ஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் : 01

Image may contain: 1 person, indoor

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும், இந்தியா என் நட்புநாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன்

காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் போல வலுவான எதிர்சக்தியோ 1990களில் இருந்திருந்தால் அத்தலைவன் வீழ்ந்திருக்க மாட்டான்

சதாமின் வீழ்ச்சி தனிமனித வீழ்ச்சி அன்று , அரபு நாடுகளின் வீழ்ச்சி அவர்களின் சுதந்திரமும் எதிர்காலமும் பறிபோன அவலத்தின் தொடக்கம்

அந்த மாவீரனின் நினைவுநாள் நாளை அனுசரிக்கும் நிலையில் அவனின் வாழ்வினை நினைத்து பார்க்கலாம்

எண்ணெய்வளமிக்க வளைகுடா பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளை பொதுவாக ஏதோ ஒரு மூலையில் நடக்கும் பிரச்சினை என தள்ளமுடியாது, காரணம் உலகின் ஒவ்வொரு வீடும் நேரடியாகவோ அல்லது மறைமுகமகாவோ அதோடு தொடர்புடயவை, அதுவும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அவை மகா முக்கியம், ஏராளமான இந்தியருக்கு பெற்றோரோ,உறவினரோ, குடும்பத்தாரோ அல்லது நண்பர்களோ யாராவது கண்டிப்பாக அங்கு இருப்பார்கள்.

நிச்சயமாக இன்று நமது இந்திய‌ பொருளாதாத்தின் முதுகெலும்பு இவைகள், அங்கு நடக்கும் சிறு பிரச்சினைகளும் நிச்சயம் நம்மை பாதிக்கும். அந்தவகையில் சதாம் வீழ்த்தபட்ட கதையினை கொஞ்சம் அலசி பார்ப்பது தவறே அல்ல, நாளையோ இல்லை விரைவிலோ பெரும் விவகாரமாக வெடிக்கும் எரிமலையின் தேற்றுவாயினை பார்க்கலாம், தேவை இல்லாத விஷயம் என கருதினால் விட்டுவிடலாம்.

உலகத்திற்கே நாகரிகத்தினை சொல்லிகொடுத்தது மெசபடோமியா, ஐரோப்பியர்கள் நாடோடிகளாக காட்டுமிராண்டிகளாக வாழும்பொழுதே மெசபடோமியா உலகின் முதல்நிலை நாடாக இருந்தது.

வற்றாத யூப்ரடீசும் டைக்கீரிசும், செழுமையான நிலமுமாக‌ அரேபியாவிற்கே உணவளித்த நாடு, வயிறு பிரச்சினை நீங்கினால் மனித மனம் கட்டங்கள் கட்டவும்,கலைகளிலும் செல்லும். அவர்களுக்கும் அப்படி சென்றது, புகழ்மிக்க பாபிலோன் தொங்கும் தோட்டமும், ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் போன்ற இலக்கியரசம் சொட்டும் படைப்புக்களும், (ஜெயமோகன், மனுஷ்,லீலா மணிமேகலை எல்லாம் நினைவுக்கு வரகூடாது) ஏராளம்.

கணிதத்தில் மேனிலை மாணவர்கள் ஆசிரியரை மனதில் தூக்கிபோட்டு மிதிக்கும் திரிகோணமிதி,அல்ஜிப்ரா எல்லாம் அவர்களின் தொடக்கம், அவ்வளவு ஏன் 1,2.. என தொடங்கும் எண்களே உலகிற்கு அவர்களால் தான் கொடுக்கபட்டது.

உலகின் முதன்முதலில் மக்களுக்கு சட்டமியற்றி ஆண்ட ஹமுராபி, தோல்வியே அறியாத அரசர்களில் ஒருவனான நெபுகாத் நேச்சர் சிங்கமுத்திரையுடன் ஆண்ட அந்த நாடு, அதன் செழிப்பினை கேள்விபட்டே மாவீரன் அலக்ஸாண்டர் மெசபடோமியா வந்தான் (இறுதியில் அதே பாபிலோனில் இறந்தான்), ஐரோப்பாவில் அன்றெல்லாம் கடும் குளிரினை தவிர ஒன்றுமில்லை,தரித்திரமான தேசங்கள். அமெரிக்கா என்ற நாட்டினை யாரும் கற்பனைகூட செய்ததில்லை.

மெசபடோமியா இன்றைய ஈராக்

எகிப்து நாகரிகத்தின் தொட்டில் என்றால் பாபிலோன் நாகரிகத்தின் தங்க கட்டில்

அக்காலத்திலே உலகின் பணக்கார‌ வல்லரசாக ஆண்டார்கள், அலெக்ஸாண்டர், ரோமானியர்கள்,செங்கிஸ்க்கான்,ஆப்கானியர் இறுதியாக துருக்கியர் என எல்லா ஐரோப்பியரும் அவர்களைகுறிவைத்து அடித்தார்கள், துருக்கி சாம்ராஜ்யத்தில் ஈராக் ஒரு அங்கமான பொழுது அடித்துபறித்தல் இல்லை என்றாலும், சுரண்டல் இருந்தது. பாபிலோன் சுரண்டபட்டு துருக்கி அழகான நாடாக மலர்ந்தது.

நவீன காலத்தில் முதலாம் உலகப்போரில் துருக்கிமன்னர் வெள்ளைகொடிகாட்ட, ஈராக்கில் பிரிட்டிஷ் கொடி பறந்தது, ஈராக்,லெபனான் தவிர மற்ற நாடுகள் பாலைவனம், அக்காலத்தில் ஒட்டகமும், பேரிச்சம்பழமும் தவிர ஒன்றுமில்லை என கண்ட பிரிட்டிசார் துருக்கி மன்னனை முறைத்துவிட்டு நடையை கட்டினர்,

அரேபியா பல துண்டுகளாக சிதறியது 20 மைல்க்கு ஒரு சுல்தான், அவருக்கு ஒரு கோட்டை, உலகில் யாரும் அவர்களை கண்டுகொள்ளவே இல்லை. (இன்று சுல்தான்கள் எல்லாம் மணிக்கொரு விமானம் வாங்கும் கோடீஸ்வரர்கள்)

ஐரோப்பியருக்கு ஒரு காலமென்றால்,அரேபியர்களுக்கு ஒரு காலமுண்டல்லவா?, குவைத்தில் முதலில் எண்ணெய் கண்டுபிடித்தார்கள், சூடமேற்றி சத்தியம் செய்தார்கள் “உலகின் முதல்தரமான எண்ணெய்”.

இன்று உலகில் நடக்கும் எண்ணெய் போர்களுக்கு ஒரே காரணமான 7 சகோதரிகள் (ஷெல்,பிபி…) எனும் பெரும் எண்ணெய் கம்பெனிகள் அரேபியாவில் தனியே குத்தாட்டம் போட தயாரானது, சில கம்பெனிகள் குரூப்டான்ஸ் ஆட மேக்கப் போட ஆரம்பித்தது.

அவ்வளவுதான் அமெரிக்காவில் எண்ணை எடுக்க அரசு தடைவிதித்தது (இன்றும் சவூதியை விட அலாஸ்காவில் ஆயில் ரிசர்வ் அதிகம்), ராக்பெல்லர் எனும் அமெரிக்க எண்ணைகிணறுகளின் அதிபர் முதல்பணக்காரர் தகுதியை இழந்தார், அரேபிய சுல்தான்கள் ஒரே இரவில் உலக கோடீஸ்வரரானார்கள்.

மற்ற அரேபிய நாடுகளுக்கும் ஈராக்கிற்கும் வித்தியாசமுண்டு, அன்று உணவில் தன்னிறைவு பெறும் நாடு, இதில் எண்ணெய் பணமும் கலந்தால் விக விரைவில் மிகபெரிய வல்லமை கொண்டநாடாக மாறும், எகிப்தில் அன்று மாவீரன் கர்ணல் நாசர் வேறு பிரிட்டனின் மூக்கை சூயசில் உடைத்ததில் பிரிட்டன் பிளாஸ்த்திரி போட்டு அழுதுகொண்டிருந்தது.

ஆனால் மேற்குலகத்திற்கு சில பெரும் ஆறுதல்கள் உண்டு, இந்தியாவின் முன்னேற்றத்தை,அரசியலை சாதிகள், ஊழல்கள் பார்த்துகொள்ளும், பாகிஸ்தானை அதன் மதவாதிகள் பார்த்துகொள்வார்கள், சில சூதாட்ட கிளப்புகளை தொடங்கிவிட்டால் முடிந்தது சீனா. பல இனங்கள் வாழும் ஈராக்கினை அந்த “குழு”க்களே பார்த்துகொள்ளும்.

ஆனால் கணிப்பினை பொய்யாக்கி ஒரு மானமுள்ள மனிதன் எழுந்தான், அரபுலகத்தின் அன்றும் சரி இன்றும் சரி, எண்ணெய் பணம் எவ்வளவு என்பது அரசர்களுக்கும் அந்த 7 தேவதைகளுக்கு மட்டுமே தெரியும், அரசரின் “சின்ன அரண்மனைகளுக்கு” கூட தெரியாத ரகசியம். ஆனால் அந்த மானமுள்ள சதாம் சொன்னது ” ஈராக்கியரின் எண்ணெய் ஈராக்கிய மக்களுக்கே”

இந்த முழக்கமே அவரை வாழ்வாங்கு வாழவும் வைத்தது,சிங்கம் போல சுற்றவும் வைத்தது, பாவம் எலியினினை போல பொந்தில் பிடிபடவும், கொல்லவும் வைத்தது.

எல்லா மக்களும் இனஉணவும் மானமும் மிக்கவர்கள்,சரியான தலைவன் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் அவன்பின்னால் கிளர்ந்தெழுவார்கள். அந்த தலைவன் நல்லதலைவன் என்றால் எந்த நிலையிலும் கொள்கை மாறமாட்டான், இறுதிவரை போராடுவான், சதாமும் அப்படித்தான் வாழ்ந்தார்.

ஈழத்திலும் பிரபாகரன் அப்படித்தான் உருவானார், தொடக்ககால மக்கள் எழுச்சியின் அடையாளம் அவர்.பின்னாளில்தான் குழம்பி பெரும் பாதாளத்தில் வீழ்ந்தார்

உறுதியாக சொல்லலாம் 1986க்கு முன்பிருந்த அந்த பிரபாகரனை எனக்கு பிடிக்கும், எல்லோருக்கும் பிடிக்கும். 16 வயதிலே எப்படியாவது தமிழர்களுக்கு தீர்வு வேண்டும், அதற்கு உயிரே போனாலும் பரவாயில்லை என மகா துணிச்சலாய் கிளம்பிய அந்த பிரபாகரன் உருக்கமாக பார்க்கபடவேண்டியவர்

ஆனால் ஈழ தமிழ் அரசியல்வாதிகள், தமிழக அரசியல்வாதிகள், அந்நியநாட்டு தொடர்புகள் எல்லாம் அந்த இளம் வீரனை மகா தவறுதலாக நடத்தி அழித்தும் விட்டன, அவரும் பிற்காலத்தில் மாறிவிட்டார். எல்லாம் நாசமாயிற்று

ஒரு ஸ்பூன் கச்சா எண்ணையோ அல்லது நாசமாய் போன திரிகோணமலை யாழ்ப்பாணம் பக்கம் அமைந்திருந்தாலோ இல்லை இந்தியாவில் ஒரு நல்ல உறுதியான தலைவர் இருந்தாலோ வரலாறு மாறியிருக்கும், தமிழீழம் கனடாவிற்கு நாடு கடந்திருக்காது, ஆனால் விதி அது அல்ல

ஆட்சிபொறுப்பிற்கு வந்ததும் மாறிவிடும் தலைவர் அல்ல சதாம், ஹமுராபி,நெபுகாத் நேச்சரின் வாரிசு, சொன்னதை செய்தார். ஒரு இரும்பு தலைவனால் மட்டுமே ஆளகூடிய தேசம் அது. நாட்டினை அமைதியாக்கினார், கிட்டதட்ட ஐரோப்பிய நாடுகளை விட பொருளாதார நிலையில் ஈராக்கை மேன்மையாக்கினார், வளம்,வாழ்வு,சுபிட்சம்.

இது மேற்குலகிற்கு பிடித்ததோ இல்லையோ,பக்கத்து அரசர்கள் மனதில் பெட்ரோல் ஊற்றியது. இனி நமது நாட்டு மக்களும் மக்களின் எண்ணெய் மக்களுக்கே என்றால் எதிர்காலம் என்ன ஆவது, சதாம் தொலையவேண்டும், கண்டிப்பாக தொலையவேண்டும்

சதாம் உறுதியாக நின்றார், அவரது தனித்துவம் அதுதான்,யதார்த்தமும் அதுதான் . உதாரணம் வேண்டுமென்றால் நமது வீட்டில் தண்ணீர் குறை, பக்கத்து வீட்டுக்காரன் போர்வெல்லில் நல்ல தண்ணீர் என்றால் அவனிடம் சென்று உரிமை கொண்டாட முடியுமா?, அவன் போர்வெல் அவன் உரிமை.

தண்ணீருக்கே சண்டை என்றால், எண்ணெய் தங்கத்தின் போர்வெல்லுக்கு ?? எவ்வளவு நடக்கும்.

சதாமும் அதேதான் சொன்னார் ஈராக்கிய‌ பெட்ரோல் எங்கள் உரிமை, 7 கம்பெனியும் அவர்களின் குரூப்டான்சர்களும் அவர்களின் நாட்டு அரசிடம் மூக்கு உறிஞ்சி அழுதார்கள்.

அந்த நாடுகள் எல்லாம் தமது மக்கள் உலகில் எங்கு சென்றாலும் பிழைக்க உதவி செய்வார்கள், நமது நாட்டை போல நமது எல்லைக்குள்ளே மீன்பிடிக்ககூடாது, விவசாயத்தை கண்டிப்பாக விட்டுவிடு, முடிந்தால் சாவு என்றேல்லாம் மக்கள் வயிற்றில் அடிக்கமாட்டார்கள்.

மேற்குலகம் அரேபிய மன்னர்கள், பெரும் “கையை” கொண்ட நாடு எல்லாம் ஒருங்கிணைந்து தருணம் பார்த்துகொண்டிருந்தது, ஆனால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை. ஈராக்கில் அமைதி,வளம் ஆகவே தீவிரவாதமில்லை.

ஆனால் பாவம் சதாமோ அரபுகளின் தலைவரான நாசர் விட்டுசென்ற பணிகளை தொடர நினைத்தார், அப்பொழுது பக்கத்து நாடான ஈரானில் ஒரு பெரும் புரட்சி ஏற்பட்டது, அதையெல்லாம் சதாம் கண்டுகொள்ளவில்லை, ஆயினும் அப்புரட்சியில் பின்மண்டையில் அடிபட்ட அமெரிக்க‌ நாட்டாமைக்கு பெரும் அவமானம்.

கிட்டதட்ட விறுமாண்டி கமலஹாசன் போல வஞ்சக விலை சதாமுக்கு விரிக்கபட்டது, விரித்தது கொத்தாளர் அமெரிக்கா,

இன்று ஈராக்கிய மக்களின் அவலநிலைக்கும், நடந்து கொண்டிருக்கும் கொடூரங்களுக்கும்,இன்னும் நடக்கபோகும் அநீதிகளுக்கும் அன்றே திட்டமிடபட்டது. கொத்தாளர் அமெரிக்கா

அவர்கள் ககைகாட்டியது நல்லமநாயக்கர் எனும் கோமேனி, ஈரானியர்களின் சுப்ரீம்தலைவர் அயதுல்லாலோமேனி. விருமாண்டி கமலஹாசன் போல சிக்க வைக்கபட்டார் சதாம்

தொடரும்…

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s