சீனப் புரட்சி தலைவன் மா சே துங்

Stanley Rajan's photo.Stanley Rajan's photo.

படத்தில் சீன புரட்சி தலைவனும், தமிழக புரட்சி தலைவனும்

பட்டம் ஒன்றுதான். அர்த்தம்தான் வேறு . முதலாவது லெனின் வழி புரட்சியாளன், இன்னொன்று “அறிஞர்” அண்ணா வழி புரட்சியாளன்.

மா சே துங் : பிறப்பு : 26 – 12 – 1893  இடம்: ஷாவோஷான் :: இறப்பு : 09 – 09 – 1976  இடம் : பீஜிங்

இன்று மா சே துங்  நினைவு நாள்.

அன்றைய சீனா வறுமையில் இருந்தது, பிரிட்டிசார் தென்சீனாவில் அபினிபோர் நடத்தி அதனை சீரழித்திருந்தனர், அப்பக்கம் ஜப்பான் மிரட்டிகொண்டிருந்தது. ஒரு நல்ல தலைவனில்லா தேசமாக பரிதவித்து ஏழ்மையில் இருந்தது அது.

புரட்சியாளன் யாட் சன் மன்னர் ஆட்சியினை மாற்றி சீனாவினை மக்களாட்சி நாடாக மாற்றிய போதிலும், ஷியாங் காய் கேக் அதன் மன்னர்போல நடந்துகொண்டிருந்த காலமது, அப்பொழுதுதான் களத்திற்கு கம்யூனிஸ்டாக வந்தார் மா சே துங்.

ரஷ்ய புரட்சி அவரை கவர்ந்தது, அதனை போலவே கம்யூனிசத்ததை சீன மரபிற்கேற்ப மாற்றினார். இந்தியாவில் இருந்த அத்துணை சீர்கேடுகளும் அங்கும் இருந்தன, இனவாதம், மொழி, பெண் அடிமைத்தனம் ஏராளம் இருந்தன‌.

இன்னொன்று சீன ஞான மரபு என்பது இந்தியா போன்றது, அதாவது சாந்தம் சாத்வீகம். அடித்தால் உன்னை தற்காத்து கொள், மாறாக திருப்பி அடிக்காதே என்பதையொத்த சிந்தனை அது. குங்பூ,கராத்தே என அவர்கள் கலை எல்லாமே தற்காப்பு, அந்த தற்காபில்தான் மங்கோலியரிடம் அடிவாங்கினார்கள்.

இல்லாவிட்டால் வெடிமருந்து கண்டுபிடித்த தேசம் வெடிகுண்டு செய்யாமல் அதனை வேடிக்கைக்கு மட்டும் வைத்திருக்குமா? சண்டையிட கத்தி, கம்பு, கோடாரி என கிளம்பியவர்கள் வெடிகுண்டுகள் செய்யவில்லை, ஆனால் வெடிகள் செய்யும் நுட்பம் தெரிந்திருக்கின்றது.

இதுதான் அநாளைய சீனா, 100 வருடம் முன்புவரை அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். அதற்கு முன் எல்லாம் தற்காப்பு மட்டுமே.

மங்கோலியரிடம் இருந்து தங்களை காத்துகொள்ளத்தான் அப்பெரும் சுவரினை கட்டினார்கள். அப்படி தற்காப்பு அவர்களது.

பின் மங்கோலியரை தொடர்ந்து போர்த்துகீசியர், வெள்ளையன், ஜப்பான் எல்லோரிடமும் நன்றாக அடி வாங்கினார்கள்.

புத்த சாத்வீகம் ஒரு பக்கம் என்றால், சீனம் உள்வாங்கி இருந்த கன்பூசுயஸின் தத்துவமும் அம்மாதிரியே.

கன்பூசுயசும் அம்மாதிரி போதனைகளை கொடுத்திருந்தார், அவர் தான் சீன பெரும் ஞானி, பெரும் மகான். அவரை சாடும் தைரியம் அதுவரை யாருக்கும் இல்லை. அடித்தால் பொறுத்துகொண்டு தத்துவம் பேசவேண்டும், உயிரை மட்டும் தற்காத்துகொள்ளவேண்டும் என்பதுதான் அவர்கள் அந்நாளைய சிந்தாந்தம்.

மாவோ அதனை தைரியமாக சாடினார், கன்பூசியஸ் தூக்கி தூற எரியபடவேண்டுமென்றார், இத்தனை கோடிபேர் இருந்தும் தம்மா துண்டு ஜப்பான் எல்லாம் நம்மை அடிப்பதா? என அவரின் வாதம் அவருக்கு பெரும் ஆதரவளித்தது.

சியாங்கினை எதிர்து அவர் போராடியபொழுது இரண்டாம் உலகபோர் வந்தது, ஜப்பானிய படைகளையும் அவர் சமாளித்தார்.

மாண்டரின் மட்டுமல்ல, ஹாக்கியான், கேண்டனீஸ் என ஏராளாமன மொழிகள் வாழும் நாடு எனினும் சீனா எனும் ஒற்றை சொல்லுக்கு அடியில் அவர்களை ஒடுங்கிணைத்தார்.

இப்படி கிட்டதட்ட 30 ஆண்டுகால போருக்கு பின்னர்தான் சீன மக்கள் குடியரசை அவரால் அமைக்க முடிந்தது, மக்களை ஒரே சீனமாக திரட்டுவதில் அவர் வென்றிருந்தார்.

பழைய தலைநகரினை விட்டு, பீஜிங்கில்தான் இது மக்கள் குடியரசு சைனா, என அறிவித்து அதனை தலைநகரமாகவும் ஆக்கினார்.

அவர் ஆட்சிக்கு வரும்போது அது ஏழை பின் தங்கிய விவசாய வறுமை சீனா. மிக பலவீனமான சீனா. அணுகுண்டு மட்டும் விழவில்லை என்றால் ஜப்பானால் எப்பொழுதும் விழுங்கபடும் ஆபத்து கொண்ட துவண்ட சீனா.

ஆனால் மாவோ அசரவில்லை, நாம் உறங்கும் அரக்கர்கள் நாம் எழும்பினால் உலகம் தாங்காது என்றார். பல வகையான திட்டங்கள், அதிலும் பல தோல்விகள், நகரங்களில் ஆங்கில மோகம் கொண்டோரை அடித்து கிராமங்களுக்கு விவசாயம் செய்ய சொன்ன கலாச்சார புரட்சி வெற்றியா தோல்வியா என்பது இன்னொரு விஷயம் ஆனால் சீனாவின் விவசாய புரட்சிக்கு அதுவே அடிப்படை.

புத்தமதம் இருக்கும் வரை சீனா உருப்படாது, அது மறுபடியும் மக்களை அமைதி,சரணம் எனும் இம்சைக்குள் தள்ளும் என்றுதான் திபெத்தினை பிடித்தார், சீனாவின் முதல் வரலாற்று ஆக்கிரமிப்பு அது. அதுவரை புத்தமதத்தின் தலமையிடம் என சீனா திபெத்தை வணங்கித்தான் வந்தது.

அருணாசல பிரதேச புத்த மடாலயம் மூடபடாவிட்டால் அது சீனாவின் ஒரு பகுதியாகும் என பகிரங்கமாக மிரட்டினார், போர் தொடுத்தும் பார்த்தார்.

கொரிய போரையும் பின்னணியில் நடத்தியது அவரே, பின்னர் அணுகுண்டினையும் செய்து சீனாவினை பெரும் ஆசிய வல்லரசாக்கினார்.

ஆனால் இன்னொருபக்கம் சோவியத் யூனியனுடன் எல்லை தகறாறு வந்தபொழுது அடங்கித்தான் போனார், சோவியத்தின் அன்றைய பலம் அப்படி. அழிவுகளை தவிர்த்தார் மாவோ.

மாவோ அந்நாட்டின் பெரும் சக்தி ஆனார், நல்ல தலைவனை அதாவது தன்நாட்டு பெருமையினை உயர்த்துபவனை மக்கள் கொண்டாடுவார்கள், அப்படி பெரும் சீன தலைவன் ஆனார் மாவோ.

அவரோ ஐநாவில் நிரந்தர இடம்பெற்ற ஒரே ஆசிய நாடு எனும் பெருமையினை சீனாவிற்கு வாங்கிகொடுத்தார்.

சுருக்கமாக சொன்னால் வரலாற்றில் முதல்முறையாக சீனர்கள் அவர் தலமையில் திருப்பி அடிக்க தொடங்கினர்.

சோவியத்துடன் ஏற்பட்ட பிணக்கு அவரின் போக்கினை மாற்றியது, இருவரும் கம்யூனிஸ்டுகள்தான் ஆனால் மாவோ வித்தியாசமானவர், உலகம் முழுக்க பொதுவுடமை என்பதெல்லாம் அவருக்கு பொருந்தவில்லை, சீனா வாழ்ந்தால் போதும். அதற்கு கம்யூனிசமோ சர்வாதிகாரமோ எது துணைக்கு வந்தாலும் போதும், சீனா உயர்ந்தால் போதும். கொள்கைகள் எல்லாம் எப்படியும் போகட்டும்.

அப்படி அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சனை சந்தித்து போக்கினை மாற்றினார். உலகின் சரிபாதியில் செங்கொடி பறந்தபொழுது அமெரிக்காவிற்கு சீனாவில் கால்பதித்தது நிம்மதி பெருமூச்சானது. உலக வரலாற்றில் குறிப்பிடதக்க மாறுதல் அது.

ஆனால் ராணுவ உறவல்ல, பொருளாதார உறவினை தொடங்கி வைத்தார், அப்படி சீன கதவினை அவர் திறந்து வைத்தபின்புதான் சீன பொருளாதாரம் சீற தொடங்கியது, பெரும் பண மழை கொட்டியது, மாவோவின் பெரும் ராஜதந்திரம் அது.

அப்படி ஏழை விவசாய நாடாக, அடிபடும் சமூகமாக இருந்த சீனாவினை பெரும் பலமிக்க நாடாக மாற்றினார் மாவோ. ஆனால் சீனா வளரவேண்டும் என நினைத்தாரே அன்றி, கலாச்சாரதை விட்டுவிட கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார்.

சீனமொழி, சீன உடை என பல விஷயங்களில் அவர் சமரசம் செய்யவே இல்லை, இறுதிவரை இல்லை. சீன ஆடையினை பிரதிபலிக்கும் மாவோ கோட் இன்றும் சீனாவில் பிரபலம்.

அப்படி நாட்டிற்கு பெரும் அஸ்திவாரத்தை அமைத்துவிட்டுத்தான் இதே செப்டம்பர் 9ல் இறந்தார் மாவோ, பின்னர் வந்த டெங் ஜியோ பிங் காலத்தில் அது மேலும் வளர்ந்தது.

இன்று சீனா ஜப்ப்பானை மிரட்டுகிறது என்றால் அதற்கு காரணம் அன்று மாவோ ஜப்பானிய படைகளுடன் மோதிய தொடர்ச்சி. மங்கோலியாவினை அடக்கி கையில் வைத்திருக்கிறது என்றால் அது ஒரு திருப்பி அடித்தல், திபெதினை பிடித்திருக்கிறது என்றால் புத்தம் மீதான கட்டுப்பாடு, ஹாங்காங்கினை திரும்ப பெற்று, தனி நாடு எல்லாம் சாத்தியமே இல்லை என்றால் அது அவர்கள் பலத்தின் வெளிப்பாடு என எல்லாமோ மாவோ கற்பித்த போதனைகள், காட்டிய வழிகள்.

ஒன்றுமில்லாமல் இருந்தவர்களுகு எல்லாம் அவர்களுக்கு கற்பித்து கொடுத்து அவர்களை உலகின் பெரும் சக்தியாக மாற்றியது மாவோ, சந்தேகமே இல்லை.

அதாவது வரலாற்றில் அடிவாங்கிய சீனா அவர் தலமையில் திருப்பி அடிக்க தொடங்கியது, அது இன்னும் தொடரும்.

மாவோவின் வழியில் மக்களை இணைத்துசிந்திக்க வைத்து ஆயுதம் தூக்கி வெற்றிபெறலாம் என செய்து காட்டியவர் வியட்நாமின் ஹோ சி மின். அவர் பெரும் அடையாளம், இன்றும் உலக பெரும் பிம்பங்களில் ஒருவர்.

ஆனால் துப்பாக்கி முனையில் புரட்சி செய்யலாம், மக்களை எல்லாம் சிந்திக்கவே விடகூடாது என உலகில் செய்து நாசமாய் போய் நாட்டை சுடுகாடாக்கி, ஏராளமான மக்களை அழித்து தானும் அழிந்தவர்கள் கம்போடியாவின் போல்பாட்டும், ஈழத்து பிரபாகரனும், இன்னும் சில ஆப்ரிக்க அடாவடிகளும் உண்டு.

அதாவது போராட்டம் என்றால் மக்கள் பலியாவார்கள், இழப்புகள் இல்லாமல் போராட்டம் இல்லை. ஆனால் சிந்திக்க வைத்து மக்களை ஒன்றுபடுத்தி போராட வைத்தால் அது ஒரு நாளில் வெற்றிபெறும்.

வியட்நாம் அப்படித்தான் ஹோசிமின் இறந்த‌ பின்னரே வென்றது, அவர் ஏற்றிவைத்த எழுச்சி அப்படி, கொடுத்த சிந்தனை அப்படி.

ஆனால் ஈழத்துநிலை என்ன? சர்வாதிகாரம் ஒரு நாளும் மக்களுக்கான விடுதலையினை பெற்றுதராது, சரி அதனை சீமான் பார்த்துகொள்வதாக சொல்லி இருக்கின்றார்.

அப்படி ஒரு தேசத்தின் தலைவிதியினை மாற்றிய , அவன் சொன்னபடியே உறங்கும் அரக்கர்கள் நாம், எழுத்தால் உலகம் பணியும் என அச்சமூகத்தை எழுப்பிவிட்ட பெரும் மாவோவின் நினைவு நாள்.

அவர் கனவு கண்ட சீனா இதுதான், ஆனால் சிலமாற்றங்களுடன் அது மலர்ந்திருக்கின்றது, குட்டைபாவாடை, கோர்ட் டிசர்ட் எல்லாம் அவருக்கு பிடிக்காது, வெளிநாட்டு உணவுகடைகளை கூட அவர் வரவேற்றதில்லை, அதனை தவிர சீனா அடைந்திருக்கும் எல்லா உயர்வும் அவர் கனவு கண்டதே.

அண்டை நாடுகளுடன் செய்துகொண்டிருக்கும் தகறாறுகளும் அப்படியே.

அவர் இறந்தபின் அம்மக்களுக்கு அவரை புதைக்க மனமில்ல்லை, காரணம் அவர்களுக்காக வாழ்ந்து அவர்களை இன்று உலக அரங்கில் உயரவைத்த அவனை புதைக்க விரும்பவில்லை.

லெனின் போல அழியா உடலாக மாற்றி பீஜிங்கில் வைத்திருக்கின்றார்கள், அதாவது அவர் நவீன நகரமாக மாற்றிய பீஜிங்கில், அதே பிஜிங்கில்.

அவர் உறங்கும் இடம்தான் இன்று ஆசியாவின் பிரதான பலம் வாய்ந்த இடம், அதில் நாங்களும் பலமானவர்கள் என‌ ஒலிம்பிக் நடத்தினார்கள், பல அறிவிப்புகளால் உலகை மிரட்டுவார்கள். மாணவர்கள் ஆட்சிமாற்ற போராட்டம் நடத்தினால் கொடூரமான எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டோம் என அங்குதான் உலகிற்கு ரத்த கரங்களுடன் காட்டினார்கள்.

மாவோ மீது ஏகபட்ட சர்ச்சைகளும் உண்டு, குற்றசாட்டு உண்டு. அனால் போராடி ஆட்சியினை பெற்று, மிக பலவீனமான சீனாவினை பலமாக மாற்றிய அச்சாதனையில் அவர் மீது மக்களுக்கு பெரும் அபிமானமே தவிர வேறு ஏதுமில்லை.

கன்பூசியஸ் இடத்தினை சீனாவில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தினை தன்னால் நிரப்பிகொண்டார் மாவோ. வரலாற்று முத்திரை அவர்.

இந்நாளை சீனர்கள் சிறப்பாக அனுசரிப்பார்கள். அவரின் உடல் இன்று காட்சிக்கு வைக்கபடும், சமீபத்தில்தான் அவரின் பேத்தி அதனை காண அனுமதிக்கபட்டார்.

காரணம் மாவோ என்பது தேசிய சொத்து, தனிபட்ட யாரும் எந்த உரிமையும் கொண்டாட முடியாது.

அவர் அந்த தேசத்தின் தலைமகன். கடமையினை செய்து நாட்டை உயர்த்திய பெருமகன். இன்று பணம், ராணுவம், விளையாட்டு,விண்வெளி என உலகில் பெரும் சக்தி சீனா. உறுதியாக சொல்ல்லாம் தவிர்க்க முடியா சக்தி.

ஆசியாவில் ஒரு நாடு ஐரோப்பியருக்கும் அமெரிக்கருக்கும் பகிரங்க சவால் இந்நாளில் விடமுடியுமென்றால் அது சீனாவால் மட்டுமே சாத்தியம்.

சீனா எனும் குடியரசு அமைய 30 ஆண்டுகாலம் போராடி, அதன் பின் அது வல்லரசு எனும் நிலை அடைய‌ 25 ஆண்டுகளில் அடித்தளம் அமைத்தவர்.

அவர்தான் உண்மையில் புரட்சி தலைவர், உலகின் புரட்சிகளுக்கு லெனின் போலவே தலைவர். சீனாவின் பெரும் புரட்சிதலைவர்.

அவர் உடல் அழியாமல் இருப்பதில் அர்த்தமிருக்கின்றது, நன்றிக்குரியவர்.

தமிழகத்தில் முன்பு ராமச்சந்திரன் எனும் முதல்வர் இருந்தார், சினிமா நடிகர். அவர் புரட்சி வேடங்களில் நடித்ததால் புரட்சி தலைவர் என அடைமொழி இட்டுகொண்டார், புரட்சி என்றால் சே,லெனின்,மாவோ, ஹோ வரிசை எல்லாம் இல்லை.

சும்மா சினிமாவில் ஆட்டுகுட்டி தூக்குவார், கிழவிகளை அம்மா என தூக்குவார், சிறுவர்களை தூக்குவார், சினிமா சண்டை இடுவார், சகநடிகர்களான நம்பியாரையோ, அசோகனையோ பார்த்து “இது அநியாயம், இது அக்கிரமம் இதற்கெல்லாம் பதில்சொல்லியே தீரவேண்டும்” என யாரோ எழுதிய வசனத்தை பேசிகொண்டே இருப்பார், அல்லது நாயகியோடு படத்தில் கொஞ்சிகொண்டே இருப்பார்.

இதற்கு தமிழ் மக்கள் கை தட்டவேண்டும் அதுவும் காசு கொடுத்து கைதட்டவேண்டும்.

இதனையே புரட்சி என தமிழகத்திற்கு சொல்லிகொடுத்தார். தமிழகமும் அதனை ஏற்றுகொண்டது, அவர் சொன்ன சின்னத்தில் வாக்களித்தது, தேர்தல் எல்லாம் எதற்கு? வாக்கு ஆயுளுக்கும் உனக்குத்தான்.

ஏன் நீ செத்த பிறகு கூட உனக்குத்தான் என சத்தியம் செய்தது தமிழகம் இன்றுவரை அதனை தொடர்கிறது, காரணம் அவர் செய்த புரட்சி அப்படி என நம்பிகொண்டிருக்கின்றது.

அவரை தொடர்ந்தும் புரட்சிகள் வந்தார்கள், அந்த‌ வரிசையில் புரட்சிதலைவி வந்தது ஒருவகை.

அதன் பின் அந்த இடத்தை பிடிக்க பலர் கூட்டமாக அலைகின்றனர், அப்படிபட்ட இடம் அது, அதனை விட முக்கியம் அப்படிபட்ட விசித்திரமான மக்கள் அவர்கள்.

அந்த ராமச்சந்திரன் புரட்சிதலைவர் எனும்பட்டத்தோடு பின் தமிழக‌ முதல்வராக இருந்தபொழுது பெரும் சீடர்கோடிகள் இருந்தார்கள். அவர்களை இன்று நினைத்தால் பரமார்த்த குருவும் அவர் சீடர்களும் எனும் கதை நினைவுக்கு வரகூடாது.

ஆனால் அப்படி ஒரு காலம் இருந்திருக்கின்றது.

ஒருநாள் அந்த புரட்சி தலைவர் இறந்துவிட்டார், அவர் சாகவே மாட்டார் என நம்பிகொண்டிருந்த சீடர் கூட்டத்திற்கு பெரும் துயரம். தாங்கமுடியவில்லை.

அழுதார்கள், சும்மா அழவில்லை “புரட்சிதலைவா..” என அழும்போது அவர்களுக்கு உண்மை புரட்சி நினைவுக்கு வந்தது, அப்பொழுது லெனின், மாவோ வந்தார்கள்.

அப்பொழுது மட்டும் லெனின், மாவோ செய்த செயற்பரிய செயல்கள் நினைவுக்கு வந்தால் எழுந்து போயிருப்பார்கள், ஆனால் இவர்கள் சீடர்கள் அல்லவா? அவர்களின் அழியா உடல் நினைவுக்கு வந்தது.

உடனே அபப்டி தங்கள் புரட்சி தலைவரையும் அப்படி அழியா பொருளாக்க முடிவெடுத்தார்கள். கிட்னி விற்றேனும் அதனை செய்ய தயாரானார்கள்

ஆனால் இந்திய மத்திய அரசிலிருந்து அனுமதி கிடைக்கவில்லை, ஒருவேளை கிடைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? தமிழகத்தில் ஒன்றும் ஆகியிருக்காது, இது இன்றும் அப்படியே இருக்கின்றது.

ஆனால் லெனின், மாவோ, வரிசையில் தமிழக புரட்சி தலைவர் உடலும் இடம்பெற்றிருக்கும். அப்படி ஆனால் என்ன ஆகும்? இரண்டே வாய்ப்பு.

ஒன்று மாவோ எழும்பி வந்து தன் உடலை எரித்திருப்பார், லெனின் வந்து ஜார் மன்னர் நாற்காலியில் மன்னிப்பு கேட்டிருப்பார். அல்லது சீனரும். ரஷ்யரும் சென்னைக்கு வந்து பூண்டோடு அழித்திருப்பர், அப்படி ஒரு அவமானம் அப்பெருமக்களுக்கு வர விடுவார்களா?

எப்படியோ அந்த பெரும் ஆபத்துக்களை தாண்டி உலக புரட்சிதலைவன் மாஸ்கோவிலும், சீன “புரட்சி தலைவன்” பீஜிங்கில் தூங்கிகொண்டிருக்கின்றான்.

ஆனால் அவர்கள் நாடு உச்சத்தில் இருக்கின்றன, சோவியத்தாக இல்லாவிட்டாலும் ரஷ்யா இன்றும் உலகில் பலம் வாய்ந்த நாடே.

அவர்கள் கொடுத்து வைத்த மக்கள் அப்படி புரட்சி தலைவர்கள் கிடைத்திருக்கின்றார்கள்.

நாமோ கிடைத்த காமராஜரை எல்லாம் விரட்டிவிட்டு கூத்தாடிகளை எல்லாம் புரட்சியவாதிகளாக ஆக்கினோம், இன்னும் ஆக்குவோம்.

நாம் அப்படித்தான், இப்போதைக்கு திருந்தவே மாட்டோம்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s