நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி காலமானார்.

Image may contain: 1 person , glasses and close-up

நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி காலமானார்.

அவர் இயற்பெயர் நாராயண சுவாமி, சுயமரியாதை இயக்கத்தில் கலந்தபின் நெடுஞ்செழியன் என தன் பெயரை மாற்றிகொண்டு முழங்கினார்.

பெரியார் கழகத்திலும், திமுகவிலும் நெடுஞ்செழியனின் இடம் பிரதானம், திமுகவினை தாங்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர், அதனால் அவர்களாக “நாவலர்”,”நடமாடும் பல்கலைகழகம்” என்றெல்லாம் பட்டம் கொடுத்து மகிழ்ந்தனர்

அவர்களுக்கென்ன பட்டம் கொடுப்பது என்ன நோபல் கமிட்டியா? ஐ.நா வா? இவர்களாக அறிஞர், பேரரிஞர், கலைஞர், போர்வாள், தளபதி, நாவலர், புரட்சி நடிகர் என தாங்களே தங்களுக்கு பட்டம் சூட்டி கொள்வர், அதாவது அவர்கள் அவர்களையே புகழ்ந்துகொள்வர்.

நெடுஞ்செழியனை கொண்டாடியது எல்லாம் தேர்தலில் வெல்லும் வரை

ஆட்சிக்கு வரும்பொழுது அண்ணா டெல்லி பாராளுமன்றத்திற்கும் தேர்வாகி இருந்தார். அண்ணா டெல்லியிலும் நெடுஞ்செழியன் தமிழகத்தின் முதல்வராகவும் பதவியேற்கத்தான் முதலில் ஏற்பாடு, இதோ மறைந்த விசாலாட்சிதான் அதனை உறுதிபடுத்தியவர்

நிச்சயம் தமிழக முதல்வராகும் முழு தகுதியும் அவரிடம் இருந்தது.

ஆனால் கலைஞரின் சித்து விளையாட்டுக்கள் மர்ம ஆட்டம் ஆடின, ஆடிவிட்டு ஒன்றும் அறியாதவர் போல அண்ணா பக்கம் வந்து கன்னத்தில் கைவைத்துகொள்வது கலைஞரின் ஸ்டைல்.

பார்த்தீர்களா? ஒன்று நீங்கள் இருங்கள் இல்லை இன்னொருவரை வையுங்கள், என்னை கூட முதல்வராக சிலர் சொல்கின்றார்கள், ஆனால் அண்ணாவினை மீறி நான் முதல்வராகமாட்டேன் என மாய அம்புகளை கலைஞர் ஏவியதோடு மட்டுமல்லாமல்

நெடுஞ்செழியன் முதல்வராக அறிவிக்கபட இருந்த கூட்டத்திற்கு முன் ஒரு கூட்டத்தை கூட்டி அண்ணா முதல்வர் என அறிவித்தும் விட்டார்,

இதுதான் கலைஞர்.

சென்னையிலே தங்கினார் அண்ணா

அதிலிருந்தே நெடுஞ்செழியன் சறுக்கல் தொடங்கியது, அண்ணா மறைந்ததும் இடைக்கால முதல்வரானார், பின் அடித்து கலக்கிய கலைஞர் முதல்வரானதும் நெடுஞ்செழியன் முணுமுணுக்க தொடங்கினார்

அதிமுக தொடங்கும் போது எம்ஜிஆரை திட்டினார், கொஞ்சநாளில் எம்ஜிஆர் போலவே கட்சியும் தொடங்கினார், அதன் பெயர் மக்கள் திமுக ( மதிமுக 🙂 ) அது உருப்படவில்லை.

எந்த நெடுஞ்செழியனை நாவலர், பல்கலைகழகம் என்றேல்லாம் கொண்டாடினார்களோ, பிரிந்த பின் அவரை ஆட்டுதாடி என்றார்கள், செல்லாக்காசு சென்றார்கள்.

பின் எம்ஜிஆரோடு ஐக்கியமானார்

அங்கு எம்ஜிஆர் காலமானதும் கொஞ்சநாள் இடைக்கால முதல்வரானார், பின் ஜெயா காலத்தில் நால்வர் அணி நடத்தினார், அப்பொழுதுதான் “உதிர்ந்த மயிர்” என அழைக்கபட்டார்,

சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார், இவரை எதிர்த்து அதிக வோட்டு வாங்கியவர் எஸ்.வி சேகர்.

பின்னும் கட்சிக்கு வந்தார் சசிகலா புரட்சியில் அன்னார் அமைதியானார், அப்படியே காலமும் ஆனார்

தொடர்ந்து அதிமுகவில் இருந்த மனைவி விசாலாட்சி இன்று காலமாகி இருக்கின்றார்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணங்களின் நெடுஞ்செழியனின் பேச்சும் எழுத்தும் ஒன்று, மனிதருக்கு பேச தெரிந்த அளவு அரசியல் தெரியவில்லை, கலைஞர் வரிசைக்கு வந்திருக்கவேண்டியவர், அன்பழகன் வரிசை, பன்னீர் செல்வம் வரிசைக்கு வந்ததுதான் கொடுமை.

திமுகவில் இருந்து விரட்டபட்ட பலரின் மனைவியர் அதிமுகவில்தான் இருந்திருக்கின்றனர், சம்பத் எனும் பெரும் தலைவரின் மனைவி சுலோச்சனா போலவே விசாலாட்சியும் இருந்திருக்கின்றார்

வைகோ விரைவில் அதிமுகவில் இணையும் அறிகுறி இருப்பதால் நாஞ்சில் சம்பத் குடும்பம் போலவே, வைகோ குடும்பத்திற்கும் அவ்வாய்ப்பு கிடைக்கலாம்.

எப்படியும் தன் கணவன் முதல்வராவார் என காளிமுத்து மகளும் காத்திருக்கின்றார்.

சரி அது ஒருபுறம் இருக்கட்டும்

நெடுஞ்செழியன் திருவாரூரில் பேச வரும்பொழுது அவருக்கு தோரணம் கட்டி, சோடா உடைத்து கொடுத்து அருகில் நின்றது கருணாநிதி, அதவாது பள்ளி மாணவன் கருணாநிதி.

அதே கருணாநிதி அண்ணாவிற்கு பின் கட்சியினை ஆட்டி வைத்து நெடுஞ்செழியனை ஓட விரட்டும்பொழுது விசாலாட்சி மனம் எப்படி இருந்திருக்கும்?

இவ்வளவிற்கு எம்ஜிஆரை மிக கீழ்தரமாக விமர்சித்தவர் நெடுஞ்செழியன், அடுத்தவன் மனைவியினை கதற கதற தூக்கிய ராவணன் எனும் அளவிற்கு எம்ஜிஆர் மீது தாக்குதல் இருந்தது.

அப்படி எல்லாம் இருந்தபின்னும் அவரால் திமுகவில் நீடிக்க முடியவில்லை.

ஒரு பெண்ணுக்கு தன் கணவன் அவையத்து முந்தியிருப்பதில் உள்ளூர ஒரு மகிழ்வு இருக்கும், முதல்வர் பதவியினை தொட்டுவிடும் தூரத்தில் தவறவிட்டபொழுது அவர் மனம் துடித்திருக்கலாம்?

ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக வளைய வந்த மதிப்பிற்குரிய நாவலர் நெடுஞ்செழியன், கட்சியினை கால்தேயும் அளவு நடந்தும் கத்தியும் வளர்த்த நெடுஞ்செழியன், ஆட்சிக்கு வந்ததும் ஆட்டுதாடி, உதிர்ந்தமயிர் என்றெல்லாம் கொத்தி கிழிக்கபட்டபொழுதும் அவர் மனம் எப்படி சிந்தித்திருக்கும்?

அரசியல் அப்படித்தான் அதில் உழைப்பு, அர்பணிப்பு எல்லாம் அர்த்தமே இல்லை, அசந்தால் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

இதே பன்னீர் செல்வத்தின் மனைவியினை பார்க்கும் பொழுது சிறிய பொறாமை இருந்திருக்குமா? அல்லது நெடுஞ்செழியன் அண்ணாவோடு கட்சி தொடங்கும் பொழுது 1 வயது குழந்தையாக இருந்த ஜெயாவின் அரசில் பன்னீர் செல்வம் போல இருக்கும் கொடும் காலம் இல்லாமல் இருந்ததை எண்ணி மகிழ்ந்தாரா?

சொல்லாமலே சென்றுவிட்டார்.

எல்லா பெண்களுக்கும் தன் கணவர் பெரும் உச்சத்தை அடைவதை காணும் ஆசை மனதிற்குள் உண்டு.

சுலோச்சனா சம்பத்திற்கு நிகழ்ந்த பெரும் கொடுமையினை நினைத்தே மனம் நொந்திருந்தார்

வி.என் ஜாணகி அதில் அந்த ஆசனத்தில் கொஞ்சநாள் இருந்துவிட்டே இறந்தார்.

அதில் தயாளு அம்மாள் கொடுத்து வைத்தவர், கணவனும் மகனும் முதல்வர் எனும் பெரும் அடையாளத்தோடு இருந்திருக்கவேண்டியவர், பாதிதான் நிறைவேறியிருக்கின்றது,

நிச்சயமாக கணவரை தவிர அவர் ஆசை நிறைவேற யாரும் தடை இல்லை.

விசாலாட்சி நெடுஞ்செழியனின் மனைவி மனம் என்ன சிந்தித்திருந்தது என தெரியாது, ஆனால் நெடுஞ்செழியனுக்கு பெரும் அரசியல் எதிர்காலம் இருந்ததும், பின் அது நாசமாய் போனதும் உண்மை

ஆனால் மனிதர் கொஞ்சமாவது சவால் எடுத்த்து பார்த்தார், க.அன்பழகன் அதில் சமத்து. கலைஞரின் பாக்கெட்டில் தானாக அமர்ந்து கொண்டார்.

நாத்திகர், கருப்பு சட்டைக்காரரின் மனைவி என்றபொழுதும் இந்த விசாலாட்சி பங்காரு அடிகளின் பக்தர் என்பதுதான் வினோதம்.

இது அவர் பங்காரு பக்தராகும் முன்பே ஆத்திக மனைவி எனும் வகையில் பிரச்சினை ஆனது, சிவாஜி கணேசனே திருப்பதி சென்றதால் ஓட விரட்டபட்ட காலமது, நெடுஞ்செழியன் மீதும் கண்டனம் பாய்ந்தது

“நெடுஞ்செழியன் மனைவிக்கு பயப்படுவார்” என திமுகவினர் கொளுத்தி போட, “ஆம். என்ன செய்ய? அவர்கள் தலைவனை (அண்ணா அல்ல) போல எனக்கு வப்பாட்டியா இருக்கு..” என பகிரங்கமாக கேட்டவர் நெடுஞ்செழியன்

மிக அபூர்வமாக ஒரே மனைவியுடன் வாழ்ந்த திமுக பிரபலம் அவர், பின் எப்படி கட்சியில் உருப்பட முடியும்?

அவ்வகையில் விசாலாட்சி அம்மையார் கொடுத்து வைத்தவர்

நெடுஞ்செழியன் மறைந்தபொழுது அஞ்சலி கவிதை வடிவில் கலைஞரிடம் இருந்து வந்தது, இப்பொழுதும் மாதரசி, மங்கையர் திலகம் எனும் வரிகளோடு வரலாம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து அஞ்சலி செலுத்தியதாக விசாலாட்சியின் மகன் சொல்லியிருந்தார்.

நள்ளிரவு என்னென்ன அறிவிப்புக்களோ வரும் தேசமிது, ஆச்சரியமாக அப்பலோவில் இருக்கும் முதல்வருக்கும் அவ்வப்பொழுது திடீர் விழிப்பு நள்ளிரவில் வருகின்றது, ஒரு இரவில் வாக்களியுங்கள் என்கின்றார், மறு இரவில் அஞ்சலி செலுத்துகின்றார்

பகலெல்லாம் அவரிடமிருந்து ஒரு அறிவிப்பும் வரவில்லை, நள்ளிரவில் மட்டும்தான் அறிவிப்பு வருகின்றது, குணமடைந்து அவர் திரும்ப பிரார்த்திப்போம், விரைவில் வருவார்

நெடுஞ்செழியன் என்பவர் எப்படி ஆயினும் திமுக முன்னோடி, சுயநலம் இல்லா உண்மையான திமுக முன்னோடிகளில் ஒருவர், வெளிவரும் பொழுதும் தன் தம்பி இரா.செழியனை அழைத்து வராமல் தனியாக அபலையாக அலைந்த அரசியல் தெரியா தலைவர் அவர்

எப்படி பெரும் புகழோடு 1960களில் வந்த தலைவர் அவர்?, பின்னாளில் சினிமா மயக்கங்களில் அரசியல் அனாதை ஆனார். எனினும் அந்த அப்பாவி திராவிட தலைவனுக்கு எல்லா சூழலிலும் அந்த விசாலாட்சி அம்மையாருக்கு ஆழ்ந்த அஞ்சலி.

திராவிட அரசியலின் இன்னொரு பக்க கோரமுகங்களை அறிந்தவர் அவர், ஆனால் எங்கும் பேசியதில்லை அல்லது பேச வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்பதுதான் சோகம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s