டிடிவி தினகரனை இன்று காணவில்லை …..

யாரும் கேட்காமலே, தானாகவே ஸ்டாலினை விடமாட்டேன், ஸ்டாலின் ஒழிக, ஸ்டாலின் கனவு காண்கின்றார் என தூக்கத்திலும் புலம்பிகொண்டிருந்த டிடிவி தினகரனை இன்று காணவில்லை

மனிதர் சோர்ந்துவிட்டார் போலும்

சீமான், வைகோ போன்றோர்ர்கள் கத்தாத கத்தா? வைக்காத கேள்விகளா? சீறாத சீற்றமா?

அவர்களுக்கெல்லாம் என்றாவது திமுக பதில் சொல்லியிருக்கின்றதா?

கதற கதற கத்தியும் சீமானுக்கோ, வைகோவிற்கோ இன்னும் பலருக்கும் திமுக பதில் சொன்னதே இல்லை, கண்டுகொள்ளாமல் விடுவதை விட உலகில் பெரும் தண்டனை இல்லை

பதில் சொல்லாமல் புறக்கணிப்பது பெரும் தண்டனை, ஒரு வகையான அஹிம்சை கொடூரம்.

சீமானை போல, வைகோவினை போல தினகரனும் அழுதிருப்பாரோ என்னமோ?

அப்படி உணர்ந்திருந்தால் அது அவருக்கு நல்லது.


 

ஜெ., மரணம் குறித்து மாநில அரசு விசாரணை:மத்திய அரசு தகவல்

இது என்ன மத்திய அரசோ தெரியவில்லை

இலங்கையில் போர்குற்றம் நடந்ததை இலங்கையே விசாரிக்கட்டும் என்றால் ஆமாம் என்கின்றது

இப்பொழுது ஜெயா மர்மத்தை ஆளும் அதிமுக அரசே விசாரிக்கட்டும் என்கிறது

விரைவில் பாபர்மசூதி வழக்கினை அத்வானி விசாரிப்பார் , குஜராத் கலவர வழக்கினை மோடியே விசாரிப்பார் என சொன்னாலும் சொல்வார்கள்…


 
 
 

லாரன்ஸின் வேதனை….

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன் என்று லாரன்ஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தால், எப்படி படம் எடுத்தாலும் ஓடும் என நினைத்துவிட்டார் போல‌

இவரின் சமீபத்திய படம் தோற்றதால் அன்னார் வேதனையில் இருக்கின்றார், இதில் ஜல்லிகட்டுக்கு முன் அல்லது பின் என பிரிக்க என்ன இருக்கின்றது?

தமிழர்களே, ஜல்லிகட்டிற்கெல்லாம் ஆதரவு தெரிவுத்துள்ளேன், என் படம் குப்பையாய் இருந்தாலும் நீங்கள் ஆதரவு தெரிவித்தாகவேண்டும் என சொல்ல வருகின்றாரோ என்னமோ?…

 
 
 

கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் கொடுத்தார் : சுப்பிரமணியன் சுவாமி

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் கொடுத்தார் : சுப்பிரமணியன் சுவாமி

ராஜிவினை கொல்ல புலிகளுக்கு உதவியாக கருப்புபூனை படையினை வாபஸ்பெற இவர் எவ்வளவு வாங்கினார் என்றோ,

அன்று சசிகலா மீதே வழக்கு தொடர்ந்த இவர், இன்று சசிகலாவிற்கு வரிந்துகட்டி உதவ எவ்வளவு வாங்கினார் என்றோ யார் கேட்கபோகின்றார்கள்??

இந்தி எதிர்ப்பு முதல் எத்தனையோ போராட்டங்களை திமுக நடத்தியபொழுது பணம் கொடுத்தா இந்திரா முடித்தார்?

மிசா காலத்தில் ஏன் கலைக்க போகின்றார், பணம் கொடுத்து கலைஞரை அரியணையில் அமரவைக்க முடியாதா?

பணம் கொடுத்து கலைஞரை சமாளிக்கமுடியுமென்றால் திமுகவினையே இந்திரா வாங்கியிருக்கமாட்டாரா?

ஏன் ராமசந்திரன் என்றொருவரை உருவாக்கி அழகுபார்த்திருக்க போகின்றார்?

பணம் கொடுத்த குற்றசாட்டு சொல்லவேண்டுமென்றால், கலைஞரை எதிர்த்தவர்கள் மேல் சொல்லலாம், இவர்கள் பணம் வாங்கிகொண்டு கலைஞரை எதிர்த்தார்கள்..

அதில் ஒரு உண்மையும் இருக்கலாம்

ஆனால் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, கலைஞருக்கே பணம் கொடுத்தார்கள் என்றா புலம்புவார்?

விலை போவதென்று முடிவுகட்டியிருந்தால் இந்நாள் வரை அக்கட்சி நிலைத்து நிற்க முடியுமா?..

பணத்திற்கு விலைபோக அது என்ன சு.சாமியின் ஜனதா கட்சியா?

சு.சாமி, ச்சீ…ச்சேய்.. சாமியாகி கொண்டிருக்கின்றார்.

எம் ஜி ஆர் அண்ணன் மகன் ….

Image may contain: 1 person

“அண்ணா எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியை எம்ஜிஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சந்திரன் தொடங்கினார்.

மனம் கனத்த நேரங்களில், மனம் விட்டு சிரிக்க எப்பொழுதாவது ராமசந்திரன் படம் பார்ப்பதுண்டு, அந்த பத்மினியுடனான போட்டி நடனம், நீரும் நெருப்பும் டபுள் ஆக்ட், என பல காமெடி காட்சிகளில் ராமசந்திரன் கலக்குவார்

அதுவும் உலகம் சுற்றும் வாலிபன் போன்றவை உச்சகட்ட காமெடி ரகம், குறிப்பாக அவரின் முகபாவம் நம்மை எந்த சோகத்திலும் சிரிக்க வைக்கும்..

அப்படிபட்ட காமெடியான நடிகன் இனி தமிழகத்திற்கு கிடைக்கமாட்டான், இதுவரை தமிழகம் கண்ட காமெடியன்களில் உச்ச காமெடியன் அவரே

அதுவும் அன்பே வா படத்தில் அவர் கல்லூரி மாணவர்களோடு ஆடும் நடனத்தை மியூட் செய்துவிட்டு பார்த்தால் டிரம்ப் கூட சிரித்துவிடுவார்..

டிர்ம்ப் என்ன? , அதனை கண்டால் ஐ.எஸ் தீவிரவாதி கூட துப்பாக்கியினை தூர எறிந்துவிட்டு சந்தோஷமாக சிரிப்பான்

இப்படி அவர்படங்களை பார்த்து சிரித்துகொண்டே இருக்கலாம்.

அவர் படங்களில் மிக சரியாக 5 நிமிடத்திற்கொரு முறை, “அம்மா..” என கண்களை கசக்குவார், 3 நிமிடத்திற்கொருமுறை “அண்ணா..” என அலறுவார்

எந்த நேரத்தில் அலற ஆரம்பித்தாரோ, பின்னாளில் அவர் கட்சி “அண்ணா கட்சி”, “அம்மா கட்சி” ஆகி தொலைத்த‌து, அம்மா அம்மா என அவர் சினிமாவில் ஓடியதன் விளைவு அவர் கட்சி அம்மா கட்சியாகவே ஆகிதொலைந்தது

இந்த சந்திரன் சித்தப்பா படங்களை பார்ப்பார் போலிருக்கின்றது, அப்படியே “அம்மா அண்ணா” என சொல்லி நடுவில் ராமசந்திரனை மட்டும் சேர்த்துவிட்டார்

அப்படி அது “அண்ணா எம்ஜிஆர் அம்மா திமுக” ஆகிவிட்டது, தீபா கட்சி கூட “எம்ஜிஆர் அம்மா தீபா” என்றுதான் தொடங்கபட்டிருக்கின்றது

அந்த தொப்பி தலையர் சினிமாவில் “அம்மா.. , அண்ணா..” என அழுது அழுது அவர் கட்சியும் “அம்மா.., அண்ணா..” என அலறிகொண்டே இருகின்றது..

ஆனாலும் சீடகோடிகள் கிடைத்தால் அந்த ராமசந்திரனுக்கு கிடைத்தது போல கிடைக்கவேண்டும் , அவர் அழுதது போலவே “அம்மா, அண்ணா..” என அழுகின்றார்கள் பார்த்தீர்களா?

நல்லவேளையாக நடிகர் நம்பியாரின் குடும்பத்தார் கட்சி தொடங்கவில்லை, தொடங்கினால் அவரின் பிரத்யோக வசனமான “ஏய் கபாலி, ஏய் பீட்டர் இவன புடிச்சி உள்ளே போடு” என்ற அடைமொழியுடன் திராவிட முன்னேற்ற கட்சிகள் உருவாகும்…

“கபாலி, பீட்டர் , மாயாண்டி திராவிட முன்னேற்ற சங்கம்” என ஒன்று தொடங்கபட்டால் தமிழ் நாடு என்னாகும்..

அந்த ஆபத்திலிருந்து தமிழகம் தப்பித்தது

 
 

எந்த காமராஜர்?

காமராஜரை முதலில் நாடார்களிடமிருந்து காப்பாற்றவேண்டும், இல்லாவிட்டால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து “காமராஜர் நாடாருக்காக அரிவாள் எடுத்து 50 பேரை வெட்டினார்..” எனும் அளவிற்கு வரலாற்றினை மாற்றிவிடுவார்கள்.

இயேசு சாகும்பொழுது இரு கொலைகாரர்களுக்கு நடுவில் இருந்தாராம்

அப்படி காமராஜர் எப்பொழுதும் இப்பக்கம் கராத்தே செல்வின், அப்பக்கம் வெங்கடேசபண்ணையாருடனே போஸ் கொடுக்கின்றார்

வெங்கடேசனும்,செல்வினும் நாட்டுக்காக எல்லையில் சாகசம் செய்தவர்களா? இந்த தமிழகத்திற்காவது ஏதும் செய்தார்களா என்றால் பதிலிருக்காது

விரைவில் மேலே கன்னியாகுமரி முத்துலிங்கம் படமும், கீழே என்கவுண்டரில் கொல்லபட்ட ரவுடி கபிலன் படமுமாக, சுற்றிலும் கொலைகாரர்கள் நடுவில் காமராஜர் ஒளிவிடும் நாள் வந்துவிடும்

இப்பொழுதே போலிஸ் துரத்தும் ராக்கெட் ராஜாவுடன் தான் காமராஜர் படம் வந்துகொண்டிருக்கின்றது

எந்த காமராஜர்?

தன் குடும்பத்து வாலிபன் ஒரு வழக்கில் சம்பந்தபட்டிருப்பது தெரிந்து, தேடிபிடித்து அவனை உள்ளே தள்ளிய அந்த காமராஜரின் படம்

ஆக விரைவில் காமராஜரை பெரும் கொலையாளி என வரலாறு சொல்லாமல் இருக்கவேண்டுமானால், இந்த நாடார்களிடமிருந்து அவரை காப்பாற்றவேண்டும்

அய்யா வைகுண்டர், தியாகி சங்கரலிங்கம், ம.பொ.சி வரிசையில் அவரை வைத்தாலாவது ஒரு அர்த்தம் உண்டு

செல்வின், வெங்கடேசன், ராக்கெட் ராஜா , சரத்குமார் வரிசையில் அவரை வைத்தால் என்ன சொல்வது?

அது அவருக்கு அவமானமே தவிர நிச்சயம் பெருமையில்லை..

(இனி நெல்லை பஸ் நிலையத்திற்கும், நாகர்கோவில் பஸ் நிலையத்திற்கும் வரசொல்லி
நிறைய அழைப்புகள் வரும்….🙂 )

இது என்னடா டெல்லி பல்கலைகழகத்திற்கு வந்த சோதனை?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்

இது என்னடா டெல்லி பல்கலைகழகத்திற்கு வந்த சோதனை?

இவர் தாழ்த்தபட்டவர் என்றுவேறு செய்திகள் வருகின்றன, இப்பொழுதெல்லாம் பல்கலைகழகங்களில் தாழ்த்தபட்ட மாணவர்கள்தான் தற்கொலை செய்கின்றார்கள்…

பிரச்சினைகளை வெளியில் சொல்லலாம், பெற்றவர்களிடம் சொல்லலாம், ஏதாவது ஒரு வகையில் சொல்லிவிட்டு சாகலாம்

திடீரென சாவது பலபேருக்கு லாபமாகிவிடுகின்றது

எப்படியோ உபி வெற்றியினை கொண்டாடமுடியாமல் மோடி கோஷ்டிக்கு பெரும் சிக்கல் வரப்போவது உறுதி.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் : பிறந்த நாள் இன்று….

 Born: 14 March 1879, Ulm, Germany

Died: 18 April 1955, Princeton, New Jersey, United States

கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன்

மற்ற விஞ்ஞானிகளை விட இவர் மகா வித்தியாசமானவர், அதாவது விஞ்ஞானிகள் என்றால் ஆய்வகத்தில் அமர்ந்திருக்கவேண்டும் , ஒரு மாதிரி தாடி வைத்திருக்கவேண்டும், எப்பொழுதும் சீரியசாக இருக்கவேண்டும், பிப்பெட் குழாய், வேதிபொருள் அல்லது உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் போல இருட்டுக்குள் வியர்வை வழிய வழிய ஏதோ கிறுக்கி கொண்டிருக்கவேண்டும் என்பதெல்லாம் அல்ல‌

மாறாக ஒரு பேப்பர் ஒரு பென்சில் போதும், அவர் போக்கில் சமன்பாடுகளை எழுதிகொண்டே இருப்பார். ஏதாவது ஒரு விஞ்ஞானி ஆய்வகத்தில் அதனடிப்படையில் சோதனை செய்தால் அது மிக சரியாக வரும்

அவரின் ஆராய்ச்சி இப்படித்தான் எளிமையாக இருந்தது

ஜெர்மனியில் பிறந்தார், ஐரோப்பா எங்கும் அவர் குடும்பல் அலைந்தது, பின் சுவிட்சர்லாந்தில் வசித்தார்.

ஒரு அலுவலகத்தில் கிளர்க் வேலையில்தான் இருந்தார், ஆனால் இயற்பியல் கட்டுரைகளை அவர் சமர்பிக்க, சமர்பிக்க உலகம் அவரை அறிந்துகொண்டது

ஒளிமின் விளைவு என்பதை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசினை வாங்கினார், அதன் பின் இயற்பியல் ஆராய்ச்சியில் இறங்கினார்

Image may contain: 1 person

சார்பியல் கொள்கை என ஒன்றை சொன்னார், நமது கமலஹாசனின் பேட்டி போல அது சாதாரண மக்களுக்கு புரியாது, காலம், பொருள், இடைவெளி என என்னவெல்லாமோ வரும், அதில்தான் ஓளியே உலகின் வேகமான விஷயம் என்பதை சொன்னார்

அதாகபட்டது இப்படி சொல்லலாம், ஒருவனை ஒளியின் வேகத்தில் ராக்கெட்டில் வைத்து விண்வெளியினை சுற்றிவர செய்யலாம், அதற்குள் பூமி சூரியனை எத்தனை சுற்றும் சுற்றிவரட்டும்

அவன் ஆகாயத்தினை சுற்றிவந்து பூமிக்கு வரும்பொழுது அவன் அப்படியே இருப்பான், ஆனால் பூமி சூரியனை 1000 சுற்று சுற்றியிருகும், அதாவது இங்குள்ள மனிதருக்கு 1000 வருடம் கடந்திருக்கும், சென்றவன் அப்படியே இருப்பான்

அதாவது பூமி சூரியனை சுற்றுவது நேரம், மனிதன் விண்வெளிக்கு சென்றது காலம், இப்படியாக செல்லும் தத்துவம் அது

ஒன்றும் பிரமாதமில்லை, இந்து புராணங்களில் ஏற்கனவே வரும் சம்பவம் இது, இந்துமதம் நிச்சயமாக அறிவியல் சார்ந்தது, அந்த விண்வெளி உண்மையினை தகுந்த சமன்பாடுகளோடு ஐன்ஸ்டீன் சொன்னார்

அடுத்ததாக அவரின் கண்டுபிடிப்புதான் புகழ்பெற்ற என்ற சமன்பாடு, அதாவது நியூட்டனின் கொள்கைகளில் சில திருத்தம் செய்தார், புதிய சமன்பாடு கிடைத்தது. சொன்னாரே தவிர சோதித்து பார்க்க இயலா தத்துவம் அது

இவை எல்லாம் சாதிக்கும்பொழுது அவருக்கு வயது 30க்குள்தான் ஆகியிருந்தது, பிறவிமேதைக்கு எல்லாம் சாத்தியம்

இந்நிலையில்தான் ஹிட்லரின் எழுச்சி தொடங்கி அப்பகுதியில் யூதர்கள் வாழமுடியா நிலை தோன்றியது , அமெரிக்காவிற்கு அகதியாய் தப்பினார் ஐன்ஸ்டீன்

சும்மாவே விஞ்ஞானி, அதுவும் யூத மக்களை ஹிட்லர் கொடூரமாக அழித்துகொண்டிருந்த பொழுது அவருக்கு உள்ளே இருந்த யூத ரத்தம் கொதித்தது, அணுகுண்டு செய்யும் திட்டத்தின் ஆலோசகர் ஆனார்

அப்பொழுது ஆளாளுக்கு அணுகுண்டு ஆசையில் இருந்தனர், ஹிட்லர் கிட்டதட்ட அணுகுண்டின் பாதியினை நெருங்கியிருந்தார், காரணம் ஐன்ஸ்டீனுடன் பணியாற்றிய ஜெர்மன் விஞ்ஞானிகள் அவன் வசன் இருந்தனர்

இந்நிலையில்தான் இன்னொரு யூதரான ஒபர் ஹைமருடன் இணைந்து ஐன்ஸ்டீன் தன் தத்துவத்தை செயல்படுத்தினார், அது அணுகுண்டாய் வெடித்தது

ஏதோ ஒரு பேப்பரில் பென்சிலால் ஐன்ஸ்டீன் கிறுக்கிய சனம்பாடு அங்கே பேரழிவாய் வெடித்தது, அணுகுண்டு அமெரிக்க அரசின் கைகளுக்கு சென்றது

ஹிட்லரை ரஷ்யா வீழ்த்த, அணுகுண்டு ஜப்பானுக்கு வீசபட்டது, அந்த அழிவினை கண்ட ஐன்ஸ்டீன் கண்ணீர்விட்டார், அரசுகள் கையில் விஞ்ஞானம் சிக்குவது தவறு என வாய்விட்டு சொன்னார்

அதன் பின் அவர் இம்மாதிரியான ஆராய்ச்சிகளில் மனம் செலுத்தவில்லை, இனி அமைதியே அணுகுண்டை வெல்லும் ஆயுதம் என சொல்லி அமைதியானார்

பின் அவரின் ஆராய்ச்சி வானுலகிற்கு சென்றது, நியூட்டனின் கொள்கைளை திருத்திகொண்டிருந்த அவர், பின் கோபர்நிக்கஸ், கெப்ளர் என திசைமாறினார்

எல்லோரும் ஒரு விஷயத்தை பார்ப்பதற்கும் ஐன்ஸ்டீன் பார்ப்பதர்கும் ஏகபட்ட வித்தியாசம் உண்டு, அவர் பிரபஞ்சத்தை வேறுமாதிரி பார்த்தார்

இதனை போல பல பிரபஞ்சங்கள் இருக்கலாம், ஒரு பிரபஞ்சத்திற்கும் இன்னொரு பிரபஞ்சத்திற்கும் ஒரு இணைப்பு இருக்கலாம், அதன் வழியே அடுத்த பிரபஞ்சத்திற்கு எளிதில் சென்று வரலாம்

இன்றும் ஏலியன்ஸ் பறக்கும் தட்டுகள் அவ்வழியே வரலாம் என நம்பபடுகின்றன‌

அணுவுல் எலெக்ட்ரான்கள் உட்கருவினை சுற்றுவதற்கும், சூரியனை பூமி சுற்றிவருவதற்கும் பொதுவான விதி உண்டு, அதனை நான் கண்டுபிடிப்பேன் என அது சம்பந்தமாக ஆராய்ந்த ஐன்ஸ்டீன் அதனை உலகிற்கு சொல்லாமலே மறைந்தார்

அவர் இறந்தபின் அவர் மூளையினை ஆராய்ந்தார்கள், பிரமாதமாக ஒன்றுமில்லை, ஆக ஆன்மா அவரை இயக்கியிருக்கின்றது என சொல்லிகொண்டார்கள்.

இறுதிவரை விஞஞானியாகவே வாழ்ந்தார், இஸ்ரேல் அமைக்கபட்டபொழுது இஸ்ரேலின் பிரதமராக அமர அவரை யூதர்கள் அழைத்தனர், யூத அறிவின் சிகரம் நீங்கள். இந்த நாற்காலி உங்களுக்கானது என்றபொழுது அவர் மறுத்தார்

விஞ்ஞான உலகம் வேறு, அரசியல் உலகம் வேறு என மறுத்தார்

இதுதான் யூதர்கள், இதே தமிழ்நாடு என்றால், விஞ்ஞானி கிடக்கின்றான் வெங்காயம், எவன் நல்ல நடிகனோ அவனை அமரவை என கிளம்பமாட்டார்களா? பின் எப்படி தமிழகம் உருப்படும்.

கடந்த‌ நூற்றாண்டின் நம்பர் 1 விஞ்ஞானி என உலகம் அவரை ஒப்புகொண்டிருக்கின்றது, அப்படி ஒரு அசாத்திய அறிவாளி இனி பிறப்பது சிரமம்

மாமன்னன் சாலமோனுக்கு பின் எதனையும் புரிந்துகொள்ளும் பெரும் அறிவாளி என வரலாறு ஐன்ஸ்டீனைத்தான் சொல்கின்றது, எதுவும் அவருக்கு சிரமம் இல்லை,

திருமண வாழ்க்கைகள் தோற்கும் போதும், தன் குழந்தைகள் தன்னை போல் வராத பொழுதும் அவருக்கு கவலையே இல்லை, அப்படி அவர் தன் வாழ்க்கை பற்றி கவலைபட்டிருந்தால் இந்த உலகம் ஒரு ஐன்ஸ்டீனை கண்டிருக்காது

மனிதநேயம் மிக்க விஞ்ஞானி அவர், அணுகுண்டு இப்படியான விளைவுகளை உருவாக்கும் என்றிருந்தால், அந்த சமன்பாட்டை கொடுத்திருக்கவே மாட்டேன், உலகின் பெரும் பாவி நான் என அவர் கதறிய தருணமும் உண்டு

யூதர்தான்,ஆனால் கடவுளை வேறுவிதமாக பார்த்தார்

“இந்த பிரபஞ்சம் மிக பெரிது, இவ்வளவு பெரிய கோள்கள், விண்மீன்கள், அண்டங்கள், சூரியன்கள் என உருவாவதும், அவை துளி ஓசையின்றி இயங்குவதும், மிக மிக சரியாக இயங்குவதும் கடவுள் இருப்பதை குறிக்கின்றன‌

நிச்சயம் அப்படி ஒரு சக்தி உண்டு, அதுவே விண்வெளியினை இயக்குகின்றது

ஆனால் அப்படிபட்ட பெரும் சக்தி கேவலம் மனித வாழ்க்கையில் ஏன் குறுக்கிட வேண்டும்? அப்படி இருக்குமா?”

ஐன்ஸ்டீனின் இந்த கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை,

அவர்தான் உலகின் பல சிக்கலான விஷயங்களை சொல்லி அதற்கு தீர்வும் சொன்னவர், அவருக்கு யார் பதில் சொல்வார்.

எப்படி இவ்வளவு அறிவு சாத்தியம் என கேட்டதற்கு அவர் சொன்னார்

“நான் நியூட்டன் விட்ட சில தவறுகளை திருத்தினேன், அதனால் புதுகொள்கைகளை சொன்னேன்

வருங்காலத்தில் என் தவறுகளை திருத்தி வேறு கொள்கைகளை வெளியிட இன்னொருவன் வருவான்,

இவ்வுலகில் அப்படித்தான் புதுபுது விஞ்ஞான தத்துவம் உருவாகும், இன்று என்னை கொண்டாடலாம், நாளை நான் பின்னுக்கு தள்ளபடுவேன் இது உலக நியதி”

எவ்வளவு தன்னடக்கமான பதில், நிறைகுடம் நீர்தளும்பல் இல் என்பது இதுதான்

அந்த மாபெரும் விஞ்ஞானியின் பிறந்தநாள் இன்று, மானிடகுலத்தின் பெரும் விஷயங்களை சாத்தியபடுத்திய, புதிய விஞ்ஞான வாசலை திறந்துவிட்ட அந்த அறிவுபிரபஞ்சத்திற்கு இன்று பிறந்தநாள்

அணுவில் தொடங்கி அண்டம் வரை அலசி சொன்ன பெரும்வித்தகனின் பிறந்தநாள், மானிடசாதிக்கு புது பாய்ச்சலை கொடுத்த ஒரு விஞ்ஞான அவதார நாள்.

மானிடர்களில் ஒருவராக அவரை நினைவுகூறலாம், வாழ்த்தலாம்

என்னை வருங்காலத்தில் ஒருவன் பின்னுக்கு தள்ளுவான் எனும் ஐன்ஸ்டீனின் வார்த்தை, ஒரு இந்திய விஞ்ஞானி மூலம் பலிக்கட்டும்