அந்த வீடியோ விவகாரம் பற்றி அங்கிள் சைமன் விளக்கம்

அந்த வீடியோ விவகாரம் பற்றி பெரும் விளக்கம் கொடுத்துகொண்டிருக்கின்றார் அங்கிள் சைமன்

வழக்கமாக காமெடி செய்பவர்தான், இப்பொழுது காமெடியின் உச்சகட்டத்திற்கு சென்றிருக்கின்றார், அவர் அரசியல் காமெடியின் உச்சமாக கூட இது இருக்கலாம்

கர்பிணிகள், இதய நோயாளிகள், வயிற்றுபிரச்சினை உள்ளவர்கள் மேற்கொண்டு படிக்கவேண்டாம், அது உங்களுக்கு ஆபத்தானது..

சென்றுவிட்டீரகளா?…..

அதாவது முன்பு அவர் கிறிஸ்தவ, இந்து தெய்வங்களை பேசிய பேச்சுக்களின் வீடியோக்களை வெளியிட்டு, அவர் பெயரை கெடுத்து சட்டமன்ற தேர்தலில் அவரை தோற்கடித்தார்களாம்

இப்பொழுது ஆர்.கே நகரில் பெரும் வெற்றிவாய்ப்போடு அவர்கள் இருக்கும் நேரத்தில் இம்மாதிரி போலி வீடியோக்களை வெளியிட்டு வெற்றிவாய்ப்பினை கெடுக்க சதியாம்

இவருக்கு பயந்து யார் இப்படி செய்திருப்பார்கள்? தேர்தலில் தோல்விபயம் உள்ளவர்கள்தானே செய்திருக்க முடியும்? அந்தளவு பயம் உள்ளவர்கள் யார் என அங்கிள் சொல்லவில்லை

காரணம் சொன்னால் பிரித்துவிடுவார்கள், அல்லது இவரை நிற்க வைத்து சுற்றி நின்று சிரிப்பார்கள்…

அந்த வீடியோவில் இருப்பது அவர் கட்சிக்காரர்கள் வைக்கும் பேனர் இல்லையாம், நன்றாக பார்க்கவேண்டுமாம் (அவரே பார்க்க சொல்கின்றார், கருமம்), அதில் அவரும் அவர் அண்ணன் பிரபாகரனும் அப்படி வழக்கமாக நிற்கமாட்டார்களாம்

அதாவது கட்சியினை அவமானபடுத்தும்படி எடுக்கபட்ட போலி வீடியோவாம், அந்த வீடியோவில் இருப்பவன் உடை அப்படியே இருக்கின்றதாம், (கர்மம் என்ன எதிர்பார்க்கின்றாரோ)

வீடியோவில் அந்த ஜோடிகள் இவர் கட்சி பேனரை விட்டு எங்கோ பின்னிகிடந்தார்களாம், பேனர் மட்டும் தெரிந்ததாம், ஆக இது திட்டமிட்ட சதியாம்

படம் எடுத்தவன் என்ன பெரும் ஒளிப்பதிவாளரா? அவன் என்ன சினிமா கேமராவிலா பின்னால் சென்று எடுக்க முடியும்?

இன்னும் சொன்னார் பாருங்கள்

இந்த பிரச்சினையினை சுழிய பிரிவு போலிஸ், அதாவது சைபர் கிரைமில் புகார் செய்வாவாராம்

சைபர் என்றால் 0 என இவரே முடிவு செய்துவிட்டார், இணையத்தை குறிக்கும்
Cyber க்கும், சுழியம் எனும் 0வினை குறிக்கும் சைபருக்கும் வித்தியாசம் தெரியாதா?

தமிழ்படுத்துகின்றேன் என இணைய Cyberரை, சுழியம் என அசால்ட்டாக சொல்கின்றார் அங்கிள், அவர் தமிழ் வளர்க்கும் லட்சணம் இப்படி இருக்கின்றது

Cyber Crime போலிசின் தமிழ் பெயர் சுழியம் (0) போலிசாம்..

இத்தோடு விட்டாரா?

என் பிள்ளைகளுக்கு ஒழுக்கம்தான் முக்கியம், நான் அப்படி செதுக்கியிருக்கின்றேன் என விளக்கம் வேறு

விஜயலட்சுமி எனும் நடிகையினை இவர் எப்படி செதுக்கினார் என்பது பற்றி நாம் கேட்க கூடாது

இது போலியான வீடியோவாம், இதனை செய்தவர்களை அவர் காரி உமிழ்த்து துப்பிவிட்டு தேர்தலில் வெற்றிகொடி நாட்ட போகின்றாராம்.

அவர் உமிழ்வது இருக்கட்டும், மொத்த தமிழகமும் அப்படித்தான் உமிழ்ந்துகொண்டிருக்கின்றது என்பது வேறு விஷயம்

இன்னும் பக்குவமடையவில்லை சைமன்

பொதுவாக எல்லா கட்சியிலும் இம்மாதிரி செய்திகள் வரும், வருண் காந்தி முதல் பெரிய கருப்பன் வரை சிக்குவார்கள்

ஆனால் என்றாவது அக்கட்சி தலைவர்கள் வந்து இப்படி விளக்கம் கொடுப்பார்களா? கொடுத்தால் என் தொண்டன் குதிருக்குள்ளோ குழிக்குள்ளோ இல்லை என்பது போல் ஆகிவிடாதா?

அங்கிள் சைமன் அதனைத்தான் செய்துகொண்டிருக்கின்றார்

இப்படி ஒருவரை தலைவனாக கொண்டு அலையும் அந்த பரிதாபம் மிக்க கூட்டத்தை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கின்றது

மொத்தத்தில் அங்கிள் கொடுத்திருக்கும் 12 நிமிட விளக்கத்தில் நிறைய ஹிஹிஹிஹி விஷயங்கள் இருக்கின்றன, சில இடங்களில் அவரே சிரித்திருக்கின்றார்

ஆனால் சுருக்கம் இதுதான்

இது தேர்தலில் சீமானின் வெற்றிவாய்ப்பினை பறிக்க நடக்கும் சதி, தமிழ்பிள்ளைகளுக்கு எதிரான வஞ்சக திட்டம், இதனை குறித்து சீரோ போலிஸ் அதாவது சைபர் கிரைமில் அவர் புகார் கொடுப்பார்.

இனி தேர்தல் முடிவு வரட்டும், அந்த வீடியோவால் தோற்றோம் என்பார்

இனி அடுத்த தேர்தலில் என்ன சொல்வார்?

அவருக்கு வாய்த்த தம்பிகள் சாதரணமானவர்களா?

நிச்சயம் ஏதாவது ஒரு வீடியோ வெளியிட்டு அவரை காப்பாற்றுவார்கள்….

 

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் …

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்க, அதற்கு ஆதரவாக மாணவர்களும் மெரீனாவில் கூடுவதாக செய்திகள் வருகின்றன‌

உண்மை நிலவரம் தெரியவில்லை

விவசாயி 24 மணிநேரமும் வேலையிலிருப்பவன், சொந்த வீட்டு விஷேஷத்தில் அவன் கலந்துகொள்வது மிக பெரிய விஷயம்,

அப்படிபட்ட விவசாயி டெல்லிக்கு சென்று பல நாட்களாக போராடுகின்றான் என்றால் சில விமர்சனங்கள் வரத்தான் செய்யும்

ராமேஸ்வரம் மீணவனுக்கு டெல்லி செல்ல இல்லாத வசதி, தமிழக ஏழை விவசாயிக்கு மட்டும் எப்படி சாத்தியம்?

மாநில அரசினை கண்டித்து சென்னையில் ஒரு எதிர்ப்பும் இல்லாமல், கண்டித்தால் மத்திய அரசினைத்தான் கண்டிப்போம் என கிளம்புவது பல சந்தேகங்களை கொண்டுவருகின்றது..

இவர்கள் டெல்லியில் குரலெழுப்புவதும் நாளொரு தலைவர்கள் அவர்களை பார்க்க செல்வதும், அப்பல்லோவில் ஜெயாவினை எல்லோரும் ஒவ்வொருவராக பார்க்க வந்த அதே காட்சிகள்

எங்கோ யாரோ விளையாடுகின்றார்கள், ஆடட்டும், அது இருக்கட்டும்

ஜல்லிகட்டு போராட்டம் என்பது வேறுமாதிரியானது

விவசாயிகள் பிரச்சினை தமிழக பிரச்சினை மட்டுமல்ல, அது இந்தியாவெங்கும் உள்ள பிரச்சினை, அதன் தன்மை வேறுமாதிரியானது.

“எடப்பாடி பழனிச்சாமி..” அரசினை கண்டிக்கின்றோம் என பெரும் போராட்டத்தை சென்னையில் நடத்திவிட்டு, நியாயம் கிடைக்கவில்லை டெல்லி செல்கின்றோம் என்றால் அது வரவேற்கதக்கது, நியாயமான போராட்டம்..

தமிழக அரசினை கண்டித்து ஒன்றும் சொல்லாத விவசாயிகள் டெல்லியில் சென்று தளைபிடிக்கும் மர்மம் புரியவே இல்லை..

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு என மெரீனாவிலும் மாணவர்கள் கூடினால் அது முன்பு திரண்ட பெரும் கூட்டத்தை சில சந்தேகங்களோடே பார்க்க தோன்றும்…

திமுக தமிழகத்துக்கு செய்ததுதான் என்ன ?

“நீ திமுகக்காரன் என ஒப்புகொள், சும்மா ஏன் நடிக்கின்றாய்..” என பலர் வந்து இன்பாக்ஸில் கொதிக்கின்றார்கள், கொதிப்பவர்கள் யாரென்றால் அம்மா கோஷ்டி, கொஞ்ச நேரம் பேசியாகியது

“எல்லா கட்சிக்கும் அடிப்படை கொள்கை, கோட்பாடு உண்டு, அதிமுகவின் கொள்கை என்ன?”

அது..கொள்கை…..ம்ம்ம்.. அதெல்லாம் உனக்கு எதற்கு?

சொல்லுங்கள், கொள்கை இல்லாமல் என்ன கட்சி? அதனை ஏன் நடத்தவேண்டும்? சீமானின் கட்சிக்கு கூட கொள்கை இருக்கும் பொழுது, உங்களுக்கு ஒன்று இல்லாவிட்டால் எப்படி?

ம்ம்..அப்படியா கேட்கின்றாய் திமுக என்ன கிழித்தது? அவர்கள் கொள்கை என்ன?

அவர்களுக்கு தமிழ் , தமிழ்நாடு உட்பட பல கொள்கைகள் உண்டு, ஆட்சிக்கு வருமுன்னே பேச்சு தமிழை மாற்றினார்கள், “ஸ்ரீமான்களே” அன தொடங்கிய பொதுகூட்டத்தை “பெரியோர்களே..” என மாற்றினார்கள், அபேட்சகர் என இருந்த பெயரை வேட்பாளர் என மாற்றினார்கள், ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாடு என மாநிலத்தை மாற்றினார்கள், “சத்யமேவே ஜயதே..” என்பதை “வாய்மையே வெல்லும்” என தமிழ்படுத்தினார்கள்..இன்னும்……

நிறுத்து…”அபேட்சகரா” அப்படி ஒரு வார்த்தை இருந்ததா?

ஆம், இருந்தது திமுகதான் அந்த பெயரை மாற்றி வழக்கொழித்தது..

நீ ஏமாற்றுகின்றாய், அப்படி எல்லாம் இல்லவே இல்லை

சரி, திமுக தொடங்கபட்டதும், அது போராடியதும், ஆட்சிக்கு வந்ததும் முழுக்க கொள்கையின்படியே, ஆட்சியிலும் அதனை செய்தார்கள், சரி அதிமுக ஏன் உதயமானது? அதன் கொள்கை என்ன?

நன்றாக கேட்டாய், கலைஞர் என்பவர் ஊழல்வாதி, சுரண்டல் பார்ட்டி அதனை எதிர்த்து நாங்கள் கட்சி கண்ட்டோம்

அப்படியா, ஆனால் இப்பொழுது ஊழல் வழக்கில் உள்ளிருப்பது யார்?

அதெல்லாம் பேசாதே, நாங்கள் இல்லாவிட்டால் கலைஞர் தமிழகத்தை நாசமாக்கியிருப்பார்

நாசமாக்க நீங்கள் போதாதா? அவர் எதற்கு?

இல்லை இல்லை, கலைஞரை எதிர்ப்பவர்கள் நாங்கள்

ஓஹோ, கலைஞரை எதிர்க்க ஒரு கட்சியா?

ஆம், முதலில் எம்ஜிஆர், பின் அம்மா, இன்று சசிகலா என எல்லோருக்கும் கலைஞரை எதிர்ப்பதுதான் அரசியல்.

அதுதான் உங்கள் அரசியலா? உங்கள் கொள்கை, கோட்பாடு எல்லாமே அதானா?

ஆம் அதேதான்.

அதாவது கலைஞர் இல்லையென்றால் நீங்கள் இல்லவே இல்லை , அப்படித்தானே

ஆமாம்..ஏய் இல்லை இல்லை, அவர் பொல்லாத சூனியக்காரர், தீயசக்தி.

திமுக தமிழகத்தில் பதித்திருக்கும் முத்திரை பெரிது, தமிழுக்கும், தமிழர் அடையாளம் நிலைக்கவும் அது செய்திருக்கும் விஷயங்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உண்டு, நீங்கள் என்ன செய்தீர்கள்?

நாங்கள்…ம்ம்ம்..நாங்கள்..

சொல்லுங்கள், எம்ஜிஆர் ஜெயா சமாதி எல்லாம் தமிழர் அடையாளம் அல்ல‌

அது…ஹ்ம்ம்ம்ம், நாங்கள் கலைஞரை எதிர்த்தோம், அவர் ஊழலை எதிர்த்தோம்

அவர் மேல் எந்த ஊழலை நிரூபித்தீர்கள்

ம்ம்…அது நாங்கள் இருப்பதால் அவர் ஊழல் செய்ய அஞ்சினார், இல்லாவிட்டால் நிறைய சுரண்டியிருப்பார்

அப்படியானால் அவர் ஊழல் செய்யவில்லையா?

நாங்கள் வலுவாக இருப்பதனால் பிற்காலத்தில் செய்ய முடியவில்லை.

அவரை தடுத்துவிட்டு, பெரும் ஊழலை நீங்கள் செய்துவிட்டு சிறைக்கு சென்றீர்கள் அப்படித்தானே

அது வேறு கதை, கலைஞரை எதிர்ப்போம் அதுதான் எங்கள் அரசியல்

அவர்தான் இப்பொழுது களத்தில் இல்லையே, இனி யாரை எதிர்ப்பீர்கள்??

முக ஸ்டாலினை,

இவர் இன்னும் ஆட்சிக்கே வரவில்லையே, பின் ஏன் எதிர்க்கின்றீர்கள்

அது திமுக ஊழல் கட்சி

அதாவது அது ஊழல் கட்சி என சொல்லிகொண்டே நீங்கள் ஊழல் செய்துகொண்டே இருப்பீர்கள் அப்படித்தானே

இல்லை திமுக ஊழல் கட்சி

திராட்சை தோட்டமும், சிறுதாவூர் கொடமுடி பங்களாக்கள் எல்லாம் என்ன? கலைஞரிடம் அப்படி ஒன்றும் இல்லையே

ம்ம்ம்.. திமுக ஊழல்கட்சி அதனை தடுப்போம்

நீங்கள் தடுத்தது தெரியாதா? கண்ணகி சிலை முதல் புதிய சட்டமன்ற கட்டிடம் வரை எத்தனை விஷயம் தடுத்தீர்கள்

அது..ஹிஹிஹீஹ்….ம்ம்ம்ம்

ஆக உங்களுக்கு கொள்கையோ, கோட்பாடோ ஒன்றுமே இல்லை அப்படித்தானே?

உண்டு கலைஞர் எதிர்ப்பு

அதெல்லாம் கொள்கையா? கலைஞரின் கொள்கைகளை எதிர்த்து அல்லவா அரசியல் செய்ய வேண்டும்?

ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும், தேடி பார்த்து சொல்கின்றேன்

எம்ஜிஆர் , ஜெயா சமாதிகளுக்கு கீழே சென்று தேடுங்கள், அங்கே கிடைத்தாலும் கிடைக்கும்

அதன் பின் மனிதரை காணவில்லை, தன் கட்சியின் அடிப்படை கொள்கை என்ன என தேட கிளம்பிவிட்டார் போலும், அது ஒருநாளும் கிடைக்காது, இருந்தால் தானே கிடைக்கும்..

ஆக தன் கட்சியின் கொள்கை என்ன என தெரியாதவன் எல்லாம் நீ எந்த கட்சி என அடுத்தவனை கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றான்..

 
 
 

I N D I A = Independent Nation Declared In August

17553773_10208768925435602_7381572220813777407_n.jpg

இந்தியா என்ற முழு நாட்டை உருவாக்கிவர்களும் அதற்க்கு

I N D I A = Independent Nation Declared In August

என்று பெயர் கொடுத்தவர்களும் பிரிடிஷ் காரர்கள் 

இப்படி சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்

எந்த மரத்தடியில் அல்லது மரத்திற்கு கீழ் இப்படி ஞானம் பெற்றார்கள் என தெரியவில்லை

அலெக்ஸாண்டர் காலத்திலே இந்தியா என்றொரு நாடு இருந்தது, அதாவது சிந்து நதிக்கு அப்பால் இருந்தது இந்தியா, (சிந்து என்பது மேல்நாட்டு மொழியில் இந்து) என அழைக்கபடும்.

அந்த நதியின் பெயராலேயே இந்நாடு இந்தியா என அழைக்கபடாயிற்று

அப்பகுதி மக்கள் இந்துக்கள் என்றே அழைக்கபட்டனர்

இந்தியா செல்கின்றேன் என்றுதான் அலெக்ஸாண்டர், பாகியான், யுவான் சுவாங், மார்க்கோ போலோ, இபின் பதுத்தா என பலர் வந்தனர்

கோரியும், கஜினியும், பாபரும் இந்துஸ்தானம் போகின்றோம் என சொல்லிதான் வந்தார்கள்

ஏன்? கொலம்பஸே இந்தியாவிற்கு செல்கின்றேன் என சொல்லி எங்கோ போய் நின்றான், அவன் சென்றது இந்தியா அல்ல என்றவுடன் அப்படியானால் அது மேற்கு இந்தியா என அவனே சொல்லிகொண்டான்

பிரிட்டிஷார் கிழக்கிந்திய கம்பெனி என்றுதான் பெயரே வைத்திருந்தனர்

முலலாய சாம்ராயம் இந்த இந்தியாவினை மொத்தமாக ஆண்டது, நாயக்க மன்னரும், சிவாஜியும் வீழ்ந்து வெள்ளையன் வரும்பொழுது இந்நாடு மொத்தமும் முகலாயரின் இந்துஸ்தானமாகாவே இருந்தது

எல்லா மன்னர்களும் முகலாயருக்கு நேரடியாக, அல்லது மறைமுகமாக‌ கப்பம் கட்டியபடி இருந்தனர்,

ஆட்சியினை கைபற்றிய வெள்ளையன் முகலாயருக்கு கொடுத்த வரிகளை எமக்கு தாருங்கள் என கேட்டுத்தான் போர்களே நடத்தினான்

அதன் அர்த்தம் என்னவென்றால் இது அன்று வெள்ளையன் வரும்பொழுதும் ஒரே தேசமாகத்தான் இருந்திருக்கின்றது..

பின்னர் பிரிட்டிஷ் இந்தியா என பெயரிட்டான்

அதாவது இந்நாட்டு பல ஆட்சியாளர்களால், பல பகுதிகளில் ஆளபட்டாலும் அவர்கள் மொத்தமாக இந்திய பகுதி என்றே அழைக்கபட்டது

உண்மை இப்படி இருக்க, I N D I A = Independent Nation Declared In August என்று பெயர் கொடுத்தவர்களும் பிரிடிஷ் காரர்கள் என சில பதர்கள் சொல்கின்றன‌

1700களில் இந்தியாவில் பிரிட்டிசாரின் கம்பெனி ஆளுகைக்கு வரும்பொழுது, மிக சரியாக 250 ஆண்டுகாலம் கழித்து ஒரு ஆகஸ்டில் நாம் சுதந்திரம் கொடுப்போம் என எழுதியா வைத்திருந்தான்?

ஒரு வாதத்திற்கு சொன்னால் கூட, ஆகஸ்டில் சுதந்திரம் வழங்கபடும் நாட்டிற்கா 5000 ஆண்டுகளுக்கு முன்பு பெயர் வைத்தார்கள்??

என் கனவு இந்தியா என அலெக்ஸாண்டர் வந்தபொழுது, ஆகஸ்டு எனும் மாதமே உலகில் கிடையாது..

எப்படிபட்ட கட்டுகதை இது

சொல்ல வருத்தமாக இருக்கின்றது, சில இஸ்லாமிய நண்பர்கள்தான் இந்த கட்டுகதைகளை பரப்புகின்றார்கள் எனும்பொழுது வருத்தம் கனக்கின்றது

நாட்டுபற்று என்பதும், நாட்டின் வரலாறு என்பதும் கொஞ்சமும் தெரியவேண்டாமா?

பிரிட்டனின் வரலாறு 1500ல் தொடங்கிற்று, அயர்லாந்து, ஸ்காட்லான்டு , இங்கிலாந்து, வேல்ஸ் எல்லாம் சேர்ந்து பிரிட்டன் ஆயிற்று

ஆனால் இந்தியா அலெக்ஸாண்டருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா என்றுதான் அழைக்கபட்டிருக்கின்றது.

இது பழம்பெரும் தேசம், சில புல்லுருவிகளுக்கு புரிய வாய்ப்பில்லை

I N D I A = Independent Nation Declared In August என்று பெயர் கொடுத்தவர்களும் பிரிடிஷ் காரர்கள் என எவனாவது சொன்னால், அவனை நான் மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.

(அவர்கள் கையில் கிடைத்தால் இந்திய வரைபடத்தினை உருட்டு கட்டையில் பதித்து, அடிக்கவும் தயார்..)

நீங்கள் இந்தியர்கள் என்றால், சேர்ந்து கண்டியுங்கள்

 
 

பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து …

17499581_10208768846153620_5227858137521465652_n.jpg

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசிமூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிரம்பின் நிலை அந்தோ பரிதாபம், ஊருக்குள் தலைகாட்ட முடியவில்லை, எங்கும் எதிர்ப்பு, கண்டன ஊர்வலம்.

எவ்வளவு திட்டங்களை(!) சொன்னாலும் சபையில் திருப்பி அவர் முகத்தில் எறிந்துவிடுகின்றார்கள்.

சரி வெளிநாட்டுக்கு செல்லலாம் என்றால் எந்த நாடும் வரவேற்க தயாரில்லை, அமெரிக்க அடியாட்களில் ஒன்றான பிரிட்டன் வர கூட கடும் எதிர்ப்பு

ஜெருசலேம் தூதரகம் என அவர் அறிவித்ததற்கு பிரான்ஸ் கூட திட்டிவிட்டது.

சீனா பக்கம், அதன் கூட்டாளிகள் பக்கம் செல்லவே முடியாது..

இஸ்லாமிய நாடுகள் கடும் கோபத்தில் இருக்கின்றன‌

மனிதர் நொந்து போய்விட்டார், இந்நிலையில்தான் மோடி ஜூன்மாதம் அமெரிக்கா செல்ல இருக்கின்றார்

அப்படி தன்னை பார்க்கவும் ஒரு பெரும் நாட்டின் பிரதமர் வருகின்றார் எனும் சந்தோஷத்தில் கண்களை துடைத்துகொண்டார் டிரம்ப்

தான் ஒரு நாடு கூட செல்லமுடியாத நிலையில் இருக்க, இந்த மோடி எப்படி எல்லா நாட்டிற்கும் செல்கின்றார் எனும் ஆச்சர்ய பொறாமையும் டிரம்பிற்கு இருக்கலாம்

யாரும் அழைத்து பேசாத நிலையில் தனிமைபட்ட டிரம்ப், போனில் அழைத்து மோடியிடம் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார், அவ்வளவுதான் சொல்லமுடியும், அமெரிக்க ஜனாதிபதி அழவா முடியும்?

அப்படி வாழ்த்திய டிரம்பிடம் அமெரிக்காவில் இந்தியர்கள் கொல்லபடுவது பற்றி மோடி ஏதும் கண்டித்தாரா? என நாம் கேட்க கூடாது..

பாகிஸ்தான் சுட்டால்தான் மோடி கொந்தளிப்பார், சிங்களனோ அமெரிக்கனோ இந்தியர்களை சுட்டால் கண்டுகொள்ளமாட்டார், இது வேறு விஷயம்..

அது இருக்கட்டும், இன்னும் டிரம்ப் என்ன பாடெல்லாம் பட போகின்றாரோ?….

போகிற போக்கினை பார்த்தால் டிரம்ப் நமது தமிழிசைக்கு கூட போன் செய்யும் காலம் வந்துவிடும் போலிருக்கின்றது..

 
 

தாதுமணல் ஏற்றுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை

17554518_10208768438303424_9069691408292805287_n.jpg30 ஆண்டுகளாக இல்லாத தடை, அதுவும் தாதுமணல் தொழிலுக்கு அரசு தடைவிதித்த பின்னும் ,அதன் ஏற்றுமதிக்கு இல்லாத தடை இப்பொழுது விதிக்கபட்டுவிட்டது

விவகாரம் எங்கோ இடிக்கின்றது

தமிழகத்தில் எத்தனையோ இயற்கை கொள்ளைகள் நடக்க, தாது மணலை குறி வைத்து அடிக்கின்றார்கள்,இந்த வழக்கில் மாநில அரசு பட்டும் படாமலும்தான் பதில் சொல்லியிருக்கின்றது. ஆனால் எதிர்தரப்பு கடுமையாக நிற்கின்றது

எதிர்தரப்பு என்பது யார்? தடை கோரியவர்கள்

கொஞ்சம் ஆழ நோக்கினால் பல விஷயங்கள் புரியும்

தாது மணல் தொழிலை முடக்கியே தீருவது எனும் முடிவு எங்கோ எடுக்கபட்டுவிட்டது, நிச்சயம் அது மாநில அரசின் திட்டம் அல்ல.

மாநில அரசு எதற்கோ “”தாது மணலை அரசு ஏற்று நடத்தும்” என அறிவித்தது தவிர, அதனை தொடங்கும் திட்டமெல்லாம் அதனிடம் அப்போதைக்கு இல்லை..

டாஸ்மாக்கையே அரசுடமையாக்கிய தமிழக அரசு நினைத்திருந்தால் என்றோ தாதுமணலை எடுத்து நடத்தியிருக்கும்,

ஆனால் 1980களில் தாது மணலை அரசுதான் தொடங்கியது, கையினை சுட்டதால் விட்டுவிட்டது, பின்பு பல தனியார் கம்பெனிகள் இறங்கி முக்காடு போட்டன‌

வைகுண்டராஜன் மட்டும் தூள்பறத்தினார், அது எப்படி? என்ன விஷயம்? எப்படி அவரால் மட்டும் முடிந்தது என்பது இன்றுவரை புரியாத புதிர். எத்தனையோ வெளிநாட்டுப் எம்பிஏக்கள் தோற்ற தொழிலில் 5ம் வகுப்பு தாண்டாத பாமரன் சாதித்தார்.

வைகுண்ட ராஜன் நல்லவர் என்றோ, மகா உன்னதமானவர் என்றோ சொல்லமுடியாது, ஆனால் அந்த தொழிலில் அவர் கொடிகட்டி பறந்தார் என்பது உண்மை.

வெறும் கிராமத்தானுக்கு இந்த இல்மனைட், ரூமைல்ட் எல்லாம் எப்படி புரிந்தது? எப்படி உலகெல்லாம் அவனால் விற்க முடிந்தது என்பதெல்லாம் பெரும் விஷயங்கள்..

விஞ்ஞான , வியாபார . எந்திர மூளை கலக்காத ஒருவரால் அந்த தொழிலில் வெற்றிபெறுவது சாத்தியமில்லை, கூடவே அரசியல் மூளையும் வேண்டும்..

நொடியில் ஏமாற்றிவிடும் உலகில், அதுவும் சர்வதேச வியாபார‌ அவரால் மட்டும் எப்படி நிலைத்து நிற்க முடிந்தது என்றால் அது ஆச்சரியம்தான்..

எந்த தொழில் அரசாங்க தொடர்புடையதோ அதில் முதலில் அதிர்காரிகளும் பின் கட்சியினரும் புகுந்துவிடுவார்கள், அவர்களுக்கு சம்பாதிக்க சம்பந்தபட்டவன் கூடுதலாக சம்பாதிக்கவேண்டும்

அது சந்தணமரம் என்றால் கூடுதல் வெட்டவேண்டும், கிரானைட் கல் என்றால் நிறைய இடம் தோண்டவேண்டும், அது தாது மணல் என்றால் நிறைய அள்ளியாக வேண்டும்

வைகுண்டராஜனும் அதில் சிக்கிகொண்டார்

இது பற்றி பேசினால் லியாகத் அலிகான் அளவிற்கு வசனம் எழுதவேண்டும்

இப்போதைய விவகாரம் தாதுமணல் முடக்கம் பற்றியது

ஆக மாநில அரசினையும் மீறி தாதுமணல் தொழில் முடக்கபடுகின்றது, கட்டட இடிப்பு, குடோன் சோதனை, உயர்நீதிமன்ற தடை எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன.

இவை எல்லாம் எதனை சொல்கின்றன‌

எமது யூகம் சரியாக இருந்தால் இப்படி நடக்கலாம்

அதாகபட்டது ஆற்றுமணலையே விடாத காலம் இது, தங்க சுரங்கமான தாதுமணலை எல்லாம் அப்படியே விடமாட்டார்கள்.

வைகுண்டராஜனை அந்த தொழிலிருந்து அப்புறபடுத்திவிட்டால், பின் வேறு ஏதாவது வடக்கத்திய நிறுவணங்கள் வரலாம்

கொஞ்சம் கொஞ்சமாக அவை விஸ்வரூபமெடுக்கலாம்

டாட்டா, வேதாந்தா என ஏகபட்ட நிறுவணங்கள் காத்துகொண்டிருக்கும் ஏரியா அது,

அதுவும் டாட்டா ஏற்கனவே அடிபட்ட பாம்பு

ஆக தாது மணல் வியாபாரம் என்பது நிற்கபோவதில்லை, மாறாக வைகுண்டராஜனிடம் இருந்து பிடுங்கி இன்னொரு கம்பெனியிடம் ஒப்படைக்கும் வேலை நடக்க தொடங்க இருக்கின்றது

ஏன் இவ்வளவு காலமும் இல்லாத மாறுதல் இப்பொழுது?

மத்திய அரசு அவ்வளவு பலமாயிற்று, மாநில அரசு அதன் காலில் விழுந்து கிடக்கின்றது,

மத்திய அரசுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் எல்லாம் தமிழகத்தில் எளிதாக கால்பதிக்கும் நிலை..

தாது மணல் தொழில் கைமாற அச்சாணி போட்டிருப்பது தெரிகின்றது, தெரியாமல் எத்தனை வடக்கத்திய நிறுவணங்கள் தமிழகத்தில் பாய்கின்றனவோ தெரியாது.

தீரனின் அந்த பேச்சு கண்டிக்கதக்கது…

தொலைகாட்சி விவாதமொன்றில் அதிமுகவின் தீரனின் பேச்சு நிச்சயம் சர்ச்சையானது

குற்றவாளி என தண்டிக்கபட்டு சிறையில் இருப்பவர் உங்கள் தலைவியா என்றால், கனிமொழியும் ராசாவும் உல்லாசபயணம் சென்றார்களா? என்கின்றார் தீரன்

மனிதர் என்ன அடிப்படையில் பேசுகின்றார் என்றே தெரியவில்லை

ஜெயா சசிகலா வழக்கு 18 ஆண்டுகள் இழுத்தடிக்கபட்டு, குன்ஹாவால் தீர்பிடபட்டு பின் டெல்லி கோர்ட்டிலும் நிரூபிக்கபட்டிருக்கின்றது

அதாவது அவர்கள் குற்றவாளிகள் என இரு நீதிமன்றங்கள் அறிவித்துவிட்டது, உள்ளே தள்ளியாயிற்று

கனிமொழி, ராசா இருவரும் கைது செய்யபட்டார்கள், ஆனால் இன்னும் குற்றசாட்டினை நிருபிக்கமுடியவில்லை, குன்ஹா போன்றே மிக நேர்மையான நீதிபதியான ஒபி ஷைனி கேட்கும் ஆதாரங்களை சிபிஐயினால் திரட்ட முடியவில்லை

ஒரு ஆதாரமும் இன்றியா வழக்கு தொடர்ந்தீர்கள் என பலமுறை ஷைனி கண்டித்துகொண்டே இருக்கின்றார்

ஜெயா வழக்கினை ஜெயா தரப்பு இழுத்தது என்றால்,கனிமொழி வழக்கினை இழுத்துகொண்டிருப்பது சிபிஐ தரப்பு

இது ஜனநாயக நாடு, யாரும் யார் மீதும் குற்றம் சுமத்தலாம், பழிக்கலாம், ஆனால் நீதிமன்றம் என்ன சொல்கின்றதோ அதை பொறுத்துதான் முடிவு

அதனால்தான் நீதிமன்ற வழக்கில் இருக்கும் விஷயங்களை பேச கூடாது என்பது பொதுவிதி

குற்றம் சாட்டபட்டவர் என்பது வேறு, குற்றவாளி என தீர்ப்பிடபட்டவர் வேறு

குற்றம் சாட்டபட்டவர் வெளியில் வந்தால் களங்கம் துடைக்கபட்டுவிடும், ஆனால் குற்றவாளி என சிறையில் தள்ளபட்டவர் ஒருநாளும் அந்த களங்கத்தை துடைக்க முடியாது,

இது தெரியாமல் அதிமுக தீரன் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார்

இவ்வளவிற்கும் இவர் பேராசிரியராம், உருப்படுமா?

தீரனின் அந்த பேச்சு கண்டிக்கதக்கது, ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்பு