காவேரி மேலாண்மை வாரியம் அமையட்டும், பூமாரி தஞ்சை தரணியெங்கும் பூக்கட்டும்

உடன்பிறப்பே, காவேரிக்காக நடக்கும் போராட்டங்களை நீ அறிவாய், அதில் பங்குபெறும் ஒவ்வொரு தமிழனையும் நான் வாழ்த்துகின்றேன், அவனின் உணர்ச்சி மிகு தீரத்தை எண்ணி மகிழ்கின்றேன்

ஆனால் இந்த தமிழகத்தில் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்திற்கு கூட இந்த கருணாநிதிதான் காரணம் என கத்தி திரியும் காக்கை கூட்டம், அதற்கு அன்னமிட்டவர்கள் இல்லை என்றாலும் கூட, வண்டிக்காரன் இல்லாவிட்டாலும் தானே நடக்கும் மாடு போல கருணாநிதிதான் காவேரியினை தாரைவார்த்தான் என கிளம்பிவிட்டன‌

இவர்கள் சொல்லும் குற்றசாட்டையும், கழகம் சார்பில் சொல்லும் பதிலையும் தருகின்றேன் குறித்துகொள், உண்மை மெதுவாகத்தான் வரும் இதோ வருகின்றது

1970லே கபின், ஹேமாவதி அணைகளை கன்னடம் கட்டியதாம், கழக அரசு வேடிக்கை பார்த்ததாம், இதனை பெரும் குற்றசாட்டாய் சொல்கின்றர் சிலர்

அப்பதர்கள் காவேரியினை அறியா சிறுபுத்திகாரர்கள். காவேரி என்பது 28 ஆறுகளின் தொகுப்பு அதில் ஹேமாவதியும் கபினியும் கன்னட துணையாறு, அமராவதியும், நொய்யலும், பவானியும் தமிழக துணையாறு

பெருமகனார் காமராஜர் காலத்திலே அமராவதி, பவானி, நொய்யலில் எல்லாம் தமிழகம் அணைகட்டியது, பின் எந்த முகத்தை வைத்துகொண்டு கன்னட துணையாறில் அணை கட்டாதே என நாம் சொல்லமுடியும்?

எந்த நீதிமன்றம் இதனை ஏற்கும் உடன்பிறப்பே, அப்படி தடுக்கவேண்டுமானால் அமராவதி பவானி அணைகளை இடித்துவிட்டுத்தான் நாம் ஹேமாவதியினை கபினியினை தடுக்க போகமுடியும், அது நடக்கும் காரியமா?

இதனால் அமைதி காத்தோம், ஆனால் காவேரியில் சிக்கல் வந்தபொழுது நீதிமன்ற கதவுகளை 1972லே தட்டினோம், நியாயம் நம்பக்கம் இருந்தது, அன்று திமு கழகம் 182 உறுப்பினரோடு மகா பலமாயும் இருந்தது

அன்று இந்திரா நம்மை அழைத்து வழக்கை வாபஸ் வாங்க சொன்னார், பாரத பிரதமரின் உறுதியினை ஒரு முதலமைச்சர் நம்பாமல் இருக்க முடியுமா?

அதுவேறு வங்கபோர் எல்லாம் நடந்த நேரம், நாட்டில் பல சிக்கல்கள் இருந்ததால் பிரதமரின் உறுதிமொழியினை நம்பி வாபஸ் வாங்கினோம், பின் பேச்சுவார்த்தை நடந்தது

நாம் கெஞ்சினால் கன்னடம் மிஞ்சும், நாம் மிஞ்சினால் கெஞ்சும் இப்படியாக பேச்சு வார்த்தைகள் நீண்டன, இந்நிலையில் கழகம் உடைந்து ராமசந்திரன் தனி கட்சி தொடங்கினார்

இன்று எதற்கெடுத்தாலும் கலைஞர் காரணம் என எழும் கொஷத்தை அவர்தான் தொடங்கினார், நாம் பேசிகொண்டிருக்கும் பொழுதே கருணாநிதியே ராஜினாமா செய் என அவர் போக்கில் சொல்லிகொண்டிருந்தார்

இதில் மிசா வந்து நம் ஆட்சி போனது, அதன் பின் ராமசந்திரன் முதல்வரானார்

காவேரியினை அவர் முறையாக கையாளாததால் கன்னட கலவரம் இன்னபிற விஷயங்கள் எல்லாம் அப்பொழுது நடந்தது

நம்மை விட டெல்லியில் அதிக நெருக்கம் கொண்ட ராமசந்திரன் காவேரியில் என்ன முடிவு கண்டார் என்றால், ஒன்றுமில்லை, காவேரி காய்ந்துகிடக்க அவரோ 
காவிரி தந்த கலைச்செல்வி” என ஜெயலலிதாவின் நாடகத்தில் லயித்து கிடந்தார்

முல்லைபெரியாறு அணையினை 159 அடியிலிருந்து 132 அடியாக குறைத்ததும் அவரே, ஏன் செய்தார் என்றால் தெரியாது, நிச்சயம் அவரின் மலையாள பாசம் காரணமாக இருக்க முடியாது

இப்படியாக காவேரியினை கொண்டுவந்திருக்க வேண்டிய ராமசந்திரனின் அதிமுக காவேரி தந்த கலைசெல்வி நாடகத்தை கொண்டுவந்தது , பின் அந்த நாடககாரி ஜெயலலிதாவினை அப்படியே கட்சிக்கு கொண்டுவந்தது

1989ல் கழகம் மறுமுறை ஆட்சிக்கு வந்தபொழுது அமைதிபடை மீட்ட கையோடு காவேரி நடுவர் மன்றத்தை அமைக்க பாடுபட்டோம், விபிசிங் ஆட்சியில் திமுக அரசு நடுவர் மன்றத்தை அமைத்து காட்டியது

இதனை யாராவது மறுக்க முடியுமா? இதை எல்லாம் சொல்லமாட்டார்கள்

இது சரியில்லை என நீதிமன்றம் ஓடியது கன்னடம், அப்பொழுது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா, காவேரியினை கொண்டுவரவேண்டிய ஜெயலலிதா மன்னார்குடியிலிருந்து யாரை எல்லாமோ கொண்டுவந்தார், அவர்களை சீராட்டினார், முடி சூட்டினார், தத்தெடுத்தார் , பித்தானார்

காவேரி எங்கிருந்து வரும்?

பின் கழக ஆட்சி வந்தது , நீதிமன்ற கதவுகளை தட்டினோம். பேச்சுவார்த்தையும் நடந்தது ஆனால் தேவகவுடா போன்றவர்கள் மிக சாமார்த்தியமாக காரியம் சாதித்தார்கள்

அங்கே கன்னடன் காவேரி என்றவுடன் காங்கிரஸ், ஜனதா எல்லாம் ஓரணியில் திரண்டன, இங்கே நான் அப்படி அழைத்தால் நீ பதவி விலகு என்பார்கள், எங்களை ஏமாற்ற பார்க்கின்றாயா என்பார்கள், அந்த அம்மையார் எந்த கூட்டத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் வந்தவர் அல்ல‌

ஏன் சட்டமன்றத்திற்கு கூட வந்தவர் அல்ல,

நாமோ முடிந்த வரை தனியாக போராடினோம், நம் விதி அப்படி. மொழிப்ப்போரில் தனியாகவே போராடினோம், ஈழவிவகாரத்தில் தனி பாதையில் போராடினோம், அமைதிபடையினை தடுத்தோம், அது அட்டூழியம் செய்தபொழுது மீட்டோம்

இப்படியாக பல போராட்டங்களை தனியாக செய்த திமுக காவேரி போராட்டத்தையும் தனியாக சுமந்தது

வழக்கு வலுத்தது, இந்திய யதார்த்தம் என்பது உடன்பிறப்பே நீ அறியாதது அல்ல. ஒரு சொத்துகுவிப்பு வழக்கே 18 ஆண்டுகாலம் இழுத்த நாடு இது, அதுவும் அவர் செத்தபின்புதான் தீர்ப்பு வந்தது

இப்படி வழக்கு இழக்கும்பொழுது நாம் என்ன செய்ய முடியும்? வாதாடினோம்

அப்பொழுதும் இறுதி தீர்ப்பை பின்னால் அறிவியுங்கள், இப்பொழுது பயிரை காப்பாற்ற தண்ணீர் விட சொல்லுங்கள் என எத்தனையோ அவசர மனுக்களை தாக்கல் செய்து காவேரியில் இருந்து தண்ணீர் பெற்று கொண்டு வந்தது கழக அரசு

ஆக உடன்பிறப்பே இப்படியாக கடந்த பாதையில் இப்பொழுதுதான் இறுதி தீர்ப்பு வந்திருக்கின்றது , அதற்கு முன்பெல்லாம் கன்னடம் வழக்கை இழுக்கும் அல்லது வழக்கு போடும்

நாமும் சட்டத்தை மதிப்பர்கள், இந்திய அரசியல் சாசனப்படி அதனை காக்கும் விதமாக முதல்வராக இருந்தவர்கள், அந்த சட்டத்தை மீற முடியுமா? வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது பேசமுடியுமா?

இப்பொழுது இதுதான் இறுதி தீர்ப்பு என முடிவாகிவிட்டது இனி காவேரி மேலாண்மைவாரியம் அமைக்கபட வேண்டும்

இதற்காக திமுக போராடுகின்றது, இது தவறா?

வழக்கின் தீர்ப்பு வந்தபின்புதான், அதில் கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்காமல் போகும்பொழுது போராட கிளம்பிவிட்டோம்

அதற்குள் ஒரு வரலாறும் நினைவின்றி, காவேரி கடந்த கதை நினைவின்றி எல்லாவற்றிற்கும் காரணம் அந்த கருணாநிதி என கிளம்ப்விட்டார்கள்

உடன்பிறப்பே அமராவதியில் நாம் அணைகட்டிவிட்டு, கபினியில் கட்டாதே, ஹேமாவதியில் கட்டாதே என சொல்ல முடியுமா?

ஒரு பிரதமர் உறுதி அளித்தபின் அவரை ஒரு முதல்வர் நம்பாமல் இருக்க முடியுமா?

அப்படியும் ராமசந்திரனின் காலத்திற்கு பின் காவேரி நடுவர் மன்றத்தை நாம் அமைத்தபொழுது இவர்கள் எங்கே சென்றார்கள்?

அரசு இதழில் காவேரி முடிவினை அச்சேறுவதை கெடுத்தான் கருணாநிதி என கிளம்புகின்றார்கள், உடன்பிறப்பே அப்படி ஒரு தீர்ப்போ முடிவோ என்று வந்தது? வந்திருந்தால் தானாக அச்சிக்கு போகாதா? அதை நான் கெடுக்க முடியுமா?

பெங்களூரில் வாழும் லட்சகணக்கான தமிழர் உண்டு,, நீங்கள் எந்த வரலாற்றை கண்டீர்களோ தெரியாது ஆனால் பர்மாவில், இலங்கையில் தமிழருக்கு எதிராக நடந்த கலவரங்களையும் அதில் பாதிக்கபட்டோர் அகதிகளாக ஓடிவந்து பராரிகளாய் வாழ்ந்ததையும் கண்ணார கண்டவன் நான்

அதனால் அவர்களையும் மனதில் வைத்துதான் மாநில நல்லுறவும் வேண்டும், நம் உரிமையும் வேண்டும் என்ற நோக்கில் கழக அரசு செயல்பட்டது

இதில் எவனோ கிறுக்கன், செருக்கன் ஒருவன் கருணாநிதி மகள் செல்வி பெங்களூரில் இருப்பதால் கருணாநிதி தயங்குகின்றான் என்கின்றார்கள்

மிசாவில் பெற்ற மகனையே சிறையில் சித்திரவதை செய்தபொழுதும் கொஞ்சமும் அச்சமின்றி மத்திய அரசை எதிர்த்த கருணாநிதியினை குற்றம்சாட்ட இதுவா கிடைத்தது?

கன்னடத்தி இங்கே வரலாம் ஆளலாம் அவளுக்கு நினைவு சின்னம் அமைக்கலாம், ஆனால் கருணாநிதி மகள் பெங்களூரில் வசிக்க கூடாதா?

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் திரியும் கூட்டமிது, தினமும் ஏதவாது ஒரு காரணத்திற்காக திங்கும் சோற்றில் உப்பில்லை என்றால் கூட கருணாநிதிதான் காரணம் என சொல்லியே பழக்கபட்டவர்கள்

நான் என்ன மேட்டூர் நீர்மட்டத்தை முல்லைபெரியாறு அணையில் ராமசந்திரன் குறைத்தது போல் குறைத்தேனா?

இல்லை காவேரி நீர் வாங்கவேண்டிய கன்னடத்தில் குற்றவாளி கூண்டில் நின்றேனா?

எந்த தவறு செய்தான் இந்த கருணாநிதி? அவன் அமராவதி, பவானி அணை விவகாரங்களை மறைத்தது தவறா?

அவன் இந்திராவினை நம்பியது தவறா?

அவன் பின்பு காவேரி நடுவர் மன்றத்தை அமைத்து காட்டியது தவறா?

இன்று வந்திருக்கும் தீர்ப்புக்கு அன்றே வழக்கு தொடுத்ததது தவறா?

இன்று பெரும் அநீதியாக தீர்ப்பு வந்தும் அதை அமைக்க மறுக்கும் மத்திய அரசினை கண்டித்து போராடுவது தவறா?

கருணாநிதி என்பவன் 12 வயதிலே யாரும் அழைக்காமல் பொதுவாழ்விற்கு வந்தவன், பெரியாரை அண்ணாவினை தலைவராக ஏற்றவன்

அவன் நடத்தா போராட்டமுமல்ல, அவன் காணா சிறைகளுமல்ல‌

காவேரிக்காக 1970ல் இருந்து போராடிவந்த திமுக, இன்றுகடைசி கட்ட போராட்டமாக மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் போராடுகின்றது

இது தவறா? அப்படி தவறேன்றால் அந்த தவறை ஆயுள் உள்ளவரை ஆயிரம் முறைக்கு மேல் செய்வான் இந்த கருணாநிதி

உடன்பிறப்பே, பெரியார் காட்டிய வழி உண்டு, அண்ணா ஊட்டிய நெறி உண்டு. இந்த நரிகளின் ஊளையினை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் போராடுவோம் வெற்றிபெறுவோம்

கைகெட்டும் தூரத்திற்கு வெற்றி வந்தாயிற்று, ஒரே மூச்சில் பறித்துவிட கூடிய தூரத்தில் நிற்கின்றது வெற்றி. ஒன்றாய் எழுவோம் வென்று காட்டுவோம்

காவேரி மேலாண்மை வாரியம் அமையட்டும், பூமாரி தஞ்சை தரணியெங்கும் பூக்கட்டும்

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s