அவர்கள் உணர்வில் கலந்துவிட்ட நதி அது, அதன் பெயரினை கேட்டாலே அவர்கள் முகத்தில் ஒரு பரவசமும், நன்றி உணர்வும் வரும். அப்படி அவர்கள் உதிரத்தில் கலந்துவிட்ட பெயர் அது.

இந்த கோவைக்காரர்களின் உரிமையும், அவர்களின் பெருமையுமான அருமைக்குரிய சிறுவாணியினை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள், அது நதி அல்ல, அவர்களை அங்கே வாழ வைக்கும் தாய்.

தர்மதுரை : திரை விமர்சனம்

தர்மதுரை என்றொரு படம் வந்திருக்கின்றது, எத்தனாயிரம் மருத்துவர்கள் தேவைபடும் தேசத்தில்தான், எப்படியாவது எங்களை மருத்துவர் ஆக்குங்கள் என பச்சைமுத்து போன்றவர்களிடம் இம்மக்கள் ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள், என்பதை செவிட்டில் அறைந்து சொன்ன படம்,

இச்சமூகம் அப்படித்தான் நல்ல கல்விக்கு துடித்துகொண்டிருக்கின்றது, படம் பரவாயில்லை, பார்க்கலாம்.

ஆனால் படம் பார்த்தபொழுது எம் ஆர் ராதா நினைவுக்கு வருகின்றார்

மனிதர் தனக்கு பின் அற்புதமான நடிப்பினை வழங்க இரு வாரிசுகளை விட்டுத்தான் சென்றிருக்கின்றார், ஒருவர் ராதா ரவி, இன்னொன்று ராதிகா

கலையரசி எனும் பட்டத்திற்கு மிக பொருத்தமான நடிப்பு அவரது, அப்படி ஒரு உருக்கமான நடிப்பினை கொட்டி தீர்த்திருக்கின்றார், அவருக்கொரு விருது கொடுத்தே இத்தமிழகம் தீரவேண்டும், நிச்சயமாக சொல்லலாம் பெண் சிவாஜி

யாரோ சொன்னார்கள், முதல் மரியாதையில் ராதிகா நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் தெரியுமா? சந்தேகமே இல்லை சிவாஜியினை தூக்கி விழுங்கி இருப்பார்.

படத்தில் “உன்ன ஏதாவது செஞ்சிருவாங்கப்பா..எங்கயாவது போய் பொழைச்சிக்க..” என சொல்லும்பொழுது, சாப்பாட்டு தட்டில் ரம்பத்தை வைத்து கொடுக்கும்பொழுது மனதில் அந்த பாட்டியினை கொண்டுவருகிறார்.

அது எனக்கு தெரிந்த பாட்டி

இப்படித்தான் அவள் மகனும் விரும்பிய பெண்ணை மணந்து வந்தான், அவள் குடும்பத்தை பிரிக்கவந்தவள் என உடன்பிறந்தோர் விரட்ட, அவனும் குடிகாரனான். காரணம் அவர்களுக்கு சொத்து இருந்தது என அவர்கள் நினைத்துகொண்டார்கள்

அவனுக்கோர் மகனும் இருந்தான், அவன் கண் முன்னாலேதான் இப்படி விஜய்சேதுபதியினை அடிப்பது போல அடிப்பார்கள், அவர்கள் களைத்து ஓய்ந்தது அந்த தாய் இறுதியில் இப்படித்தான் சொல்லி அவனுக்கு தண்ணீர் ஊற்றுவாள்

“உனக்கு ஒண்ணும் தரமாட்டானுப்பா..நீ எங்கயாவது போய் பொழச்சிக்க..இவனுக உன்ன கொன்னுருவானுகப்பா…கண்ணுமுன்னால சாகத..”

அவன் அழுவான் “எனக்கு யார தெரியும்? நான் எங்கே போவேன், அப்பா இருந்தவரைக்கும் இப்படியா” என கதறி அழுவான்

அந்த வயதான தாயும் அழுவாள், அந்த சிறுவனும் அழுவான். “ஒரு நாள் உனக்கு விடியுமய்யா…” என அழுதுகொண்டே கஞ்சி ஊற்றுவாள் அந்த தாய், அவனோ அந்த கஞ்சியினை தன் அருகே இருக்கும் மகனுக்கு ஊட்டிகொண்டிருப்பான்.

“ராசா நீ படிச்சிட்டு எங்காவது போயிரு, இவனுகட்ட வாழமுடியாது..” என அவன் தன் மகனுக்கு சொல்லும்பொழுது பிஞ்சி வயதில் கண்ணீரை துடைத்துகொண்டு சரிப்பா என சொல்லும் அக்குழந்தை.

அதனை கேட்டு உடைந்து அழுவாள் அந்த பாட்டி

நான் நேரிலே கண்ட அந்த கிராமத்து பாட்டியினை தத்ரூபமாக கொண்டுவந்தார் ராதிகா

எல்லா கிராமங்களிலும் ஒரு வெளிதெரியாத சோககதை உறங்கி கொண்டிருக்கின்றது என்பார் பாரதிராஜா. அது மகா உண்மையும் கூட‌

இந்தபடமும் சில சோகமான உண்மைகளின் பாதிப்பாக இருக்கலாம்

கிராமங்கள் அப்படித்தான், சுத்தமான பாசமும் கிடைக்கும், உயிரெடுக்கும் வன்மமும் அங்கே தான் உருவாகும்,

அது உறவினர்களுக்குள்ளே உருவாகும் என்பதுதான் பெரும் விசித்திரம்.

ராதிகா முகம் காணும்பொழுதெல்லாம் அந்த பாட்டியே மனதில் வந்து போகின்றார், இந்த படத்தினை பார்க்காமலே இருந்து தொலைத்திருக்கலாம்

வைகுண்டராஜனுக்கு எதிராக சகோதரர் பரபரப்பு பேட்டி

வைகுண்டராஜனுக்கு எதிராக சகோதரர் பரபரப்பு பேட்டி

வரலாற்றில் இருந்து பல பாடங்களை படிக்க முடியும், ஒருவனை வீழ்த்தவேண்டுமானால் அவன் உறவுகள் மூலம் அவனை அடிக்கவேண்டும், காரணம் அந்த உறவுகள் கொடுக்கும் மனரீதியான வலி அவனை தடுமாற செய்யும், குழம்பும் மனம் வலிமை இழக்கும், அவனை வீழ்த்துவது எளிது.

இன்று இஸ்ரேலிய மொசாத் செய்யும் பெரும் நுட்பமான வித்தை அது, பலமானவர்கள் குடும்பத்தில் குழப்பம் செய்து அவர்கள் சாதிக்கும் காரியங்கள் உண்டு.

இந்த ஞானத்தை அப்படியே பின்பற்றிவன் மாவீரன் அலெக்ஸாண்டர், உறவுகள் யாரையும் அவன் அண்டவிட்டத்தில்லை, எந்த உறவினையும் அவன் நம்பவில்லை

காரணம் அரசியல் அப்படியானது, நம்பினோர் செய்யும் துரோகம் மனதால் வலிக்கும், மனம் போனால் உடல் வீழும்

அதனால்தான் தான் சாகும்போதும் தன் அரசை 4 நண்பர்களுக்கு பகிர்ந்தளித்தானே அன்றி, தன் குடும்பத்திற்கு அல்ல, அவன் காட்டிய அந்த அரசியல் ஞானம் ஆச்சரியமானது.

தம்பியினை வைத்து அண்ணனை விழ்த்துவது, மகனை வைத்து தந்தையினை வீழ்த்துவது என வரலாறு எங்கும் இப்படியான துரோகங்கள் கொட்டி கிடக்கின்றன.

பதவி ஆசையோ இல்லை வேறு ஆசைகளோ அதற்கு துணைபோகின்றன, உலகெல்லாம் வென்று வந்த ராவணனை வரவேற்ற தம்பிதான், ராவணனை விட சிறந்த வீரன் வரும்பொழுது அவன்பின் சென்றான்

முடிவில் அண்ணனை அழித்து ஆட்சியும் பெற்றான்.

ராவணன் காலம் முதல் சட்டமன்றத்தில் கண்ட மறைந்த முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனி வரை வரலாறு பலரை காட்டுகின்றது.

இன்று வைகுண்டராஜனுக்கும் அதே போன்றதொரு அடி விழதொடங்கி இருக்கின்றது, அன்னார் எப்படி எதிர்கொண்டு வருகின்றார் என்பது காலத்தின் கையில்

ஒருவிஷயம் புரிகின்றது, யாரெல்லாம் சர்ச்சைகள் வரும் தொழில்களை செய்யும் மீடியா அதிபர்களோ அவர்களை குறிவைத்து கனைகள் வீசபடுகின்றன,

மீடியா இல்லா கொள்ளையர்கள் பி.ஆர் பழனியப்பன், ஆறுமுகச்சாமி போன்றோர் மீதெல்லாம் இப்பொழுது சர்ச்சையே இல்லை,

சகாயம் அறிக்கை என்ன ஆனது தெரியவில்லை, ஆறுமுகச்சாமி இருக்காரா இல்லையா தெரியவில்லை, ஆனால் அவரது மணல் லாரிகள் ஓடிகொண்டே இருக்கின்றன‌

புதிதாக ஒரு கட்சி வளரத்தான் அரசியல்வாதிகள் விரும்பமாட்டார்கள், இப்பொழுதெல்லாம் புதிதாக டிவிசேனல் வந்தாலும் விரும்புவதில்லை.

பொதுவாக அரசியல்வாதிகள் சில வட்டங்களை போட்டு சிலரை வளரவிடுகின்றனர், அந்த வட்டத்தினை விட்டு அவர்கள் வெளிவர நினைக்கும்பொழுது அவர்களை உண்டு இல்லை என ஆக்கிவிடுகின்றனர்.

ஆனால் அப்படி ஆண்டவனும் ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம் போட்டிருக்கின்றான், எல்லா மனிதனுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உச்சகட்ட எல்லை என ஒன்று உண்டு, அதனை தாண்டினால் என்றும் சிக்கல்தான்

அவரவர் எல்லைக்குள் அவரவர்கள் நின்றால் ஒரு சிக்கலுமில்லை என்பதுதான் வாழ்க்கை தத்துவம்.

எப்படியோ கேப்டன் விஜயகாந்த் தெம்பாகும் நேரம் இது, அவர்தான் வைகுண்டராஜனை நேரடியாக கண்டித்த முதல் மற்றும் ஒரே அரசியல்வாதி, இன்றுவரை அவரே தான்

ஆனால் இன்னும் ஒன்றும் இதனைபற்றி சொல்லவில்லை, சொன்னால் இதுதான் சாக்கு என யாரும் சர்ச்சை ஆக்குவார்கள் என யோசிக்கின்றாரோ என்னமோ?

தமிழக அணைகள்…..

 

கபினி அணை கட்டபட்டது 1974, ஹேமாவதி அணை கட்டபட்டது 1979 இன்னும் சிறிதும் பெரிதுமாக கன்னடம் அணை கட்டியிருப்பது 1970க்கு பின்புதான்

அதுவும் கபினியும், ஹேமாவதியும் காவேரியின் துணையாறுகள், தமிழகத்து பவானியும், நொய்யலும் போல, காவேரி அல்ல. காவேரி மீது கட்டவில்லை துணையாறுகள் மீதே என அது தந்திரமாக கிளம்பியதும், தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றபின்பே

அதாவது தமிழகத்தில் கழக ஆட்சிகள் அழிச்சாட்டியம் ஆரம்பித்த பின்னர்தான். அந்த தொடக்ககாலத்தில் கலைஞர் என்ன கிழித்தார் என சொன்னால், கொஞ்சமேனும் சிந்தனை இல்லாமல் பேசிகொண்டிருக்கின்றார்கள்

இதனை கூட தெரியாத சில பதர்கள்தான் காங்கிரஸ் காலத்தில் கன்னடன் அணை கட்டினான், கலைஞர் காலத்தில் அல்ல என பல்லவியினை மாற்றி பாடுகின்றன‌

இதில் கலைஞருக்கு குறையாத பங்கு எம்ஜிஆருக்கும் உண்டு, அவர் செய்த தவறை இவர் சரி செய்யவில்லை, இவரின் தவறை அவர் தொடவில்லை, அப்படியே தொடர்ந்தாகள்.

வரலாற்றினை மாற்றமுடியாது செம்பூத்து பறவை கூட்டமே, கொஞ்சமாவது படித்துவிட்டு பேசுங்கள், அல்லது சும்மா இருங்கள்,

அவரே இதுபற்றி கனத்த மவுனம் காக்கும்பொது, அவரை மென்மேலும் சிக்கலில் இழுத்துவிடுவது நீங்களே, அவரை காப்பாற்றுவதாக சொல்லி அவரையே அடித்துகொன்டிருக்கின்றீர்கள்.

அப்படி கலைஞர் பக்தி காட்டவேண்டுமானால், அறிவாலய கழிவறை சுவற்றில் வெள்ளை அடியுங்கள், வண்ணம் தீட்டுங்கள்

இந்த சுவரில் அல்ல.


தமிழக அணைகளை பற்றி சொன்னால், ஏய் திராவிட துரோகி, இலை பொறுக்கி, தமிழ்நாட்டில் கலைஞர் கட்டாத அணையா, அவர் இல்லை என்றால் ஒரு அணையுமில்லை என ஒப்பாரி வைக்க ஒரு கூட்டம் கிளம்பி இருக்கின்றது

மேட்டூர் அணை, முல்லை பெரியாறு அணை என சுதந்திரத்திற்கு முற்பட்ட அணைகள் குறிப்பிடதக்கவை. அதன் பின் கட்டபட்ட பரம்பிகுளம் ஆழியாறு, மணிமுத்தாறு, வைகை அணைகளும் குறிப்பிடதக்கவை.

அதன் பாசன பரப்பும், அது தேக்கி வைக்கும் நீரும் அப்படியானவை.

அதன் பின் திமுக கட்டியதெல்லாம் சுத்தமாக திட்டமிடாத, ஏதோ காண்டிராக்டருக்கு வேலைகொடுக்கவே ஆரம்பிக்கபட்ட அணைகள்

உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் நெல்லை மாவட்ட கொடுமுடியாறு அணையினை சொல்லலாம், அணை கட்டுவதற்கு முன்பு அப்பகுதி குளங்கள் நிரம்பிகொண்டுதான் இருந்தன, அணை கட்டியபின் என்னாயிற்று?

வந்து கொண்டிருக்கும் நீரை, அணை நிரம்பும் வரை குளங்களுக்கு நீர் இல்லை என அடைத்து கொள்வார்கள், எல்லா குளங்களும் காய்ந்து கிடக்கும், சரி இருக்கும் நீரை அனுப்புங்கள் என்றால் நோ..மழை வந்தால் மட்டும் திறப்போம் என்பார்கள்

மழை கொட்டினால் அணை திறக்காமலே குளங்களுக்கு நீர் ஓடி வந்து நிரம்பும், நீரை மறைக்கவா முடியும்? மழை கொட்டினால் அவ்வணையினை திறப்பார்கள், அது கடலுக்கு செல்லும்

சரி தேக்கி வைத்து கோடையில் தாருங்கள் என்றால் அணையின் நீர்மட்டம் பல்லை காட்டும், 10 லாரி தண்ணீர்தான் சேமிக்கமுடியும், அது குடிதண்ணீருக்கே போதாது

ஆக மழை வந்தால் திறந்துவிடவும், கோடைக்கு தேக்கி வைக்கமுடியாத அளவூ கொள்ளளவும் கொண்ட அணைகள் எதற்கு? மழை வந்தால் நிரம்பும் குளங்கள் பல நூறு வருட பாரம்பரியம் பொல தானாக நிரம்பிகொள்ளட்டம், இதற்கு ஏன் அணைகள்?

வைகையோ, காவிரி செழிக்கும் பட்சத்தில் மேட்டுரோ அதன் கொள்ளளவு அப்படி, அப்படி தேக்கலாம், அதன் தொலைநோக்கு பார்வை அப்படி.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் அப்படியே

அறவே திட்டமிடமால் அவசரமாக 4 காண்டிராக்டர் பிழைத்துகொள்ள அனுமதிக்கபட்ட அணைகள்தான் கலைஞர் அரசு கிழித்தது

ஆளாளுக்கு வந்து விளக்குகின்றார்களாம்

இவர்கள் ஒரு மாதிரியானவர்கள், யாராவது அதோ தெரிகிறது பார் கல்லணை, அதனை கட்டியது கலைஞர் என்றால் கொஞ்சமும் யோசிக்காமல், காவேரியினை தடுத்த கலைஞரின் ஆற்றல் பாரீர் என கொஞ்சமும் வெட்கபடாமல் சொல்லிகொள்வார்கள்

கலைஞரோ, புரட்சி தலைவனோ, தலைவியோ அல்லது பன்னீர் செல்வமோ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் மட்டுமல்ல, குட்டைக்கும் அணை கட்டி பிரச்சாரம் செய்யும் ஒரு மாதிரியான “தமாஷ்” பார்ட்டிகள்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாகவும், தடுத்து நிறுத்தவேண்டு என்றும்கு திமுக தலைவர் கருணாநிதி டுவிட்டரில் இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

காமராஜர் இருக்கும் வரை காவேரி சிக்கல் இல்லை, கலைஞர் முதல்வரான காலத்தில் கன்னடம் அணைகட்டும்பொழுது இப்படித்தான் அவரிடம் புகர் கொடுத்தார்கள், அவர் என்ன சொன்னார்?

“கன்னடம் எத்தனை அணையும் கட்டட்டும், நமக்கு வரவேண்டிய நீர் வந்தால் போதாதா”

அடேய் அவன் அவ்வளவு அணைகட்டியபின் இங்கு …னியா வரும் என யாரும் இவரிடம் கேட்கவும் இல்லை, அதன் பலன் இன்று தெரிகின்றது, காவேரி காய்ந்து கிடக்கின்றது.

அவர் ஆட்சி என்றால் ஒரு சமாளிப்பு, எதிர்கட்சி என்றால் ஓ என ஒப்பாரி, இதுதான் அவரின் அரசியல்

காவேரியினை வாழவைத்தவர் அல்லவா? இனி சிறுவாணியினை கக்க கிளம்பிவிட்டார்.

அன்றே முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைக்க ஒப்புகொண்டவர் எம்ஜிஆர், ஏன் என்றால் புரட்சி என்பார்கள்

ஒரு வசனகர்த்தா, ஒரு நடிகன், ஒரு நடிகை இவர்களால் இம்மாநிலம் படும்பாடு கொஞ்சமல்ல…

கிரிக்கெட்.. சீமான் சீற்றம், கராத்தே .. நக்கீரன் குமுறல்

ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் சக மல்யுத்த வீரரை திருமணம் செய்கிறார்

உயிருக்கு துணிந்தவர்கள்தான் மல்யுத்த வீரர்களாக முடியும், அப்படி துணிந்து மல்யுத்த வீராங்கனையினை திருமணம் செய்ய இன்னொரு மல்யுத்தவீரர்தான் முன்வருவார்,

கண்ணாடி போட்டு அலுவலகத்தில் ஒடுங்கிய தேகத்துடன் கம்பியூட்டர் தட்டுபவனுக்கா
அந்த தைரியம் வரும்?

ஒலிம்பிக்கில் அவர் எதிரியினை புரட்டிய காட்சி கண்ணிலே நிற்கும் அல்லவா? எவனாவது ரிஸ்க் எடுப்பான்?

ஒரு மல்யுத்ததிற்கு இன்னொரு மல்யுத்தம்தான் எதிர்கொண்டு நிற்கமுடியும், வாழமுடியும் 🙂


கிரிக்கெட்டை கைவிட்ட நாடுகள்தான் உலகில் சாதிக்கின்றன, ஜமைக்காவின் உசேன் போல்ட் அப்படித்தான் சாதித்தார் : சீமான் சீற்றம்

# இரன்டாம் இடம் பிடித்திருக்கும் பிரிட்டந்தான் கிரிக்கெட்டின் தாயகம் என்பது இவருக்கு தெரியாதா? ஜமைக்கா என்பது வெஸ்ட் இண்டீசின் ஒரு பகுதி என்பதுமா தெரியாது? இங்கிலாந்து கிரிக்கெட் அணி பற்றி கூட கேள்விபடாத தற்குரியா இவர்?

ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவும் கவனிக்கபட்ட நாடு, அவர்கள் என்ன கிரிக்கெட்டை விட்டுவிட்டார்களா?

இல்லை கிரிக்கெட்டில் இல்லா ஈரானும், இஸ்ரேலும் முதலிடத்தில் வந்ததா?

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் எல்லாம் கிரிக்கெட்டிலும் முத்திரை பதிக்கவில்லையா

எவ்வளவு பாரம்பரியம் மிக்கது விகடன் குழுமம், கொஞ்சம் கூட யோசிக்காமல் இவர் சொல்வதை எல்லாம் வெளியிடுமா? கொஞ்சமும் யோசிக்காதா?

விகடன் குழுமமே, இவரிடம் விழிப்பாய் இருங்கள், இல்லை என்றால் ஒருநாள் உலகம் உங்களை பார்த்து சிரிக்கும் நிலை வரும், இவர் அள்ளிவிடும் அலப்ப ரைகள் அப்படி.

கேட்க செவி இருந்தால் விகடன் கேட்கட்டும்

சரி, உங்களுக்குத்தான் இந்தியா பிடிக்காதே, ஈழதமிழனுக்க் எதிரியான இந்தியா எனக்கும் எதிரி என சொன்னவர்தானே நீங்கள், அப்படித்தானே காஷ்மீர் தீவிரவாதிகளுக்காக குரல் கொடுத்திர்கள்

அப்படி இருக்கும் பொழுது இந்தியா தங்கம் வென்றால் என்ன? அலுமினியம் வென்றால் உங்களுக்கு என்ன?

இப்படி எல்லாம் சொல்லி நீங்கள் இந்தியர் என நிரூபிக்க பார்க்கின்றீர்ககளா? ம்ஹூம் முடியாது

நீங்கள் பிரபாகரனின் தம்பி, ஈழ விடுதலையினை எதிர்க்கும் இந்திய தேசியம் உங்களுக்கும் எதிரி, அதனை நீங்கள் வழக்கம் போல மறக்கலாம், நாங்கள் மறக்கவே மாட்டோம்.

நீங்கள் பிரபாகரனின் தம்பி, இங்கு இருக்கும் அகதி நீங்கள் அவ்வளவுதான் என்பது எங்கள் முடிவு.


கராத்தே என தெரியாதவர்களிடம் கராத்தே சங்கம் இருக்கும் அவல நிலை : நக்கீரன் பத்திரிகை குமுறல்

விடுங்கள், மக்கள் பணி என்றால் என்னவென்றே தெரியாத அரசியல்வாதிகளிடம் பதவிகள் சிக்கவில்லையா?

ஊடக நேர்மை என்னவென்று தெரியாத பத்திரிகைகளிடம் தமிழக செய்திபிரிவு சிக்கவில்லையா

ஒலிம்பிக் என்றால் என்ன என தெரியாதவர்களிடம் இந்திய ஓலிம்பிக் சங்கம் சிக்கவில்லையா?

அப்படித்தான் கராத்தேவும் தெரியாமல் சங்கத்திடம் சிக்கிவிட்டது அவ்வளவுதான்