விநாயகர் சிலை ஊர்வலம்

வழக்கம்போல் கலவரமாகும் இந்த விநாயகர் சிலை ஊர்வலம் சில இடங்களில் நடக்கின்றது, தென்காசி பக்கம் எல்லாம் தடை உத்தரவு என்கின்றனர்

இந்துக்களுக்கு என்றுமே ஒரு சிறப்பு உண்டு, அது எந்த திருவிழா என்றாலும் அமைதியாக கொண்டாடுவார்கள் என்பது, இந்நாட்டில் அதுதான் நடந்தது, நடக்கின்றது

பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் நல்லிணக்கம் இது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா காலங்களிலும் இந்துக்களின் திருவிழா நல்லிணக்கத்துடனே நடந்தது

அது பழனி ஆலயம், மதுரை அழகர், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி முதல் சுடுகாட்டு பக்கம் சுடலைமாட சாமி கோவில் வரை அப்படித்தான்

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு கூடும் கூட்டம், குலசேகரன் பட்டின தசராவிற்கு கூடும் கூட்டமெல்லாம் பல லட்சம் ஆனால் ஒரு சர்ச்சை வந்ததில்லை

ஏன் தேசமே கொண்டாடும் தீபாவளியில் கூட சிக்கல் இல்லை

ஆனால் இந்த விநாயகர் ஊர்வலம் மட்டும் அடிக்கடி சர்ச்சையாவதும் அதுவும் அமைதியான தமிழகத்தில் அதனால் கலவரங்கள் ஏற்படுவதும் சரியல்ல‌

இந்துக்களுக்கு தேர் இழுத்தல் முதல் எல்லா சடங்குகளும் உண்டு, அதெல்லாம் உற்சாகமாக கொண்டாடபடும் பொழுது இந்த விநாயகர் ஊர்வலம் மட்டும் சிக்கலாகின்றது என்றால் அது கவனிக்கதக்கது

இது சமூக அமைதியினையும், மத நல்லிணக்கத்தையும் கெடுப்பதாக கருதினால் தயக்கமே இன்றி தடை செய்யலாம்

இதற்காக பிள்ளையார் ஒன்றும் வருத்தமோ இல்லை பழிவாங்க போவதோ இல்லை

உண்மையில் நல்ல இந்துக்கள் இம்மாதிரி கலவரங்களுக்கு வழிவிடுவதில்லை, நல்ல மாற்று மதத்தினரும் வம்புக்கு வருவதில்லை

சிக்கல் இருபக்கமும் உள்ள அயோக்கியர்களால் வருகின்றது

ஒருதுளி விஷம் ஒரு குடம் பாலை கெடுப்பது போல, ஒரு சில அயோக்கியர்களால் பெரும் சிக்கல் ஏற்படுகின்றது

பொது அமைதி இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தால் கெடுமானால் அதற்கு முடிவு கட்டலாம்

மதம் என்பது வழிபடுவதற்கும் சில இடங்களில் கொண்டாடாடுவதுற்குமே தவிர வீண் வம்பு இழுக்க அல்ல, அப்படி அதன் சடங்குகள் மக்கள் அமைதிக்கு எதிராக‌ பயன்படுமானால் அந்த வாய்ப்பினை கொடுக்காமல் அதை மூடிவிடலாம்

அடுத்த தலைமுறைக்கு நல்வழிகாட்ட அதுதான் நல்லது


 

கும்பகர்ணனை போல் தூங்க கூடாது : தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

அட அவனாவது 6 மாதம் விழித்திருப்பான், இவர்கள் அதுவுமில்லை

இந்த விபீஷ்ணன் வேலை செய்யாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்படுவது நல்லது என நீதிமன்றம் சொல்லி இருக்கலாம்


 

எச்.ராசா உச்சநீதிமன்றமாவது மயிராவது என பேசிவிட்டாராம் உடனே கைது செய்ய வேண்டுமாம் அடுத்த சர்ச்சை ஆரம்பித்துவிட்டது

எச்.ராசா மேல் சர்ச்சைகளுக்கு குறைவே இல்லை, சில இடங்களில் அவரின் அடாவடி அதிகம். ஆனால் இந்த மயிராவது என சொல்லிவிட்டார், அதனால் நீதிமன்ற அவமதிப்பு என்பதெல்லாம் நகைக்க வைக்கும் ரகம்

நீதிமன்ற அவதிப்பு என ராசாவினை கைது செய் என சொல்பவர்கள் யாரென பார்த்தால் பெரியார் மற்றும் திராவிட கும்பல்

பெரியார் முன்பு என்ன சொன்னார்?

“உச்சநீதி மன்றம் அல்ல உச்சகுடுமி மன்றம்” என்றார், உச்ச குடுமி என்றால் உச்சி மயிர் என்றே பொருள், ஆக பெரியார் சொன்னதைத்தான் ராசா சொல்லியிருக்கின்றார்

ராசா தடையினை மீறி இருந்தால் நிச்சயம் கைது செய்திருக்க வேண்டும், கல்லகுடியில் கலைஞரும் இன்னும் பல இடங்களில் திமுகவினரும் தடையினை மீறியபொழுது கைது செய்யத்தான் பட்டார்கள்

சட்டம் ஒழுங்கு என்பது மக்கள் அமைதியாக வாழ்வதற்கான ஏற்பாடு, அதை யார் மீறினாலும் தூக்க வேண்டியது அரசின் கடமை

காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என பலமுறை சொன்னவர் கலைஞர், ராசாவும் அதையேதான் சொல்கின்றார்

இந்த தடை மீறுதல், காவல்துறையுடன் அடாவடி செய்தல், நீதிமன்ற உத்தரவினை எரித்தல், ஏன் அரசு சட்ட நகலை எல்லாம எரித்து மகா மோசமான வழிகாட்டியது திராவிட கும்பல்

ராசா இன்று அவர்கள் வழியே வருகின்றாரே அன்றி புதுவழி அல்ல‌

இவர்கள் செய்தால் அது போராட்டம் புரட்சி என்பதும் அதையே ராசா செய்தால் அவர் அடாவடி பார்ட்டி , தூக்கி திகாரில் போடுங்கள் என்பதெல்லாம் சரியாகாது

எனினும் எம் நிலைப்பாடு இதுதான். இங்கு எல்லா இந்து திருவிழாவும் அமைதியாக நடக்க, இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை தடை செய்தால் ஒன்றும் தவறே இல்லை

ஒரு விஷயம் கவனிக்கதக்கது, முன்பு திமுகவினர் இதே அடாவடி போராட்டம் மூலமே வளர்ந்தது. அதன்பின் அதே வழியில் திராவிட கட்சிகளை எதிர்க்க யாருமில்லை

இப்பொழுது அவர்கள் வழியிலே செல்கின்றார் எச்.ராசா, அவ்வளவுதான் விஷயம்


 

எச் ராஜா மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் – டி.ஜெயக்குமார்

வேறு யார்மீது என்றாலும் தமிழக அரசு உடனே அவதூறு வழக்கு, கடமையினை செய்தலை தடுக்கும் வழக்கு என பாய்ச்சும்

ஆனால் எச்.ராஜா மீது மட்டும் நீதிமன்றம் வீடுதேடி வந்து வழக்கு பதிவு செய்யவேண்டுமாம், அரசு கண்ணை மூடி கொண்டு இருக்குமாம்


பொது இடங்களில் மிக‌ கவனமாக பேச வேண்டும், எச்.ராசா சர்ச்சை குறித்து சீமான் கருத்து : செய்தி

சொல்வது யாரென பார்த்தால் அங்கிள் சைமன், அவரெல்லாம் எச்.ராசாவிற்கு அறிவுரை சொல்வதுதான் பரிதாபம்

சாத்தான் வேதம் ஒதுவது போல் என்பார்கள், ஆனால் அங்கிள் சைமனின் அட்டகாசம் சாத்தான் கோவிலில் பூசை நடத்துவது போல் உள்ளது

அண்ணா பேரறிஞரானது

அந்த காலத்தில் ராஜாஜி என்றொருவர் இருந்தார், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் தமிழர்

மகாத்மா காந்தியின் சம்பந்தி

பெரும் வழக்கறிஞரும், பெரும் அறிஞருமான அவர் மூதறிஞர் என போற்றபட்டார். பெரியாரும் அவரும் கருத்து ரீதியாக மோதினாலும் அவரை கலக்காமல் பெரியார் ஏதும் செய்ததில்லை மணியம்மை திருமணம் உட்பட‌

காங்கிரசுக்கும் நாட்டிற்கும் மிகபெரும் அடையாளம் மூதறிஞர் ராஜாஜி

அவரை குறிவைத்து அடித்தே திமுக வளர நினைத்தது, திமுகவின் தந்திரம் அது. யார் பெரியவர்களோ அவர்கள் முன்னால் நின்று குதிப்பது, அவர்கள் பதிலளிக்க அளிக்க பதில் சொல்லி சொல்லி வளர்வது

அப்பொழுது காங்கிரசில் படித்தவர்களும் பெரும் அறிஞர்களும் இருந்தார்கள் ஆனால் பெரியார் பக்கம் படித்தோர் என யாருமில்லை அண்ணாவினை தவிர‌

அண்ணா அவர்களுக்கு மிகபெரும் வரம், ஆங்கில புலமை அப்படி

பெரும் ஆங்கில கட்டுரைகளை, கம்யூனிச கட்டுரைகளை தமிழில் தமிழக மரபிற்கேப மாற்றி தூள் கிளப்புவார், அதில் திராவிட கருத்துக்களை தூவுவார்

ரஷ்ய பொதுவுடமை கட்டுரைகளை, கடவுள் மறுப்பு கட்டுரைகளை தமிழில் மொழிபெயத்து திராவிட பொடி தூவினால் விஷயம் ரெடி

பெரியார் முரட்டு தலைவர், அவரிடம் படித்தவர்கள் என வேலை செய்தது அண்ணாவும் பின்னாளில் வீரமணியும்

இதில் அண்ணா பின்பு ராஜாஜியோடு மல்லுகட்ட ஆரம்பித்தபின் மூதறிஞர் ராஜாஜிக்கு போட்டியாக அண்ணாவிற்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என யோசித்தார்கள்

அட்டகாரமாக பேரறிஞர் அண்ணா என்றார்கள் அவர்களாகவே சொல்லிகொண்டார்கள்

அண்ணா பேரறிஞரானது அப்படித்தான்,” ஏ அதிகார பிராமண வர்க்கமே, மற்ற சாதிகள் படிப்பது எப்பொழுது?” என பேரரிஞர் கேட்டபொழுது மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் “அண்ணா இரண்டு எம்.ஏ வாங்கவில்லையா?” என பதிலுக்கு கேட்டபொழுது பேரறிஞர் பதில் சொல்லவில்லை

அன்று அந்த கூட்டத்தில் சொல்லிகொள்ளும் ஒரே தகுதி உள்ளவர் என்பதால் அண்ணா பேரறிஞர் ஆனார், ஆக்கபட்டார்

இன்றும் திமுக என்பது பட்டம் கொடுப்பதில் மகத்தான கட்சி

புரட்சி நடிகர், இலட்சிய நடிகர், தளபதி என மகத்தான பட்டங்களை அதுதான் அறிமுகபடுத்தியது

பின்னாளில் அது அதிமுகவாக பரிணமித்தபொழுது புரட்சி தலைவன், தலைவி, என வந்து பின் சின்னம்மா, திராவிட செல்வன் என்றெல்லாம் வந்து நிற்கின்றது

திமுக இளம் கலைஞர் , இரண்டாம் கலைஞர் என்பதோடு நிறுத்திகொண்டது

இன்று காணும் இம்சை பட்டங்களுக்கு எல்லாம் அன்றே தொடங்கி வைக்கபட்ட அடைமொழிதான் பேரறிஞர்

அவர்களாகவே பட்டம் கொடுத்து அவர்களாகவே மகிழ்ந்து கொண்டார்கள்

இந்தியாவின் “இன்சினியர் தினம்”

இன்று புகழ்பெற்ற பொறியாளர் சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள்.

இவரின் பிறந்த நாள்தான் இன்றுவரை இந்தியாவின் “இன்சினியர் தினம்”, வருங்காலத்தில் ராமேஸ்வரத்தில் ராமர்பாலம் கட்ட தொடங்கிய நாள் தெரிந்தால் இந்த நாள் மாற்றபடலாம்.

நல்லவேளையாக வால்மீகி அந்த நாள்,நட்சத்திரத்தினை குறித்துவைக்காமல் விட்டதால், இனி விஸ்வேசரயாவின் பிறந்தநாளுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இந்தியாவின் புகழ்மிக்க அணைகள்,தொழிற்சாலைகள் என சகலமும் கட்டியவர்.

காவேரி பிரச்சினைக்கு மிக அபாயகரமான திருப்பம் இவர் கொடுத்தது, அதாவது அது அருமையான திட்டம்தான், ஆனால் தமிழக போலி அரசியல்வாதிகளால் அது இன்று குப்புறகிடப்பது வேறுவிஷயம்.

பெரும் சிக்கல்கள் போராட்டம் என்றாலும் இன்னும் காவேரி சிக்கல் தீர்ந்தபாடில்லை , தமிழகத்திற்கு இது 
மாபெரும் அநீதி, பெரும் அக்கிரமம். ஆனால் இது ஒரு நாளில் தொடங்கிய பிரச்சினை அல்ல, வரலாறு பெரிது.

அகத்தியர் முனிவர் காலத்திலிருந்தே தமிழ்நாட்டை வளப்படுத்தியது காவேரி, சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், தென்னிந்தியாவின் மிக முக்கியமான நதி, அதுவும் தமிழகத்திற்கு 4000 ஆண்டுகளாக தாங்கி நிற்கும் ஆணிவேர்.

தமிழரும் கல்லணை என மிக அற்புதமான அமைப்பினை அமைத்து டெல்டா பகுதிகளை உருவாக்கினர், கல்லணை அமையாவிட்டால் தஞ்சாவூரும் இல்லை (மீத்தேனுக்கு பிரச்சினையே இல்லை), அது ராமநாதபுரத்தின் தொடர்ச்சியாக வறண்ட பகுதியாய் அமைந்திருக்கும், அப்பக்கம் வீராணம் ஏரியுமில்லை (ஊழலுமில்லை),

மொத்ததில் கல்லணை அமையாவிட்டால் டெல்டா ஒரு நேர்கோடு இருந்திருக்கும்.

இவ்வாறாக தமிழகத்தை செழிக்க செய்த காவேரியில் முதல் பிரச்சினை சாளுக்கிய மன்னர்கள் வடிவில் வந்தது, அதுவும் சோழர்களுக்கும் அவர்களுக்கும் வந்த தகறாறு, ஆனாலும் சோழர்கள் உச்சத்தில் இருந்த நேரம், சாளுக்கியரை அடக்கி காவேரியை மீட்டார்கள்.

அதன்பின் 700 வருடங்களுக்கு பிரச்சினை இல்லை, அங்கு விஜயநகரபேரரசு உதயமாகி, மொகலாயரையே விரட்டும் அளவிற்கு வலுவானபோதும் காவேரியில் கைவைக்கவில்லை, காரணம் எந்த அவசியமும் இல்லை.

பின்னாளில் நாயக்கர் தமிழகம் வர அதில் பிரச்சினை வர வாய்ப்பே இல்லாமல் ஆயிற்று. வைகை கரை,காவேரிகரை எல்லாமே நாயகர்கள்.மைசூரிலும் நாயக்கர்கள் ஒரு பிரச்சினையும் இல்லை.

கவனியுங்கள், மைசூரிலிருந்து வந்து மதுரையிலும், தஞ்சாவூரிலும் சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டார்கள் என்றால், நாம் இங்கு உருவாக்கி வைத்திருந்த நன்செய் நிலங்கள் அப்படி, மைசூர் பக்கம் அன்றெல்லாம் ஒன்றுமில்லை.

மதுரை நாயக்கருக்கும், தஞ்சாவூர் நாயக்கருக்கும் வாரிசுசண்டை ஆரம்பித்தபொழுது, தஞ்சாவூர் நாயக்கர்களுக்கு ஆதரவாய் சிவசேனை வந்தது, சிவசேனா என்பது பால்தாக்கரே அல்ல, மாமன்னன் சிவாஜியின் உறவினர் படை. காரணம் அவர்கள் வராவிட்டால் பிஜப்பூர் சுல்தான் தஞ்சாவூரில் அமர்ந்திருப்பார்.

இப்படியாக மராட்டியர் தஞ்சையை பிடித்ததும் , கொஞ்சம் உரசல் உருவாயிற்று. அது பின்னாளில் மைசூர் சமஸ்தானம் (அது திண்டுக்கல் வரை இருந்தது) சோழமண்டல மராட்டியர் பிரச்சினை என உருவாயிற்று.

விளைந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் வெள்ளத்தால் அழிந்தால் அதற்கு மைசூர் அரசு தண்ணீரை அழிப்பதற்காகவே அனுப்புகின்றது என சில சர்ச்சைகள் எழுந்தன, ஆடிமழையில் அந்த தண்ணீரை எங்கு வைப்பது என அவர்களுக்கும் தெரியவில்லை, இவ்வளவிற்கும் கொஞ்சம் விவசாயம் தொடங்கி மைசூர் சமஸ்தானம் பொருளாதாரம் உயர்ந்த நேரம்.

எப்படியோ இனி தஞ்சையில் வெள்ளத்தில் பயிர்கள் அழிந்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் பொறுப்பு என ஒரு கருத்து உருவானது, மைசூர் மன்னர் நஷ்டஈடு தரவேண்டும் என்றெல்லாம் குரல்கள் வந்தன, அக்கால மைசூர் உடையார்களும் சில நேரங்களில் நெல்லாகவோ, விதை நெல்லாகவோ,பணமாகவோ கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இந்நிலையில் ஆங்கிலேயர் தஞ்சையை ஆளுகைக்குள் கொண்டுவந்தனர், மைசூர் சமஸ்தானம் அடங்க மறுத்தது, பழைய பிரச்சினையை பெரும் பிரச்சினையாக உருவாக்கினர் ஆங்கிலேயர்.

தஞ்சாவூரில் வெள்ளத்திற்கு மைசூர் அரசு நஷ்ட ஈடுகொடுக்கவேண்டும் என வாங்கியே கொடுத்தனர், தஞ்சை மக்களுக்கும் பொம்மை சாம்போஜிக்கும் ஏக மகிழ்ச்சி, விட்டால் பிரகதீஸ்வரர் ஆலயம் பக்கம் வெள்ளையருக்க்கு ஆலயமே எழுப்பியிருப்பர், ஏனோ செய்யவில்லை.

ஹைதர் அலி இதனை கண்டித்தார், திப்பு சுல்தான் இந்த இழப்பீட்டை கொடுக்க மறுத்தார். காவேரி பொதுவான நதி, வெள்ளம் என்பதை நாங்கள் என்ன செய்யமுடியும்? என மறுத்தார். ஆனாலும் திப்பு நஷட ஈடு கொடுத்தே ஆகவேண்டும் என பொங்கியபொழுது ஆத்திரபட்ட திப்பு படையினர் சில இடங்களில் தமிழக மதகுகளை சேதபடுத்தினர்.

அது இந்துகிராமங்களை திப்பு தாக்குகின்றார் என வெள்ளையரால் விபரீதமாக பரப்பபட்டன, திப்பு சுல்தான் ஒரு பெருந்தன்மையான மாவீரன், மைசூரின் ஒப்பற்ற புலி. வரலாற்று பெருந்தகையாளன்.

இப்படி இல்லாத பொய் எல்லாம் கூறி திப்புவை இந்து எதிரியாக்கி தனிமையாக்கி அழித்தனர் பிரிட்டிசார், பின் மைசூருக்கு உடையார் அரசன் ஆனார். யார் ஆண்டால் என்ன?, பின்புலம் பிரிட்டிசார்.

அப்பொழுதும் தஞ்சையில் வெள்ளமென்றால் மைசூர் பணம் கொடுக்கவேண்டும், இது மைசூர் மன்னருக்கு பெரும் தலைவலியாயிற்று.

“இது காவேரி ஆறு, அதுவும் 4 ஆறுகள் கூட சேர்ந்து தமிழ்கம் செல்கிறது, அங்கும் பவானி,அமராவதி,நொய்யல் என எல்லாம் கலந்துதான் திருச்சி வருகின்றது, அங்கு அழிவென்றால் நான் பணம் கொடுக்கவேண்டுமாம்?

முப்போகம் விளைந்தால் நமக்கா தருகின்றார்கள்?”
செயலற்ற நிலையில் கேட்டதை கொடுத்துவிட்டு அந்தபுரத்தில் அழுதுகொண்டிருந்த மன்னருக்கு, 1895ல் ஒரு இளைஞன் வேலைக்கு வந்தான்.

அப்பொழுதே சிவில் இன்சினியரிங் முடித்திருந்த பிராமண இளைஞன், பெரும் அறிவாளி, கட்டடகலை நிபுணர், எல்லாவற்றிற்கும் மேல் பெரும் நிர்வாகி.

“தனது வேலையில் கருத்தாக இருப்பவன், அரசனோடு பந்திக்கு அமர்வான்” என்பது யூதமொழி, அவனும் அப்படித்தான் விரைவில் திவான் ஆனார்.

மைசூர் சமஸ்தானம் தஞ்சாவூருக்கு வெள்ளநிவாரண நிதிகொடுத்து அழுதுகொண்டிருக்கும் பொழுது அவன் நிதானமாக திட்டமிட்டான்.

வீணாக செல்லும் நீருக்கு தஞ்சை மக்களுக்கு கப்பம் கட்டுவதை விட, நாமே அணைகட்டி விவசாயத்தை பெருக்கினால் என்ன?, அதுவரை அப்படி ஒரு திட்டம் மைசூருக்கு இல்லை, அவரை வினோதமான பார்த்தமன்னன் கேட்டார்? அது சாத்தியமா?

எனக்கு சாத்தியம் இல்லை என்றால் எவனுக்கும் சாத்தியமில்லை என்றான் அந்த இளைஞன்.

காவேரி பெரும் ஆறு ஆனால் அதோடு ஹேமாவதி,சிம்சா,அக்ராவதி,கபினி என பல சிற்றாறுகள் (நம்பியாறு போல) கலந்துதான் வெள்ளம் தமிழகம் செல்லும், முதலில் நாம் காவேரி குறுக்கே அணைகட்டினால் பாதிவெள்ளம் குறையும், அதாவது நஷ்டஈடு குறையும்.

அற்புதமான யோசனை சொன்ன இளைஞனை நம்பிக்கையாய் பார்த்தது மைசூர், அந்த இளைஞர் விஸ்வேசுவர அய்யர்.

கன்னடத்தின் அப்துல்கலாம் அல்லது லி குவான் யூ அவரின் அறிவுகூர்மையும், செயல்திறனும் அப்படி.

அற்புதமாக கட்டிகொடுத்த அணை கிருஷ்ணராஜ சாகர், மீதி நீர் தஞ்சை மக்களை அழிக்காமல் இருக்க வெள்ளையர் கட்டியது மேட்டூர் அணை.

அணைகட்டிவிட்டால் போதுமா? அந்த நீரை எப்படி விவசாயமாக்குவது, எப்படி தடுப்பணை கட்டுவது, உற்பத்தியை பெருக்குவது எப்படி என பெரும் அகராதி வகுத்தார் விஸ்வேசரையர்.

அவர் கொடுத்த அடித்தளத்தில்தான் மைசூர் விவசாயத்தில் செழித்தது, கர்நாடக பொன்னி, மைசூர் பருப்பு , இன்று தமிழகத்தை தாங்கும் காய்கறிகள் என கன்னடம் கொட்டி முழக்குகின்றது என்றால் அதற்கு காரணம் அவர்தான்.
முத்துபடத்தில் ரஜினி குதிரைவண்டியோடு பசுமைவயல்கள் வழியே மணிக்கணக்கில் செல்வாரல்லவா? அந்த பசும் வயல்கள் அவரின் உருவாக்கம்.

இன்று கன்னடத்தில் சிறிதும் பெரிதுமாக காணப்படும் 28 அணைகளுக்கும் அவரே முன்னோடி. கட்டடகலை அவருக்கு கைவந்தது,

கன்னட அடையாளமான விதான சவுதா, இன்னும் பல ஆலைகள் எல்லாம அவரின் டிசைன்.

அன்று மிகசிறிய ஊரான பெங்களூர் இன்று உலகின் முன்னனி நகரம் என்றால் அதற்கு அய்யரும் ஒரு காரணம். இந்தியாவின் ஒப்பற்ற இன்சினியரான அவரின் பிறந்தநாள்தான் இந்தியாவில் “இஞ்சினியர் தினம்”

இந்தியாவின் மிக சிறந்த கட்டட பொறியாளரில் அவரும் ஒருவர், ஐதரபாத் வெள்ளதடுப்பிற்கு அவர் போட்டு கொடுத்த திட்டம் இன்றும் பயன்படுகின்றது

பெரும் தொழிற்சாலைகளுக்கான நிர்மாணத்தை எல்லாம் அவர்தான் இந்தியாவில் செய்தார். மறக்க முடியா மாமனிதர் அந்த விஸ்வேசரய்யர்.

கிருஷ்ணராஜ சாகருக்கு முன்பே பிரிட்டிசாரோடு சேர்ந்து நிறைய அணைகட்டிய சாதனைகளை அவர் செய்திருக்கின்றார். நவீன‌ இந்திய அணைகட்டுகளின் பிதா மகன் அவர்.

அந்த அறிவாளியினை மிக சரியாக பயன்படுத்திகொண்டது கர்நாடகம், பின்னாளைய கன்னட எழுச்சிக்கு அவர் மிக பெரும் அடித்தளம் அமைத்தும் கொடுத்தார்.

தமிழகத்திற்கு அப்படி யாரும் கிடைக்காமலே போனதுதான் பெரும் சோகம், அதுவும் பின்னாளில் அய்யர்களுக்கு ஆகாத மாநிலமாகவே அறியபட்டது தமிழகம், பின் எங்கிருந்து வருவார்கள்?

ஆனால் அப்படி ஒரு அறிவாளி வராமல் இனி உருப்படாது தமிழகம்.

பொறியியல் கல்லூரி நிறைந்திருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு தினம் இருப்பது தெரியுமா? கொண்டாடுவார்களா என்றால் கொண்டாட மாட்டார்கள்.

அதற்கு ஆயிரம் காரணங்கள். எப்படியாயினும் விஸ்வேஸரய்யர் இந்திய வரலாற்றில் முக்கியமான ஒருவர் என்பதில் சந்தேகமேயில்லை.

Image may contain: 1 person