எஸ்.வி ரங்காராவ் : பிறந்த நாள் நூற்றாண்டு இன்று…

Image may contain: 1 person, standing and text

தமிழ் திரையுலகின் பொற்கால படங்களில் சில நடிகர்கள் மறக்க முடியாத அற்புத நடிகர்கள். பாலையா, நாகையா போன்ற வெகுசிலரில் அந்த நடிகரும் ஒருவர்.

முதிர்ந்த பொறுப்பான குடும்பத்தின் தலைமகன் வேடத்திற்கு அவரை விட்டால் அந்நாளில் நடிகனே இல்லை.

அவரின் ஆஜானுபாகுவான உயரமும், , தீர்க்கம் காட்டும் முகமும் அந்த வேடத்தில் அவரை பிரகாசிக்க செய்தது

நீங்கள் பழைய படங்களின் ரசிகர்கள் என்றால் நிச்சயம் அந்த நடிகனை அவ்வளவு ரசித்திருப்பீர்கள்.

சமரல்ல வெங்கட ரங்க ராவ் எனும் எஸ்.வீ ரங்கராவ்

அற்புதமான நடிகர், அந்த முதிர்ந்த வேடங்களில் அவர் காட்டிய பண்பட்ட நடிப்பு அட்டகாசமானது. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு இடங்களிலும் கோலோச்சினார்

தமிழ் திரையுலகத்திற்கு ஒரு விதி உண்டு. முதலில் ஒருவன் என்ன வேடம் இட்டானோ, அதே வேடத்தில் அவனை அது நிறுத்திவிடும்

ராமசந்திரன் வாள்சண்டையாளர் ஆனதும், சிவாஜி அழவே வந்து நின்றதும் இப்படித்தான். ரஜினி இமேஜ் முதல் ராமராஜனின் பசுமாடு அடையாளம் வரை அப்படித்தான். ஒரு அடையாளம் விழுந்துவிட்டால் மாற்ற முடியாது

அப்படி இளம் வயதிலே முதிர்ந்த வேடமிட்ட ரங்கராவிற்கு கடைசி வரை முதிர் வேடமே கிடைத்தது

அவர் ஒன்று முதியவர் அல்ல, கல்லூரி படித்துவிட்டு நடிக்க வந்தவர்தான். அவரின் 6 அடி உயரமும் குரலும் உடல் அமைப்பிற்கும் அவர் பெரும் கதாநாயக ஆகியிருக்க முடியும்

ஆனால் பட வாய்ப்பு அவருக்கு முதிர்ந்த வேடமே கொடுத்தது, கிட்டதட்ட சாவித்திரிடினை விட 10 வயது மூத்தவரான‌ அவர் சாவித்திரிக்கு தந்தையாக நடித்தார், பின் அந்த வேடம் நிலைத்துவிட்டது

இதே விபத்து நடிகையரில் சிலருக்கு நடந்தது ஸ்ரீவித்யாவும், வடிவுக்கரசியும் அந்த வகை. மிக இளவயதிலே முதிர்ந்த வேடம் ஏற்றதால் கடைசிவரை அதுவே நிலைத்துவிட்டது

ரெங்கராவ் எல்லா முதிர்ந்த வேடங்களிலும் பின்னி எடுத்தார், அந்த “படிக்காத மேதை” ரங்காராவினை யாரால் மறக்க முடியும்? படத்தின் தூணே அவர்தான். இவ்வளவிற்கு சிவாஜிக்கும் அவருக்கும் வயது இடைவெளி அதிகமில்லை

1950 முதல் 1970 வரை அவரின் நடிப்பு தமிழ்சினிமாவில் மகா முக்கிய பங்கு வகித்தது.

Image may contain: 1 person, close-upதேவதாஸ், மிஸ்ஸியம்மா என தொடங்கி நானும் ஒரு பெண், கற்பகம், கண் கண்ட தெய்வம், என பல படங்களில் அற்புதமாக நடித்திருந்தார்

பொறுப்பான அண்ணனாக “முத்துக்கு முத்தாக..” என அவர் பாடி வந்தபொழுது பல பொறுப்பான அண்ணன்களை கண்முன் நிறுத்தினார்.

தந்தை, மாமனார், அந்தஸ்தான முதலாளி என எல்லா கவுரவமான வேடங்களிலும் அசத்தினார்

சில வேடங்களில் வாழ்ந்து கெட்ட மனிதனாக அவர் வந்து நின்றபொழுது கலங்காத கண்களும் கலங்கின‌

தன்னை தவிர யாரும் நல்லவன் வேடத்தில் நடித்துவிட கூடாது என்ற பெரும் கொள்கையில் இருந்த ராமசந்திரன் தன் “நம்நாடு” படத்தில் அவரை வில்லனாக்கி மகிழ்ந்தார்

அதுவே பக்த பிரகலாதாவிலும் நடந்தது, அவரின் ஆஜானுபாகுவான உருவம் அதற்கு ஒத்துழைத்தது

சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை பாலையா போலவே தெரிந்தது

கடோத்கஜன் வேடத்தில் அவர் “கல்யாண சமையல் சாதம்..” என்ற பாடலை பாடியபடி வரும் காட்சி, தமிழக சினிமாவின் தவிர்க்கமுடியாத காட்சிகளில் ஒன்று

மனிதர் அப்படியே கடோத்கஜனை கண்முன் நிறுத்தினார்.

குரலில் தனி கணீர் சத்தம் உடையவர் அவர், எல்லாவற்றிற்கும் மேல் அவரின் குரல் மாடுலேஷன்

இன்றும் மிமிக்ரி மேடைகளில் யாராவது ரங்கராவின் குரலை மிமிக்ரி செய்ய காணமுடியுமா என்றால் முடியாது, ஒரு விஷேஷ குரல் அது

சில படங்களை கூட தெலுங்கில் இயக்கியதாக சொல்வார்கள், நல்ல ஆற்றலும் இருந்தது.

ஆனால் இந்த அற்புத நடிகனுக்கு ஏதும் அரசு விருதுகள் கிடைத்ததா என்றால் இல்லை. ஏன் என்றால் இங்கு அப்படித்தான்

ரங்கராவினை நினைக்கும் பொழுதெல்லாம் ஒருவித பரிதாபம் தோன்றும்

தன் வேடங்களில் முதிர்ந்த வயது தோற்றத்தில் வந்த அவர் , தன் வாழ்வில் முதுமையினை எட்டவில்லை

அவர் மறையும்பொழுது 56 வயதுதான் ஆகியிருந்தது, தன் ஒப்பனையில் முதுமையினை கண்டாரே அன்றி தன் இயல்பான வயதில் காணவில்லை

தன் கிழட்டு வயதிலும் கல்லூரி மாணவனாக ராமசந்திரன் நடித்த திரையுலகில், இன்னும் பலர் வரிந்து கட்டி வலுகட்டாயமாக இளைஞரான் திரையுலகில் இன்றும் சிவகுமார் இளமையாக அலையும் திரையுலகில்

தன் இளம்வயதிலே முதிர்கிழவனாக நடித்த ரங்கராவ் அவர்களை விட பல மடங்கு உயர்ந்தவர்

கிழவனாக நடித்துவிட்டு முதுமை கோலம் பார்க்காமலே மரணித்த சில நடிகர்களில் அவரும் ஒருவர்

நடிப்பினை நேசித்த உயர்ந்த கலைஞர் அவர் , ரங்கராவ் இந்த உலகின் மிகசிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை.

கமல்ஹாசன் ஒருமுறை சொன்னார், “காந்தி, பாரதி போல சிலரில் நான் ஒருமுறை பார்க்க விரும்பும் நபர் ரங்கராவ்”

அந்த அபூர்வ கலைஞனுக்கு இன்று 100ம் பிறந்த நாள். இப்பொழுதாவது உரிய அங்கீகாரம் கொடுக்கபட வேண்டும்

 

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s