சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதியில் ஆயிரம் சிக்கல்

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதியில் ஆயிரம் சிக்கல், அப்படி வகையாக சிக்கியிருப்பவர் ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை

ராதாபுரம் தொகுதி அப்பாவு என்பவருக்கு குத்தகைக்கு விடபட்டிருந்தது, இதனை கணித்த கலைஞர் அவரை கட்சியில் சேர்த்தும்கொண்டார், ஆனால் கடந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் அப்பாவு

உதயகுமார் இரோம் ஷர்மிளாவிற்கு அன்றே தோற்று எச்சரிக்கை செய்தார், ஷர்மிளாதான் கவனிக்கவில்லை

இன்பதுரை வெற்றியினை தக்கவைக்க பெரும் போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயத்தில் கடும் உழைப்பினை கொடுத்தார்,

யார் வாட்சப்பில் பொதுபிரச்சினைக்கு தொடர்பு கொண்டாலும் உடனே பதில்கொடுத்தார், கலாய்த்தாலும் கண்டுகொள்ளவில்லை

அவருக்கும் நல்ல இமேஜ் தொகுதியில் வந்தது, பரவாயில்லை தொகுதியில் கவனம் செலுத்துகின்றார் எனும் நிலை வரும்பொழுதுதான் ஜெயா மறைந்தார்

அதன் பின் நடந்த காட்சிகளில் இன்பதுரை துன்பதுரையானார், டிசம்பர் 5ல் அழஆரம்பித்த அவருக்கு இன்னும் கண்ணீர் நின்றபாடில்லை

அவர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கவேண்டும் என சிலர் வாட்சப் செய்தி அனுப்பினர், இப்பொழுது தொகுதிபக்கம் வந்தபொழுது சிலர் பன்னீர் பக்கம் செல்க என மனுவே கொடுக்கின்றார்களாம்

பத்திரிகைகள் இந்த மனுவிஷயத்தை பெரிதாக்குகின்றன, அன்னாரோ கண்டுகொள்ளாமல் தொகுதியில் தன் செல்வாக்கினை தக்க வைக்க குடிநீர் பிரச்சினையினை சமாளித்துகொண்டிருக்கின்றார்

பன்னீர் பக்கம் செல்லுங்கள் என மனுகொடுக்க வந்தவனிடம் இவர் உள்ளம் திறந்து கொட்டியிருக்கலாம், எப்படி

” என்னை என்ன செய்ய சொல்கின்றீர்கள், அம்மாவின் விசுவாசி பன்னீர் பக்கம் செல் என்கின்றீர்கள், அவர் உண்மையான அம்மா விசுவாசி என கண்டீரா?

ஜெயா செத்தபின் தீபா, சந்திரன், பன்னீர், சசிகலா புஷ்பா என எத்தனைபேர் இங்கே வாருங்கள் என அழைக்கின்றார்கள், செல்ல முடியுமா?

கட்சிக்கு வெளியே இத்தனை கும்பல், கட்சிக்குள் நீ தினகரன் அணியா, சசிகலா அணியா, மகாதேவன் அணியா, போயஸ் தோட்டத்துகாரன் அணியா என ஆயிரம் கேள்விகள்

கட்சிக்குள்ளும் அங்கு போ,இங்கு போ என அழைக்கின்றார்கள், கட்சிக்கு வெளியேயும் அங்கு போ, இங்கு வா என்றால் நான் என்ன பைத்தியகாரனா?

நீர் போட்டது ஒருவோட்டு, வாரும் நான் எங்கும் செல்லவிலை. நாம் இருவரும் கட்சி தொடங்கலாம், சரியா. கட்சி தொடங்கி ஆட்சி பிடித்துவிடுவோம?

முன்பாவது வாக்குவித்தியாசம் 49 வோட்டுகள், இப்படி செய்தால் மொத்தமே 49 வோட்டுகள்தான் விழும்.

நான் அணி மாறினால் தொகுதி பிரச்சினை தீர்ந்துவிடுமா?

நான் முதலமைச்சர் அணியில் இருப்பதால்தான், இதோ இப்படி எல்லாம் ஓடி தொகுதியின் குடிநீர் பிரச்சினை முதல் பல பிரச்சினைகளை தீர்க்கமுடிகின்றது,

நான் பன்னீர் அணிக்கு சென்றுவிட்டால், உண்ணாவிரதம், எதிர்ப்பு, டெல்லி பயணம் என சுற்றிகொண்டே இருந்தால் தொகுதிக்கு என்ன செய்யமுடியும்? என்ன திட்டம் கொண்டுவரமுடியும்?

அப்படி சென்று தொகுதி சீரழிந்தாலும் என்னைத்தானே குற்றம் சொல்வீர்கள்?

நான் பன்னீர்பக்கம் சென்றுவிட்டால் பழனிச்சாமியிடம் ஏதும் தொகுதிக்கு கோரிக்கை வைக்கமுடியுமா? அப்படி நடந்தால் முறையிட நீர் என்ன கவர்ணாரா, இல்லை வந்து வணங்கி கண்ணீர் விட்டு அழ நீர் ஜெயா சமாதியா?

அதனால் 4 திட்டங்களை செய்ய இந்த அணியில் இருக்கின்றேன் போதுமா?, மீறி நான் பன்னீர் அணிக்கு செல்லவேண்டுமென்றால் அவரை முதலமைச்சர் ஆக்கிவிட்டு வருகின்றீர்களா? அதன் பின் பேசலாம்

கட்சிக்குள்ளும் அணி, கட்சிக்கு வெளியிலும் அணி, எல்லோரும் அழைத்தால் ஒரு எம்எல்ஏ என்ன செய்வான், எம்.எல்.ஏ ஆனது தவறா?

ஜெயா ஆன்மா என்னிடம் வந்து உண்மை விசுவாசி யாரென சொல்லட்டும், அதன் பின் பார்க்கலாம்..

ஆக ராதாபுரம் தொகுதி ம்க்களே, நான் இன்னும் இங்கு நீடித்திருப்பது தொகுதி நலனுக்காக, உங்களுக்காக‌

உங்களுக்கு பல திட்டங்களை பெற்றுதரும் நல்லவிஷ்யத்திற்காக, பன்னீருக்காக அரசை பகைத்து உங்களை நிர்கதியாக்க நான் விரும்பவில்லை

தொகுதி பிரச்சினையினை பேசுங்கள், எவ்வளவும் பேசுங்கள். கட்சி பிரச்சினையினை என்னிடம் பேசி என்னாக போகின்றது?

ஒன்றும் ஆகபோவதில்லை…

அம்மா இத்தொகுதியினை பற்றி கண்ட கனவினை எல்லாம் நான் நிறைவேற்ற வேண்டாமா? அம்மாவிற்காகதானே எனக்கு வாக்களித்தீர்கள்?

அம்மாவின் கனவினை நிறைவேற்றவே நான் உழைத்துகொண்டிருக்கின்றேன்

உங்களில் நான். உங்களுக்காகவே நான்”

இப்படி சொல்லியிருந்தால் அந்த மனு கொடுத்தவர் அப்பக்கம் நின்றிருப்பார்?,

அதன் பின் எவனாவது வாட்சப்பில் பேசுவான்..

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டி

அதாவது அன்னார் முதல்வர் பதவிக்கு நகர்கின்றார், இவர் வென்றுவிட்டால் பழனிச்சாமி தொகுதியில் அடுத்த இடைத்தேர்தல் எதிர்பார்க்கலாம்

தமிழகத்தில் இப்படி முதல்வருக்கான இடைத்தேர்தலை அதிமுக ஆரம்பித்து வைத்து வெற்றிகரமாக நடத்தியும் வருகின்றது

வாக்குகள் சிதறிகிடக்கும் வேளையில் , கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில் அன்னார் ஏன் இந்த விஷபரீட்சையில் இறங்குகின்றார் என தெரியவில்லை. தோற்றால் நிம்மதியாக சிங்கபூர் ஓடிவிடலாம் எனும் ஐடியாவும் இருக்கலாம்

ஆனால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என அவர் சொல்வதுதான் விசித்திரம்

இதனை சுருக்குங்கள்….

50 ஆயிரம், வாக்கு…50 ஆயிரம், வாக்கு என காதில் திரும்ப திரும்ப ஒலிக்கின்றதா?

ஆர்.கே நகர்வாசிகள் என்னது? வாக்குக்கு ஐம்பதாயிரமா? என கனவுகாணாமல் இருந்தால் நல்லது…

 

உனக்கு வேலையே இல்லையா, எப்படி எழுதுகிறாய் என என்ன நேரத்தில் கேட்க தொடங்கினார்களோ தெரியாது, அப்படித்தான் இன்பாக்ஸில் ஓடி வந்து கேட்டுகொண்டே இருந்தார்கள்.

அவர்கள் மனம் குளிரும்படி தலைநிறைய வேலை குவிந்துவிட்டது, அள்ளி கொடுத்துவிட்டார்கள், மூச்சுவிடுவது கூட சிரமம்

இப்பொழுது சந்தோஷமா?

எம்.ஆர் ராதா ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் “பாவி பயலுக..ஏதோ சும்மா 4 வரி எழுதுறதுக்குள்ள நீ சும்மாவே இருக்கியான்னு அடிக்கடி கேட்டானுக‌, அவனுகளா சாபம் போட்டனுக‌

இந்த பயலுக வயித்தேரிச்சல் சும்மா விடாது போலிருக்குடா எப்பா….”

ஆனாலும் ஒரு மனிதன் வேலை பற்றி ஒருகாலமும் அஞ்சக்கூடாது, சலிக்க கூடாது ஒரு நேரத்தில் பல வேலைகளை செய்பவனே திறமையான மனிதன் என கலைஞர் அன்றே போதித்திருக்கின்றார்.

சொன்னபடி செய்தும் காட்டினார்..

அவரை ரசித்தவர்களுக்கு எல்லாம் மகா சுலபம் ……..


பெரும் வறட்சியில் தமிழகம் …..

பெரும் வறட்சியில் தமிழகம் சிக்கியிருக்கின்றது, அரிசி விளைச்சலின்றி ரேஷனில் கூட இலவச அரிசி கொடுக்கமுடியா நிலை ஏற்பட்டிருக்கின்றது

1965களில் இம்மாதிரியான சிக்கலில்தான் தமிழகம் சிக்கி இருந்தது, அரிசி கட்டுப்பாடு, தட்டுப்பாடு எல்லாம் இருந்தது

அதனை அரசியலாக்கித்தான் திமுக பெரும் ஆட்டம் ஆடியது, காமராஜரும், பக்தவச்சலமும் கொடுங்கோலர்கள் எனும் அளவிற்கு அதன் வீரிய தாக்கம் இருந்தது

இன்றும் அதே சிக்கல் வந்தாகிவிட்டது, ஆனால் ஆட்சி யாருடையது?

மத்தியில் பாஜக, இங்கு அதிமுக‌

ஏதாவது ஒரு சத்தம் எங்கிருந்தாவது வரும் என நினைக்கின்றீர்கள்? திமுகவின் கலைஞரும் ஓய்ந்துவிட்டார், அவர் வாய்திறந்தாலும் உங்கள் ஆட்சியில் முப்போகம் விளைந்ததா? என கேட்டால் பதிலிருக்காது

காமராஜரும், பக்தவச்சலமும் செய்தால் அது தவறு, கொடுங்கோல் ஆட்சி, தமிழர் விரோதம்

ஆனால் மோடியும், பழனிச்சாமியும் செய்தால் அது நல்லாட்சி, தமிழர் நலன்காக்கும் ஆட்சி, அதனை பற்றியெல்லாம் யாரும் பேசமாட்டார்கள்

தமிழக விவசாயம் எவ்வளவு சீரழிந்துவிட்டது, எனும் அபாயம் தெரிகின்றது, நிலமை இன்னும் மகா சிக்கல் ஆகலாம்..

உண்மை வெளிவரும் முன் பொய் ஊரை சுற்றிவிடும் என்பார்கள், அப்படி ஊரை சுற்றிய பொய் இன்று அரிசி பஞ்சத்தோடு பல்லிளித்து அமர்ந்துவிட்டது

உண்மை வெளிவந்துகொண்டு இருக்கின்றது..


ஜெயலலிதா இருக்கும்போது பேசியிருக்கலாமே? கமல்ஹாசனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

ஜெயா இருக்கும்பொழுது இவரே பேசவில்லை, அட அமர்ந்தாவது இருந்தாரா என்றால் குப்புற ஜெயா காலில் விழுந்துகிடந்தார்

இதில் கமலஹாசன் பேசவில்லை என கேள்வி வேறு

முதலில் இவர் பேசினாரா?..

ஒருவேளை நான்தான் பேசமுடியாமல் இருந்தேன், நீராவது பேசியிருக்கலாம் இல்லையா? என கவலைபடுகின்றாரோ?


 நாளை தமிழக பட்ஜெட்

கடந்த பட்ஜெட்டில் கனிம மணல் வியாபாரத்தை அரசே ஏற்றுநடத்தும் என ஜெயா சொல்லியிருந்தார்

ஜெயா பல கனவுகளை கண்டிருந்தார், அவரின் அந்த கனிம மண் கனவில் மட்டும் மண் அள்ளிபோட்டுவிட்டு, மற்ற கனவினை நனவாக்க இந்த அரசு உழைக்கும் என நம்புவோம்


 

மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு……

மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும் – மத்திய அரசிற்கு சீமான் வலியுறுத்தல்

இதுவே காங்கிரஸ் ஆட்சியென்றால், தமிழனை டெல்லி கொல்கின்றது என குதியோ குதிப்பார், கலைஞர் ஆட்சி என்றால் அய்யய்யோ கலைஞரின் தமிழின துரோகம் பாரீர், தமிழனை காக்கமுடியாத பதவி அவருக்கு எதற்கு என பொங்குவார்

ஆனால் பாஜக அரசு என்றால் மத்திய அரசு என்பதோடு நிறுத்திகொள்வார், அதிமுக அரசு என்றால் மாநில அரசு, மாநில முதல்வர் என முணகுவதோடு சரி

இதனைத்தான் அங்கிள் சைமனின் தமிழுணர்வு என அவரின் அடிப்பொடிகள் சொல்லி கொண்டிருக்கின்றார்கள்..

சாதிய பாகுபாடற்ற இந்தியா வேண்டுமாம், அன்னல் அம்பேத்கர் கண்ட இந்தியா வேண்டுமாம், அன்னார் சொல்கின்றார்

பின் ஏன் பெரியார் தமிழர் அல்ல என இவர்கள் சொல்கின்றார்கள்?,

சாதிவாரியாக அன்றி தமிழனை அடையாளம் காணமுடியாது என சொல்வதும் இவர்களே, சாதி இல்லா இந்திய தேசியம் வேண்டும் என சொல்வதும் இவர்களே

பெரியார் தமிழின துரோகி என்பதும், பின் சாதி இல்லா இந்திய‌ சமுதாயம் வேண்டும் என்பதும் என்ன வகை?

ஏதாவது புரிகின்றதா?

இதுதான் அங்கிள் சைமனின் “தமிழ் தேசியம்”, அதாவது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டிசைனில் அதற்கு விளக்கம் சொல்லபடும்.

விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை….

 

விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை: : ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல்

காவேரி டெல்டா பொய்க்கும்பொழுதே இனி இலவச அரிசி சாத்தியமில்லை என யூகிக்கமுடிந்தது, அது நடந்தும் விட்டது

கங்கை நதிபுறத்து கோதுமை பண்டம், காவேரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம் என சொன்னான் பாரதி, கோதுமை கிடைத்துவிட்டது கொடுக்கத்தான் நம்மிடம் வெற்றிலை இல்லை, வெற்றிலை கொடுக்க காவேரியே இல்லை..

அரிசியினை வைத்து ஆட்சியினை பிடித்த கழக ஆட்சியில் தமிழக அரிசி உற்பத்தி சரிந்து, வடநாட்டு கோதுமை கொடுக்கின்றார்கள் என்பது பெரும் கொடுமை, அதுவும் 50 ஆண்டுகளுக்கு முன் அரிசியினை வைத்து ஆட்சி பிடித்த கழகங்கள், இன்று அதே அரிசியினை விளைச்சலை ஒழித்துவிட்டு கோதுமையினை விற்கவந்திருப்பது எதனை காட்டுகின்றது?

அரிசி வைத்து ஆட்சிபிடித்தார்களே ஒழிய, அரிசி விளைவிக்கும் திட்டம் ஒன்று கூட அவர்களிடம் இல்லை என்பதை காட்டுகின்றது,

இந்தி திணிப்பினை அடுத்து கோதுமை திணிப்பு நடத்தபடுகின்றது என யாராவது கிளம்புவார்களா?

தமிழனின் உணவினை அழித்து வடநாட்டு கோதுமையினை திணிக்கும் மத்திய அரசு ஒழிக என யாராவது கொடிபிடிப்பார்களா? என தெரியவில்லை…

ஆனாலும் இதற்கெல்லாம் அசந்துபோவதில்லை கழகங்கள், நாளையே கோதுமை கொடுத்த அரசு, அரிசி கொடுக்கமுடியா அரசு என பிரச்சினை வந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா?, இப்படி பிரச்சாரம் நடக்கும்

“தமிழர்களே, இது என்ன பிரச்சினை? பஞ்சாப் கோதுமையினை ரேஷனில் வழங்கும்பொழுது, பாசுமதி அரிசி கொடுக்க முடியாதா?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு 3 கிலோ பாசுமதி அரிசி கொடுப்போம் என தெரிவிக்கின்றோம் , கூடவே 10 ரூபாய்க்கு விலையில்லா பிராய்லர் கொடுக்கும் திட்டமும் உண்டு

எனவே நீங்கள் தினமும் சிக்கன் பிரியாணி உண்ணலாம்,

தமிழக பெருமக்களே வோட்டு எங்களுக்கு, முட்டை பிரியாணி உங்களுக்கு”


தேர்தல் முடிவுகள் மோசமாக அமையவில்லை: ராகுல் காந்தி

ஆமாம், மோசமாக அமையவேயில்லை, படு மோசமாகத்தான் அமைந்தது.