உன்னத நடிகனின் நினைவு நாள்…

 Image may contain: 3 people, people smiling, close-up

முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகனின் நினைவு நாள்.

நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார்.

அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு நம் கண்முன் காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது.

எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் கொடுத்தான், எந்த மத துறவியும் கொடுக்காத சாந்தமான பாத்திரத்திலும் அவன் ஜொலித்தான், எல்லா மத துறவியாக அப்படியே பொருந்தினான்

கொடும் தீவிரவாதி முதல் கடமை தவறா காவல்துறை அதிகாரி வேடம் என அசத்தினான். வழக்கறிஞர் பாத்திரத்திற்கு இன்றுவரை பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கனவு

அந்த குட்டியானை நடையழகும், சிங்கத்தின் கர்ஜனையுமாய், புலியின் கம்பீரமுமாய் அவர் வலம் வந்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள்

அவராலே தான் சிவபெருமான், கர்ணன்,கட்டபொம்மன் முதல் , முதல் மரியாதை கிராமத்து வெகுளி மனிதர் வரை கண்முன் நிறுத்தபட்டது.

அரசனாக அவர் காட்டிய கம்பீரத்தை அலெக்ஸாண்டராலும் காட்ட முடியாது, மகாகவி காளிதாஸில் அவன் ஆடுமேய்த்த அழகு, ஒரு கோனார் செய்யமுடியாதது, மக்களை பெற்ற மகராசியில் செய்யும் உழவு விவசாயி செய்யமுடியாதது, பிராமண வேடத்தில் அவர் சந்தியா வந்தனம் செய்யும் அழகில் அந்தணர்கள் அவுட்.

இவை எல்லாம் சிறுதுளிதான்.

பாகபிரிவினை படம் வந்தபின் ஒருவிழாவில் பார்த்துவிட்டு வெள்ளையன் சொன்னான், கதைக்கேற்ப ஒரு மாற்றுதிறணாளியினை டைரக்டர் நடிக்க வைத்திருக்கின்றார், அரங்கம் கை தட்டலில் அதிர்ந்தது.

இந்திய விடுதலை போராட்ட தலைவர்களாக வஉசி பாத்திரத்தினை காணும்பொழுது நாட்டுபற்று மேலோங்கும், அந்த வரலாறு கண்முன் வரும்.

சிந்துநதியின் மிசை நிலவினிலே என அந்த பாரதிபாடலில் வரும் சிவாஜிகணேசனில் மொத்த இந்தியாவையும் காணலாம், இன்றும் பாகிஸ்தானின் சிந்துநதியினை காணும்பொழுதெல்லாம் பாரதியும் கூடவே சிவாஜியும் நினைவுக்கு வராதவன் இந்திய தமிழனாக இருக்க முடியாது.

கொஞ்சம் தன் இமேஜினை காப்பாற்றிகொள்ளும் நடிகனாக, தந்திர நடிகனாக இருந்திருந்தால் இன்று ஆட்சிகட்டில் அவனுக்கு கீழேதான் இருந்திருக்கும்.

ஆனால் நடிப்பிற்கு துரோகம் செய்ய அவன் விரும்பவில்லை, குடிகாரன் முதல் சிகரெட் வரை கையிலேந்தி நடித்தான், பெண் பித்தனாக , கோமாளியாக , இரக்கமில்லாதவானக நடிக்க அவனுக்கு தயக்கமே இல்லை.

காரணம் அது அவன் வணங்கிய தொழில். 

அதுதான் அவனின் திரை பலம் மற்றும் ஒரே அரசியல் பலவீனம்.

திரையினை நிஜமென நம்பிய தமிழகத்தின் சாபக்கேடுதான் அந்த வளர்ப்புமகன் திருமணத்தில் ஓரமாக அவர் நின்றதும் அப்படியே இறந்தும் போனதும், இது தமிழக சிக்கல் விடுங்கள்.

ஆசிய ஆப்ரிக்க படவிழாவில் அவன் கொண்டாடபட்டான், அமெரிக்காவில் ஒருநாள் மேயராக அமரவைக்கபட்டான், சோவியத் யூனியன் அவனை உலகின் மிகசிறந்த கலைஞரில் ஒருவன் என்று கைதட்டி சொன்னது.

அன்றைய உலகின் நடிப்பு சக்கரவர்த்தி மார்லன் பிராண்டோ வாய்விட்டு சொன்னான் “என்னை போல அவன் எளிதாக நடித்துவிடுவானே அன்றி, அவனை போல நடிக்க என்னால் ஒருபோதும் நடிகக்க முடியாது”

அப்படிபட்ட கலைஞனுக்கு மத்திய அரசு பெரும் விருதுகள் ஒன்றையும் அளிக்கவில்லை, ரிக்ஷாகாரன் படத்தில் எம்ஜிஆரின் சிறப்புமிக்க நடிப்பிற்காக ஒரு விருது வழங்கியது, அந்த படத்தினை எத்தனை முறை பார்த்தாலும் ஏன் கொடுத்தார்கள் என இன்றுவரை விளங்காது

உதட்டை சரித்து கொண்டு ஆஆஆ.. என இறுதிவரை முகத்தை மட்டும் காட்டினார் எம்ஜிஆர், மஞ்சுளா வரும் காட்சியில் மட்டும் முகம் மாறிற்று, மற்றபடி அதே ஆஆஆ.. அந்த விருது வழங்கிய அதிகாரிகள் ரசனை அப்படி இருந்திருக்கின்றது

சிவாஜிகணேசனுக்கு அப்படியான விருதுகள் எல்லாம் இல்லை, பின்னாளில் பால்கே விருது வழங்கினார்கள், அது எப்பொழுது பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கிய பின் பிரான்ஸ் தூதரகம் சிரிக்கும் முன் வழங்கினார்கள்,

இது அரசியல், விட்டுவிடுங்கள்

பராசக்தி முதல் முதல்மரியாதை வரை அவர் நடித்த படங்கள் காலத்தால் அழியாதவை. எத்தனை எத்தனை வேடங்கள் எத்தனை அற்புதமான நடிப்பு

ஸ்டைல் எனப்பதும் ஒருவித தனித்துவத்திலும் அவர்தான் முன்னோடி, கவனித்துபார்த்தால் ரஜினி எல்லாம் பிச்சை எடுக்கவேண்டும். ஆலயமணி, திருவிளையாடல், மகாகவி காளிதாஸ் போன்ற படங்களில் நடையிலே பல நடை காட்டியவன்

அட நடை என்ன நடை சிகரெட் குடிப்பதிலே பல ஸ்டைல் காட்டினான், அதுதான் கிளாசிக். அந்த பலவகை வசன உச்சரிப்பிற்கும் அவர்தான் இலக்கணம்.

மிகசிறந்த வில்லன் நடிகரும் கூட, அந்நநாள் எனும் படத்தினை விடுங்கள், பாசமலரிலும், ஆலயமணியிலும் வந்துபோகும் சிலநொடி வில்லத்தனமான முகம் நம்பியார் அப்பட்டமாக தோற்குமிடம்.

இன்று என்னமோ நடிகர் நடிகைகளுக்குள் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜி என என்னவெல்லாமோ சொல்கின்றார்கள், ஆனால் மிக்சிறந்த கெமிஸ்ட்ரி இருந்தது என்றால் அது சிவாஜிக்கும் பத்மினிக்குமான கெமிஸ்ட்ரி. ஹிஸ்டாரிக்கல் கெமிஸ்ட்ரி

இந்த இருவருமே இன்று இல்லை.

மகா திறமையான நடிகன். ஆனால் ஒரு வட்டத்திற்குள் அடைத்துகொண்டது தமிழ் திரையுலகம். அதுதான் இங்குள்ள பெரும் சிக்கல். ரஜினி தவிப்பதும், கமல் கை பிசைவதும் அப்படித்தான். அதாவது உனக்கு இதுதான் பாதை, இப்படித்தான் நீ நடிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான் எனும் மாதிரியான நிலை

அப்படித்தான் உருக்கமான பாத்திரங்களில் நடித்த சிவாஜி பின்னாளில் சிக்கிகொண்டார். இதனை கேரள இயக்குநர் ஒருவன் சொன்னான்

“சிவாஜி எனும் யானையினை பட்டினி போட்டு கொன்ற பாவம் ஒருநாளும் தமிழக திரையுலகினை சும்மா விடாது”

இதனைத்தான் அவன் இறந்த அன்று உலகமே சொல்லிற்று

ஆயிரம் கவிஞர்கள் தமிழில் இருந்தாலும் கம்பனின் இடம் என்றுமே நம்பர் 1. அவனின் வர்ணனைகள் அப்படியானவை, தமிழுக்கோர் அடையாளம் அது, அழகு அது.

அதனால்தான் இன்றுள்ள மூளை கிறுக்குள்ள முன்,பின்,இடை,கடை நவீனத்துவ‌ கவிஞர்களை எல்லாம் நம்மால் கவிஞர்கள் என சொல்லவே முடிவதில்லை, மார்டர் ஆர்ட் எனப்படும் பயித்தியகார ஓவியங்களுக்கும் ரவிவர்மனின், மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களுக்கும் வித்தியாசமில்லையா?

கம்பனின் இடம் அப்படியானது

அப்படி தமிழ்கலைத்தாயின் ஒரே மகன் சிவாஜி கணேசன். அவரின் நினைவுநாளில் அவருக்கு நினைவாஞ்சலி செலுத்தலாம்

அவர் இறந்த அன்று , இறுதி ஊர்வலத்தில் மரத்தில் இருந்து ஒருவன் கத்தினான், “ஒரே ஒரு நடிகன் இருந்தான் அவனும் செத்துவிட்டானே…” என ஒரு திசைபார்க்க கத்திகொண்டிருந்தான்

அவன் கத்திய திசையில் இன்றைய இம்சைகள் எல்லாம் நடந்துகொண்டிருந்தன.

தமிழ் உள்ள காலம் வரை கம்பன் நிற்பது போல, தமிழ்திரை உள்ள காலம் வரை சிவாஜி கணேசன் நிலைத்து நிற்பார் தலைமுறைகளை தாண்டி.

அவரின் கடைசி முத்திரையான தேவர் மகனில் கமலஹாசனின் சட்டையினை இழுத்து கேட்பார் “போறியளா…என் மகன என்கூடவே வச்சிபாக்கணும்கிற ஆச எனக்கு மட்டும் இருக்காதா??…”

அந்த உருக்கத்தில் தந்தை பாசம் அப்படி வழியும்.

அக்காட்சியினை காணும் வெளிநாட்டு வாசி எவனும் தந்தையினை நினைத்து அழாமல் இருக்கமுடியாது,

அதுதான் சிவாஜி நடிப்பின் வெற்றி.

அந்த மாபெரும் கலைஞனுக்கு அவன் நினைவுநாளில் அவனுக்கு கலை அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி.

 
 குறிப்பு :  இது மீள்பதிவுதான் ஆனாலும் நம் பதிவே .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s