அதர்மம் தலை தூக்கும்பொழுதெல்லாம் அங்கு நான் அவதரிப்பேன் எனும் பகவானின் வாக்கு ,அது மகா அக்கிரமம் நடைபெற்ற காலங்களான திருவிதாங்கூர் பகுதிகளில் அய்யா வைகுண்டரின் அவதரிப்பால் நிறைவேறிற்று.
அவர் அவதாரம் மட்டுமல்ல, சமூக ஏற்றதாழ்வுகளை நீக்க பாடுபட்ட ஒரு போராளி, ஒரு புரட்சியாளன். ஒடுக்ககட்டமக்களின் உரிமைக்காக அஹிம்சை வழியில் பாடுபட்ட இயேசுபிரான் போன்ற வரிசையில் உதித்த மகான்.
சந்தேகமே இன்றி சொல்லலாம் உலகில் அவதரித்த அவதாரங்களில் மிக குறிப்பிட்டு சொல்லகூடிய அவதாரம் அவர். ஆனாலும் இந்து மதத்தில் அவருக்குரிய இடம் இன்னும் கிடைக்காதற்கு மிக முக்கிய காரணம், அவர் பிறந்த பகுதியும், அந்த சாதி அடையாளமும்.
இவ்வுலகில் மிக கொடுமையான விஷயங்கள் ஒன்று உண்டென்றால், எல்லாம் வல்ல உருவமற்ற மறைபொருளை வணங்க சொன்னவர்கள், அன்பே கடவுள் என்றவர்களை எல்லாம் பின் வந்தவர்கள் ஒரு மதவட்டத்திற்குள் சிக்கவைத்தார்கள்.
அப்படி இயேசுபிரான்,நபி பெருமான், புத்தர் போன்ற வரிசையில் சிக்கிகொண்டவர் தான் இந்த வைகுண்டர்.
நிச்சயம் அவர் ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமல்ல, தாழகிடக்கும் எல்லா ஒடுக்கபட்ட மக்களுக்கும் பொதுவானவர்.
இயேசுபிரானின் வாழ்க்கைக்கும், போதனைக்கும், அவர் கட்டிஎழுப்பிய சீடர்குழுவிற்கும் கொஞ்சமும் குறையாதது வைகுண்டரின் வாழ்க்கை.
இருவருமே உருவமற்ற கடவுளை, சமத்துவ வாழ்க்கையினை போதித்தவர்கள்.
இப்படி ஒரு அவதார மனிதன் நமது பகுதியில் வாழ்ந்ததற்காக நாமெல்லாம் நிச்சயம் பெருமைபடவேண்டும். அவரின் போதனைகள் அப்படி, சித்தாந்தம் அப்படி.
இன்றும் அவரை நம்பிய பக்தர்களுக்கு அவர் பகவான் நாராயணின் அவதாரமாய் நின்று அருள்பாலித்துகொண்டுதான் இருக்கின்றார்.
எல்லாம் வல்ல இறைவனின் தூயபோதனையினை மக்களுக்கு போதித்தவர். கலி என இந்து மக்களாலும், அந்தி கிறிஸ்து என கிறிஸ்தவர்களாலும், தஜ்வால் எனும் ஒற்றைகண்ணன் என இஸ்லாமிய மதத்திலும் சொல்லபடும் அந்த மானிட இனத்தின் வரும் கொடிய காலங்களை கலிகாலம் என முன்னறிவித்து சென்ற அந்த ஒரு எச்சரிக்கைக்காகவே அவரை ஏற்றுகொள்ளலாம்.
அவரின் அற்புதங்களை கண்டால் அவதாரம், அவரின் போராட்டங்களை கண்டால் புரட்சியாளன், அவரின் போதனைகளை கண்டால் ஞானி, அவரின் சமத்துவத்தை கண்டால் அவர் மனிதநேயர் என அவரின் பெருமைகள் சொல்லி மாளாது.
தாழகிடப்பவரை தாங்க வந்து தர்மத்தை நிலைநாட்டியவர்களில் புத்தன், இயேசுவிற்கு பின் வந்து அப்படி தாங்கியும் பிடித்து நிற்பவர் அவர்.
இன்று அய்யா வைகுண்டரின் அவதார திருவிழாவினை அவரின் பக்தர்கள் கொண்டாடுகின்றார்கள்.
“அய்யா உண்டு” எனும் சொல்லில் சகல மதத்தின் கருத்துக்களும் புதைந்து கிடக்க்கின்றன. அவரின் போதனையில் இம்மானுடம் வாழ்வாங்கு வாழ ஆயிரம் வழிகளும் இருக்கின்றன.
தென்னாட்டு மக்களுக்கு அவர் அன்புவழி முப்பாட்டன் என்பதில் என்ற சந்தேகமும் இல்லை.
ஒருவகையில் அவருக்கு இழைக்கபடும் அநீதி மிக பெரிது
அதாகபட்டது அவர் வாழ்ந்த காலத்தில், கிறிஸ்தவ மிஷினரிகள் தீவிரமாக செயல்பட்டுகொண்டிருந்தன, அவர்களுக்கு அய்யா வைகுண்டர் மிக பெரும் சவால், அவர்கள் மேலிடத்திற்கு எழுதிய கடித வரிகள் இதோ
“இந்த முத்துகுட்டி எனும் வைகுண்டர் மட்டும் வரவில்லை என்றால் இந்நேரம் தமிழகத்திலும் கேரளத்திலும் பெரும்பான்மையானவர்களை கிறிஸ்தவர்களாக்கி இருக்கலாம்
ஆனால் அவர் மகான், பெரும் அற்புதங்களை செய்கின்றார், ஆதரவற்று இருந்த இந்துமத்தினர் அவரால் எழும்பி நிற்கின்றனர், அவரை கடவுளாகவே கொண்டாடுகின்றனர், அவர் நமக்கு பெரும் சவால், என்ன செய்வதென்று புரியவில்லை”
இன்று இந்துமதத்தை மீட்போம், மிஷினரிகளை விரட்டுவோம், இந்தியா இந்துக்களின் நாடு என கூப்பாடு போடும் கும்பல் ஏதாவது அய்யா வைகுண்டர் பற்றி பேசி பார்த்திருக்கின்றீர்களா?
அமித்ஷா முதல் வடக்கத்திய மதகும்பல்கள் யாராவது சாமித்தோப்பிற்கு வந்ததாக தகவல் உண்டா?
கன்னியாகுமரியில் எங்கோ பிறந்த விவேகானந்தருக்கு நினைவு மண்டபமும் கேந்திரமும் இருக்குமளவிற்கு அய்யா வைகுண்டருக்கு ஏதும் நினைவு சின்னம் உண்டா?
போலிசாமியாரின் ஆசிரமங்களிலும், காஞ்சி சாமியாரின் மடங்களில் தலைகீழாக கிடக்கும் டெல்லி அதிபதிகள் யாராவது அய்யா வைகுண்டர் தலத்திற்கு வருவார்களா?
பாபா, சாய்பாபா என இந்தியா முழுக்க முழங்குபவர்கள் கூட அய்யா வைகுண்டர் என்றால் ஒருமாதிரி தட்டி கழிப்பார்கள்,
, அவரை முழுமையாக அம்மதத்தார் இந்திய அடையாளமாக ஏற்றுகொள்ளவில்லை
ஏன்? இந்துமதத்திற்கு அய்யா வைகுண்டர் என்ன செய்யவில்லை?
ஆதிசங்கரர் முதல், ராமானுஜர் வரை எல்லா அவதாரங்களும் இந்துமதத்திற்கு செய்த சேவையில் சற்றும் குறையாதது அய்யா வைகுண்டரின் சேவை
பின் ஏன் ஒதுக்குகின்றார்கள்?
அதுதான் இந்துத்வ சாதி அடையாளம், அந்த குலத்தில் பிறக்காத யாரையும் அவர்கள் கொண்டாட மாட்டார்கள், ஏன் கடவுளே தாழ்த்தபட்ட சூத்திர குலத்தில் அவதரித்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள்
இந்தியாவில் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது, அந்த கொடுமைக்கு அய்யா வைகுண்டரும் சிக்கிகொண்டார்
நிச்சயம் இந்தியா முழுக்க ராமன் போல, கண்ணன் போல கொண்டாடபட்டிருக்கவேண்டிய பெரும் அவதாரம் அவர், ஆனால் இந்திய சமூக அமைப்பு அதற்கு இடமளிக்கவில்லை
இதனை சொன்னால், ஏய் இந்துவிரோதி என பொங்குவார்கள். ஆனால் சிந்தித்தால் அந்த வடக்கத்திய மதகும்பலின் உண்மை முகம் விளங்கும்
இதெல்லாம் பொன்னாரும், தமிழிசையும் கேட்கவேண்டிய கேள்விகள், நாம் கேட்டு என்னாகபோகின்றது? அவர்களே காவி கொடி பிடித்து அலையும்பொழுது நமக்கென்ன?
போகட்டும்
உண்மையான இந்து அவதாரம் அவர்தான், மக்களை காத்தவரும் அவர்தான்
அதுவும் பாஞ்சாலிக்கு கண்ணன் சேலை அளித்து மானம் காத்தது போல அன்றைய திருவாங்கூர் அடிமை பெண்களின் மானம் காத்து தோள்சீலை மீட்டுகொடுத்த அவதாரம் அவர்
அவரின் போதனைகளும், கொள்கைகளும் இந்துமதத்தின் பெரும் அடையாளங்கள்
அவர் காட்டிய அன்பு வழியினை, சமத்துவ வழியினை இந்த தேசத்தில் இந்து என சொல்லிகொள்ளும் ஒவ்வொருவரும் கடைபிடிப்பார்களானால் இத்தேசம் எவ்வளவு அமைதியாக இருக்கும்
இன்று அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளை ஓட விரட்டிய அந்த வைகுண்டரின் அவதார நாள். கிறிஸ்தவர்களை விரட்டுவோம், மதமாற்றத்தை தவிர்ப்போம் என்றெல்லாம் கோஷமிடும் யாராவது இந்த நன்னாளில் வாழ்த்தோ, கருத்தோ சொன்னார்களா?
செய்யமாட்டார்கள், காரணம் அவர்கள் அறிந்த இந்துமதத்தில் பகவான் நாராயணன் சூத்திரனாக பிறந்துவிட்டால் கூட அவன் ஏற்று கொள்ளமுடியாதவன்
கவனித்துபாருங்கள், அப்படித்தான் ஒருமாதிரியாக அவரை ஒதுக்குவார்கள், அவர் புகழ் வெளிவராமல் கவனமாக பார்த்துகொள்வார்கள்
என்றாவது ஒருநாள் அவர்கள் திருந்த கூடும், அன்று அகில இந்திய அளவில் அய்யா பெரும் அடையாளம் பெறுவார்
அன்று மிக அமைதியான , சாத்வீகமான இந்துமதம் உச்சம் பெறும்
அதுவரை தென்னக மக்கள் அவரை வணங்கி அவர் வழி நடக்கட்டும், அமைதியும் தர்மமும் செழிக்கட்டும்
அவர் வழி நடக்கும் பக்தர்களுக்கு அவதார தினவிழா வாழ்த்துக்கள்..