தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

Image may contain: text

இன்று தெலுங்கு வருடபிறப்பு கொண்டாடபடுகின்றது, தெலுங்கு நண்பர்களுக்கு அவர்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

இன்று நிலமை பரவாயில்லை, கொஞ்ச நாளைக்கு முன்பு தமிழகத்தில் பல வேற்றுமை குரல்கள் எழுகின்றன, தெலுங்கு பேசும் மக்கள் தமிழரின் உரிமையினை பறித்துகொண்டது போலவும், தமிழரை எல்லாம் வங்க கடலில் தள்ளிவிட்டது போலவும், அவர்களை உடனே மீட்கவேண்டும் இல்லை எனில் தமிழினம் அழிந்துவிடும் என்றெல்லாம் கதறல்கள் கேட்டது.

அவை எல்லாம் அடங்கிவிட்டன, அல்லது அடக்கபட்டுவிட்டது.

சங்க காலத்திலிருந்து அவர்கள் சகோதர இனம், சோழப்பேரரசு வடக்கெல்லாம் பரவியிருந்த காலத்தில், சோழன் செங்கல்பட்டு ஏரிகளை எல்லாம் அமைக்கும் காலம் முன்பாகவே அவர்கள் கலந்திருந்தனர், சில சோழ மன்னர்கள் அவர்களோடு மண உறவும் வைத்திருந்தனர்.

பின்னாளில் பாண்டிய வம்சம் டெல்லி சுல்தானிய வம்சத்திடம் அடிவாங்கி குடும்ப சண்டையால் சிதறியபொழுது அவர்களின் ஆட்சி தென்னகத்தில் ஆரம்பிததது, வெள்ளையன் வரும்பொழுது முடிவும் உற்றது.

600 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் அவர்கள் அமைத்துதந்த குளங்களை,ஏரிகளை எல்லாம் செம்மண்ணுக்காய் தோண்டியும், சட்டத்தை மட்டையாக்கிவிட்டு ரியல் எஸ்டேட் கற்களை போட்டும், மடை கதவுகள் வரை காணாமல் செய்தும் ,குளங்களத்திற்குள்ளே சாலை அமைத்தும்,

இன்னும் ஏராளமான வழிகளில் அந்த ஏரிகளை,குளங்களை நாம் சிதைத்து, கால்வாய்களெல்லாம் கடைகளும்,வீடுகளுமாக மாற்றிவிட்டோம்.

குடிநீருக்காக அவர்கள் தோண்டிய‌ கிண்றுகளையும் குப்பையிட்டு நிரப்பி இப்பொழுது மூடும் பணிகள் தீவிரமாக நடைபெறும் காலம்.

நூறுநாள் வேலை ( இருநூறு நாள் வெற்று சம்பளம் ) எனும் திட்டத்தால் ஏதோ குளத்துவரப்புகள் மட்டும் அடையாளம் இருக்கிறது.

ஒரு வழியாக சில நூற்றாண்டுகளாக அவர்கள் உழைப்பால் செழிப்பான பூமியாக இருந்த பகுதியை மறுபடியும் தரிசுநிலமாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டோம்,

சாதாரண வெற்றி அல்ல, மாபெரும் வெற்றி. தெலுங்கு மக்களால் தமிழகம் வளமானதே தவிர, தமிழகம் சிக்கலுகுள்ளானது என்பது மோசடி அரசியல் தவிர வேறு அல்ல‌

சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தில் ராஜாஜி, காமராஜர் என தமிழர்கள் தான் முதல்வராயினர். பின்னாளில் சில சுயநல கட்சிகள் சினிமாவினை முன்னிறுத்தி மக்களை மயக்கி, ஆட்சிக்கு வந்தன, அந்த கொடுமை இன்றுவரை நீடிக்கின்றது.

கலைஞர், எம்ஜிஆர்,ஜெயலலிதா,ஜாணகி, ஜெயலலிதாவின் செருப்பினை வைத்து ஆண்ட பன்னீர், முன்னாள் எதிர்கட்சி தலைவர் விஜய்காந்த் என வரிசைபடுத்தினால் அதில் சினிமா தான் ஆண்டிருக்குமே தவிர அம்மக்களின் இனவெறியோ அல்லது இன உணர்வோ வஞ்சகமோ அல்ல.

அப்படி தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்திற்கு என்ன தீங்கு செய்தார்கள்?, தமிழுக்காய் இந்தி எதிர்ப்புபோராட்டம் நடத்திய தெலுங்கர் உண்டு, ஈழஆதரவிற்காய் புலிகளை ஆதரித்து பின் தீரா துயரடைந்த தெலுங்கர் உண்டு, காவேரி நீர் வராவிட்டால் தஞ்சையில் பாதிக்கபடும் தெலுங்கர் உண்டு, முல்லைபெரியாறு அணை இல்லாவிட்டால் தமிழரோடு தாகத்தால் வறண்டுவிட போகும் தெலுங்கர் உண்டு.

அணுவுலை ஆபத்து என்றால் கூட நம்மோடு பாதிக்கபடும் தெலுங்கு மக்கள் உண்டு.

இத்தமிழகம் பெற்ற பலன்களில் அவர்களுக்கு பங்குண்டு, தமிழர் படும் சில துயரங்களில் அவர்களும் பங்கெடுக்கின்றார்கள், எங்கும் சுயநலமாய் தனித்து நிற்கவில்லை.

அவர்கள் என்ன தமிழகத்தில் தெலுங்கு மொழி ஆட்சி என கேட்டார்களா? தெலுங்கு பள்ளி கேட்டார்களா? அல்லது தெலுங்கருக்கு இட ஒதுக்கீடு என கொடிபிடித்தார்களா? அல்லது வங்க கடலிலும், இந்திய பெருங்கடலிலிலும் தமிழன் பிடிக்கவேண்டிய மீனை பிடித்தார்களா?

ஆட்சிபொறுப்பிற்கு அவர்கள் சந்ததி வரகாரணம் சினிமா, ஒரே காரணம் அது. அதனை மக்களுக்கு சிந்திக்க சொல்லிகொடுத்தால் மக்கள் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கபோகின்றார்கள், விஷயம் அவ்வளவுதான்.

ஆனால் நாட்டை இப்படி கெடுத்த சினிமாக்காரர்களின் இப்போதைய விபரீத கோஷம்தான் தெலுங்கு வந்தேறிகள். இது கண்டிக்கதக்கது.

சினிமா மூலம் பாதிப்பு என்றால் சினிமாவினை தொலைத்துவிடலாம், ஆனால் சினிமாக்காரர்களான பாரதிராஜா தொடங்கிவைத்த கோஷம்தான் தமிழ்நாட்டில் தமிழ் முதல்வர் எனும் கோஷம், யார் வேண்டாம் என்றார்கள்?இந்த சினிமா முதலமைச்சர்களை அமர்த்தியது சினிமாவா? அல்லது தெலுங்கர்களின் வஞ்சகமா?

எது உண்மையோ அதனை சிந்திக்க விட மாட்டார்கள், எது எளிதில் மக்களை உணர்வேற்றுமோ அதனை பிடித்துகொள்வார்கள். பாரதிராஜா (சீமான் இவரின் வாரிசு) பேசும் தமிழ் உணர்வில் வெறி ஏறும், ஆனால் அவர் படத்தில் எல்லாம் மலையாள நடிகைகள், கன்னட நடிகர்கள் வருவார்கள், வடநாட்டு நடிகையரும் நிச்சயம். இவர் கன்னட இயக்குநரிடம் சினிமா படிப்பார், மலையாளி எம்ஜிஆருடன் இவருக்கு ஒரு பிரச்சினையுமில்லை.

தமிழ்நாட்டில் இரு தமிழ்முதல்வர்களை தந்தது காங்கிரஸ் கட்சி, பின் சினிமா அதனை விரட்டிவிட்டது, ஆனால் சினிமா தொடாத கேரளா,ஆந்திரா,கன்னடம் எல்லாம் அந்த மொழிக்காரன் ஆள்கிறான் என்றால் அவன் காங்கிரஸ்காரன், இன வெறியன் அல்ல. இன்றும் கன்னடத்தில் தேசிய கட்சி ஆட்சி உண்டே தவிர இனவெறியன் வாட்டாள் நாகராஜ் டெப்பாசிட் கூட வாங்கமுடியாது.

மொத்தத்தில் தவறு என்பது தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சினிமாவே தவிர, நம்மோடு இணைந்து வாழும் தெலுங்கு நண்பர்கள் அல்ல.

வள்ளுவனோ, கணியன் பூங்குன்றனாரோ அவ்வையாரோ பாடியிருக்கும் பாடல்களை பாருங்கள், அவர்கள் உலக மானிடர்களை, உலக சமத்துவத்தை பாடியிருப்பார்களே தவிர ஒருக்காலும் தமிழர், தமிழினம், தமிழ்வெறி என்றெல்லாம் பாடியிருக்கமாட்டார்கள். பாரதியும் அந்த வரிசையே.

தமிழர்களின் பரந்த மனப்பான்மை அப்படியானது, அது சுயநல கட்சிகளாலும், சினிமா மயக்கத்தாலும் குறுகிவிட கூடாது. வீட்டில் அடைக்கலமாக கூடுகட்டும் அடைக்கலான் குருவியினை கூட அந்நியம் என விரட்டாத தமிழர் நாம். இந்த சகோதரர்களை விட்டுவிடுவோமா? விட மாட்டோம்.

இங்கு வசிக்கும் தெலுங்கு மக்கள், நமது பகுதிக்கு உழைப்பவர்கள், நமது மக்கள், காலகாலமாக கலந்துவிட்டவர்கள்.

யுகாதி என்பது யுகம் பிறப்பது என்ற பொருளில் வரும்

தமிழரை போலவே உலகெல்லாம் பரவி இருப்பவர்கள் தெலுங்கர்கள். மலேசியாவிலும் அவர்கள் அதிகம் உண்டு. அவர்கள் உற்சாகமாக யுகாதி கொண்டாடுகின்றார்கள்

வேப்பம்பூ பச்சடி சகிதம் கொண்டாடுவார்கள், ஏனென்றால் வாழ்வில் இன்பம், துன்பம், சோகம் எல்லாம் வரும் என்பதை உணவில் இனிப்பு முதல் கசப்பு வரை உண்டு உணர்த்துவார்களாம்

திராவிட நாட்டின் பண்டிகை என்பதை விட, தென்னிந்திய மக்களின் பண்டிகை என்பது மிக பொருத்தமானது

அந்த சகோதர மக்களுக்கு யுகாதி நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம். தெலுங்கு பண்டிகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும்,

“உகாதி சுபகாங்சலூ..”