“தென்றலை தீண்டியதில்லை நான் தீயினை தாண்டி இருக்கின்றேன்” : கலைஞர்

சாதியால் அவர் மிக பிற்படுத்தபட்டவர், படிப்பால் மிக பின் தங்கியவர் படிப்பினையே முடிக்கவில்லை, குடும்பமோ மிக ஏழ்மையான குடும்பம், பிறந்த இடமோ சிறு குக்கிராமம்.

இந்த பின்புலத்தில் ஒரு மனிதன் தனக்கு இருக்கும் தாழ்வுகளை எல்லாம், பலஹீனங்களை எல்லாம் பலமாக மாற்றி வாழ்வில் ஜெயித்தான் என்றால் நமது வாழ்நாளில் நாம் கண்ட பெரும் உதாரணம் கலைஞர்.

சாதாரண வசனகர்த்தா, சக்தி கிருஷ்ணசாமி போலவோ அல்லது திருவாரூர் தங்கராசு போலவோ ஒரு அடையாளத்தோடு வாழ்ந்திருக்கவேண்டியவர் ஆனால் இன்று பெரும் வரலாறாலாக வாழ்கின்றார்.

அவரின் வெற்றிக்கு காரணம் உழைப்பு, விழிப்பு, மக்கள் துடிப்பு

உழைப்பில் அவர் தேனீ, யாராலும் மறுக்க முடியாது. விழிப்பில் அவர் வித்தகர், இல்லாவிட்டால் இந்நாள் வரை கட்சி நடத்த முடியாது, மக்கள் நாடி பிடித்து பார்ப்பவர், மக்கள் யாரை ரசிக்கின்றார்களோ அவரை அருகில் அமர்த்திகொள்ளும் சாமர்த்தியம் அவரது

அப்படித்தான் எம்ஜிஆர் முதல் வடிவேலு வரை அவரால் அருகில் அமர்த்த முடிந்தது, கிரிகெட் ரசிக்கும் தமிழர்களுக்காக அவரும் கிரிக்கெட் பார்ப்பார், வீரர்களை பாராட்டுவார், அப்படி மக்களோடு மக்களாக பயணிப்பவர்.

புலிகளை தமிழகத்தில் மக்கள் கொண்டாடிய பொழுது அவரும் கொண்டாடினார், மக்கள் வெறுத்தபொழுது அவரும் கைகழுவினார், இதுதான் கலைஞர்

பெரும் யானையாக தமிழகத்தில் வலம் வந்த காங்கிரசையே பூனையாக்கி தன்னோடு கூட்டி செல்லும் அவரின் சாமார்த்தியத்திற்கு மட்டுமே எழுந்து நின்று கைதட்டலாம், 50 வருடத்தில் நிலமை அப்படித்தான் மாறி இருக்கின்றது.

அரசியல் என்பது பெரும் காட்டாறு, அதனில் பயணிப்பது கடினம், ஆனால் 70 ஆண்டுகளாக அசராமல் அவர் பயணிப்பதுதான் திறமை. இந்த ஆற்றில் சுழிகள் உண்டு, குப்புற தள்ளும் துரோக நீர்வீழ்ச்சி உண்டு, உடனிருந்தே விழுங்கும் முதலைகள் உண்டு, என்னவெல்லாமோ உண்டு, ஆனால் கலைஞர் கடந்தார்.

அந்த ஆறு கெட்டும் போய்விட கூடாது, மீன்கள் வாழவேண்டும், தவளைகள் வாழவேண்டும், மக்கள் கொண்டாட வேண்டும், பக்கதில் மரங்கள் வாழவேண்டும் அல்லாவிட்டால் கூவம் போல ஒதுக்கியும் விடுவார்கள் (புரிந்தால் புரிந்துகொள்ளுங்கள்)

சுவாரஸ்யமான அரசியல்வாதி அவர், நேரு காலம் முதல் ராகுல் காலம் வரை அரசியலில் கண்டவர், பேசா படம் காலமுதல் சிம்பு வரை சினிமாவில் கண்டவர், எல்லிஸ் ஆர் டங்கன் முதல் கார்த்திக் சுப்புராஜ் காலம் வரை கண்டவர்,
சுதேச மித்திரன் முதல் முகநூல் வரை பணியாற்றிய பெரும் நீண்ட நதி அவர்.

அரசியல், பத்திரிகை, சினிமா, இலக்கியம், கட்சிதலைவர், முதல்வர், அமைச்சரவை,போராட்டம், பிரச்சாரம், புத்தகபணி, பெரும் குடும்பத்து தலைவர் என்று எப்பக்கமும் ஓய்வில்லாமல் சுழன்ற வியப்புகுரியவர்.

அவரின் அரசியலில் சில சர்ச்சைகள் இருக்கலாம், சில முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் மாநிலம் அமைதியாக இருந்தது, புலிகள் காலத்தில் மட்டும் சில பெரும் கொலைகள் நடந்தன, அது பாம்பிற்கு பால் ஊற்றியதால் வந்த வினை, மற்றபடி பெரும்பாலும் மக்களின் பொதுவாழ்வு அமைதியே

இந்திய மாநிலங்களை ஒப்பிடும்பொழுது தமிழகம் வளரத்தான் செய்திருக்கின்றது, நன்றாக வளர்ந்திருக்கின்றது

நிச்சயமாக அவர் சுயம்பு, பீஷ்மர் போல பிதாமகன். கவனியுங்கள் எம்ஜிஆர் இல்லை என்றால் ஜெயா இல்லை, வன்னியர் சங்கம் இல்லை என்றால் பாமக இல்லை, நேரு இல்லை என்றால் காங்கிரசே இல்லை, பாபர் மசூதி இல்லை என்றால் பாஜக இல்லை, பிரபாகரனும் அவன் கொலைகளும் இல்லை என்றால் சீமான் இல்லை

ஆனால் கலைஞர் அண்ணா இல்லாவிட்டாலும் ஜொலித்திருப்பார், அண்ணாவிற்கு பின் அக்கட்சி சம்பத் காலம், எம்ஜிஆர் காலம், வைகோ காலம், டிஆர் காலம்(அப்படியும் ஒன்று உண்டு), அழகிரி காலம் என எத்தனையோ இடர்பாடுகளை கண்டாலும் அது இன்றும் மகா உறுதியாக இருக்கின்றது என்றால் அதற்கு ஒரே காரணம் யார் என சொல்ல தேவையில்லை

அவர் அரசியல் பீஷ்மர்தான் , அப்படித்தான் அவர் வளர்த்த , அழைத்து வந்து “புரட்சி நடிகர்” என பட்டம் கொடுத்த எம்ஜிஆராலே வீழ்த்தபட்டார், ஆனால் அதனையும் தாண்டி எழும்பினார், காரணம் கண்ணன் போல மாயவேலையும் அவரிடம் கலந்திருந்தது.

கத்துகுட்டி விஜயகாந்த் கொஞ்சம் சிந்தித்திருந்தால் இன்றும் கலைஞர் மறுபடியும் முதல்வராக இருந்திருப்பார், நிச்சயம் வருத்தபடவேண்டியவர் கலைஞர் அல்ல, அவருக்கென்ன அவர் பார்க்காத பதவியா? அனுபவிக்கா அதிகாரமா?

அவர் மீது மிகசில சர்ச்சை உண்டு, அதில் எம்ஜிஆர் பிரிவு, அது வேறுமாதிரியானது, அண்ணா இருந்திருந்தாலும் அது நடந்தே தீரும், காரணம் கட்சி பெரும் தொடங்க சக்தியால் நிர்பந்திக்கபட்டார் அவர், அதை மீறினால் அவருக்கு வாழ்க்கை இல்லை.

அந்த எம்ஜிஆர் மட்டும் பிரியவில்லை என்றால் இன்று சுமார் 50 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தவர் எனும் பெரும் சாதனை கலைஞருக்கு இருந்திருக்கும் விதி அது அல்ல,

பிரிந்த எம்ஜிஆரையும் பட்நாயக் காலத்தில் இணைத்துகொள்ள அவர் பட்ட சிரமம் கொஞ்சமல்ல, ஏனோ நடக்கவில்லை.

இன்னொன்று குடும்பத்தாரை கட்சிக்குள் அனுமதித்தது, அவர் என்ன செய்ய? எம்ஜிஆரை வளர்த்து பட்டபாடு போதாதா? அவர் இன்னொரு தீராதலைவலியினை அல்லவா உண்டாக்கி சென்றுவிட்டார் அதன்பின் கலைஞர் யாரையும் நம்பவில்லை,

இன்னொன்று அரசியலில் யாரையும் நம்பமுடியாது, அதில் எப்பொழுது கட்சி உடையும்? யார் நன்றிகுரியவர்கள்? என எதனையுமே பகுத்துபார்க்கமுடியாது, மன்னர் காலம் அல்ல மக்களாட்சியிலும் அரசியல் துரோகம் நிறைந்ததுதான்

கவனியுங்கள் குடும்பத்தாரை கூட வைக்கவேண்டிய இடத்தில்தான் வைத்திருப்பார் 🙂

நமது தலைமுறையில் நாம் கண்ட சுவாரஸ்யமான தலைவர் அவர், இன்றும் கோட்டையில் பணிபுரிந்த அனுபஸ்தர்களை கேளுங்கள், தாங்கள் பார்த்த பெரும் நிர்வாகி கலைஞர் என்பார்கள், அவரிடம் பழகியவர்களிடம் கேளுங்கள் கொஞ்சநேரம் பேசினால் அவரை பிரியமுடியாது என்பார்கள்

அவரின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் “தென்றலை தீண்டியதில்லை நான் தீயினை தாண்டி இருக்கின்றேன்”

அவர் கடந்துவந்த பாதையினை பாருங்கள், அவர் தென்றலலை தீண்டியதில்லை தீயினை தாண்டியிருக்கின்றார், பாட்டிசைக்கும் குயில்கள் இல்லை அவர் பாதையில் படமெடுக்கும் பாம்புகள் குவிந்திருந்தன‌

அது உண்மையும் கூட, மனிதர் ஒருநாளும் நிம்மதியாக இருந்ததில்லை, கல்வியில் தோல்வி, 
வறுமை, வசனம் எழுதிய காலம், பெரியாருடன் பிரிவு, முதல் மனைவி மறைவு, கட்சி, அது ஆட்சியினை பிடிக்க போராட்டம், மொழி போராட்டம், சம்பத்துடனான போராட்டம், அண்ணா மறைவு, அண்ணாவிற்கு பின் முதல்வராக அவர் பட்ட பாடுகள் ஏராளம்,

காரணம் பெரும் அடையாளங்கள் எல்லாம், கல்வி பின்புலத்தோடு இருந்தது, அதனை தாண்டி ஜெயிக்க அவர் நடத்தியது பெரும் போராட்டம்.

எம்ஜிஆருடன் அடுத்த யுத்தம், மிசா சட்டம், அடுத்தடுத்து போராட்டம், இந்திராவுடன் போராட்டம், ராஜிவுடன் உரசல்,

எம்ஜிஆர் எனும் சகாப்தம் மறைந்ததும் வைகோவுடன் போராட்டம், ஜெயாவுடன் போராட்டம், தான் வளர்த்த மாறன் குடும்பத்துடன் மறைமுக போராட்டம், குடும்ப போராட்டம், பின் எதிர்கட்சி தலைவராக போராட்டம்,

அவ்வப்போது ராமதாஸ், விஜயகாந்துடன் மிக சிறிய உரசல், இன்று அவர்களை கடந்து சென்று வெற்றி சிரிப்பு சிரிப்பது வேறுவிஷயம்.

அவரை ஈழவிஷய்த்தில் பழிப்பது தேவையற்ற ஒன்று, அவரால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டுதான் ஓதுங்கினார்,

அவரின் அந்நாளைய அகில இந்திய டெசோ அருமையான முயற்சி, ஈழமக்களுக்காக மொத்த இந்தியாவினையும் திரட்டிய முயற்சி, அழகான முயற்சி

ஆனால் அமிர்தலிங்கம், சபாரத்தினம் எல்லாம் புலிகளால் கொல்லபட அதனை நிறுத்தினார் கலைஞர், உச்சகட்டமாக ராஜிவ் கொல்லபட்டபின் , கலைஞருக்கு தெரிவிக்கபட்ட செய்தி “ஈழவிடுதலை மேதகு பார்த்துகொள்வார், நீங்கள் விலகினால் போதும்” கலைஞர் விலகினார்

இன்னொன்று ஒரு முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளியினை , ஒரு மாநில முதல்வர் காப்பாற்றுவார் என்று எந்த மடையனாவது எதிர்பார்ப்பானா? ஆனால் பிரபாகரன் எதிர்பார்த்திருந்தால் அவன் மடையன், அதனை ஊரெல்லாம் சொல்லும் சீமான் இன்னொரு முட்டாள்.

அப்படி 2009ல் யுத்தம் நின்றிருந்தாலும் என்ன தொடரும்? அதே குண்டுவெடிப்பு அதே சாவு, மற்றபடி ஈழம் ஒரு காலமும் அமையாது. இப்படி பல்லாயிரம் பேர் செத்துகொண்டே இருக்க ஒருவன் சாவது நலம் விட்டு தொலையுங்கள் சனியனை.

இந்த ஈழவிவகாரம் 1991ல் தமிழகத்திலிருந்து விடைபெற்றது என்பது அவருக்கு தெரியும், இன்றும் அவர் நூலிழையில்தான் ஆட்சியினை 2011ல், 2006ல் பறிகொடுத்தார் என்றால், புலிகளை தமிழக மக்கள் வெறுத்திருக்கும் வெறுப்பு அப்படி.

எல்லாவற்றையும் தாண்டி ரசிக்க வேண்டிய மனிதர் அவர், அவரிடம் கற்றுகொள்ளவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அது தோல்விகளையும், அவமானங்களையும் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டுகொண்டே இருப்பது, கொஞ்சமும் சுணக்கமில்லாமல் தொடர்வது.

எத்தனை அவமானம், இழப்பு, கடுஞ்சொல், பழி என அனைத்தையும் தாங்கும் அந்த ஒரே ஒரு விஷயத்தை எல்லோரும் கற்றுகொள்ளலாம், நிச்சயமாக சொல்லலாம்.

அவரே கண்களை துடைத்துகொண்டு சொன்னது போல “இன்று இவர்கள் (2005ல் ஏதோ சர்ச்சை) பழிப்பது எல்லாம் என்னை பாதிக்காது, சமூகமே இழித்தும் பழித்தும் பேச்சுக்களை 5 வயதிலிருந்தே கேட்டு வளர்ந்தவன் நான், அன்றிலிருந்தே இவை எல்லாம் எனக்கு பழக்கபட்டவை.

இதனை எல்லாம் மனதில் சுமந்தால் என்றோ வீட்டோடு முடங்கி இருப்பான் கருணாநிதி” அது பெரும் உண்மை கூட‌

எம்ஜிஆர் பிரிந்தபின் அவருக்கு வாக்கு வங்கி சரிவுதான், ஆனால் அதனை வைத்துகொண்டும் முதல்வர், மத்திய ஆட்சியில் பங்கு என அசத்தினார் அல்லவா? அதுதான் சாமார்த்தியம்

உடைந்த மட்டையினை வைத்துகொண்டே சிக்சர் அடிக்கும் பேட்ஸ்மேன் எவ்வளவு திறமைசாலி? அதேதான் கலைஞர்

இப்படி வாழும் ஒரு வரலாறாக வாழ்ந்து கொண்டிருப்பவருக்கும் அவருக்கு 95ம் பிறந்தநாள், வாழ்த்த வயதில்லை பிரார்த்திக்கலாம், சிலரின் அருமை அவர்கள் வாழும் காலத்தில் அதிகம் தெரியாது, ஒரு காலம் வரும் அன்று தெரியும்

அது இப்பொழுது நன்றாக தெரிகின்றது

பாகுபலி படத்தின் கதை என்ன? அக்கால சோழ கதைகளும், மங்கம்மாளின் (ரம்யா கிருஷ்ணன்) கதை கலப்புமே , அப்படி 2200, 2500களில் தமிழக அரசியல் படம் எடுப்பார்களானால் கலைஞரை தவிர்த்துவிட்டு என்ன எடுக்க முடியும்? இதுதான் அவரின் முத்தாய்பு காலத்தை வென்றுவிட்ட வெற்றி.

நாம் ரசித்த, மனதிற்குள் மிகவும் சிலாகித்த, தமிழக வரலாற்றில் அழியா இடம்பிடித்த, பெரும் போராட்டத்தை எதிர்கொண்டாலும் கொஞ்சமும் கலங்காத ஒரு பெரும் சுவரஸ்யாமான மனிதர் அவர்

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் நிச்சயம் மகிழ்ச்சி, அவர் இன்னும் பல்லாண்டு வாழவேண்டும், வாழ பிரார்த்திப்போம்

அவர் பெற்றதை பார்க்காதீர்கள், அவர் இழந்ததை பாருங்கள், அவர் சந்தித்த போராட்ங்களும், மன உளைச்சல்களும் அதனை தாண்டி நிற்கும் அசாத்திய வலிமையும் அவருக்கு மட்டுமே சாத்தியம்.

இந்த நீண்ட நெடும்பயணமும் அவர் வாங்கி வந்த வரம்.

கலைஞருக்கு எம்முடைய‌ கோரிக்கை எல்லாம் இனியும், தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் அவர் வாய்திறந்து சீமானுக்கு ஒரு பதில் மட்டும் சொல்லிவிட கூடாது, இந்த தண்டனையிலே அந்த தேசதுரோகி சைமன் புழுங்கி திரியட்டும்.

முதல்வருக்கு எம்மை போன்றவர்கள் கொடுக்கும் கோரிக்கை என்னவென்றால், புத்தகங்களால் ஆளானவ‌ர் கலைஞர், நிறைய படிப்பவர் அதனால்தான் அண்ணா நூலகம் என ஒன்றை தொடங்கினார்,

ராணுவத்திற்கு சொந்தமான கோட்டையில் சில தமிழ அடையாளங்களை செய்யமுடியாது என்றுதான் புதிதாக சட்டசபை நிர்மானித்தார்

இது இரண்டும் அவரின் பெரும் கனவுகள், அது நியாமும் கூட‌

அதனை செயல்படுத்திவிடுங்கள், பதவியிலிருக்கும் உங்களிடம் அவருடனே கண்ணீருடன் கேட்கின்றோம், அவரின் முதுமை நாட்களாவது நிம்மதியாக கழியட்டும்,

வாழ்வில் பல கொடுந் தீயினை தாண்டி வந்த அவருக்கு இனியாவது தென்றல் வீசட்டும். பல கருநாகங்களை கடந்துவந்த அவர் பாதையில் இனியாவது குயில்கள் கூவட்டும்

ஒவ்வொரு மனிதனின் அவசியமும் அவன் இருக்கும் பொழுது தெரியாது, அவன் இல்லா நிலையில் தேடி தேடி அழுவார்கள்

குடும்பத்து பெரியவர்கள் பிரிந்தபின் அச்சோகம் குடும்பத்தில் அப்பட்டமாக தெரியும்

தமிழகத்து பெரியவர் பிரிந்த பின் அப்படித்தான் இங்கும் தோன்றுகின்றது, எல்லோரும் தேடுகின்றார்கள்

சொன்னால் நம்ப மாட்டீர்கள், பழனிச்சாமி நிம்மதியாக ஆள்வதாகவா நினைக்கின்றீர்கள்? இந்த உலகிலே மிரட்டி பதவியில் அமரவைக்கபட்ட நபர் அவர். எப்பொழுது விட்டுவிட்டு ஓடலாம் என்றுதான் நினைத்துகொண்டிருகின்றார்

ஆனால் டெல்லி மிரட்டி அமரை வைத்திருக்கின்றது, அவருக்கும் கலைஞர் இருந்தால் இந்நிலை வருமா? என எண்ணம் இருக்கலாம்

எல்லா தரப்பு மக்களும் ஒரு சேர அவரை தேடுகின்றார்கள், ஒவ்வொரு செய்தியிலும் அவரை நினைத்து பார்க்கின்றார்கள், திமுகவின் ஒரு அறிக்கையாவது கலைஞர் பாணியில் வருமா? என பார்த்துவிட்டு சோர்ந்துவிடுகின்றார்கள்

இந்த பிறந்த நாளில் திமுக மேடைகளும், டிவிக்களும் களை கட்டும், பட்டிமன்றம் அது இது என பின்னிகொண்டிருப்பார்கள்

பலர் அவர் எவ்வளவு சம்பாதித்தார் என எதிர்வாதம் செய்வார்கள்

நாமோ அம்மனிதன் எவ்வளவு போராடினான், எவ்வளவு விஷயங்களை சாதித்தான், இப்பொழுது இருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் என கண்களை துடைத்துகொண்டு அம்மனிதனுக்காக வேண்டுகின்றோம்

அவன் களத்திற்கு வரவேண்டாம், அவன் உழைத்ததும் எழுதியதும் போதும் , நிரம்ப உழைத்துவிட்டான்

ஆனால் அவன் எங்களோடு நலமாய் இருக்கின்றான் என்ற ஒற்றை சொல் போதும், ஆயிரம் யானை பலத்தினை அது கொடுக்கும்

அந்த அசாத்திய மனிதனின் நலனுக்காக அவன் நம்பாத கடவுளிடம் பிரார்த்திகின்றோம்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s