இம்ரான் கான் 2

Image may contain: 2 people

எனது தாயாரின் பெயரில் புற்றுநோய் மருத்துவமனை கட்ட மறுபடியும் அணிக்குள் வருகிறேன் என அவர் வந்து கொஞ்ச காலத்திலே அவரின் அன்னை பிரிந்தார், 1992 உலககோப்பை போட்டியும் வந்தது,

நல்ல அணியோடுதான் களமிறங்கினார், ஆனால் விட்ட இடத்தை பிடிக்க வெஸ்ட் இண்டீசும், சாம்பியன் ஆஸ்திரேலியாவும், பலமுறை இறுதிபோட்டிக்கு வந்து தவறாமல் கோப்பையை விட்ட இங்கிலாந்தும், வலிமையான தென் ஆபிரிக்கா மற்றும் மார்ட்டின்குரோவின் நியுசிலாந்து என பல அணிகளின் முன்னால் தொடக்கத்தில் தாக்குபிடிக்கமுடியவில்லை.

ஒன்று மூக்கில் குத்தியது என்றால் அடுத்தது கன்னத்தில் அறைந்தது, இன்னொன்று வயிற்றிலே குத்தியது, தொடக்கத்தில் அடிவாங்கியது பாகிஸ்தான், ஆனால் அன்னையை வணங்கும் ஒருவனுக்கு எல்லா பாக்கியமும் கிடைக்குமல்லவா?, இம்ரானுக்கும் கிடைத்தது,

மழை மற்ற இன்னபிற உதவிகளில் அரையிறுதிக்கு வந்தது அணி, எதிரணி நியுசிலாந்து, ஏளனமாக பார்த்த குரோவ், எளிதாக ஜெயிக்கலாம் என எண்ணி ஆடாமல் இறுதிபோட்டிக்கு ஓய்வெடுக்க சென்றார். ஆனால் இன்சமாமின் விஸ்வரூபம் நியுசிலாந்தை நொறுக்கி இறுதிஆட்டத்திற்கு முன்னேற்றிற்று.

இறுதியாட்டத்தில் இன்சமாமும், மியாண்டட்டும் நொறுக்க , வாசிம் அக்ரமும் தாக்க முதல் முறையாக பாகிஸ்தானுக்கு கோப்பை கிடைத்தது.

பாகிஸ்தான் வரலாற்றிலே மிக மகிழ்ச்சியான நாட்களில் அதுவும் ஒன்று, பல மாதங்கள் கொண்டாடினர், இம்ரான்கான் மாபெரும் மக்கள் விருப்பமானார், தாயாரின் புற்றுநோய் மருத்துவமனையும் வளர ஆரம்பித்தது.

இன்று அது நல்ல முறையில் பல கிளைகளோடு செயல்படுகின்றது.

மாபெரும் திருப்தியோடு விடை பெற்றார், மங்காத புகழோடு இருந்தவருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டது, 1994ல் ஜெமிமா எனும் லண்டன் அழகியை காதலித்து மணந்தார்

உலக பெண்கள் ஜெமிமாவை பொறாமையால் பார்க்க, பாகிஸ்தான் மக்கள் வெறுப்பாய் கண்டனர், காரணம் பெரிதாக ஒன்றுமில்லை ஜெமிமா ஒரு யூதபெண், அவரின் தந்தை இஸ்ரேலுக்கே தூண், அவ்வளவு பணம், என்ன இருந்தாலும் எப்படி? இந்திய பெண் என்றால் கூட ஏற்றிருப்பார்கள் ஆனால் யூதச்சியை எப்படி?

ஒரு முஸ்லிம் நாட்டில் இது ஏற்புடையது அல்ல, ஒரே நாளில் மக்கள் மனதில் சரிந்தார், ஜெமிமா இஸ்லாமுக்கு மாறினாலும் நிலை சுமுகமாக இல்லை, எனினும் தனது செல்வாக்கில் கட்சி தொடங்கினார், பெனசிரும், நவாசும் அவ்வப்போது ராணுவமும் மோதிய நாட்டில் சரிந்த செல்வாக்கை மீட்க முடியவில்லை.

லண்டனின் சுதந்திர பணக்கார பெண்ணை, பெஷாவரில் முக்காடு போட்டுகொண்டு வாழ சொன்னால் எப்படி?, அவ்வப்போது லண்டன் போன ஜெமிமா ஒரேடியாக போய்விட்டார், அதாவது விவாகரத்து.

அவர் போன நேரமோ என்னமோ இம்ரான் கானுக்கு மக்கள் செல்வாக்கு கூடிற்று, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது, பென்சிரும், நவாசும் தமிழக அரசியல்வாதிகளின் பாகிஸ்தான் பிம்பம் . மனம் வெறுத்த மக்கள் மாற்றுவழி தேடினர், இடையில் முஷாரப் வேறுவந்து அமர்ந்து நாற்காலியை விடாமல் பிடித்துகொண்டார்,

பின்னர் ஒரு வழியாக தேர்தல் நடக்க இருக்க,பெனாசிரும் பரலோகம் போனார், அனுதாப ஓட்டில் வந்த அவரின் கணவர் அள்ளினார் அள்ளினார் கஜானா ஓட்டையாகும் வரை அள்ளினார், பின்னர் நவாஸ் செரிப் அவரும் “ஜனநாயக” கடமையை சரியாக செய்கிறார். காணாத குறைக்கு கொசுகூட்டமாய் தீவிரவாதம், சில கடந்தை வண்டு போல ஆபத்தானவை.

இன்று பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான் கான் கொஞ்சம் நம்பிக்கையளிப்பவர், லண்டனில் படித்து கல்லூரி ஆசிரியராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர், மக்கள் அவர் பின்னால் திரள்கின்றார்கள், அவர் ஆணையிட்டவுடன் லட்சகணக்கான மக்கள் பாராளுமன்றத்தை முற்றுகை இட தாயராகின்றனர், நவாஸ் செரீப் தவிக்கத்தான் செய்கின்றார்.

குழப்பமே தலைவிதி எனும் பக்கத்துநாட்டில் இப்பொழுது இம்ரான்கான் வலிமையான எதிர்கட்சி தலைவர், பெரும் பாரம்பரியமிருந்தும் ,கூடவே பென்சரின் படுகொலை அனுதாமிருந்தும் அந்த கட்சியை மக்கள் புறக்கணித்தால் என்ன கொடுமையான ஆட்சியை பெனசிரின் கணவர் நடத்தியிருப்பார்??

பாகிஸ்தானின் குறிப்பிடதக்க அரசியல்வாதி இம்ரான்கான், நவாஸ் ஷெரிப்பினை தவிர பாகிஸ்தானில் இன்று அறியபட்ட முகம் அவர்தான்

அவர் இப்பொழுது 3ம் திருமணம் செய்திருக்கின்றாராம், ஒரு காலத்தில் ஆயிரகணக்கான பெண்களால் விரட்டபட்டு, யூதபெண்ணே இஸ்லாமாக மாறி வரும் அளவிற்கு பெரும் பிரபலமாக இருந்த அந்த இம்ரான்கான், அன்றே சரியான திருமணத்தை செய்திருந்தால் நிலமை இவ்வளவு சிக்கல் ஆகியிருக்காது

கிட்டதட்ட 65 வயதை கடந்த அவருக்கு இப்பொழுதுதான் காலம் கடந்தபின் ஞானம் வந்திருக்கின்றது.

உறுதியாக சொல்லலாம் அந்த யூதபெண் விவகாரமே அவரின் பெரும்புகழை முதலில் சறுக்க செய்தது, அதிலிருது இன்னும் முழுமையாக அவர் எழவில்லை, இனி அதெல்லாம் மாறலாம்

அடிக்கடி பாகிஸ்தானை பார்த்துகொள்ள வேண்டும் காரணம் அவர் நமது பக்கத்துவீட்டுக்காரர், பங்காளி வேறு. சும்மா அல்ல மகா கோபக்காரர், “என்றாவது ஒரு நாள் உன்வீட்டுக்குள்ள கோடு போடுவேண்டா..” என சவால் விட்டு கொண்டிருபவர். எனவே அந்த வீட்டில் என்ன நடக்கின்றது என பார்த்துகொள்வதில் ஒன்றும் தவறில்லை.

முற்றும்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s