ராகுல் & ப்ரியங்கா

அது இந்திராவின் கடைசி காலங்கள் அவருக்கு உச்சகட்ட மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன அவர் கலங்கவில்லை, என்றேனும் ஒருநாள் கொல்லபடுவோம் என்பதை தெரிந்தே இருந்தார்

ஆனால் பொற்கோவில் சம்பவத்திற்கு பின் “இந்திரா வம்சத்தை வேறறுப்போம்” என சீக்கிய தீவிரவாதிகள் சூளுரைத்தனர், அவர்கள் போக இன்னும் பல அமைப்புகள் இதே மிரட்டலை விடுத்தன‌

முதன் முதலாக அஞ்சினார் இந்திரா, தன் வாரிசுகள் மேலான கவலை அதிகரித்தது. சஞ்சயின் மகன் வருண்காந்திக்கு ஆபத்தில்லை மேனகா சீக்கிய பெண்மணி போதா குறைக்கு இந்திராவுடன் நல்ல உறவில் இல்லை

ஆனால் ராஜிவின் குழந்தைகள் அப்படி அல்ல, தான் உயிரே வைத்திருக்கும் அக்குழந்தைகள் மேல் அடித்தால் தன்னால் தாங்கமுடியாது என்பதையும் எதிரிகள் அந்த இடம்பார்த்து அடிப்பார்கள் என்பதையும் உணர்ந்தே இருந்தார்

அதன்பின் அவரிடம் ஒரு பரபரப்பு காணபட்டது, பல்வேறு உளவுதகவல்கள் அதற்கு காரணம் என்பார்கள்.

திடீரென பள்ளி செல்லும் இந்திரா பேரபிள்ளைகளை கட்டிபிடித்து அழுவார், திடீரென தன் பயணதிட்டத்தை விட்டுவிட்டு பேரபிள்ளைகளிடம் ஓடுவார், அவர்கள் நலம் என்றதும் ஒருவித நிம்மதி அவரிடம் வெளிபடும்

நள்ளிரவில் கூட தூங்கிகொண்டிருந்த‌ பேரபிள்ளைகளின் தலையினை கோதி கண்ணீர்விட்ட இந்திராவினை கண்ட சாட்சிகள் உண்டு

நாட்கள் நெருங்கின, தன்னை கொல்வார்களா இல்லை தன் வம்சத்தை ஒழித்து தன்னை கதறவைத்து பழிவாங்குவார்களா என நிம்மதியின்றி அவர் தவியாய் தவித்தார், உளவியலாக தொடுக்கபடும் நெருக்கடி இது, அந்த தாய் அதை அணுஅணுவாக அனுபவித்தார்

இறுதியில் அவர் விதி முந்திகொண்டது

ஆம் அந்த குழந்தைகளுக்கான ஆபத்து அப்பொழுது தற்காலிகமாக நீங்கியது

அடுத்து ராஜிவ் வந்தார் அவர்மேலும் பலருக்கு பகைவளர்ந்தது குறிப்பாக ஈழவிஷபாம்புகள்

அதில் உமாமகேஸ்வரன் ராஜிவின் குழந்தைகளை கடத்த திட்டமிட்டு வழிதேடினான், மிகுந்த பாதுகாப்பில் இரு குழந்தைகளும் வைக்கபட்டன, உமா மகேஸ்வரனால் நெருங்க முடியவில்லை. அவன் சாகடிக்கபடும் வரை அக்குழந்தைகளுக்கான மிரட்டல் தொடர்ந்தது

அடுத்து அமைதிபடையான யுத்தத்தை அடுத்து புலிகளுக்கும் ராஜிவுக்கும் மவுன யுத்தம் பொருந்தியது, இந்திராவிற்கு இருந்த அதே கவலை ராஜிவுக்கும் இருந்தது

அதன் பின் ஒரு நுட்பத்தை மேற்கொண்டார், எங்கு சென்றாலும் குடும்ப சகிதமின்றி தனியாக செல்ல தொடங்கினார், கொல்பவர்கள் தன்னை மட்டும் கொல்லட்டும் அக்குழந்தைகள் வாழட்டும் எனும் ஒருவித தியாகம் அதில் இருந்தது

அப்படியே ராஜிவும் கொல்லபட்டார்

இருவரும் அவர்களை காத்துவிட்டே உயிர்துறந்தனர்

நிச்சயம் பிறந்தது முதல் இன்றுவரை பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் வாழ்வது ராகுலும் பிரியங்காவும். சாதாரண மிரட்டல் அல்ல‌

பாட்டியும் தந்தையும் தங்களை காக்க உயிர்விட்டதை கண்ணால் பார்த்து வளர்ந்த மிரட்டல்

நினைக்கவே மனம் பதறும் விஷயம் அது

ஆனால் அதையும் தாண்டி விதி அவர்களை இழுத்து வந்திருக்கின்றது. நிச்சயம் சோனியாவிற்கு இவர்கள் அரசியலுக்கு வருவது விருப்பமான விஷயமே அல்ல அவர்களை ஒதுக்கித்தான் வைத்திருந்தார் அதுதான் பாதுகாப்பு என்றும் கருதினார்

ஆனால் பலவீனமான காங்கிரஸை வலுபடுத்த அவருக்கு வேறு தெரிவு இல்லை. அழுதபடியே ராகுலுக்கு தலைவர் பதவியினை அவர் விட்டுகொடுத்தபொழுது கலங்காதோர் யாருமில்லை

அந்த அழுகையின் உண்மையான காரணத்தை நல்ல இந்தியனும் , நல்ல காங்கிரஸ்காரனும் நிச்சயம் அறிவான்

பாஜகவின் அசுரபலத்தை ஒடுக்கவும், மாநில கட்சிகளின் அழிச்சாட்டியத்தை விரட்டவும் ராகுலுக்கு இன்னொரு கரம் தேவைபட்டது

பிரியங்காவும் களத்தில் இறக்கபட்டிருகின்றார் அவருக்கு கனத்த வரவேற்பும் இருக்கின்றது

நிச்சயம் அவரால் காங்கிரஸ் வலுப்பெறும் எனும் நம்பிக்கையும் துளிர்விட்டிருக்கின்றது

தங்களின் பாட்டியும் தந்தையும் இத்தேசத்திற்காக கொடூரமாக கொல்லபட்டதை பார்த்தபின்னும் நாட்டிற்காக வந்து நிற்கும் இருவரும் வாழ்த்துகுரியவர்கள்

வேறு எந்த கட்சியிலும் இப்படிபட்ட ரத்த சாட்சிகளை பார்க்க முடியாது, நிச்சயம் முடியாது

“உன்னால் முடியாததை உன் ரத்தம் சாதிக்கும்” என்றொரு பழமொழி மேல்நாட்டில் உண்டு

சரிக்கபட்ட அந்த ஆலமரங்களின் இடத்தை இந்த குருத்துக்கள் வளர்ந்து நிரப்பட்டும், தேசம் அதில் இளைப்பாறட்டும்

சிங்கங்கள் விட்டு சென்ற இந்த குருளைகளின் கர்ஜனையில் எதிரிகள் ஓடட்டும்

இந்திரா விட்டுசென்ற காரியங்களை இந்த இருவரும் சாதித்து காட்டட்டும், இந்த தேசம் அதற்கு கைகொடுக்கட்டும்

பிரியங்கா வருகைக்கு பின் பாஜக கும்பல் கதறுவதையும் பதறுவதையும் கண்டால் நேருவின் அழகான சிரிப்பு தெரிகின்றது

நல்லவர்கள் ஒருநாளும் மரிப்பதில்லை அவர்களின் கனவு நடக்காமல் போவதில்லை

நேரு கண்ட அமைதியான இந்தியா, இந்திரா கண்ட வலிமையான இந்தியா, ராஜிவ் கண்ட தொழில்நுட்ப இந்தியா மீண்டும் அமையும் காலம் நெருங்கி கொண்டிருகின்றது என்பது மகிழ்ச்சி

இந்திராவும் ராஜிவும் வாழாத நாட்களை எல்லாம் இவர்கள் வாழட்டும், அவர்கள் கண்ட கனவை எல்லாம் இவர்கள் நிறைவேற்றட்டும்

இந்திராவும் ராஜிவும் தங்களை ஓடி ஓடி காப்பாற்றியது இந்நாடு நலம்பெற வலிமைபெற என இருவரும் நிரூபிக்க காலம் வாய்ப்பளிகட்டும்

இன்றைய துளிகள்…

25 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் காட்டில் புலியின் நடமாட்டம் : இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

இதுவும் மோடிஜியின் சாதனை, காங்கிரஸ் ஒழித்த புலிகளை மோடி காப்பாற்றினார் என இனி பலர் கிளம்புவார்கள்

______________________________________________________________________________

மகாத்மா காந்தி சுட்டுகொல்லபட்டதை பேசியபொழுது கதறி அழுதார் வைகோ

ஆனால் ராஜிவ்காந்தி கொல்லபட்டது பற்றி எல்லாம் அன்னார் பேசவும் மாட்டார், அழவும் மாட்டார் அதனால் உருப்படவும் மாட்டார்

_____________________________________________________________________________

தலைவி குஷ்பு மீது மறுபடியும் சர்ச்சை கிளப்ப கிளம்பிவிட்டார்கள் சதிகாரர்கள், சண்டாள பாவிகள்

ரஜினி தமிழக அரசியலுக்கு வரலாமா அவர் அந்நியர் இல்லையா என்றெல்லாம் அவரிடம் கேட்டிருக்கின்றார்கள்

எல்லா கேள்விக்கும் நியாயமாகவும், மகா நேர்மையாகவும் பதிலளிக்கும் நம் தலைவி இக்கேள்விக்கும் தனக்கே உரிய நிதானத்துடனம் அறிவுடனும் பதிலளித்திருகின்றார் இப்படியாக‌

“ராமசந்திரன் இலங்கையில் பிறந்த மலையாளி வம்சம், ஜெயலலிதா கன்னட பிறப்பு அவர்கள் எல்லாம் இங்கு மக்களால் பதவிக்கு அமர்த்தபடவில்லையா?

ஏன் கலைஞர் கருணாநிதியே தமிழர் இல்லை என்றொரு செய்தி உண்டல்லவா? அவரை போல் தமிழின தலைவர் உண்டா? தமிழறிஞர் உண்டா? அரசியல்வாதி உண்டா?

அதனால் இங்கு வந்து தமிழகத்தாராக வாழ்ந்து அவர்கள் பெற்ற மக்கள் அபிமானமே முக்கியமே தவிர வேறொன்றுமில்லை

தமிழர் ராஜ்குமார் கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் ஆகி காங்கிரஸ் வெற்றிக்கு உழைக்கவில்லையா? இன்னும் பலர் அடுத்த மாநிலத்தில் முதல்வராகவில்லையா? நாமெல்லாம் இந்தியர் என்றுதான் பார்க்க வேண்டும். “

எவ்வளவு அழகான , பொறுப்பான, தீர்க்கமான பதில்.

இதற்குத்தான் வாய்பிளந்த ஓநாயாக, வட்டமிட்ட கழுகாக, பதுங்கிய புலியாக, சேறுக்கு காத்திருந்த எருமையாக காத்திருந்த சிலர் பொங்கி எழுகின்றார்கள்

குஷ்பு கலைஞரை வந்தேறி என்றார், ஜெயா தமிழச்சி இல்லை என்றார் அவரை விட கூடாது என கடுமையாக பேசிகொண்டிருக்கின்றார்கள்

இவர்களை சங்கம் வன்மையாக எச்சரிக்கின்றது

தலைவி சொன்னது ஒன்றும் புதிதல்ல, தமிழகத்தில் பல இடங்களில் கேட்ட குரலைத்தான் அவரும் சொன்னார்

ராமசந்திரன் மலையாளி, ஜெயா கன்னடத்தி என சொன்னது சாட்சாத் திமுகவினர்

அதன் பின்பு கலைஞர் தெலுங்கர் பரம்பரை என சொன்னது அதிமுகவினரும் இன்னும் பலரும்

இப்படியாக யாரெல்லாமோ கிளப்பிய சர்ச்சைகளின் அன்றைய நிலையினைத்தான் தலைவி சொன்னார்

அதற்குள் இன்றைய திமுகவினர் தலைவி கலைஞரை கொச்சைபடுத்திவிட்டதாக பொங்கி எழுந்து சீறிகொண்டிருக்கின்றனர்

தலைவி கலைஞர் தன் அரசியல் தந்தை, அவர் வீடு என் கோவில், நான் அவரை கொச்சைபடுத்தவில்லை என்பதோடு விஷயத்தை முடித்துகொண்டார்

ஆயினும் உபிக்கள் பொங்கி கொண்டிருக்கின்றன‌

தலைவி சொன்னது ஒன்றும் தவறுமல்ல, புதிதுமல்ல‌

தலைவியினை தற்காப்பது சங்கத்து கடமை என்பதால் அந்த அற்ப மானிட பதர்களை வன்மையாக எச்சரிக்கின்றோம், இத்தோடு விஷயத்தை விட்டுவிட்டால் அவர்களுக்கு நல்லது

ஒருசிலர் மிக கடுமையாக தலைவி தமிழச்சியா என கேட்க தொடங்கிவிட்டனர்

ஜெயலலிதாவும் ராமசந்திரனும் எப்படி தமிழர்களாக வாழ்ந்தார்களோ அப்படி எங்கள் தலைவியும் தமிழச்சி, தமிழ்நாட்டு மருமகளான தமிழச்சி என்பதை மிக வலுவாக சங்கம் பதிவு செய்கின்றது.

_____________________________________________________________________________

தமிழக மக்களுக்கு 2000ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தபடும் தமிழக அரசு அறிவிப்பு

பொங்கலுக்குத்தான் 1000 கொடுத்தார்கள், இப்பொழுது 2000ம் ரூபாயாம்

நிச்சயம் அடுத்ததாக 3 ஆயிரம் கிடைக்கும்

ஆக அந்த மகான் பாண்டியராஜன் ஒரு மாபெரும் தீர்க்கதரிசி, இதை எல்லாம் எப்பொழுதோ சொல்லி முடிவினையும் சொல்லிவிட்டார்.

ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம்..என தொடங்கினால் முடிவு பிஸ்கோத்தில்தான் முடியும்..

தேர்தலுக்கு பின் தமிழக நிலை பிம்பிலிக்கி பிலாப்பிதான்

(அந்த பக்கம் மகான் பாண்டியராஜனும் செந்திலும் , இந்த பக்கம் பன்னீரும் பழனிச்சாமியும்

வரலாறு எப்படி எல்லாம் திரும்புகின்றது?

எது திரும்பினாலும் திருந்தாதது இந்த ” மாமா பிஸ்கோத்து” கோஷ்டிதான்)

______________________________________________________________________________

விஜயகாந்த் மகனின் இம்சை உதயநிதியினை மிஞ்சிவிடும் போலிருக்கின்றது

அரசியல் காமெடியன் என்றாலும் வாரிசு விஷயங்களில் வைகோ கெட்டிக்காரர், தனக்கே இந்தபாடு என்றால் தன் மகனுக்கு என்னபாடோ என யோசிக்கும் ஒரே தலைவர் அவர்தான்

உலக வானொலி நாள்

உலகத்திற்கு ரேடியோவினை கொடுத்தது மார்கோனி என்றாலும் ரேடியோவிற்கான நாள் என ஒன்றுமில்லை

உலகில் எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் ரேடியோவிற்கான மவுசே தனி, இன்றும் போனில் வந்து நம் காதோரம் ஒலித்துகொண்டே இருக்கின்றது

அச்சுக்கலை போலவே உலகில் மாபெரும் புரட்சியினை நிகழ்த்தியது ரேடியோ, மானிடன் இருக்கும் காலம் வரை அதுவும் இருக்கும்

அப்படிபட்ட ரேடியாவின் தினத்தை என்று கொண்டாடலாம் என 2010ல் திட்டம் தீட்டினார்கள், ஆளுக்கொரு கருத்து இருந்ததால் ஆளுக்கொரு நாளில் கொண்டாடினார்கள்

இறுதியாக பொதுமுடிவுக்கு வந்தார்கள் 1946ல் ஐ.நா வானொலி என ஒன்று உருவானது, அது பிப்ரவரி 13ல் உருவானது

உடனே ஒருமித்த கருத்தாக இந்நாள் உலக வானொலி நாள் ஆனது

வானொலியால் வளர்ந்த தலைமுறை ஏராளம் உண்டு, அதன் மூலம் பெற்ற அறிவுகளும் நல்ல விஷயங்களும் ஏராளம்

இன்றும் வேலை செய்யும் அலுப்பு தெரியாமல் இருக்க, தனிமை தவிர்க்க அது ஐடி தொழிலோ , பயணமோ, கார் ஓட்டும் தொழிலோ, பீடி சுற்றுதலோ, உணவக தொழிலோ எது என்றாலும் ரேடியோ இல்லா நிலை இல்லை

சில தொழில்கள் ரேடியோ இன்றி இயங்காது என்றாயிற்று

ரேடியோ நிலையம் இந்தியாவில் ஆகாசவாணி என்றாயிற்று , பின் தமிழில் வானொலி என அழைக்கபட்டாலும் சென்னையில் அது ஆகாசவாணி என்றே அரசு பெயரில் இருந்தது

ஆகாசவாணியினை வானொலி என மாற்றும்வரை அதை புறக்கணிப்போம் என போராட்டம் எல்லாம் செய்தனர் திராவிட கட்சிகள்

இதனால் அது சென்னை வானொலி நிலையம் ஆயிற்று

ஆனால் பின்னாளில் சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி என பெயர்வைத்த பொழுது சத்தமே இல்லை, அவர்களுக்கே அது நினைவு இல்லை

ஆகாஷவாணியினை வானொலி என மாற்று என கொடிபிடித்தவர்கள்தான் பின்பு தொலைகாட்சி என வைக்காமல் டிவி என வைத்து கொண்டார்கள் அதுவும் சன் டிவி

இது தமிழக அரசியலின் இன்னொரு முகம், போகட்டும்

இன்று உலக வானொலி நாள் என்பதால் வானொலியில் பணியாற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

சவுதி அரசரின் பவனி

அக்கால அரசரின் பவனி எப்படி இருக்கும் என்பது பண்டைய இலக்கியங்களில் படித்திருப்போம், ஆனால் பார்த்திருக்க மாட்டோம்

அந்த அரிய வாய்ப்பு சவுதி அரசர் உருவில் நமக்கு கிடைத்திருக்கின்றது

மன்னரின் சுற்றுபயணம் எப்படி இருக்கும் என்றால் கிட்டதட்ட சவுதி அரண்மனையே இடம்பெயர்ந்தது போலிருக்கும்

அரண்மனையின் ஒட்டகங்கள் தவிர எல்லோரும் கிளம்பிவிடுவார்கள்

இந்தோனேஷியாவுக்கு கடந்த ஆண்டு அவர் வரும்பொழுது உலகம் வியந்தது, கிட்டதட்ட 8 ஆயிரம் பேரோடு வந்தார் மன்னர்

அவரின் சமையல்காரர்கள், சமையல் அயிட்டம், ஆடு கோழிகள், என ஒரு பட்டாளம் கப்பலில் வந்தது. அது போக அலுவலர்கள், குறிப்பாளர்கள், அதிகாரிகள் என ஒரு கோஷ்டி வந்தது

மன்னரின் உடைகள் பொறுப்பான குழு, மருத்துவர்கள் குழு என அடுத்த டவுண் கிளம்பி வந்தது

மன்னர் எங்கு சென்றாலும் அங்கு தன் சொந்த தங்க காரில் செல்வார் என்பதால் கார் தனிகப்பலில் வந்தது

மன்னர் தன் பரிவாரங்களுடன் தனி விமானத்தில் கடைசியாக வந்து சேர்ந்தார்

கிட்டதட்ட 8000 பேருடன் பல கப்பல்கள், ஏராளமான விமானங்கள் என வந்து சென்ற மன்னர் உலகை அசத்தினார்

இப்பொழுது அதே பரிவாரங்களுடன் கிளம்பிவிட்டார், இம்முறை பாகிஸ்தான், இந்தியா, மலேசியா என புறப்படுகின்றார்

அதே கப்பல்கள் அரண்மனையினை ஏற்றிகொண்டு கராச்சி சென்றாயிற்று, இனி அங்கு மினி சவுதி நடமாடும் அரண்மனை அமைக்கபட்டவுடன் அங்கு மன்னர் செல்வார்

அதன்பின் இந்தியா வருகின்றார்

மன்னர், அரண்மனை முன்பு வரும் மன்னர் பின்னால் வருவார்

அந்த மாட்சிமை தாங்கிய பணக்கார‌ மன்னனை இந்தியாவின் ஏழைதாய் பெற்றெடுத்த மகன் இந்திய பிரதிநிதியாக வரவேற்பார் என்பதுதான் ஆச்சரியம்

மக்களாட்சி என்பது இதுதான்

எண்ணெய் வியாபாரத்தில் தனி ஆதிக்கம் செலுத்தும் நாடு சவுதி, இந்தியா ஈரானோடு நெருங்கும் நேரத்தில் அதை தடுக்கவும் இன்னும் பல ராஜதந்திரங்களோடும் அது இந்தியாவினை நெருங்குகின்றது

இந்தியா ஈரானை பகைக்காமல் அதே நேரம் சவுதியிடமிருந்தும் தேவையானதை பெற ராஜதந்திரமாக அணுகுகின்றது

இந்தியாவில் இருந்தும் சவுத்திக்கு ஏற்றுமதிகள் உண்டு, ஏராளமான இந்தியர் அங்கு பணிபுரிவதால் இந்தியாவின் பல கணக்குகள் உண்டு

சவுதியும் பல வகையான அரசியல் கணக்கீடுகளோடு இந்தியாவுக்கு கைநீட்டுகின்றது

அரசியல் கணக்குகளை விடுங்கள், ஒரு மாமன்னர் பராக். பராக்..பராக் என்றால் எப்படி இருக்கும் என்பதை காண ஒரு வாய்ப்பு கிடைத்திருகின்றது விட்டுவிடாதீர்கள்

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி

நீதிமன்றங்கள் எப்பொழுதும் நியாயமானவை தகுந்தவர்கள் தக்க முறையில் அணுகும்பொழுது அது தன் கடமையினை சரியாக செய்யும் என்பது மறுபடியும் நிரூபணமாகியிருக்கின்றது

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநலன் வழக்கு தொடரபட்டது, வழக்கை தொடுத்தவர் உண்மையில் வாழ்த்துகுரியவர்

வழக்கை எடுத்த நீதிமன்றம் தொல்லியல் துறையினை விளாசிவிட்டது

ஏன் ஆதிச்சநல்லூர் ஆய்வுமுடிவினை அறிவிக்கவில்லை, இவ்வளவு நாளும் என்ன செய்தீர்கள் என மிக அதிரவைக்கும் கேள்விகளை கேட்டு விரைவில் அறிக்கை கொடுக்கும்படி கட்டளையிட்டுள்ளது

ஆதிச்சநல்லூர் வரலாறு ஏன் மறைக்கபடுகின்றது? ஏன் இப்படி எல்லாம் முட்டுகட்டை இடுகின்றார்கள் என்றால் விஷயம் சாதாரணம் அல்ல‌

தமிழகத்தில் 1800களில் ஜெர்மானியரே முதலில் அறிவு ஏடுகள், தொல்பொருள் ஆய்வு என அலைந்தவர்கள்

அவர்கள் விமான சாஸ்திரா முதல் பல இந்திய ஏடுகளை கடத்தினார்கள், முதலில் விமான முயற்சி செய்து தோற்றது ஒரு ஜெர்மானியனே

தஞ்சை சரஸ்வதிமஹாலில் இருந்து அவர்கள் தேடிய அறிவு கொஞ்சமல்ல, அது அவர்களுகு ஹிட்லர் காலம் வரை கைகொடுத்தது

இங்கு கல்வெட்டு முதல் ஓலைசுவடி வரை தேடோ தேடு என அவர்கள் தேடினார்கள், அப்படி அவர்கள் தேடி சொன்ன விஷயம்தான் தஞ்சை கோவிலை கட்டியது ராஜராஜன் என்பதும், தென்னக தேரிகாட்டு மணலில் தாதுக்கள் அதிகம் என்பதும்

அண்ணாச்சி வைகுண்டராஜன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அப்படிபட்ட ஜெர்மானியர் ஐகோர் என்பவர்தான் ஆதிச்ச நல்லூரை முதலில் தோண்டினார், பல ஆய்வுகளை செய்தார், முடிவுகளை சொன்னார்

அது உலகை அதிர வைத்தது, ஆம் அது 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என முடிவு வந்தது. இரும்பை உருக்கும் கலை எல்ல, ஸ்டீல் எனப்படும் மிக நுட்பமான உலோகத்தை செய்யும் அளவு அங்கு அறிவார்ந்த சமூகம் இருந்தது எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தன‌

இரும்பு என்றல்ல வெண்கலம் முதல் பொன் வரை ஏராள பொருட்கள் கிடைத்தன‌

(இரும்பை எக்கு ஆக்கி கல்லை வெட்டி சிற்பம் செய்வது தமிழரின் கலை, சிற்பங்களில் தமிழகம் தனித்து நிற்க அதுதான் காரணம்

அந்த நுட்பம் 15 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு ஆதிச்சநல்லூரில்தான் உருவானது, அவ்வளவு அறிவான சமூகம் அங்கே வாழ்ந்திருக்கின்றது)

விஷயம் இன்னும் விஸ்வரூபமானது, ஆம் சிந்து சமவெளியில் கிடைத்த பொருட்களும் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களும் ஒரே போல் இருந்தன‌

தொல்லியல் உலகம் அதிர்ந்தது, ஆம் முடிவு வந்தால் உலகின் மொத்த தொல்லியல் ஆய்வும் மாற்ற வேண்டிய சூழல் வரும்.

உலகின் மிக தொன்மையான நாகரீகமான மெசபடோமியாவினை விட பழமையானது ஆதிச்சநல்லூர் என்பது உறுதியாகும்

பழைய லெமூரியா காலத்தின் எச்சம் ஆதிச்சநல்லூர் என்கின்றது ஆய்வு முடிவு, அதன் பெயரே ஆதி+எச்ச+நல்லூர்

ஆம் மிக பழங்காலத்தின் எஞ்சிய எச்சம் அது

அந்த தாமிரபரணி முதலில் ஆதிச்சநல்லூரை ஒட்டியே ஓடி இருகின்றது, அங்கு நாகரீகம் தழைத்திருகின்றது, ஏதோ ஒரு கடற்கோளில் நிலப்பரப்பு மாறி போக தாமிரபரணி தள்ளி போயிருக்கின்றது

அதனால் ஒருகாலத்தில் செழிப்பாக இருந்த ஆதிச்சநல்லூர் இன்று வெறும் மண்மேடாக இப்பொழுது நிற்கின்றது

காவேரிபூம்பட்டினம் கடலுக்குள் போன காலங்களை போல முன்பு ஏதோ நடந்து இவை நிகழ்ந்திருக்கலாம்

இலங்கை இந்திய நிலபரப்பில் இருந்து பிரிந்த காலங்களில் நிகழ்ந்திருக்கலாம்

நிச்சயம் வெளிகொண்டுவர வேண்டியது ஆதிச்சநல்லூர் வரலாறு, ஆனால் அது பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தும் தமிழக அரசியல் சூழலுக்கு அது சரியல்ல என்பதால் கனத்த மவுனமாகும்படி இந்திய அரசியல் கணக்கால் தொல்லியல் துறைக்கு இடப்பட்டிருக்கின்றது

அங்கு எடுக்கபட்ட சில பொருட்களை நெல்லை அருங்காட்சியகம், எழும்பூர் அருங்காட்சியகம் என வைத்தார்கள். பாசிமணி போன்றவைகளும் சில கற்கால ஆயுதங்களும் அதில் அடக்கம், இப்பொழுதும் காணலாம்

ஆனால் உலகில் முதன் முதலில் இரும்பை பயன்படுத்திய அந்த ஆதிச்சநல்லூரின் மகா முக்கிய பொருட்களை கண்ணிலே காட்டமாட்டார்கள்

அதை உறங்கவிடுவதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்

இப்பொழுது நீதிமன்றம் கேள்வி கேட்டிருகின்றது, ஆனால் அந்த கல்லை எடுத்தோம் இந்த தாழியினை எடுத்தோம் இது 2000 ஆண்டுக்கு முற்பட்ட நாகரீகம் என்பார்களே தவிர உருப்படியாக பதிலளிக்கமாட்டார்கள்

முன்பு 1500 ஆண்டுகளுக்கு முன்பான நாகரீகம் என்றார்கள்? அட ராஜராஜ சோழனே 1000 வருடத்திற்கு முன்பிருந்தான் கிட்டதட்ட 2500 ஆண்டுகால தமிழன் நாகரீக ஆதாரம் இருக்கின்றது, அதில் எல்லாம் ஆதிச்சநல்லூர் இல்லை இது ஆக பழமையானது என்பதால் உண்மையினை சொல்லுங்கள் என கேட்டால் தொல்லியல் துறையிடமிருந்து பதில் வராது

ஆனால் தொடர்ந்து நீதிமன்றம் நெருக்கடி கொடுத்து இன்னும் பாதுகாக்கபடும் ஆதிச்சநல்லூர் பகுதிகளை நீதிமன்ற வழிகாட்டல்படி தோண்ட செய்தால் நிச்சயம் பல வரலாறுகள் வெளிவரும், அது உலகினை புரட்டி போடும்

ஆனால் அதற்கான போராட்டம் நீண்டது

என்னதான் திமுக போன்ற திராவிட கட்சிகள் மேல் அபிமானம் இருந்தாலும், கலைஞர் மேல் பெரும் மரியாதை இருந்தாலும் இந்த இடத்தில் அதை கழற்றி எறியத்தான் வேண்டும்

ஆம், தமிழ் தமிழர் என கட்சி நடத்தி ஆட்சிக்கும் வந்த அவர்கள் இந்த உண்மையான தமிழனின் வரலாற்று இடத்தை தோண்டவோ அதை வெளிகொண்ரவோ கிஞ்சித்தும் முயற்சி எடுக்கவில்லை

இன்னும் ஆழமாக சொல்லவேண்டுமென்றால் சோழநாட்டு வரலாறுமேல், காவேரி தஞ்சை, காவேரிபூம்பட்டினம் என கவனம் செலுத்திய கலைஞர் ஆதிச்சநல்லூரை கண்டுகொள்ளவுமில்லை

தனக்கும், தன் மேலான ஊழலுக்கும் பெரும் வழக்கறிஞர்களை கொண்டு வாதிட்டவர்கள் ஆதிச்சநல்லூர் பக்கம் செல்லவே இல்லை என்பது அவர்களுக்கு பெரும் கரும்புள்ளி

அதற்கு காரணமும் இருந்தது, ஆதிச்சநல்லூரில் கிடைக்கபெற்ற பானைகளை , ஓடுகளை ஆய்வு செய்ததில் அதில் இந்து கடவுள் படங்களும் இருந்தன‌

ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவன் தமிழன் அவன் மதம் இந்து என்ற முடிவும் இருந்தது, சிவன் முதல் முருகன் வரை பல படங்களும் ஆதாரங்களும் கிடைத்தன, உருவங்களும் கிடைத்தன‌

ஆதிச்சநல்லூர் தோண்டபட்டால் தமிழன் இந்து என்ற அடையாளம் நிலைத்துவிடும்.

எந்த பகுத்தறிவுவாதி இதை விரும்புவான்? அவர்களும் கனத்த அமைதி ஆனார்கள்

நெல்லை பக்கம் இருந்தும் பிரதான தமிழக அரசியல் தலைவர்கள் உருவாகாமல் போனதும் ஒரு காரணம், அழுத்தம் கொடுக்கவும் யாருமில்லை

காமராஜர் நல்லவர்தான் ஆனால் இக்கால பாஷயில் சொல்வதென்றால் ஒரு ஆர்.எஸ்.எஸ், அவர் என்றல்ல பாரதி, வ.உ.சி எல்லாமே அந்த ஆர்.எஸ்.எஸ் கோஷ்டியே

இதனால் ஆதிச்சநல்லூர் தமிழர் வரலாற்றை வெளிகொண்டுவர யாரும் இல்லாமலே போய்விட்டார்கள்

தேவநேயபாவணர் போன்ற சிலர் எழுப்பிய குரலும் கானகத்தில் தவளை ஒலி போல கண்டுகொள்ள ஆளில்லாமல் போயிற்று

ஆதிச்சநல்லூர் மர்மம் வெளிவரகூடாது என்ற தொல்லியல் துறையின் கணக்கும், இங்கு நல்ல தமிழ் தலைவர்கள் உருவாகாத கணக்குமாக சேர்ந்து அதை உறங்க வைத்தன‌

இப்பொழுது நீதிமன்ற உருவில் ஆதிகால தமிழர்களின் ஆன்மா தொல்லியல் துறைக்கு கதறல் கோரிக்கை வைக்கின்றது

வந்திருப்பது நீதிமன்ற உத்தரவல்ல, மாறாக ஆதிதமிழனின் கேவல் நிறைந்த கெஞ்சல், எங்களை உலகிற்கு அறிவியுங்கள் என்ற இயலாமையின் அழுகை

இதற்கு துணைநிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை, தலையாய கடமை

உலகின் தனிபெரும் நாகரிகமான ஆதிச்சநல்லூரில் உண்மையான ஆய்வு முடிவு வெளிவரும் பொழுது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை

அந்த ஜெர்மானியனான ஐகோர் என்பவனே அந்த ஆய்வினை 1876களில் தொடங்கி வைத்தான், அவனுக்கு நன்றி சொல்லி கடமையாற்ற கிளம்புவோம்

உண்மையான முடிவுகள் வரட்டும், தமிழர் பெருமை நிலைக்கட்டும்,

உலகின் முதல் நாகரீகம் தமிழர் நாகரீகம் அது ஒரு இந்து சமய நாகரீகம் என்பதும் வெளிவரட்டும்

சரோஜினி நாயுடு

இந்திய மகளிர் தினம்

அன்று இந்திய சமூகத்தில் பெண்கள் நிலை அடக்கித்தான் வைக்கபட்டிருந்தது, மிக சில பெண்களே அந்த காலகட்டத்திலும் தங்கள் எதிர்காலம் , சமூகம் போன்ற கட்டுபாடுகளை தகர்த்து பிரகாசித்தனர், அவர்களில் ஒருவர் சரோஜினி நாயுடு

அவர் வங்க‌ பிராமண குடும்பத்து பெண், ஆனால் ஆந்திராவில் பிறந்தவர் அதன் பின் அன்றே கலப்பு திருமணமாக நாயுடு ஒருவரை திருமணம் செய்து சரோஜினி நாயுடு என மாறினார்

அவர் திருமணம் சென்னையில்தான் நடந்தது.

மிக சிறந்த படிப்பாளி , அதுவும் உதவி தொகையிலே கேம்பிரிட்ஜ் வரை சென்று படித்தவர். அன்றே அவருக்கு 10 மொழிகளில் புலமை இருந்தது

இதனால் பன்மொழி கவிதைகளை வாசிக்க முடிந்தது, பல அற்புதமான கவிதைகளை, எழுத்துக்களை அவரால் கொடுக்க முடிந்தது. இந்தியா அவர் கவிகுயில் என ஏற்றும் கொண்டது

கவிஞர், எழுத்தாளர் என்பதை தாண்டி சுதந்திர போராட்ட தியாகி, அரசியல்வாதி என பெரும் வடிவம் கொண்டவர், வங்க பிரிவினையினை தொடர்ந்து அரசியலுக்கு வந்தவர்.

அந்நாளைய சுதந்திர போராட்ட வீரர்களுடன் அவருக்கு நல்ல மரியாதை இருந்தது. அன்னிபெசன்டின் ஹோம் ரூல் இயக்கத்திலும் இருந்திருக்கின்றார்

காந்தியுடன் போராட்டம் நடத்தியது, சிறை சென்றது எல்லாம் அவரின் இன்னொரு பக்கம்

இந்திய போராட்டத்தில் அவரின் பங்களிப்பினை குறைத்து சொல்லிவிட முடியாது, இம்மாதிரி பிரிட்டிஷாரால் மதிக்கபட்டவர்கள் போராட வந்ததால்தான் அரசால் முற்றிலும் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை

1925ல் காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார், அப்பதவியினை வகித்த முதல்பெண் அவர்தான்.

சுதந்திர இந்தியா அவருக்கு பல பதவிகளை கொடுத்தது, உபி மாநில கவர்ணராக அமர்த்தபட்டார், இந்தியாவின் முதல் பெண் கவர்னர் அவர்தான்

அவரின் அற்புதமான கவிதைகள் “தி கோல்டன் த்ரெஷோல்டு” என்னும் பெயரில் வெளீயிடப்பட்டது. மற்றும் இரண்டு தொகுப்புக்கள் “தெ பேர்ட் ஆஃப் டைம்” , “தி புரோக்கன் விங்” என வெளியிடப்பட்டன.

அவரின் பிரமாதமான கவிதைகள் அவர் இறந்தபின்பு “தி ஃபெதர் ஆஃப் டான்” எனும் பெயரில் வந்தது, உலகம் அவர் கவிகுயில் என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் என உலகம் ஒப்புகொண்டது

இன்றும் அவரின் ஆங்கிலம் அவ்வளவு அழகானது என பிரிட்டிசாரே ஒப்புகொள்கின்றனர்

உலக நாடெல்லாம் இந்திய பெண்களின் முகமாக அறியபட்ட அவரின் பிறந்த நாள் இன்று, அது இந்திய மகளிர் தினமாகவும் அனுசரிக்கபடுகின்றது

இந்திய மகளிர் எல்லா திறமையும் உடையவர்கள், அரசியலில் ஈடுபட்டு மிக திறமையாக அவர்களால் பணிசெய்ய முடியும் என நவீன இந்தியாவில் முதலில் நிரூபித்தவர் சரோஜினி நாயுடு

நிச்சயம் இந்திய பெண்களுக்கெல்லாம் அவர் மாபெரும் வழிகாட்டி, நம்பிக்கை கொடுத்த விடிவெள்ளி

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், இந்திய அரசு அறிவித்தபடி இன்றுதான் “இந்திய மகளிர் தினம்”.

அவ்வகையில் இத்தேசத்து மகளிருக்கெல்லாம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்