தமிழ் தெரியா தலைமுறை உருவாகிவிட்டது

சன்டிவியில் நடிகை மீனா மகளோடு நிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்தார்

ஏதோ நிகழ்ச்சி அது, காம்பியர்கள் தமிழில் கேட்ட கேள்விக்கு எல்லாம் அக்குழந்தை மழலையில் சொன்னது

“எனக்கு தமிழே தெரியாது”

உடனே கூடியிருந்த கூட்டம், இந்த பொன்மொழிக்கு கைதட்டியது

இந்நிகழ்ச்சி ஓளிபரப்பான சன்டிவில் அந்த சூரிய அடையாளம் தெரிந்துகொண்டே இருந்தது

1960களில் இந்த சின்னத்தோடுதான் தமிழை காப்பதாக சூளூரைத்தார்கள், இதே கொள்கையோடு போராடி 64 பேர் இறந்த ரத்தத்தில் அரியணை ஏறியது திமுக‌

இந்த 57 ஆண்டுகளாக அவர்கள்தான் ஆண்டுகொண்டிருக்கின்றார்கள்,

அதிமுக என்பதும் அவர்களில் ஒரு பிரிவே அன்றி வேறல்ல..

ஆக இவர்கள் தமிழை அவர்கள் டிவியில் கூட காப்பாற்றவில்லை, அக்குழந்தை தமிழ்தெரியாது என சொல்லும்பொழுது தாய் நடிகை மீனா ஆங்கிலத்தில் பாசமழை பொழிகின்றார்.

இந்த தலைமுறை குழந்தைகள் அப்படி சொல்வது எல்லா டிவியிலும் நடக்கின்றது, அதாவது தமிழ் தெரியா தலைமுறை உருவாகிவிட்டது

மிக சரியான திட்டங்கள் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்காது

எந்த டிவியில் இதனை கண்டாலும் தள்ளிவிடலாம், ஆனால் சூரிய டிவியில் காணும்பொழுது என்ன தோன்றும்?

தமிழகத்தை காத்தார்களோ இல்லையோ தமிழை எங்கும் இவர்கள் காக்கவே இல்லை, சுத்தமாக இல்லை.

அக்குழந்தை தமிழ் புரியவே இல்லை என மழலையில் சொல்லிகொண்டே தமிழ் சேணலில் பேசிகொண்டிருக்கின்றது

இதனை ஒரு கூட்டம் கைதட்டி வரவேற்றுகொண்டிருக்கின்றது

அந்த டிவியும் அதன் ஆரம்ப வேரும் தமிழை காக்க கிளம்பிய போராட்டத்தில் உருவானவை

அந்த 64 பேரின் ரத்ததில் உருவானவை

தமிழுக்காக உயிர்கொடுக்க தயார் என சொல்லி செய்துகாட்டிய சாகசங்களில் உருவானவை

எங்களை தவிர யாராலும் தமிழை காப்பாற்றமுடியாது என சொல்லி அடாவடியாக ஆர்ப்பாட்டம் செய்து ஆட்சிக்கு வந்ததால் உருவானவை

அதனை எல்லாம் எல்லோரும் மறந்துவிட்டு கைதட்டி கொண்டே இருக்கின்றார்கள்….

அமெரிக்கா – ரஷ்யா பனிப்போர்

தமிழக காமெடிகள் பலவாறு நடந்துகொண்டிருக்கின்றது, தமிழன் என சொன்னாலே மற்ற நாட்டுக்காரர்கள் அல்லது அண்டை மாநிலத்தோர் ஒரு மாதிரி வாயில் கைவைத்து சிரிக்கின்றார்கள்

சிரிக்கட்டும், தமிழக தலைவிதி அப்படி

தமிழக காமெடிகளை பார்த்துகொண்டிருக்கும் பொழுதே, உலகில் பெரும் சீரியசான விஷயம் நடந்துகொண்டிருக்கின்றது

அதாகபட்டது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் மறைமுக யுத்தம் பிரசித்தி பெற்றது, ஹிட்லர் காலத்திற்கு பின் அதுதான் உலக கவனம் பெற்றது.

சோவியத் சிதறவும், எல்ட்சின் காலத்தில் ரஷ்யா அணுஆயுதம் குறைப்போம் என இறங்கி வந்ததும் கொஞ்சம் அது குறைந்தது

ஆனால் புட்டீனின் காலத்தில் அது மறுபடியும் தொடங்கியே விட்டது, சிரிய யுத்தத்தில் அது கடுமையாக தெரிகின்றது

தன்னிச்சையாக புட்டீன் ரஷ்யா அணுஆயுதங்கள் எண்ணிக்கையினை அதிகரிக்கும் என்கின்றார், இன்றும் உலகில் ரஷ்யாவிடமே ஆயுதங்கள் அதிகம், அது இன்னும் கூடும் என்றால் எப்படி?

இன்று சிரியாவில், உக்ரைனில் ரஷ்யாவிற்கே வெற்றி, ரஷ்ய ராணுவ விமானங்கள் சில விபத்துக்குள்ளாவது விபத்து என ரஷ்யா சொன்னாலும், அதில் சில சந்தேகங்கள் இருப்பதை மறுக்கவில்லை

இப்படி பல விஷயங்கள் தெரிந்தாலும் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவில் ரஷ்யா ஆடிய விளையாட்டுக்கள் கொஞ்சமல்ல, அது என்னவோ அமெரிக்க ரகசியங்களை கடத்துவதில் ரஷ்யா அன்றிலிருந்தே கில்லாடி

1950களில் அப்படித்தான் அமெரிக்க அணுசக்தியினை கடத்திவந்து அணுகுண்டு செய்தார்கள், இன்னும் என்னென்னவோ செய்தார்கள்

இப்பொழுது அமெரிக்க தேர்தலில் குழப்பம் விளைவித்த சர்ச்சை வந்துவிட்டது, அதுவும் அதிபர் ஒபாமாவே களத்தில் குதித்து 35 ரஷ்யர்களை வெளியே விரட்டியிருக்கும் நிலை

என்ன செய்தது ரஷ்யா?

அமெரிக்க தேர்தலில் ஹிலாரிக்கே வாய்ப்பு இருந்தது, டிரம்ப் ரஷ்யாவுடன் நட்பில் இருக்கின்றார் என்ற சர்ச்சை அப்பொழுதே இருந்தது

ஹிலாரிக்கு காய்ச்சல் வந்தாலும், ரஷ்ய சதி என்ற நிலை அமெரிக்க தேர்தலில் இருந்தது

இதெற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை, ரஷ்யா மறுத்தே வந்தது, வெற்றி வாய்ப்பில் ஹிலாரியே முன்னிலையில் இருந்தார்

இந்நிலையில்தான் ஹிலாரி பல தொழிலதிபர்களுக்கு வருமான வரி சலுகை செய்த ரகசிய ஈமெயிகள் வெளிவந்து, ஹிலாரி ஊழல்வாதி என ஒரு முத்திரையே விழுந்து அம்மணி தோற்றும் போனார், அன்று அதனை வெளியிட்டது எப்பிஐ என்றே செய்தி வந்தது

ஆனால் இப்பொழுது அதனை செய்தது ரஷ்ய ஹாக்கர்கள் என்று சொல்லிவிட்டார்கள், அவர்கள்தான் சர்வரில் ஊடுருவி இதனை எல்லாம் கசியவிட்டார்கள் என ஒபாமா குதிக்கின்றார்

ரஷ்யர்கள் கணிணி நுட்பத்தில் முன்பு பெரும் பலசாலிகள் அல்ல, ஆனால் இப்பொழுது முன்னேறிவிட்டார்கள். செஸ் சேம்பியன்கள் போல இப்பொழுது ஹேக்கர் சாம்பின்களும் வந்தாயிற்று

கொதித்த ஒபாமா மிக மிக உச்ச மிரட்டலில் பேசியிருக்கின்றார், 35 பேரும் வெளியே செல்லுங்கள், இல்லை என்றால்… என அவர் மிரட்டி இருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்ததான் செய்கின்றது

ரஷ்யா வழக்கம் போல கூல்

அவர்கள் எப்பொழுதும் அப்படித்தான்

முன்பு ரஷ்யாவினை உளவுபார்க்க 40 செயற்கைகோள்களை நிறுத்தியது அமெரிக்கா, நிறுத்திவிட்டு பாஷா ஸ்டைல் ரகுவ்வரன் போல சொன்னது

“அங்கே பாரு கண்ணா, நினைச்சா உன்னை 7 நிமிடத்தில் முடித்துவிடுவேன்”..

ரஷ்யா அசால்ட்டாக ரஜினி போலவே சொன்னது, ” கொஞ்சம் மேலே பாரு கண்ணா, உன்ன 7 செக்கண்ட்ல முடிச்சிருவேன்”

அதாவது அந்த 40 செயற்கை கோளுக்கும் மேல் ஒரு சக்திவாய்ந்த செயற்கைகோளை நிறுத்தியிருந்தது,

40 கோள்களையும் நிமிடத்தில் லேசர் கதிர் மூலம் அழித்தது ரஷ்யா

இப்படியாக அவர்கள் ஆடும் ஆட்டம் அலாதியானது

ஒரே வித்தியாசம் அமெரிக்கா எது என்றாலும் விளம்பரபடுத்தும், ரஷ்யா வெற்றியோ தோல்வியோ எதனையும் வெளியே சொல்லாது

இன்று டிரம்ப் வெற்றிபெற்றிருப்பற்கு அந்த ஹிலாரி மீதான ரகசியங்கள் ஹேக்கர்ஸ் மூலம் வெளிவந்ததே முதல் காரணம், ஆக சர்ச்சைகளின் படி டிரம்ப் வெற்றிக்கு காரணம் ரஷ்யாவே

இன்று ஒபாமா 35 ரஷ்யர்களை விரட்டும்பொழுது, புட்டீனிடம் இது பற்றி என்ன செய்யபோகின்றீர்கள்?, இது ரஷ்யர்களுக்கு அவமானம் இல்லையா, என கேட்டார்கள்.

அவர் அதே அமைதியாக சொன்னார்

இன்னும் 20 நாள், டிரம்ப் பதவியேற்கட்டும் அவரிடம் பேசிகொண்கின்றேன்

டிரம்ப் என்ன செய்யபோகின்றார்?, கொஞ்சமேனும் நன்றிகடன் காட்டவேண்டும் அல்லவா?, ஹிலாரியினை சிக்க வைத்த ரஷ்யர்களுக்கு டிரம்பினை சிக்க வைக்க எவ்வளவு நேரமாகும்?

ஆக விடைபெறும் நேரத்தில் டிரம்பிற்கு செக் வைத்துவிட்டு சென்றிருக்கின்றார் ஒபாமா

டிரம்ப் எப்படி சமாளிப்பாரோ தெரியாது,

ஆனால் புட்டீனுக்கு அதே மர்ம புன்சிரிப்பு.


ரஷ்ய ஹேக்கர்கள் ஈமெயில் சர்வரில் ஊடுருவினர் என ஒரு தரப்பும், வாக்கு மிஷினில் ஊடுருவினர் என இன்னொரு தரப்பும் சொல்லிகொன்டே இருக்கினன‌

ஒருவேளை வாக்கெடுப்பு மிஷினில் ஊடுருவினர் என்ற செய்தி உண்மையானால் என்னாகும்?

மொத்த தமிழக அரசியல்வாதிகளும் ரஷ்யாவிற்கு படையெடுக்கமாட்டார்களா?

எத்தனை கோடி அல்லது எத்தனை கூடன்குளம் என்றாலும் கொடுத்து அவர்களை கொண்டுவந்து ஊடுருவமாட்டார்களா?

எத்தனை நாள்தான் பிரச்சாரம் , குவாட்டார், பிரியாணி , கள்ளவோட்டு என சிரமபடுவார்கள்

இப்படி 4 ஹேக்கர்களை வைத்து மெஷினில் ஊடுருவினால் அவர்கள் சிரமம் எளிதாக தீர்ந்துவிடும்

இப்பொழுதெல்லாம் கட்சிகள் மிக அமைதியாக இருக்கின்றன,

ஒருவேளை மனதில் ரஷ்ய ஹேக்கர்களை தேடும் சிந்தனை உருவாகிகொண்டிருக்கலாம்


சீமானோடு தோளில் கைபோட்டவர் ஆட்சிதான் நடக்கின்றது?

இலங்கை அரசு தமிழக மீணவர்களை இப்பொழுது பழிவாங்கும் விதம் மிக கொடுமையானது

முன்பு எல்லை கடந்தால் சுடுவார்கள், அடிப்பார்கள் அத்தோடு விரட்டிவிடுவார்கள் அல்லது சிறையில் அடைத்து பின் விடுவிப்பார்கள்.

மோடி ஆட்சியில் துப்பாக்கி சூடு இல்லை, ஆனால் அதனை விட மிக பயங்கரமான விஷயத்தில் சிங்களம் இறங்கி இருக்கின்றது

மிகுந்த ராஜதந்திர திட்டத்தினை முன்னெடுக்கின்றார்கள், அதாவது எல்லைகடக்கும் மீணவனை கைதுசெய்து விட்டுவிடுவார்களாம், ஆனால் அவர்களின் படகுகள் இலங்கைக்கு சொந்தமாம்

சில படகுகளை கைபற்றியும் விட்டார்கள், விவகாரம் வெடிக்கின்றது, காரணம் படகுகளின் விலை மிக அதிகம். மீணவர்கள் போராட கிளம்பிவிட்டனர்

தமிழ்நாடடினை தமிழன் ஆண்டால் இந்த சிக்கல் நொடியில் தீரும் என்றனர் தமிழ்தேசிய உணர்வாளர்கள், சீமான் உட்பட‌

இப்பொழுது ஆட்சி யாரிடம் உள்ளது? சாட்சாத் பச்சை தமிழன் பன்னீர் செல்வம்.

அரசின் கட்டுபாடு யாரிடம் உள்ளது?, பச்சை தமிழச்சி சசிகலா

சசிகலா யாரின் கட்டுபாட்டில் இருக்க்கின்றார், தமிழன் நடராஜன் கட்டுபாட்டில்

ஆக முதல்வரும் தமிழன், ஆளும் கட்சியின் தலமையும் தமிழச்சி, அந்த தமிழச்சியின் கணவனும், மறைந்திருக்கும் சக்தியும் தமிழன்

அந்த தமிழன் காலில்தான் சீமான் திருமண கோலத்தில் விழுந்துகிடந்தார், அந்த தமிழனோடுதான் விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபம் எல்லாம் அமைத்தார்

ஆக இப்பொழுது சீமானோடு தோளில் கைபோட்டவர் ஆட்சிதான் நடக்கின்றது?

ஆனால் மீணவர் நிலை?

முன்பு சீமான் சொல்வார், தமிழன் முதல்வராக இருக்கும்பொழுது தமிழக மீணவனை கைதுசெய்தால் தமிழகத்தில் இருக்கும் சிங்களர்களை விடமாட்டோம்

சரி அவன் படகை பிடுங்குகின்றான், இங்கு சீமான் அந்த சிங்களன் வாயிலுள்ள மசால் வடையினை கூட பிடுங்கவில்லை

சரி அங்கு சிங்களன் படகினை பிடுங்கும்பொழுது, பச்சை தமிழன் முதலமைச்சர் என்ன செய்கின்றார்?

சசிகலாவிற்கு பல பேனர்களை வைத்து பூங்கொத்தோடு காத்து கிடக்கின்றார்.

காவேரி அப்படியே காய்ந்து கிடக்கின்றது.

இதற்கு தமிழன் இல்லாதோர் என சொல்லபட்டவர்களின் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை

திருமா சசிகலாவினை சந்தித்திருக்கின்றார்…

புத்தாண்டில் புதுமை மலரட்டும் : கீ.வீரமணி

அங்கே “புதுமை தலைவி” என ஆர்ப்பரிக்கின்றார்கள், இவரோ புதுமை மலரட்டும் என்கின்றார்

இப்படி ஒரு இனமான ஜால்ராவினை பார்க்கமுடியுமா? வீரமணியினை தவிர யாரிடமும் பார்க்க முடியாது, ஒருவேளை அந்த “புதுமை தலைவி” பட்டத்தை இவர்தான் வழங்கியிருப்பாரோ?

இவர்கள் காமெடி இப்படி என்றால் திருமா சசிகலாவினை சந்தித்திருக்கின்றார்

அடங்க மறு, அத்து மீறு என்பதெல்லாம் தூக்கி கடாசிவிட்டு ஹிஹிஹி என சிரித்துகொண்டிருக்கின்றார்.

கொடியன்குளம் கலவரமும் அந்த படுகொலைகளையும் தாண்டி எப்படி திருமாவால் இப்படி சந்தித்து சிரிக்க முடிகின்றது என்பதுதான் பெரும் வியப்பு.

வைகோ கிட்டதட்ட அதிமுக அடிமை ஆகிவிட்டார், கம்யூனிஸ்டுகள் சரண்டர், இதோ திருமாவும் கைகட்டி விட்டார்

ஆக என்ன புரிகின்றது?

அந்த மக்கள் நல கூட்டணி என்பது, அதிமுகவின் பி அணி என்பதும், இன்று அது தாய் அணியுடன் இணைந்துவிட்டது என்பதும் நன்றாக புரிகின்றது

விஜயகாந்தினை திட்டமிட்டு தெருவில் நிறுத்தியிருக்கின்றார்கள்

இன்னும் யாரையெல்லாம் நிறுத்த போகின்றார்களோ தெரியவில்லை.

2016ம் ஆண்டு முடிந்து புத்தாண்டு பிறந்துவிட்டது

2016ம் ஆண்டு முடிந்து புத்தாண்டு பிறந்துவிட்டது

கோலகலமான கோலாலம்பூர் அதனை மிக உற்சாகத்துடன் கொண்டாடி கொண்டிருக்கின்றது, பல இடங்களில் கூடி நின்றுவரவேற்கின்றனர், சும்மாவே தூங்கா நகரம் இது. காரணாம் கிடைத்தால் விடுவார்களா?

மற்ற மதத்து மக்களுக்கு பிரச்சினை இல்லை, நள்ளிரவில் எப்படியும், எங்கும் கொண்டாடலாம், ஆனால் கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக ஆலயத்தில்தான் அதுவும் பிரார்த்தனையில்தான் வரவேற்க வேண்டும் என்பது விதி

என்ன இருந்தாலும் போப்பாண்டவர் கொடுத்த காலண்டர் அல்லவா, அவர் சொன்னபடி பிரார்த்திவிட்டுத்தான் முதல் தாளை தொடவேண்டும் என்பது அங்கு ஐதீகம்.

அதனால் ஆலயம் இழுத்துசென்றார்கள், சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி திருப்பலிநிறைவேற்றினார்கள்

இங்கு திருப்பலி காண்பது வித்தியாசமானது,

நமது ஊராக இருந்தால் தளைய தளைய புடவை கட்டி, கழுத்து நிறைய தாங்கத்தை பூட்டி தலை நிறைய மல்லிகை சூட்டி வருவார்கள்

வந்து ஒருவர் புடவையினை ஒருவரும், ஒருவர் கழுத்தினை ஒருவரும் மாறி மாறி பார்த்துகொண்டிருப்பார்கள், அங்கே பாதிரியார் மாய்ந்து மாய்ந்து பேசிகொண்டிருப்பார்

அவரை எல்லாம் யார் கவனிப்பார்கள்? புடவையும் நகையும் போதாதா?

நம்மவர்கள் தங்கள் செல்வாக்கை உடையிலும், நகையிலும் எங்கு சென்றாலும் கூடவே எடுத்து செல்வார்கள், வெளிநாடுகளில் அப்படி அல்ல, மிக சிம்பிளாக வருவார்கள்

தலை கூட கண்ணகி கோலத்தில் அப்படியே இருக்கும், கணவன் அருகில்தான் சிரித்துகொண்டிருப்பார்.

ஆனால் ஆலயத்தில் கிறிஸ்தவர்களுக்கே உரிய புன்னகையும் அமைதியும் கொண்டு பங்கெடுப்பார்கள்.

இந்தியாவில் பாதிரியார்கள் சிலர் வித்தியாசமானவர்கள், திருப்பலியின் பொழுது சரியாக வணங்க கூட மாட்டார்கள், திராவிட இயக்க போராளிகள் போல சுயமரியாதை காப்பார்கள்

இங்கு அதிமுக அமைச்சர்கள், பொதுகுழு உறுப்பினர்கள் போல பாதிரியார்கள் முதுகு நன்றாக வளைகின்றது, பரவாயில்லை

திருப்பலி முடிந்ததும் எல்லோரும் எல்லோருக்கும் புதுவருட வாழ்த்து சொன்னார்கள், அறிமுகமே இல்லாவிட்டாலும் ஏதோ 10 வருடம் பழகியவர்கள் போல வந்து சொன்னார்கள்

சிலர் கட்டி தழுவி சொன்னார்கள், பல சீன நங்கையர்களும் உண்டு. பாகம் பிரியாள் அருகிலிருக்கும் பொழுது இதெல்லாம் சாத்தியமா?

இப்பக்கம் செல்லலாம் என்றாள், அங்கு முதியவர்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள்

சீன மங்கையர் கண்ணதாசன் வார்த்தைகளில் சொல்வதென்றால் “மஞ்சள் மேனி பாவைகள், தங்கம் மின்னும் அங்கங்கள்” வகையறாதான்

ஆனால் ஒரு தீவிர குஷ்பூ ரசிகன், இப்படி 10 நாள் பட்டிணிகிடந்த பரிதாப கோலத்துடன் வரும் சீன பெண்களை ரசிக்க முடியுமா? நெவர்

ஒரு வழியாக புத்தாண்டினை வரவேற்றாகிவிட்டது

என்ன புத்தாண்டு? உண்மையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை எல்லாம் மனிதன் வகுத்த கால அளவு

சூரியனை சுற்றும் பூமி கடந்த ஆண்டு எந்த புள்ளியில் நின்றதோ அதே புள்ளிக்கு நம்மோடு வந்திருக்கும், அவ்வளவுதான்

இனி அதுவும் சுற்ற தொடங்கும், நாமும் பணிகளை தொடங்கவேண்டும்

கிட்டதட்ட 30 புத்தாண்டுகளை வரவேற்றாகிவிட்டது, அவை எல்லாம் கனவு போல ஆகிவிட்டன‌

வாழ்க்கை என்பது கனவு போன்றது, அதில் உண்பதும் கொண்டாடுவதும் மகிழ்வதுமன்றி ஓன்றும் அர்த்தமில்லை என்றான் ஒரு அறிஞன்

அதனால் என்ன செய்யலாம்?

கோழியினை வெட்டி அடுப்பில் போட்டு, சேர்க்க வேண்டிவைகளை சேர்க்கலாம்