குஷ்பு : 02

குஷ்பு : 02

வருஷம் 16 படம் அந்த காலத்தில் பிய்த்துகொண்டு ஓடியது. பெரு வெற்றிபெற்று சாதனை படைத்தது
அந்த படத்தின் நாயகன் கார்த்திக். இன்று அவர் காணாமல் போனாலும், அரசியல் காமெடியன் ஆனாலும் அன்று அவர் பெண்களுக்கு கனவு கண்ணன். மவுனராகம் புகழ் அவருக்கு தொடர்ந்த காலம் அது. வித்தியாசமான மொழியும், துறுதுறு நடையும், குறும்பு முகமாக அவரை எல்லோருக்கும் பிடித்த காலம் அது
பாசில் கதை, பூரணம் விசுவநாதன், வடிவுக்கரசி , கார்த்திக் என எல்லோரையும் மீறி படத்தில் கவனம் பெற்றார் குஷ்பூ ஒன்றும் தெரியாத பெண்ணாக அவர் முதலில் வருவதும், கொஞ்சம் கொஞ்சமாக கார்த்திக்கிடம் காதலில் விழுவதும், மரத்தூணுக்கு பின்னால் மான் போல மருகி பார்ப்பதும், பின்னர் உயிரை விடுவதுமாய் அற்புதமாக நடித்திருந்தார்.
ராதிகா என்பது அவரின் கதாபாத்திர பெயர். அது ஒன்றுதான் எல்லோர் மனதிலும் தங்கியது. வருஷம் 16ல் எத்தனையோ நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் நிலாவாக பதிந்தார் குஷ்பூ, கார்த்திக்கினை மீறி அவர் படத்தில் ஜொலித்தது பெரும் விஷயம்.
தயங்கி தயங்கி அவர் அந்த பாத்திரமாகவே நடித்த காட்சியில் மயங்கி மயங்கி, அந்த பூமுகத்தில் தமிழகம் சொக்கி போயிற்று.
அத்திபழம் போன்ற அந்த கன்னங்கள் அசைய, மெல்ல‌ ரோஜா மலர்ந்தது போன்ற குறுஞ்சிறிப்பிலும், குறுகுறு கண்களிலும் பலர் குப்புற விழுந்தார்கள். யாரய்யா அந்த பெண்? குலோப்ஜாமூன் மாதிரி இருக்காய்யா” என சொல்லியே பலமுறை பார்க்க வந்தார்கள். படம் கிட்டதட்ட ஒரு வருடம் ஓடியது. தியேட்டரில் அவருக்காக கூட்டம் குவிந்தது. அவரை திரையில் பார்த்த உடனே விசிலடிக்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்
முதன் முதலில் ஒரு கதாநாயகி நடிகைக்காக விசில் சத்தம் கேட்க தொடங்கியது தமிழகத்தில் குஷ்பூவிற்காகத்தான், இன்றுவரை அவர் ஒருவருக்காகத்தான்.
நகை கடையில் குவிந்த பெண்களை போல குஷ்பூவினை சுற்றி தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் குவிந்தார்கள். குஷ்பூ எனும் பெயர் இளைஞர்களின் தாரக மந்திரமானது, சிலருக்கு மூச்சானது, பலருக்கு இதயதுடிப்பானது.
பெண்களில் கூட அவருக்கு ரசிகைகள் உருவானார்கள், அவரை பார்த்து பார்த்து ரசித்தார்கள். அக்காலத்தில் கேபிள் டிவி, இணையம் என ஒன்றுமே கிடையாது. ஏன் பல வீடுகளில் டிவியே கிடையாது. தூதர்ஷனில் வாரம் ஒருமுறை பாடல் மட்டும் ஒளிபரப்புவார்கள். இலங்கை டிவியில் வஞ்சகமின்றி அடிக்கடி ஒளிபரப்புவார்கள். அதற்காக ஆண்டெனாவினை இலங்கை பக்கம் திருப்பி வைத்து தவமிருந்தார்கள்.
வருஷம் 16 குஷ்பூவினை தியேட்டரில் பார்த்துவிட்டு அவர் பாடலுக்காக டிவி முன் தவமிருந்தோர் உண்டு, குஷ்பூவினை டயனோரா, சாலிடர், வீடியோகான், பிபிஎல் போன்ற டிவிகளில் எதிர்பார்த்த கூட்டம் உண்டு. தெருக்களில் வாடகை டிவி , வாடகை விசிஆரில் அப்படத்தினை பார்க்காதவர் இல்லை, கிராமங்களில் திரைகட்டி புரொஜக்டர் வைத்து அதனை கொண்டாடாத மக்கள் இல்லை.
எல்லா கிராமத்து திருவிழாவும் வருஷம் 16 படத்துடன்தான் முடிவு பெற்றன, அல்லது அப்படத்திற்காகவே திருவிழா கொண்டாடபட்டது.
அப்படியெல்லாம் குஷ்பூ எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார். அவர் மேலான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
தங்க தட்டில் சந்தனம் பூசியது போன்ற முகத்துடனும், வெண்பஞ்சு போன்ற உடலுடனும் இருந்த அவர் சாட்சாத் தேவதையாகவே தெரிந்தார்.
அப்படத்திற்கு பின் 2 வருடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கிட்டதட்ட 50 படங்களை நெருங்கியிருந்தாரென்றால் அவருக்கு எவ்வளவு வேகமாக படங்கள் குவிந்தன என நீங்களே முடிவு செய்யுங்கள்.
தமிழில் வெற்றிவிழா, தாலாட்டு பாடவா, மைடியர் மார்த்தாண்டன், நடிகன் போன்ற படங்கள் எல்லாம் அப்பொழுதுதான் வந்தன. எல்லா நடிகர்களும் அவரோடு நடிக்க அணிவகுத்து நின்றனர்,
ரஜினி நாட்டுக்கொரு நல்லவன், கமலஹாசன் மைக்கேல் மதன காமராஜன், வெற்றிவிழா என குஷ்பூவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர்.
அந்நாளைய மெகா ஸ்டார் ராமராஜனே பசுமாடு, டவுசர் எல்லாம் விட்டுவிட்டு, நகரத்து மனிதனதாக கோட் சூட் போட்டு குஷ்பூ படத்திற்காய் மாறியிருந்தார். எங்கும் குஷ்பூ, எதிலும் குஷ்பூ என மாறிகொண்டிருந்தது தமிழகம்
1988 முதல் 1990 வரை ஜெயா, ஜானகி, கலைஞர், மூப்பனார், ராஜிவ் என எல்லோரும் அரசியலில் செய்திகள் சொல்லிகொண்டிருக்க, ஈழத்தில் அமைதிப்படை மோதலில் இருக்க, மத்தியில் மண்டல் கமிஷன், அத்வாணி ரதம் என பரபரப்பு காட்சிகள் இருக்க‌, எல்லா ஊடகத்திலும் குஷ்பூ தனி பக்கம் பிடித்துகொண்டிருந்தார்.
அவருக்கு முழு பக்கம் கொடுத்து பத்திரிகைகள் எழுதின. அது அந்நாளில் பெரும் அதிசயம். டிவி, ரேடியோ, பத்திரிகை, சுவரொட்டி என எங்கு திரும்பினாலும் குஷ்பூ மயமாக இருந்தது தமிழகம்.
உடை முதல் நகைகள் வரை அவர் பெயரில் வந்தன. இப்படி இரு வருடங்கள் சென்றன, தமிழகத்தில் சூரியன் குஷ்பூ பெயரோடுதான் உதித்தது, மழை குஷ்பூ பெயரோடுதான் பெய்தது, அலைகடல் கூட குஷ்பூ என்றுதான் கத்தியது.
வருடம் 16 படத்தின் வீச்சு எந்த அளவு இருந்ததென்றால், இன்னமும் இருக்கிறதென்றால் குமரிமாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையே சாட்சி.
மிக மிக அழகான அரண்மனை அது, முழுக்க மரத்தால் கட்டபட்டது, திருவிதாங்கூர் மஹாராஜா மார்த்தாண்ட வர்மன் கட்டிய மர தாஜ்மகால் அது அல்லது மரத்தால் ஆன மைசூர் மாளிகை அது. எல்லா மகாராஜாக்களும் அதனை ரசித்தார்கள், வெள்ளையர்கள் உருண்டு புரண்டு ரசித்தார்கள், இன்றும் கலையழகு மிக்க அரண்மனையில் அதற்கு பெரும் இடம் உண்டு.
உலகபுகழ்பெற்றதால் எல்லா வெளிநாட்டு மக்களும் பார்க்க வருவார்கள். அந்த அரண்மனையின் ஒரு பகுதியில்தான் வருஷம் 16 படம் எடுக்கபட்டது, படம் வெளிவந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக அது எடுக்கபட்ட இடம் வெளிதெரிந்தது.
அவ்வளவுதான், அந்த மாளிகைக்கு பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தது, இது குஷ்பூ நின்ற இடம், இது குஷ்பூ அமர்ந்த திண்ணை, இது குஷ்பூ பிடித்த தூண் என அதன் அடையாளம் எல்லாம் குஷ்பூ மயமானது
உச்சமாக அரண்மனை குளம், குஷ்பூ குளித்த குளமாயிற்று. இன்றும் அது குஷ்பூ குளித்த குளம் என்றே அறியபடுகின்றது. இன்று சென்றாலும் அங்குள்ள கைடுகள் அரண்மனை வரலாற்றை சொல்லி, மறக்காமல் குஷ்பூ அங்கு படப்பிடிப்பிற்கு வந்ததையும் சொல்லித்தான் முடிப்பார்கள்.
அந்த அரண்மனையில் எத்தனையோ படப்பிடிப்புக்கள் நடந்தன. எத்தனையோ உச்ச நட்சத்திரங்கள் எல்லாம் நடித்தார்கள் ஆனால் அது குஷ்பூவினால் மங்கா அடையாளம் பெற்றது.
இன்றும் அங்கு சென்றால் குஷ்பூ பெயரினைத்தான் உச்சரிப்பார்கள். வருஷம் 16க்கு பின் உச்சம் சென்ற குஷ்பூ அப்படியே உயரத்தில் நின்றார், அவரை மிக பெரும் உயரமாக்கி வானில் மின்ன வைத்தது அடுத்த இரு வருடங்களில் வந்த “சின்ன தம்பி”.
பராசக்திக்கு பின் கலைஞரின் மனோகரா முத்திரை பதித்தது போல , வருஷம் 16 படத்திற்கு பின் சின்னதம்பி தமிழகத்தை புரட்டி போட்டது. குஷ்பூவும் தர்மத்தின் தலைவன், வருஷம் 16 படங்களை விட மெருகேறியிருந்தார், கொள்ளை அழகு அப்பொழுது அவரிடம் அடைக்கலமாகியிருந்தது
1991, ஏப்ரல் 12ம் நாள் சின்னதம்பி ரிலீஸ் ஆனது, நந்தினி கேரக்டரில் குஷ்பூ நடித்திருந்தார். ராதாரவி, மனோரமா, கவுண்டமணி, பிரபு போன்ற பெரும் ஜாம்பவான்களும் அசத்தியிருந்தனர், உச்சமாக இளையராஜா தன் திறமையின் உச்சத்தில் பாடல்களை கொடுத்திருந்தார்.
படம் அப்படி ஒரு வரவேற்பினை பெற்றது. சிவாஜி கணேசனின் சாந்தி திரையரங்கங்கள் சிவாஜி கணேசன் பட கூட்டத்திற்கு கூட அப்படி ஒரு கூட்டத்தை கண்டதில்லை
மிகபெரும் கூட்டம் அலைமோதிற்று. அந்த தேர்தல் காலம், ராஜிவ் கொலை எனும் கொடூர நிகழ்வு, இன்னபிற கொடுமையான காலத்தில் அப்படம் சிக்கிகொண்டாலும், முடங்கவில்லை. அதன் வரவேற்பு அப்படி இருந்தது.
தமிழகத்தை ராஜிவ் கொலைக்காக சிபிஐ, போலிஸ், பெரும் படைகள் தமிழகத்தை முற்றுகையிட, சின்னதம்பி படத்தால் தியேட்டர்களை எல்லாம் முற்றுகையிட்டார் குஷ்பூ
இந்த வினோத காட்சி எல்லோருக்கும் விசித்திரமாய் பட்டது, இதெல்லாம் குஷ்பூ தவிர இன்னொரு நடிகைக்கு சாத்தியமே இல்லை.
எல்லா தமிழகத்தாரும் தங்கள் வீட்டு பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை குஷ்பூவில் கண்டிருந்தார்களோ எனும் அளவிற்கு அவருக்கு பெருத்த வரவேற்பு இருந்தது.
தமிழகம் எதிர்பார்த்த பெண்ணாகவே அவரை அணைத்து ஏற்றுகொண்டது, இனி குஷ்பூ இன்றி தமிழக சினிமா இல்லை என்ற நிலையும் வந்தது
அப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. எம்மாதிரியெல்லாம் குஷ்பு கொண்டாடப்பட்டார்?
(பூ பூக்கும்)
Image may contain: 1 person, closeup

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s