முதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்

தமிழ் திரையுலகில் எத்தனையோ ஆயிரம் திரைபடங்கள் உண்டு, அதில் குஷ்பூ நடித்த படங்கள் எல்லாம் எமக்கு மட்டும் காவியம்

ஆனால் அதனை தாண்டியும் ஒரு சில படங்கள் மனதில் நிலைத்துவிடுகின்றன, அதில் முதலிடம் “முதல் மரியாதை” படத்திற்கானது

நாளைக்கு ஒரு தேர் செய்யும் தச்சன் ஒரு வருடம் உழைத்து ஒரு தேர் சக்கரம் மட்டும் செய்தால் எப்படி இருக்கும் என ஒரு பாடலில் சொல்வார் ஓளவையார்

அப்படி பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் தங்கள் உச்சகட்ட திறமையினை ஒரு படத்தில் கொடுத்தால் எப்படி இருக்கும்?

அந்த படம் அதனைத்தான் சொல்கின்றது

செல்வராஜ் எனும் ஜாம்பவானின் கதை, பாரதிராஜாவின் அழகான இயக்கம், பொருத்தமான சிவாஜி, பின்னி எடுத்த வடிவுக்கரசி என ஒரு பக்கம்

இளையராஜாவும், வைரமுத்துவும் சரிபாதியாக தாங்கி நின்ற இன்னொரு பக்கம்

கிராமத்து எளிய இசையினை இளையராஜாவும், எளிய வார்த்தைகளால் காலத்தை வென்ற பாடல்களை வைரமுத்துவும் கொடுத்திருந்தார்கள்

அதாவது வைரம், வைடூரியம், மாணிக்கம் என எல்லா ரத்தினங்களும் பதிந்த நகையாக அது பெரும் அழகு பெற்றிருக்கின்றது

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் இது, கிராம வாழ்க்கையின் வெகுளியான‌ நக்கல்,கிண்டல், விளையாட்டுக்கள் நடுவில் வளர்ந்திருந்ததால் அப்படம் மனதில் நிலைத்துவிட்டது

குடும்ப கவுரத்திற்காக தன் சோகத்தை தன் மனதில் புதைத்துகொண்டு, சிரித்த முகத்தோடு வைராக்கிய வாழ்க்கை வாழும் ஒரு பெரியவர் மீது ஒரு இளம்பெண்ணுக்கு வரும் மரியாதை கலந்த உணர்ச்சியின் கதை அது

அப்படம் வரும்பொழுது எனக்கு 8 வயது இருந்திருக்கலாம், ஆனால் அந்த கிராமம் அப்படத்தினை கொண்டாடியது நினைவிருக்கின்றது

அப்பொழுதெல்லாம் டிவி வெகுசில வீடுகளில்தான் உண்டு, சூட்கேஸ் சைசில் விசிஆர் இன்னும் சில வீடுகளில்தான் இருக்கும், மொத்தத்தில் 4 ஊருக்கு ஒன்றுதான் இருக்கும்

அவர்களும் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் கொண்டு வந்திருப்பர்

அந்த கிராமத்திலும் அப்படி ஒருவர் இருந்தார், அவருக்கு நல்ல மனது, யாரோ கொடுத்த முதல்மரியாதை படத்தை பார்க்க ஊரை அழைத்துவிட்டார்

தெருமுனையில் அவர் டிவியி அப்படம் தொடங்கியது

அந்நேரம் கடவுள் வந்திருந்தாலும் கிராமம் கவனித்திருக்காது, அப்படி ஒரு ரசனையில் படத்தினை ரசித்தார்கள்

Image may contain: 1 person, sitting

சில வெகுளியான மனிதர்கள் அந்த கதை நடக்கும் கிராமத்திலே வாழ்வதாக கருதிகொண்டார்கள்,

பூங்காற்று திரும்புமா பாடலுக்கு எல்லோரும் கண்களை துடைத்துகொண்டார்கள்

படம் நகர்ந்தது, சிவாஜி சிரித்தால் எல்லோரும் சிரித்தார்கள், சிவாஜி அழுதால் எல்லோரும் அழுதார்கள், அவர் யோசித்தால் எல்லோரும் யோசிப்பார்கள்

அதுவும் அவர் மீன் சாப்பிடும் அழகில் மறுநாள் தன் வீட்டில் மீன்குழம்பு என அப்பொழுதே முடிவு செய்தார்கள்

சும்மா சொல்லகூடாது, மனிதர் அவ்வளவு ருசித்து மீன் சாப்பிடுவார், நடிகன் என்றால் அவர்தான் நடிகன், சாப்பிடும் சுவையினை கூட அப்படியே முகத்தில் கொண்டு வந்த நடிகன், மாபெரும் நடிகன்.

கிளைமேக்ஸில் சத்யராஜின் தலையில் ராதா ஓங்கி அடிக்கும் பொழுது சிலருக்கு ஆக்ரோஷம் பொங்கியது ” அடிடி அவன, போடு, இன்னும் 4 போடு” என சாமிவந்தவர்கள் போல சிலர் ஆடிகொண்டிருந்தனர்

அவர்களை அடக்குமுன் வெகு சிரமாயிற்று

சிவாஜி இறந்ததும், கூட்டம் கதறி அழுதது, ராதா அப்படியே சரிந்ததும் கூட்டம் கண்ணை துடைத்தபடியே கிளம்பியது

“அப்படியே, அந்த பொன்னாத்தா தலையிலும் 2 போடு போட்டுட்டு போயிருந்தா நல்லா இருந்திருக்கும், பொம்பிளையா அவா” என கலங்கிய குரலில் சொல்லிகொண்டே சென்றார்கள்

எத்தனை காலங்கள் கடந்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சமும் சலிக்காத படம் அது

குஷ்பூ படங்களை தாண்டி நாம் அடிக்கடி பார்க்கும் வெகுசில படங்களில் அதுவும் ஒன்று

இந்த படம் எடுத்ததற்காகவே அந்த பாரதிராஜாவினை ஒரு முறை கண்டிப்பாக பார்க்கவேண்டும்

அவர் எடுத்த படங்களில் நிச்சயம் இதுதான் நம்பர் ஒன்.

எத்தனை முறை என தெரியவில்லை, ஆனால் 100 முறைக்கும் மேல் பார்த்திருப்பேன்,

இப்பொழுதும் பார்த்துகொண்டிருக்கின்றேன், படம் அப்படியே நன்றாக இருக்கின்றது

ஆனால் அந்த எளிய கிராமத்து மனிதர்களோடு பார்த்த அந்த சந்தோஷம் மட்டும் மிஸ்ஸிங்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s