அயன் லேடி

சினிமா ஒன்றே மூலதனமான கட்சி அதிமுக, ஜெயா இல்லா நிலையில் இனி பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அவர்களுக்கு சினிமா அடையாளம் தேவை

அதற்காக பழனிச்சாமியோ, பன்னீரோ மேக் அப் போட்டு ராமசந்திரன் போல ஆடினால் நன்றாயிராது, ஜெயக்குமாருக்கும் ரஜினி படத்தின் வில்லன் கேரக்டர் கிடைக்கவில்லை

இதனால் என்ன செய்யலாம் என பரிதவித்தவர்களுக்கு ஜெயாவின் கதையினை சினிமாக எடுத்து பாராளு மன்ற தேர்தலையொட்டி ஓடவிட்டால் என்ன? என்ற எண்ணம் வந்தாயிற்று

இதனால் ஜெயா வாழ்க்கை அயன் லேடி என படமாகின்றதாம்

நாயகி நித்யா மேனனாம், சசிகலா வேடத்தில் வரலட்சுமி நடிக்கலாம் என்கின்றார்கள்

(நிச்சயமாக ஜெயா வேடத்தில் குஷ்புதான் பொருந்துவார், அப்படி நடிக்க வைத்து அவர் முதல்வாகிவிட்டால் என்ன செய்ய என அஞ்சிய கூட்டம் அலறி துடித்து நித்யா மேனன் பக்கம் சென்றாயிற்று)

நிச்சயம் ஜெயா என்பவர் தனியாக சாதித்தவர் அல்ல, அவர் வாழ்வில் ஏகபட்ட பாத்திரங்கள் உண்டு

ராமசந்திரன் வேடத்தில் இப்பொழுது கமலஹாசனை அமர்த்தலாம், அட்டகாசமாக பொருந்துவார்

அந்த சோபன்பாபு வேடத்திற்கு துல்கர் சல்மான் ரெடி

ஜெயா அரசியல் வாழ்வில் தவிர்க்க முடியா சக்தி நடராசன். சசிகலா வேடத்தில் வரலெட்சுமி என்றால் நடராசன் வேடத்தில் விஷாலை போட்டுவிடலாம்

மன்னார்குடி குடும்பத்திற்கு இந்த பிரபு, கார்த்திக் போன்ற நட்சத்திர பட்டாளங்களை இறக்கலாம், தினகரன் வேடத்திற்கு விஜய் சேதுபதி தயார்

இன்னும் ஏகபட்ட பாத்திரங்கள் உண்டு எனினும் அப்பல்லோ டாக்டர் வேடத்திற்கு சரத்குமார்தான் பொருந்துவார், காரணம் புலன் விசாரணை படத்தில் அவரின் வில்லன் டாக்டர் வேடம் பிரசித்திபெற்றது

நீதிபதி குன்ஹா வேடத்திற்கு ராதாரவியினை போட்டுவிடலாம், அருமையாக இருக்கும்

ஆக ஜெயா படம் வரப்போவதில் ஏராளமான ஆண் துணை ஆர்டிஸ்களுக்கு பெரும் வாய்ப்பு கிடைக்க போகின்றது

ஆனால் அவர்கள் நிலை கொஞ்சம் கஷ்டம், ஒரு முதுகு வலி நிபுணரை அருகில் வைத்து கொள்ள வேண்டும் அது மகா அவசியம்

பின்னே, அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் வேடம் எல்லாம் போடவேண்டும் ஆனால் ஒரு வார்த்தை பேசாமல் குனிந்தே நிற்க வேண்டும், தரையில் உருள வேண்டும், டயர் நக்க வேண்டும், ஹெலிகாப்டர் பார்த்தபடி ஓடவேண்டும் என்றால் சும்மாவா? முதுகு வலி பின்னி எடுக்காது?

Image may contain: text