இதுதாண்டா மொசாத் : 01

(மாவீரன் நெப்போலியனை பார்த்துகொண்டிருந்தோம், இடையில் இந்த முனிச் படுகொலைக்கு பழிதீர்த்த மொசாத் பற்றி பார்துவிட்டு அவர் பக்கம் வரலாம், நெப்போலியன் எங்கும் போய்விடமாட்டார்)

Image may contain: one or more peopleபலமுறை அவ்வப்போது நாம் பார்த்த மொசாத்தின் பராக்கிரமங்கள் உண்டு, அவ்வரிசையில் உலகினை மொத்தமாக மிரட்டி, அனைத்துலகும் ஆச்சரியமாக பார்த்த மொசாத்தின் ஆப்ரேஷன்களின் ஒன்றுதான் முனிச் படுகொலை பழிவாங்கல், அதாவது கருப்பு செப்டம்பர் சம்பவத்திற்கு திருப்பி அடித்தது.

கருவாகி உருவான நாள்முதலே எதிரிகள் அதிகமுள்ள தேசம் இஸ்ரேல், பல போர்களை சந்தித்தாலும் எதிரிநாடுகளிடமிருந்து கி.மீ கணக்கில் நிலங்களை பிடுங்கி முள்வேலி அமைத்திருக்முமே ஒழிய ஒரு சென்ட் நிலம் இழந்தவர்கள் இல்லை. பின் எதிரிகள் என்ன செய்வார்கள்?.

அதுதான் கொரில்லா தாக்குதல். அவர்கள் கொரில்லா என்றால் இவர்கள் ஓநாய், அதனால் உள்நாட்டில் ஒன்றும் செல்லுபடியாகவில்லை. விளைவு வெளிநாட்டில் யூத இலக்குகளை தீவிரவாதிகள் குறிவைத்தார்கள்.

அந்த போராளி அமைப்பு அந்நாளைய அரபு தாதா ஜோர்டானால் உருவாக்கபட்டது, சவூதி,குவைத்,ஈராக் எல்லாம் அப்பொழுது பணக்கார சட்டை தைத்துகொண்டிருந்தன, அதிகம் எதிலும் ஈடுபடமாட்டார்கள். அன்று லெபனான்,சிரியா,ஜோர்டான், எகிப்து இவர்கள்தான் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல், போராளிகளுக்கு அடைக்கலம் என சகலமும்.

ஆயுதம் ஒன்றும் இல்லை என்றால் பேரிச்சம்பழ கொட்டையாவது அல்லது ஓட்டக சாணியினையாவது இஸ்ரேல் மீது வீசி எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருப்பார்கள்.

அப்படி ஜோர்டான் மன்னரின் பரம ஆசியுடன் தொடங்கபட்ட இயக்கம் அது, பாலஸ்தீன போராளிகுழு. ராணுவத்தில் இஸ்ரேலியரை வெல்லமுடியாவிட்டாலும், ராணுவத்தினர் தனியாக வரும்பொழுது நொறுக்கிவிட வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர்கள், ஆனால் எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

இஸ்ரேலை பொறுத்தவரை எல்லோருக்கும் ராணுவ பயிற்சி உண்டு, அதாவது நாம் ரேசன் கார்டுக்கோ அல்லது அதார் கார்டுக்கோ அலைவது போல அவர்கள் எல்லோரும் கண்டிப்பாக ராணுவபயிற்சிக்காக சென்றிருப்பர். யுத்தம் என்றால் எல்லோரும் துப்பாக்கி தூக்கி ஆகவேண்டும், மற்ற காலங்களில் வேறு வகை தொழிலில் ஈடுபடலாம்.

அப்படி இஸ்ரேலியர்கள், அதாவது பல போர்களில் பங்குபெற்ற ராணுவவீரர்கள் உள்பட பலர் இஸ்ரேல் சார்பாக ஓலிம்பிக் விளையாட அன்றைய மேற்கு ஜெர்மனிக்கு சென்றனர், அது 1972ம் வருடம் ஆகஸ்ட் 16 ‍ செபடம்பர் 11 வரையான காலம்.

அப்படியான இஸ்ரேல் குழுவினை கண்ணிவைத்து, பாலஸ்தீன போராளிகள் மேற்கு ஜெர்மன் சென்றது. அன்றைய காலத்தில் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் பாலஸ்தீன் போராளிகளுக்கு அலுவலகமே இருந்தது, பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் அவ்வகை தீவிரவாதிகள் ஏதும் தாக்குதலில் ஈடுபடமாட்டார்கள், ஈடுபட்டால் ஒழித்துகட்டபடுவார்கள்.

தூக்கத்தை தொலைத்துவிட்ட அமைப்புத்தான் மொசாத், ஆனால் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில் இருந்த காலம், கொஞ்சம் அசந்தார்கள். ஆனால் பாலஸ்தீனர்கள் அசரவில்லை, நேரடியாக களம் இறங்கினால் மாட்டிவிடுவோம் என்பது தெரிந்ததால் அன்று ஒரு சாத்தானை உதவிக்கு அழைத்தார்கள், அதுவும் தரிசனமானது.

அதாகபட்டது ஹிட்லருக்கு பின்னும் அவருக்கு பெரும் ஆதரவு ஜெர்மனில் இருந்தது, அதில் சிலர் தீவிரமாக இணைந்து “நியோ நாசி” என்று, அதாவது புதிய நாஜிக்கள் என ஞானஸ்நானம் பெற்று, இயக்கம் வளர்த்தனர் (இயக்கம் ரகசியமாக இன்னும் உண்டு), ஹிட்லரே வழிகாட்டி, பின் எப்படி கோட்பாடுகள் இருக்கும்? அதேதான்,
ஆரியர் வாழ்க, ஆரியம் ஆள்க, கண்டிப்பாக யூதம் ஒழிக.

இவர்களும் பாலஸ்தீன போராளிகளும் இணைந்து, அங்கு விளையாட சென்ற‌ 11 இஸ்ரேலிய வீரர்கள், 5 பயிற்சியாளர்கள் என மொத்தம் 20 பேருக்குமேல் பிடித்து வைத்து, இஸ்ரேலுடன் பேரம் பேசினர்.

மொத்தமாக எல்லா கைதி போராளிகளை (கிட்டதட்ட 500 பேர்) விடுவிக்க வேண்டும், பணம் வேண்டும் என ஏகபட்ட கோரிக்கைகள். அதன்படி ஒரே ஒரு கோரிக்கை மட்டும்தான் அவர்கள் வைக்கவில்லை, அதாவது இஸ்ரேல் ராணுவத்தை கலைத்துவிடுங்கள்.

அன்று இஸ்ரேல் பிரதமர் கோல்டா மேயர், நமது இந்திரா காந்திக்கே பாடம் எடுக்க கூடியவர், கால அவகாசம் கேட்டு இழுத்துகொண்டிருந்தார். போராளிகளோ ஏதும் செய்து அதிர்ச்சி வைத்தியம் செய்யும் அவசரத்தில் அனைவரையும் கொன்றுவிட்டு “பாலஸ்தீனம் வாழ்க” என சொல்லிகொண்டு தப்பினர்.

Image may contain: one or more people, crowd and outdoorஅது “கருப்பு செப்டம்பர்” என இஸ்ரேலிய வரலாற்றில் பதிந்தும் போனது, தடைபட்ட ஒலிம்பிக் எப்படியோ ஒப்புக்கு நடந்தது. ஜெர்மனில் மீண்டும் யூத உயிர்கள் பறிக்கபட, உலகம் கண் கலங்கிற்று.

அன்று இஸ்ரேல் இல்லை, மொசாத் இல்லை, யூத ராணுவம் இல்லை ஜெர்மனியில் செத்தோம், இவ்வளவு வலிமை பெற்ற பின்னும் சாகவேண்டுமா? பின் எதற்காக இவ்வளவு பாடுபட்டு இஸ்ரேலை உருவாக்கி வைத்திருக்கின்றோம்? என ஏராளமான கேள்விகள் ஹீப்ரு மொழியில் கேட்கபட்டன.

அவமானத்தில் சிவந்தார் கோல்டா மேயர், அதன் சமீபத்தில்தான் இஸ்ரேல் போரில் தூள்பறத்தி இருந்தது. களத்தில் செய்யமுடியாததை முதுகில் செய்துவிட்ட அவமானம் அவருக்கு பெரும் துயரமானது.

ஒரு காலத்தில் சிங்கள அரசு இந்தியாவிடம் ஈழபோராளிகளை ஒப்படையுங்கள் என ஈனஸ்வர முணுமுணுப்பில் கேட்டது போலவோ அல்லது இந்திய அரசியல்வாதிகள் மைக்கினை கண்ட இடங்களில் எல்லாம் பாகிஸ்தான் சில தீவிரவாதிகளை ஒப்படையுங்கள் என முழங்குவதை போலவோ கோல்டா மேயர் மூக்கு சீந்தி அழவில்லை.

அது இஸ்ரேலில் சாத்தியமுமில்லை, அப்படி செய்திருந்தால அவருக்கு ஜெருசலேம் உணவகத்தில் ரொட்டி சுடும் வேலை கூட கொடுக்கமாட்டார்கள், பின் எப்படி பிரதமராக இருக்கமுடியும்? அதனால் உத்தரவிட்டு பதிலுக்காக காத்திருந்தார். மொசாத்திடம் பொறுப்பு ஒப்படைக்கபட்டது.

ஏராளமான போராளி குழுக்கள் பாலஸ்தீனத்தில் உண்டு. சம்பவம் நடந்தது மற்றொரு நாடு. ஒரு குண்டூசி தகவலும் இல்லை. மொசாத்தின் வலை அரபுலகில் மட்டுமே அன்று உண்டு. யார் என கண்டுபிடித்து எப்படி தண்டிப்பது?

மும்பை தாக்குதலில் கசாப்பை பிடித்து பல்லாண்டுகள் கழித்து தூக்கிலிடுவது, மும்பை தொடர்குண்டுவெடிப்பில் 20 ஆண்டுகாலம் கழித்து தூக்கிடுவது எல்லாம் மாமன்னன் ஹமுராபி காலத்துக்கு முன்பே உள்ள ஸ்டைல், அதாவது நமது பாணி.

யார் அடிமட்டமோ அல்லது எவன் அகபட்டானோ அவனை மட்டும் குற்றவாளி என நிறுத்தி வைத்து “நீதியினை நிலைநாட்டுவோம்”, பெருந்தலையினை எட்டி கூட பார்க்கமாட்டோம்.

ஆனால் மொசாத் அப்படி அல்ல, சுட்டவனை அது தேடவே இல்லை. ஆனால் சுட திட்டமிட்டு கொடுத்த கும்பலின் தலைவன் அவனது வலதுகை, இடதுகை, அல்லகக்கை என தேடி அலைந்தது.

தலைவனை வெட்டு படை சிதறும், வீணாக சிப்பாயோடு ஏன் சண்டை என்பது அவர்கள் சித்தாந்தம்.

அவ்வாறாக டாக்டர் ஷ்ம்சாரி இவர் பாரீஸ் பிரான்சில் இருந்தவர், இன்னும் சிலர் லெபனான், அந்நாளைய பின்லேடன் அபு ஹாசன் இவர் எங்கிருக்கின்றார் என்றே அன்று தெரியாது.

இவர்கள்தான் பெரும் தலைகள் என கண்டறிந்து உறுதிபடுத்தினார்கள், இனி இவர்களை அவர்களின் கோட்டைக்குள் புகுந்து தூக்கவேண்டும்.

ஷம்சாரி ஈழபுலிகளின் ஒரேபலம் ஆண்டன் பாலசிங்கம் போன்றவர், தொட்டால் பெரும் சிக்கல், லெபனான் அன்று கடும் பாதுகாப்பு தேசம் (இன்றும் அப்படியே), இன்னொருவர் எங்கிருக்கின்றார் என்றே தெரியாது.
ஆனால் மொசாத் நம்பிக்கையோடு களமிறங்கியது, அது இன்று கிறிஸ்தவர்கள் சொல்லும் வசனம்தான், ஆனால் மாற்றி சொன்னார்கள்.

“இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மொசாத் உறங்குவதே இல்லை”, சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

ஓநாய் மொசாத் களமிறங்கியது, மோப்பம் பிடிக்க ஆரம்பித்து பின் தான் ஓநாய் அல்ல, புலி என நிரூபித்தது, எப்படி?

தொடரும்…

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s