ரஜினி ஜிஎஸ்டி பற்றி கருத்து சொல்லாதது ஏன் : டி.ஆர் சீற்றம்

ரஜினி ஜிஎஸ்டி பற்றி கருத்து சொல்லாதது ஏன் : டி.ஆர் சீற்றம்

அட போங்க சார், அந்த ரஞ்சித் எடுத்த படத்தினை ரஷ் போட்டு பார்த்துவிட்டு மனிதர் அரண்டுவிட்டார் போல, அத்தோடு அமெரிக்காவிற்கே ஓடிவிட்டார், படம் அப்படி ரஜினியே அஞ்சும் படி வந்திருக்கலாம்

அவர் எதில் அய்யா பேசினார்? அணுவுலை முதல் கதிராமங்கலம் வரை ஏதாவது பேசினாரா? பேசி ஒன்றும் ஆகாது என்பது அவருக்கு தெரியாதா?

சமீபத்தில் தமிழக மக்களை அச்சுறுத்திய AAA படம் பற்றி கூட சொன்னதில்லை, இதில் ஜிஎஸ்டி பற்றி அவர் ஏன் சொல்லவேண்டும்?

அவருக்கு தன் ரசிகர்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது, எத்தனை பெரும் வரி என்றாலும் தனக்காக தன் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் எனும் பெரும் நம்பிக்கை இருக்கின்றது, அவர் அஞ்சவில்லை

டி.ஆருக்கு அப்படி நம்பிக்கை ஏதுமில்லை, அதுவும் சமீபத்தில் மகனை பார்த்தபின் கடுப்பு ஏறி இருக்கலாம், அல்லது மதுரை மைக்கேலை பார்த்து தன் மீதே கோபம் வந்திருக்கலாம்

மனிதர் சீறிகொண்டிருக்கின்றார்

சிம்பு எங்களுக்க்காக படம் எடுக்கின்றார்

சிம்பு எங்களுக்க்காக படம் எடுக்கின்றார், அதனால் வேறுயாரும் சிம்பு படத்தினை விமர்சிக்க தகுதியற்றவர்கள் : சிம்பு சிகாமணிகள்

அதனை சிம்பு தன் சொந்த காசிலா எடுக்கின்றார்? எவன் பணத்தையோ எடுத்து உங்களுக்காக படமெடுப்பார், நீங்கள் மட்டும் பார்க்க வேண்டுமா?

சிம்புவினை விட அவரின் ரசிகர்கள் ஆபத்தானவர்கள், இவர்களை கட்டி வைத்து அடித்தால் சிம்பு தானாக திருந்துவார்

அப்படியே ரஜினி ரசிகர்களையும் போட்டு சாத்தினால் ரஜினியும் அரசியல் ஆட்டம் காட்டாமல் அமைதியாக இருப்பார்

ஜிஎஸ்டி வரி நாட்டிற்கு அவசியமான ஒன்று

No automatic alt text available.

 

இந்த ஜிஎஸ்டி வரி நாட்டிற்கு அவசியமான ஒன்று, ஒரு இந்தியனாக இதனை வரவேற்கின்றோம், கூட்டணி அரசாங்கத்தால் இதனை நிச்ச்யம் கொண்டு வந்திருக்க முடியாது, அது இது என இழுத்து கிடப்பில் போட்டிருப்பார்கள்

மிக தனிபெரும்பான்மையுடன் திகழும் பாஜக அரசு இதனை செய்திருக்கின்றது, நாட்டிற்கு தேவையான விஷயங்களை செய்யும்பொழுது பாராட்டத்தான் வேண்டும்

இதன் பலம் நிச்சயம் நல்லதாக இருக்கும், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், அதற்குள் புதிய இந்தியா பிறந்துவிட்டது, தவழ்கின்றது, பல் முளைத்துவிட்டது, நடக்க தொடங்கிவிட்டது என்பது எல்லாம் ஓவர்

இதனை எதிர்க்க ஒன்றுமே இல்லை, அரசு என்ன செய்தாலும் அதனை எதிர்க்க ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும், அது கத்திகொண்டே இருக்கும், ஒன்றும் செய்ய முடியாது

அவர்களை விட்டுவிடலாம்

ஜிஎஸ்டி என விதித்ததோடு அரசு தன் கடமையினை செய்கின்றது, மக்களுக்கும் பொறுப்பு உண்டு. எந்த பொருள் வாங்கினாலும் அதற்குரிய பில்லையும் சேர்த்து வாங்க வேண்டும்

வியாபாரிகளில் சில குதர்க்கர்களும் உண்டு, பில் தராமல் வேறு சலுகைகள் தந்து ஏமாற்றபார்ப்பார்கள், அப்படி வாங்கினோம் என்றால் அது தேசதுரோகம், அங்கு எப்படி ஜிஎஸ்டி வசூலாகும்

பொறுப்பு எல்லோருக்கும் உண்டு, இது எல்லா நாடுகளிலும் உள்ள விஷயம், அதனை நாமும் செயல்படுத்துகின்றோம், எல்லா நாட்டு மக்களை போல நாமும் பொறுப்பாக நடந்தால் ஒழிய நமக்கு பலன் இல்லை

இந்த வரி எங்கு செல்லும்? மோடி தூக்கி கொண்டு ஓடுவாரா? அல்லது அருண்ஜெட்லி அதன் மேல் புரள்வாரா? எங்கும் செல்லாது

மாறாக சாலை, குடிநீர், கல்வி, இதர வசதிகள் என நமக்கே திரும்பவரும், அதாவது நம் பணம் எங்கும் செல்லாது, நமக்கே வசதிகளாக திரும்பும்

கொஞ்சம் கண்மூடி சிந்தியுங்கள், இந்நாட்டில் கல்வி, சாலை, மருத்துவம், பாலம், தொலை தொடர்பு, நூலகம் என எவ்வளவு வசதிகளை அனுபவிக்கின்றோம், இவை எல்லாம் எவ்வளவு செலவு பிடிக்கும் விஷயங்கள்?

நாமெல்லாம் பாதுகாப்பாக தூங்க, வேலை செய்ய, சண்டையிட, அல்லது சுதந்திரமாக ஏதோ இந்நாட்டில் செய்ய எல்லையில் பாதுக்காக்கும் வீர்களுக்கான செலவு என்ன?

உள்ளூரில் தெருசண்டை முதல் செயின் களவு அழைக்கும் காவல் துறைக்கான செலவு என்ன? அவர்களின் உபகரங்களுக்கான செலவு என்ன?

அதாவது நமக்கான பெரும் பாதுகாப்பு செலவு ஏராளம், நம் பணம் அப்படித்தான் நமக்கே பல வழிகளில் திரும்ப வரும், நமக்கே தெரியாமல் அனுபவத்துகொண்டுதான் திட்டிகொண்டிருக்கின்றோம்

இந்த வரிமுறை மூலம் அரசு வருமானம் பெருகினால் இன்னும் தரமானதாக கொடுக்க முடியும், அரசு அதனைத்தான் செய்கின்றது

மோடிக்கும் நமக்கும் என்ன வாய்க்கால் தகறாறா? ஒன்றுமிலை. அவர் இந்த நாட்டின் பிரதமர். அவர் நல்லது செய்யும் பொழுது, இந்நாட்டிற்கு நல்ல விஷயங்களை அவர் செய்யும்பொழுது பாராட்டியே தீரவேண்டும்

ஒரே நாடு, ஒரே வரி என்பதில் என்ன தவறு இருக்க முடியும்? ஒரு நாட்டுக்கு ஒரே கரன்சி எனும் பொழுது ஒரே வரி இருப்பதுதான் முறை, அதனைத்தான் செய்கின்றோம்

இந்த சீர்திருத்தம், காலத்திற்கு ஏற்ற சீர் திருத்தம். ஆனால் எல்லாவற்றையும் கட்சி, அரசியல் என பார்க்கும் இந்த பாழ்பட்ட அரசியலில் இது சிக்குவதை கண்டிக்கலாம்

இதனை கண்டிப்பாக ஏற்றுகொள்ள வேண்டும் அதுதான் தேசபக்தி, தேச கடமை

இதில் இந்த சினிமாக்காரர்களுக்கு கோபமாம், திங்கள் முதல் அடைக்க போகின்றார்களாம்,

இவர்களுக்கு என்ன வந்தது? மக்கள் சினிமா நன்றாக இருந்தால் வந்து பார்க்க போகின்றார்கள், ஜிஎஸ்டி வரியினால் சினிமாவிற்கு வரமாட்டோம் என எவன் இவர்களிடம் சொன்னான்?

பாகுபலி போன்ற படங்கள் வசூலில் குறைந்ததா, அல்லது போன்ற படங்கள் இலவச காட்சி என்றாலும் யாரும் வந்தார்களா?

இல்லை நிச்சயமாக இல்லை

மாறாக இவ்வளவு காலமும் ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கின்றார்கள், இந்த துல்லியமான வரிவிதிப்பில் இவர்கள் சிக்கி கொள்ள போகின்றார்கள், அதனால் தான் இந்த கொதிப்பு அடைப்பு

இது என்ன மக்களுக்கு உணவு வழங்கும் வயல்களா? அல்லது மருத்துவ மனைகளா அல்லது ராணுவத்தினருக்கான பணிமனையா?

இவர்கள் அடைப்பதனால் என்ன ஆகும்? இந்த தேசம் இயங்காதா? ஸ்தம்பித்துவிடுமா?

அவகள் பூட்டினால் அரசு அதற்கு மேல் இன்னொரு பூட்டு போட்டு பூட்டவேண்டும், ஆம் அரசு உடமையாக எடுத்து நடத்தலாம்

அரசு எத்தனை கல்வி நிலையங்களை, பல்கலை கழகங்களை எடுத்து நடத்துகின்றது,

அட கல்வி நிலையம் என்ன? சாராய வியாபாரமே நடத்துகின்றது, இந்த திரையரங்குகளை எடுத்து நடத்தினால் என்ன?

சும்மா எடுத்து நடத்த்தட்டும், என்ன குறைந்துவிடும், அரசு திரையரங்களாகட்டும்..

விருப்பம் இருந்தால் திறக்கட்டும் இல்லாவிட்டால் மொத்தாமாக தலைமுழுகட்டும், நாட்டுக்கு நிச்சயம் நல்லதுதான்.

ஜிஎஸ்டி முறை மிக துல்லியமாக வசூலிக்கபடவேண்டும், உணவு மருந்து சில ஆலய விவகாரம் தவிரம் எதற்கும் விதிவிலக்கு கூடாது

குறிப்பாக இந்த நித்தி, ஜக்கி, பால் தினகரன் வகையறாவிற்கெல்லாம் 80% ஜிஎஸ்டி என போட்டாலும் ஆதரிக்க இத்தேசம் தயார், அப்படித்தான் அந்த இம்சைகளிடமிருந்து இத்தேசம் பலன் பெற வேண்டும்

இத்தேசத்திற்கு அவர்கள் அப்படியாவது உபயோகமாக இருக்கட்டும்

உண்மையில் சில அற்ப விஷயங்களுக்காக சிலர் சொல்வார்கள், சொல்ல கூடாத இடத்தில் சொல்வார்கள், நீ இதனை ஏற்றுகொள்ளாவிட்டால் நாட்டினை விட்டு வெளியேறு என்பார்கள்

இப்பொழுது இதனை ஏற்றுகொள்ள மறுப்பவனிடம் தான் இதனை சொல்ல வேண்டும், இங்கு அப்படி சொல்ல வேண்டிய இடம் இதுதான்

எல்லா நாடுகளிலும், எல்லா முன்னேறிய நாடுகளிலும் வரி வசூல் அப்படி, பெரும் தொகையில் வசூலித்து பிழிந்துதான் அந்நாடுகள் ஜொலிக்கும், ஜிஎஸ்டியினை எதிர்ப்பவனை அப்படித்தான் சொல்ல வேண்டும், நாட்டை விட்டு வெளியேறினால்தான் அவனுக்கு இந்நாட்டின் அருமை புரியும்

இது சொல்ல வேண்டிய இடம் என்பதால் சொல்லலாம், இது இந்துக்கு ஒரு வரி, கிறிஸ்தவனுக்கும் முஸ்லீமுக்கும் ஒரு வரி, இந்தி பேசுபவனுக்கு ஒரு வரி, பேசாதவனுக்கு இன்னொரு வரி என்றல்ல, எல்லா இந்தியனுக்கும் ஒரே வரி

ஒரே கரன்சி, ஒரே வரி அவ்வளவுதான் விஷயம்

இந்த திட்டத்தை வரவேற்கின்றோம் , இத்தேசம் செழிக்க இப்படிபட்ட நல்ல விஷயங்களை ஆதரிப்பதே தேசகடமை, தேச பக்தியும் கூட‌

வந்தே மாதரம்..


ஜிஎஸ்டி நிறைவானதல்ல, மிகப்பெரிய தவறுகள் நிரம்பியது: ப.சிதம்பரம் கடும் சாடல்

அதற்கு என்ன அய்யா? இன்னும் இரு வருடத்தில் உங்கள் ஆட்சிதானே, அப்பொழுது அந்த தவறுகளை சரி செய்துவிட்டால் முடிந்து பிரச்சினை


எதும் சிறிய சலசலப்பு என்றாலும் “ஹேய்..ஹோய்ய்” என‌ சதிராட்டம் ஆடுவார் தமிழிசை, கிரிக்கெட் கிரவுண்டில் ஆடும் சியர்ஸ் கேர்ள்ஸ் அப்பொழுது நினைவுக்கு வருவார்கள்

இப்பொழுது இந்த வானதி சீனிவாசன் பால சுப்பிரமணியன் பிரச்சினை பெரிதாக வெடித்திருக்கும் நிலையில், அமித்ஷா பெயர் எல்லாம், வானதி மீது பெரும் சர்ச்சைகள் எல்லாம் வரும் நிலையில் அம்மணியினை காணவில்லை

சியர்ஸ் கேர்ள்ஸ் பாத்திரத்திலிருந்து அம்மணி சாமியார் மடத்து மவுன சீடராகிவிட்டார்

“அவர் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாருடா
அந்த எரிமலையில் ஈரதுணி போட்டதாருடா..”


சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ்

சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ்

சிவன் மதுரையில் ஆடாத திருவிழையாடலா? அகத்தியன் முதல் பல சித்தர்கள் அவரோடு தமிழில் பேசாத பேச்சா?

நக்கீரன் முதல் எத்தனை புலவர்கள் அவரோடு வாதிட்டனர், அவர்கள் எல்லாம் லத்தீனிலா பேசினார்கள்??

இவரை எல்லாம் அந்த மதுரை ஆதீனத்தை வைத்து அடிக்க வேண்டும், அவர் கனவில் கூட சிவன் தமிழில்தான் பேசினார்

மொழிகளை , இனங்களை, மனிதர்களை, விண்வெளிகளை கடந்தவன் அல்லவா அந்த பரம்பொருள்??

இது கூட தெரியாதவன் எல்லாம் துறவி, அவன் ஒரு சிவன் சிலையினை செய்வான், அதற்கு அகில இந்தியாவும் வந்து குனியும்..

முதலில் இவனின் வருமானத்திற்கு ஜிஎஸ்டி வரி போட்டால், அரசுக்கு பட்ஜெட்டில் துண்டே விழாது..

 
 
 

இந்த இலுமினாட்டி என்றால் என்ன?

No automatic alt text available.அவ்வப்போது வரும் புலம்பல்தான், இப்பொழுது விஜய் டிவியில் கமலஹாசன் ஒற்றைகண் முன்னால் தோன்றுவதில் அது மறுபடியும் ஒப்பாரியாக்கபடுகின்றது,

அதேதான் இது இலுமினாட்டி சதி, விஜய் டிவி இலுமினாட்டி, கமலஹாசன் இலுமினாட்டி என சிலர் தொடங்கிவிட்டார்கள்

இந்த இலுமினாட்டி என்றால் என்ன?

அன்றைய ஐரோப்பா மக்களை சிந்திக்கவோ, யோசிக்கவோ விடவில்லை. பிரபுக்கள் ஒரு பக்கமும், அதற்கு மேல் கிறிஸ்துவ மதவாதமும் மக்களை அடக்கி வைத்தன, அவர்களை சிந்திக்கவே விடவில்லை.

இந்நிலையில்தான் அவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்க சிலர் ரகசியமாக இயங்கினார்கள், லத்தீன் மொழியில் இலுமினாட்டி (Illuminate) என்றால் ஒளிகொடுத்தல் என்று பொருள், ஆங்கிலத்தில் அது (Enlighten) என வரும்

புரட்சி என்பதே அர்த்தமில்லாமல் கோமாளிகளுக்கு எல்லாம் புரட்சி தலைவன் என பட்டமழிக்கும் தமிழகத்தில் , அறிவு இயக்கம் என சொல்லபடும் இலுமினாட்டி , மிக மர்மமான கும்பலானதில் என்ன ஆச்சரியம்?

உண்மையில் இலுமினாட்டி என்றால் பகுத்தறிவு இயக்கம் என பொருள், அப்படியானால் இன்றைய திமுகதான் உண்மையான இலுமினாட்டி,

இதனை சொன்னால் ஒப்புகொள்வார்களா? மாட்டார்கள், விடுங்கள் போகட்டும். இலுமினாட்டி வரலாறு இப்படி வருகின்றது

அன்றைய ஐரோப்பா இன்றைய அதிமுக போல் திருத்தமுடியாத, அறிவில்லா மக்களால் நிரம்பியிருந்தது, அவர்களுக்கு அறிவு போதித்தவர்கள் அன்றைய இலுமினாட்டிகள்

இவர்கள் பகிரங்கமாக இயங்க முடியாட்து, மிக ரகசியமாக இயங்கினார்கள், இவர்களால் மக்கள் அறிவுபெறுவது கண்டு இந்த இயக்கத்தவர்ர் மொத்தமாக ஒழிக்கபட்டதாக பிரான்ஸ் அறிவித்தது

ஆனால் அதற்கு பின்னால்தான் பிரெஞ்ச் புரட்சி ஏற்பட்டு, மதகுருமார்களும், அரசர்களும் ஒழிக்கபட்டனர். இது கண்டு அண்டை நாடுகள் எல்லாம் இலுமினாட்டிகளை அபாயகரமானவர்கள், ரகசியமானவர்கள் என தேடி பிடித்து அழித்தன‌

பிரென்ஞ் புரட்சியும் நெப்போலியன் கையில் முடியாட்சியாகி இலக்கினை தவற விட்டது, ஆனால் பின்னாளைய ரஷ்ய புரட்சிக்கு அதுதான் முன்னோடி

ரஷ்ய கதை இருக்கட்டும், பிரெஞ்ச் புரட்சிக்கு பின்னர், மக்களுக்கு சிந்திக்க சொல்லும், அரசுக்கு எதிரான கருத்தை சொல்லும் எல்லோரும் இலுமினாட்டிகள் ஆனார்கள்,

ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரானவர்கள் எல்லாம் இலுமினாட்டிகள், அமெரிக்காவில் மக்களாட்சி மலர்ந்தபின் அது ஐரோப்பிய முடியரசுகளுக்கு ஆபத்தாக அமைந்தது, அதனால் அரசர்களுக்கு எதிராக கருத்துக்களை சொல்லும் எல்லோரும் இலுமினாட்டி என முத்திரை குத்தபட்டார்கள்

இது ஐரோப்பாவில் பேஷன் ஆகிபோனது..

பின் அந்த கதை அப்படியே தொடர்ந்து, மர்ம நடவடிக்கைகள் எல்லாம் இலுமினாட்டி பெயரில் போடபட்டது

பின் யூதர்களை இலுமினாட்டி என்றார்கள் , அதனை தொடங்கி வைத்தது ஜெர்மனியின் நாசிக்கள், ரஷ்ய புரட்சி கூட யூத சதி என சொல்லிகொண்டிருந்த கூட்டம் அது. உண்மையில் யூதர்கள் அன்று அமெரிக்காவினை வளைத்து கொண்டிருந்தார்கள்

ஆனால் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் யூத உருவாக்கம், அவர்களை அழிக்கவேண்டும் என நாசிக்கள் இல்லாத கட்டு கதை எல்லாம் கட்டி, ரஷ்யா மீது படையெடுத்து அழிந்தும் போனார்கள்

நாசிக்கள் கட்டிவிட்ட கதை இன்னும் ஓயவில்லை..

இன்று உண்மையில் யூத இனம் பொருளாதார பலம் உள்ளது என்றாலும், தன் நாட்டுக்கு எதிரான சக்திகளில்தான் தலையிடும், ஜெருசலேமை காப்பாற்றுதல், இஸ்ரேலை பாதுகாத்தல் என அதன் பயணமே வேறு

இம்மாதிரி உலகம் அறிவு பெற வேண்டும் என்றோ, உலகம் குழம்ப வேண்டும் என்றோ, உலகை ஆள வேண்டும் என்றோ அது நினைக்காது, என் இஸ்ரேல் என் உரிமை என்பது அதன் நிலைப்பாடு, அதில் யாரும் குறுக்கே வந்தால் ஒழிய அதன் கண்கள் சிவக்காது

இன்றைய உலகில் இலுமினாட்டி என்றால் யார்? ஒருவரும் இல்லை, அதிகாரமும் பணமும் மக்களை மயக்கும் வித்தை தெரிந்தவன் எல்லாம் இலுமினாட்டி

உதாரணம் இப்படி சொல்லலாம்

கட்சியின் தீவிர வெறியன் அல்லது தொண்டன், கடும் உழைப்பாளி அல்லது தலைவர் மீது பக்திமான், ஆனால் கையில் ஒரு பைசா இல்லை, கட்சியின் மாவட்ட செயலாளர் பதவிக்கு வரமுடியுமா? ஒரு சக்தி தடுக்குமல்லவா? அதுதான் இலுமினாட்டி.

மணல் கடத்தல், சுரங்க மோசடி, தாதுமணல், குட்கா செய்தி எல்லாம் தமிழகத்தில் என்னாயிற்று? தடுக்கும் சக்தி எது? அதுதான் இனுமினாட்டி.

ஒரு தாழ்த்தபட்ட சாதிக்காரன் திருவிழா கூட நடத்தமுடியாமல் காதலிக்க கூட உரிமையில்லாமல் சாகின்றான் அல்லவா? அந்த சாகடிக்கும் சக்தி எது? அது இலுமினாட்டி.

சர்வ சக்தி படைத்த ஜெயலலிதா யார் கண்ணுக்கும் தெரியாமலே செத்தார் அல்லவா? அவரை ஒரு சக்தி மறைத்தது அல்லவா? அதுதான் இலுமினாட்டி

எவ்வளவோ திறமை இருந்தும், கோடம்பாக்கத்தில் வாய்ப்பு இல்லாமல் சுற்றும் கூட்டம் உண்டு, அவர்களை அப்படி அலையவிட்ட சக்தி எது?

அவ்வளவு ஏன் இத்தனை ஆயிரம் கிரிக்கெட் வீரர்கள் உள்ள இந்தியா, பாகிஸ்தானிடம் பந்துவீச ஒரு பவுலர் இல்லாமல் தடுமாறியது அல்லவா? அந்த சொத்தை அணியினை தேசிய அணியாக அறிவித்த சக்தி இலுமினாட்டி.

கருப்பு பணத்தை மீட்க முடியாமல் மோடியினை தடுக்கும் சக்தி எது? அது இலுமினாட்டி.

சுருக்கமாக சொன்னால் பணமும், அதிகாரமும் கொண்ட கூட்டம் இலுமினாட்டி, இது உள்ளூரில் செய்தால் சமார்த்திய சாலி, தந்திரக்காரன், கெட்டிக்காரன், திறமைசாலி.

கண்ணுக்கு தெரியாதவன் செய்தால் அது இலுமினாட்டி. இதுதான் இலுமினாட்டியின் எளிய தத்துவம்.

இதனை சொன்னால் புரியாது, உனக்கு உலகம் புரியாது என்பார்கள். இருந்துவிட்டு போகட்டும், பெரியார் பாணியில் சொன்னால் இலுமினாட்டி “வெங்காயம்”

ஆனால் ஈழத்தில் தமிழன் நாடு அமைந்தால் அது இஸ்ரேலை அமெரிக்காவினை விட பெரும் வல்லராகிவிடும் என்பதால் அதனை இலுமினாட்டிகள் அழித்தார்கள் என சிலர் சொன்னான் அல்லவா?

அவன் தலைதான் காலி சட்டி. அந்த இலுமினாட்டி கதையினை நம்புவன் மண்டை காலி அலுமினிய சட்டி

உண்மையில் இலுமினாட்டி என ஒன்றுமே இல்லை, எல்லாம் புரிந்தும் புரியாமலும் ஏகாதிபத்திய வியாபாரங்களுக்கு சூட்டபட்ட மர்ம பெயர், அவ்வளவுதான்

Image may contain: 1 person, close-upமாய்ன்களின் ஒற்றை கண் என்பது வேறு, அது அவர்கள் மத கலாச்சாரம், அமெரிக்க கண்டத்து மத கலாச்சாரம், பின் அமெரிக்கர்கள் கரன்சி அடிக்கும் பொழுது இது இந்த மண்ணின் அடையாளம் என்பது போல செய்துவிட்டார்கள், அவ்வளவுதான்.

மாயன்கள் கலாச்சாரத்தில் அவர்கள் கடவுள் ஒற்றைகண்ணோடு வருவது உண்டு, அது ஒன்றுமல்ல மாயன்கள் இந்துகலாச்சாரத்தோடு தொடர்புடையவர்கள், சிவனுக்கும் நெற்றியில் ஒரு கண் உண்டு

மதுரையில் நக்கீரனின்டம் அதை காட்டித்தான் அவர் மிரட்டினார்

மாயன்களின் ஒற்றை கண் கிட்டதட்ட சிவபெருமானின் நெற்றிகண் சாயல், இலுமினாட்டி என இவர்கள் காட்டும் அந்த கண், சிவனின் நெற்றிகண்ணே என்பதில் சந்தேகமில்லை

மாயன்கள் இந்துக்கள், சிவ அடையாளத்தை பின்பற்றினர், பின் வந்த அமெரிக்க வெள்ளையர்கள் அந்த அடையாளத்தை பிரபலமாக்கினர்

இதற்கும் இவர்கள் அள்ளிவிடும் ஒற்றைகண் இலுமினாட்டிக்கும் ஒரு மண்ணாங்கட்டி தொடர்புமில்லை, எல்லாம் கட்டுக்கதை

ஆக இலுமினாட்டி என்று அஞ்சி குழம்ப‌ ஒன்றுமே இல்லை, இது இலுமினாட்டி அது அலுமினாட்டி என எவனாவது பூச்சாண்டி காட்டுவான் என்றால் “போடா கம்முனாட்டி” என சொல்லிவிட்டு நகர்ந்துவிட வேண்டியதுதான்.

ஒற்றைகண்ணர் எல்லோரும் இலுமினாட்டி ஆக முடியுமா?

கலைஞருக்கும் ஒரு கண் சரியாக தெரியாது, அவரையும் இலுமினாட்டி ஆக்கலாமா?

நிச்சயம் ஆக்கலாம்தான் , அவரை விட பகுத்தறிவு ஓளி பாய்ச்சியது யார்?

 
 

உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா : அவர் பிறந்த நாள் இன்று

கடந்த நூற்றாண்டில் அரசியல், பொதுசேவை, விஞ்ஞானம், ஊழல்,கொலை,கொள்ளை என பல துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் உண்டு, அதில் தன் வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா

Image may contain: 1 person, smiling, close-upஒரு விசித்திரமான பெண்மணி அவர், அதனை விட மகா விசித்திரமானது அவர் வாழ்வு

எந்த பெருமைக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைபட்டு தன் சுதந்திரத்தை தொலைக்காமல் , தான் விரும்பிய வாழ்வினை வாழ்ந்தவர் அவர், அவரின் பலமும் அது, பல்வீனமும் அதுவே

சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை, ஆசிரியர்தான் வீட்டுக்கு வந்தார், பள்ளியினை அவர் பாத்ததே 10 வயதில்தான். மிக சுதந்திரமாக வளர்ந்தார், எங்கோ இல்லத்தரசியாக, உலகின் மிக மகிழ்வான பெண்ணாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டிய அவருக்கு விதி யார் உருவில் வந்ததென்றால் உடன் பிறந்த அக்கா உருவில்

ஆம், அந்த ஜெகதலபிரதாபன் சார்ள்ஸ்க்கு கிழவிகள் முதல் குமரிகள் வரை தோழிகள் உண்டு, அதில் ஒருவர் டயானாவின் சகோதரி சாராவும் ஒருவர், சாராவோடு அவர் பழகிய நாட்களில் அவர் கண்ணில் பட்டவர்தான் டயானா

வசந்த மாளிகை சிவாஜிகணேசன் போல இருந்த சார்லஸ், டயானாவினை கண்டதும் மணம் முடிக்க துடித்தார், பிரிட்டனின் இளவரசர் ஆசைபட்டு நடக்காதது உண்டா?, மறுத்தாலும் பிடித்து வைத்து மோதிரம் மாட்டுவார்கள்,

உலகே அதிசயிக்கும் அந்த திருமணம் நடந்தது, தமிழகத்து வளர்ப்புமகன் திருமணம் எல்லாம் அதன் முன் கண் திருஷ்டி கழிக்க கூட வழியில்லாதது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்

அரச குடும்பம் என்பது சாதாரணம் அல்ல, சில லட்சங்களை கண்ட புது பணக்காரர்களே “நாங்கள் யார் தெரியுமா? என் குடும்ப கவுரவம் என்ன தெரியுமா?” என ஒரு கெத்து காட்டும் உலகில், உலகாண்ட வம்சம் எப்படி இருக்கும்?

பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் ஆகிய நாடுகளுக்கும் இன்றும் அவரே ராணி , இப்படி இருக்கும் குடும்பம் எப்படிபட்ட கவுரவத்தில் இருக்கும்? அதில் ஆச்சரியமென்ன?

அதன் கட்டுபாடுகள் அப்படி பல் துலக்குவது முதல் இரவு தூங்க செல்லும் வரை அவர்கள் கவுரவம் தெரியும், எல்லாவற்றிற்கும் வேலைக்காரர்கள், எல்லாவற்றிலும் ஒரு பெருமை , கெத்து இன்னபிற‌

அரச குடும்பத்தவர் தனித்து தெரியவேண்டும், உத்தரவு மட்டுமே போடவேண்டும் என்ற ஒருவகை பயிற்சி அது, அவர்களின் பெருமை அது

டயானா இதில்தான் மாறுபட்டார், அவரின் சுதந்திரம் அவருக்கு முக்கியம், அந்த அரச குடும்பத்து பெண்கள் குழந்தைகளை கூட கொஞ்சமாட்டார்கள், பள்ளிக்கு அழைத்து செல்வது பாடம் கற்பிப்பது எல்லாம் வேலைக்காரர்கள்

டயானா இதனை உடைத்தார், அவரே வேலைக்காரரோடு சமைத்தார், அவர் குழந்தைகளை அவரே சாதரண பெண் போல பள்ளிக்கு அழைத்து சென்றார்

பிளாட்பார கடையில் கம்மல் பொறுக்கினார், சந்தித்த மக்களையெல்லாம் ராஜிவ் காந்தி ஸ்டைலில் தொட்டு பேசினார், மிக எளிமையான இளவரசியானார்

அரச குடும்பத்தின் கவுரவம் அவரால் குலைவதாக சொன்னார்கள், அவர் கண்டுகொள்ளவே இல்லை, நீ வருங்கால அரசி என சொல்லிபார்த்தார்கள், என் சுதந்திரத்தை கட்டுபடுத்தும் அந்த அரசி பதவியே வேண்டாம் என எகிறினார் டயானா

அவர் அழகி, அதுவும் வசீகரிக்கும் அழகி. ஆனால் மனதால் மிக எளிமையானவர், அந்த எளிமை எல்லா நாட்டு மக்களையும் அவர்பால் இழுத்தது, உலகெல்லாம் பிரபலமானார் டயானா

இரு குழந்தைகள் பிறந்த நிலையில் இளவரசரின் சார்லஸ் மறுபடியும் முருங்கை மரம் ஏறினார், டயானா தன் குடும்ப கவுரவத்தை காப்பாற்றவில்லை என அவரே நொந்தார், பழைய பெண் தோழிகள் நட்பை தேடினார், அவரின் இயல்பும் அது

பெண் தோழிகள் மூலம் தன் குடும்ப கவுரவத்தை காக்கும் வழியில் இறங்கினார் சார்லஸ்

டயானா அரச மரபுகளை உடைத்தார், தன் திருமணம் தோல்வியுற்ற நிலையில் பொதுவாழ்விற்குத்தான் திரும்பினார், எல்லா பொதுசேவைகளுக்கும் அள்ளி கொடுத்தார், உதவினார்

கல்கத்தா மக்களுக்கும் அவர் உதவியது கொஞ்சமல்ல‌

திருமணம் முடியும் பொழுது அவருக்கு 20 வயது, அதன் பின் அரண்மனை வாழ்க்கை, கொஞ்சம் வெளிவந்து தனக்கான வாழ்வினை தேடினார்

அந்த பரிதாபத்திற்குரிய அழகி தேடியது என்ன? அவரே சொன்னது போல, “என்னை மதித்து என்னை முழுமையாக நேசிக்கும் ஒருவர், ஒரு தூய்மையான அன்பு, அது ஒன்றுதான்”

என்னதான் இளவரசி என்றாலும் அவரின் பெண்மனம் சாதாரண பெண்ணின் மனம் போலவே ஏங்கியிருக்கின்றது

குதிரை பயிற்சியாளர், பாகிஸ்தான் டாக்டர் என பலரோடு கிசுகிசுக்கபட்டார், அதில் சில உண்மையும் பல பொய்களும் கலந்திருந்தது, அவர் போலி கவுரவத்தோடு வாழும் அன்பில்லா அரண்மனை வாழ்க்கையினை விட, தூய்மையான அன்போடு வாழும் எளிய வாழ்க்கைக்கே ஆசைபட்டார்

ஒரு கட்டத்தில் விவாகரத்து வரை சென்றது, டயானாவின் பாட்டியும் முன்பு பிரிட்டன் அரண்மனையில் வேலை செய்தவர், ராணி விசுவாசமிக்க கட்டப்பா வகை, அந்த விசுவாச புராணம் எல்லாம் பாடி பார்த்தார்கள்

என் சுதந்திரத்தை விட, என் உணர்வுகளை விட இந்த அரண்மனையில் நான் அடிமைபட்டு கிடக்கவேண்டுமா? முடியாது என சொல்லிவிட்டு விவாகரத்து செய்தார் டயானா

பெரும் கோடீஸ்வரர்கள் முதல் அரைகுறை ஆங்கிலம் பேச தெரிந்த அனைவரும் அவருக்கு விண்ணப்பம் எழுதினர், அவரை மணம் செய்துகொள்ள அத்தனை பேர் துடித்தனர்

டயானா எனும் பெண் அன்று உலகில் கொண்டாடபட்ட விதம் அப்படி

இந்நிலையில் எகிப்து கோடீஸ்வரர் அல்பயது எனும் இஸ்லாமியருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது, அவரும் மனைவி இல்லா வகைதான், இருவரும் மணம் செய்ய முடிவெடுத்தார்கள்

இந்நிலையில்தான் பாரீஸ் கார்விபத்தில் டயானா கொல்லபட்டார், நெடுநாள் மர்மத்திற்கு பின் பிரிட்டன் உளவுதுறை அதிகாரி மரண படுக்கையில் நான் தான் கொன்றேன், இது அரச கட்டளை என்றார், அன்னார் இன்னும் சாகவில்லை, விரைவில் அவர் சாகடிக்கபடலாம்

ஆக வேல்ஸ் இளவரசி ஒருவர் அரச குடும்பம் எனும் இரும்பு கோட்டையில் சிக்கி, அதனை மீற முயன்ற பாவத்திற்காக கவுரவ கொலை செய்யபட்டிருப்பது உறுதியாகின்றது

எப்படியோ 36 வயதுவரையே வாழ்ந்த அந்த டயானா, உலகில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார், அவரின் வசீகர அழகு முகம் அப்படி

இனம்,மொழி,மதம் கடந்து எல்லோரும் அவரை ரசித்தனர், நேசித்தனர், அவர் மின்னும் முகமும், அந்த சிரிப்பும், சிகை அலங்காரமும், அவர் அணிந்த உடைகளும் அவரை அப்படியே தேவதையாக்கின‌

ஒருவேளை சார்லஸை அனுசரித்து சென்றால் இங்கிலாந்து அரசியாகியிருக்கும் வாய்ப்பு உண்டா என்றால் சொல்ல தெரியாது, காரணம் இங்கிலாந்து எலிசபெத் ராணி வலுத்த கட்டை, கிட்டதட்ட நம் கலைஞர் வகையறா

அதனால் டயானா இன்று இருந்திருந்தால் செயல் ராணி எனும் அளவிற்கு வந்திருக்கலாம்

டயானாவின் ஜாதகம் உலகாளும் யோகம் கொண்டதுதான், ராகுவோ, சனியோ அவரின் தன்மானத்தை உயர்த்தி பிடித்ததில் அவர் சில வாய்ப்புகளை தவறவிட்டார்

மற்றபடி சுக்கிரன், சந்திரன்,குரு எல்லாமே உச்சம்.

பிரிட்டன் ராணியின் இடம் அவருக்கானது தவற விட்டார், விவாகரத்து ஆனபின் அமெரிக்க முதன்மை பெண்மணியாகும் வாய்ப்பும் இருந்தது அதனையும் தவறவிட்டார்

எப்படி?

இந்நாளைய அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்ம ஊர் ஜெமினி கணேசன், சிம்பு, பிரபுதேவா வகை. 1996ல் டயானா விவாகரத்தாகும் பொழுது பெரும் அமெரிக்க செல்வந்தரான டிரம்ப் தன் முழு பயோடேட்டா + சொத்து கணக்கு பட்டியலோடு தன் விண்ணப்பத்தை சமர்பித்தார்

Image may contain: 1 person, smilingஆனால் தந்திரமாக அவர் மறைத்த மனைவியர் மற்றும் தோழிகள் கணக்கு டயானாவிற்கு தெரிந்தது, அது உலகிற்கே அன்று தெரிந்த விஷயம் தான்

இவர் விளையாட்டு பிள்ளை என்பதை உணர்ந்த டயானா, “இவர்க்கு சார்லசே பரவாயில்லை, இவருக்கு ஓகே சொன்னால் விவகாரத்தானதற்கு அர்த்தமே இல்லையே ” என சொல்லி நிராகரித்தார்

டயானா இறந்த அன்று டிரம்ப் அழுததாக கூட சொன்னார்கள், இன்றும் டிரம்ப் அதிகாரத்திற்கு வந்தபின்புதான் டயானா மரண மர்ம முடிச்சு அவிழ்க்கபட்டிருப்பதும் குறிப்பிட தக்கது

இரு பெரும் உச்ச பதவிகளை தன் எளிமையான வாழ்விற்காக தவறவிட்ட டயானா உண்மையிலே அதிசய பெண்மணிதான்

கடந்த நூற்றாண்டு கண்ட அற்புதமான அழகான பெண்மணிகளில் நிச்சயம் டயானாவிற்கு இடம் உண்டு, அந்த இடம் என்றும் அழியா இடம்

இன்று டயானாவின் பிறந்தநாள், உலகெல்லாம் நேசிக்கபட்ட அந்த பரிதாபத்திற்குரிய அழகு பெண்ணை உலகம் நினைத்துகொள்கின்றது.

துணிவிற்கும், எளிமைக்கும், அழகிற்கும் பெயர் பெற்று விளங்கிய டயானாவினை போல் இன்னொருவர் உண்டென்றால் அது நிச்சயம் குஷ்பூதான்

டயானா பிரிட்டனின் குஷ்பூ, குஷ்பூ இந்தியாவின் டயானா இப்படித்தான் உலக வரலாறு குறித்திருக்கின்றது