படிப்பு மட்டுமே வாழ்க்கை என்பது அல்ல‌

அந்த பிரதீபா நன்றாகத்தான் படித்திருக்கின்றாள், ஆனால் நீட் தேர்வு தோல்வி சோகத்தில் தற்கொலை செய்திருக்கின்றாள்

மிகபெரும் சோகம் எனினும் நிச்சயம் அப்பெண் அப்படி செய்திருக்க கூடாது

ஆமை தன் முட்டையின் வாய் பகுதியினை கடலை நோக்கியே திருப்பி வைத்திருக்குமாம், காரணம் முட்டையினை விட்டு வெளிவரும் குஞ்சுகள் நேரே கடலுக்கு செல்ல ஏற்பாடாம், இல்லை என்றால் அக்குஞ்சுகள் திசைமாறி செல்லுமாம்

அப்படி பத்தாம் வகுப்பிலிருந்தே டாக்டர் கனவு கண்ட அந்த மாணவி, பின் பல நெருக்கடிகளால் திசைமாற , தன் வாழ்வு வீணோ என நினைத்து இறந்திருக்கின்றாள்

படிப்பும் அது கொடுக்கும் வேலையுமே தங்கள் வாழ்வுகடன் என எண்ண வைக்கும் கொடும் சமூக நம்பிக்கையின் தாக்கம் இது

ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு நோக்கம் இருக்கின்றது, அது ஏன் என நமக்கு தெரியாது, ஆண்டவனையன்றி யாருக்கும் தெரியாது

அது திரும்பும் இடத்தில் நாமும் திரும்ப வேண்டும், அது வளையும் இடத்தில் நாமும் வளைய வேண்டும்

அதை மீறிய செயல்கள்யாவும் பலனை தரா

ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணமிருக்கும், வாழ்வு தரும் ஒவ்வொரு தோல்வியும் நம்மை திசைமாற்றி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும்

இதனைத்தான் விதிப்படி வாழ்க்கை என்றார்கள், ஆற்று நீர் இலை போல வாழ்வு என்றார்கள்

படிப்பு மட்டுமே வாழ்க்கை என்பது அல்ல‌

ஒழுங்காக படித்திருந்தால் கருணாநிதி என்பவர் இன்று எங்கோ தமிழாசிரியராய் இருந்திருப்பார், காங்கிரஸில் பதவி கிடைத்திருந்தால் பெரியார் புரட்சியுமில்லை வெங்காயமுமில்லை

அந்த கோபாலமேனன் இலங்கையில் சாகாவிட்டால் அந்த சனியன் ஏன் நடிக்க வரபோகின்றது? தமிழகம் சீரழிய போகின்றது

அதுவும் 45 வயதுவரை வாய்ப்பே இல்லாமல் மனம் வெறுத்து,அதன் பின் வசூல் சக்கரவர்த்தியாகி அது பின்னாளில் முதல்வரே ஆனது

5ம் வகுப்பு தாண்டி இருந்தால் அவர் அலுவலக பியூணாக இருந்திருப்பார், படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தாலும், படித்திருந்தால் அந்த மாபெரும் உயரத்தை எட்டியிருக்க முடியுமா? என்ற கேள்வியும் அவருள்ளே இருந்தது

சாத்தப்ப செட்டியார் சம்பாதித்தை அவர் பாதுகாத்திருந்தால் நான் ஏன் கவிஞராக போகின்றேன் என்பார் கண்ணதாசன்

தென்னாப்ரிக்காவில் காந்தியினை வெள்ளையன் மிதித்து எறியாவிட்டால் இந்தியாவின் எதிர்காலம் குழப்பமாகவே இருந்திருக்கும்

ஏராளமான உதாரணங்களை உலகில் சொல்லமுடியும்

அலெக்ஸாண்டர் முதல் ஹிட்லர் வரை தன் திட்டமெல்லாம் வெற்றிபெற்றது என சொல்லும் ஒருவனை காட்டுங்கள், ஒருவனும் அப்படி இல்லை

அட ஆனானபட்ட அவதாரங்களான கண்ணன், ராமன், இயேசு கிறிஸ்துவரை தாங்கள் நினைத்ததை முழுக்க சாதிக்கமுடியாமல் கிடைத்ததை ஏற்றுகொண்ட தருணங்கள் உண்டு

அவதாரங்களே தப்பமுடியாது எனும்பொழுது சாதாரண மனிதரான நாம் ஏங்கி தவிப்பது எப்படி சாத்தியம்?

இதனால்தான் நடப்பதெல்லாம் நன்மைக்காக என்பார்கள், ஒவ்வொரு தோல்வியிலும் நன்மை உண்டு என்பார்கள்

இப்படிபட்ட மனநிலையினை பதின்மவயது குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பார் யாருமில்லை

புத்தங்களை புரட்டிய அளவு, அனுபவ மொழிகளையோ இல்லை தத்துவ நூல்களையோ அவள் புரட்டியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது

எல்லோரும் எழுதியது போல அவளும் எழுதினாள், தோற்றுவிட்டாள். அதற்காக இங்கு எல்லாம் மோசடி என்பது ஏற்புடயதாகாது

அப்படியானால் தோற்ற 61% மாணவர் நிலை என்ன?

ஒன்றுமட்டும் புரிகின்றது

மன வளம் என்பது இப்பொழுது உள்ள குழந்தைகளிடம் வளர்க்கபடுவதில்லை, பந்தயத்திற்கு தயார் படுத்தும் குதிரை போல அவர்கள் வளர்க்கபடுகின்றனர்

குதிரைக்கு வெற்றி தெரியுமா? தோல்வி தெரியுமா? பந்தயம் முடிந்ததும் புல் மேய சென்றுவிடும்

ஆனால் மானிட மனம் அப்படியா? அதுவும் பிஞ்சுமனம் தோல்வியினை தாங்குமா?

சிறுவயதில் இருந்தே பெரும் எதிர்ப்பார்ப்புகளை அவர்கள் மேல் சுமத்திவிடுகின்றோம், அந்த சுமை அவர்களை மனதாலும் சில நேரம் உடலாலும் சாகடிக்கின்றன‌

தேர்வுகள், பாட திட்டங்களை விட முக்கியமானது மன வள பயிற்சி, மன ஆற்றுபடுத்தும் பயிற்சி

அதுவே இன்றுள்ள மாணவர்களுக்கு மிகுந்த தேவை

கல்வி என்பது வேலைக்கான விஷயம் என்பது மாற்றபட்டு உலகில் வாழ தேவையான அறிவு என்பதை உணரவைக்க வேண்டும்

பள்ளி தேர்வு என்பது வெறும் மைல் கல், சிறப்பு தேர்வுகள் என்பது வாயில் சீட்டு.

சீட்டு கிடைத்தால் நுழையலாம் இல்லை அடுத்த ஆயிரம் வாசல்களில் ஏதாவது ஒன்றில் நுழைந்தால் வாழ்ந்துவிட்டு போகலாம்

படிக்க சொல்லிகொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், உழைக்க கற்றுகொடுக்க வேண்டும், சிந்திக்க கற்றுகொடுக்க வேண்டும்

மேல்நாட்டு இளைய சமுதாயம் உழைப்பு, சிந்தனை இந்த இரண்டிலுமே மேல் எழும்பிகொண்டிருக்கின்றது

இவ்வாறான சாவுகள் இனி தடுக்கபட வேண்டும். அந்த அபலை பெண்ணுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

 
%d bloggers like this: