இம்ரான் கான் 1

Image may contain: 1 person, smiling

“பருவத்தே பயிர்செய்” என்பார்கள், “காற்றுள்ள பொழுதே தூற்று” என்பார்கள்

உரிய காலத்தில் செய்யாத எதுவும் பின்னாளில் பெரும் சிக்கலாகிவிடும் என்பதற்கு பாகிஸ்தானின் இம்ரான்கான் பெரும் உதாரணம்

மனிதர் அக்காலத்தில் கொண்டாடபட்ட விதம் கொஞ்சமல்ல, பெண்களிடம் அவருக்கு இருந்தது போல இன்னொரு நடிகனுக்கோ விளையாட்டு வீரனுக்கோ கொஞ்சமுமில்லை

பிரிட்டன் இளவரசி டயானாவின் வரவேற்புக்கு கொஞ்சமும் குறைவில்லாதது இம்ரான்கானுக்கு பெண்களிடையே இருந்த கிரேஸ்.

இன்று விஜயகாந்த் போல தோற்றுபோன அரசியல்வாதியாக இருந்தாலும் அன்று அவருக்கு இருந்த வரவேற்பும் கொண்டாட்டமும் பாகிஸ்தானிலும், உலகளாவிய பெண்கள் வட்டாரத்திலும் இருந்த அளவு இன்னொருவருக்கு இன்றுவரை இல்லை

கொஞ்சம் அவரின் வாழ்வினை பார்க்கலாம்

இந்தியா தானும் ஒரு வலுவான அணி என நிருபித்தவேளை, மிக ஆச்சரியமாக எல்லோரும் கபில்தேவை பார்த்துகொண்டிருந்த வேளையிலே கடைகண்ணால் இன்னொருவரையும் குறும்பு கண்ணால் பார்த்து ஒரு புன்னகை இழையோட கேட்டார்கள், “யார் அவர்?”

ஒரு விமர்சகர் சொன்னார் “அவர் தான் பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கான், பெரிய பட்டதாரி ஆனால் கிரிக்கெட் பிரியர், அவரை பார்த்தீர்களா? மாடலிங் செல்லவேண்டியவர்தான் செல்லவில்லை, இன்று இந்தியா கோப்பைய வென்றுவிட்டதல்லவா? இனி அவரும் பாகிஸ்தானுக்கு கோப்பையை பெற்று கொடுக்காமல் ஓயமாட்டார்”,

இம்ரான் கானும் அதே மனநிலையில் தான் இருந்தார், ஆனால் வெளிகாட்டவில்லை, அமைதியாக களத்தை விட்டு வெளியேறினார், ஆனால் பலரின் இதயங்களில் அன்றே குடியேறினார்

கிரிக்கெட் ஆர்வம் பரவ ஆரம்பித்தது, போட்டிகள் பெருகின, தொலைகாட்சி பெருகியது, அவரும் உலகெங்கும் தெரிய ஆரம்பித்தார்,

இந்தியாவிலும் அவர் பாகிஸ்தானி என்பதை மறந்து டிவியியை பார்த்து எதிரணி என்பதையும் மறந்து “இதோ இம்ரான்கான்” என கத்த‌ ஆரம்பித்தனர்,.

உலக பெண்கள் எல்லாம் தேட ஆரம்பித்தனர், அதுவும் லண்டன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகைகளுக்கெல்லாம் அவரை பிடித்து போயிற்று. உலகெல்லாம் பிரபலமானார் கான்

அந்த கால கட்டங்கள் பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுதம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தது, பல வகையான சிக்கல்களை சமாளிக்க மக்களின் கவனத்தை திருப்ப ஒரு விஷயம் தேவை பட்டது, அதற்கான முகமாய் யாரையாவது தேடும் பொழுதுதான், பசு நெய்யாக கறந்தது போல இம்ரான்கான் கிடைத்தார்,

கடுமையான விளம்பரம் பாகிஸ்தானுக்குள் அவரது முகத்திற்கு கொடுக்கபட்டது, அதற்கு சற்றும் குறையாத விளம்பரங்களை வெளிநாட்டு பத்திரிகைகளும் கொடுத்தன.

சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், மனிதர் அழகன் தான், வெள்ளையர் என்றும், ஆசியர் என்றும் சொல்லமுடியாத ஒரு சாயல், தோள்வரை நீண்ட முடி, தீர்க்கமான கண்ணும், கூர் மூக்குமாய் ரோஜா நிறமுமாய் அவரை கண்டவர்கள் ஒரு கணம் நின்றுவிட்டுத்தான் செல்வார்கள்.

1980 , 90களில் பலர் கவனித்திருக்கலாம், டி.வியில் கிரிக்கெட் பார்க்கும் பொழுது நீங்கள் பார்த்திருக்கலாம், இம்ரான் பிடறி முடி அசைய ஓடிவந்து பந்துவீச துள்ளும் பொழுது, சில பெண்களின் உதடுகள் ஒட்டி பிரியும் (எங்கேயும், எப்போதும்,சங்கீதம் சந்தோசம் பாடலில் ஜெயபிரதாவை நினைத்து கொள்ளுங்கள்), இதை கவனிக்கும் சில பெருசுகள் அவசரமாக கிரிக்கெட்டினை பழிப்பதோ அல்லது இளம்பெண்ணை அணைந்த அடுப்பு பக்கம் அனுப்புவதோ நடக்கும்,

அனுப்பிவிட்டு நம்மிடம் மெதுவாக கேட்பார்கள், “யார்ல இவன், பையன் அழகாத்தான் இருக்கான்”.

தமிழகம் மட்டுமல்ல, உலகெல்லாம் அப்படித்தான் சொல்லி கொண்டிருந்திருக்கின்றார்கள். ஆச்சரியமாக கிரிக்கெட் விளையாட நாடுகளில் கூட அவர் தேடபட்டிருக்கின்றார்

சார்ஜாவோ, லண்டனோ,மெல்போர்னோ, மொகாலியோ எங்கு பாகிஸ்தான் ஆடினாலும் அவருக்காக ஒரு தனி கூட்டம் சேர ஆரம்பித்தது, அவர் கையில் பந்தினை எடுத்தால் விசிலும் கைதட்டலும் பறந்தது. அந்த உற்சாகத்தில் இம்ரான் ம்ட்டையும் எடுத்து விளாசி ஆல்ரவுண்டர் ஆனார்.

இந்தியா உலககோப்பை வென்ற சாம்பியன், சாம்பியனை வீழ்த்தினால் தாங்கள் தானே சாம்பியன். அதன் பின்னர் இந்திய பாகிஸ்தான் போட்டிகளில் அணல் பறக்கும். முந்தைய இங்கிலாந்து ஆஸ்திரேலிய மோதல் பின்னுக்கு சென்று இந்தியா பாகிஸ்தான் அணி மோதல் ஒரு போராகவே மாறிற்று.

இதற்கு தீனி போட புது பணக்கார அமீரகம் சார்ஜா கோப்பை வேறு தொடங்கிற்று, அணல் பறக்கும், கபில்,சிரிகாந்த என இந்த பக்கமும் இம்ரான் கான், மியாண்டட் என அந்த பக்கமும் சிங்கமும் புலியும் அதிகம். பெரும்பான்மை ஆட்டங்களில் பாகிஸ்தானுக்குதான் வெற்றி, காரணம் மைதானம் முழுக்க ஒலிக்கும் குரல் “இம்ரான் கான் ஐ லவ் யூ.. இம்ரான் டைகர் யு கேன்”, இன்னும் ஏராளம்.

ஒரு முறை கடைசி பந்தில் 4 ரன் என்ற நிலையில், சிக்சர் அடித்து கலக்கினார் ஜாவித் மியாண்டட், இன்னும் பரம எதிரி இந்தியாவுடன் அறிமுக போட்டியிலே கலக்கினார் வாசிம் அக்ரம் (சிரிகாந்திடம் கேளுங்கள் சொல்லுவார் 🙂 ), இப்படி பலபேர் இடையில் வந்தாலும், எந்த இடைஞ்சலுமின்றி தனக்கான தனி இடத்தில் நின்றார் இம்ரான்கான்.

அது பூட்டோவின் பாகிஸ்தான், கிட்டதட்ட ஒரு பாகிஸ்தானின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வந்தார் இம்ரான்கான். உலக பெண்களின் கனவு கண்ணன் பட்டம் வேறு, ஒரு பேட்டியில் அவரே கூச்சத்தோடு சொன்னார் “ஒரு நாளைக்கு 2000 முதல் 4000 காதல் கடிதங்கள் வருகின்றன”.

(ஒரு நாளைக்கு குறைந்தது 2000..அதுவும் தானாக…சுக்கிரன் எங்கு இருந்திருக்கிறார் பார்த்தீர்களா? அன்று இணையம் இல்லை இமெயில் இல்லை, முகநூல் , டிவிட்டர், கைபேசி என எதுவும் இல்லை. இருந்திருந்தால் கணக்கு இன்னும் எகிறியிருக்கும்)

எப்படியும் ஒரு மனிதனுக்கு சோதனை காலம் வருமல்லவா?, 1987ல் கண்டிப்பாக பாகிஸ்தானுக்கு உலககோப்பை பெற்றுதருவார் என நம்பியிருந்தனர் பாகிஸ்தானியர், ஆனால் விதி வேறு வடிவில் விளையாடியது.

உலகம் கொண்டாடிகொண்டிருந்த அவருக்கு, அரேபிய இளவரசிகள் வரை சம்பந்தம் பேசபட்ட அவருக்கு விதி மாறிற்று, அவரின் தாயாருக்கு புற்றுநோய் தாக்கியது, முதன் முறையாக மனம் உடைந்தார், உடைந்த மனத்தோடு விளையாட முடியுமா?, எழுச்சி கண்ட ஆஸ்திரேலியா கோப்பையை பெற்றது மிக முக்கிய காரணம் டேவிட் பூன், புது பிளேயர் ஸ்டீவ் வா. வெஸ்ட் இண்டீசின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று.

மனம் வெறுத்தார் இம்ரான்கான், தோல்வி கூட அவ்வளவுபாதிக்கவில்லை, அவரது ரசிகர் கூட்டம் என்ன அவரது ஆட்டத்தையா ரசித்தது? அவரைத்தானே ரசித்தது. கோடிக்கணக்கான ரசிகைகளையும், இன்னும் கிரிக்கெட் உலகத்தையே கண்கலங்கவிட்டு ஓய்வினை அறிவித்தார்.

உண்மையில் அவரது தாய்பாசம் சாதாரணமானதல்ல, எவ்வளவு பெரிய பிரபலம்?, ஒரு வார்த்தை சொன்னால் உங்கள் அம்மாவை பார்த்துகொள்ள நான் தயார் என எத்தனை பெண் டாக்டர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் (நிற்கவும் செய்தனர்), ஆனால் வெல்லமுடியாத நோயில் வீழ்ந்த தாயின் இறுதிகாலத்தில் கூட இருக்க மனிதர் ஆசைபட்டார், சகலத்தினையும் துறந்தார்.

கிரிக்கெட் உலகம் அவரை வழி அனுப்பி வைத்தது, ஆனால் பெண்கள் உலகம் அவரை சுற்றிகொண்டே இருந்தது, காரணம் இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தானின் தேசிய வழக்கமான ராணுவபுரட்சி ஏற்பட்டது, ஜென்ரல் ஜியா உலஹ‌க் அதிபரனானார், இம்ரான் கானோ முத்துபட ரஜினி போல கிட்டதட்ட சாமியார் ஆயிருந்தார், தாயாரும் இறுதிகட்டத்தினை எட்டினார்கள்.

ஜியா உல்கக் ஒரு முரடர், பூட்டோவையே அசால்ட்டாக தூக்கி தொங்கவிட்டவர், தொங்க என்றால் தூக்கில் இட்டவர். மக்களுக்கு தன்னை பிடிக்காது என்பது அவருக்கே தெரியும், அதனால் என்ன? மக்களுக்கு பிடித்த ஒருவருக்கு நாம் நண்பராகிவிட்டால் முடிந்தது பிரச்சினை என நினைத்தார், வேறு என்ன வழி? அதுவேதான் இம்ரான் கானை தேடினார்.

நீங்கள் ஏன் மறுபடி கிரிக்கெட் ஆடகூடாது, வாருங்கள். கிட்டதட்ட அது உத்தரவு.

இம்ரான் கானுக்கோ மற்றுமொரு ஆசை வந்தது, புற்றுநோயின் சிகிச்சைக்காக உலகெங்கும் தாயோடு சென்றபொழுதுதான் பாகிஸ்தானில் நவீன சிகிச்சை மையம் இல்லை என்ற உண்மை அது. அதனால் புற்றுநோய் மருத்துவமனை கட்டும் ஆவலில் இருந்தார்

லண்டன் படிப்பு, பணம் கொட்டும் கிரிக்கெட், ஏராளமான ரசிகைகள், உல்லாச வாழ்க்கை என இருந்தவருக்கு தனது பாசமான தாயின் நோய் சமுகத்தின் சில கோரமுகங்களை காட்டிற்று, மனிதர் புத்தரின் நிலைக்கு வந்திருந்தார்.

ஆனால் ஜெனரல் ஜியா புறா, போஸ்ட், பத்திரிகை, அமைச்சர்கள் என சகல தூதுக்களையும் விட்டுகொண்டிருந்தார். அவருக்கு தேவை இம்ரான்கான் மீண்டும் வரவேண்டும் மக்கள் பாகிஸ்தான் அரசியலை கவனிக்க கூடாது

36 வயதினை கடந்திருந்தார் இம்ரான்கான் ஆனால் ஆள் அப்படியே இருந்தார், கிரிக்கெட்டில் சிரமான வயதுதான், ஆனால் முயற்சி செய்து பார்க்கலாம். அனுபவமான மியாண்டட், அதிரடி இளம்வீரர் இன்சமாம், அற்புதவீரர் அன்வார், உலகின் சிறந்த புவுலர்கள் அக்ரம்,வாக்கர் யூனுஸ் எல்லோரும் அழைக்கின்றார்கள், போய் ஆடலாம்.

ஆனாலும் இம்முறை தனக்காக அல்ல, நாட்டிற்காக அல்ல, தனது தாய்க்காக, அவரது பெயர் காலமட்டும் பாகிஸ்தானில் நிலைத்திருப்பதற்காக ஏதாவது செய்யவேண்டும், அதற்காகவாவது ஆடலாம், அறிவித்தார் மறுபடியும் இணைகிறேன்.

நம்புகின்றீர்களொ இல்லையோ அதன் பின் உலகில் பாகிஸ்தான் விளையாட இருந்த ஸ்டேடியத்தில் காலி இருக்கைகள் இல்லை, எல்லாம் ஹவுஸ்புல்.

அவரது ரசிகைகளோ “ஒரு வார்த்தை கேட்க 2 வருசம் காத்திருந்தேன்” என ஆடிக்கொண்டிருந்தார்கள்.

தொடரும்…

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s