அற்புத சண்டை கலைஞன் புரூஸ்லீ நினைவுநாள்

Image may contain: 1 personஅவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாலுவார்த்தை கற்றானோ இல்லையோ 4 பேரை அடிக்க மறக்காமல் கற்றுகொண்டான்

அவ்வப்போது குழந்தை நட்சத்திரமாக ஹாங்காங் படத்திலும் வந்தான், ஆனால் முழுநேர தொழில் மற்றும் பொழுதுபோக்கு எங்காவது தெருவில் சண்டையிடுவது, போதாகுறைக்கு குங்பூ வேறு கற்றுவிட்டான், அட்டகாசம் தாளவில்லை

அவன் தாதாவாக வேறு மாறிவிட்டான், அவனுக்கு கீழ் 10 அடியாள்.

பொறுத்துபார்த்த தந்தை அவன் கையில் 100 டாலரை கொடுத்து அமெரிக்காவிற்கு விரட்டினார், காரணம் பொழுதுதோறும் பஞ்சாயத்து என்றால் எப்படி?

அமெரிக்கா சென்றவனுக்கு சும்மா இருக்க முடியவில்லை, சரி இங்கு அடிக்கமுடியாது எல்லோரும் இடிமாடு போல இருக்கின்றார்கள், சண்டை சொல்லிகொடுக்கலாம்

குங்பூ கராத்தே டேக்வாண்டோ எல்லாம் கலந்து ஜீட்குண்டோ என அவனே ஒரு சண்டை கலை தொடங்கினான்

நல்ல மாஸ்டர்தான், ஆனால் அவனின் ஆசை சினிமாவில் நடிக்க தூண்டியது, ஹாலிவுட்டில் நடிக்க சில உடலமைப்பு அவசியம், முதலில் உயரமாக நிறமாக கட்டுடலோடு நல்ல முகவெட்டில் இருக்கவேண்டும், ஐரோப்பியர் அல்லது அமெரிக்கராக இருக்கவேண்டும் என பல சட்டங்கள்

ஒடுங்கிய தேகமும், இடுங்கிய கண்ணும் கொண்ட அந்த சீன இளைஞனை பரிகாசம் செய்தே விரட்டினார்கள், அவன் சீறியபடி சொன்னான் உங்களுக்கெல்லாம் நான் தான் போட்டி

யார் நம்புவார்கள்? அந்த லீயினை விரட்டியே விட்டார்கள்

ஹாங்காங் திரும்பிய லீ, புரூஸ் லீயானான். தி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி ஆகிய இரு படங்களில் நடித்தார், பெயர் சொன்ன படங்கள்தான், ஆனால் ஹாலிவுட் கண்டுகொள்ளவில்லை

ஓஓ அப்படியா இதோ பார் என “ரிட்டன் ஆப் தி டிராகன்” படத்தினை அவரே எடுத்தார், அது உலகெமெல்லாம் மக்களை கவர்ந்தது, குறிப்பாக இளைஞர்களை

கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.

“யாராய்யா இவன் உடலை அப்படி வைத்திருக்கின்றான், எல்லா ஆயுதமும் அவன் கையில் அப்படி சுழல்கின்றது, ஆயுதம் இல்லாமலே எல்லா ஆயுதமும் சமாளிக்கின்றான் என அதிசயத்தது” உலகம்

ஆம் அழகாலும், நடிப்பாலும் , கேமரா கோணத்தாலும் இயங்கிய மேற்கு சினிமாவினை தன் சண்டைகாட்சி ஒன்றால் உடைத்து அதன் போக்கினை மாற்றினார் புருஸ் லீ

அமெரிக்காவில் அவர் படங்கள் பிய்த்துகொண்டு ஓடின, எங்கு பார்த்தாலும் புருஸ் லீ

அமெரிக்க முதலாளிகள் அவர்முன் குனிந்து நின்றார்கள், ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைத்தார்கள், எந்த ஹாலிவுட் அவரை விரட்டியதோ அதே ஹாலிவுட் காலில் விழுந்து அழைத்தது

எண்டர் தி டிராகன் என சொல்லி ஹாலிவுட்டில் இரு மாதத்தில் தயாரானது, வேலை முடிந்தது இன்னும் இரு வாரத்தில் படம் ரீலிஸ் என்றார்கள்

புரூஸ்லி தன் இன்னொரு படமான கேம் ஆப் டெத் என்பதை தொடங்கியிருந்தார், அந்த வேலை விஷயமாக அவர் வெளியே சென்றபொழுதுதான் அவரின் மரணம் நிகழ்ந்தது

இதே ஜூலை 20.

எந்த மனிதனுக்கும் வாய்க்க கூடாத சாபம் அவருக்கு வாய்த்த்திருந்தது, ஆம் அவர் இறந்த பின்புதான் “எண்டர் தி டிராகன்” படம் வெளிவந்தது, வெற்றி என்றால் பெரும் வெற்றி

ஆனால் அதனை காணவோ, அதனை கொண்டாடவோ புருஸ்லி இல்லை

அவன் ஹாலிவுட்டில் நடித்தது அந்த ஒரு படம் தான், ஆனால் சாகா புகழை அவனுக்கு கொடுத்தது, அதன் பின் உலகெங்கும் அவனால் கராத்தே, குங்பூ பள்ளிகள் தொடங்கபட்டன, எல்லா பள்ளிகளிலும் புருஸ் லீ படம் இருந்தது, இன்றும் இருக்கின்றது

உலகெல்லாம் அந்த தற்காப்பு கலைகளுக்கு பெரும் அடையாளம் கொடுத்த அவன் கொஞ்ச நாள் இருந்திருப்பானானால் இன்னும் பெரும் உயரம் சென்றிருப்பான்

அவன் சாகும் பொழுது வயது வெறும் 32.

இன்றுவரை அவன் சாவு மர்மமே, அவன் புகழை தாங்கமுடியாத சில எதிரிகள் அவன் காதலியின் மூலம் விஷம் கொடுத்தனர், சண்டையில் தலையில் அடிபட்டு இறந்தான் என பல மர்ம கதைகள் வந்தாலும் அப்பல்லோ மர்மம் போல புரூஸ் லீ மர்மமும் தொடர்கின்றது

ஹாங்காங் அரசு பெரும் முயற்சி எடுத்தும் அந்த மர்மம் தீரவில்லை

ஹாலிவுட்டில் ஒரே ஒரு படம் நடித்து, அது வெளிவருவதற்குள் தன் ஆயுளை புரூஸ் லீ முடித்து கொண்டாலும் , தன் ஆயுள் முழுவதும் அடையவேண்டிய புகழை அந்த ஒரு படத்திலே அடைந்துவிட்டார்.

இன்றும் ஹாங்காங்கில் அவர் சிறுவயதில் தெரு சண்டையிட்ட இடத்தில் அவருக்கு சிலை உண்டு, அதனை கடந்து போகும் யாரும் கண்ணீர் விட தவறுவதில்லை

தெருச்சண்டையில் பெரும் கில்லாடிகளில் இப்படிபட்டவர்களும் இருக்கலாம், நமது ஊர் தெருசண்டைக்காரர் எல்லாம் சாதிக்காக சண்டையிட்டு செத்துபோவதோடு சரி

புரூஸ்லீ போல சாதிக்க அவர்களுக்கு சிந்தனையுமில்லை, ஆர்வமுமில்லை

இன்று அந்த அற்புத சண்டை கலைஞனின் நினைவுநாள், பெரும் புகழை அடைந்துவிட்ட அந்த மகா கலைஞன் உலகிற்கு சொன்னது இதுதான்

“பலம் என்றோ, அழகு என்றோ மனிதனிடம் ஒன்றும் இல்லை. மனமும் உடல் உறுதியும் நம்பிக்கையுமே மகா முக்கியம், அது இருந்தால் போதும் எதனையும் சாதிக்கலாம்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s