பொங்கிவருது காவேரி

எத்தனை வாரியங்கள், எத்தனை போராட்டங்கள், அரசியல் செய்தாலும் காவேரி சிக்கலை தீர்க்கும் சக்தி வருண பகவான் என்பவரிடம் மட்டுமே இருக்கின்றது

ஆடிமாத காவேரி என்பது எப்படி இருக்கும் என்பதை சில வருடங்களுக்கு பின் இப்பொழுதுதான் காண முடிகின்றது, கல்லணை திறக்கபட இருக்கின்றது

நீண்ட காலத்திற்கு பின் ஆடிமாத புதுவெள்ளத்தில் ஆடிபெருக்கு கொண்டாட பட‌ இருக்கின்றது.

காவேரி பெருகி வருவது மனதிற்கு நிறைவான செய்தி, காவேரி கரைவாழ் மக்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள்

ஊரில் இருக்கும்பொழுதே அதை உணரமுடிந்தது, ஆம் நீண்ட நாட்களுக்கு பின் ஆனி ஆடி சாரலை அனுபவிக்க முடிந்தது

ஆனி ஆடி சாரல் என்பது மிக மிக சுவாரஸ்யமான சுகம், கன்னியாகுமரி மாவட்டத்தின் வரம் அது, கேரளா தொடங்கி மும்பை வரை, ஏன் இமயமலை தொடரெல்லாம் கொட்டி தீர்க்கும் மழை கன்னியாகுமரி பகுதிகளில் மட்டும் ஒருவித அமைதி மழையாக பெய்யும்

அந்த சாரலுக்கே நல்ல மிளகு முதல் பல பொருட்கள் விளையும் என்பார்கள்

அந்த சுகந்தம் கன்னியாகுமரியினை ஒட்டிய நெல்லை பகுதிகளிலும் தெரியும், இம்முறை ஓரளவு அந்த சுகந்தம் கிட்டியது

ஆடிமாதம் என்பது தமிழக தெய்வங்களுக்கானது, அதனால்தான் என்னமோ நதிகளும் பெருக்கெடுத்து ஓடிவரும்

எல்லா ஆறுகளும் பெருக்கெடுத்து ஓடும் மாதம் என்பதாலேயே தென்னகம் முழுக்க தெய்வங்களை தேடுவார்களோ என்னமோ?

காவேரி பொங்கிவருவது மனதை நிறைக்கும் காட்சி

காவேரி போலவே ஆடிமாதம் பெருக வேண்டிய நதி வைகை, ஆனால் அது ஏனோ மகா அமைதியாக இருக்கின்றது

ராகுல்காந்தி பார்லிமென்டில் செய்தது

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை கவனித்தவர்களுக்கு புரியும், பிரான்ஸ் அட்டகாசமான யுத்தியினை வைத்திருந்தது

அதாவது ஆட்டத்தின் பெரும்பான்மையான நேரங்களில் குரோஷியா வீரர்களிடமே பந்து இருந்தது, பல வியூகங்கள், பாஸ்கள் என அவர்களே பந்தினை கட்டுபடுத்தினார்கள், ஓடி ஓடி அலுத்தும் போனார்கள்

பிரான்ஸ் அணி அவர்கள் அசந்த நேரத்தில் மிக நேர்த்தியாக புகுந்து தூள்பறத்தியது, பெரும்பாலும் அவர்கள் சக்தியினை வீணடிக்கவில்லை, குரோஷியா வீரர்கள் ஓடி ஓடி களைத்த வேளையில் அட்டகாசமாக கிர்ஸ்மேனும், மாப்பியும் நொறுக்கி தள்ளினார்கள்

இப்பொழுது ராகுல்காந்தியும் இதனைத்தான் பார்லிமென்டில் செய்தார்

விளம்பரம், ஒரே மோடி புராணம், பாஜக ஆட்சியில் இந்தியா செவ்வாய் வரை ஆட்சி செய்கின்றது போன்ற வெற்று கூச்சல்களில் பாஜக அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது

மிக சரியான நேரத்தில் உட்புகுந்து அவர்களை கிழித்து தொங்கவிட்டிருகின்றார் ராகுல் காந்தி

உலக கோப்பையில் பிரான்ஸ் அணி ஆட்டம் போலவே, மிக சரியான நேரத்தில் பாஜகவின் வெற்று விளம்பரங்களை கிழித்திருக்கின்றார் ராகுல்

குரோஷிய பயிற்சியாளர் நிலையில் அமித்ஷாவும், கோல்கீப்ப்பர் நிலையில் மலங்க மலங்க‌ மோடியும் முழித்து கொண்டிருக்கின்றார்கள்

உங்கள் அனைவருக்கும் நன்றி

இந்த கொடும் கடினமான நாட்களில் நான் நினைக்க வேண்டியவர்கள் ஏராளம் உண்டு

அதில் முக்கியமானவர் Midhun Chakkaravarthy

திருச்சியில் இருந்து வாகனமும், இன்னும் பல உதவிகளையும் செய்த மறக்கமுடியாதவர் Periya Samy. அந்த உதவியால்தான் சரியாக சென்று காரியம் நிறைவேற்ற முடிந்தது

Senthil Kumar Chennai, Kennady இருவரும் சென்னையில் இருந்து வந்திருந்தார்கள்

போனில் விசாரித்த நண்பர்கள் ஏராளம், கிட்டதட்ட 1 வாரம் முழுக்க போன் ஒலித்துகொண்டே இருந்தது

அதில் முகநூல் பிரபலம் முதல் கட்சி பிரபலம் வரை எராளமானோர் இருந்தார்கள்

நெல்லை மாவட்ட சன்டிவி நிருபர் Arivarasu Coonghya இருமுறை வந்திருந்தார்

முகநூலால் கிடைத்த ஏராளமான நண்பர்கள் என் துயரத்தில் பங்கேற்றிருந்தார்கள்

தோழி Nabisa Shahul , Mary Velankanni போன்றோர் எல்லாம் தொடர்ந்து விசாரித்துகொண்டே இருந்தார்கள்

நெருங்கிய உறவினரான ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ Inbadurai IS அவர்கள் அடக்கம் முடியும் வரை அருகிலே இருந்தார், அதன் பின்னும் சில முறை வந்து சென்று ஆறுதல் தெரிவித்தார்.

போனிலும், நேரிலும் , முகநூலிலும் இரங்கள் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி

இந்த மிக உருக்கமான பாசமே இன்னும் முகநூலில் எம்மை கட்டி போட்டிருக்கின்றது

என் தந்தையின் இறுதிகாலங்களை தங்களால் முடிந்தவரை மிக கவனமாக போராடிய மருத்துவ தம்பதிகள் Kavitha Sankar Venkatesan , Sankara Venkatesan இருவருக்கும் மிக்க நன்றி.

உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு என் துயர நாட்களில் இருந்து விடைபெறுகின்றேன்

அந்த கருப்பு வியாழன் மகா துயரமாக விடிந்தது

அந்த கருப்பு வியாழன் மகா துயரமாக விடிந்தது, எதை நினைத்து அச்சபடுகொண்டிருந்தேனோ அது நடந்தே விட்டது. தந்தை மறைந்தார் எனும் அந்த கொடும் செய்தி வாழ்வின் மிக பயங்கரமான தருணமாக நெஞ்சை கிழித்து போட்டது

யாருக்கும் வாய்க்க கூடாத வினோத விதி அவருடையது. அவரின் 4 சகோதரகளில் ஒருவர் நிச்சயம் தர்மன் ஆனால் அவர் ஓரளவிற்கு மேல் உதவமுடியாதபடி விதி பிரித்தது. மீதி மூவரில் ஒருவன் துரியோதனன் ஒருவன் சகுனி இன்னொருவன் எந்த வகையிலும் வராத வகையறா.

இவர்களுக்குள்தான் அவரின் வாழ்க்கை சிக்கியது. அவரின் தந்தை இருந்தவரை அவர் இவர் மீது காட்டிய அக்கறையும், அவருக்காக இவர் உழைத்த உழைப்பும் அந்த துரியன் கும்பலுக்கு மனதில் பெரும் வெறுப்பை கொடுத்தன‌

அந்த வெறுப்பு அவர் தந்தை மறைந்தவுடன் வெடித்தது, கேட்க யாருமில்லா நிலையில் அந்த மனிதனுக்கு மனதாலும் உடலாலும் சித்திரவதைகள் தொடர்ந்தன‌

கோபுரத்தில் இருந்த அவரின் வாழ்வு நொடியில் சரிக்கபட்டது, தந்தையும் தன் அருமை சகோதரனின் அருகாமையும் இல்லா நிலையில் அவர் மனம் குடியிலே வீழ்ந்தது

ஒரு பக்கம் வெறிபிடித்த சகோதர கும்பல், இன்னொரு பக்கம் தன் குடிபழக்கத்தால் பாதிக்கபட்ட‌ தன் மனைவியும் குழந்தையும் விடும் கண்ணீராகவே அவரின் வாழ்வு சென்றது

குடி, அழுகை, கண்ணீர் இப்படி சென்றுகொண்டிருந்த அவரின் வாழ்வில் அந்த மூத்த தெய்வத்தால் ஆறுதல் கிட்டியது. ஆயினும் சோவியத் பாணி ஆறுதல், நிலத்தில் உழைக்கலாம் ஆனால் உரிமை கிடையாது. ஏன் என்றால் அங்கு அப்படித்தான், துரியனின் நியாயம் அப்படியானது

அவரை பொறுத்தவரை என்று தன் உயிருக்கு நிகராக அவர் நேசித்து சம்பாதித்து கொட்டிய குடும்பம் மாபெரும் துரோகம் செய்ததோ அன்றே இறந்தார்

அதன் பின் அவர் வாழ்ந்ததெல்லாம் எனக்காக, அந்த உரிமை இல்லா சொத்தில் எனக்காக உழைத்தார். எப்படியாவது அந்த கொடும் நகரத்தில் இருந்து என்னை விடுவிக்க போராடினார்

அவர் அந்த பெரும் சிலுவையினை சுமக்காவிட்டால் நிச்சயம் நானே சுமந்திருக்க வேண்டும், நிச்சயம் என் வாழ்வு என்ன ஆயிருக்குமோ தெரியாது, கொலை வழக்கில் கூட நான் சிக்க வேண்டி இருக்கும்.

ஆனால் அவர் அந்த கொடிய சிலுவை சுமந்து என்னை காத்திருக்கின்றார்.

பெரும் வியாபாரியாக இருந்த அவர் எளிய கிராம விவசாயியாக, சில நேரம் கூலிக்காரனாக கூட தன்னை மாற்றிகொண்டார், எல்லாம் எனக்காக‌

உலகில் தாங்கமுடியாத வலி வாழ்ந்து கெடுவது, அந்த சோகத்தை தாங்க பெரும் பக்குவமும் வேண்டும், அது குடி தனக்கு கொடுப்பதாக நம்பினார், அதில் சரண்டைந்தார்

குடித்துவிட்டால் தான் விரும்பிய உலகில் அவரால் நுழைய முடியும், அது அரசியல் , விளையாட்டு, வரலாறு , ராணுவம், தத்துவம் என எல்லாவற்றிலும் அவரால் மிக நுணுக்கமாக பேசமுடியும்

ஆனால் போதை இறங்கிவிட்டால் எல்லாம் காலி

ஒரு நாள் சிரிப்பென்றால் அந்த சண்டாளர்களால் 100 நாள் அழுகையாக அவரின் வாழ்வு சென்றது. எந்நாளும் சண்டை , குடி, உரிமையினை கேட்டு அடிவாங்குவது என்றே அவரின் வாழ்வு சென்றது

சுருக்கமாக சொன்னால் நான் அந்த கிராமத்தில் பட வேண்டிய அடி, வலி, அவமானம் எல்லாவற்றையும் தாங்கி என்னை கரையேற்றிவிட்டு அவர் இறந்திருக்கின்றார்

அவர் அபூர்வமான மனிதர், அவரின் விதியும் அபூர்வமானது

அவரின் தந்தையும் பணக்காரர், அவரின் மகனுக்கும் வசதிக்கு குறைவில்லை ஆனால் அவர் மட்டும் ஏழை

அவருக்கு வந்த வியாதியும் அபூர்வமானது என்கின்றார்கள் மருத்துவர்கள், தமணி வீங்குவது மிக அரிதான நோயாம், வயதும் குடியால் பாதிக்கபட்ட உடலும் அவரின் மரணத்திற்கு அவகாசம் வழங்கவில்லை

செய்தி கேட்டு மகா அவசரமாக ஓடினேன், விஞ்ஞான உலகம் அதற்கு வழி செய்திருக்கின்றது.

உயிரற்ற அவரின் உடலை பார்க்கையில் மனம் சுக்கு நூறாக நொறுங்கியது, ஆனால் அவரின் அக்கோலத்தை காண விரும்பிய பலர் இப்போது இல்லை என்பது அவருக்கு கிடைத்த வரம்

நான் கைபிடித்து வளர்ந்த அந்த கரம் ஒடுங்கி கிடந்தது, நான் மண்வெட்டியும் கலப்பையும் பிடித்தபொழுதெல்லாம் ஓடி வந்து பிடுங்கிய அந்த கரம் ஓய்ந்திருந்தது

எவ்வளவோ பேசிய போதித்த அந்த வாய் அமைதியாகி இருந்தது, என் ஒருவனுக்காக துடித்த அந்த இதயம் இனி அதற்கு அவசியம் இல்லை என நின்றிருந்தது

மரணம் என்பது மானித விதி, யாரும் தப்பமுடியாது என்பது உலக யதார்த்தம். அதை மீற மனிதனால் முடியுமானால் பெரும் அரசனும், வைத்தியனும் ஏன் அவதாரங்கள் கூட இம்மண்ணில் நிலைத்து நிற்கும்

மாமன்னர்களும், அறிஞர்களும், அவதாரங்களும் விடைபெற்ற விலகில் என் தந்தை மட்டும் காலம் காலமாக வாழவா முடியும்?

ஞான நூல்களும், பட்டிதனத்தார் வரிகளும், கண்ணதாசனின் வரிகளும் காதோரம் ஒலித்துகொண்டே இருந்தன, மனம் திடமானது

எனக்காக வாழ்ந்த ஒரு ஆத்மா தங்கி இருந்த அந்த கூட்டினை அடக்கம் செய்யும் பொறுப்பினை முறையாக‌ முடித்தேன்

மனம் ஒருவித சஞ்சலமற்ற சலனமில்லா நிலையினை எட்டியது, எல்லாவற்றையும் ஒரே தட்டில் நிறுத்த சிந்தனை தோன்றிற்று

அவரின் வாழ்வில் யாரெல்லாம் உதவினார்களோ அவர்களை எல்லாம் தேடி தேடி சென்று நன்றி தெரிவித்தேன்

அதில் நயினார் நாகேந்திரன் என்பவர் மிக முக்கியமானவர். பாஞ்சாலிக்கு கண்ணன் கொடுத்த சேலை போன்றது அவரின் உதவி. அந்த உதவியில்தான் என் தந்தையின் இறுதி காலம் நிம்மதியாக கழிந்தது.

எப்படி என் தந்தையின் வாழ்வில் உதவியர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்தேனோ, அப்படி அவரை கொடும்பாடு படுத்தியவர்கள் மேலும் கோபம் வரவில்லை மன்னித்துவிட்டேன்

தந்தையே சென்றபின் இனி என்ன? நானும் மல்லுகட்டி சண்டையிட்டால் என் தந்தை எனக்காக பட்ட பாடுகளெல்லாம் வீணாகாதா? நான் அந்த பாடு படக்கூடாது என்றுதானே அவர் தலையில் வாங்கினார்.

அவர் உலவிய இடங்களில் எல்லாம் உலாவினேன், அதில் ஒரு நிம்மதி வந்தது. அவரோடு சுற்றிய, உழைத்த வயல்களில் எல்லாம் விழுந்து கிடந்தேன்.

அந்த வயல் வரப்புகளில்தான் அவர் எனக்கு உலகை காட்டினார். எல்லா துறைகளிலும் அவருக்கு இருந்த பரந்த ஞானத்தின் விஸ்வரூப வடிவம் அங்குதான் தெரிந்தது

இரவெல்லாம் காவலோ அல்லை மின்சார தட்டுபாட்டால் நீர்பாய்ச்சிய காலங்கள் அவை, அந்த இரவுகளில் அவ்வளவு உலக விஷயங்களை சொல்லி இருக்கின்றார்

கொஞ்சம் குடித்திருந்தால் எங்கிருந்தோ தகவல்கள் கொட்டும்.

செய்திகளை படி , செய்தி தாள்களில் மூழ்கு, ஒரு துண்டு பேப்பர் கிடைத்தாலும் படித்துவிட்டு தூர எறி. அதிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் என்றாவது ஒருநாள் உனக்கு உபயோகமாகும் என சொன்னவர் அவர்தான்

இன்று சில இடங்களில் பலித்திருக்கின்றது.

உழைப்பில் மிக உன்னதனமானவரான அவர் 
ஒருவித அடிமை வாழ்விற்கு தள்ளபட்ட பின் ஒரு நிலமற்ற விவசாயிகாக தன்னை மாற்றிகொண்டார், வியாபாரத்தை கற்றது போல, வாழை வளர்ப்பினையும் கற்றார்

வாழை விவசாயம் மேல் அவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது, நல உடையோ, வாகனமோ கொண்டிருந்தவர் அல்ல. அவருக்கு என்ன வேண்டும் என எப்பொழுது கேட்டாலும் வாழைக்கு செலவு என சொல்லிகொண்டே இருப்பார், அவரின் வாழ்வு வாழை மரங்களை சுற்றியே இருந்தது

மலேசியாவினை சுற்றிபார்க்க அழைத்தபொழுதெல்லாம் வாழை போட்டுகொடு போதும் என சொல்லிவிட்டார்.

அது லாப நஷ்ட கணக்கு எல்லாம் இல்லை மாறாக குழந்தை வளர்ப்பது போன்ற ஒருவித மனநிலையில் இருந்தார்

இப்பொழுதும் கொஞ்சம் வாழைமரங்களை வளர்த்துகொண்டிருக்கின்றார், என்னை போலவே அவை அனாதை ஆகிவிட்டன‌

ஒருவிதத்தில் கடந்த பல வருடங்களாக அவரை குழந்தையினை போலவே பராமரித்தேன், அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னால் முடிந்ததை எல்லாம் செய்தேன், அந்த திருப்தி என்னாளும் உண்டு

நான் தந்தையினை இழந்தேன் என்பதை விட, நான் பாதுகாத்த ஒரு முதிர்ந்த குழந்தையினை இழந்தேன் எனும் வலியே ஓங்கி நிற்கின்றது

தன் முன்னோர்களுடன் உறங்க சென்றுவிட்ட அந்த மனிதனை நல்லபடியாக வழியனுப்பிவிட்ட ஒரு திருப்தியில் கிளம்பினேன், மனிதன் என்ன செய்யமுடியும்? அடைய கூடிய ஆறுதல் அது ஒன்றுதான்

வழக்கமாக ஒவ்வொரு முறை கிளம்பும் பொழுதும் சற்று தள்ளி அமர்ந்திருப்பார் அவர், நான் பார்க்காத பொழுது மட்டும் என்னை பார்ப்பார், அந்த பாசமான பார்வையில் தசரத சோகம் கலந்த்திருக்கும்

கிளம்பும்பொழுது அந்த பார்வை இல்லை, அந்த இடம் காலியாகி இருந்தது, அழுகை அப்பொழுதுதான் வெடித்து கிளம்பியது

இங்கு வந்து மகனை கண்டால் அந்த கண்கள் அப்படியே இருந்தன. அவ்வகையில் இறைவன் கருணை உள்ளவன்

ஆம் நிச்சயம் அவனிடம் கருணை இருக்கின்றது, இரு ஆண்டுகளுக்கு முன் தாய் உயிருக்கு போராடியபொழுது அவனின் கருணையால் காப்பாற்ற முடிந்தது

தாயினை மீட்டு கொடுத்துவிட்டு, என் மகனை கொடுத்துவிட்டே அவன் தந்தையினை அழைத்திருகின்றான்

அதனால் அவரின் ஆன்மாவிற்கு அவன் நிச்சயம் இளைப்பாற்றி அளிப்பான். வாழ்வில் சிக்கல்களையும், பெரும் வலிகளையும் தன் உழைப்பால் கடந்து சென்ற அந்த மனிதன் அந்த பரமனின் பாதங்களில் நித்தியமாக‌ இளைப்பாறட்டும்

நோயில் படுக்கையாகி, பலவீனமான அன்னையினை பாடுபடுத்தி இன்னும் முதுமையின் கொடுமைகளை அனுபவிக்காமல் அவர் சென்றுவிட்டதை நினைத்தால் அவருக்கு நல்ல மரணமே வாய்த்திருகின்றது

அவர் இல்லாத வாழ்வினை இப்பொழுதுதான் வாழ தொடங்கி இருக்கின்றேன் என்ற பயம் வருபொழுதெல்லாம் தெய்வமாகிவிட்ட அவர் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளத்தில் தைரியம் கொடுத்து கொண்டே இருக்கின்றது.