சுவாமி விவேகானந்தர்

Image may contain: 1 person, standing

“இந்தியா ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர்.

சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார்.

தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், உள்ளத்தில் உறுதி,எதற்கும் அஞ்ஞாத மனஉறுதி இவற்றுடன் அவர் பரம்மஹம்சர் மடத்தின் தலைவராகும் பொழுது அவருக்கு வயது வெறும் 23.

பெரும் அவதாரங்களை தவிர, பிறவி ஞானிகளை தவிர யாருக்கும் இது சாத்தியமில்லை.

அந்த வயதிலே ஞானம் அடைந்தார், ஆண்மீகம் என்பது ஆலயத்திலோ அல்லது இமயமலை,காசி சாமியார் கூட்டத்திலோ அல்ல, ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு தெய்வீக தன்மை உண்டு, அதனை வெளிபடுத்தினால் அதுதான் ஆன்மீகம் என்பதுதான் விவேகானந்தரின் கொள்கை அவரின் போதனை.

ஆண்மீகம் மூலம் இந்தியாவினை மாற்றி அமைக்கலாம், என்பதுதான் அவரின் கொள்கை. அக்கால இந்தியா மிகவும் பின் தங்கி மோசமாக இருந்தது, நாடெல்ல்லாம் சுற்றிபார்த்த விவேகானந்தர் அதனை மாற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும் என போதித்தார் , அதனால்தால் அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் அவருக்கு தேவையாய் இருந்தனர்.

அவரது போதனைகள் சாகாவரம் பெற்றவை, புத்தரை போல, பெருமான் இயேசுவினை போல பெரும் அறிவார்ந்த மொழிகளை அவர் போதித்தார், அதனால்தான் உலகம் அவரை மகான்கள் வரிசையில் தயக்கமில்லாமல் ஏற்றுகொண்டது.

சிகாகோ உலக சமய மாநாட்டில் எல்லோரும் ஆங்கில நாகரீகத்தில் “சீமான்களே,சீமாட்டிகளே” என சொல்லி பேச தொடங்க, எடுத்த எடுப்பிலே “சகோதர, சகோதரிகளே” என தொடங்கி கைதட்டலை அள்ளியவர். கேட்டதற்கு காரணம் சொன்னார். “ஒரு துறவிக்கு பெற்றவரை தவிர வேறு எல்லோரும் சகோதர சகோதரியே” என அமைதியாக விளக்கினார்.

அதிலும் ஒரு கிறிஸ்தவ பாதிரி அது எப்படி என துளைத்து கேட்க, அர்த்தமுள்ள புன்னகையை விவேகானந்தர் உதிர்த்தார் என்பார்கள், அர்த்தம் வேறு ஒன்றுமில்லை, பைபிளில் புனித பால் எனும் துறவி எழுதிய திருக்கடிதங்கள் எல்லாம் அன்பான சகோதர சகோதரிகளே என்றுதான் தொடங்கும், இதுதான் ஒரு துறவிக்கு முதல் அடையாளம்.

அதுவும் உலக சமயமாநாட்டில் ஒரு காவி பரதேசி கோலத்தில் சென்று, இந்திய ஞானத்தை, அதன் அமைப்பை, அதன் ஆழ்ந்த நோக்கத்தினை அவர் விளக்கி முழங்கியபொழுது, இமைக்கமறந்து அவரை வணங்கி நின்றது அந்த சபை.

பெண்களுக்கான மரியாதை என்ற பொருளில் அவர் பேசும்பொழுது “எங்கள் நாட்டில் மனைவியினை தவிர எல்லோரையும் அம்மா என்றே அழைப்பார்கள், சிறுமியிடம் பிச்சை கேட்டாலும் தாயே என அழைக்கும் பாரம்பரியம் எங்களது” என அவர் சொன்னபொழுது, மற்ற மத வித்தகர்களிடம் அதற்கு பதில் இல்லை

இந்து மத கலாச்சாரத்தில் பெண்களுக்குரிய உயர்ந்த இடத்தினை அவர் விளக்கியபொழுது மற்ற மத குருக்கள் எல்லாம் சங்கடத்தில் தலையினை தொங்க போட்டுகொண்டனர். அவ்வளவு அழகாக விளக்கினார்.

உண்மையில் பழம் இந்திய அடையாளங்களில் பெண்களுக்கான இடம் அவ்வளவு உயர்ந்ததாய் இருந்திருக்கின்றது என்பதை அவர் விளக்கியபொழுது மற்ற மதத்தாருக்கு இந்துமதத்தின் மீதான அபிமானம் கூடிற்று

இதுதான் விவேகானந்தரின் முத்தாய்ப்பு அவர் எல்லா மதங்களையும் படித்தார், எல்லா மத நோக்கத்தையும் அவரின் இளம் வயதிலே அறியமுடிந்தது, எல்லா ஆறுகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதமும் இறைவனை அடையவே என அவரால் 30 வயதிலே போதிக்க முடிந்தது.

அதனால்தான் வெள்ளையர் கூட அவரை கிழக்கின் ஞான ஒளி என அழைத்தனர். கல்வி மூலம் மக்களின் அறியாயமை அகற்றவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார், இந்தியா முழுமையும் விழிப்புணர்வு வரவேண்டும் என்பதே அவரது முதல் குறிக்கோள்.

நிச்சயமாக சொல்லலாம்,, அழிந்திருந்த இந்து மதத்தினை மீட்டெடுத்தவர் ஆதிசங்கரர் என்றால், அதற்கு அழியா புகழை கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

மிகபெரும் முரண்நகை என்னவென்றால் இந்துமதத்தினை உயிராக நேசிப்பவர்கள் என சொல்லிகொள்பவர்கள் எல்லாம் இவர்களை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள், அவர்களுக்கு இப்பொழுது தெரிவதெல்லாம் கோட்சே, மாட்டுகறி, இன்னபிற விஷயங்கள்

உலகில் பலநாடுகளில் இந்தியாவில் பிறந்த இருவருக்கு மட்டும் சிலை உண்டு, காரணம் அவர்களை உலகம் மதித்துவணங்கி ஏற்றுகொண்டது, ஒருவர் காந்தி இன்னொருவர் சுவாமி விவேகானந்தர்.

அவரது தெளிவு அப்படி, போதனைகள் அம்மாதிரியானவை. மனிதனுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் ஒப்பற்ற மந்திரங்கள் அவை. ஆன்மாவை தட்டி எழுப்ப கூடியவை.

அவரை இப்பொழுது படித்தாலும் ஆன்ம எழுச்சி அற்புதமாக உண்டாகும், அனுபவப்பூர்வமாக அறியலாம், அதனை எல்லாம் விட்டுவிட்டுத்தான் சிம்மாசனத்தில் மத்தகாசபுன்னகையை வீசிகொண்டு, அருகில் நடிகை உள்பட எல்லோரையும் வைத்துகொண்டு ஆன்மாவை எழுப்புங்கள் என சென்றால் என்ன கிடைக்கும்?

காட்டுயானைகளை விரட்டிவிட்டு ஆசிரமம் அமைத்து , சிவனுக்கு சிலை அமைத்து,பிரதமரை வரவழைத்து திறந்துவிட்டால் அவர் மகான் ஆகிவிடுவாரா?

அந்த போலிசாமிக்கு மட்டும் பணம் கிடைக்கும். உண்மையான ஞானியான விவேகானந்தர் எப்படி உயர்ந்திருந்தார்?

உங்கள் அறிவிற்காக உங்கள் போல அறிவான மகனை பெற, உங்களை திருமணம் செய்ய தயார் என ஒரு இளம்பக்தை வேண்டி நிற்க, “அம்மா..துறவிக்கு பெண்கள் எல்லாம் தாய் ஸ்தானம், நீ வேண்டுமானால் என்னை மகனாக ஏற்றுகொள், நான் இப்பொழுதே உன் மகனாவேன்” என சொல்லி உயர்ந்து நின்றாரல்லவா? அதுதான் விவேகானந்தர்.

அந்த வீரதுறவியையும் இன்றுள்ள கள்ளதுறவிகளையும் காணுங்கள், உங்கள் மனதில் விவேகானந்தர் பெரும் இடத்தில் அமர்வார், அவர்தான் கோபுர கலசம், இப்பொழுது உள்ள கள்ளசாமிகள் பற்றி சொல்ல தெரியவில்லை, பிதாமகன் சூர்யாவோடு சிறையில் இருக்கும் சாமியின் நினைவுதான் வந்து தொலைகிறது.

இறைவன் பெரும் சூத்திரதாரி, நைஷ்டிக பிரம்மசாரி துறவிகளை அவன் நீண்டநாள் வாழவிடுவதில்லை, அப்படித்தான் பெரும் ஞான சூரியனாக, தெய்வீக திருமகனாக உலகெல்லாம் இந்துமதத்தின் பெருமையை ஒரு இந்தியனாக ஒளிவீசி பரப்பிய அவரையும் எடுத்துகொண்டான்.இறக்கும் பொழுது அவருக்கு வயது 39 மட்டுமே.

இன்று அகண்டபாரதம், காவிகாவியம் என கிளம்பியிருப்பவர்களுக்கு அவர் நினைவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் சாகாவரம் பெற்ற பொன்மொழிகளில் ஒன்று நிச்சயம் அவர்களுக்கு தேவையானது. அவர் அன்றே சொன்னது,

“இந்த நாட்டிற்கு தேவையானது நிச்சயமாக மதம் அல்ல. கல்வியும், விழிப்புணர்வுமே அதுதான் இந்நாட்டை மாற்றும், மதம் மனிதனை மனிதனாக வாழ செய்யும் கோட்பாடு மட்டுமே”

ஆதிசங்கரரின் அடுத்த அடையாளம் விவேகானந்தர், சங்கரரை கிட்டதட்ட மறந்தாகிவிட்டது, விவேகானந்தர் பெரும் அடையாளம் என அறிவிக்கபடவுமில்லை, காரணம் அவரின் போதனை பெருந்தன்மையானது. இந்துக்களின் அடையாளம் என இப்பொழுது யாரை காட்ட நினைக்கின்றார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஆம் பசுமாடுதான் இந்துக்களின் அடையாளம், விவேகானந்தர் போன்றவர்கள் அல்ல‌

காரணம் விவேகானந்தர் உலக எல்லைகளை கடந்த ஞானி, இவர்கள் பாகிஸ்தானை தவிர வேறு எங்கும் கடந்து செல்லமாட்டார்கள், இது அரசியல்

அவரின் கிளிகதையும், கிணற்றுதவளை கதைகளும் போதும் அவரின் ஞானத்தினை சொல்ல.

ஆண்மீக தலங்கள் நிரம்பிய தமிழகத்திற்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இந்தியா சுற்றிய அவருக்கு தமிழகம் பிடித்தமான இடம், சென்னை வந்தார், அவர் தங்கிய இடம் இன்றும் விவேகானந்தர் இல்லம் என அழைக்கபடுகின்றது, மொத்த இந்தியர்களுக்கும் தெரியாத அவர் பெருமை, தமிழகத்து சேதுபதி அரசனுக்கு தெரிந்தது, சேதுபதி மன்னர் மட்டும்தான் அவர் சிகாகோ செல்ல பணவுதவியும் செய்தார்,

அதன் நன்றிகடனாகத்தான் அந்த மாபெரும் சொற்பொழிவினை நிகழ்த்தியபின் அவர் முதலில் இலங்கை வழியாக தமிழகம்தான் வந்தார்.

அவருக்கு வரவேற்பு கொடுத்த இடத்தில் இன்றும் நினைவுத்தூண் பாம்பனில் உண்டு.

குமரி விவேகானந்தர்பாறை அறிவாதவர் யாருமில்லை, அதுவும் அவர் கால்பட்ட புனிதபாறை,இவ்வாறாக‌ தமிழகத்தில் அம்மகானுக்கு அழியாத நினைவுசின்னம் உண்டு. குமரியில் விவேகானந்தர் நினைவு இல்லம் அமைக்க ஆயிரம் காரணம் உண்டு, அதில் அரசியல் சர்ச்சைகளும் உண்டு.

கொஞ்சம் அசந்தாலும் பாபர் மசூதி அளவிற்கு பற்றி எரியும் பிரச்சினைதான். பக்தவக்சலம் போன்ற உண்மை அரசியல்வாதியும், ஏக்நாத் போன்ற உண்மையான தேசபக்தர்களும் இருந்ததால் பிரச்சினை மகா சுமூகமானது, அல்லாவிட்டால் நிச்சயம் அது பெரும் கலவரமாக வெடித்திருக்கும்.

அந்த பாம்பன் நினைவுதூண் வைத்து பெரும் சர்ச்சை வெடிக்கலாம் என்றால் இப்பொழுதே கிளம்பி இருப்பார்கள், உண்மையில் விவேகானந்தர் விசுவாசிகள் உண்டென்றால் அந்த தூணை நேசித்திருப்பார்கள். ஆனால் அதனை சொல்ல கூட யாருமில்லை. நிச்சயம் அந்த இடமும் மகா வரலாற்று சிறப்பானது. அந்த ஞானமகன் சிகோகோ வெற்றி உரை ஆற்றிவிட்டு இத்திருநாட்ட்டில் கால்பதித்த முதல் இடம்.

ஒரு மாபெரும் ஞானசூரியனின் நினைவுநாளை உலகம் அனுசரிக்கின்றது, ஒரு இந்தியனாக அந்த ஞானமகனை வாழ்த்துவோம், நிச்சயம் அவர் வாழ்த்துகுறியவர், வாழ்த்துக்கு மட்டுமல்ல பின்பற்ற தக்கவரும் கூட.

யூத இனத்தை சிந்திக்க செய்து, அவர்களின் மதத்தில் புத்துயிர் கொடுத்தால் இஸ்ரேல் விடுதலை பெறும் என எண்ணி போதித்த இயேசுவிற்கும், இந்து மதத்தை இம்மக்கள் உண்மையாக புரிந்தால் இந்தியா விடுதலைபெறும் என நம்பிய விவேகானந்தருக்கும் ஏராள ஒற்றுமை உண்டு

இருவருமே வீரியமாக போதித்தார்கள், இருவரின் வாழ்வுமே சந்நியாச கோலமாக எழுச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது, விவேகானந்தரும் தன் கடைசி நொடியினை உணர்ந்து தன் சீடர்களுக்கு இயேசு போலவே உணவு பரிமாறியிருக்கின்றார்

அப்படியே கிறிஸ்தவ மிஷினரிகள் செய்த கல்விபணியும், விவேகானந்தரின் சீடர்களின் கல்வி பணியும் பாராட்டதக்கது

“இந்த நாட்டின் இழிநிலைக்கு காரணம் மதம் அல்ல, அந்த புனித மதத்தினை ஒழுங்காக பின்பற்றாததே..” என்ற அவரின் போதனை நிச்சயம் இன்றும், எக்காலமும் பொருந்த கூடியது.

அப்படி பின்பற்றினால் இந்நாடு எவ்வளவு உயர்வாக உலகில் ஒளிவீசும், அதனை செய்தால் இந்துமதமும் வாழும், இந்தியாவும் மகா அமைதியாக செழிப்பாக வாழும்

இந்நாடு இந்துக்கள் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்றால் அதற்கு விவேகானந்தர் காட்டிய வழியே சால சிறந்ததே அன்றி மாட்டுகறியும், மசூதி இடிப்பும் அல்ல‌”


விவேகானந்தரின் மறுபிறப்பு மோடி என ஒரு பக்தாஸும் கிளம்பவில்லையே ஏன்?

சொந்தமாக யோசிக்கமாட்டார்கள் என்பது சரிதான் போலிருக்கின்றது.

 


 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s