வெல்ல பிறந்தவன் : 05

20525979_10209842129425031_3699309634910893000_n.jpgஅலெக்ஸாண்டருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அரண்மனை கலையிழந்தது, அலெக்ஸாண்டர் தாய் பாசத்த்தில் துடித்தான், ஆனால் தந்தையினை மதித்தான்,

அதுவும் தந்தை மாமன்னாக இருக்கும்பொழுது என்ன செய்ய?

தந்தையோ மனோகரா படத்து புருஷோத்தமனாக இருந்தார், கிரேக்கத்து கிளியோபாட்ராவிடம் மயங்கி கிடந்தார், திருமண நாளும் நெருங்கிற்று

(இது எகிப்து கிளியோபாட்ரா அல்ல, அவர் வேறு, அது அங்கு அரச குடும்பத்து சொல் , சில சமஸ்தானங்களில் நாச்சியார் என சொல்வார்கள் அல்லவா? அப்படி. பின்னாளில் எகிப்தில் கிரேக்கர் ஆளும்பொழுது அந்த வாரிசில் வந்தவள்தான் ரோமை ஆட்டிய அழகி கிளியோபாட்ரா)

வளர்ப்புமகன் திருமணம் போல அந்த கிளியோபாட்ரா குடும்பம் கூடிற்று, அலெக்ஸாண்டர் சாட்சாத் அந்த சிவாஜிகணேசன் போலவே ஓரமாக நின்றான், 18 வயது அவனுக்கு, என்ன செய்துவிட முடியும்

பார்மேனியோ மாசிடோனியாவின் கட்டப்பா, அவனுக்கு அலெக்ஸாண்டர் மீது பாசம் உண்டெனினும் அரச கட்டளையினை மீற முடியாது

திருமணத்திற்கு முந்தைய விருந்து நடந்தது, சுற்றங்கள் சூழ்ந்திருந்தன, சாமிக்கு கொடை, குடி விருந்து என பட்டையினை கிளப்பியது மாசிடோனியா கோட்டை

பிலிப் எப்பொழுதும் மிக மிக விழிப்பாக இருப்பான், ஆனால் அன்று குடி அதிகபட்டது. அதுவும் தன் பாதுகாப்பான கட்டப்பா பார்மீனியோவும் ஆண்டிபேட்டரும் இருக்கும் பொழுது பாதுகாப்பு கவலை அவனுக்கு இல்லை

நிரம்ப குடித்து நிதானம் இழந்திருந்தான், ஆனால் மட்டையாகவில்லை

அப்பொழுது ஏதோ வேலைக்காரனை ஏவுவது போல, அலெக்ஸாண்டரை ஏவினான் கிளியோபாட்ராவின் தந்தை, மாபெரும் வீரனுக்கு பொறுக்குமா? மறுத்தான் முறைத்தான்

“பிலிப்பின் சம்பந்தியினை என்ன நினைத்தாய்? செய்ய மாட்டாயா? நான் உன்னை என்ன செய்கின்றேன் பார், இனி மன்னர் என்பக்கம், உன் அன்னை அவ்வளவுதான், என் மகளுக்கு பிறக்கும் குழந்தைக்குத்தான் மணிமகுடம்” என சீறினான் சம்மந்தி

அலெக்ஸாண்டர் அமைதியாக சொன்னான், “அதனை காலம் முடிவு செய்யும், என்னால் உனக்கு அடிபணிய முடியாது, மாமன்னர் ஒருவருக்குத்தான் மரியாதை..”

அடேய் என வாளை உருவினார் சம்பந்தி, சத்தம் கேட்டு ஓடிவந்தான் பிலிப். அன்னார் போதையின் உச்சம், அவரின் வசந்தசேனை கிளியோபாட்ரா அழுது கொண்டிருந்தாள், என்ன என கேட்டான் பிலிப்

“என் தந்தையினை அவமானபடுத்தினான் அலெக்ஸாண்டர், இங்கு நான் வாழமுடியுமா என அழுதாள் கிரேக்கத்து வசந்தசேனை

“என் விருந்தினரை அவமானபடுத்தினாயா?” என அலெக்ஸாண்டரை நோக்கி ஓங்கிய வாளுடன் பாய்ந்தான் பிலிப்

அரண்மனை அலறிற்று, மாமன்னனை தடுக்க யாருக்கு அதிகாரம்? அவர் வெட்டினால் யாரென்றாலும் சாகவேண்டியதுதான், அது அவரே அவரை வெட்டினாலும் சரி

ஒலிம்பியஸ் அலறினாள், பார்மீனியோ முழங்காலில் நின்றான், அலெக்ஸாண்டார் நிதானமாக பார்த்துகொண்டிருந்தான், அவன் விரல்கள் வாளை தொட்டுகொண்டிருந்தன‌

அந்த சரக்கு மிக கடுமையானதாக இருந்திருக்கலாம், ஓங்கிய வாளுடன் டேய்.. என்றபடி மட்டையானார் பிலிப்

ஒலிம்பியஸ் சொன்னதன் அர்த்தம் அவனுக்கு புரிந்தது, வேறு யாரால் ஆபத்து வரலாம் என அவன் தேடிகொண்டிருக்கும் பொழுது, தந்தையே வாளை ஓங்கினால் என்ன செய்ய?

இனி மாசிடோனியா எப்படி பாதுகாப்பானது அவனுக்கு?

மன்னர் மட்டையாக கிடந்தார், கூட்டம் திகைத்து நின்றது. அந்த சம்பந்தி குடும்பம் குதுகலித்தது, மன்னர் எழும்பட்டும் முடிவு செய்துவிடலாம் நாமா? அலெக்ஸாண்டரா?

அதற்குள் அவன் முடிவு செய்தான், தாயினை அழைத்துகொண்டு தூரமாய் இருந்த அரண்மனைக்கு சென்றான், செல்ல செல்ல அவன் கண்ணீர் அந்த புக்கிலேசின் கழுத்தை நனைத்தது

தந்தையா? இப்படியா? மாசிடோனியா அரசனா? நான் இனி வேலைக்காரனா? அப்படியானால் என் கனவு? அரிஸ்டாட்டில் பயிற்சி? என் இந்திய கனவு எல்லாம் வீணா? மாறி மாறி சொல்லிகொண்டிருந்தான்.

அரண்மனை முற்றத்தில் வீழ்ந்து கிடந்தான் அலெக்ஸாண்டர், அவனருகே அந்த புக்கிலேஸ் மட்டும் நின்றுகொண்டிருந்தது.

இங்கு போதை தெளிந்து எழுந்தார் மன்னர், நடந்ததை நினைத்து வருந்தினார், அலெக்ஸாண்டருக்கு செய்தி அனுப்பினார், அவன் மிக வெறுப்பில் இருந்ததால் வரவில்லை

Image may contain: one or more peopleபிலிப்பிற்கு கவலை ஆட்கொண்டது, திருமணத்தை தள்ளிபோட்டான், மகனே மகனே என அழுதான் அலற்றினான், ஆளுக்கு மேல் ஆள் அனுப்பினான், அசரவில்லை அலெக்ஸாண்டர்

பொதுவாக அரசகுடும்ப சண்டைகள் வெளிதெரியாது, தெரிந்தால் பகையாளிகள் படையெடுப்பார்கள். இதெல்லாம் ரகசியமாக புகைந்தன‌

மகனை சந்திக்க ஒரு ஏற்பாடு செய்திருந்தான் பிலிப், அலெக்ஸாண்டருக்கு ஒரு தங்கை உண்டு, அவள் பெயரும் கிளியோபாட்ராதான், அவளுக்கு திருமண ஏற்பாடு செய்தான், எப்படியும் தன் மகன் வருவான் என நம்பினான்

பிலிபிற்கு தன் மகன் மீதான பாசம் அதிகம், காண கிடைக்காத வரமாக அவனை கருதினான், மொத்த கிரேக்கத்தையும் வென்று, என் மகனை அரசனாக்கி பார்த்துவிட்டுத்தான் சாவேன் என்றெல்லாம் அனுதினமும் சொல்லிகொண்டிருந்தான்.

(எஸ்.ஏ சந்திரசேகருக்கு மனதில் விஜயினை என்றாவது ஒருநாள் தமிழக முதல்வராக ஆக்கிபார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கின்றதல்லவா? அப்படி )

ஆனால் ஒரே ஒருநாள் போதை, அவனை புரட்டிபோட்டுவிட்டது, மது போதை + மாது

ஏற்கனவே பிலிப்பிற்கு எதிரிகள் அதிகம், ஒலிம்பியஸை தள்ளிவைத்தது, அலெக்ஸாண்டரை விலக்கிவைத்தது என அவர் மேல் ஒலிம்பியாஸ் குடும்பத்தாரே வெறியில் இருந்தனர்

இதனை எப்படியோ அறிந்துகொண்ட மற்ற பகையாளிகள், ஒருவனை வசபப்டுத்தினர், அவன் பெயர் பவுசானியஸ், அவன் பிலிப்பினை பழிதீர்க்கவே அரண்மனை புகுந்தான்

திருமண ஏற்பாடுகள் களைகட்டின, மன்னன் பிலிப் ஆயுதமின்றி, கவச உடையின்றி நடமாடிகொண்டிருந்தான், வலிய சென்று வம்பிழுத்தான் பவுசானியஸ், ஒரு மாதிரி அங்கும் இங்கும் அலைந்தான், உறவுகாரன் என யாரும் கண்டுகொள்ளவில்லை.

பிலிப்பும் மகன் வருவான் என்ற சந்தோஷத்தில் “விடு அப்புறம் பேசலாம்” என நகர்ந்தார் , ஆனாலும் அவரின் உள்ளுணர்வு எச்சரித்தது

திரும்பி பார்த்தார், அந்த பாதகன் கோடாரியினை அவர் கழுத்தில் இறக்கினான், சரிந்தான் மன்னன்

செய்திகேட்டு ஓடிவந்தான் அலெக்ஸாண்டர், தந்தையினை மடியில் வைத்து புலம்பினான், பார்மீனியோவினை சாடினான், ஆண்டிபேட்டர் சட்டையினை பிடித்து உலுக்கினான்

“நீங்கள் இருக்கும் தைரியத்தில்தானே என் தந்தை கவசமின்றி இருந்தார், ஆயுதமின்றி இருந்தார், இதுதானா உங்கள் விசுவாசம்?” என அவன் கத்திய கதறலில் கோட்டை அதிர்ந்தது

அலெக்ஸாண்டர் தாளா துயரம் கொண்டான், தான் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? என்ற கேள்வி அவனை கொன்றிருந்தது

தன் முன் வாளோங்கிய தந்தையினை மறுபடி பிணமாக பார்த்தான் அலெக்ஸாண்டர்.

கதறி , கதறி நினைத்து நினைத்து அழுதான்.

“எப்படிபட்ட தந்தை? மாசிடோனியாவினை பலமாக்கிய தந்தை, அதனைபற்றி பெரும் கனவுகளை வைத்திருந்த தந்தை, அவனை அரிஸ்டாட்டிலிடம் படிக்க வைத்து ஆளாக்கிய தந்தை

இந்திய கனவினை தன்னில் விதைத்த தந்தை, அப்படிபட்ட தந்தையினை தாய்பாசத்தில் தனியேவிட்ட துயரம் அவனை ஆட்டியது

ஒரு நிமிடம் சும்மா இருந்தானா பிலிப்? எத்தனை யுத்தம், எத்தனை போர்கள்? எல்லாம் யாருக்காக மாசிடோனியாவிற்கு அடுத்து நிச்சயம் அலெக்ஸாண்டருக்காக, அந்த தந்தையா இறந்துவிட்டார்

அவரை பார்க்கவராமல் அவர் இறந்த உடலையா பார்க்கவந்தேன்? என்ன செய்தாலும் இந்த பாவம் போகுமா?

(சில குறிப்புகள் அலெக்ஸாண்டர் தன் தந்தையினை கொன்றதாக சொல்லும், அவை சரியல்ல. ஓளரங்கசீப் போலவே தாயினை ஒதுக்கிய தந்தை மீது அலெக்ஸாண்டருக்கு கோபம் இருந்திருக்கின்றது, ஆனால் ஒளரங்கசீப் அளவிற்கெல்லாம் அலெக்ஸாண்டர் செல்லவில்லை)

அவரின் கனவினை நனவாக்காமல் அந்த பாவம் தீராது, அவர் கண்ட கனவெல்லாம் நனவாக்கி காட்டுவேன் அது ஒன்றே என் தந்தைக்கு நான் காட்டும் நன்றிகடன்,

அதுவே நான் தேடிகொள்ளும் பரிகாரம்” என மனதில் எழுதிகொண்டான் அலெக்ஸாண்டர்.

எல்லாம் முடிந்தது, துக்கம் முடிந்து அடுத்த அரசனாக அலெக்ஸாண்டரை முடிசூட்ட வைத்தார்கள், வசந்தசேனை பற்றி எல்லாம் அதன் பின் தகவல் இல்லை, அந்த பவுசானியஸ் என்ன ஆனான் என்பதெல்லாம் சொல்லி தெரியவேண்டியதில்லை

அலெக்ஸாண்டர் மாசிடோனியா அரசனாகும் முன்பே, அதாவது பிலிப் கொல்லபட்ட உடனேயே அதுவரை மாசிடோனியாவிற்கு அடங்கியிருந்த நாடுகளில் உரிமை கீதம் கேட்டது

ஜெயா இறந்த பின் பன்னீர், தீபா, தீபாகணவர் என ஆளாளுக்கு கிளம்பினார்கள் அல்லவா? அப்படி. பெரும் தலைகள் திடீரென சாகும்பொழுது இப்படி பல குழப்பங்கள் வரும், மாசிடோனியாவிற்கும் வந்தது

மாமன்னன் பிலிப் இல்லை, அவன் மகன் அலெக்ஸாண்டர் 18 வயது பாலகன், போர் என்றால் என்னவென்றே தெரியாது, இனி நாம் யாருக்கும் அடிமையில்லை, யாருக்கும் கப்பம் கட்டவேண்டியதில்லை என கட்டபொம்மனாக கிளம்பினார்கள்

பார்மீனியோ திகைத்து நிற்க, அசால்ட்டாக சொன்னான் அலெக்ஸாண்டர், “என் தந்தை அளவு நான் போர் விஷயங்களில் நல்லவன் அல்ல, இவர்களை அவர் விட்டு வைத்ததானால்தானே பேசுகின்றார்கள்

நான் அடிக்கும் அடியில் அடுத்த 100 வருடத்திற்கு அங்கு பேச யாரும் இருக்கமாட்டார்கள், படையினை திரட்டுங்கள்”

படை திரண்டது, அமைதியாக சொன்னான் அலெக்ஸாண்டர், இது இந்த கலவரங்களை அடக்கத்தான், இன்னும் பெரும் போர் எல்லாம் இருக்கின்றது , இனி போர் போர் போர்தான், கிரேக்க வீரத்தை காட்டாமல் நான் ஓயமாட்டேன், மிக சிறந்த படைகள் கடும் பயிற்சியுடன் உருவாகிகொண்டே இருக்கவேண்டும்

வீரர்களுக்கு ஓய்வே இருக்க கூடாது, பயிற்சி முடிந்தாலும் தங்களுக்குள் அவர்கள் இரு அணியாய் மோதிகொண்டே இருக்கவேண்டும்

உத்தரவிட்ட அலெக்ஸாண்டரை வித்தியாசமாக பார்த்தார் பார்மீனியோ, எப்படிபட்ட படைகள் மன்னா?

குதிரை படை, ஈட்டி எறியும் படை அதிகம் வேண்டும், அதன் பின் வாள்படை, குத்தீட்டி படை , காயம்பட்ட வீரர்களை காக்க மருத்துவபடை, கருவிகளை கொட்டிகொண்டே இருக்க கொல்லர்படை , இன்னும் ஏராளம்

மிக முக்கியாக உளவுபடை, அதுதான் மகா முக்கியம்

மிக சிறந்த படைகளை உருவாக்க சொல்லிவிட்டு, திரட்டிய வீரர்களுடன் கலவரத்தை அடக்க புக்கிலேஸில் ஏறினான், வழக்கமான உற்சாகதுடன் துள்ளி சென்றது புக்கிலேஸ்

வருவது பாலகன், ஒரே அடி அதோடு மாசிடோனியாவே நமக்கு என சொல்லி சிரித்து கொண்டிருந்தானர் எதிரிகள்

கிரேக்கத்திலும் அன்றொரு வை.கோ இருந்தார், பேச்சுகலைக்கு அவர்தான் இன்றுவரை இலக்கணம், வைகோ அவருக்கு ரசிகராக இருப்பதால்தான் இன்றும் கிரேக்க கதைகளை அடிக்கடி சொல்வார்

அவர்தான் டெமஸ்தீனியஸ், பேச்சிலே என்னெல்லாம் சாதிக்கமுடியும், எப்படி எல்லாம் உணர்ச்சியூட்டமுடியும் என்பதற்கு வரலாற்றில் அவர்தான் முதல் சான்று, ஹிட்லர், திராவிட கழகம், திமுக எல்லாம் அவர் அருகே கூட வரமுடியாது

அவர் அக்கால வைகோ அல்லவா? கொஞ்சம் ஓவராக பேசிகொண்டிருந்தார்.

அவர் வாயினை அடைப்பதற்காகவே முதல் போரில் இறங்கினான் அலெக்ஸாண்டர், இங்கு அடிக்கும் அடியில் அந்த கிழவன்வாய் தானாக மூடவேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் அடிக்க ஆரம்பித்தான்

“இவன் வேற மாதிரி” என கிரேக்கம் உணரும் நேரம் வந்தது.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s