பிரான்சின் தெற்கு பகுதியான லூர்தஸ் நகரில் ரோமையாரால் கட்டபட்ட கோட்டையுடன் கூடிய ஊர் உண்டு , அதன் அருகில் ஒரு குகையும் உண்டு

நகரில் வாழ வழியற்ற ஏழைகுடும்பம் ஒன்று அக்குகையில் ஆடுமாடுகளோடு வசித்தது, அக்குடும்பத்து மூத்தபெண் பெர்னதத், அன்றாடம் காடுகளில் விறகு சேகரிப்பது அவர்கள் வழக்கம்

அன்று இதே பிப்ரவரி 11ம் தேதி தன் உடன்பிறந்தாரோடு அவள் ஆற்றங்கரையில் விறகு சேகரித்தபொழுது திடீரென ஒரு ஒளி அவளை ரோஜா மணம் கமழ சூழ்ந்தது, ஒரு அழகிய பெண் வெள்ளை அங்கியும் நீல கச்சையுமாய் அவளை நோக்கி சிரித்து கொண்டிருந்தார்
அதை பெர்னதத்தை தவிர யாராலும் பார்க்க முடியவில்லை, இதோ அந்த அழகிய பெண் என பெர்னதத் கத்தினாலும் அந்த உருவம் யாருக்கும் தெரியவில்லை
இதனால் யாரும் பெர்னதத் சொல்வதை நம்பவுமில்லை
இத்தோடு விஷயம் முடியவில்லை கிட்டதட்ட 5 முறை தோன்றிய அந்த அழகிய உருவம் பெர்னதத்தோடு பேசிற்று, பிப்ரவரி 14ல் பேச தொடங்கிய அந்த உருவம் பல கோரிக்கைகளை வைத்தது
அந்த ஊரின் பங்குதந்தைக்கும் மக்களுக்கும் விஷயம் சென்றது, பெர்னதத்தை நம்ப யாரும் தயாராக இல்லை. காரணம் எல்லோரையும் கூட்டி வைத்து இதோ அந்த பெண் என உருவம் தோன்றும்பொழுது கத்தினாலும் யார் கண்ணுக்கும் அது தெரியவில்லை
இதனால் பெர்னதத் மனநோயாளி என கருதபட்டாள். அவளோ தான் காண்பது உண்மை என கத்தினாள், புலம்பினாள் ஆனால் நம்பவோ யாருமில்லை
அடுத்தமுறை அதே உருவம் வந்தது, தன் நிலமையினை சொல்லி அழுதாள். சிரித்த பெண் உருவம் அவளின் துயர் போக்க இந்த இடத்தில் அந்த மக்களை தோண்ட சொல் வற்றா நீருற்று வரும், அது நோய்களை குணமாக்கும் என சொல்லி மறைந்தது
அது சொல்லியபடியே தோண்ட நீரூற்று பொங்கியது, கூட்டம் முதல் முறையாக நம்பியது
அதன் பின் மெழுகுவர்த்தியுடன் பெர்னதத் ஜெபிக்கும் பொழுது, அந்த உருவம் தோன்றும் பொழுது ஏராளமானோர் கூடி இருந்தனர், ஆனால் பெர்னதத் தவிர யாரும் அதை கண்டாரில்லை
ஒரு உருவம் பெர்னதத்திடம் வருகின்றது, பேசுகின்றது என்ற தகவல் தீயாக பரவியது
அந்த பெண் உருவும் ஜெபமாலை ஜெபிப்பதுமுதல் பல ஜெபங்களை கற்றும் கொடுத்தது, பெர்னதத்தும் கற்றாள் கற்பித்தாள்
ஒரு கட்டத்தில் தனக்கு ஒரு ஆலயம் கட்ட அந்த உருவம் பங்குதந்தையிடம் சொல்ல சொன்னது, அவரோ “அப்பெண் உருவம் தன்னிடம் என்ற கோபத்தில் முதலில் அப்பெண் யாரென கேட்டுவா” என்றார்
பெர்னதெத் பெயரை கேட்டால் அவ்வுருவம் சொல்லவில்லை, நாட்கள் கடந்தன ஆனால் அது அவ்வப்பொழுது வந்து பெர்னதத்தோடு உறவாடியது, பெர்னதத்தோ அதன் பெயரை கேட்டபடியே இருந்தாள்
இறுதியாக தன் 16ம் காட்சியில் அது 1858ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி “I am the Immaculate Conception” என சொன்னது அந்த உருவம்
அதன் பொருள் “நாமே அமல உற்பவம்” அதாவது மாசற்ற பிறப்பு என பொருள்
அலறி அடித்த கத்தோலிக்க உலகம் பெர்னதத்துக்கு காட்சியளித்தது அன்னை மரியாள் என ஓடிவந்து நின்றது, அதன் பின் இரு காட்சிகளே பெர்னதத்துக்கு கிடைத்தன
18 முறை பெர்னதத்திடம் தன்னை வெளிபடுத்திய அன்னை மரியாள் தன் நோக்கம் நிறைவேறியதும், தனக்கொரு பெரும் ஆலயம் கட்டபட வேண்டும் என சொல்லி அதை எல்லோரும் ஒப்புகொண்டபின் காட்சிக்கு வரவில்லை
ஆனால் அரூபியாய் அங்கே நின்றார், மாபெரும் ஆலயம் எழும்பியது. சாட்சிகளும் புதுமைகளும் ஏராளம்
லூர்தஸ் நகரத்து அந்த நீல கச்சை மாதா, லூர்து மாதா என்றானார், அப்படியே அமல உற்பவ மாதா என்றுமானார்
லூர்து மாதா பக்தி முயற்சிகள் உலகெல்லாம் பெருகின, அந்த குகை கோவில் மாதிரிகள் மாதா கெபி என வளர்ந்தன
அமலோற்பவ மாதா எனும் பெரும் எழுச்சியே ஏற்பட்டது
தமிழகத்து தொன்மையான ஆலயமான பூண்டிமாதா ஆலயம் இந்த அன்னைக்கு அர்பணிக்கபட்டதே.
தேவ அன்னையால் 18 முறை அழைக்கபட்ட பெர்னதத் கன்னியர் மடத்தில் சேர்ந்து அருட்சகோதரியாகி பின் புனிதரும் ஆனார்
35 வயதிலே மரித்ததார் அவர், 35 வயதிற்குள் ஜெபமாலை முதல் பல்வேறு ஜெபங்களை அவர் கொடுத்தார். மாதா நேரடியாக கற்பித்த ஜெபங்களும் அதில் உண்டு
லூர்து நகரில் மாதா கொடுத்த காட்சி கத்தோலிக்க திருச்சபையில் மிக மிக குறிப்பிடதக்க நிகழ்வு, அதனாலே இன்று அந்த மாதா கெபி இல்லா ஆலயங்கள் குறைவு..
இன்று பிரான்சின் லூர்து நகரம் மாதாவின் ஆலயங்களில் மிக பிரசித்திபெற்ற தலம், நம்பர் 1 ஆலயம்
அந்த லூர்துமாதாவின் திருநாள் அவர் முதலில் காட்சி கொடுத்த பிப்ரவரி 11ம் நாள் அவரின் நாளாக போற்றபடுகின்றது
உலகெல்லாம் உள்ள மாதாவின் பக்தர்கள் இந்நாளை கொண்டாடுகின்றனர் “நாமே அமலோற்பவம்” என மாதா சொன்ன வார்த்தையோடு, “மரியே வாழ்க” என்ற குரல் உலகெல்லாம் ஒலிக்கின்றது
அன்னை மரியாளிடம் நாமும் வேண்டிகொள்வோம்,
பெர்னதத்தின் புகழ்பெற்ற வரிகளான “அன்னையிடம் வேண்டியது கிடைக்கவில்லை என உலகில் ஒருவரும் சொல்லியது இல்லை” என்ற வரிகளோடு வேண்டி கொள்வோம்
வல்ல தேவ அன்னை நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்
மரியே வாழ்க..