இதுவரை உலகம் கண்ட மன்னர்களில் பெரும் பெயரும் வீரமும் பெற்றவர்கள் அதிகம், ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்து முத்திரை பதித்தவர் குறைவு.
32 ஆண்டு வாழ்ந்த அலெக்ஸ்ஸாண்டர் 15 ஆண்டுகாலம் போரிலே கழித்தவர், அனுபவித்து வாழ்ந்திருக்கவேண்டிய ஜூலியஸ் சீசரும் அண்டனியும் கிளியோபாட்ராவிற்காகவே இறந்தார்கள,
நெப்போலியன் ஒரு அறை ஒரு கட்டில், 4 புத்தகம் என எளிய வாழ்க்கை வாழ்ந்தவன்
இந்திய அரசர் அசோகரோ ஒரு துறவியின் மனநிலைக்கு மாறினார், தென்னிந்திய மாபெரும் அடையாளம் ராஜராஜ சோழனின் அரண்மனை இருந்த இடம்கூட தெரியவில்லை.
(தமிழக மன்னர்கள் ஆலயம் கட்டி, அதிலொரு மூலையில் அவை நடத்தினார்களே தவிர, தனக்கான மாளிகை கட்டவில்லை)
அதாவது குருபகவான் உச்சியில் இருந்தாலும், சுக்கிரன் அதளபாதாளத்தில் தலைகீழாக கிடந்தார், எதனையும் அனுபவிக்க விடவில்லை.
ஆனால் உலகிலே வாழ்வாங்கு வாழ்ந்த முதல் மன்னன் சாலமோன், சாலமோன் மகா ஞானி, யூதரல்ல்வா? அதுவும் வரம்பெற்ற யூதன், ஒரு காலமும் இனி யாரும் தொடமுடியாத உயரம் அவர், அவர் கட்டிய ஆலயமும், அவர் அமைத்த சிம்மாசனமும், அவருக்கு மங்கா புகழ் கொடுத்தன என்பார்கள்.
மகா ஆச்சரியமாக ஷாஜகானுக்கும் அதே வாய்ப்பு கிடைத்தது, விசித்திரமான வரலாறு அது.
அவரின் முப்பாட்டன் காலத்திலே இந்தியாவில் மொகல் ஆட்சி தொடங்கிற்று, ஷாஜகான் 5ம் மன்னராக ஆட்சிக்கு வரும்பொழுது அது பெரும் சக்தி ஆயிற்று, எதிரி என யாருமில்லை, வியாபார வெள்ளையர் வரை அவனுக்கு வரி கட்டினர், எதிரியே இல்லாத பணக்கார மன்னன் என்ன செய்வான்?
அதுவும் அவனுக்கு கலைமனமும் ரசிக்கும் தன்மையும் இருந்தால்? கொஞ்சம் தனது பெயர் நிலைக்கவேண்டும் எனும் ஆசையும் இருந்தால்?
ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்துவிட்டு எனது பெயர் ஏன் கல்வெட்டில் வரவில்லை என கேட்பவர்கள் நிறைந்த உலகிது, ஒரு டியூப்லைட் வாங்கி அன்பளிப்பாக கொடுத்தாலும் அதில் பெயர் பதிப்பார்கள் அல்லவா?
அவன் மன்னனாக இருந்தால் கட்டங்களை அமைப்பான், அப்படித்தான் ஷாஜகானும் அமைத்தார்.

மாதிரி மயிலாசனம்
இன்று டெல்லியின் பெரும் அடையாளமான செங்கோட்டை ஆகட்டும், பாகிஸ்தானின் லாகூரின் அழகான கட்டங்களாகட்டும், டில்லி பெரிய பள்ளிவாசலாகட்டும், ஜஹாங்கீரின் அழகிய சமாதி, ஷாலிமர் தோட்டங்கள் என அவர் ரசித்து ரசித்து உருவாக்கிய கலை வடிவங்கள் காலத்தை கடந்தவை.
அதனினும் டெல்லி அரண்மனை இன்றளவும் கலைநயத்திற்கு சவால் விடுவது, ஆசியாவின் மிக அழகான அரண்மனை என முதலிடத்தில் இருப்பது.
அவற்றை எல்லாம் பாருங்கள், ஒரு விதமான ஈர்ப்பு கிடைக்கும், மனம் அதில் ஏதோ ஒரு நிறைவை காணும், இதுதான் ஷாஜகானின் கலை மனம்.
அப்படித்தான் ஆசை மனைவி, 12 உயிர் காதலி (மும்தாஜின் ஆருயிரும் இவரிடம்தான் இருந்தது) மும்தாஜிற்காக அவர் கட்டிய தாஜ்மகால் உலக பிரசித்தி பெற்று என்றென்ன்றும் நிலைத்து நிற்பது, உலகிற்கு காதலின் சின்னமாய் இந்தியா கொடுத்த அற்புத அடையாளம் அது.
அதை காணவேண்டும் என ஆசையில்லாத முற்றும் துறந்த முனிவர்கள் கூட அரிது.
தாஜ்மகாலை போலவே ஷாஜகானின் இன்னொரு மாபெரும் அடையாளம் “மயிலாசனம”, அதாவது அழகான ஒரு அரியணையை சுத்ததங்கத்தில் செய்து (இரு மயில்கள் இணைந்திருக்கும் தோற்றமது), அதை நவரத்தினங்களால் அழகுபடுத்தி அதன் உச்சத்தில் கோஹினூர் வைரத்தை பதித்து, முத்துக்களால் வெண்கொற்றகுடை செய்து உலகின் மிக அழகான அல்லது விலைஉயர்ந்த அரியாசனமாக அதனை அமைத்தார்.
உலகெல்லாம் இருந்து அதனை காண்பதற்கே மன்னர்கள் வந்து பெருமூச்சு விட்டார்கள் என்பது வரலாறு, பின்னாளில் மொகல்வம்சம் சிதற ஈரான் மன்னன் வந்து முதலில் தூக்கியது அந்த மயிலாசனத்தைதான், இன்றுவரை அதன் முடிவு தெரியவில்லை, ஈரானில் இன்று காட்டபடும் மாதிரி கூட அதன் அழகில் கால்வாசியில் செய்யபட்ட போலி ஆசனம்தான்,
அதாவது இப்படித்தான் இருந்திருக்கும் என்பது இப்போது காட்டபடும் மயிலாசனம், உண்மை மயிலாசனத்தின் கால்வாசி அழகுதான், ஆனால் அதுவே மகா உச்சம்.
அந்த போலி மயிலாசனத்தை கூட இந்தியாவிடம் ஈரான் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்பு எழும், இப்பொழுது அகண்ட பாரதம், கோட்ஸே என சர்ச்சைகள் எழும் நேரம், அது ராமரின் ஆசனமாக இருந்தால் கிளம்பி இருப்பார்கள், ஷாஜகான் ஆசனம் எப்படி? இனி அவ்வளவுதான்.
ஆனால் இந்திய செல்வத்தை உலகிற்கு காட்டியது மயிலாசனம். தாஜ்மஹால் இந்தியாவில் கலை அழகினை காட்டுவது, செங்கோட்டை ஒரு கம்பீரத்தை காட்டுவது,
இம்மூன்றும் ஷாஜகானால் அமைக்கபட்டது என்பதுதான் பெருமைபடதக்கது.
இன்றுவரை இந்திய அரசின் திருவிழாக்கள் அந்த செங்கோட்டையில்தான் கொண்டாடபடுகின்றது.
அப்படி அழிக்க முடியாத முத்திரை பதித்து 15ம் நூற்றாண்டிலே இந்தியாவை அற்புதமான கலைகளஞ்சியமாக உருவாக்கினான்.
ஆனால் இறைவன் சோதிப்பவன் அல்லவா?, அப்படித்தான் கலைமனம் படைத்த மன்னர்களையும் சோதித்தான், கடைசிகாலத்தில் அவர்களை மிக மிக சோகமாகவே இறக்க வைத்தான்.
அந்த விளையாட்டிற்கு முதலில் கிடைத்தவர் மாமன்னன் சாலமோன், அவர் அமைத்த முதலாவது யூத ஆலயம் அந்நாளைய உலகின் அழகான கட்டங்களுள் ஒன்று, தங்கத்தாலும் உயர்தர மரத்தாலும் அழகான கற்களாலும் அவர் அமைத்த அழகிற்கு எந்த தெய்வமும் அதன் முன்னால் வந்து அமரும் என்பார்கள்,
அந்த ஆலயத்திற்கு அடுத்து பெரும் புகழ்பெற்றது அவரின் சிம்மாசனம், இரு சிங்கங்களின் உருவம் மீது பல படிகள் அமைத்து அவரும் தங்கத்தில் அதனை உருவாக்கியிருந்தார், அதன் சிறப்பும் உயர்ந்தது.
இப்படியாக கட்டத்திலும் அரியணையிலும் அழகை தேடிய இருவரும், அதனை அமைப்பதில் உலகபுகழ்பெற்று காலத்தை மிஞ்சி முத்திரையிட்ட இருவரின் இறுதிகாலமும் மாகா சோகமானது
வாரிசு போட்டியாலும், மனங்கவர் காதலிகளாலும் தடுமாறி சோகமாகவே இறந்தார் சாலமோன், இறுதிகாலம் மகா நொந்த மனது அவருடையது. இவ்வளவிற்கும் அவர் மாபெரும் ஞானி, தீராபுகழ்பெற்ற தீர்ப்புகளை வழங்கியவர், ஆனால் சொந்தவாழ்க்கை சோகமானது.
விதிவேறு மதிவேறு என்பதற்கு அவரை தவிர வேறு ஆதாரமில்லை.
ஷாஜகான் வாழ்க்கை இன்னும் விசித்திரமானது, நல்லவரா? கெட்டவரா? என இன்னும் அறியபடாத மர்மனான ஔரங்கசீப்பால் சிறையில் அடைக்கபட்டார், தனது இறுதிகாலத்தில் வெள்ளை தாஜ்மகாலுக்கு எதிர்புறம் ஒரு கருப்புதாஜ்மகால் அமைக்கபடவேண்டும் அதில்தான் தான் புதைக்கபடவேண்டும் என்ற அவரின் ஆசை நிறைவேறாமலே போனது.
ஔரங்கசீப் மட்டும் காலராவிலோ அல்லது சண்டையிலோ செத்திருந்தால் இன்னொரு தாஜ்மகால் கருங்கல்லில் கிடைத்திருக்கும், இன்னும் ஏராளமான கட்டங்கள் கிடைத்திருக்கும், அவரின் ரசனை அப்படி.
ஆனாலும் அவுரங்கசீப் மகனல்லவா? தசை ஆடிற்று, சிறையில் ஷாஜகானுக்கு தாஜ்மகாலை நோக்கி பார்க்கும் வசதியுள்ள அறையை கொடுத்தார், அதுதான் தந்தைக்கு அவர் ஆற்றிய நன்றி கடன்.
அந்த ஜன்னல் வழியாக தாஜ்மஹாலை நோக்கியபடியே நொந்தபடி பார்த்துகொண்டே இறந்து கிடந்தார் ஷாஜகான்.
தாஜ்மகாலை நோக்கி அவர் அந்திம காலத்தில் விட்ட பெருமூச்சு உருக்கமானது, ஷாஜகானை நினைத்தால் அந்த மூச்சு நம்மிடமிருந்தும் வரும்.
ஆனாலும் இறைவன் மாக விசித்திரமானவன், எல்லா கலைதுறைகளிலும் அற்புதமான கலைஞர்களை தருவான், ஆனால் அவர்களின் இறுதிகாலம் மகிழ்ச்சியாக மட்டும் இருக்காது, அதை மட்டும் இறைவன் கொடுக்கவே மாட்டான்.
அது மாமன்னனோ அல்லது அவனைபுகழ்ந்து பாடிய அற்புதமான கவிஞனோ, இந்த விதியிருந்து தப்பவே முடியாது, வரலாறு திரும்ப திரும்ப அதனையே சொல்கிறது.
அவர்கள் நிம்மதி இல்லாமல் செத்திருக்கலாம், ஆனால் அவர்களின் படைப்புக்கள் பலபேருக்கு நிமதியை கொடுக்கும், தாஜ்மகாலும் அப்படித்தான் அதனை பார்ர்போருக்கு எல்லாம் ஒரு மகிழவையும், நிறைவையும் கொடுக்கும்,
கொஞ்சம் காதல் மனதில் இருந்தால் அதனை பார்க்கும் பொழுதே உதட்டோரம் ஓர் ஆனந்த புன்னகையும் வரும்,
மானிடர் இருக்கும் வரை காதலும் இருக்கும், காதல் இருக்கும் வரை தாஜ்மகாலும் இருக்கும், அது இருக்கும் வரை ஷாஜகானும் வாழ்வார்
யோகி கும்பல் சில காரியங்களை செய்தாலும், ஏன் தாஜ்மகால் உபியிலே இல்லை என கத்தினாலும் அதனை தேடி மக்கள் கூட்டம் உலகெல்லாம் இருந்து வரத்தான் போகின்றது.
தேன் இருக்கும் பூவினை வண்டுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. அழகு இருக்கும் இடத்தை மானிட மனங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை, அதில் காதலும் சேர்ந்துகொண்டால் மக்கள் அலை அலையாக வருவார்கள்
வரலாற்றில் சாலமோனும் ஷாஜாகனும் பல ஒற்றுமை கொண்டவர்கள் என்பது மட்டும் உண்மை.
ஷாஜகான் இந்திய பெரும் அடையாளம், அது மாற்றமுடியாத மறக்க முடியாத வரலாறு.
அவர் இந்திய சாலமோன்.