“கேட்டாச்சி கேட்டாச்சி சின்னம்மா ஊமை இல்லை”

ஏதோ ஒரு படத்தில் விவேக் கை இல்லாதவர் போல நடிப்பார், ஆனால் அந்த கையினை கண்டுவிட்டு வடிவேலு ஓடிவருவார்

“பார்த்துட்டேன்..பார்த்துட்டேன்.புரூஸ் பார்த்துட்டேன்”

அப்படி சின்னம்மா பேச்சினை கேட்டுவிட்டவுடன் நானும் ஓடினேன், “கேட்டாச்சி கேட்டாச்சி சின்னம்மா ஊமை இல்லை”

ஓடிவிட்டு மெதுவாகத்தான் அவரின் பேச்சினை கவனித்தேன்

ஒரு சாமன்யபெண் சசிகலா

30 வருடம் ஜெயாவுடன் இருந்ததால் அந்த பேச்சு ஸ்டைல் ஒட்டி இருக்கலாம், அப்படி அடியொற்றி இருக்கின்றது, ஜெயாவிற்கு எழுதி கொடுத்தவர் அப்படியே சசிகலாவிற்கும் கொடுத்திருக்கின்றார்

ஆக அது சசிகலாவின் இயல்பான குரல் அல்ல, ஆனால் அப்படியே அதிமுக குரல்.

உண்மையில் அதிமுகவினர் எங்கிருந்து பட்டம் எடுப்பார்களோ தெரியாது, இனி சசிகலா “புதுமை தலைவி” என அழைக்கபடுவாராம்

வரலாற்றில் வேலைக்காரராக வந்து அரசினை கைபற்றியவர் மிக சிலர்

ஹைதர் அலி, நெப்போலியன் என வெகு சிலர்

அந்த புதுமையினை சசிகலா செய்திருப்பதால் அவர் “புதுமை பெண்” என அழைக்கபடுவதில் ஆச்சரியமில்லை

புரட்சி கட்சி இப்பொழுது புதுமை கட்சியாகிவிட்டது

அதனால் அந்த கட்சியினர் இனி “புதுமை பித்தன்கள்” என அழைக்கபடுவார்கள் என எதிர்பார்க்கலாம்

பொறுப்பும் வந்தாகிவிட்டது, பேச்சும் வந்தாகிவிட்டது இனி என்ன?

அடுத்த பேச்சு விரைவில் எப்படி இருக்கும்?

“நான் கனவிலும் கற்பனையும் நினைக்காத ஒன்று இது” என முதல்வர் நாற்காலியில் இருந்து சசிகலா பேசிகொண்டிருப்பார்

2016ல் டிசம்பர் 31ல் ஒரு இயக்கத்தின் தலைவியாக சசிகலா பேசுவார் என பிரம்மன் எழுதிய எழுத்து நிறைவேறிவிட்டது.

பன்னீர்செல்வம் எப்பொழுதும் இடைக்கால முதல்வர் என அவர் தலையில் பிரம்மன் எழுதியிருக்கின்றான்

அவர் தலைவிதியினை எழுதும்பொழுது விட்டு விட்டு எழுதினானோ என்னமோ?

ஜோதிமணி, குஷ்பூ போன்றவர்களை ஒன்றும் செய்ய முடியாது…

Jothimani Sennimalai

சகோதரி ஜோதிமணியினை பாஜகவினர் மிக தரகுறைவாக விமர்சித்த செய்திகள் அணல் பறக்கின்றன‌

இது ஒன்றும் புதிதான நிகழ்வு அல்ல, பெண்கள் மீது எல்லா துறைகளிலும் வீசபடும் ஆயுதம் இது. பதில் கருத்து ஒன்றும் இல்லா நிலையில் பெண்ணை ஆபாசமாக திட்டி அவளை மன ரீதியாக உடைய வைக்கும் ஒரு வித மனவியல் தாக்குதல் இது

எல்லா நாட்டு கலாச்சாரத்திலும் இது ஊறி கிடக்கின்றது, எந்த இனமும் விதிவிலக்கு அல்ல.

சில நாகரீக சமுகம் என தங்களை சொல்லிகொள்ளும் சமூகம் கொஞ்சம் இவற்றினை குறைத்திருக்கின்றது அவ்வளவுதான், ஆனாலும் அவர்கள் மன அடி ஆழத்தில் அது ஒளிந்திருக்கின்றது

தமிழகத்தில் 1960க்கு முன்புவரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவு, அப்பொழுது மேடைபேச்சுக்களில் ஒரு தரம் இருந்தது

அதன் பின் திராவிட கட்சிகளின் அரசியலில் அந்த நாகரீகம் மறைந்தது, இந்திரா தாக்கபட்டபொழுது திமுகவினர் கொடுத்த அநாகரீக வார்த்தைகள் கால கொடுமை, தமிழனின் இம்மாதிரியான ஆபாச வார்த்தைகள் இந்தியவினை அதிர வைத்தன‌

பின் ஜெயா காலத்தில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான், எஸ் எஸ் சந்திரன் போன்றோர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வாந்தி எடுக்கும் ரகம்

திமுக தலமையும் அமைதியாக அவர்களை ரசித்தது

ஜெயலலிதா இத்தனை அவமானங்களையும் தாண்டித்தான் ஜெயித்தார், திமுகவினர் இப்படி திட்ட திட்ட அவர் மீது மக்களுக்கு ஒரு அனுதாபம் வந்து, இறுதியில் அவர் என்ன தவறு செய்தாலும் ஏற்றுகொள்ளும் நிலைக்கு வந்தனர்

பெண்கள் அரசியலுக்கு வந்தால் கொள்கை ரீதியாக விமர்சிக்கலாம், பதில் சொல்லலாம் அதனை விட்டு கடும் ஆபாச சொற்களால் தாக்குவது சரி ஆகாது

ஆனால் துணிந்து நிற்கும் பெண்கள் இவற்றை எல்லாம் புறந்தள்ளி மேலே வந்துவிடுவார்கள்

ஜெயா காட்டிய வழி அதுதான், அவர் மீது வீசபட்ட சேறு கொஞ்சமல்ல, எதுவும் அவரை பாதிக்கவில்லை

குஷ்பூ அப்படித்தான் அரசியலில் தனக்கொரு இடத்தினை பிடித்திருக்கின்றார்

கனிமொழி மீதும் வீசபடும் சேறு கொஞ்சமல்ல, அவரும் தந்தையினை போல தாங்கியே வருகின்றார்

சகோதரி அப்படி தாண்டி வரட்டும்

சகோதரி உண்மையில் கொஞ்சம் பக்குவபட்டவர், நிதானமாக எதிர்கொள்கின்றார், வாழ்த்துக்கள்

நிச்சயம் இம்மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் ஏற்புடயவை அல்ல, பெண்களுக்கு எதிரான பெரும் குற்றங்களில் வரவேண்டியவை

ஆனால் இம்மாதிரி திட்டினால் அவருக்கு பரிதாபமும் ஆதரவும் பெருகும் என்பது கூட தெரியாத தமிழக பாஜகவினரை என்ன சொல்ல?

அவர்கள் அரசியல் அறிவு அவ்வளவுதான்

இதில் ஒரு விசித்திரம் உண்டு

இந்த பாஜக மாந்தர்கள், ஜோதிமணியினை விமர்சித்ததை விட மிக மிக மோசமான விமர்சனங்களை வைப்பவர்கள் நாம் தமிழர் கட்சியினரும், தமிழ் தேசியம் பேசுபவர்களும்

காது கொடுத்தால் அல்ல, கண்ணால் பார்த்தால் கூட கண் கெட்டுவிடும் வார்த்தைகள் அவை

ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை

பாஜக உறுப்பினர்களை இன்று குதறிகொண்டிருக்கும் யாரும், அந்த பாவபட்ட நாம் தமிழர்களை கண்டுகொள்ளவில்லை

அவர்கள் தலைவர் சீமானை யாரும் கண்டுகொள்ளாதது போல, இவர்களின் கீழ்தரமான விமர்சனங்களையும் எல்லோரும் அவர்கள் அப்படித்தான் என தள்ளிவிட்டார்கள்

தமிழக பாஜகவினரும் இப்பொழுது அந்த நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றார்கள்

ஒரு பெண்ணை எதிர்க்க முடியா நிலையில், இப்படியான ஆபாச வார்த்தைகளை வீசி அவளை நிலைகுலைய செய்யலாம் என நினைப்பவர்கள் மகா பெரும் கோழைகள்

மிக மிக அவமானமான கோழைகள்

அவ்வளவுதான் சொல்ல முடியும்

இந்த கோழைகள் எப்படி தெரியுமா?

வளர்பவர்களை விமர்சிப்பார்கள், அவர்கள் வளர்ந்து உச்சம் தொட்டுவிட்டால் அப்படியே அமுங்கி விடுவார்கள்

ஜெயாவிடம் அப்படித்தான் பம்மினார்கள்,

ஜோதிமணியினை விமர்சிப்பவர்கள், இதோ நாளைய முதலமைச்சர் சசிகலா எங்காவது மக்கட் நலனில் அக்கறைகொண்டு மோடியினை விமர்சித்துவிட்டால் இப்படி கிளம்புவார்களா?

ஏதும் சொல்லிவிட்டு தமிழகத்தில் இருக்க முடியுமா?

நடக்காது, பின் வேறு யாரையாவது திட்ட சென்றுவிடுவார்கள்

என்னமோ திராவிட கட்சிகளின் ஸ்டைலை பாஜகவும் காப்பி அடிப்பதுதான் காலகொடுமை

இப்பொழுதெல்லாம் திமுகவினர் இதனை எல்லாம் விட்டுவிட்டார்கள், கனிமொழியின் வரவுக்கு பின்னால் பழைய திமுகவின் முகம்சுழிக்கும் பேச்சுக்கள் இல்லை

அதனை பாஜக தொடங்கிவிட்டது.

ஆனால் ஜோதிமணி, குஷ்பூ போன்றவர்களை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது,

இவர்களால் இவ்வளவுதான் முடியும், இதனை விட என்ன செய்துவிட முடியும்??

சின்னம்மா அதிமுக பொது செயலாளராக பதவி ஏற்றார்…

 

எம்ஜிஆர், ஜெயா சமாதிகளில் சசிகலா அஞ்சலி, அண்ணா சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார்

ஜெயா, எம்ஜிஆர் சமாதி சரி, அண்ணா சமாதியில் எதற்கு அஞ்சலி, அவர்தான் இந்த கட்சிக்கு பிதாமகன் என்பதற்கா?

இருக்கலாம்

ஆனால் அப்படியே கோபாலபுரம் சென்று கலைஞரிடமும் ஒரு ஆசி வாங்கி இருக்கலாம்

சசிகலா நடராஜன் திருமணத்தினை அவர்தான் ஒருகாலத்தில் நடத்தி வைத்தவர்

அது என்ன ராசியோ கலைஞருக்கு?

அவரை ஆதரித்தவர்கள்/எதிர்த்தவர்கள் மட்டுமல்ல, எதிர்த்தோருடன் இருந்தவர்கள் கூட சிகரம் தொடுகின்றார்கள்

இன்றைய தேதியில் சசிகலா ஆசிவாங்க கலைஞரை தவிர பொருத்தமானவர் யாருமில்லை

எம்ஜிஆர் , ஜெயா, சசிகலா என எல்லோரும் கலைஞர் இன்றி உருவாகியிருக்க முடியாது.

இது சசிகலாவின் ஆள்மனதிலும் நிச்சயம் இருக்கும்.

இந்த வருடம் முடியபோகின்றது …

இந்த வருடம் முடியபோகின்றது

வழக்கம் போலவே இந்த வருடமும் வெட்டியாக கழிந்தது, மனதிற்கு தோன்றுவதை கிறுக்கி வைத்ததில் பல நண்பர்கள் கிடைத்தார்கள், அவர்களில் பலர் பயனுள்ளவர்கள்

பயனுள்ளவர்கள் என்றால் அவரைக்காயிலிருந்து ஆட்டுகுடல் வரை எப்படி விதம் விதமாக சமைப்பது என சொல்லி தருகின்றார்கள், அப்படி பல நண்பர்களை பெற்றது மிக்க மகிழ்ச்சி

இது ஒரு பொழுதுபோக்கு தளம், இங்கு புரட்சியோ சீரியஸ் கருத்துக்களோ வேலைக்கு ஆகாது

அதோ பார்த்தீர்களா ஹா ஹா ஹா, இதோ பார்த்தீர்களா ஹோ ஹோ , இப்படி நடந்துவிட்டால் ஹிஹிஹி என சிரித்துவிட்டு நகர்ந்து விடுவதை தவிர் ஒன்றும் செய்துவிட முடியாது

அதனால் உறுதியாக சொல்லலாம் என்னுடன் இருக்கும் முகநூல் நண்பர்கள் எல்லாம் ஜாலி பேர்வழிகள், சீரியசான கொள்கை பற்றாளர்களை அருகில் வைத்துகொள்ளவே கூடாது

அது மதமோ, அரசியலோ, இனமோ, மொழியோ எவ்வகை சீரியஸ் பார்ட்டிகளுக்கும் நம் அருகில் இடமே இல்லை

அது ஐஎஸ் இயக்கம் அருகில் இருப்பதை விட ஆபத்தானது, நம்மையே மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள்

நம்மை பொறுத்தவரை ரசிக்க உலகில் ஏராள விஷயங்களும், சிரிக்க ஏராளமன விஷயங்களும் உண்டு

ரசிக்க பல விஷய்ம் உண்டு எனினும் சிரிக்க வைப்பது சாட்சாத் நமது அரசியல்வாதிகளே

இப்படி எந்த நோக்கமும் இன்றி சும்மா சுற்றிவரும் என்னையும் நண்பனாக ஏற்றுகொண்டவர்களுக்கு நன்றிகள்

பிறக்கும் புத்தாண்டு எல்லா நண்பர்களுக்கும் நல்ல ஆண்டாக அமையட்டும்

எல்லா நண்பர்களும் முக்கியமானவர்கள் எனினும் நண்பர் Ramamoorthy Vanamamalai Nanguneri சிறப்பானவர், என் பதிவுகளை எல்லாம் அவரே தொகுக்கின்றார்,

என் எழுத்து எனக்கு பிடித்தது அல்ல‌,ஆனால் அந்த தொகுப்பினை கண்டால் அவ்வளவு மோசமில்லை என்றே தோன்றுகின்றது

மிகசிறந்த நண்பர்களில் அவரும் ஒருவர்.

இப்படி பல அருமையான நண்பர்கள் Babu Rao போல கிடைத்திருக்கின்றார்கள், நயந்தாராவிற்கு கல்யாணம் ஆகாத வரை நட்பு தொடரும், காரணம் நயனின் திருமண செய்தி நண்பரை சாய்க்காமல் விடாது

எனினும் நயன் பற்றி வரும் செய்திகளை கண்டால் நண்பரின் நட்பு காலத்திற்கும் தொடரும் போல தெரிகின்றது

எல்லோரும் புத்தாண்டு சபதம் என ஒன்றை எடுப்பார்கள்

நமக்கு அது அவசியமே இல்லை, காரணம் பல ஆண்டுகளாக எடுத்துகொண்டிருக்கும் அதே சபதத்தை இந்த ஆண்டும் எடுத்துவிட வேண்டியதுதான்,

பல ஆண்டுகளாக அந்த லட்சியம் நிறைவேறாதபடியால் அடுத்த வருடமும் அதுவே சபதமாகின்றது

அப்படி என்ன லட்சியம்?

இந்த வருடமாவது குஷ்பூவினை சந்தித்து ஒரே ஒரு படம் எடுத்து (தள்ளி நின்றுதான்), அதனை பெரும் பிரேம் போட்டு வீட்டில் தொங்க விட வேண்டும.

பல காப்பிகள் போட்டு வைக்க வேண்டும், திரும்பும் இடமெல்லாம் வீட்டில் அப்படமே தெரிய வேண்டும்

இதனை விட பெரும் வாழ்க்கை லட்சியம் என்ன இருந்துவிட முடியும்?

பிறக்கும் அடுத்த வருடமாவது என் லட்சியம் நிறைவேட்டும்,

கடவுளே “சின்னமாவிற்கு பேச்சு கொடு” என்ற கோஷம் இனி தமிழகமெல்லாம் ஒலிக்கும்

மறுபடியும் அடிமைகள் மண்சோறு, அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல் போன்ற பக்திகளில் மூழ்க வாய்பிருக்கின்றது

எதற்கு?

பொதுகுழு எனும் பட்டத்து யானை மாலை சூட்டிய பின்னும் சின்ன அம்மாவிற்கு பேச்சு வரவில்லை என்றால் என்ன செய்ய?

அதுதான் வழி, விரைவில் பால்குடம் எடுக்க கிளம்புவார்கள்

சின்னமாவிற்கும் ஆலோசனை கொடுப்பார்கள்

சின்னம்மாவும் சரஸ்வதி சபதம் சிவாஜி கணேசனாக இப்பொழுது தெய்வத்திடம் முறையிட்டு கொண்டிருப்பார்

இனி அந்த தெய்வமே வந்து “செல்வம், கல்வி,கட்சி மக்கள் செல்வாக்கு என்பதை விட நட்பே பெரிதென்று நிரூபி,

எல்லாவற்றையும் நட்பில் அடிமையாக்கு, நட்பே பெரிது என்பது உன்னால் உலகெல்லாம் விளங்கட்டும்” என ஆசீர்வதிக்கும்,

பின் சின்னம்மா “அம்மா, அப்பா, எம்ஜிஆர், ஜெயா, நடராஜன், கட்சி, ஆட்சி, பொதுசெயலாளர், பன்னீர், முதல்வர்” என சரஸ்வதி சபதம் சிவாஜி போலவே ஒவ்வொரு வார்த்தையாக படிப்பார்

அனைத்தும் வந்துவிட்டது, அனைத்து வந்துவிட்டது என மகிழ்ந்து ஜெயா படத்தின் முன்பு வந்து

“அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
எம்ஜிஆர், ஜெயா முதல் என்றே புரிய வைத்தாய் தேவி
கட்சி, ஆட்சி , போயஸ் தீபம் ஏற்றிவைத்தாய் நீயே
நடராஜன் நெஞ்சினை குளிரவைத்தாய் தாயே”

என பாடிவிட்டு பத்திரிகையாளரை சந்திக்க வருவார்

இப்படி நடக்க‌ அடிமைகள் மறுபடியும் கோயில் கோயிலாக சென்று உருளவேண்டும்.

ஆக அடிமைகள் மறுபடியும் ஆலய அழிச்சாட்டியம் செய்யும் காலம் வந்தே விட்டது

கடவுளே “சின்னமாவிற்கு பேச்சு கொடு” என்ற கோஷம் இனி தமிழகமெல்லாம் ஒலிக்கும்.


சீமான் கும்பல் வரிசையோடு சின்னம்மா ஆதரவாளர்களும் சேர்ந்துவிட்டார்கள்

சீமான் என்பவர் பேசியே கொன்றார்

சின்னம்மா பேசாமலே கொல்கின்றது

அது என்னமோ சி என்றாலும் சீ என்றாலும் நமக்கு சீசீ என்று சிக்கலாகவே அமைகின்றது.


 

அரசியலில் யாரையும் நம்ப கூடாது….

காமராஜர் தமிழக காங்கிரஸ் தலைவராக அதாவது தனக்கு எதிரான கட்சியின் தலைவராக இருந்தபொழுது அவரின் ஒவ்வொரு அசைவினையும் விமர்சித்த கலைஞரை

எம்ஜிஆர் கட்சியின் பொதுசெயலாளராகும்பொது நடிகர் கட்சி, அட்டை கத்தி என்றெல்லாம் வாட்டிய கலைஞரை

ஜெயா ஜாணகி என பிரிந்து நின்றபொழுது நிமிடத்திற்கொருமுறை அறிக்கை அனுப்பிய கலைஞரை

ஜெயா ஆட்சியினையும், கட்சியினையும் கைபற்றும்பொழுது அம்மையார் என சொல்லி சொல்லி விமர்சித்த கலைஞரை

சசிகலா பொறுப்புக்கு வரும்பொழுது காணவே இல்லை, அவருக்குத்தான் வயதாகிவிட்டதென்றால், அடுத்த வாரிசாவது சில கருத்தோ, வாழ்த்தோ சொல்ல கூடாதா?

பல விஷயங்கள் நோக்க கூடியவை

1996ல் ஜெயலலிதாவினை முடக்க காட்டிய வேகங்களை 2001க்கு பின் திமுக குறைத்துகொண்டது

அதன் பின் ஜெயா ஆட்சியில் கலைஞருக்கோ, கலைஞர் ஆட்சியில் ஜெயாவிற்கோ சிக்கலே இல்லை

மாற்றி சொல்ல வேண்டுமென்றால் கலைஞரின் ஆட்சியில் சசிகலாவின் மிடாஸ் இயங்கியது, ஜெயா ஆட்சியில் கலைஞர் கும்பலின் பீர் கம்பெனி இயங்கியது

அதாவது ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருக்கின்றார்கள்

உனக்கு நான் மட்டும் எதிரி, எனக்கு நீ மட்டும் எதிரி. அவ்வப்போது மோதிகொள்வோம் ஆனால் ஒருவர் பிசினஸில் இன்னொருவர் தலையிட கூடாது, குறிப்பாக இன்னொரு கட்சி வளர்ந்துவிட கூடாது

இன்று சசிகலா பொறுப்பு வந்தபின்னும் திமுக பக்கம் ஒரு சலசலப்புமில்லை, 25 வருடமாக ஜெயாவுடன் இவர்தான் இருந்தார், இனி இவர் மட்டும் இருப்பார் மற்றபடி சிக்கல் இல்லை என அவர்கள் ஒதுங்கிகொண்டது போல் தெரிகின்றது

சன்டிவியின் செய்தி அணுகுமுறை அதனைத்தான் சொல்கின்றது

அரசியலில் யாரையும் நம்ப கூடாது என்பார்கள்,

அரசியல் கட்சியிலும் யாரையும் நம்ப கூடாது என்பது மட்டும் விளங்குகின்றது

மலேசிய முன்னாள் பிரதமர் துன்.டாக்டர் மகாதீர்

 

அந்த காட்சி மறுபடி மறுபடி கண்ணில் வருகின்றது

அந்த மாலைபொழுதில் கோலலம்பூர் இரட்டை கோபுர உள்வளாகத்தில் சுற்றிகொண்டிருந்தேன், ஒரு சிறு கூட்டத்தின் நடுவே அந்த முதியவர் புன்னகை பூக்க ஆட்டோகிராப் கொடுத்துகொண்டிருந்தார், அவரின் இரு மெய்காப்பாளர்கள் மட்டும் இருந்தார்கள்,

அந்த கூட்டத்தில் 10 பேர்தான் இருப்பார்கள், கையெழுத்து வாங்கியதும் பெரும்பாலும் அவரை அடையாளம் கண்ட வெளிநாட்டவர்கள்.

நெருங்கி பார்த்தால் அவர் மலேசிய முன்னாள் பிரதமர் துன்.டாக்டர் மகாதீர் அவர்கள்

ஒரு கணம் மயக்கமே வந்தது, எப்படிபட்ட மனிதர் அவர், மலேசிய நாட்டிற்கு அவர் செய்திருக்கும் சாதனைகள் என்ன, கொஞ்சமா?

22 ஆண்டுகள் மலேசியாவினை ஆண்டார், நவீன உலகளவில் அதற்கு இடம் பிடித்துகொடுத்தார்.

கோலாலம்பூருக்கு புது அடையாளங்களை உருவாக்கினார், இரட்டை கோபுரமும், இணைய நகரான சைபர் ஜாயாவும், புது நிர்வாக நகரான அழகான‌ புத்ராஜாயாவும் , மிகபெரும் விமான நிலையமும் அவரால் கொண்டுவரபட்டவை

1998ல் பெரும் பொருளாதார தேக்கம் கிழக்காசியாவினை தாக்கியபொழுது மிக சாதுர்யமாக மலேசியாவினை காப்பாற்றியவர்.

இஸ்லாமிய மக்களின் அமைதிக்கு அவர் ஆற்றிய உரைகள் உண்மையில் நோபல் பரிசுக்கு தகுதியானவை.

மலேசியாவிற்கு அவர் ஆற்றியிருக்கும் சேவை மிக பெரிது, மிக மிக பெரிது,

இன்றுவரை நல்ல ஆலோசனைகளை சொல்லிவருபவர், சிங்கப்பூருக்கு ஒரு லீ என்றால் மலேசியாவிற்கு ஒரு மகாதீர் என்பதுதான் வரலாறு எழுதிகொண்டது

மலேசிய மக்கள் எல்லா நவீன வசதிகளை அனுபவிக்க அவரும் ஒரு காரணம்

அப்படிபட்ட மகாதீர் முகமது அவர்கள் வந்தபொழுது பெரும் கூட்டமில்லை, அருகிலிருந்த கடையில் ஒரு பெண்ணிடம் கேட்டபொழுது அவர் புன்னகை பூக்க சொன்னார்

“ஆம், அவரை நாங்கள் மிக மதிக்கின்றோம், கொண்டாடுகின்றோம். அவரின் சேவைகள் பெரிது, எங்கள் நாட்டை உயர்த்தி எங்களை எல்லாம் வாழ வைத்திருக்கின்றார், பெரும் அடையாளம் நாட்டிற்கு கொடுத்திருக்கின்றார்.

ஆனால் இங்கு அவர் வேலை நிமித்தமாக வந்திருக்கின்றார்,

நாங்கள் எங்கள்வேலையினை பார்க்கின்றோம், அவர் வந்த வேலையினை அவர் பார்ப்பார், என் வேலையினை நான் பார்க்க வேண்டாமா?”

அவ்வளவு பெரும் தலைவர் வரும்பொழுது தோரணம் இல்லை, கூட்டம் இல்லை, பாதுகாப்பு கெடுபிடி இல்லை, வாழ்க கோஷம் இல்லை, கேமரா இல்லை, டிவி சேணல் இல்லை

ஒரு சாதாரண மனிதனாக அவர் நடந்துசென்றபொழுது மனம் நம்ப மறுத்தது.

இப்படி பல பெரும் பிம்பங்களை பார்த்திருக்கின்றேன், ஒரு சாதாரண ரெஸ்டாரண்டில் அடுத்த டேபிளில் மிக சிம்பிளாக தனியா காபி குடித்துகொண்டிருப்பார் டத்தோ சாமிவேலு.

வாழ்க போட கூட 2 பேர் கூட இல்லை.

இதுதான் பண்பட்ட நாட்டு மக்கள் மனநிலை, இங்கிலாந்தில் பிரதமர் ரயிலில் செல்வதும், அமெரிக்காவில் கென்னடி குடும்பமோ புஷ் குடும்பமோ ரோட்டோர கடையில் ஹாயாக ஹாட் டோக் சாப்பிடுவதும் இப்படித்தான்

மோடிக்க்கு சிங்கப்பூர் பிரதமர் கோமளவிலாசில் தோசை கொடுத்ததும் இப்படித்தான், அது அவர்கள் வழக்கம்

அப்படிபட்ட பெரும் தலைவர்கள் எல்லாம் உலகில் அமைதியாக இருக்கின்றார்கள், மனதிற்குள் மக்கள் அவர்கள் மீது பெரும் அபிமானம் வைத்திருக்கின்றார்களே ஒழிய, விளம்பரத்திற்கு கத்துவதில்லை

மலேசிய மகாதீர் முகமது அவர்களுக்கு இந்நாட்டின் உயரியபட்டம் ஏற்கனவே வழங்கபட்டது, அவருக்கு நோபல் ஏன் தரவில்லை என இஸ்லாமிய உலகம் கேட்கவில்லை,

ஆனால் அதற்கு மகா தகுதியான நபர் மகாதீர்

சிங்கப்பூர் சிற்பி லீகுவான் யூ மறைந்தார், அவரின் கிழக்காசிய சாதனை என்ன? அவருக்கு ஏன் ஐநாவில் சிலை இல்லை, நோபல் இல்லை என சிங்கப்பூர் மக்கள் கேட்கவில்லை.

எத்தனை பிலிப்பைன்ஸ் மக்களுக்கு வாழ்வு கொடுத்துகொண்டிருக்கின்றது சிங்கப்பூர், அந்த சிங்கப்பூர் மக்களே லீ இறக்கும்பொழுது ரோமன் மகாசேச விருது வேண்டும் என கேட்கவில்லை

இதோ பெரும் மானுட போராளி காஸ்ட்ரோ மறைந்தார், எவ்வளவு பெரும் தாக்கத்தை உலகில் விதைத்தவர், அவருக்கு கியூபாவில் சிலை கூட இல்லை, அவருக்கு ஏன் நோபல் இல்லை என அவரின் குடும்பத்தார் கூட கேட்கவில்லை

எத்தனை பெரும் தலைவர்கள்? எத்தனை பெரும் புரட்சியாளர்கள் அமைதியாக வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள், எங்கிருந்தாவது ஒரு சத்தம் வந்ததா?

சீன பெருந்தலைவன் டெங் இறந்தபோதும், சிங்கபூரின் தேசிய தலைவன் லீ குவான் யூ இறந்தபோதும் அம்மக்கள் கண்ணீர் வடிய வேலை செய்துகொண்டே தன் அஞ்சலி செலுத்தினார்கள்

காரணம் நல்ல தலைவர்கள் அதனை முன்பே வலியுறுத்தினார்கள், நாங்கள் செய்வது நாட்டிற்கான கடமை, அதனை நீங்களும் செய்யுங்கள் மாறாக எங்களுக்காக அழவேண்டாம், சிலை வைக்க வேண்டாம்

எங்களை மறங்கள், ஆனால் நாட்டிற்காக நாங்கள் காட்டிய பாதையினை மட்டும் மறக்காமல் முன்னேறுங்கள்

நல்ல நாடுகள் அப்படி தங்கள் மரியாதைகுரியவர்களை மனதில் வைத்து முன்னேறிகொண்டிருக்கின்றன‌

இங்கோ பொதுகுழுவில் உலக விருதுகள் எல்லாம் எங்களுக்கு வேண்டும் என கொஞ்சமும் வெட்கமின்றி அழுது கொண்டிருக்கின்றார்கள்

ஈரானை நொறுக்கிபோடும் வல்லமை தன் விரல்நுனியில் இருந்தபோதும் ஓபாமா காத்த அமைதி அவருக்கு நோபல் பரிசினை கொடுத்தது,

அவர் கண் சிமிட்டியிருந்தால் இந்நேரம் ஈரான் அழிந்தே இருக்கும், ஆனால் அவர் செய்யவில்லை

உலக அமைதிக்கான விருது அதனால்தான் கொடுக்கபட்டது

27 வருடம் நாட்டின் விடுதலைக்காக சிறையில் இருந்தார் மண்டேலா, அந்த பொறுமைக்கும் தியாகத்திற்கும் நோபல் கொடுத்தார்கள்

இங்கு லஞ்ச வழக்கில் சிறைக்கு சென்றவர்களுக்கு எல்லாம் நோபல் வேண்டுமாம்

நேர்மையாக தேர்தலை நடத்தினார் என் டி.என் சேஷனுக்கு ரோமன் மகசேச கொடுத்தார்கள், நேர்மைக்கும் ஜெயாவிற்கும் என்ன சம்பந்தம்? அவருக்கும் அதே விருது வேண்டுமாம்

அப்படி அந்த தலைவி என்ன கிழித்தார்? என கேட்டால் கூட சொல்ல தெரியவிலை

இப்படி எல்லாம் மக்கள் கவனிக்கும் மன்றத்தில் தீர்மானம் போடுகின்றோமே, உலகம் சிரிக்காதா? எனும் வெட்கம் கொஞ்சமும் இல்லை?

சீ.. சீ

தூ… தூ

இப்படி ஒரு மானக்கேடு உலகில் எந்த நாட்டிற்கும் இல்லை, இடி அமீனுக்கு யாரும் நோபல் கேட்டதாக தெரியவில்லை

இரண்டாம் உலகப்போரில் நாட்டை கெடுத்த முசோலினியும், ஹிட்லரும் கூட இன்றளவும் அம்மக்களால் வெறுக்கபடுகின்றார்கள்

நேற்று கூட அமெரிக்காவில் குண்டு வீசியது ஜப்பானின் தவறு என மன்னிப்பு கேட்டிருக்கின்றார் ஜப்பானிய பிரதமர்.

அதாவது சர்வாதிகாரிகளை எல்லாம் நினைத்துபார்க்க கூட நல்ல நாட்டு மக்கள் நினைப்பதில்லை, மறக்க நினைக்கின்ரார்கள்

இங்கோ அவர்களை தியாகியாக்கி, அவரின் மேஜையினை துடைத்துகொண்டிருந்தவரை எல்லாம் வாரிசாக்குகின்றார்கள்

ஒரு விஷயம் நன்றாக புரிகின்றது?

அன்று அந்த வளாகத்தில் மகாதீர் முகமது அவர்களை பார்க்கும்பொழுது அந்த பெண் சொன்னது மிகபெரும் உண்மை

“எங்கள் வேலையினை நாங்கள் பார்க்க வேண்டாமா?”

அதுதான், அதே தான். ஆளாளுக்கு நல்ல வேலையும் பொறுப்பும் இருந்தால் அதனை பார்ப்பார்கள்

இங்கு என்ன?

வேலை வெட்டிக்கு செல்லாமல், உழைக்காமல் ஆனால் சம்பாதிக்க என்ன செய்யலாம்?

யாருக்காவது ஒரு தலைவருக்கு கோஷம் எழுப்பலாம், அதன் மூலம் ஏதோ ஒரு காண்டிராக்ட் அல்லது உரிமம் பெற்று சுரண்டலாம், பார் நடத்தலாம், மணல் அள்ளலாம், சாக்கடை ஊழல் செய்யலாம்

இப்படி வேலைவெட்டி செய்யாமல் உழைக்காமல் பிழைக்கும் கூட்டமே அரசியலில் யார் வந்தாலும் சரி, நாம் பிழைக்க வேண்டும் என பெருகிவிட்ட கூட்டமே எல்லாவற்றிற்கும் காரணம்

அது இருக்கும் வரை சசிகலா அல்ல, யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்பிற்கும் வருவார்கள்.

என்று அரசியல் கட்சிகளால், ஆட்சியாளர்களால் பெரும் பணம் சேர்க்கமுடியாது, கட்சி அரசியலால் 5 பைசா லாபம் இல்லை என்றொரு காலம் வருகின்றதோ, அன்றே இதெல்லாம் முற்றுபெறும்

வெளிநாடுகளில் அதனால்தான் அரசியலுக்கு யாரும் வருவதில்லை, பெரும் பணம் சுருட்டமுடியாது, பிய்த்து பிராண்டி விடுவார்கள்

அதனால் இந்த அரசியலை விட டீ ஆற்றலாம் என ஆளாளுக்கு வேறு தொழிலை பார்க்க சென்றுவிடுகின்றார்கள்

இங்கோ டீ ஆற்றுவதை விட அரசியலில் ஈடுபட்டால் டீ எஸ்டேட் வாங்கலாம் எனும் நிலை

இந்நிலை மாறாமல் எதுவும் சாத்தியமில்லை,

அந்நாள் என்றுவரும்?

இன்னும் நிலை மகா மோசமாகி, பெரும் சிக்கல் வந்து அதன்பின் வாழமுடியா மக்கள் பொங்கி எழுந்து பெரும் ரத்தகளறியிலோ அல்லது பெரும் அழிவில்தான் அது நடக்கும்

அல்லது 10 தலைமுறை கழித்து கல்வியில் முன்னேறிய சிந்திக்கும் திறனுள்ள வருங்கால தலைமுறை வரும்போது நடக்கும்

எப்படியும் இந்நாடு திருந்த நெடுங்காலம் வேண்டும்..