மலேசிய இந்தோனிசிய இந்திய தமிழர் தனவனம்

Image may contain: 1 person, standing

மனிதர்களில் சுவாரஸ்யமானவர்கள் இருக்கின்றார்கள், காலம் வரும்பொழுதுதான் அவர்களை சந்திக்க முடிகின்றது.

அப்படி ஒரு மனிதரை நேற்று சந்திக்க முடிந்தது, பொதுவாக மலேசிய தமிழரில் ஏகபட்ட தும்பிகள் உண்டு அதனால் இவர் அழைக்கும் பொழுதெல்லாம் போனை கூட தவிர்த்தது உண்டு.

ஆயினும் இந்தோனேஷியாவில் இருந்து வந்திருப்பதால் நேற்று சந்தித்தாகிவிட்டது

பெரிய வியாழன் வேறு, செல்லும் பொழுது “பேக்கரி தொடங்கினாலும் தொடங்கினோம், பன் பட்டர்ன்னு டார்ச்சர் பண்றாங்க” என்ற வடிவேலு டயாலாக்கோடுதான் சென்றோம்

அவருடன் பேச தொடங்கினால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, காரணம் பார்க்க வெகுபாமரன் போல இருந்த அவரின் வாழ்வும், அது திசைமாறி சென்ற விதமும் தூக்கிவாரி போட்டது

இன்று இந்தோனேஷியாவின் மிகபெரும் தொழிலதிபராக இருந்தாலும் மகா எளிமையாக அவர் பேச பேச அசந்துவிட்டேன். டாலர் பரிவர்த்தனை முதல் சர்வதேச அரசியல் , உலக நாட்டு கலாச்சாரம் என பலவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றார்

அவர் மலேசிய பிறப்பு , ஆனால் 11 வயதில் 1960களில் சொந்த ஊரான முசிறிக்கு வந்திருக்கின்றார் அங்குதான் படித்திருக்கின்றார், அப்பொழுது அரசியலிலும் குதித்திருக்கின்றார்

அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி போன்றோருடன் எல்லாம் நெருங்கி பழகி இருக்கின்றார், சுத்தமான திமுக‌

அதுவும் 1970 முதல் 1977 வரையான காலங்களில் கடும் திமுக பிரச்சாரம் எல்லாம் செய்திருக்கின்றார், அவர் இதயம் இப்பொழுதும் கலைஞர் என்றே துடிப்பதை உணரமுடிகின்றது

1980ல் மலேசியா திரும்பினார், அவருக்கு அப்பொழுது அங்கு ஒட்டமுடியவில்லை. தமிழகத்தில் வளர்ந்த பலருக்கு மலேசிய தமிழரோடு எளிதில் ஒட்டமுடியாது அச்சிக்கல் அவருக்கும் வந்ததால் ஹாங்காங் சென்றிருக்கின்றார்

அது பிரிட்டனின் ஹாங்காங் என்பதால் அவருக்கு ஐரோப்பா எளிதாயிற்று, அங்கு ஆஸ்திரியாவில் 4 வருடம் படித்திருக்கின்றார், அதன் பின் ஜெர்மனியில் உலோகவியல் படித்து அமெரிக்காவில் 4 வருட வேலை

இக்காலங்களில் உலகெல்லாம் சுற்றி இருக்கின்றார், அவர் காலடி படாத நாடு இல்லை, பின்பு கார்மென்ட் தொழிலுக்கு தோதான நாடு என இந்தோனேஷியாவினை கண்டு அங்கு தொழிற்சாலை அமைத்து செட்டில் ஆகிவிட்டார்

மனைவி சிங்கபூர்காரர், அந்நாட்டு உள்துறையில் பெரும் பதவி வகிப்பவர்

மனிதரிடம் பேச பேச விஷயங்கள் கொட்டி வந்தன, அபூர்வ தகவல்கள், அட்டகாசமான உண்மைகள். விட்டால் 1 வருடம் தூங்காமல் பேசலாம் அவ்வளவு நுட்பமான தகவல்கள்

அவருடன் பேசியபின் இந்தோனேஷியா பற்றிய அபிமானம் மாறியது, அந்நாடு பிறக்கும் குழந்தைக்கெல்லாம் 1 ஏக்கர் கொடுக்குமாம், இன்னும் சலுகைகள் ஏராளம் உண்டாம்

மிக பெரிய பெட்ரோல் ரிசர்வ் அங்குதான் உண்டு. ஆனால் சர்வதேச அரசியல் அதனை முடக்கி வைத்திருக்கின்றது என்றார், பின்னாளில் இந்தோனேஷியா அரபுநாடுகள் போல் ஆகலாம், இந்தோனேஷியா பின் தங்க அங்கு மக்களின் பேராசை இன்மையும் இன்னொரு காரணம், அமைதியான இயல்பான வாழ்க்கை அவர்களுடையது

கார்மென்ட் தொழிலில் அவர்கள்தான் முண்ணணி

லத்தீன் அமெரிக்கா பற்றி பேச்சு வந்தது, இவருக்கு அங்கும் தொழில்கள் உண்டு, அது ஒருமாதிரி இமேஜ் உள்ள நாடுகள் என்பதால் அதுபற்றி கேட்டால் சொன்னார்

மெக்சிகோ போதை பழக்கமும், குண்டர் கும்பலும் உள்ள நாடு என்பார்கள், ஆனால் எல்லா உணவகங்களிலும் தனி மேஜை இருக்கும், எதற்கு என்றால் உணவில்லாதோர் அங்கு வந்து உண்ணலாம், அதை கவனிக்கும் மற்ற மேஜையில் சாப்பிடும் மக்கள் அவர்களுக்கும் சேர்த்து பணம் கொடுப்பார்கள்

இதனால் அங்கு பிச்சைக்காரர் குறைவு, தாங்கள் சாப்பிடும் உணவை வசதியற்றோரும் சாப்பிடவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் அவர்களிடம் உண்டு என்றார்

லத்தீன் அமெரிக்க நாடுகளை சர்வதேச அரசியலும் அவர்கள் ஊடகங்களுமே அப்படி பேச வைக்கின்றன என்பது அவர் கருத்து

சீனா, ஜப்பான் பற்றி அவர் பேச பேச ஆச்சரியாய் இருந்தது. உண்மையில் பெரும் அனுபவம் வாய்ந்த நபர்

ஒருவழியாக பேசிவிடைபெறும் பொழுது கேட்டேன், உலகெல்லாம் சுற்றி இருக்கின்றீர்கள், பல தொழில்களை செய்து சம்பாதித்திருக்கின்றீர்கள், உங்கள் வாழ்வின் மகிழ்வான காலம், துக்கமான காலம் எது?

அவர் சொன்னார், “நான் அன்பில் தர்மலிங்கத்தோடு உழைத்த அந்த 1970களின் திமுக பிரச்சார காலங்கள் என் வாழ்வின் மகிழ்வான காலம்

1977ல் திமுக தோற்றது என் வாழ்வின் மிக சோகமான காலம்” சொல்லும்பொழுதே அவர் குரல் உடைந்தது

மனிதர் மனமார திமுகவினை நேசிக்கின்றார்.

கலைஞரை சந்தித்தீர்களா என்றேன்? “நான் இளைஞனாக திமுக வெறியில் இருந்தபொழுது தள்ளி இருந்து பார்த்தேன், அதன் பின் நானும் வெளியேறிவிட்டேன்”

“ஏன் இனி சந்திக்க கூடாதா?” என்றேன், அவர் மெதுவாக சொன்னார்

“சந்திக்கலாம், ஆனால் பார்த்துவிட்டு உயிரோடு திரும்புவேனா என்ற சந்தேகம் இருக்கின்றது, எப்படி எல்லாம் மாபெரும் நெருப்பை மூட்டிய மனிதன் அவர். உணர்ச்சி கொடுத்த கடவுள் அவர். இக்கோலத்தில் அவரை பார்த்துவிட்டு நெஞ்சு வெடிக்காமல் திரும்ப முடியும் என்கின்றீர்களா?”

கலைஞர் எனும் மனிதர் எத்தனை கோடி மனிதர்களை பாதித்திருக்கின்றார், உலகமெல்லாம் சுற்றிய மனிதனை கூட இளவயதில் பாதித்த தன் நினைவுகளால் கட்டி போட்டிருக்கின்றார்

நிச்சயமாக சொல்லலாம், இம்மாதிரி தொண்டர்கள்தான் திமுகவின் பலம். 1960களில் திமுக எவ்வளவு பெரும் பாதிப்பினை உண்டு பண்ணியிருக்கின்றது என்பது தெளிவாக புரிகின்றது

அவருடன் பேசிகொண்டிருந்த பொழுது அந்த அன்பில் தர்மலிங்கம் காலத்து திமுகவில் வாழ்ந்தது போலவே இருந்தது

நள்ளிரவு வரை நீண்ட சந்திப்பு பிரிய மனமில்லாமல் முடிந்தது, கிளம்பும் பொழுதுதுதான் அவர் காரில் வரவில்லை என்பது புரிந்தது

இந்த கோலாலம்பூரில் எல்லோரும் கார் வைத்திருப்பார்கள், அவர் இந்தோனேஷியாவில் இருந்து இங்கு பிரபல கார் கம்பெனி அழைத்ததால் வந்தவர், ஒரு கார் என்ன? பல கார்கள் கிடைத்திருக்கும்

ஆனால் அவரோ தெருவெல்லாம் என்னோடு நடந்தார், வாடகைக்கு பென்ஸ் கூட கிடைகுக்குமே ஏன் காரில் வரவில்லை என்றேன்?

அவர் சொன்னார் “ஸ்டான்லி ராஜன், இதே கோலாலம்பூரில் சைக்கிள் கூட இல்லாமல் சிறுவயதில் நடந்தேன், பின்பு வேலை தேடி வந்தபொழுதும் நடந்தேன்

இங்கு கார்வோட்டி பழகினால் அந்த நினைவு அற்றுபோகும், அந்த நினைவோடு இங்கு நடந்து திரிவது ஒரு சுகம். அதில் ஒரு திருப்தி உண்டு, அதனால்தான் கோலாலம்பூர் தெருக்களில் காரில் வருவதில்லை, அந்த இளம் நினைவுகளுக்கன மரியாதை அது”

அதற்கு மேல் ஏதும் கேட்க தோன்றவில்லை, யாரோ கன்னத்தில் அடித்தது போல் இருந்தது

மிகபெரும் பண்பாளரை சந்தித்த மகிழ்ச்சியில் திரும்பினேன், எவ்வளவு பெரும் அனுபவசாலி? எவ்வளவு பெரும் தொழிலதிபர்

ஆனால் எவ்வளவு எளிமை, எவ்வளவு அமைதி?

கேட்டால் நான் கலைஞர் தொண்டன் சார், தலைவன் வழி இதுதான் என அமைதியாக சொல்லி கடந்து செல்கின்றார்

கலைஞருக்கு இதனை விட என்ன பெருமை வேண்டும்?

முகநூலில் இப்படிபட்ட நண்பர்களும் கிடைத்தார்களா? என்றால் எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது

எழுதி என்ன கிழித்தோம் என அடிக்கடி சலிப்புறும் மனம், இப்படிபட்ட பெரும் மனிதர்கள் நண்பர்களாக கிடைத்தது எழுதியதால்தான் என ஆறுதலும் கொண்டது

காலம் அவருக்கு எல்லா நலமும் வளமும் அருளட்டும், அவரின் மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s