‘மநகூ’விலிருந்து வெளியேறுவதாக வைகோ அறிவிப்பு, ஜெ ஆவி உக்கிரம்…

‘மநகூ’விலிருந்து வெளியேறுவதாக வைகோ அறிவிப்பு

சிரிய போரில் அமெரிக்க கூட்டணியாக இருந்தவர், கொடுமை தாங்காமல் வெளியேறிவிட்டார், இனி உலகில் அணு ஆயுத யுத்ததிற்கு வாய்ப்பு கூடுகின்றது

பங்குசந்தை முதல் கச்சா எண்ணெய் வரை இனி பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு

இதுபற்றி விவாதிக்க ஐநா சபை அவசரமாக கூடுகின்றது,

டிரம்பும் புட்டீனும் சந்தித்துகொள்ள ஜெனிவா விரைகின்றனர்


ஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது! 2023 வரை இங்குதான் இருக்கும்! பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு

தன் நாற்காலியில் இன்னொருவர் அமர்வதை கண்டால் எப்படி அந்த ஆவி பொறுக்கும்? நாற்காலியே இல்லாமல் போனால் அமைதியாகும்.

அதாவது கட்சி சுத்தமாக அழிவதை கண்டபின்புதான், கட்சி இல்லாமல் போனால்தான் அமைதி கொள்ளும் அப்படித்தானே ஜி?


மிஸ்டர் & மிஸஸ் விஜயகாந்த், கொஞ்சம் தெருவுக்கு வந்து ஒரு பிடி மண் எடுத்தாவது வீச கூடாதா?


சீன முன்னாள் மந்திரிக்கு 10.5 ஆண்டு ஜெயில்..

லஞ்சம் வாங்கிய வழக்கில் சீன முன்னாள் மந்திரிக்கு 10.5 ஆண்டு ஜெயில்..

நாடா அது? இங்கு அதெல்லாம் நடக்குமா?

ஒரு தலமை செயலாளரை சும்மா தொட்டாலே அது அரசியல் சாசன அவமானம், மத்திய அரசின் கொடுமை என்றெல்லாம் பொங்குவது எங்கள் ஸ்டைல், தண்டனை எல்லாம் கிடையவே கிடையாது.

வருமான வரி சோதனையா? வா வந்து எடுத்துகொள் அவ்வளவுதான், மேற்கொண்டு தண்டனை அது இது என நீனும் பேச கூடாது நானும் பேசமாட்டேன் என்பது எங்கள் கொள்கை

எத்தனை ரெய்டு நடக்கின்றது, எவனாவது கைது செய்யபட்டானா? நெவர், நடக்கவே நடக்காது அதுதான் இந்தியா..

வியாபாரி வரி கட்டவில்லை என சொல்வோம் , வரி கட்டாதவன் உரிமத்தை ஏன் ரத்துசெய்ய கூடாது என சொல்லமாட்டோம், காரணம் இது ஜனநாயக நாடு.

சீனாவினை இந்தியர்களாகிய நாங்கள் ஏன் பகிரங்க எதிரியாக கருதுகின்றோம் என்றால் இதற்காகத்தான். இப்படி ஊழலுக்கு பெரும் தண்டனை கொடுக்கும் நாடு எப்படி எங்களுக்கு நட்பு நாடாக இருக்க முடியும்?

ஆக சீனர்களே உங்கள் கொள்கையும் கோட்பாடும் வேறு, உங்களை பார்த்து நாங்கள் கெட்டுபோக மாட்டோம் அதனால் உங்களோடு என்றுமே கா….

ஜெயா இருந்தால் இப்படி நடக்குமா? : ராம் மோகன ராவ் புலம்பல்

என்னவோ வெள்ளையனை எதிர்த்து கப்பல் விட்டதை போலவும், அதனை வெள்ளையன் அரசு பிடுங்கிவிட்டு இவரை புல்வெட்ட போட்டது போலவும் ராம மோகன் ராவ் பேட்டியளித்துகொண்டிருக்கின்றார்

இவரை பதவி நீக்கிய பின்னும் என்ன பேசி கிழிக்கவேண்டியிருக்கின்றது, குற்றமில்லை என்றால் நீதிமன்ற கதவினை தட்டி சொல்லலாம்.

இங்கு இருந்து கொண்டு இது மத்திய சதி, மாநில சதி , இது அரசியல் சாசன அடி என்று சொல்வதெல்லாம் பெரும் காமெடிகள்

அதிகாரிகளும் அரசியல்வாதிகளாகிகொண்டிருக்கும் அவலம நடந்துகொண்டிருக்கின்றது

இவர் தலமை செயலாளராம், அதனால் இவரை அடைத்து வைத்து விசாரித்தது சட்ட விரோதமாம்.

என்னவெல்லாமோ பேசுகின்றார்

ஜெயா இருந்தால் இப்படி நடக்குமா? என்கின்றார்

முதல்வரே பெங்களூர் சிறையில் இருந்தது மறந்துவிட்டது போல, அந்த கோட்டையே ராணுவத்திற்கு சொந்தமானது என்பதுமா மறந்துவிட்டது?

முதலில் இவரை கைது செய்யாமல் வைத்திருப்பதே பெரும் தவறு, அவரோ தியாகி ஆக முயற்சித்து கொண்டிருக்கின்றார்

எல்லாம் சரி ராவ், 20 இடத்திலிருந்துகொண்டு எப்படி 19 பேரை முந்தி ராவோடு ராவாக பதவி பெற்றீர்? அந்த மர்மத்தையும் சொன்னால்தான் என்ன?


என்னை குறி வைத்துள்ளனர் என் உயிருக்கு ஆபத்து : ராமமோகனராவ்

அந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும், நிச்சயம் உங்கள் உயிருக்கு ஆபத்துதான்

சரி யாரால் ஆபத்து, அவை எல்லாம் யாருடைய பணம், நீர் உயிரோடு இருந்தால் யாருக்கு ஆபத்து என்பதை சொல்லி தொலையும்

இந்த சமூகத்திற்காவது அது பயன்படும்

மற்றபடி இனி நீர் இருந்து மறுபடியாகவும் தலமை செயலாளர் ஆக “மக்கள் பணியாற்றும்” வாய்ப்பு இனி வரவா போகின்றது?

 எல்லையில் அனுதினமும் ராணுவ வீரன் சாகும்பொழுது……

4 கொள்ளையர்களை அடையாளம் காட்டிவிட்டு நீர் செத்தால்தான் என்ன?


1994 ல் இருந்து என்னை பழக்கி பயிற்சி அளித்தவர் ஜெயலலிதா : ராம் மோகன் ராவ்.

அட பாவி மனுஷா, பயிற்சியினை நீர் கலைஞரிடம் எடுத்திருக்க கூடாதா? இந்நேரம் வருமான வரிதுறையே தலையினை பிய்த்து ஓடியிருக்காதா?

சசிகலாவினையே சமாளிக்க தெரியாத அந்த அப்பாவியிடமா பயிற்சி எடுப்பது?


மக்கள் எல்லாம் ஏடிஎம்மில் சொந்த காசை எடுக்க காத்து நிற்கும் நாட்டில், ஏதோ உழைத்து சேர்த்த பணத்தை கண்ணெதிரே ஐடி அதிகாரிகள் அள்ளிகொண்டு சென்றதை போல அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கின்றதாம்

அது என்னவோ தெரிவில்லை, முன்னாள் முதல்வர் ஒரு அரசு பணியாளர், இதோ முன்னாள் தலமை செயலாளர் ஒரு அரசு பணியாளர். இவர்கள் அரசிடம் சம்பளம் வாங்கும் பணியாளர்கள்

ஆனால் இவர்கள் சிகிச்சை எடுக்கும் இடமெல்லாம் தனியார் மருத்துவமனைகள்

நிச்சயமாக இந்த ராமமோகன்ராவ் தேசிய சிறந்த அரசு மருத்துவர்கள் பாதுகாப்பில் அரசு மருத்துவமனையிலே சிக்கிசை பெற வேண்டியவர்

இதில் இன்னமும் “அடுத்த எம்ஜிஆர்” சின்ன இதயகனி, சின்ன புரட்சிதலைவர், சின்ன அய்யா பன்னீர் செல்வம் அவ்ர்கள் இன்னமும் கருத்து சொல்லாதது பெரும் விசித்திரம்

“சின்ன சின்னவர்” பன்னீர் செல்வம் அவர்கள், கட்சியில் யாராகவும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் இப்பொழுது ஒரு மாநிலத்தின் முதல்வர்

அவ்வகையில் அவருக்கு பதில்சொல்லும் கடமை உண்டு

இருக்கட்டும்

இனி ஐடி அதிகாரிகளோடு ஒரு ஆம்புலன்சையும் சில டாக்டர்கள் குழுவினையும் அனுப்புவது நல்லது, அடுத்த நபர் சயனைடு கடித்தாலும் கடிக்கலாம்

எதற்கும் ரெட்டிக்கு மிக விரைவில் நெஞ்சுவலி வரலாம், சுற்றிலும் மருத்துவர்களை நிறுத்துவது நல்லது

இவ்வளவு இளகிய மனம் படைத்தவர்களா ஆட்சி செய்யும் அதிகாரிகள்?, இப்படி படீர் படீர் என நெஞ்சுவலி வருகின்றது


தமிழக நிலை என்ன?

நாட்டின் இன்றைய மகா முக்கிய பிரச்சினை கரன்சி மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்

எந்த கட்சியாவது இதனை உருப்படியாக பேசுகின்றதா என்றால் இல்லை, பாஜக் கட்சி தலைவர்களே வண்டு முருகன் வடிவேலு போல “தத்தப்ப்பத்தப்ப்ப்” என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

தமிழக நிலை என்ன?

ப.சிதம்பரம் தனக்கே உரித்தான நிபுணத்துவத்திலும், அனுபவத்திலும் பின்னி எடுக்கின்றார். அழகாக அர்த்தமாக பேசி உண்மை நிலையினை உணர்த்துகின்றார், இன்னும் சில மகா பெரும் பிம்பங்கள் மணி சங்கர் அய்யர் போல உண்டு

பாஜகவின் தமிழிசை வாயினை திறந்தாலே சிரிக்க தோன்றுகின்றது, அர்த்தமுள்ள வார்த்தை ஒன்று கூட வராது, கோவை சரளா லெவலுக்கு சென்றாகிவிட்டது

அதிமுக நிலை இன்னும் பரிதாபம், ஆளும் கட்சிதான் ஆனால் முதல்வர் பன்னீர் செல்வத்தினை பார்க்கும்பொழுது ஜீன்ஸ் படத்தின் இன்னொரு நாசர் நினைவுக்கு வருகின்றார், கையில் அந்த புத்தகம் மட்டும் இல்லை

சி.ஆர் சரஸ்வதி எல்லாம் கட்சி பிரமுகராக பேசும் நிலை, இந்த பிரச்சினை பற்றி விளக்க அங்கும் ஆளில்லை, வரவும் மாட்டார்கள் வந்தால் அக்கட்சியில் இருக்கவும் மாட்டார்கள்

பாமக ராமதாஸ் உண்மையில் கொஞ்சம் விபரமானவர், அவர் சொல்லும் சில கருத்துக்கள் ஏற்றுகொள்ள கூடியவை. ஆனால் அங்கும் அன்புமணி தவிர உருப்படியாக யாருமில்லை, காடுவெட்டி குருவினை காட்டிவிட்டால் அவ்வளவுதான்

திருமா கட்சி பெரும்பாலும் அஞ்சலி கட்சி, யாருக்காவது அஞ்சலி செலுத்திகொண்டே இருப்பார்கள். திருமா சமூக பிரச்சினைகளில் சீறுவார், பொதுகருத்தில் சறுக்குவார். அங்கும் அவரை தவிர அடையாளமில்லை

வைகோ கேட்கவே வேண்டாம், மைதானத்தில் ஓடிகொண்டே இருந்தும் ஒரு ரன்னை எடுக்காதவனை என்ன சொல்லலாம், அவர் அப்படித்தான், ஓடிகொண்டே இருப்பார். அதாவது ஆட்டத்தில் இருக்கின்றாராம். யாரும் கண்டுகொள்ளத்தான் இல்லை

கம்யூனிஸ்டுகள் சிகப்பு கொடியில் கருப்பும் வெள்ளையும் கலந்து சின்ன அம்மா பக்கம் சாயும் காலம்

முன்பெல்லாம் பெரும் நாட்டு நலன் கருத்துக்கள் அவர்களிடமிருந்துதான் வரும், இப்பொழுதெல்லாம் காற்றுவாங்கிகொண்டிருக்கின்றார்கள்

திமுக இதில் மிகவும் சறுக்கி இருக்கின்றது, பாராளுமன்றத்தில் முழங்கிய அண்ணா, முரசொலிமாறனுக்கு பின் அங்கும் யாரும் தென்படவில்லை

இன்று முக ஸ்டாலின் காலம், ஆனால் பெரும் பேச்சாளர்களையும் பெரும் நிபுணர்களையும் வித்தகர்களையும் கொண்டிருந்த திமுகவிற்கு இப்பொழுது ஆளில்லை

மனுஷ்ய புத்திரன் என்றொருவரை எல்லாம் கொண்டு திரியும் சூழலில் அது சிக்கிவிட்டது

ஒன்று புரிகின்றது

நல்ல அறிவாளிகளும், படித்தவர்களும், சிந்தனையாளர்களும், நாட்டு நலன் முதல் எல்லாவற்றிலும் நிரம்ப அறிவும் அனுபவமும் கொண்டவர்கள் இப்போதைக்கு இளம் தலைமுறையாக ஒரு கட்சியிலும் இல்லை

அப்படி அரசியலை விட்டு அவர்கள் ஓட ஓட, கள்ளசாராய கும்பலும், கட்ட பஞ்சாயத்துகாரனும், நாலு வார்த்தை பேசதெரியாதவன் எல்லாம் கட்சியிலும் பதவியிலும் இருக்கின்றான்

ஒரு நல்ல சிந்தனையாளனும், பண்பாளனும் இளம் தலைமுறையாக ஒரு கட்சியிலும் இல்லை. இருந்தாலும் வெளிதெரிவதில்லை தெரியவிட மாட்டார்கள்

ஒரு நல்ல தலைவனை கூட உருவாக்காத இந்த கட்சிகள்தான் வளமான தமிழகத்தை உருவாக்குமாம், நம்பிகொள்ளுங்கள்

சிதம்பரம் மிக பெரும் திறமைசாலி, நன்கு படித்தவர். அவரை போல இன்னும் ஏராளமானோர் உண்டு

ஆனால் தமிழக முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவோர் பன்னீர் செல்வமும், சசிகலாவும்

பெரும் அழிவுகாலத்தை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கும், எவ்வளவு சீரழிந்துவிட்டது என்பதற்கும் இது பெரும் உதாரணம்

ஒன்று நன்றாக புரிகின்றது

1970களில் எல்லா கட்சிகளிலும் நல்ல வீரியமான அடுத்த தலைமுறை தெரிந்தது

இன்று அப்படி ஒரு நிலை இல்லவே இல்லை

ஒரு கருத்தை, நாட்டு நலத்தினை விவாதிக்க கூட அறிவுபெற்றவர்கள் இளைய தலைமுறையாக யாருமில்லை, உண்மை இதுதான்

ஆக இனி வருங்காலத்தில் ஒன்று தமிழகத்தை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் அல்லது வங்ககடல் தன்னுள் எடுத்துகொள்ளவேண்டும்

ஆனால் அதற்குள் தமிழகம் விழித்துகொள்ளும் வாய்ப்பும் இருக்கின்றது, பார்க்கலாம்.

நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர்

நடிகைகளை பற்றி இந்த இயக்குநர் சுராஜ் என்பவர் ஏதோ சொல்லிவிட்டாராம்

உடனே நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர்

இதுவரை இந்த நயனையும், தமணையும் பற்றி எழுதா பத்திரிகைகள் இல்லை, எவ்வளவோ எழுதினார்கள், இன்றும் எழுதுகின்றார்கள் அதெற்கெல்லாம் ஒரு சத்தமும் இல்லை

இன்று இவர்கள் கிளம்பியிருப்பது ஒரு வகையான திசை திருப்பல் போலவே தோன்றுகின்றது,

அதுவும் தன்னைபற்றி எழுதி கிழித்தவர்கள் மீது அமைதி காத்தவர்கள், இன்று பொங்குவதுதான் காமெடி.

பத்திரிகைகள் எழுதினால் கிசுகிசுவாம் கண்டுகொள்ளமாட்டார்களாம், ஆனால் இயக்குநர் ஏதும் சொல்லிவிட்டால் பிய்த்துவிடுவார்களாம்

நடிகை என்பது ஒரு தொழில், சினிமா தயாரிப்பு தொழிலில் அவர்களிடம் சில கோரிக்கைகள் வைக்கபடலாம், அது பற்றி சுராஜ் என்னமோ சொல்லிவிட்டார்

இதற்குத்த்தான் சிம்புவிடம் உதட்டை கடிக்க கொடுத்த நயன் பொங்கிகொண்டிருக்கின்றார்

அதாவது இந்த நடிகைகள் எப்படியும் நடிக்கலாம், கேட்டால் அதற்கான பதில் மக்கள் விரும்புகின்றார்கள், இயக்குநர் நடிக்க சொன்னார் அதனால் நடித்தோம், கதைக்கு ஏற்ற நடிப்பினை வழங்குவதே “கலைச்சேவை” என்பதாகவே இருக்கும்

அந்த “கலைச்சேவை”க்கும் ஒரு விலை உண்டு என்பதை சுராஜ் சொல்லிவிட்டாராம், இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்

எதனையோ மறைக்க இன்று நயந்தாராவின் குரல் கேட்கின்றது, பொதுவாக நயன் இப்படிபட்ட நபர் அல்ல, எதனையும் கண்டுகொள்ளாத நயன் சுராஜினை கண்டுகொள்வதும், அதுவும் இன்றைய ரெய்டு காலத்தில் பதிலடி கொடுப்பதும் மர்மமானவை

ஆனால் ஒரு ஒற்றுமை

அன்று வெள்ளம் வரும்பொழுது சிம்புவின் பீப் சாங்

இன்று ரெய்டு நடக்கும்பொழுது நயந்தாராவின் கண்டன பதில்..

இதற்கு மேலும் நிலை சிக்கலானால் என்ன ஆகும்?

இருக்கவே இருக்கின்றார் தங்கர் பச்சான்

என் “கள்ளிகாட்டு கருப்பாயி” படத்திற்கு நடிக்க முடியாது என சொன்ன நயந்தாரா ..” என அவர் கிளம்பினால் நிலை சிக்கல் ஆகாதா?

அதன் பின் எங்கு எந்த ரெய்டு நடந்தால் என்ன? யார் பொதுசெயலாளர் ஆனால் என்ன?

எப்படிபட்ட தமிழ்நாடு இது?

ஆனாலும் இது நயன் தாரா சம்பந்தபட்ட பிரச்சினை என்பதால், நயன் தற்கொலை படை நிறுவணர் மற்றும் தலைவர் Babu Rao பார்த்துகொள்வார்

ஆனால் குஷ்பூ ஏதும் சொல்வாரன்றால், அல்லது அவருக்கு பிரச்சினை என்றால் நாம் நிச்சயம் அவரைத்தான் ஆதரிப்போம்

தை வருது … ஜல்லிக்கட்டு எங்கே?

ஜல்லிகட்டில் மாடு கொடுமைபடுத்தபடுகின்றது என்கின்றீர்கள், கட்டை வண்டியிலும் , உழவிலும் மாடு என்ன இன்புறுகின்றதா?

முத டிராக்டர் கொடுங்கள்..முதலில் எல்லா விவசாயிக்கும் டிராக்டர் கொடுங்கள்உழவு காளை மாட்டுக்கெல்லாம் ஓய்வு கொடுங்கள்..

வண்டி இழுக்க லாடம் எனும் பெயரில் மாட்டின் காலில் எப்படி எல்லாம் ஆணி அடிக்கின்றார்கள்?, அது கொடுமை அல்லவா?

அதற்கு முதலில் எல்லா விவசாயிக்கும் ஒரு டெம்மோ கொடுத்துவிட்டு அந்த காளைகளை மீட்டுகொண்டு காலின் லாடத்தை பிடுங்குங்கள்

கதற கதற மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போடுவதும், காலில் லாடம் அடிப்பதும் கொடுமை ஆகாதாம், ஆனால் அவற்றை உற்சாகமாக துள்ளவிட்டு தழுவுவது கொடுமையாம்

முதலில் மூக்கணாங்கயிறு போடுவதையும், லாடம் அடிப்பதையும் நிறுத்த சொல்வீர்களா?

அதுதான் உண்மையான காளை மாட்டு நலன்.. செய்வீர்களா?

இந்த ஆர்யா, ஐஸ்வர்யா, பேட்டா போன்ற இம்சைகள் இதற்கு முதலில் பதில் சொல்லட்டும்.

ஜல்லிகட்டில் மாடு வதைபடுகின்றதாம்

கன்றுகுட்டிக்கு பசு சுரக்கும் பாலை எல்லாம், அதே கன்றினை பசுமுன் கட்டிவைத்து கதற கதற கறக்கின்றீர்களே, அது வன் கொடுமை ஆகாதா?

அது பசு சித்திரவதை ஆகாதா?, அது கன்றிற்கான பால் அல்லவா?, வலுகட்டாயமாக கட்டி வைத்து கறப்பது என்ன நியாயம்??

வளர்த்த பசுவினை கட்டி வைத்து பால் கறக்கலாமாம், ஆனால் காளையினை வளர்த்து கட்டிபிடிக்க கூடாதாம்.

உழவு காளைக்கும், வண்டி மாட்டுக்கும், பசுவிற்கு ஒரு நியாயமாம்,

ஜல்லிகட்டிற்கு இன்னொரு நியாயமாம்.

விசித்திரமான இந்தியா

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை..

Image may contain: 1 person

யேல் 

 

சென்னை கோட்டையினை வெள்ளையர் கட்டி வியாபாரம் செய்து, பின் ஆட்சிக்கு வந்தபின் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததானது, அன்று தென்னிந்தியாவின் தலமை செயலகம் அதுதான்

அப்பொழுது 1700களில் தலமை செயலாளராக‌ வந்தவர் யேல்,

வந்து என்ன செய்தார்? வழிகாட்டினார், யாருக்கு?

முன்னாள் தலமை செயலாளர் ராமமோகன் ராவிற்கு

ஆம், சென்னை கோட்டையில் முதன் முதலில் ஊழலில் ஈடுபட்டவர் என வரலாறு அவரைத்தான் சொல்கின்றது, மிக கடுமையான ஊழல். ஆனால் ராம்மோகன் ராவ் போல சிக்கவில்லை

அமெரிக்கா தப்பினார், அங்கு ஒரு கல்லூரி தொடங்கினார் , பின் அது பல்கலை கழகமாயிற்று.

அதன் பெயர் யேல் பல்கலைகழகம்

இந்த யேல் பற்றிய ஊழல் குறிப்புகளும் இன்னும் ஏராள குறிப்புகளும் சென்னை மியூசியத்தில் சிக்கின, தாமதமாக தெரிந்துகொண்ட யேல் பல்கலைகழத்தினர் அதனை மீட்க நினைத்தபொழுது இந்தியா கொடுக்கவில்லை. என்ன இருந்தாலும் தங்கள் நிறுவணர் ஊழல்வாதி என்பது அவர்களுக்கு அவமானம் அல்லவா?

பின் என செய்தது? அண்ணாவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து ஐஸ் வைத்தது, அண்ணா ஆட்சிக்கு வந்தபின் அந்த யேல் பற்றிய குறிப்புகளை, அவர் கைபட எழுதிய பிரதிகளை சென்னையில் காணவில்லை

ஏன் எப்படி என நீங்கள் கேட்க கூடாது, காணவில்லை அவ்வளவுதான்

ஆக சென்னை கோட்டையில் முதல் ஊழல் செய்த தலமை செயலாளர் யேல், பின் அவரின் குறிப்புகள் அண்ணா காலத்தில் மர்மமாயின‌

அதே சென்னை கோட்டையில் இப்பொழுது சிக்கி இருக்கின்றார் ராவ், ஆனால் ஆட்சி அண்ணா திமுகவுடையது

சென்னை கோட்டையினை உலுக்கிய ஊழல் வழக்குகளில் யேலுக்கு பின் ராவ் இடம்பெற்றுவிட்டார்.

இந்த இரு ஊழல்வாதிகளுக்கும் அண்ணா பெயருக்கும் ஏதோ பூர்வஜென்ம தொடர்பு

தப்ப விட்டிருந்தால் கனடாவிலோ, நியூஸிலாந்திலோ இந்த ராவும் பல்கலைகழகம் கட்டியிருக்கலாம், பின் அவர்கள் பன்னீர்செல்வத்திற்கும் சசிகலாவிற்கும் டாக்டர் பட்டம் அளித்திருப்பார்கலாம், எல்லாம் நடந்திருக்கும்

Image may contain: 1 person, glasses

ராம் மோகன் ராவ்

நாமும் டாக்டர் பன்னீர் செல்வம், டாக்டர் சசிகலா என அழைத்துகொண்டிருப்போம், இந்த பாழாய்போன வருமான வரிதுறை எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.

என்ன விசித்திரமோ?

கலைஞர் ஆட்சியில் ஒரு கட்டை பீடியோ, அரை கிலோ உப்பு காணாமல் போனாலே ஆட்சியினை டிஸ்மிஸ் செய் என கொடிபிடிப்பவர்கள் இந்த மாபெரும் ஊழலிலும் அவமானத்திலும் வாயே திறக்கவில்லை

அது ஆச்சரியமல்ல‌

திமுகவே அதுபற்றி ஒரு குரலும் எழுப்பவில்லை என்பதுதான் ஆச்சரியம்

என்ன மர்மமோ

யேல், யேல் ஊழல், பல்கலை கழகம், அண்ணாவின் டாக்டர் பட்டம், யேல் குறிப்புகள் காணாமல் போகுதல் என திராவிட கட்சிகளுக்கும் யேலுக்கும், அண்ணாவிற்கும், இன்று ராவிற்கும் , அண்ணா திமுகவிற்கும் உள்ள தொடர்புகள் ஏராளம்

ஒரே வித்தியாசம்

அன்று கிழக்கிந்திய கம்பெனி
இன்று அனைதிந்திய அதிமுக‌

மற்றபடி அதே சென்னை கோட்டை


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பும் : தமிழிசை

எது? எம்ஜிஆர் கல்லறைக்கும், ஜெயா கல்லறைக்கும் இடையில் உள்ள வெற்றிடத்தையா?