புனித அன்னம்மாள்

Image may contain: 2 people

உலகம் நாளை அந்த புனித சுவக்கீன் அன்னம்மாளின் திருவிழாவினை கொண்டாட தயாராகிகொண்டிருக்கின்றது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் அது பொன்னாள்.

சுவக்கீன் அன்னம்மாள் தம்பதியர்கள் அவர்கள், சுவக்கீன் என்றால் “இறைவனது தயாரிப்பு” என்றும், அன்னாள் என்றால் “ஆண்டவனின் அருள்” என்றும் பொருள்

அவர் பெயர் அன்னா, ஆன் என்றும் ஆனி என்றும் பல பெயர்களில் அழைக்கபடும், ஆங்கிலத்தை விடுங்கள் அது அவ்வளவு மரியாதையான மொழி அல்ல,

ஆனால் தமிழ் என்றுமே மரியாதையான மொழி அல்லவா? அன்+அம்மாள் என்பது அன்னம்மாள் ஆயிற்று

யார் அந்த அன்னம்மாள்? அதனை அறிந்துகொள்ள இயேசு கிறிஸ்துவிற்கு முந்தைய மூன்றாம் தலைமுறைக்கு செல்லவேண்டும்

அன்று இதே இஸ்ரேல் இருந்தது, ஏரோது கட்டிய ஆலயமும் ஜெருசலேமில் இருந்தது, யூதர்களுக்கு பெரும் குறையொன்றும் இல்லை ஒன்றே ஒன்றை தவிர‌

அவர்கள் சுயாட்சி முறையில் ரோமருக்கு கீழே வாழ்ந்துகொண்டிருந்தார்கள், கடவுளின் மக்கள் நாங்கள், ஜகோவாவினை தவிர யாருக்கும் அடிமையில்லை என நம்பும் கூட்டம், ரோமரை சகித்துகொண்டிருந்தது, தங்களுக்கு வாக்களிக்கபட்ட மெசியா எனும் விடுதலை தருபவர் வருவார் என கோயிலிலே காத்திருந்தது

அந்த ஜெருசலேமில்தான் சுவக்கீன், அன்னா எனும் யூத தம்பதிகள் வந்து நின்றார்கள், ஓரளவு வசதியானவர்கள். யூத கட்டளையினை கொஞ்சமும் அணுபிசகாமல் கடைபிடித்து வருபவர்கள். அக்கம் பக்கம் எல்லாம் அவர்களுக்கு அவ்வளவு மரியாதை

தங்கள் வருமானத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கு ஜெருசலேம் ஆலயத்திற்கும், இன்னொரு பங்கு ஏழைகளுக்கும், ஒரு பங்கு தனக்கும் என கொடுத்து தவ வாழ்வு வாழ்ந்தவர்கள் அவர்கள்

கடவுளை கண்டுகொள்ளாதோருக்கு சோதனை வராது, வந்தால் ஒரே அடியில் முடிந்துவிடுவார்கள், மறுபடி எழமாட்டார்கள். ஆனால் கடவுளுக்கு பிடித்தமானவர்களுக்கு அடிக்கடி சோதனை வரும்,

குறைவைத்து அவர்களை அழவைத்து பின் வந்து “உம் பக்தியினை மெச்சினோம்” என சொல்வது எல்லா தெய்வங்களின் வாடிக்கை, யூத தெய்வமும் அதற்கு விதிவிலக்கு அல்ல‌

ஆம், அன்னாளுக்கு குழந்தை இல்லை. திருமணமான பெண்ணுக்கு குழந்தை இல்லை என்பதை விட என்ன பெரும் வேதனை இருக்கமுடியும்? ஆனால் அனுதினமும் தவறாமல் ஜெபித்தனர் தம்பதியர்

அன்றொரு பண்டிகை நாள், யூதரின் மிக முக்கிய பண்டிகை அது, எருசலேம் ஆலயம் பக்தர்களால் நிரம்பியிருந்தது, காணிக்கையும் , பலிகளும் குவிந்துகொண்டிருந்தன‌

பெரிய குரு முன்னால் இந்த தம்பதியும் பலிசெலுத்த செல்லும்பொழுது குரு தடுத்துவிட்டார், மூட நம்பிக்கையில் இந்தியாற்கே வகுப்பெடுப்பது அந்நாளைய யூதம், மிக கட்டுப்பெட்டிதனமான மூடத்தனம்

அன்னாள் மலடி என்றும், அது சாபம் என்றும் அதனால் அவளின் பலி ஆண்டவனுக்கு கொடுக்க சட்டத்தில் இடமில்லை என சொல்லி அவமானபடுத்தி விரட்டினார் அங்குள்ள ஆச்சாரியார்

தான் வணங்கும் ஆலயத்தில், அந்த தெய்வத்தின் முன் எல்லா யூதரும் பார்க்க கதறினாள் அன்னா, இந்த தெய்வம் எப்படிபட்ட தெய்வம்? முதிர்ந்தவயதில் ஆபிரகாமுக்கு குழந்தைவரம் அருளிய தெய்வம், குழந்தையில்லா ஹன்னா என்பவருக்கு சாமுவேல் எனும் தெய்வகுழந்தையினை அருளிய தெய்வம் என்னை மட்டும் சோதிப்பதேன் என அவளும் அவள் கணவர் சுவக்கீனும் கதறிய கதறல் அந்த ஆலயத்தின் சன்னிதானம் வரை எதிரொலித்தது

அந்த கதறலிலே ஹன்னாவின் கதை அவளுக்கு நினைவுக்கு வந்தது, எந்த ஹன்னா குழந்தையின்றி தவித்து தனக்கொரு மகவு கிடைத்தால் கடவுளுக்கு கொடுப்பேன் என பெற்றவுடன் கொடுத்தாளோ, அப்படி எனக்கொரு மகவு கொடுப்பின் அதை கோயிலுக்கே காணிக்கையாக்குகின்றேன் என உறுதிமொழி கொடுத்தாள்

அந்த வார்த்தைக்காக காத்திருந்த கடவுள் புன்னகை புரிந்தார், இந்த ஒரு சத்தியத்தை வாங்கத்தான் அவர் அந்த விளையாட்டை நடத்திகொண்டிருந்தார்

கடவுளின் திட்டம் வேறுமாதிரியிருந்தது, இனி பொறுப்பதில்லை இவர்களுக்கு வாக்களிக்கபட்ட மெசியாவினை அனுப்பிவிடவேண்டும், ஆனால் எல்லோரும் அயோக்கியர்களாக ஒரு மாதிரி அலைகின்றார்கள், இவர்களிடம் தேவகுமாரன் பிறப்பதா?

அதற்கு பரிசுத்தமே உருவான பிறப்பு வேண்டும், அது வரம்பெற்று, காண கிடைக்காத பிறப்பாய், கடவுளின் கொடையாய் இருக்கவேண்டும் என்றிருந்தது

இயேசு பிறக்க ஒரு பரிசுத்தமான தாய்வேண்டும், அவளை நல்லபடியாக கடவுளில் வளர்க்க அவளுக்கொரு தாய்வேண்டும், இந்த யூத இனத்தில் அன்னாளை விட்டால் யார் இருக்கின்றார், இதோ அவளிடம் பிறக்கும் பிள்ளை ஆலயத்திற்கு என சத்தியமும் வாங்கியாயிற்று, இனி என்ன‌
அருள் பாலித்துவிடலாம்

ஆம், மரியாள் அவர்களுக்கு மகளாக பிறந்தாள், ஆனந்த கண்ணீருடன் கடவுளுக்கு நன்றி சொன்ன அன்னாள் அவளை வளர்த்தாள், குழந்தைக்கு 5 வயது ஆகும்பொழுது அந்த சத்தியம் நினைவுக்கு வந்தது, யூத தெய்வம் பொல்லாதது, அதனை ஏமாற்ற எல்லாம் முடியாது, கொடுத்துவிட வேண்டும்

ஆனால் சிக்கல் இருந்தது, அது பெண் குழந்தை, பெண்ணடிமை சமூகமான யூதமதம் பெண்களை மதிக்காது, சபிக்கபட்டவள் பெண் என்பது அவர்கள் கொள்கை, ஏவாள் ஆப்பிளை சாப்பிட்டாளாம் அதனால்

ஆண் குழந்தை என்றால் கோவிலில் ஏற்று குருவாக்குவார்கள், பெண் குழந்தை என்றால் ஆலய மடத்தில் இருந்து உதவலாம், பருவம் அடைந்தவுடன் வீட்டிற்கு விரட்டிவிடுவார்கள், வீடு இல்லாவிட்டால் கொன்றும் விடவும் அவர்கள் தயார், பெண் அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு

அன்னாள் தன் மகளை அந்த மடத்தில் காணிக்கையாக்கினாள், அந்த பெண் மகவு மிக பரிசுத்தமான இடத்தில் , மிக பரிசுத்தமாக வளர்ந்தது கிட்டதட்ட 10 வருடகாலம் மகளை பிரிந்திருந்தாள் அன்னாள், எல்ல்லாம் கடவுளுக்காக‌

பருவம் அடைந்து மகள் வீட்டிற்கு வந்தபின் அணைத்துகொண்டாள், ஆனால் ஆண்டவன் விடுவானா? கபிரியேல் தூதரை அனுப்பி அவள் பரமன் இயேசுவினை சமக்க போகும் செய்தியினை சொல்ல சொன்னான், அப்படியே ஏற்றாள் மரியாள், அவளுக்கு அப்பொழுது 17 வயது இருக்கலாம்

தன் மகளுக்கு பெரும் இடத்தில் திருமணம் செய்யவேண்டும் என்ற எல்லா பெண்களுக்கும் உள்ள ஏக்கம் , அன்னாவிற்கும் உண்டு, இனி என்ன செய்ய? நாம் பக்திமான்கள், ஆனால் ஊரார் விடுவார்களா? கல்லெறிந்தே கொல்வார்கள்

அப்பொழுது சூசை எனும் வயதானவர் கடவுளால் கொண்டுவரபட்டார், அவருக்கு அன்றே 51 வயதானது, மரியாளை பற்றி சகலமும் அவருக்கு கடவுளின் தூதனால் விளக்கபட்டது, திருமணமும் முடிந்தது

அந்த திருமண மோதிரம் அன்னாளால் கொடுக்கபட்டது, அது இன்றும் இத்தாலியில் ஒரு ஆலயத்தில் உண்டு, அந்த திருமணம் நடந்த வீடும் ஒரு ஆலயமாக நாசரேத்தில் உண்டு

இதன் பின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரச்சினையில் மரியாள் பெத்தலஹேமிற்கு போய் இயேசுவினை பெற்று, அன்னாளிடம் காட்டினாள், முதிர்ந்தவயதில் கடவுளின் குமாரனை பேரனாக கையில் தாங்கினாள் அன்னாள், அதன் பின் கொலைகார ஏரோதிற்கு அஞ்சி மரியாள் பிள்ளையுடன் எகிப்திற்கு சென்ற கதை எல்லாம் நடந்து பின்னாளில் நாசரேத்தில் இயேசுவினை மறுபடி கண்டபின் உயிர்விட்டாள் அன்னாள்

பெரும் மலடியாக இருந்த அவளுக்கு கடவுளின் குமாரனை தன் வம்சமாக தாங்கிய வாய்ப்பு கிடைத்த கதை இதுதான்

இச்சம்பவம் இன்றுள்ள பைபிளில் இல்லை. பைபிள் என்பது இயேசுவிற்கு பின் நடந்த , கிறிஸ்தவர்களுக்கு எதிராக யூதரும், ரோமானியரும் ஆடிய ரத்த ஆட்டத்தில் நினைத்து பார்க்கமுடியாத விஷயம்

இயேசுவிற்கு பின் 400 ஆண்டுகள் கழித்து , ரோம அரசன் கான்ஸ்டாண்டைனின் தாய் கிறிஸ்தவளாகி, பின் அவர் மகன் கிறிஸ்தவனாகி, அட நமக்கு புனித நூல் இல்லையே என தேடியபின்புதான் தொகுக்கபட்டது

ஆம் ஆளாளுக்கு எழுதியவற்றை தொகுத்தார்கள்.

இடைபட்ட காலத்தில் தேடினார்கள், சில முழுமையாக கிடைத்தன, சில அறைகுறையாக கிடைத்தன, சில வில்லங்கமாய் இருந்தன‌

தாமஸ், யாக்கோபு, யாகப்பர் ஏன் யூதாஸ் கூட என்னமோ கிறுக்கி வைத்திருந்தான், அவன் எழுதியதை நற்செய்தி என்பதா? படுகேவலம் என அதனை எல்லாம் மறைத்துவிட்டார்கள்.

முழுமை பெற்றதும், சர்ச்சை வராதும் மட்டும் கணக்கில் எடுக்கபட்டது, அப்படி சில தள்ளபடன, தோமையார் எனும் தாமஸ் எழுதிய தொகுப்பு அப்படி புறந்தள்ளபட்டது, அதில் அவர் சென்னை விஜயம் எல்லாம் எழுதவே இல்லை

யாகப்பர் என்பவர் எழுதிய தொகுப்பிலும் நடுவில் கொஞ்சம் பக்கம் காணோம் என்ற ரீதியில் பல விஷயம் இல்லை, ஆனால் அன்னம்மாள் சுவக்கீனின் கதை அதில்தான் இருந்தது

பின் அன்னம்மாளை சேர்ப்பதும் விலக்குவதுமாக திருச்சபையில் இருந்தார்கள், மக்கள் அவர்பால் பற்றுகொண்டு ஜெபித்து, ஆச்சரியங்களை நிகழ்த்துகின்றார் அன்னா என்றவுடன் திருச்சபை நிரந்தரமாக சேர்த்துகொண்டது

பிரிவினை கிறிஸ்தவர்களின் பைபிள் இன்னும் விசித்திரமானது, அவர்களுக்கு பைபிள், இயேசு , காணிக்கை என்ற இந்த மூன்றை தவிர ஒன்றும் தெரியாது, பைபிள் பெரியதாக இருந்ததால் அவர்களாக சில புத்தகங்களை நீக்கினார்கள், ஏன் என்றால் அப்படித்தான், அவர்களை விட்டுவிடலாம்

திருச்சபை அன்னாளை ஏற்றுகொண்டபின் அவருக்கு உலகெல்லாம் ஆலயம் எழும்பியது, ஐரோப்பாவில் அவர் பெயரில் கல்வி நிலையங்கள் எழும்பின, நற்படிப்புக்கு அவர்தான் பாதுகாவலர் என நம்பினார்கள்

ஆச்சரியமாக அப்படி அறிவிக்கபடபின் ஐரோப்பாவில் கல்வி மறுமலர்ச்சி ஏற்பட்டபின் அன்னா அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றார்

உலகெல்லாம் அவர் பெயரில் பள்ளிகள் கிறிஸ்தவர் பெயரால் தொடங்கபட்டன, அவை இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன, அன்னாள் அடையாளம் இல்லாத நாடுகள் இன்று உலகில் மிக குறைவு

ஒரு குழந்தைக்காக முதிர்ந்தவயதில் தன்முன் ஏங்கி நின்ற அவளுக்கு, அவளின் நம்பிக்கைக்கும் பக்திக்கும் இறங்கி வந்து தெய்வ அவதாரத்தையே அருளினான் இறைவன்

அன்னாள் வாழ்ந்த காலத்தில் பெரும் குருக்கள், மன்னர்கள், பேரரசர்கள், பணக்காரர்கள் இருந்தார்கள், ஆனால் இன்றுவரை நிலைபெற்றிருப்பது அன்னாளும், அவள் மகனும், அவள் பேரனும்.

அப்படிபட்ட புனிதமான வாழ்வினை அவள் கடவுளுக்காக வாழ்ந்திருக்கின்றார்

கடவுள் அவளுக்கு அவ்வளவு பெரும் கிருபை காட்டியிருக்கின்றார், இன்றளவும் அவள் மூலம் கேட்கும் எதுவும் கிடைக்கும் என கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நம்புகின்றார்கள், அவள் பக்தர்களே அதற்கு சாட்சி

தனக்கு வந்த இழிவிற்காக மன்றாடி மொத்த உலகமும் வாழ்வு பெற பெரும் காரணமாய் இருந்தவர் அன்னாள், பெரும் அடையாளம் பெற்றுவிட்ட கத்தோலிக்க பாரம்பரியம்

நல்வழியில், கடவுள் குழந்தைகளை நடத்தவேண்டும் என விரும்பும் கத்தோலிக்கர்களுக்கு எல்லாம் அவள்தான் முன்னோடி வழிகாட்டி

தேவமாதாவினை பக்தி வழியில் வளர்த்து கடவுளுக்கே தாயாக்கிய அன்னம்மாளே, எங்கள் குழந்தைகள் நல்வழியில் வளர எங்களுக்காக வேண்டிகொள்ளும் என கத்தோலிக்க குடும்பங்கள் எல்லாம் கரம் குவித்து வணங்கிகொண்டிருக்கின்றன‌

எல்லா மக்களுக்கும் ஆதரவளிப்பவரும், உலகமெல்லாம் போற்றும் அந்த அருள்மிகுந்த அன்னம்மாளின் பக்தர்கள் அனைவருக்கும் அவர் திருவிழாவின் வாழ்த்துக்கள்

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s