லெஜ்ஜியன் ஹேக்கர்ஸ் : அப்போலோ தகவல்கள் கடத்தல்…

சென்னை அப்போலோ மருத்துவமனை கணினி விவரங்களை வசப்படுத்தியுள்ளோம் என‌ வாஷிங்டன் போஸ்டுக்கு ‘லெஜ்ஜியன்’ ஹேக்கர்ஸ் குழு பேட்டி

லெஜ்ஜியன் குழுவோ, லெக்கின்ஸ் குழுவோ அந்த ரகசியத்தை படீரென்று சொன்னால்தான் என்ன? தமிழகத்திற்கு ரகசியத்தை சொல்லாமல் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு என்ன சொல்லிகொண்டிருக்கின்றீர்கள்?

என்னமோ ரெட்டிக்கு மிகவும் சோதனையான காலம், சின்னம்மாவிற்கு சிக்கலான காலம்

விரைவில் லெஜ்ஜியன் ஹேக்கர்ஸ் குழு உண்மை வெளியிடலாம் அல்லது சிகிச்சைக்காக ரெட்டி வசூலித்த மொத்த பணமும் ஹேக்கர்சுக்கு செல்லலாம்

இனி என்ன நடக்கும்?

அறிவாலயத்தின் கம்யூட்டர்கள், கேபிள்கள் , கோபால புர ஐபேடுகள் எல்லாம் தூற எறியபட்டு, பழையபடி பேப்பரில் மை பேனாவால் எழுதி தொடங்குவார் கலைஞர்

அங்கே எந்த ஹேக்கர்ஸும் ரகசியம் கடத்த முடியும்?

மவன யார்கிட்ட?

குடி வீட்டை , நாட்டை கெடுக்கும்..

குடி குடும்பத்தை கெடுக்கும் என்பார்கள், அது ஒரு மாநிலத்தை கெடுத்திருக்கின்றது

மதுகடைகளை கலைஞர் திறந்து பல சர்ச்சைகளை தொடங்கினார், திமுக மீது ஊழல் மற்றும் சாராயகடைகளை திறந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டை வைத்து ஊர்வலம் எல்லாம் சென்று கட்சி தொடங்கி நடத்தினார் எம்ஜிஆர்

பின்னாளில் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த எம்ஜிஆருக்கும் நிதி சிக்கல் தொடங்கிற்று, மதுகடைகள் நடத்தும் முடிவுக்கு வந்தார்

தாய்குலங்கள் முகம் சுழித்தன, நாயகனின் பிராதான வோட்டு வங்கியே தாய்குலம் அல்லவா?, ஒரு வசீகரமான அதிமுக பெண் முகம் தேவைபட்டது

சரோஜா தேவி அரசியலுக்கு வர மறுத்தார், வெண்ணிற ஆடை நிர்மலா போன்றோர் இருந்தாலும் பல திறன் மிக்க ஒரு பெண் முகம் தேவைபட்டது

விளைவு கலைசெல்வி ஜெயலலிதாஉருவானார், அவரை டெல்லி வரை அனுப்பி புன்னகைத்தார் புரட்சி தலைவர், கலைஞரின் சாராய கடைகளை கண்டித்து பின் தானும் அதனையே திறந்த அந்த தானை தலைவர்

டெல்லியில் இந்திரா ஜெயலலிதாவினையும், வைகோவினையும் மாறி மாறி புகழ்ந்தார், ஏதோ திட்டம் இருந்திருக்கின்றது. பின்னாளில் இருவரும் தனிகட்சி நடத்தினர் என்பது வரலாறு

பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா? அச்சபட்ட எம்ஜிஆர் கலைசெல்வியினை டம்மியாக்கி திடீரென அவரே டம்மியானார்

பின் கலைசெல்வி புரட்சி தலைவி ஆனார், எத்தனை நாள்தான் விஜய் மல்லையாவின் சாராயம் வாங்கி விற்பது? நாமே காய்ச்சினால் என்ன? என சிந்தித்தார்

உடன்பிறவா தோழியுடன் மிடாஸ் தொடங்கினார், அடுத்த ஆட்சியில் கலைஞரின் பினாமிகள் சாராய ஆலை தொடங்கியதையும் அவர் கண்டு புன்னகைத்தார்

இன்று சின்னமா நம் கையினை விட்டு அதிகாரம் சென்றால் இந்த மிடாஸ் போன்ற சாராய வியாபரங்களும் சென்றுவிடுமோ என அக்கட்சியினை கட்டுக்குள் வைக்க முயல்கின்றார்.

இதற்கு மூலம் என்ன?

ரூபாய்க்கு 3 படி எனும் அண்ணாவின் முழக்கம்

அந்த 3 படி அரிசிக்கு ஊரெல்லாம் விவசாயத்தினை ஊக்குவித்தால் தீர்ந்தது விஷயம்,

அதனை விட்டு சாராய கடைகளை திறந்து அண்ணாவின் கனவை நிறைவேற்ற கிளம்பிய கலைஞர்

அதே கனவினை தொடர நினைத்த எம்ஜிஆர், அதில் கெட்ட பெயர் உண்டான போது அவர் உருவாக்கிய புரட்சி தலைவி, பின் சகல சுதந்திரத்தோடு, மிடாஸ் ஆலையோடு அந்த தலைவி உருவாக்கிய “சின்னம்மா”

ஆக குடி எப்படியெல்லாம் தமிழ்குடி கெடுத்திருக்கின்றது பார்த்தீர்களா?

நாஸ்ட்ராடாமஸ் அப்படி சொன்னாருங்க …..

Image may contain: 1 person

நாஸ்ட்ராடாமஸ் அப்படி சொல்லியிருக்கின்றார், இப்படி சொல்லியிருக்கின்றார் ஜெயா பற்றி சொல்லியிருக்கின்றார் என ஏக அழிச்சாட்டியம்

அப்படி ஒருவர் சுமார் 500 ஆண்டுகாலம் முன்பு இருந்தார், கிறிஸ்தவர் ஆனால் ஜோசியர், ஜாதகம் எல்லாம் அவருக்கு அத்துபடி. கண்ணில் பட்ட மனிதர் மட்டுமல்ல, ஆடு, மாடு, பன்றி உட்பட எல்லோரின் ஜாதகமும் கணித்தார்

அதன் பின் உலகின் ஜாதகம் பற்றி எழுதினார், அவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்கா இல்லை, போப் ஆண்டவர்தான் உலக சக்கரவர்த்தி

பின்னாளில் உலகில் நிகழும் மாற்றம் பற்றி எழுதினார்

பிரிட்டானிய எழுச்சி, நெப்போலியன் எழும்பி போப்பாண்டவரை வீழ்த்துவது, கம்யூனிச புரட்சி, சோவியத் யூனியனும் அதன் வீழ்ச்சியும்

ஹிட்லர், அணுகுண்டு, இரண்டாம் உலகப்போர், பின்லேடனின் அமெரிக்க விளையாட்டு என பலவற்றை எழுதினார்

புதுநாடு ஒன்று உலகாளும் என அவர் சொன்னது அமெரிக்கா மூலம் பலித்தது

மிகசிறிய நாடொன்று அணுயுத்தமான மூன்றாம் யுத்தத்தை தொடங்குமென்றார், அது இஸ்ரேலாக இருக்கலாம் என்பது கணிப்பு

ஆனால் அவர் எழுதிய எதுவும் பொய்க்கவில்லை என்பதுதான் ஆச்சரியம், மனிதர் கோள்களின் சஞ்சாரத்தில் இப்படி எல்லாம் ஆட்சியாளர் வருவார்கள், இப்படி எல்லாம் நடக்கும் என அவர் எழுதியது அட்சம் பிசகாமல் நடந்தது

கோள்கள் மனிதனை ஆளும் என்பதில் உறுதியாக இருந்தார் நாஸ்ட்ரடோமஸ், இன்று இருந்திருந்தால் எப்போதோ போயஸ் கார்டன் இரண்டாம் மாடியில் அடைத்திருப்பார்கள்

உலகின் பல வருங்கால‌ விஷயங்களை கணித்த அவர் இந்தியா பற்றியும் எழுதினார்

அதில் இந்திரா பற்றிய விஷயம் உண்டு, இரும்பு பெண்மணி கடல்சூழ் நாட்டில் கொல்லபடுவார் என எழுதியிருந்தார், அடுத்த அரசன் ஒரு வழிப்பறி கூட்டத்தால் கொல்லபடுவார் என்றும் எழுதியிருந்தார்

அது ராஜிவ் என்பது சொல்லிதெரியவேண்டியதில்லை, புலிகளை ஒரு வழிப்பறி கூட்டமாகவே நாஸ்ட்ரடாமஸ் கண்டிருக்கின்றார்

ஐந்து நதிபாயும் இடத்திலிருந்து நீல தலைப்பாகையோடு ஆட்சிக்கு வரும் ஒருவன் அந்த கடல்சூழ் நாட்டை வல்லரசாக்குவான் என்பதுதான் அவர் சொன்ன பெரும் கணிப்பு

மன்மோகன்சிங் அப்படி வந்தார், ஆனால் ஆண்டிமுத்து ராசாவும், கனிமொழியும் நாஸ்ட்ராமாடமஸுக்கே டிமிக்கி கொடுத்து அவரை கவிழ்த்தார்கள்,

திமுக என்பது நாஸ்ட்ராடாமஸுக்கே கணிக்க முடியா கட்சி

ஆக பஞ்சாபிலிருந்து இன்னொருவன் வந்து நாட்டை வல்லரசாக்குவான் என எதிர்பார்ப்போம், அது ராணுவ அதிகாரியாக கூட இருக்கலாம்

இந்த நாட்டின் மிக பெரும் பழம் மதத்தை (இந்து மதத்தை) ஐரோப்பா ஏற்கும், கிறிஸ்தவம் சுருங்கும் என்பதும் அவர் இந்தியா பற்றி சொன்ன விஷயம்

அதன் பின் அவர் குறிப்புகளில் இந்தியா பற்றி இல்லை, ஆனால் வருங்கால இந்திய குழந்தைகள் மிக்க அறிவுள்ளவர்களாக இருப்பார்கள் என ஒரு குறிப்பு உண்டு

அவர் குறிப்புகள் ஏராளமானவை , எல்லாம் ஒரு மாதிரியான செய்யுள் நடையில் எழுதியிருந்தார், எளிதில் புரியாது

காரணம் கிறிஸ்தவ சாம்ராஜ்யம் இந்த கணிப்புகளை அனுமதிப்பதில்லை, பால் தினகரனை பற்றி அவர் எழுதியிருந்தால் விட்டிருபபர்களோ என்னமோ

ஆக மிகுந்த சிரமத்துகிடையில் அதனை மொழிபெயர்த்துதான் இவ்வளவும் சொன்னார்கள், இன்னும் கண்டுபிடிக்கபடாத விஷயம் அவர் பாடலில் நிறைய உண்டு

அப்படிபட்ட பெரும் நாஸ்ட்ராடாமஸ் ஜெயாபற்றியும் சசிகலா பற்றியும் எழுதி இருக்கின்றாராம்? சில ஆடுகளை, ஓநாய்கள் பற்றி அவர் வாழும் நாளிலே கணித்தார் என்பார்கள், ஆனால் சசிகலா பற்றி எல்லாம் எழுதவே இல்லை.

அமெரிக்கா பற்றி, ஹிட்லர் பற்றி நிறைய இருக்கின்றது, விமானம், ராக்கெட் கூட உண்டு, இந்தியா பற்றி வருவது சொற்பம், ஆனாலும் வளமான எதிர்காலம் அதற்கு உண்டு என்றே சொல்கின்றார்

மற்றபடி எதுவுமில்லை இதில் சசிகலா சிக்கல் எங்கிருக்கின்றது?

பிரெஞ்ச் மொழி தெரிந்தோர் 4 வரி எழுதிவிட்டு இதுதான் நாஸ்ட்ரோடாமஸ் எழுதியது என நகர்ந்துவிடலாம், மொழிபெயர்ப்பவர்கள் ஆகா பார்தீர்களா சின்னம்மா மகிமையினை என கிளம்பலாம்

அப்படி எவனோ பிரென்ஞ்ச் மொழியில் சீரியசாக தமிழ்காமெடியினை சொல்லிவிட இங்கிருப்போர் மகா சீரியசாக காமெடி செய்கின்றனர்.

இவர்களை பற்றி எல்லாம் நாஸ்டரடாமஸ் எழுதியிருந்தான் என்றால் எப்பொழுதோ கொளுத்தியிருப்பார்கள், அவ்வளவு ஏன்? அவரே கல்லறையில் இருந்து எழுந்து வந்து எல்லா குறிப்புகளையும் கிழித்திருப்பான்

எவனோ பிரென்ஞ் மொழியில் சின்னம்மாவினை கலாய்த்ததையும் , மகா சீரியசாக சிந்தித்து பரப்புவர்களை என்ன செய்ய?

சரி அப்படியே நாஸ்ட்ராடாமஸ் தமிழக அரசியலை எழுதியிருந்தால் , சீரியசாக எழுதியிருந்தால் காமராஜரையும், கொஞ்சம் அச்சத்தோடு எழுதியிருந்தால் கலைஞரையும் பற்றி எழுதியிருக்கமாட்டானா?

அவர்களை எல்லாம் விட்டுவிட்ட அவன், இந்த மன்னார்குடி கும்பலைத்தான் எழுதுவானா?

அக்கட்சியினர் ஒரு மாதிரிதான், ஆனால் இவ்வளவு காமெடியர்கள் என இப்பொழுதுதான் தெரிந்தது.

இனி அகத்தியர் நாடியில் “மன்னர் குடி கொழுந்தொன்று, ராணியிடம் வேலைக்காரியாகி..” என தொடங்குகிறது என ஒப்பாரி வைப்பார்கள், அகத்தியர் கமண்டலத்தோடு இமயமலைக்கே ஓடினாலும் ஓடுவான்.

நாளயே கீதையில் கண்ணன் சொல்லியிருந்தான், ஓலைசுவடி நேற்றுதான் கிடைத்தது என்றால் நம்பிகொள்வார்கள்

நாடி ஜோசிபடி பூர்வ ஜென்ம விதிப்படி கையேயிதான் ஜெயலலிதா, மந்தரை தான் சசிகலா, எம்ஜிஆர்தான் தசரதன் . ஜாணகி கோசலை

கலைஞர் ராவணன் இதெல்லாம் பூர்வ ஜென்ம தொடர்ச்சி என‌ எவனாவது ஒரு வைத்தீஸ்வரன் கோயில் பூசாரி கிளப்பிவிட்டாலும் இவர்கள் நம்புவார்கள்.

வாலியோ, சுக்ரீவன் வகையாறாவில் ஒன்று வைகோ என்றால் நாமே நம்பிவிடுவோம் வாய்ப்பு இருக்கின்றது.

விரைவில் மதுரை ஆதீனம் கனவில் சிவன் வந்து சசிகலாவிற்கு திருநீறு பூசலாம்

பைபிளின் பழைய ஏற்பாட்டில் மாவீரன் அலெக்ஸாண்டர் பற்றி சில குறிப்புகள் உண்டு, அப்படியே வருங்காலத்தில் ஒரு பெண் பாம்பினை நசுக்குவாள் எனவும் சில வார்த்தைகள் உண்டு ,
அது பின்னாளில் வந்த கிறிஸ்துவினை பற்றியது.

எமக்கு ஏற்படும் அச்சமெல்லாம்

பெங்களூர் சிறை முன்னும், அப்பல்லோ வாசலிலும் நின்று கத்திய அந்த கிறிஸ்தவ சாமியார்கள், அந்த பாம்பு கருணாநிதி, அந்த பெண் சசிகலா இதனைத்தான் பைபிள் சொல்லுகிறது என கிளம்பிவிட கூடாதே என்பதுதான்

ரத்தத்தின் ரத்தங்கள் இப்பொழுது பித்தத்தின் பித்தங்களாக….

உண்மையில் ” புரட்சி தலைவி” எனும் பட்டம் வி.என் ஜானகிக்குத்தான் சென்றிருக்க வேண்டும், “புரட்சி தலைவரின்” அதிகார்வ பூர்வ மனைவிதானே “புரட்சி தலைவியாக” இருந்திருக்க வேண்டும்,

திருமணம் முறையாக நடக்கவில்லை என்பதால் விட்டுவிட்டார்களோ? அந்த மகோ.ராமசந்திரன் எதனைத்தான் உருப்படியாக செய்தார்?

சரி இது புரட்சி சமாச்சாரம்

ஜெயலலிதாவிற்கு திருமணம் இல்லை, கணவன் இல்லை. அதனால் அம்மா என அவரை அழைக்கும்பொழுது “அப்பா” என ஒருவரை அழைக்கும் அவசியம் வரவில்லை

இனி சசிகலா” சின்னம்மா” என்றால், நான் தான் தமிழகத்தின் “சித்தப்பா” என நடராஜன் கிளம்பிவிட மாட்டாரா?

இனி தமிழக “சித்தப்பா” நடராஜன்.

ரத்தத்தின் ரத்தங்கள் இப்பொழுது பித்தத்தின் பித்தங்களாக ஆகிகொண்டிருக்கின்றார்கள்

“சித்தி” எனும் ராதிகாவின் பட்டமும், “சித்தப்பா” என்ற சரத்குமாரின் பட்டமும் தாரை வார்க்கபட்டுகொண்டிருக்கின்றன‌


“ஜெயலலிதா இறக்கவில்லை சின்னம்மா வடிவில் நம்மோடு தான் இருக்கிறார் , ஜெயலலிதாவோடு 33 ஆண்டுகளாக இருந்த சின்னம்மா அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்.. “: சரத்குமார்

என்ன தல, அடி கொஞ்சம் பலமோ?

எத்தனையோ பல்டிகளை ஒலிம்பிக்ஸில் பார்த்தோம், இப்படி ஒரு அசகசாய சூர பல்டியினை எங்காவது பார்க்க முடியுமா?..

அதுவும் டூப் போடாமல்


 ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் அதிமுக நிர்வாகி சாமிநாதன் என்பவர் கோயில் கட்டியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு அங்கோர்வார்ட் அளவு கோயிலே கட்டினாலும் இனி ஒரு கவுன்சிலர் பதவியாவது கிடைக்குமா?

கொஞ்சமேனும் விவரமாக இருந்தால் “பவர்மிகு” சின்னம்மன் ஆலயம் அல்லவா எழுப்பியிருப்பார்?

அவ்வளவு விவரமாக இருந்தால் ஏன் கோயில் கட்ட கிளம்புகின்றார்?


சேகர் ரெட்டிக்கு அச்சகத்தில் இருந்து நேரடியாக வந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள்

ஒரு ரெட்டிக்கே இப்படி நேரடியாக வந்ததென்றால், எத்தனை ஆயிரம் ரெட்டிக்கள் இந்தியாவில் இருப்பார்கள். எவ்வளவு பதுங்கியிருக்கும்

பின் எப்படி ஏடிஎம்மில் பணமிருக்கும்?

ஆக்சிஸ் வங்கியும் இதே சர்ச்சையில் சிக்கியது, இன்னும் பல வங்கிகள் சர்ச்சையாகின்றன, ஆனால் எதன் மீதும் நடவடிக்கை இல்லை

உண்மையில் இந்த நாட்டின் பெரும் கறுப்பு பண பதுக்கலுக்கும், கொள்ளைக்கும் துணைபோவது இந்த வங்கிகளே..

இதோ சேகர் ரெட்டி கைகாட்டியும் ஒரு நடவடிக்கையுமில்லை

மோடி தாத்தா என்ன செய்யபோகின்றார்?


 

ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்

Image may contain: 2 people, sunglasses

இன்றோடு 10 ஆண்டுகள் ஆகின்றன, இந்த நாளில்தான் புலிகளுக்கு நாள் குறிக்கபட்டது

அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்

உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் அடித்து சொல்லலாம், எல்லா சிக்கலிலிருந்தும், புலிகள் செய்த எல்லா அட்டகாசங்களிலிருந்தும் புலிகளையும், பிரபாகரனையும் காத்தவர் பாலசிங்கம் மட்டுமே

யாழ்பாண வம்சம், லண்டன் கல்வி, அங்கே பேராசிரியர் எனினும் ஈழபோராட்டம் அவரை அழைத்தது, புலிகளின் ஆதரவாளராக மாறினார்

அவர் இணைந்தபின்பே புலிகளின் வீரியமான போராட்டம் தொடங்கிற்று, சர்வதேச ஆதரவினை புலிகளுக்கு பெற்று கொடுத்தவர் அவரே, அந்த ஆதரவில்தான் ராஜிவ் கொலை முதல் பல சிக்கல்களை தாண்டி புலிகளால் நிற்க முடிந்தது

பிரபாகரனுடன் நேருக்கு நேர் விவாதித்த ஒரே புலி இறுதிவரை பாலசிங்கம் மட்டுமே, இந்த கடிவாளம்தான் அதுகாறும் புலிகளை காத்தது

அமைதிபடை காலம், சந்திரிகா காலம் என எல்லா ஆபத்துக்களிலிருந்த்தும் புலிகள் அவரால்தான் காப்பற்றபட்டனர், பிரேமதாசா முதல் இறுதியாக நார்வே குழு வரை அவர் புலிகளை காக்க பட்டபாடு கொஞ்சமல்ல‌

உலக நிலை மாற, பாலசிங்கத்திற்கும் சில விஷயங்கள் புரிந்தன, இனி தனிஈழம் என்பது சாத்தியமல்ல, இந்தியாவும் ராஜிவ் கொலை என்பதை தாண்டி வராது, ஆனால் பிரபாகரனோ தனிஈழம் இல்லை என்றால் யாரையும் கொல்ல கூடியவர்

ஆனால் அமெரிக்க எச்சரிக்கையோ இனி யுத்தமென்று வந்தால் புலிகள் இருக்கவே மாட்டார்கள் எனும் ரீதியில் இருந்தது

பாலசிங்கம் தவித்தார், நார்வேயிடம் தனியாட்சி பரிசீலிக்கின்றோம் என சொல்லிவிட்டு பிரபாகரனை அவரால் சந்திக்க முடியவில்லை, பிரபாகரன் உலகம் புரியாதவராய் இருந்தார்

சில இடங்களில் அவர் இறுதியில் பிரபாகரனால் அவமானபடுத்தபட்ட இடங்களும் உண்டு என்பார்கள்

2004ல் கருணா விலகும்பொழுதே , ஆண்டன் பாலசிங்கமும் விலகினார், உடல்நலம் காரணம் காட்டி விலகுவதாக சொன்னாலும், அவர் மனம் நொந்தது கொஞ்சமல்ல‌

உலகில் எல்லா நாட்டையும் பகைத்துவிட்டு ஒரு இயக்கம் நாடு அடைய முடியாது என அவர் சொன்னது யார் காதிலும் ஏறவில்லை

அந்த பாலசிங்கம், இறுதியில் புலிவால் பிடித்த கொடுமையால் ஏதும் யாரிடமும் பேசமுடியாமல் தவித்தார்

இந்தியாவுடன் அவர் நட்புறவினை ஏற்படுத்த முயன்றாலும், இந்தியா புலிகளை நம்ப மறுத்தது, காரணம் 1983 முதல் புலிகள் காட்டிய நன்றிகடன் அப்படி

எப்படியாவது இந்தியாவினை இழுத்து தன் நோக்கத்தில் வெல்ல வேண்டும் என்ற பிரபாகரனுக்கு எப்படி இந்தியா வரும் என நம்புகின்றாய்? என சொல்லிபுரியவைக்க முடியா சோகத்தில் அவர் இருந்தார்

எதையுமே யோசிக்காத பிரபாகரன் ஒருபக்கம்

தனக்கு செவிமடுக்கா பிரபாகரனை மொத்தமாக ஒழித்துவிட மேற்குநாடுகள் ஒருபக்கம்

இதில் கொல்லபடபோவது லட்சகணக்கான மக்கள், இதுதான் பாலசிங்கத்தின் வேதனை

நார்வே தூதர் எரிக் சோல்ஹிமிடம் ” லட்சகணக்கான சனம் சாக போகுது எரிக், அதனை நினைத்தால்தான் கடும் வேதனை” என இறுதியாக சொன்னதுதான் ஆண்டன் பாலசிங்கத்தின் வார்த்தை

அவர் காலமானதும், பாய்ந்துவந்த மேற்குலக கட்டளைகள் புலிகளை குதறி எறிந்து முடித்தும் விட்டன‌

எங்கோ காட்டுக்குள் சுட்டுகொண்டிருந்த இயக்கம், பாலசிங்கத்தின் வருகைக்கு பின்னே உச்சம் அடைந்தது, அவர் காலமெல்லாம் அது தன் கொடியினை பறக்கவிட்டுகொண்டே இருந்தது

சுருக்கமாக சொன்னால் அப்போரின் கிருஷ்ணபரமாத்மா சாட்சாத் பாலசிங்கமே, அவர் சொற்படி கேட்டிருந்தால் இந்நேரம் ஈழ வரலாறு மாறி இருக்கலாம்.

தர்மன் தவறு செய்தான், அதனால் பொறுத்திருப்போம் என்ற கிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு பாண்டவர் கட்டுபட்டனர்,

என்மீது தவறே இல்லை, அர்ச்சுணா யுத்தம் தொடங்கு என தர்மன் வனவாசம் போகாமல் யுத்தகளம் வந்திருந்தாலோ

கிருஷ்ணா உன் புல்லாங்குழலை தூக்கி நட, கர்ணனையும், பீஷ்மரையும் வெல்லும் வழி எனக்கு தெரியும் என அர்ச்சுணன் பேசி இருந்தாலோ பாரதம் என்னாயிருக்கும்?..”

அதுதான் ஈழத்தில் நடந்தது

புலிகளின் பெரும் தவறு ராஜிவ் கொலை, அடுத்த பெரும் தவறு பாலசிங்கத்தையும், கே பத்மநாபனையும் ஒதுக்கியது.

இதனால் ஏற்பட்டதே பெரும் அழிவும் முடிவும்

உனக்கு தெரியாது, இந்தியாவும் கலைஞருமே ஈழபோருக்கு காரணம்,என சீமானிய வைகோயிச அடிப்பொடிகள் சொல்லிகொண்டிருந்தால், அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்

பாலசிங்கத்தின் மனைவி அடெல் ஆஸ்திரேலியா பெண்மணி, வெள்ளைகாரிதான், ஆனால் கிட்டதட்ட சோனியா சாயல். கணவனுக்காக தமிழ் கற்றார்

ஈழபோராட்டத்தின் ஆரம்பம், சிக்கல், எது தடை?, எது பிடிவாதம் என்பது நம் எல்லோரையும் விட அடேலுக்கு நன்றாக தெரியும், காரணம் எல்லா பேச்சுவார்த்தைகளிலும் அவரும் பங்குபெற்றிருந்தார்

ஈழப்போர் முடிந்து எங்காவது அவர் பேச கண்டிருக்கின்றோமா?

சீமான், வைகொ, இன்னும் சம்பந்தமில்லா பலபேர் டிவிக்களில் பிரபாகரன் அப்படி, இப்படி என பேசிகொண்டிருக்க, பிரபாகரனிடம் ஒரு மூத்த சகோதரி போல பழகிய அடேல் அமைதி காக்கின்றார்.

அவருக்கு எல்லா ரகசியமும் தெரியும், ஈழமுடிவின் காரணமும் தெரியும், ஆனால் பேசவிட மாட்டார்கள், பேசவிட்டால் பலர் முகத்தில் கரி பூசப்படும்

அப்படி அது அரசியலாக்கபட்டுவிட்டது, அவர் பேசினால் பலபேர் ஓடவேண்டி இருக்கும், இந்த புலிபெருமை எல்லாம் தூரவீசபடும்.

அதனால் அவர் வாய்திறக்க கூடாது என்பதில் பலருக்கு ஆர்வம்

ஈழபோராட்டம் 30 ஆண்டுகள் நடைபெற்றது என்றால், உலகளாவிய ஒரு பார்வை பெற்றது என்றால் அதற்கு ஒரே காரணம் பாலசிங்கம்

அவர் வந்தவுடன் இயக்கம் விஸ்வரூபமெடுத்தது, அவர் இல்லாத இயக்கம் சீட்டுகெட்டென சரிந்தது

இன்று அந்த ராஜதந்திரியின் நினைவு நாள்,

திம்பு பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியாவிலிருந்து அவர் நாடுகடத்தபட்டதும், பின் அமைதிபடை மோதலின் போது அவர் பிரேமதாசாவோடு போஸ் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றன‌

அதே பாலசிங்கம் பின் ராஜிவ் கொலைக்கு பின் கிட்டுவுடன் லண்டனில் போஸ்கொடுத்த காலமும் உண்டு

பின்னாளில் பிரபாகரனை திருந்தமுடியாது என அவர் அறிந்த கால்ங்களில் இந்தியாவுடன் தன் தொடர்பினை ஏற்படுத்த முயன்றதும், இந்தியா கையினை தட்டிவிட்ட காலமும் கண்ணுக்குள் வந்தது

ஒருவகையில் பிரபாகரனுக்கு அஞ்சிய வாழ்வுதான் அவர் வாழ்ந்திருக்கின்றார், படித்தவர், பெரும் ராஜதந்திரி ஆனால் ஒரு முரடனுக்கு முக மூடியாக இருந்ததுதான் பெரும் சோகம்

ஆங்கில புலமையில் தன்னிர்கற்றவர் பாலசிங்கம், அதற்கு எடுத்துகாட்டு கிளிநொச்சி மாநாடு, உலக பத்திரிகையாளர் ஆங்கிலத்தில் கேள்விகளை அள்ளி வீச, அனாசயமாக பதிலளித்தார் பாலசிங்கம்

அதனை கவனித்தவர்களுக்கு ஒரு விசித்திரம் பிடிபடும்

கேள்விக்கான பதிலை வாய்வரை கொண்டுவருவார் பாலசிங்கம், அதற்குள் பிரபாகரன் முகம் மாறும், உடனே கேள்வியினை பிரபாகரனிடம் மொழிபெயர்ப்பார், பிரபாகரன் திருதிருவென விழித்துகொண்டே ஆஆஆஆ..ஈஈஈஈ,, அது.. என எதாவது முணகுவார், பிரபாகரன் பதிலுக்கு சம்பந்தமே இல்லாமல் ஆங்கிலத்தில் பதிலளிப்பார் பாலசிங்கம்

பிரபாகரனுக்கு ஒன்றும் புரியாது, இப்போதிருக்கும் அதிமுக எம் எல் ஏக்கள் போல முழித்துகொண்டே இருந்தார்

ஆனாலும் ஒரு கேள்விக்கு பிரபாரன் முட்டாள்தனமாக பதில் சொல்ல, உலகின் சுருக்கு கயிறு இறுகியது, அது ராஜிவ் கொலையினை பற்றி நிரூபர்கள் சுருக்கு போட, பாலசிங்கள் கேள்வியினை திருப்ப, கொஞ்சமும் யோசிக்காமல் “அது ஒரு துன்பியல் சம்பவம்” என்றார் பிரபாகரன்

அவரை பொறுத்தவரை அது பிரபாகரன் செய்த ஏராளமான கொலையில் ஒன்று, இந்தியர் வருந்தும் துன்பமா? சரி துன்பமான சம்பவம் என சொல்லிவிட்டார்

ஆனால் பால்சிங்கம் ராஜதந்திரமான வார்த்தைகளால் அதனை மறைத்தாலும், துன்பியல் சம்பவம் முத்திரையாயிற்று, அது பால்சிங்கத்தின் வார்த்தை அல்ல,

மாறாக பிரபாகரனின் வார்த்தை

பிரபாகரனை பக்கத்தில் வைத்து ஒரு பேட்டி கூட கொடுக்கமுடியா பாலசிங்கம், 30 ஆண்டுகளாக இயக்கம் நடத்தினார் அல்லவா? அதுதான் ராஜதந்திரம்

ஈழம் அமைவதில் 1991லே மண் அள்ளி போட்டாயிற்று, பின் பின்லேடன் ஆட்டத்தில் அதற்கு சமாதியும் கட்டியாயிற்று

பாலசிங்கம் சொற்படி கேட்டிருந்தால் இன்று ஈழத்தில் ஒரு சுயாட்சியாவது அமைந்திருக்கும், இத்தனை பெரும் அழிவு நடந்திருக்காது என்பதில்தான் பால்சிங்கத்தின் முத்திரை ஈழபோராட்டத்தில் பதிந்திருக்கின்றது.

ஈழ புலிகளுக்கு உண்மையான காவல்காரன் அந்த பாலசிங்கமே என்பதைத்தான் 2009 முள்ளிவாய்க்கால் உலகிற்கு உணர்த்தியது.

இதில் மகா விசித்திரம் என்னவென்றால், 30 வருடம் பழகிய அந்த பாலசிங்கத்திடம் சொல்லாத பல ரகசியங்களை பிரபாகரன் என்னிடம் சொன்னார் என சீமான் என்றொருவர் சொல்லிகொண்டிருக்கின்றார் அல்லவா?

அதுதான் மகா விசித்திரம்

பீஷ்மரிடம், கர்ணனிடம் கூட சொல்லாத ரகசியத்தை துரியோதனன் ஒரு வழிப்போக்கனிடம் சொன்னான் என்பதை நீங்கள் நம்புவீர்களானால், சீமானையும் நம்பிகொள்ளுங்கள்.

அங்கே திருமுருகன் காந்தி என்பவன் மே 17 அன்றுதான் ஈழம் அழிந்தது என சொல்லிகொண்டிருக்கின்றான் , இந்த டிசம்பர் 14 பற்றி எல்லாம் அவன் பேசமாட்டான்.

உண்மையில் ஈழதமிழரின் நம்பிக்கை அழிந்தது 2009 முள்ளிவாய்க்காலில் அல்ல, அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் அடைந்த அந்த டிசம்பர் 14.

பரிதாப வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார் ஜெயலலிதா….

ஜெயலலிதா சொத்துகுவிப்பில் கூட இல்லாத மர்மம் எல்லாம் அவரின் மரணத்தில் கிளம்புகின்றது

மரணம் நேரம் அறிவிக்கபட்ட குழப்பம் என்ன? 75 நாள் ஒரு படம் கூட வராத மர்மம் என்ன? என்பதெல்லாம் கடந்து, அவரின் கைரேகையில் மர்மம், என்பார்மிங் மர்மம் என பல வந்துகொண்டிருக்கின்றன‌

இதெல்லாம் ஒரு படி மேலே சென்று ஜெயலலிதாவின் கால்கள் எங்கே? என ஒரு கும்பல் கிளம்பியிருக்கின்றது

தினமும் வணங்கிய கால்கள் அல்லவா? அவர்களில் யாரேனும் ஆற்றாமையில் “எங்கே அம்மா அந்த கால்கள்” என ஆற்றாமையில் அழுதிருப்பார் என்றால் அது அவர்கள் அல்ல,

அவர்கள் சின்னம்மா உங்கள் கால்கள் எங்கே என சென்றாயிற்று

இப்படி கிளம்புவது இந்த சந்தேக கும்பல்.

முன்பு அவரின் சொத்துகுவிப்பில் சந்தேகம் வந்தது, உடனே வழக்கு தொடுத்தார்கள் , 20 வருடம் நடத்தினார்கள், யார் நடத்தினார்கள்? எப்படி நடத்தினார்கள்? யார் செலவு செய்தார்கள் என்பதெல்லாம் தெரியாது,

ஆனால் வழக்கு நடத்தினார்கள்.

இன்னும் பல சந்தேகங்களை தீர்க்க பலர் கேள்வி எழுப்பிகொண்டே இருந்தார்கள், எல்லாம் அவர் இருக்கும் வரை, அரசியல் செய்யும் வரை.

இப்பொழுது அவரின் மரணத்தில் என்ன மர்மம் என தெரிந்துகொள்ள அவர்களுக்கும் விருப்பம் இல்லை, கட்சிக்காரர்களுக்கும் இல்லை ,

ஒருவருக்கும் இல்லை

அட நம்ம சுப்பிரமணியன் சாமிக்கு கூட இல்லை

என்னாச்சி? என கேட்பதற்கு கூட ஆளில்லா பரிதாப வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார் ஜெயலலிதா.

சென்னை விரைவில் இயல்பாகட்டும்….

அம்மா உத்தரவுபடி மழை பெய்ததால் நன்றி என முன்பொரு காலத்தில் பேனர் வைத்த அந்த கலெக்டர் எங்கிருக்கின்றார் என தெரியவில்லை, ஆனால் அவரை தேடி வர்தா புயல் வந்திருக்கலாம்.

அம்மா மறைந்த துயரால் வங்ககடல் கொந்தளித்தது என இதுவரை யாரும் சொல்லவில்லை, சொல்லாமல் இருப்பது வரை அவனுக்கு நல்லது

வர்தா புயலுக்கு முன்பு மும்பையினை மிரட்டிய தமிழர் “வர்தா பாய்” (வரதராஜ முதலியார்) பெயரினை வைத்தார்களோ என்னமோ, அதே வேகம். அதே மூர்க்கம் ஆடி தீர்த்திருக்கின்றது புயல்

அரசும் சும்மா அல்ல, தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருகின்றது, இப்பொழுதுள்ள முதல்வரின் கைகள் அவிழ்த்துவிடபட்டிருக்கின்றன, கட்சி முடிவுகளை தவிர எல்லா முடிவும் அவரால் எடுக்கமுடிகின்றது

நமது ஆட்சி நிர்வாகம் வெள்ளையரால் நல்ல அடித்தளத்தில் அமைக்கபட்டுள்ளது, உச்சத்தில் யார் இல்லை என்றாலும் அதன் இயக்கம் தடையின்றி நடைபெறும் வகை அது. உத்தரவு மட்டும் போட்டுவிட்டால் போதும், அது நல்லவிதமாக செயல்படும்

ஜெயலலிதா இல்லாமல் ஆட்சி செய்ய திணறுகின்றார்கள் என்ற அவப்பெயர் வந்துவிட கூடாது என்பதில் இந்த ஆட்சி கண்ணும் கருத்துமாக இருப்பது தெரிகின்றது, நல்லது

மக்கள் எவ்விதத்தில் பயன்பெற்றால் என்ன? பெறட்டும்

மின்சாரம் தடை, இன்ன பிற சிக்கல்கள் என்று செய்திகள் வருகின்றன, இம்மாதிரி நேரங்களில் மின்சாரம் தடைபடத்தான் செய்யும், பல சிக்கல்கள் வரத்தான் செய்யும்

பல சேதங்களை தவிர்க்க முடியாது, அதுதான் நடந்திருக்கின்றது

இன்னும் மீட்புபணிகள் செய்ய வேண்டி இருக்கின்றது என செய்திகள் வருகின்றன, செய்யட்டும்

கப்பலில் உதவிபொருட்கள் வந்திருக்கின்றன, முதல்வர் பன்னீர்செல்வமும் புயல்பாதித்த பகுதிகளுக்கு சென்றிருக்கின்றார்.

சென்னை மக்களுக்காக பிரார்த்தித்து கொள்வோம், விரைவில் மீண்டு வரட்டும்

அரசின் நடவடிக்கைகளுக்கும், அதற்கு துணை நின்ற அதிகாரிகளுக்கும் நன்றிகள்

அரசின் எல்லா மீட்பு நடவடிக்கைக்கும் தொண்டர்களுடன் துணைநிற்போம் என சொன்ன முக ஸ்டாலினின் பொறுப்புணர்ச்சியும் வாழ்த்துகுரியது.

டிசம்பர் மாதம் என்னமோ சென்னைக்கு ராசியில்லாத மாதம், புயலோ, சுனாமியோ, பெருமழையோ அம்மாதத்திலேதான் அரசியலிலும், இயற்கையிலும் சென்னையினை புரட்டுகின்றன‌

ஆனாலும் சென்னை எந்த சிக்கலிலிருந்தும் எளிதில் மீண்டுவிடும் நகரம், சுதாரிக்க சில நிமிடம் வேண்டும் அதற்கு அவ்வளவுதான்

மீண்டுகொண்டிருகும் சென்னை விரைவில் இயல்பாகட்டும்.


“ஏழைகளுடன் பிரதமர் போர்” : ராகுல் பேச்சு

பிரதமரின் போர் இருக்கட்டும், தமிழக காங்கிரசில் பெரும் போர் நடந்துகொண்டிருக்கின்றது, பீட்டர் அல்போன்ஸ் பெட்டி கட்டுகின்றார், குஷ்பூ கட்சி மாறலாம் என்கின்றார்கள்,

திருநாவுக்கரசரின் தலமை அந்த போரினை நடத்திகொண்டிருக்கின்றது.

அந்த‌ பெரும் போரில் தமிழக காங்கிரசே காணமல் போகலாம், அதனை பற்றி எல்லாம் இவருக்கு கவலை இல்லை