இனி சசிகலா கும்பல் நிம்மதியாக தூங்கபோவதில்லை

 

தீபாவிற்கு தமிழகம் முழுக்க ஆதரவு, பல இடங்களில் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் போலிசார் தவிப்பு

இக்கூட்டத்தில் அதிமுகவினர் மட்டும் பங்கெடுத்ததாக சொல்லமுடியாது, சசிகலா மீதான வெறுப்பால் எல்லா கட்சி தமிழர்களும் திரண்டிருக்கலாம் என்பதே உண்மை

என்ன இருந்தாலும் சசிகலாவினை எதிர்க்க தீபா பின்னால்தான் திரளவேண்டுமா? ஏன்?

பல விஷயங்கள் புரியாத தமிழகம் இது, அப்படியே இதனையும் புதிரில் வைத்துவிடலாம்

ஆனால் மிக பெரும் கூட்டம் கூடுகின்றது, தீபா பேரவைகள் யாரும் கட்டளை இடாமலே உருவாகின்றன, தன்னிச்சையாக உருவாகி வருகின்றன, ஆதரவளிக்கின்றன‌

பொதுவாக நாட்டை, மொழியினை, நதியினை , கடவுளை கூட பெண்ணாக்கி பார்க்கும் தமிழகம் ஜெயலலிதாவிற்கும் அந்த இடத்தினை கொடுத்திருக்கின்றது

அவரின் சாவில் ஏற்பட்ட மர்மமும், இன்னும் பெரும் சர்ச்சைகளும் மக்களின் கோபத்தை கடுமையாக கிளறியிருகின்றன‌

பெரும் கூட்டமாக கூடியிருக்கும் கொந்தளிப்பு தீபாவிற்கான ஆதரவு என்பதை விட சசிகலாவிற்கான எதிர்ப்பு எனும் வகையிலே பார்க்கபடுகின்றது,

இது கிட்டதட்ட 1972ல் எம்ஜிஆருக்கு இருந்ததை போன்ற நிலை

ஆக 45 வருடமாக தமிழன் திருந்தவே இல்லை..

நிச்சயம் இனி சசிகலா கும்பல் நிம்மதியாக தூங்கபோவதில்லை

ஒன்று புரிகின்றது

ஈராக்கின் அதிபர் யார் என்பதை அமெரிக்கா நிர்ணயிக்கும், அதிமுகவின் தலைவர் யார் என்பதை டெல்லிதான் நிர்ணயிக்கும்

அந்த காட்சிகள்தான் நடந்துகொண்டிருக்கின்றது

எம்ஜிஆர் காலத்திலிருந்தே அக்கட்சி அப்படி ஒரு அடிமை கட்சிதான்.


 தீபா, சசிகலா என ஆளாளுக்கு மோதிகொண்டிருக்க , எம்ஜிஆருக்கு கிட்ணி தானம் செய்த அவரின் அண்ணன் மகள் லீலாவதி பாஜகவில் சேர்ந்திருக்கின்றார்

ஜெயா காலத்திலும் இவர் இருந்த இடம் தெரியவில்லை

ஆக எம்ஜிஆர் விசுவாசிகளை ஜெயலலிதாவும், ஜெயா விசுவாசிகளை சசிகலாவும் ஓட விரட்டி இருக்கின்றார்கள்

ஆக அதிமுகவினரே சசிகலாவிற்கும் விசுவாசமாக இருந்தீர்கள் என்றால் உங்களையும் விரட்ட இன்னொருவர் பின்னால் வரலாம், கவனமாக இருங்கள்


முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு DNA டெஸ்ட் செய்ததாக தெரியவில்லை…

அலங்கா நல்லூரில் அழிச்சாட்டியம் செய்யும் தமிழக அரசின் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு எந்த “நாம் தமிழர்” மருத்துவ சிகாமணிகளும் DNA டெஸ்ட் செய்ததாக தெரியவில்லை.

அடுத்த முதல்வர் சசிகலாவிற்காவது ஒரு டெஸ்ட் எடுக்க கூடாதா பாய்ஸ்?

முள்ளிவாய்க்கால் நினைவகத்தை தஞ்சாவூரில் திறந்த நடராஜனும் இப்பொழுது மகா அமைதி, இவருக்கும் யாரும் DNA டெஸ்ட் எடுத்ததாக தெரியவில்லை

நெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்களை காணவில்லை, அவரை கண்டுபிடிக்கவும் முயற்சி இல்லை.

தமிழர்களுக்கா ராஜபக்சேவினை கண்டிக்க மத்தியபிரதேசம் வரை பஸ்ஸில் சென்ற வைகோவினை அலங்காநல்லூர் பக்கம் காணவில்லை,

ஒருவேளை அதனை விட இது தூரமோ?..

முன்பு கலைஞர் பதவி ஆசையில் அமைதிகாக்கின்றார் என்றவர்கள், இப்ப்பொழுது சசிகலாவும் பன்னீரும் என்ன ஆசையில் இப்படி கம்மென்று இருக்கின்றார்கள் என சொல்லவே இல்லை

இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தீபா அரசியல் பிரவேசம்…

 

இன்று அறிவிப்பினை வெளியிடுவார் தீபா என ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு

சசிகலாவிற்கும் தீபாவிற்கும் நடப்பது கட்சியினை கைபற்றும் போட்டி ஒருபுறம் என்றாலும், ஜெயாவின் நடை, உடை பாவனையினை கைபற்றுவது யார் என்பது இன்னொரு புறம் நடக்கின்றது

ஜெயாவின் பேச்சு என சசிகலா மாற, ஜெயாவின் அதிராமல் பேசுதல் எனும் பாணியினை தீபா கையில் எடுத்தார்

இப்பொழுது ஜெயா போலவே தீபா கோட் போட்டவுடன் மகா அவசரமாக ஜெயா போலவே சசிகலா கொண்டை போட்டு கொண்டிருக்கின்றார்.

இவர்கள் இப்படி சிந்திக்க, உண்மையான அதிமுக தொண்டன் இப்படி சிந்திக்கின்றான்

இன்னும் என்னென்ன விஷயங்கள் எல்லாம் ஜெயா போலவே இருவரும் செய்ய போகின்றார்களோ தெரியாது,

ஆனால் ஜெயாவினை பின்பற்றி இரண்டு பேரும் அப்பல்லோவில் சேர்ந்துவிட்டால் கட்சிக்கு ரொம்ப நல்லது.


எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெ.தீபா மரியாதை

ஜெயா தீபாவிற்கு அத்தை, அஞ்சலி செலுத்தியதில் அர்த்தம் இருந்தது,

எம்ஜிஆர் நினைவிடத்தில் ஏன் அஞ்சலி?


எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியோடு மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன்: ஜெ. தீபா பேட்டி

ஏற்கவனே அவர்கள் ஆற்றிய மக்கள் பணியால்தான் இவ்வளவு சிக்கல், இதில் அவர்கள் ஆசியோடு இவர் வேறா?

பாவம் தமிழன், அவனுக்கு விமோசனமே இல்லை…


 

இதுதாண்டா தமிழ் நாடு….

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வால் பயனில்லை – ஏமாற்று வேலை! ராமதாசு

ஆம் பயனே இல்லை, இவர் மகன் பதவிக்கு வராத வரை எதுவுமே இவருக்கு பயன் இல்லை

இவர் மகனுக்கு மட்டும் ஒரு பதவி கொடுத்துவிட்டால் அதன் பின் இவர் பார்வையில் எல்லாமே பயனுள்ள வேலை…


ஜெயாவின் வளர்ப்புமகன் பெரும் கோடிகளோடு சுற்றுகின்றார்,

அவரின் வேலைக்காரி கட்சியினையே எடுத்துகொண்டார்

எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சசிகலா வாழ்க என கிளம்புகின்றார்

கலைஞரின் மகன் இன்று கட்சி தலைவர்

ஆனால் அண்ணாவின் வளர்ப்பு மகன் வறுமையில் தற்கொலை செய்ததாக முன்பு செய்திகள் வந்தன‌

எப்படியோ அண்ணாவிற்கு கல்லறை மட்டுமாவது மிஞ்சியிருக்கின்றது, அதை மட்டுமாவது உருப்படியாக கட்டி வைத்தார்கள்.

பெரியார் திருமணம் செய்கின்றார், வாரிசுக்கும் வாரிசு அரசியலுக்கும் ஆசைபடுகின்றார் அது தவறு என தனி கட்சி கண்டது திமுக என்பது குறிப்பிடதக்கது


நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் : நடராஜன்

என்னடா இது? அந்த பக்கம் தீபா எங்க அத்தை கட்சி எனக்குத்தான் என கிளம்புகின்றார்,

இவரோ இனி அதிமுக என் குடும்ப கட்சி என்கின்றார்.

எவனாவது இனி அங்கிருந்து கொண்டு திமுகவில் வாரிசு அரசியல் , குடும்ப அரசியல் என சவுண்டு விடுவீர்கள்????


பீட்டாவிற்கு டாட்டா..

“விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் மீது குறி வைப்பது மலிவானது.விலங்குகள் மீது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கருணை காட்டுவது கட்டாயம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது.

எனவே, விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி. அவற்றை துன்புறுத்துவது இந்தியத்தன்மை அல்ல. அந்த அரசியல் சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மதித்துத்தான் விலங்குகளுக்கு சேவை புரிந்து வருகிறோம்”

இப்படி தடை கோரிக்கை வைத்த ஸ்டாலினுக்கு பீட்டா பதில் சொல்லியிருக்கின்றதாம்

தமிழர்களின் கலாச்சாரத்தை தடுக்கும் பீட்டாவினை தடை செய்ய வேண்டும் என்றார் ஸ்டாலின்

பைத்தியகாரதனமான பதிலை சொல்லியிருக்கின்றது பீட்டா

ரோட்டோரம் சுற்றும் நாய்களுக்கு பீட்டா செய்ததென்ன? சாலையோர மாடுகளுக்கும், சாக்கடை பன்றிகளுக்கும் பீட்டா செய்ததென்ன?

என்னது விலங்குகள் மேல் கருணையோடு இருக்க இந்திய சட்டம் சொல்கின்றதா?

யானைகள் வழியினை தடுத்து அவற்றை கொன்றுகொண்டிருக்கும் மலையடிவார ஆஸ்ரமங்களையும், கல்லூரிகளையும் சட்டம் என்ன செய்தது?

மான் சுட்ட சல்மான் கானினை சட்டம் என்ன செய்தது?

கேரளத்திலும், அசாமிலும் யானைகளை பயன்படுத்துவதை சட்டம் தடுத்ததா?

பாதுகாப்பு படையில் குதிரைகளும், ராஜஸ்தானில் ஒட்டகமும் பயன்படுத்தபடுவது என்ன வகை?

குதிரை ரேசில் என்ன குதிரையினை கொஞ்சி குலாவுகின்றார்களா?

இறைச்சிக்காக கொல்லபடும் மாடுகள் கணக்கு என்ன? இஸ்லாமிய பண்டிகை அன்று பீட்டா மாடுகளை வெட்டாதே என சொல்கின்றதா?

அவற்றை எல்லாம் தடுக்காத பீட்டா தமிழரின் ஜல்லிகட்டை மட்டும் தடுத்தால் அதனை தடை செய்யவேண்டும் என ஸ்டாலின் என்ன? குழந்தை கூட சொல்லும்

இந்திய தேசிய கீதம் கூட தெரியாத , பாலியல் நடிகை சன்னி லியோனை சிறந்த பெண் என பட்டம்கொடுத்து இந்திய கலாச்சாரத்தை கேவலபடுத்தும் பீட்டாவினை தடை செய்ய சொல்லும் உரிமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு

தமிழனுக்கும், இந்தியனுக்கும் உள்ள பூரண உரிமையில் ஸ்டாலின் சொல்வதை அழுத்தமாக சொல்கின்றோம்

பீட்டாவிற்கு வேண்டும் தடை
பீட்டாவிற்கு டாட்டா..

பாரத பெருமை காக்கவும், தமிழன் கலாச்சாரம் காக்கவும் பீட்டாவினை தடை செய்தே தீரவேண்டும்

இல்லாவிட்டால் திரிசாவிற்கு விருது கொடுக்க சன்னிலியோன் தமிழகம் வருவார்.

தமிழக அரசு செய்யவேண்டியது அலங்கநாலூரில் தடை உத்தரவு அல்ல‌

போட வேண்டியது பீட்டா மீது…

நாம் வளர்க்கும் விலங்குகள் மீது அவர்களுக்கு என்ன அக்கறை?

புல் வெட்டினாயா? தண்ணீர் காட்டினாயா? குளிப்பாடினாயா? காட்டில் மேய்த்தாயா?

குறைந்தபட்சம் சாணியாவது அள்ளினாயா?
என்ற வசனங்களை அந்த பீட்டாவின் பிடறியினை பிடித்து கேட்கின்றோம்..

உலகெல்லாம் உள்ள கோழிபண்ணை, இறைச்சி மாட்டு பண்ணை, இறால் பண்ணை, மீன்பிடிகப்பல், பன்றி பண்ணை , வாத்து பண்ணை எல்லாம் சுற்றிவிட்டு அதன் பின் பேசட்டும்

மாட்டோடு விளையாட கூடிய தமிழர்களை மாட்டோடு கேவலமாக அடித்து விரட்ட துணிந்த அரசினை முதலில் சொல்ல வேண்டும்

பீட்டாவும், அதனை தடை செய்ய துணியாத அரசும் ஒழியட்டும்


எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கிற்று

mgr

அந்த ராமச்சந்திரனுக்கு நூற்றாண்டு விழா தொடங்கிற்று

இதுதான் அவரின் பிறந்தநாள் என நிச்சயமாக ஏதுமில்லை, எப்படியோ பின்னாளில் இந்நாளாக போயிற்று,அவரின் பிறந்த வருடத்தில் கூட சர்ர்சை உண்டு, அப்படியானால் நூற்றாண்டு என்றோ முடிந்திருக்கும்

இலங்கையின் கண்டியில் மலையாள போஸ்ட்மேன் கோபாலமேனனுக்கு மகனாக பிறந்தார் ராமச்சந்திரன், அந்த கோபால மேனன் சாகமல் இருந்தால் விதி மாறியிருக்கும், தந்தை மரணத்திற்கு பின் கும்பகோணம் குடிபெயர்ந்தார்கள்.

கடும் வறுமை, செல்வத்தை அளிக்காத இறைவன் ராமச்சந்திரனுக்கு கொடுத்த பெரும் வரம் நல்ல நிறமும், அழகான சிரிப்பும், சிரித்து கொல்லும் மோகினியின் சாயல் அது.

நாடக கம்பெனி வாழ்வு தொடங்கிற்று, திரைபடங்களுக்கு முட்டி மோதி வாய்ப்பு தேடியும் கிடைக்கவில்லை, காரணம் அந்நாளைய நாயகர்களுக்கு பாடும் திறன் இருக்க்வேண்டும், நம்மவருக்கு அது சுத்தம்
முட்டிபோதி முதல் திரைபிரவேசம் காணும்பொழுதே வயது 40ஐ தொட்டிருந்தது.

அப்பொழுதுதான் பாடல் யுகத்திலிருந்து தமிழ்சினிமா வசன காலத்திற்கு மாறியது, கருணாநிதி எனும் வாலிபர் பட்டையினை கழற்றிகொண்டிருந்தான், அவர் வசனம் அப்படி கொண்டாடபட்டது, அவரிடம் அடைக்கலாம் ஆனார் ராமசந்திரன்.

அதாவது அவரின் தமிழ்வசனத்தில் நடித்தால் தனக்கொரு இடம் கிடைக்கும் என்பது அவரின் கணக்கு, அது தவறவில்லை.

மருதநாட்டு இளவரசி, மந்திரகுமாரி போன்ற படங்களில் ராமசந்திரனுக்கு பெயர் கிடைத்தது , கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிறுத்திகொண்டார். தனக்கு அடையாளம் பெற்றுதந்த அந்த கருணாநிதியால் திமுகவிலும் நுழைந்தார்.

அக்கட்சி அன்று தடுமாறிகொண்டிருந்தது. இன்றைய நாம் தமிழரை போல அதனை சீண்டுவாரில்லை. அதன் இமேஜ் அப்படி இருந்தது.

அவர்களோ நாங்கள் லெனின்,மாவோ போல பெரும் இயக்கம் என சீன் போட்டுகொண்டிருந்தார்களே தவிர மக்கள் மதிக்கவே இல்லை. எப்படியாவது மக்களை நெருங்கவேண்டும் என திட்டமிட்ட திமுக திரைப்பட கலைஞர்களை இழுக்க ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் சிவாஜி அந்த கும்பலிலிருந்து விலக ராமசந்திரனுக்கு இடம் பலமாயிற்று, அவரின் திரையுலக வாழ்வில் பல உயரங்கள் வர வர அதனை எல்லாம் கட்சிக்காக பயன்படுத்திகொண்டே இருந்தார் அண்ணா
ராமசந்திரனின் ரசிகர்கள் பெருக பெருக அண்ணாவின் துதியும் கூடிற்று “இதயகனி” “இவன் நின்றால் பொதுகூட்டம், நடந்தால் ஊர்வலம், பேசினால் மாநாடு” என ஏகத்திற்கு புகழ்ந்து தள்ளினார்
சம்பத் தலமையில் ஒரு கூட்டம் இதனை கண்டித்து கட்சியினை உடைத்தே சென்றது, ஆனாலும் திமுக நின்றது.

இந்தி எதிர்ப்பு பெரும்போர் நடந்தபொழுது எம்ஜிஆர் ஆயிரத்தில் ஒருவனில் நடித்துகொண்டிருந்தார், தமிழக துப்பாக்கி சூட்டில் 65 பேர் சாக அவரோ கோவாவில் சூட்டிங்கில் இருந்த்தார்,

அதாவது கட்சிபணி என அவர் செய்தது ஒன்றுமில்லை முகம் காட்டியது தவிர‌ இப்படியான காலகட்டத்தில் எம்.ஆர் ராதா சுட தெரியாமல் சுட்ட நேரத்தில் தேர்தல் வந்தது, எம்ஜிஆர் சிகிச்சை பெறும் காட்சி ஆட்சியினை மாற்றியது.

அண்ணா இருக்கும் வரை சிக்கல் இல்லை, அண்ணா மறைந்ததும் கருணாநிதி முதல்வராக ராமசந்திரனின் கரங்களும் இருந்தன. கலைஞர் மதுகடைகளை திறக்கும்பொழுதும் கண்டுகொள்ளாத ராமசந்திரன் சினிமாவில் குடிப்பது தப்பு என குழந்தைகளுக்கு சொல்லிகொண்டிருந்தார்.

1972 தேர்தலில் திமுக அபாரவெற்றி பெறவும், இந்திராகாந்தியின் நரிதிட்டம் வேலை செய்தது. திமுகவினை உடைக்கும் முயற்சி தொடங்கியது.

அந்நிய செலாவாணி உட்பட பல விஷயங்களில் சிக்கிய ராமசந்திரன் திடீரென திமுக கணக்கு சரியில்லை என்றார், எல்லாம் ஊழல் என்றார், தான் அண்ணாவின் கனவினை நிறைவேற்றுவேன் அண்ணா நாமம் வாழ்க என கட்சி கண்டார்.

கட்சி கண்டாலும் காமராஜர் முன்னால் சென்று அவரோடு இணைவதாக சொன்னார், இந்திராவின் திட்டமும் அதுவே, அதாவது ஆந்திரத்தில் சிரஞ்சீவி கதை போல‌.

ஆனால் காமராஜருக்கு தன்மானம் இருந்தது, ஒரு நடிகனை வைத்து கட்சி நடத்த விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக சொன்னார்.

அதன் பின் 1977ல் முதல்வரானார் ராமசந்திரன், என்ன செய்தார்?

எந்த விஷயத்தில் எல்லாம் கலைஞரை குற்றம் சாட்டி வெளிவந்தாரோ அதனை எல்லாம் செய்தார்.
ஆட்சியில் திணறினார், மதுகடைகளை திறந்தார், மத்திய அரசு சொன்னதை எல்லாம் செய்தார், தமிழக நிலை மோசமானது.

தன் துதிபாடிகள் விருப்பபடி எல்லாம் வளைந்துகொடுத்தார், வள்ளலே என்றவனுக்கு சாரய ஆலை, பொன்மனமே என்பவனுக்கு கல்லூரிக்கு அனுமதி என தன் வள்ளல்தன்மையினை செய்ய கூடாத விஷயங்களில் காட்டினார்.

ஆனாலும் கலைஞரின் நெருக்கடியில் நாளுக்கு நாள் தோற்றே வந்தார், அவரின் திறமையின்மை வெளிப்பட்டது, சாராயகடையின்றி தமிழக அரசில் தன் வள்ளல்தன்மை காட்ட முடியாது என்று உணர்ந்தார்.

நிர்வாக தோல்வி, புதிய ஊழியர் நியமணம் அவர்களுக்கு சம்பள பிரச்ச்சினை என தத்தளித்தவருக்கு மதுகடை தவிர வேறு வழியில்லை, அதனால் தாய்மார்கள் முகம்சுளிக்ககண்டார்.

அப்பொழுதுதான் தன் கதாநாயகி ஜெயலலிதா நினைவுக்கு வந்தார், எங்கோ எப்படியோ இருந்த ஜெயா அரசியலில் திணிக்கபட்டார்., அவரின் உதவியாளராக சசிகலாவும் புகுந்தார்.

சத்துணவு திட்டத்தில் புதுமை செய்து தன்னை இரண்டாம் காமராஜர் என அழைக்க சொன்னார், புதுமை என்றால் ஒன்றுமில்லை ஒரு கூட்டு கூட அவ்வளவே.

டெல்லிக்கு ஜெயாவினை அனுப்பினார் ராமசந்திரன், அங்கே ஜெயாவிற்கு பெரும் கூட்டம் உருவானது, பலவாறு அவருக்கு போதிக்கபட்டது, ஆனாலும் தன்னை மீறமாட்டார் என நினைத்துகொண்டார் ராமசந்திரன்.

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் செல்வாக்கை இழந்து உள்ளாட்சி தேர்தலிலும் அவர் சறுக்க தொடங்கினார்
கலைஞரோ இந்திராவுடன் சேர்ந்து ஆடினார், இதனை ராமசந்திரன் எதிர்பார்க்கவில்லை. எனக்கு துரோகம் செய்தவனை எனக்கு துரோகம் செய்ய சொன்னவளுடன் சேர்ந்து அரட்டுவேன் என்ற கலைஞரின் தந்திரம் வித்தியாசமானது.

டெல்லி கட்சிகள் மீது எம்ஜிஆரின் சந்தேகம் விழுந்தது, ஜெயாவினை அவர்கள் வளர்த்துவிடுவது அடுத்த சந்தேகத்திற்கு வழிகோலியது, எப்படி தன்னை வைத்து கலைஞரை குத்தினார்களோ அப்படி யாரையோ வைத்து தன்னை குத்த திட்டமிடபடுகின்றது என்ற சந்தேகம் அவருக்கு வலுத்தது.

அது ரே கமிஷனில் இன்னும் கூடியது.

மதுகடை சர்ச்சையில் ஊழல் வழக்கில் ரே கமிஷன் விசாரணையும் எம்ஜிஆர் மீது வந்தது, ஆனால் அப்படி ஒரு கமிஷன் இருப்பதே யாருக்கும் தெரியாமல் தமிழக மீடியாக்களை எம்ஜிஆர் மறைத்தார், ரே கமிஷன் முடிவு வருமுன் மறைந்ததால் தப்பினார் எம்ஜிஆர்.

இந்நிலையில்தான் ஈழபிரச்சினை கிளம்பியது, அமிர்தலிங்கத்தை சென்னையில் வரவேற்று முந்திகொண்டார் எம்ஜிஆர்.

1983 கலவரங்களை தொடர்ந்து போராளிகுழுக்களை இந்தியா பயிற்சிக்கு அழைத்தது, பிரபாகரன் வர மறுத்தார். உண்மையில் பிரபாகரன் வித்தியாசமான மடையன். எந்த நாட்டு உதவியுமின்றி எப்படி நாடு அடையலாம் என சிந்தித்தானோ தெரியவில்லை.

ஆனால் புலிகளும் குறிப்பிடதக்க இயக்கம், அதுவும் வெளிநாட்டு தொடர்புள்ள இயக்கம் என எண்ணிய டெல்லி ராமசந்திரன் மூலம் காய் நகர்த்தியது.

ராமசந்திரனின் கை தேர்ந்த நடிப்பில் புலிகள் சிக்கி பயிற்சிக்கு வந்தனர், ஆனால் புலிகளின் ஆழ்மனம் யாரையும் நம்பவில்லை ராமசந்திரன் உட்பட‌.

இந்நிலையில் உடல்நல பாதிப்பும், இந்திரா மரணமும் மறுபடியும் அவரை ஆட்சியில் அமர்த்தின‌
ராஜிவிற்கும் ஜெயாவிற்கும் அரசியல் உறவு ஆரம்பமானது, எம்ஜிஆரின் முதுகில் குத்தும் செயல் தொடங்கியது.

ஜெயாவிற்கு துணைமுதல்வர் பதவி என்றளவில் டெல்லியின் அழுத்தம் இருந்தது.

பொறுத்து பார்த்த ராமசந்திரன், ராஜிவின் எதிரிகளை ஆதரிப்பதாக காட்டி ராஜிவிற்கு தண்ணி காட்டினார், யார் அந்த எதிரிகள் சாட்சாத் புலிகள்.

ராமசந்திரனின் புலிகள் ஆதரவு இப்படி ராஜிவினை மிரட்டவே அன்றி, வேறு ஒரு காரியத்திற்கும் அல்ல‌
போபர்ஸ் உட்பட ஏக சிக்கலில் சிக்கிய ராஜிவ் ஜெயாவினை கொஞ்சம் தள்ளிவைத்தார், மகிழ்ந்த ராமசந்திரன் இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதபட்டபோதும், இந்திய அமைதிபடை அனுப்பபட்ட போதும் அமைதி காத்தார்.

நீ ஜெயாவினை சீண்டினால் நான் புலிகளை சீண்டுவேன், நீ ஜெயாவிற்கு ஆதரவளிக்காவிட்டால் நான் புலிகளை தொடமாட்டேன் என்பதுதான் எம்ஜிஆருக்கும் டெல்லிக்குமான ஈழ கொள்கை.

எம்ஜிஆர் ஆட்சியில் வீட்டுகாவலில் வைக்கபட்டபொழுதுதான் பிரபாகரனுக்கு இந்த உண்மை புரிந்தது, பின்னாளைய பிரபாகரன் என்றால் அன்றே எம்ஜிஆருக்கு குண்டு அனுப்பியிருப்பான்.

என்ன சிரமமா? ஒரு கிழவி முதுகி கட்டி விட்டால் முடிந்தது விஷயம், எம்ஜிஆர் தூக்காத கிழவிகளா?
ஆனால் அன்று பிரபாகரனின் கொலைபட்டியல நீளமாக இருந்ததால் தப்பித்து சென்ற பிரபாகரன் அதன்பின் தமிழகத்து பக்கமே வரவில்லை.

அமைதிபடையினை எம்ஜிஆர் கண்டிக்காத மர்மம் அதன் பின்னே பிரபாகரனுக்கு சுத்தமாக விளங்கிற்று
எம்ஜிஆர் ஈழ ஆதரவு உள்நோக்கம் கொண்டதென்றும், கலைஞர் வேறுமாதிரி என்றும் அவனுக்கு விளங்கிற்று, காரணம் அமைதிபடையினை அவர்தான் எதிர்த்துகொண்டிருந்தார்.

இதிலும் கலைஞரையும் பிரபாகரனையும் நெருங்கவிடாத வேலையினை வைகோ பார்த்துகொண்டு அது ராஜிவ் கொலையிலும் முடிந்து எல்லாம் நாசம்.

ஈழசிக்கலில் வைகோ குழப்பவாதி என்றால், ராமசந்திரன் அவருக்கு முன்னோடி.

ராமசந்திரனின் ஜெயா அட்டகாசம் அடங்கவில்லை, ஸ்டாலினுக்கு அழகிரிக்கும் நடந்த போரில் ஒரு சமநிலை காத்த கலைஞரை போல வீரப்பன் அணி, ஜெயா அணி என மோதவிட்டு ஒரு சமநிலை காக்க படாதபாடுபட்டார் ராமசந்திரன்.

ஆனால் ஜெயாவின் அட்டகாசம் எல்லை மீறியது, இனி கட்சியினை உடைக்கும் நிலைதான் பாக்கி எனும் நிலையில் ஜெயாவினை ஓரங்கட்டும் முயற்சி தொடங்குவதற்குள் ராமசந்திரன் காலம் முடிந்தது.

ஆக இந்த ராமசந்திரன் தமிழகத்திற்கு உழைத்த வரலாறு இதுதான். இதில் எங்காவது பொதுநலம் கண்டீர்களா?

சினிமா தொழில் செய்ய வந்தார் செய்தார், அந்த மக்கள் கூட்டத்தை அண்ணா வோட்டாக மாற்றினார், அதனை அப்படியே தொடர நினைத்த கலைஞருக்கு வேட்டு வேறு வடிவில் வந்தது, பின் ராமசந்திரன் முதல்வரானார்.

எங்கு கணக்கு சரியில்லை என சொன்னாரோ அப்படி தன் கட்சி கணக்கினை எங்காவது காட்டீனாரா? கலைஞர் அரசு மதுகடை திறந்ததை கண்டித்தவர், மதுகடைகளை மூடினாரா?

இன்று பெருகியிருக்கும் பொறியில கல்லூரிகளை அனுமதித்தவர் அவரே, சரி இத்தனாயிரம் பேர் எப்படி வேலை பெறுவார்கள்? நடத்துபவர்கள் தராதரம் என்ன என சிந்தித்தாரா?

உருப்படியாக ஒரு ஆலை? ஒரு அணை? ஒரு தொலைநோக்கு திட்டம்? ஒரு வேலைவாய்ப்பு வந்ததா?
ஒரு மண்ணாங்கட்டியுமில்லை.

தமிழகத்தை காக்க பதவிக்கு வந்த அவர் தன் வழுக்கை தெரியாமல் இருக்க தொப்பி, தன் கண் சுருக்கம் தெரியாமல் இருக்க கண்ணாடி என ஒரு மாதிரி மேக் அப்பிலே கவனமாக இருந்தார்.

இறக்கும் வரை அதில் மகா கவனம் , அடக்கம் செய்வது வரை.

என்ன தொலைநோக்கு, அடுத்த தலைமுறை கவலை அவருக்கு இருந்தது? தன் கட்சிபற்றி, ஆட்சிபற்றி, தமிழகம் பற்றி ? ஒன்றுமே இல்லை, ஒரு திட்டமும் இல்லை.

சரி தனக்கு பின்னால் இப்படி ஆட்டுகூட்டமாக அலையும் மக்களுக்கு தொலைநோக்கில் ஏதாவது செய்தாரா?
கலைஞர் செய்ததெல்லாம் தவறு என சொல்லி, அதே தவறினை அட்ச்கம் பிரளாமல் செய்துகாட்டியவர்தான் ராமசந்திரன், ஒரு வகையில் அது காமெடி.

ஒன்று உண்மை.

தனக்கு கிடைத்த வாய்ப்பினை எல்லாம் தன் சுயநலத்திற்காக சினிமாவிலும், அரசியலிலும் பயன்படுத்திகொண்டவர் அந்த ராமசந்திரன்.

அவ்வளவுதான் விஷயம், இதில் இவருக்கு பாரத ரத்னா வேறு.

ஏன்?

பின் தமிழகத்தை யார் கெடுத்தால் என்ன? தன் அடிமைகளுக்கு டெல்லி வழங்கும் பட்டம் அவருக்கும் கிடைத்தது.

டாக்டர் அறிவாசான் அம்பேத்கருக்கு முன்பே பாரத ரத்னா பெற்றவர் ராமசந்திரன் என்றால் அந்த விருதின் அருகதை எப்படி என சொல்ல தெரியவில்லை.

இப்பொழுது நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றார்களாம்.

ஏன்? அண்ணா காட்டிய அதே வழி, இவனை காட்டுங்கள் வோட்டு கிடைக்கும் என்ற அதே வழி.

மதுரை ராமசந்திரனி கோட்டை, அங்கு எல்லா தேர்தலிலும் அவரே வென்றுகொண்டிருந்தார், அவர் கட்சிக்கு அங்கு செல்வாக்கு அப்படி.

இன்று அதே மதுரையில் அவர் கட்சி ஆட்சியில் அம்மக்கள் ஜல்லிகடுக்காக போராடிகொண்டிருக்கின்றார்கள்
அவர்களுக்கோ, அதே போல தமிழகத்திற்கோ ஏதும் செய்யாத அந்த கட்சி ராமசந்திரனுக்கு விழா கொண்டாடிகொண்டிருக்கின்றது.

பெரும் கொடுமை இது!

தமிழகம் உருப்பட வேண்டுமென்றால் இந்த ராமசந்திரனும் அவரின் பெரும் பிம்பமும் விரட்டபட வேண்டும்
அது வெறும் பிம்பம், சினிமா காட்டிய மயக்க பிம்பம்.

ராமாயணத்தில் வந்த மாய மானுக்கும், இந்த ராமசந்திரனுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை, சிக்கினான் தமிழன்.

இவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாட ஒரு அவசியமும் இல்லை, அதனை விட கொண்டாட வேண்டியர்கள் உண்டு, அதனை விட அரசு செய்ய வேண்டிய பெரும் விஷயங்கள் உண்டு.

ஆனால் செய்யமாட்டார்கள், அப்படி செய்தா வோட்டு வாங்கினார்கள்? ராமசந்திரன் படத்தினை காட்டி அல்லவா வோட்டு வாங்கினார்கள்.

தமிழகம் நிச்சயம் திருந்தாது, ஆனால் ராமசந்திரனால் இந்த மாநிலம் இழந்தது மிக அதிகம்
சில தலைமுறைகளே தமிழகத்தில் நாசமாயிற்று..

ஆந்திரமும் இப்படித்தான் இருந்தது, சினிமாக்காரன் ராமராவ் பின்னால் சென்றது, ஆனால் கட்சியினை கைபற்றிய சந்திரபாபு ஆந்திராவினை அழகாக நடத்துகின்றார்.

பதிலுக்கு டெல்லி ஆந்திராவினை பிளந்துபோட்டாலும் இன்று அமராவதி எனும் அற்புதநகரை உருவாக்குகின்றார், சந்திரபாபு ஆந்திர மக்களை திசை திருப்பிவிட்டவர்.

சினிமா மோகத்திலிருந்து திருப்பி உண்மையான அரசியல் எது என காட்டி அம்மக்களை நடத்திகொண்டிருப்பவர், அதில்தான் சிரஞ்சீவி போன்றவர்கள் தோற்றார்கள்.

ராமராவிற்கு பின் அவர்களுக்கு சந்திரபாபு கிடைத்தார், சின்னம்மே சிவபார்வதி எல்லாம் எடுபடவில்லை, சின்னம்மா சிவபபார்வதி எல்லாம் வந்திருந்தால் ஆந்திரா அழிந்திருக்கும்.

நமக்கு அப்படி அல்ல, சினிமாக்காரன் ராமசந்திரனுக்கு பின் சினிமாக்காரி ஜெயா வந்தார், அடுத்து சின்னம்மா வருகின்றார் இன்னும் யாரெல்லாம் வருவார்களோ தெரியாது.

வர முயற்சிப்பவனும் கருப்பு, பச்சை, மஞ்சள், சின்ன, குட்டை, குருட்டு, டவுசர் எம்ஜிஆர் என சொல்லிகொண்டு முயற்சித்தது கொண்டிருப்பதும் கொடுமை.

தமிழகம் உருப்பட முதலில் செய்யவேண்டியது இந்த ராமசந்திரனை அறவே மறந்து வேறுவழியில் சிந்திப்பது
ஆனால் அது இப்போதைக்கு சுலபமில்லை, தமிழக தலைவிதி அப்படி.

மற்றபடி தமிழக தலைவிதியினை நாசமாக்க ஒருவர் இன்னாளில் பிறந்தார் என்பதை விட இந்நாளில் ஒரு சிறப்புமில்லை..