உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கே சாதகமானது, ஆனால்….

Image may contain: one or more people, outdoor and nature

நிச்சயம் காவேரியில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கே சாதகமானது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மிக உகந்த நேரம் இது.

ஆனால் இதற்காக போராட நல்ல தலமை இங்கு இருக்கின்றதா என்றால் இல்லை. ஆளாளுக்கு அவிழ்த்துவிட்ட மந்தை போல ஒவ்வொரு பக்கம் செல்கின்றார்களே தவிர ஒன்றும் உருப்படியில்லை

ஆளும் கட்சி பாஜகவின் அடிமை என்பதால் பழனிச்சாமி அரசு ஏதோ சொல்கின்றது, கட்டி வைக்கபட்டிருப்பவன் உறுமி என்ன பயன்? ஒன்றும் ஆகபோவதில்லை

டெல்லியில் அதிமுக எம்பிக்கள் போராட்டத்தை தலமை எற்று நடத்த யாருமில்லை, அவர்கள் செத்துவிடுவோம் என மிரட்டினாலும் யார் சொல்லி சாவீர்கள்? என பதிலுக்கு கலாய்க்கின்றார்கள்

நல்ல தமிழ் தலமை டெல்லியில் இல்லை என்பது புரிகின்றது

ராஜாஜி, அண்ணா,முத்துராமலிங்க தேவர், வைகோ, ஜெயலலிதா, முரசொலிமாறன் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்தில் தமிழக முகங்களாக டெல்லியில் அறியபட்டவர்கள் இன்று சத்தமில்லை

ஆந்திர வழியில் அதாவது ஜெகமோகன் ரெட்டியும் சந்திரப்பாவும் இணைந்து ஆந்திர நலனுக்கு குரல் கொடுப்பது போல இங்கு தமிழக எம்பிக்கள் சேரவில்லை

இங்கு கனிமொழி அங்கு தம்பிதுரை இரண்டு பிரிவு. திமுகவிடம் எம்பிக்கள் இல்லை , அதிமுகவிடம் தைரியமில்லை தலமையுமில்லை

ஒரு விஷயம் உறுத்துகின்றது

இவ்விஷயத்தில் மனதறிந்து தமிழகத்திற்கு துரோகம் செய்யும் கட்சி காங்கிரஸ்

ஆம் தமிழகத்தில் சிதம்பரம் முதல் டெல்லியில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரசார் உண்டு ஆனால் கன்னடத்தில் நடக்கும் தேர்தலுக்காக தமிழக நலனை பலிகொடுக்கின்றார்கள்.

நிச்சயமாக சொல்லலாம் இந்த சிக்கலில் ஓரளவு உதவகூடியவர்கள் காங்கிரஸில் இருக்கின்றார்கள், அவர்களால் முடியவும் செய்யும்

ஆனால் கன்னட வோட்டு வங்கி அவர்களை தடுக்கின்றது, இங்கே காங்கிரசுக்கு வோட்டு விழாதபொழுது கன்னட காங்கிரஸ் வோட்டும் பாதிக்கபட வேண்டுமா? என்பது போல் யோசிக்கின்றார்கள்

இவ்விவகாரத்தில் படுகாட்டமாக கண்டிக்க வேண்டிய கட்சி சாட்சாத் காங்கிரஸ் அடுத்து பாஜக‌

தேசிய ஆளும் கட்சி அது, நியாயத்தை அதுதான் செய்ய வேண்டும், நியாயமா?

அவர்களா செய்வார்கள்? காங்கிரஸின் கள்ள அரசியல் கணக்கு அப்படியே பிஜேபிக்கும் இருக்கின்றது.

இதில் திமுக திணறுகின்றது. தமிழக பிரதான கட்சி அது. தமிழக நலனை ஓரளவு காக்கும் கட்சி என அதனைத்தான் சொல்லமுடியும்

ஆனால் இப்பொழுதெல்லாம் அதன் நகர்வு பழனிச்சாமி அரசை காப்பது போலவே தெரிகின்றது. பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டம் எதுவும் ஸ்டாலினிடம் இருப்பதாக தெரியவில்லை

டெல்லியில் சொல்லபட வேண்டிய தீர்வுக்கு அகில இந்திய அளவில் ஆதரவு திரட்டமாட்டோம் சென்னைகுள்ளே முடங்கி கொண்டு கத்துவோம் என்பதெல்லாம் ஒரு முடிவினையும் ஒரு காலமும் தராது.

இந்நிலையில் திமுக என்ன செய்யலாம்?

அன்றே வழிகாட்டினார் கலைஞர், ஆம் தமிழகம் பாதிக்கபடும் பொழுது மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு எதிரானவர்களை திரட்டி தமிழக நியாய இந்தியா முழுக்க ஆதரவு திரட்ட வேண்டும் எனும் வழி அது

அக்கால டெசோ அதனைத்தான் செய்தது,

திமுக ஈழவிவகாரத்தில் தனித்து குரல்கொடுத்தால் எடுபடாது என்றுதான் வாஜ்பாய், ராமராவ், பரூக் அப்துல்லா, பாதல் என அன்றைய காங்கிரசுக்கு எதிரானவர்களை கொண்டு டெசோ அமைத்து ஈழதமிழருக்கு இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என இந்திய குரலை உருவாக்கினார்

ராமசந்திரன், பிரபாகரன் போன்றோரால் அது முறியடிக்கபட்டது, பிரபாகரனின் ஏகாதிபத்திய படுகொலைகளால் டெசோ இயங்கவில்லை

( இதனால்தான் பின்னாளில் முள்ளிவாய்காலில் கொடுமை நிகழ்ந்தபொழுது அகில இந்திய அளவில் ஒரு குரலும் ஆதரவில்லை , இங்கே சீமானும், நெடுமாறனும் முட்டு சந்தில் நின்று கத்தியதை கழுதை கூட கேட்கவில்லை )

இப்பொழுதும் பாஜகவிற்கு எதிரான இந்திய மாநில தலமைகளை திரட்டி “தமிழருக்கு துரோகம் செய்கின்றது பாஜக” எனும் பெரும் எதிர்ப்பினை உருவாக்கி அகில இந்திய அளவில் ஆதரவினை திரட்டலாம்

சந்திரபாபு நாயுடு, மம்தா, விஜயன் என பலரை திரட்டி அட்டகாசமாக தேசிய அளவில் பாஜக முகதிரையினை கிழிக்கலாம், நியாயகுரலை உயர்த்தலாம் அது இன்று இல்லையேல் நிச்சயம் பின்னாளில் பலனளிக்கும்

அதில் வருங்கால பாராளுமன்ற தேர்தல் கூட்டணி கணக்கும் கலந்திருக்கும், நிச்சயம் காங்கிரஸ் வராது சிக்கல் அது அல்ல‌

இங்கிருக்கும் கூடங்குளம், நெய்வேலி நிலையங்களில் எல்லாம் தயாரிக்கபடும் மின்சாரம் இந்தியா எங்கும் செல்லும்பொழுது, இங்கிருக்கும் துறைமுகம் முதல் எல்லா வருமானமும் இந்தியா முழுக்க பகிரபடும்பொழுது காவேரி மட்டும் கன்னட சொத்தா? என அகில இந்திய அளவில் கேட்டால் நிச்சயம் தமிழகத்தின் நியாயம் எல்லா இந்தியருக்கும் புரியும்

இதனை திமுகவும் செய்யபோவதில்லை, செய்யும் திட்டமுமில்லை, அங்கு இப்பொழுது கேட்பதெல்லாம் தளபதி வாழ்க, மூன்றாம் கலைஞர் வாழ்க, அண்ணியாரேஏஏஏ

ஆக அது உருப்படாது

ராமதாஸ் ஒருவர்தான் இப்போதைக்கு ஓரளவு நல்ல கருத்துக்களை வழிகளை சொல்லும் அரசியல்வாதி ஆனால் மனிதர் பாதி வழியில் கவிழ்த்துவிடுவார்

இப்படியாக பெரும் சாதகம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் இருந்தும் மிக நல்லதொரு வாய்ப்பு தமிழக அரசியல்வாதிகளால் வீணடிக்கபட்டு நாசமாகிகொண்டிருக்கின்றது

காவேரியின் காய்வு தொடர்கின்றது.

Image may contain: sky, bridge, outdoor and nature
 

பின்னூட்டமொன்றை இடுக