ஜெ மறைவிற்குப் பிறகு அரசியல் மாற்றங்கள்…

தமிழகத்தில் எந்த பொறுப்பிலுமே இல்லாத, எம் எல் ஏவினை விடுங்கள், ஒரு வார்டு கவுன்சிலர் பதவியில் கூட இல்லாத கட்சியின் வைகோ பிரதமரை சந்திக்கின்றார்

சந்தித்து புயல்சேதம், ஜல்லிகட்டு, ராமேஸ்வர மீணவர் பிரச்சினை என பல கோரிக்கைகளை வைக்கின்றார்

இந்த கோரிக்கைகளைத்தான் அவர் கோரினார் என சொல்வார்கள் அதனை நாம் அப்படியே நம்ப வேண்டும்

சரி இவ்வளவு நாளும் வைகோ எங்கிருந்தார்?

கடந்த 6 மாதமாக‌ வைகோ வானத்தில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தார், இன்று அதிகாலையில்தான் ரஷ்ய ராக்கெட் மூலம் பசிபிக் கடலில் இறங்கினார், இந்தியா வந்தவுடன் தமிழர் நலம் பற்றி பேசிவிட்டார்

பொதுவாக‌ புரோக்கராக இருந்து, நெளிவு சுழிவு கற்று கட்சி ஆரம்பிப்பார்கள், உலகிலே கட்சி ஆரம்பித்த பின் புரோக்கரான ஒரே நபர் கோப்பால் சாமிதான்

இறுதிபோரில் இவரை நம்பிய பாவத்திற்காக பிரபாகரன் தன் தலையில் தானே கோடாரியால் கொத்தி செத்த சாத்தியமும் இருக்கலாம்,


தமிழக அரசியலை விளங்கசெய்ய இதனை விட அரிய சந்தர்ப்பம் வாய்க்காது

அதாவது ஒரே அரசியல், கலைஞரின் திமுக ஒருபுறம், அவரை பிடிக்காதவர்கள் எல்லாம் இன்னொருபுறம்

இதில்தான் எம்ஜிஆர் அதிமுக,ஜெயா அதிமுக, மதிகெட்ட திமுக, தேறா திமுக, இப்பொழுது சசிகலா திமுக வரை வந்து நிற்கின்றது

காங்கிரசும் திருநாவுக்கரசு வழியாக சசிகலா திமுக பக்கம் திரும்புகின்றது, பாஜக நிலை சசிகலாவிடம் மோடி காட்டிய பரிவில் வெளிபட்டது

கம்யூனிஸ்டுகள் இன்று சசிகலாவிடம் குனிந்து நிற்பதும், சசிகலா பிடிக்கவில்லை என்றாலும் அதிமுக எம் எல் ஏக்கள் அய்யகோ நாம் உடைந்தால் கலைஞர் சிரிப்பாரே என அடங்கி இருப்பதும் அதே கலைஞர் எதிர்ப்பு

கருப்பு துண்டு புரோக்கர் டெல்லியில் சென்று மோடியிடம் மண்டியிட்டு நிற்பதும் அதே கலைஞர் எதிர்ப்பே

ஆக எதிர்கட்சிகளை சேர்த்துநிற்க தமிழகத்தில் ஒரே காரணம் அந்த கலைஞர் எதிர்ப்பு, அவரை காட்டியே இன்று வரை அரசியல் நடக்கின்றது

அதில் கொள்கையோ மக்கள் நலனோ ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, ஒரே நோக்கம் கலைஞர் எதிர்ப்பு

கொஞ்சபேர் சொல்கின்றான் பாஜக அதிமுகவினை விழுங்குமாம், அட பதர்களா? டெல்லியின் இன்னொரு கிளைதான் அதிமுக, அந்நாளிலிருந்தே அது அப்படித்தான், பின்னர் ஏன் விழுங்க வேண்டும்

ஆனாலும் இத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் இத்தனை ஆண்டு காலம் கட்சியினை கொண்டுசென்றது கலைஞரின் சாமார்த்தியம் அன்றி வேறல்ல, நிச்சயம் அல்ல‌

அதனால் உறுதியாக சொல்லலாம், கலைஞர் இல்லையேல் அவர்கள் அரசியல் இல்லை

ராமச்சந்திரனோ, ஜெயலலிதாவோ, யார் செத்தாலும் கலைஞர் இருக்கும் வரை ஒரு கூட்டத்தை அவரை எதிர்க்கின்றோம் என சொல்லி கூட்ட முடிகின்றது.

அதனால்தான் திமுக தொண்டனை விட, கலைஞர் நீண்டகாலம் வாழவேண்டும் என ஆசைபடுபவன் எதிர்கட்சியில்தான் இருக்கின்றான், மனதிற்குள் அவர்கள் வேண்டும் வேண்டுதல் பலிக்கின்றது

ஆக மாற்றுகட்சி நண்பர்களே, உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி, இன்னும் நன்றாக பிரார்த்தியுங்கள்.


போயஸ் கார்டனில் ஜெயா ஆவி …

போயஸ் கார்டனில் ஜெயா ஆவி நிலவுவதாக சர்ச்சை, மாந்த்ரீகம் செய்ய மலையாள மந்திரவாதிகள் வருவதாகவும் செய்திகள்

நிறைவேறாத ஆசை உள்ளவர்கள் இறந்தால் அவர்கள் ஆவிகளாக அலைவார்கள் என்பது ஐதீகம்

அப்படி ஜெயாவிற்கு இருந்த ஆசைகள் மிக அதிகம், பிரதமர், ஜனாதிபதி அதற்கு மேல் உலக தலைவர்கள் வரை ஆகும் ஆசையும் இருந்திருக்கலாம்

திமுகவினை அழிக்கும் ஆசையும் இருந்தது

எந்த அமைச்சரும் 5 வருடம் நிம்மதியாக பதவியில் இருக்க கூடாது என்ற ஆசையும் இருந்தது

பின் எப்படி அவர் ஆன்மா சாந்தி அடையும்? அதுவும் தன்னால் ஓட விரட்டபட்டவர் எல்லாம் வந்து தன் உடலை சுற்றி நின்றதையும், தன் வீட்டில் ஹாயாக அமர்ந்திருப்பதை பார்த்தால் ஆவி எப்படி அமைதியாகும்?

அது உறுமத்தான் செய்யும்?

மலையாள மந்திரவாதிகள் வேறு வருகின்றார்களாம்

ஜே இருக்கும் போது தேர்தல் மனு தாக்கல் முதல் வேட்பாளர் அறிவிப்பு வரை குறித்துகொடுத்த அதே கேரள மந்திரவாதிகள் இப்பொழுது ஜெயா ஆவியினை அடக்க வருகின்றார்களாம்

இருக்கும் போது மட்டுமல்ல‌ இறந்த பின்னும் மிரட்டுகின்றார் அல்லவா?, அதுதான் ஜெயலலலிதா.
போயஸ் கார்டனில் மட்டும் சுற்றுமாம், கோபாலபுரம் எல்லாம் செல்லாது

மீறி சென்றால் என்னாகும்? இப்படி எல்லாம் மந்திரவாதிகளை அழைக்கமாட்டார் கலைஞர், கால் வலிக்கின்றது கொஞ்சம் பிடித்துவிட முடியுமா? என கேட்பார்

அதன் பின் அந்த ஆவி அங்கே நிற்கும்?

சசிகலாவினை விமர்சித்தால் உடனே போலிசை விட்டு தூக்குமாம் ….

அதிமுக பற்றியோ, சசிகலாவை பற்றியோ சமூகவலைத்தளங்களில் யாராவது வதந்தி பரப்பினால் மற்றும் கிண்டல் மீம்ஸ்கள் பதிவேற்றினால் அவர்கள் மீது பொலிசார் மூலம் கடும் நடவடிகை எடுக்கப்படும் : அதிமுக தொழில்நுட்ப பிரிவு

கட்சிக்கு தொழில்நுட்ப பிரிவு உண்டாம், அது முழு வேலையாக சமூக வலை தளங்களை கண்காணிக்குமாம்

இவை எல்லாம் எதிர்கட்சி சதியாம், கட்சிக்காரன் எழுதும்போது எப்படி எதிர்கட்சி என்று யாரும் கேட்டுவிட கூடாது

பிரபாகரனை ஆதரித்தால் மட்டும் அவன் தமிழுணர்வாளன் என்பது போல சசிகலாவினை ஆதரித்தால் மட்டுமே அவன் இனி அதிமுககாரனாம்..

யாரேனும் சசிகலாவினை விமர்சித்தால் உடனே போலிசை விட்டு தூக்குமாம்

போலிசுக்கு இருக்கும் வேலைகளில் இதுவும் ஒன்று, இதில் இந்த ராமஜெயம் கொலைவழக்கு போன்ற தீரா வழக்கெல்லாம் இனி தீரா மர்மமே

ஆக சசிகலாவினை விமர்சித்து மீம்ஸ் போடுபவர்கள், கண்ணை மூடி ராம்குமார் சிறை அறையினை நினைத்துகொள்ளும்படி அந்த் தொழில்நுட்ப பிரிவு மறைமுகமாக சொல்கிறது

சசிகலா போனால் போகட்டும்

எங்களுக்கு கலைஞர், சீமான், தமிழிசை , திருமா, மோடி, டிரம்ப் என விமர்சிக்க எத்தனை பேர் உண்டு தெரியுமா?

அவர்கள் எல்லாம் ஒருவார்த்தை சொல்வார்களா?

அவர்கள் எல்லாம் அவ்வளவு டீசண்டு….

இந்த அதிமுக பார்ட்டிகள் எப்பவுமே மகா சீரியஸ் கோஷ்டிகள்

இதற்கு வட கொரியா எவ்வளவோ பரவாயில்லை, தான் ஒரு சர்வாதிகார நாடு என்றாவது ஒப்புகொள்கின்றது, வோட்டு என்று அந்த அதிபர் எங்கும் செல்லவில்லை

ராணுவ ஆட்சி நாடுகளும், மன்னராட்சி நாடுகளும் கூட ஆம் இங்கு இதுதான் சட்டம், உன் வோட்டு வேண்டாம் என சொல்கின்றன‌

தமிழகம் அதிலும் சேராது, ஜனநாயகத்திலும் சேராது. தமிழனை போலவே அதுவும் விசித்திரம்.


 ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: ராமதாஸ்

இன்றைய தமிழகத்தில் உருப்படியாக கேள்விகள் கேட்டுகொண்டிருப்பது மருத்துவர் ஒருவர் தான்

கட்சி தலைவர் மட்டுமல்ல, அவர் ஒரு மருத்துவரும் கூட. அதனால் இது மிக நியாமான கோரிக்கையே

பணம் மட்டும் வெள்ளையானால் போதுமா?

மருத்துவ அறிக்கைகளையும் இந்த தேசத்தில் வெள்ளை ஆக‌ வேண்டாமா? மிஸ்டர் மோடி


கொசுறு

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

அங்கிள் சைமன், இதோ தமிழ் முதல்வர் ஆட்சியில் தமிழ் மீணவனை தொட்டுபார்க்கும் தைரியம் சிங்களனுக்கு எப்படி வந்தது?

தமிழ் முதல்வன் வந்தாகிவிட்டது, சிக்கல் தீரவில்லை

சரி உங்கள் வழக்கமான சத்தத்தில் மானமுள்ள, வீரமுள்ள, ஒரு அப்பனுக்கு பிறந்த தமிழன் முதல்வராக வேண்டும் என சொல்லுங்கள் பார்க்கலாம்.


 

சிரியாவில் என்னதான் நடக்குது?

உலக அரசியல் எப்படி எல்லாம் அப்பாவி மக்களை கொல்லும் என்பதற்கு சிரியாவே பெரும் உதாரணம்

பெரும் நாடுகளின் சண்டைக்கு நடுவில் அது அழிந்துகொண்டிருக்கின்றது, சிரிய மக்களின் கதறலையும், அவர்களின் வீடுகள் விமானங்களால் நொறுக்கபட்டு நடுவீதியில் விரட்டபடுவதையும் காண சகிக்கவில்லை

ஒரு சிறிய நாடு, அதுவும் இனவாத அடையாளங்களை கொண்டநாடு தீவிரவாதத்திலும் அதன் எதிரொலியாக‌ வல்லரசுகளின் கையில் சிக்கிவிட்டால் என்னாகும் என்பதற்கு அதுவே உதாரணம்

புடின் இரும்புபிடியினை விடுவதாக இல்லை, அமெரிக்கா இன்னும் முழுமையாக களம் இறங்கவில்லை ஒரு மாதிரியான போங்கு ஆட்டத்தை அது ஆடிகொண்டிருக்கின்றது

சிரியாவின் அப்பல்லோ நகரமும், ஈராக்கின் மொசூல் நகரமுமே இன்று அதிகம் மக்கள் செத்துகொண்டிருக்கும் பகுதிகள்.

போரினால் ஒருபுறம், உண்ண ஒன்றும் கிடைக்காமல் மறுபுறம், குடிக்க நீரின்றி இன்னொரு புறம்.

சின்னம்மாவிற்கு பன்னீர்செல்வம் போல அமெரிக்காவிற்கு ஐநா சபை என்பது.

ஐநா சபை உட்பட யாரும் கவலைபட்டதாகவும் தெரியவில்லை

இனி அதிபராக பொறுப்பேற்றால் டிரம்ப் வேறு என்ன செய்வாரோ? அவர் முழுமையாக களமிறங்கினால் பெரும் விபரீதங்கள் ஏற்படலாம்

நமக்கு எவ்வளவோ சிக்கல், கரன்சி முதல் புயல் வரை பெரும் சிக்கல், அரசியல் முதல் ஆட்சி வரை பல வகையான இம்சைகள்

ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையோ, வாழ முடியாத நிலையோ இங்கு இல்லை. ஏதோ ஒரு வகையில் வாழ்ந்து விடலாம்.

இன்றைய தேதியில் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டுமானால்
என்னை சிரியாவிலும், ஈராக்கிலும் பிறக்க வைக்காதற்கு நன்றி என்பதை பெரும் நன்றியோடு சொல்லலாம்.

பாலஸ்தீன மக்கள் போராடி நொந்துவிட்டார்கள், சிரியா கிழிபட்டுகொண்டிருக்கின்றது, ஈராக் மிதிபட்டுகொண்டிருக்கின்றது

இன்னும் அரேபிய எண்ணெய் வளமும் அவர்களின் இயல்பான மூர்க்கமும் என்னவெல்லாம் செய்ய போகின்றதோ?

தகுந்த பாதுகாப்பும், மிகுந்த எச்சரிக்கையுமின்றி ஒருவனிடம் பெரும் செல்வம் குவிந்திருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு அரேபிய எண்ணெய்வளமே சாட்சி

வறுமையும் வெறுமையும் சில நேரங்களில் கொடுமை என்றாலும், பல நேரங்களில் அதுவேதான் பாதுகாப்பு.

உங்களில் யார் அடுத்த சின்னம்மா?

Image may contain: 3 people, text

கட்சியின் பொதுசெயலாளர் யார்? என பலர் குழம்ப‌

எம் எதிர்பார்ப்பு அடுத்த சின்னம்மா யார்? என்பதிலே இருந்தது,

காரணம் அக்கட்சியில் பொதுசெயலாளரை விட , இந்த “சின்ன” பதவியில் இருப்பவர்களுக்கே சக்தி அதிகம்

இளவரசி, அவர் இவர் என நிறைய பேர் இருந்ததால் “உங்களில் யார் அடுத்த சின்னம்மா?” என கேட்கவேண்டும் போல் இருந்தது

அவர்களே சொல்லிவிட்டார்கள் “சின்ன சின்னம்மா” என அடைமொழியோடு

செல்லம்மா, பொன்னம்மா எல்லாம் இல்லை, சின்னமாவின் அடுத்த பதவி “சின்ன சின்னம்மா”

இனி என்ன தேடலாம்?

சித்தப்பா நடராஜன் ரெடி

சின்ன சித்தப்பா யார்?

யாராகவும் இருக்கட்டும்

இதனை எல்லாம் பார்க்கும்பொழுது அன்று தலைவன் எம்.ஆர் ராதா அந்த ம.கோ. ராமச்சந்திரனிடம் கேட்டதுதான் நினைவுக்கு வந்தது

“அடேய் ராமசந்திரா, உனக்கு எதுக்குடா அரசியல், பேசாம 4 படம் நடிச்சிட்டு போவியா?

அரசியலுக்குண்ணு சில நல்லவங்க இருக்காங்க, அவங்க அத பாத்துட்டு போகட்டும், நாடு நல்லா இருக்கட்டும்”

வர்தா புயலுக்கு பின்னர்…..

ஒரு பக்கம் பன்னீர் விழுந்து விழுந்து சென்னையினை சீரமைக்கின்றார், இன்றிரவே சென்னை இயங்கும் என பாராட்டு பத்திரம்

இன்னொரு பக்கம் சென்னை மீள பல வாரமாகும், மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை மீட்புபணி சரியில்லை, அத்தியாவசிய பொருள் தட்டுபாடு

இன்னும் உண்மைநிலை வெளிகாட்டபடவில்லை
என செய்திகள்

வழக்கம்போல ஒன்றுமே புரியவில்லை…

சென்னை செய்திகள் என்றாலே இப்பொழுதெல்லாம் மகா மர்மம்….

இப்போதைக்கு வர்தா புயல் தாக்கியது என்பதுமட்டும்தான் நம்பகமான செய்தி

அப்படியே பன்னீர்செல்வம்தான் முதல்வர் என்பதனையும் நம்பலாம்


சென்னையில் புயலில் ஏராளமான மரங்கள் சரிந்திருப்பதால் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் : சவுமியா அன்புமணி அறிவிப்பு

முன்பு வட மாவட்டங்களில் போராட்டம் நடத்தும்பொழுது இவர் மாமனார் ராமராஸ் வெட்டி வீழ்த்திய சாலையோர மரங்கள் இருந்த இடத்தில் எல்லாம் அம்மணி ஏற்கனவே மரம் நட்டு வளர்த்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது

மரம் வெட்டி கட்சி, மரம் நடும் கட்சியாகிவிட்டது


ஜெயலலிதா யாருக்கோ உயில் எழுதியுள்ளாராம்..

ஜெயலலிதா யாருக்கோ உயில் எழுதி வைத்திருக்கின்றாராம், சம்பந்தபட்ட நபர் சென்று தன் அடையாளங்களை எல்லாம் சொன்னால் உடனே சொத்துக்கள் கிடைத்துவிடுமாம், இப்படி ஒரு செய்தி வருகின்றது

இப்பொழுது என்ன நடக்கும்? சம்பந்தபட்டவர் சென்று தன் அடையாளத்தை உறுதி செய்தால்தானே வாரிசு ஆகும்? அப்படி ஒரு ஆள் இல்லை என்றால், சரி அப்படி ஒருவர் இருந்து என் சொத்துக்களை எல்லாம் முத்து ரஜினியாக கட்சிக்கு தாரை வார்க்கின்றேன் என சொல்லிவிட்டு காவி உடுத்தினால்?

எதுவும் நடக்கலாம், செய்தி உண்மையானால், ஜெயா சொத்தின் வாரிசு யார் என பார்க்கலாம்.

அக்கட்சியின் நிறுவணர் எம்ஜிஆர் இரட்டை குதிரையில் சவாரி செய்தவர். சினிமா, அரசியல் என இரண்டையும் கையில் வைத்திருந்தார்

அரசியல் வாரிசு யார் என அவர் அண்ணா சமாதி அருகே புதைக்கபடும்பொழுதும் எழும்பி சொல்லவே இல்லை

ஆனால் கலையுலக வாரிசு பாக்யராஜ் என அறிவித்தார். எப்படி? என்பதுதான் குழப்பம்

எம்ஜிஆர் அதிரடி, ஹீரோயிச நடிகர், பாக்ய்ராஜ் என்பவர் ஜெமினி கணேசன், முத்துராமன் வகை நடிகர்.

பாக்யராஜ் பெரும் கதாசிரியர் என்பது உலகறிந்தது, எம்ஜிஆர் எத்தனை பேர் கதைய்னினை தனக்காக மாற்றிகொண்டார் என்பது ஆர்.எம் வீரப்பனுக்கே வெளிச்சம்

பின் எப்படி பாக்யராஜ் கலையுலக‌ வாரிசனார்? புரியாது. அண்ணாயிசத்தில் அது ஒரு வகை

உண்மையில் எம்ஜிஆரின் கலையுலக வாரிசு யார் என்ற குழப்பம் எல்லோர் போல எமக்கும் உண்டு.

பவர் ஸ்டாரின் படங்களை பார்க்கும்பொழுது அது இன்னும் அதிகமாகின்றது

எம்ஜிஆராவது தன் கலையுலக வாரிசு என ஒருவரை சொல்லியாவது சென்றார், ஜெயலலிதாவின் திரையுலக வாரிசு யார்?

அதுவும் மகா மர்மம்.